Saturday, 22 February 2014

உலகப் புத்தகத் திருவிழா 2014

தமிழ் நூல்கள்

நேற்று ஒரு கட்டுரை எழுத அரங்குகளைச் சுற்றிவந்தபோது 18ஆம் அரங்கில் நேஷனல் புக் டிரஸ்ட் கடையையும் பார்த்தேன். அங்கிருந்த அதிகாரி, என் நண்பர், தமது கடையில் தமிழ் நூல்களை யாருமே வாங்கவில்லை, நண்பர்களுக்குத் தெரிவித்து வரச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.


இன்னும் இரண்டு நாட்கள்தான் உண்டு. திருவிழாவுக்கு வரும் தில்லித் தமிழ் புத்தக ஆர்வலர்கள் 14ஆம் அரங்கில் தமிழ் கடைகளைப் பார்வையிடுவதோடு 18ஆம் அரங்கில் என்பிடி கடையையும் பார்வையிடவும். 11ஆம் அரங்கில் சாகித்ய அகாதமி கடையையும் பார்வையிடலாம், அங்கும் சில தமிழ் நூல்கள் உண்டு.

ஆங்கிலத்தில் மலிவான நூல்கள்


அரங்கம் 1R மற்ற அரங்குகளிலிருந்து தனித்திருப்பதால் பாவம் கவனிக்கப்படாமல் இருக்கிறது. இங்கே சில கடைகளில் மிக மலிவான விலையில் ஆங்கில நூல்கள் உண்டு. இளைய தலைமுறையினர் இங்கிருந்து அள்ளிச் செல்கின்றனர்.

கேலிச்சித்திரப் புகழ் சங்கர்

உலகப் புத்தகத் திருவிழாவில், 7ஆம் எண் அரங்கில் கதாசாகரா என்றொரு பகுதி இருக்கிறது. இந்த ஆண்டு புத்தகத் திருவிழாவின் மையக்கருத்து குழந்தை இலக்கியம் என்பதால் குழந்தை இலக்கியம் பற்றிய சிறப்புப் பகுதி அது. அதில் ஒரு பகுதி, சங்கருக்கு அஞ்சலி. யார் இந்த சங்கர்?


கேலிச்சித்திரம் என்றாலே நமக்கு ஆர்.கே. லட்சுமணன் பெயர்தான் நினைவு வரும். கேசவ சங்கர பிள்ளை என்று ஒருவர் இருந்தார். அவர் உருவாக்கியதுதான் சில்டிரன்ஸ் புக் டிரஸ்ட் (Children’s Book Trust - CBT). இதை அரசு நிறுவனம் என்று சிலர் நினைத்து விடுகிறார்கள். சிபிடி, குழந்தைகளுக்கான தரமான நூல்களை பல மொழிகளிலும் ஏராளமாக வெளியிட்டு வருகிறது. தில்லியில் இருக்கிற புகழ்பெற்ற பொம்மைகள் அருங்காட்சியகமும் (Dolls Museum) அவர் நிறுவியதே.



ஏராளமான விருதுகள் பெற்ற சங்கர் ஏராளமான நூல்களுக்கு சித்திரங்கள் வரைந்திருக்கிறார். பல்லாயிரம் கார்ட்டூன்களும் வரைந்திருக்கிறார். நேருவைப் பற்றி மட்டும் 1500 கேலிச்சித்திரங்கள் வரைந்தவர். தன்னையே கேலி செய்யும் அந்தச் சித்திரங்களை நேருவே ரசித்துப் பார்ப்பாராம். சங்கருடைய கேலிச்சித்திர நூல் ஒன்றின் தொகுப்பும் அங்கு உண்டு. வாங்குவதற்கு சிபிடி கடைக்குப் போக விருப்பம் இல்லாதவர்கள் அந்த நூலைப் பார்வையிடலாம். வரலாறு கண்முன் விரியும்.

வாசிப்பை நேசிப்போம்

2 comments:

  1. வேற்றுமொழி புழங்கும் மாநிலத்தில் வாழும் தமிழர்கள் எந்த அளவுக்குத் தமிழ் நூல்களை வாங்கத் துணிவர் என்பது தெரிந்ததுதான். எனினும், தமிழ்நாட்டிலிருந்து அலுவலகம் பெயர்ந்து அங்கு வாழும் தமிழர்கள் கொஞ்சம் பேராவது வாங்கலாமே! விலை அதிகம் என்பதும் காரணமாக இருக்கலாம். ஆனால், ஐநூறு ரூபாய் கொடுத்து மட்டமான ஆங்கில நாவலை வாங்குபவர்கள், அதில் மூன்றில் ஒரு விலைக்கே கிடைக்கும் தரமான தமிழ் நூலை வாங்க முன்வருவதில்லை என்பது தமிழ்நாட்டிலேயே பார்க்கக் கிடைக்கும் ஒரு காட்சிதான்!

    ReplyDelete
  2. ஞாயிறு அன்று NBT அரங்கத்திற்குச் சென்றேன்.

    மூன்று புத்தகங்களும் வாங்கினேன் என்பது கூடுதல் தகவல்....

    ReplyDelete