Wednesday, 15 July 2015

காமராஜர்



இன்று காமராஜர் பிறந்த தினம். தேர்தல் நேரத்தில், “ஆட்சியிலிருந்தப்ப செஞ்ச நம்ம சாதனைகளைச் சொல்ல வேணாமாஎன்று கேட்டபோது, “அதை எதுக்குச் சொல்லணும்கிறேன், மக்களுக்குத் தெரியாதா?” என்று கேட்ட பெருந்தகை. அவரையே தோற்கடித்தவர்களின் வாரிசுகள்தான் நாம்.

கடந்தமாதம் தமிழகப் பயணத்தின்போது, திமுக அமைச்சராக இருந்த சாதிக் பாட்சா அவர்களின் வீட்டுக்குப் போனேன். பக்கத்தில்தான் இருந்தது காமராஜர் நினைவகம். (சென்னை தி.நகரில், திருமலைப்பிள்ளை சாலையில் அமைந்துள்ளது.) சென்னையில் வசித்த காலத்தில் பார்க்காமல் தவறவிட்டதை அன்று பார்த்தேன். நாங்கள் போய் சுற்றிப்பார்த்த ஒரு மணிநேரத்தில் யாருமே வரவில்லை. ஒரே ஒரு பெண் காவலர் மட்டும் வாயிலில் இருந்தார். யாரோ ஒருவர் நிர்வாகியாக இருக்கலாம் - உள்ளறையில் லேப்டாப்பில் மூழ்கியிருந்தார்.

புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என்று சொல்லக்கேட்க வியப்பாக இருந்தது. ஆனானப்பட்ட அருங்காட்சியகங்களில் புகைப்படம் எடுக்க அனுமதி இருக்கும்போது எளிய மனிதர் காமராஜரின் நினைவகத்தில் புகைப்படம் எடுப்பதால் என்ன பாதிப்பு வந்து விடும் என்று தெரியவில்லை. (அதுக்காக நாம விட்டுடப் போறோமா என்ன...)

ஓர் அறையில் முழுக்க புத்தகங்கள். உள்ளே அனுமதி இல்லை. கதவு வழியாகப் பார்க்க மட்டுமே முடியும். சுவர் முழுக்கப் புகைப்படங்கள் வரலாற்றுப் பதிவுகள். மாடி உள்பட இதர அறைகளில் காமராசர் பயன்படுத்திய பொருட்கள், அவருக்குப் பரிசாகக் கிடைத்த பொருட்கள். அவர் பேனாவே வைத்துக்கொள்ள மாட்டார் என்று எங்கோ படித்தேன். ஆனால் எத்தனை பேனாக்கள்... பேனா சேகரிப்பது அவருடைய பொழுதுபோக்காக இருந்திருக்கலாம்.

குறிப்பாகச் சொல்ல வேண்டியது அவருடைய ஆடைகளை, ஆடைகள் வைத்திருந்த சாதாரண பெட்டியை, படுக்கையை, நாற்காலிகளை. படத்தில் இருக்கின்றன. நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள். வாய்ப்புக் கிடைக்கும்போது போய்ப் பாருங்கள். இப்படியொரு எளிமையான தலைவரும் நம்மிடையே வாழ்ந்திருக்கிறார் என்று புரிந்து கொள்ளவாவது முடியும்.

* * *

கர்மவீரர் காமராசர்
 (விடுதலை வேள்வியில் வீரத் தமிழர்கள் நூலில் இடம்பெற்ற கட்டுரை)

தாமாகவே பதவியைத் தத்தம் செய்துவிட்டு மக்கள் பணிக்காகத் தம்மை அர்ப்பணித்தவரும் உண்டு என்னும் கடந்த கால நிதர்சனம் காமராசரைப் பற்றி நினைக்கும்போது தோன்றுகிறது. தனக்கென்று ஒரு குடும்பத்தை உருவாக்காமல், அதிகாரத்தில் இருந்தவரையில் தாயையும் தங்கை வீட்டாரையும் அண்டவிடாமல் ஒதுக்கி வைத்த தலைவர்கள் வாழ்ந்த விவரம் மங்கலாக நினைவுக்கு வருகிறது. முதலமைச்சர் பதவிக்குத் தம்மை எதிர்த்துப் போட்டியிட்டவரையே நிதி அமைச்சராக்கிய தலைவர்கள் வாழ்ந்தது தூசுபடிந்த வரலாற்று நூல்களில் அடங்கிக் கிடக்கிறது. இன்று இருந்திருந்தால் அந்த மனிதருக்கு நூறு வயதாகியிருக்கும்.

காமராசர் என்ற தேசத்தொண்டர், காமராசர் என்ற நிர்வாகி, காமராசர் என்ற அரசியல் ஞானி, காமராசர் என்ற பண்பாளர் இன்றைய சூழலில் நினைவுகூரப்பட வேண்டிய ஒருவர். சர்வ வல்லமை கொண்ட தலைவராக அவர் திணிக்கப்படவில்லை. சாதாரணத் தொண்டனாகப் பொதுவாழ்வைத் தொடங்கிய அவருக்கு தலைமைப்பதவி தேடி வந்தடைந்தது.

ரௌலட் சட்ட எதிர்ப்பு, ஒத்துழையாமை இயக்கம், கள்ளுக்கடை மறியல், உப்புச் சத்தியாக்கிரகம், யுத்த எதிர்ப்பு, வெள்ளையனே வெளியேறு போராட்டம் என அவர் பங்கேற்ற போராட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். வேலூர், அலிப்பூர், அமராவதி என்று பல சிறைகளை அலங்கரித்தவர். மூவாயிரம் நாட்கள் வெஞ்சிறையில் வாடியவர். சிறையில் இருந்தவாறே தேர்தல்களில் போட்டியிட்டு வென்றவர் காமராசர்.

பதினான்கு ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்தபின், 13-4-1954 அன்று தமிழக முதல்வர் ஆனார். 2-10-1963இல் தாமாகவே பதவியைத் துறந்து கட்சிப் பணிக்காகத் தம்மை முழுமையாக அர்ப்பணித்தார். இப்போதெல்லாம் தேர்தல் வருவதற்கு வெகுநாட்கள் முன்பே சாதனைப் பட்டியல்கள் போட்டு விளம்பரப்படுத்திக் கொள்வதையும், “எதுக்கு சொல்லணும்னேன்? ஜனங்களுக்குத் தெரியாதா?” என்று காமராசர் கூறியதையும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது.

நேர்மையும் திறமையும் மட்டுமில்லை, எளிமையும் அவரது தனிப்பண்பு. தமிழகத்தில் புதிய இருப்புப் பாதைத் திட்டமொன்றை நிறைவேற்றுவது தொடர்பான கூட்டம் நடந்தது. மத்திய அரசு அதிகாரி ஒருவர் விரிவாக ஆங்கிலத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தார். அந்த அதிகாரி, தமிழ்நாட்டவர், திடீரென தயக்கத்தோடு பேச்சை நிறுத்தினார். பெருந்தலைவர் தமக்கே உரிய தனிப்பண்போடு, “ஏன் நிறுத்திட்டீங்க...? எனக்குப் புரியுமோ புரியாதோன்னு பாக்கறீங்களா? எனக்குப் புரியாட்டா நான் கேட்டுப் புரிஞ்சுக்கிறேன். உங்களுக்கு எப்படி சௌகரியப்படுமோ அதிலேயே பேசுங்கஎன்று ஊக்குவித்தார்.

பதவியில் இருந்தபோதும், பதவியைத் துறந்தபின்பும், 1971இல் தேர்தலில் தோற்றபின்பும், எந்தச் சிற்றூருக்குச் சென்றாலும் அவர் கேட்ட கேள்வி - இந்த ஊரில் பள்ளிக்கூடம் இருக்கிறதா? பிள்ளைகள் எல்லாம் படிக்கிறார்களா?” அவருடைய சொந்த வாழ்க்கையையும் பொது வாழ்க்கையையும் பிரித்துப்பார்க்க முடியாது.

1903 ஜூலை 3ஆம் நாள், விருதுப்பட்டி - இன்றைய விருதுநகர் - நகரில் குமாரசாமி-சிவகாமி அம்மாள் தம்பதிக்கு மகனாகப் பிறந்தார் காமாட்சி. 1919 ஏப்ரலில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து காந்தியடிகள் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியர் ஆனார். 1930 வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றார், அலிப்பூர் சிறையில் 2 ஆண்டுகள் கழித்தார். 1933 வட்டமேஜை மாநாடு தோல்வி கண்டதால் காங்கிரஸ் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். காமராசருக்கு ஓராண்டு சிறை. 1937 தேர்தலில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1941 யுத்த எதிர்ப்புப் பிரச்சாரத்துக்காக கைது செய்யப்பட்டு, வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்துகொண்டே விருதுநகர் நகராட்சி மன்றத் தலைவராகத் தேர்வு பெற்றார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்றார், இரண்டரை ஆண்டுகள் சிறை தண்டனை, அமராவதி சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் தலைவராக, முதல்வராக, நாடாளுமன்ற உறுப்பினராக, பிரதமர் யார் என்பதை முடிவு செய்யும் காங்கிரஸ் தலைவராக பல்வேறு பொறுப்புகளில் இருந்த காமராசர்தான் இந்திய அரசியலில் கிங் மேக்கர் என்று மதிக்கப்படுபவர். 1975ஆம் ஆண்டு, காந்தி பிறந்த அக்டோபர் 2ஆம் நாள் உயிர்நீத்தார்.

கண்ணதாசன் ஒரு திரைப்படப் பாடலுக்கு எழுதிய வரிகள் காமராசரை மனதில் கொண்டு எழுதப்பட்டவை. இதைவிட வேறென்ன எழுதிவிட முடியும்... -
கல்யாண சுகமுமில்லை கடமைக்கு முடிவுமில்லை
என்னவோ நீ பிறந்தாய் எல்லார்க்கும் வாழ்வு தர.

காமராசர் பற்றிய செய்திகள் சமூக வலைதளங்களில் நிறையவே உண்டு. ஆனால் விடுதலைப்போராட்ட காலத்தில் அவர் சிறைப்பட்ட செய்திகள் அதிகம் இல்லை. சீடன் தலைவராகவும், ஆசான் செயலராகவும் இருந்தது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் நிகழ்ந்திருக்க முடியும். ஆம், 1940இல் காமராசர் தமிழ்நாடு காங்கிரசின் தலைவர் ஆனார், அவருக்குக் கீழே மகிழ்ச்சியுடன் செயலர் ஆனார் சத்தியமூர்த்தி.

* * *
காமராசர்-ஓர் ஆய்வு
நேஷனல் புக் டிரஸ் வெளியீடு
எழுதியவர் - வி.கே. நரசிம்மன். பின்னுரை - வி.என். நாராயணன்
தமிழாக்கம் - நாக. வேணுகோபாலன்

ஐஎஸ்பிஎன் - 978-81-237-7101-4 , ரூ.230
 காமாட்சி என்னும் இயற்பெயர் கொண்ட காமராஜர், இந்திய அரசியலில் ஒரு சகாப்தம். கர்மவீரர், தென்னாட்டு காந்தி என பலவாறாக அழைக்கப்பட்ட இந்த மாமனிதர் மக்கள் தலைவர் என்பதன் உண்மையான உதாரணமாகத் திகழ்ந்தவர். விடுதலைப் போராட்ட காலத்தில் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்து, கடைசிமூச்சு வரை மக்கள் நலனை மட்டுமே கருத்தில் கொண்டிருந்த ஒப்பற்ற தலைவர். நேரு மறைவுக்குப் பிந்தைய நெருக்கடியான காலத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவராகப் பொறுப்பேற்று, நாடு எதிர்நோக்கியிருந்த பல சிக்கல்களைத் தீர்த்துவைத்தவர். அவர் தமிழகத்தின் முதல்வராக இருந்த காலத்தில் கல்வி, தொழில்துறை, வேளாண்மை என பலதுறைகளிலும் தமிழ்நாடு அபார முன்னேற்றம் கண்டது.


- நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீட்டில் வந்துள்ள காமராஜர் நூலின் பின்னட்டை