நாந்தான் வீரண்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா....
இதைப் போன்ற பாடல்கள்
எல்லாம் கிரிக்கெட் கூச்சல்களில் அமுங்கிப்போய் விட்டன. ஒருகாலத்தில் ஒவ்வொரு
கிராமத்திலும் ஒவ்வொரு நகரத்திலும் இருந்த கபடி அணிகள் எல்லாம் காலத்தில் கரைந்து
விட்டன. சுவர்களில் கரியால் போட்ட கோடு ஸ்டம்ப் ஆகி, பிளாஸ்டிக் பந்தும் கைக்குக் கிடைத்த கட்டை பேட் ஆகவும் மாறி கிரிக்கெட் மோகம்
உள்நாட்டு விளையாட்டுகளை விழுங்கி விட்டது.
நகரங்களில் மட்டைகளும்
பேட்களும் ஹெல்மெட்களும் கொஞ்சம் பயன்பாட்டில் உள்ளன என்றாலும் பெரும்பாலும்
இப்படிப்பட்ட கிரிக்கெட்தான் நாடெங்கும் இருக்கிறது. சில வீடுகளில் காம்பவுண்ட்
கதவுக்கும் வீட்டுக்கதவுக்கும் இடைப்பட்ட பகுதி பிட்ச் ஆக மாறிவிடுகிறது.
விளையாட்டு சாதனங்கள் இல்லாமலே விளையாடப்படும் விளையாட்டாக கிரிக்கெட் பரவி
விட்டது. இலக்கும் இல்லை, நோக்கமும் இல்லை, முனைப்பும் இல்லை. எத்தனை ரன்களும் எடுக்கலாம், எடுக்காமலும் இருக்கலாம், அவுட் ஆனபிறகும் ஆடலாம், வெற்றியும் இல்லாமல்
தோல்வியும் இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் நிறுத்திக்கொண்டு வீட்டுக்குப்
போகலாம்.
இன்றைய இந்த நிலையையும், சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இருந்த
நிலையையும் மனது தவிர்க்க இயலாமல் ஒப்பிடுகிறது. வீதி விளையாட்டுகள் முற்றிலுமாக
மறக்கப்பட்டு விட்டன. தென்தமிழகக் கடைக்கோடி கிராமங்களில் பண்டைய
விளையாட்டுகளுக்கு இன்னும் கொஞ்சம் உயிர் இருப்பதாகத் தோன்றுகிறது. தமிழகம்
எங்கும் பரவலாக விளையாடப்பட்டு வந்த கபடி விளையாட்டு எங்கே போனது?
எந்தவித சிறப்பான கருவிகளோ, சாதனங்களோ, ஏற்பாடுகளோ
தேவைப்படாத எளிமையான விளையாட்டு கபடி. தமிழில் சடுகுடு என்றும் வடக்கே ஹூ-டு-டு
என்றும், பஞ்சாபி-இந்தியில்
கபட்டி என்றும் பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் கபடி, இந்தியாவுக்கு உரிய
விளையாட்டு. கை-பிடி என்பதுதான் கபடி என்று மருவியதாகவும் ஒரு கருத்து உண்டு.
கபடி வீரனுக்குத் தேவை, மூச்சுப் பிடிக்கும் திறன், துரிதமாக முடிவெடுக்கும் திறன், எதிராளியின் ஒவ்வொரு சிறு அசைவையும் கவனித்து உடனே
பதில் நடவடிக்கை எடுக்கும் வகையில் கண், காது, மூக்கு, வாய் என அனைத்தும்
ஒருங்கிணைந்து செயல்படக்கூடிய திறன். உடல் வலிமையும், கைகால்கள் நீளமாக இருப்பதும் கூடுதல் வசதி.
அத்துடன், சூழ்ந்திருக்கும்
ரசிகர்கள் கொடுக்கும் ஆலோசனைகளையும் கூச்சல்களையும் பொருட்படுத்தாமல் தன் இலக்கில்
கவனம் செலுத்துவது மற்றொரு அவசியம்.
கபடி விளையாட்டில் ஒவ்வொரு
பகுதியிலும் ஒவ்வொரு விதமான விதிகள் நிலவின. ஆனால் பொதுவான விதிகளாக இருந்தவை
ஆடுகளத்தின் நடுக்கோடு, ஏறுகோடு, எல்லைக்கோடு ஆகியவை. ஆடுவோர் இரு அணியினராகப்
பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ, ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பலீஞ்சடுகுடு...சடுகுடு... என்று
பாடிச் செல்வது கபடி விளையாட்டின் அடிப்படை. ஒரு அணியைச் சேர்ந்தவர் பாடிக்கொண்டே
இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று, கையால் அல்லது காலால் தொட்டு விட்டு பிடிபடாமல் வரவேண்டும். பிறகு எதிரணியும்
அதேபோல் செய்ய வேண்டும். எந்த அணி அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி
பெற்றதாகக் கருதப்படும்.
அமர் என்னும் கபடி
வடிவத்தின் படி, தொடப்பட்டவர்
வெளியேற மாட்டார். குறிப்பிட்ட நேரத்தில் ஆட்டம் முடியும்போது எந்த அணி அதிகப்
புள்ளிகள் பெற்றாரோ அது வெற்றி பெறும். சஞ்சீவினி என்ற வடிவத்தின்படி, பாடிச் சென்றவர் யாரையேனும் தொட்டால் அவர் அவுட்
ஆவது மட்டுமல்ல, தொட்டவர் அணியில்
அவுட் ஆகி வெளியே இருந்த ஒருவர் திரும்பவும் உள்ளே வரலாம். ஜெமினி என்ற
வடிவத்தின்படி, ஒருமுறை அவுட் ஆகி
வெளியேறியவர் அந்தச் சுற்று முடியும்வரை திரும்ப வர முடியாது. ஓர் அணியில் இருந்த
அனைவரும் அவுட் ஆனால் எதிரணிக்கு ஒரு புள்ளி கிடைக்கும், மீண்டும் ஆட்டம் தொடரும். இவ்வாறு விதிகள் ஒவ்வொரு
பகுகிக்கும் ஒவ்வொரு வகையாக இருந்தன. இந்திய கபடி கூட்டமைப்பு 1952இல் உருவாக்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பு தெளிவான
விதிகளை வகுத்தது. 1980இல் ஆசிய கபடி
கூட்டமைப்பின் விதிகள் வகுக்கப்பட்டன.
ஆண்கள் ஆடும் களம் 13 மீ x 10 மீ பரப்பு
கொண்டிருக்கும். பெண்கள் ஆடும் களம் 12 மீ x 8 மீ ஆகும். ஆடுகளத்தின் எல்லைகளைக் குறிக்கும்
கோடுகளும் களத்தைப் பிரிக்கும் கோடுகளும் 2 அங்குலம் இருக்க
வேண்டும்.
பாடிச் செல்பவர் ரெய்டர் என
அழைக்கப்படுகிறார். கபடி கபடி என்று மூச்சு விடாமல் பாடுவதை கான்ட் (cant)
என்கிறார்கள். கான்ட் என்ற ஆங்கிலச் சொல்லுக்கு, முடிவே இல்லாமல் தொடர்ந்து சொல்வதால் பொருளிழந்து போன சொல் என்று பொருள்.
ஹு-டு-டு, டோ-டோ, தி-தி, சடு குடு, குடு குடு, இந்தச் சொற்கள்
எல்லாம் நீக்கப்பட்டு, இப்போது கபடி-கபடி
என்ற பாட்டுதான் அங்கீகரிக்கப்பட்ட பாட்டு.
எதிராளியைத் தொட்டுவிட்டால்
புள்ளி கிடைக்கும். பாடிச் சென்றவர் மாட்டிக் கொண்டால் எதிரணிக்குப் புள்ளி கிடைக்கும்.
பாடிச் சென்றவர் மூச்சை விட்டு விட்டாலும் எதிரணிக்குப் புள்ளி கிடைக்கும்.
இடையில் புதிதாக ஒரு விதி
அறிமுகம் ஆனது. அதாவது, தொடர்ந்து மூன்று
முறை ரெய்டு சென்றும் புள்ளிகள் எதுவும் பெறவில்லை என்றால் எதிரணிக்கு ஒரு புள்ளி
கிடைக்கும் என்ற விதி வந்தது. ஆனால், இந்த விதியால்
ஆட்டத்தின் விறுவிறுப்பு குறைந்தது. எனவே சில ஆண்டுகள் கழிந்த பிறகு. இந்த விதி
நீக்கப்பட்டது.
கிராமத்தின் ஆற்று மணலிலும், திறந்த மைதானங்களிலும் நிகழ்ந்த கபடி விளையாட்டுகள்
என் கண்முன் நிழலாடுகின்றன. சிறுவயதிலிருந்தே நான் ஒல்லிக்குச்சி என்ற
பட்டப்பெயரைத் தக்கவைத்து வந்தவன் என்றாலும்கூட உயரமாகவும், மூச்சை இழுத்துப்பிடிக்கும் திறமையும் இருந்தவன்
என்பதால் எனக்கும் எங்கள் ஊரில் கபடி அணியில் இடம் கிடைத்திருக்கிறது. ஆற்றில்
குளிக்கும்போது நீருக்குள் மூழ்கி மூச்சடக்கும் போட்டியில் பங்கேற்றது கபடிக்கும்
துணை செய்தது. வெறுமனே மூச்சை இழுத்துப் பிடிப்பதற்கும் பாடிக்கொண்டே மூச்சை
இழுத்துப்பிடிப்பதற்கும் வித்தியாசம் உண்டு. தண்ணீருக்குள் இரண்டு நிமிடங்கள் வரை
இருந்தவன், கபடியில் ஒரு
நிமிடம் ஒன்றரை நிமிடம்தான் தாக்குப்பிடிக்க முடியும். நான் சிறந்த கபடி வீரன்
இல்லை என்றாலும், என் அணி எதிரணியைவிட
அதிகப் புள்ளிகள் எடுத்திருந்தால், ஆட்ட நேரம் முடியும்
வரை வெறுமனே நேரத்தைப் போக்க - அதாவது, ஏறு கோட்டை மட்டும்
தொட்டுவிட்டு மூச்சுப்பிடித்த நேரத்தை வீணடித்து டைம் பாஸ் செய்ய என்னைப்
போன்றவர்களும் அணிக்குத் தேவைப்படுவார்கள்.
ஒவ்வொரு வீரனும் ஒவ்வொரு
பாணியைப் பின்பற்றுவார்கள். ஒருவர் எதிரணிப் பகுதிக்குள் சென்றதும் தன் தொடையைத்
தட்டி பந்தா காட்டுவார், எதிரணிக்கு கோபத்தைத் தூண்டுவார். இன்னொருவர் ஏறுகோட்டைத்
தொட்டுவிட்டு நடுக்கோட்டைத் தொடுகிற தூரத்தில் பந்தாவாக படுத்துக்கொண்டு
வெறுப்பேற்றுவார். மற்றொருவர், ரஜினி வில்லனை
ஒவ்வொருவனாக அடிக்கப்போகிறேன் என்று விரலால் சுட்டுவது போல அடுத்த்து நீதான்
என்கிற பாணியில் எதிரணியில் எவரையேனும் சுட்டுவார். இது ஒரு தந்திரம். எதிராளிக்கு
ஆத்திரமூட்டி அவன் தன் கையைப் பிடிக்கத் தூண்டுகிற தந்திரம். கபடியில் புதிதாக
வந்தவன்தான் கையைப் பிடிப்பான். கையைப் பிடிப்பது போன்ற முட்டாள்தனம் கபடியில்
வேறேதும் இருக்க முடியாது. பாடி வந்தவன் சட்டென்று கையை உருவிக்கொண்டு திரும்பி
விடுவான்.
பாடி வருபவனைப் பிடிக்க
இரண்டிரண்டு பேராக கைகளைக் கோத்துக்கொண்டு வளைய வருவதும், எதிராளி அருகே வரும்போது அதே வளையம் பின்னோக்கி
நகர்வதும் உடைந்த வளையல்கள் அருகருகே இருப்பது போன்று எனக்குத் தோன்றும். பாடி
வருபவனைக் கண்டு பயந்ததுபோல இயன்ற அளவுக்கு பின்னால் போய், அவனை நன்றாக உள்ளே ஏறவிட்டபின் அப்படியே அமுக்கி
விடுவது இன்னொரு தந்திரம். எனக்கும் இந்தத் தந்திரங்கள் எல்லாம் அத்துபடி.
ஏறுகோட்டைத் தொடுவதோடு சரி, யாரையும்
அவுட்டாக்கும் உத்தேசம் இல்லாதவனாய் பாடிக்கொண்டே குறுக்காக தளுக்கு நடை போட்டு
வெறுப்பேற்றுவேன். இந்த ஒல்லிக்குச்சிக்கு திமிரு பாரு என்று யாரேனும் ஒருவனுக்கு
நிச்சயம் கோபம் வந்து பின்னால் வந்து பிடித்து விடுவான். அப்படியே அவனையும்
இழுத்துக்கொண்டு நடுக்கோட்டைப் பார்த்து கைநீட்டியபடி விழுந்தால் போதும், ஆள் அவுட். ஜாக்கி சான் செய்யும் அத்தனை
சேஷ்டைகளும் கபடி அரங்கில் அன்றே அரங்கேறியவைதான். அத்தனையும் இன்று நினைவேடுகளில்
மட்டுமே பதிந்து கிடக்கின்றன.
கபடி விளையாட்டை
ஒலிம்பிக்கில் சேர்க்க வேண்டும் என்று அவ்வப்போது குரல்கள் ஒலிக்கும். குறிப்பாக
பஞ்சாபிலிருந்துதான் குரல் வலுவாக ஒலிக்கிறது. 1936 பெர்லின் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டு டெமான்ஸ்டிரேஷன் கேம் வகையில்
ஆடிக்காட்டப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. சற்றே ஆராய்ந்தபோது, மகாராஷ்டிரத்தின் ஹனுமான் வியாயம் பிரசாரக் மண்டல்
என்ற உடற்பயிற்சிக் கழகத்தினர் பெர்லினில் உடற்பயிற்சிகள் செய்து காட்டியதாகத்
தெரிகிறது. இதற்காக ஹிட்லர் பதக்கம் அளித்தார் என்கிறது இந்து நாளிதழின் செய்தி.
இந்த உடற்பயிற்சிக் கழகத்திற்கு நூறாண்டு ஆகப்போகிறது. இதன் கட்டிடத்தை காந்தி 1926இல் திறந்து வைத்தார் என்றும், நேரு, சுபாஷ் சந்திர போஸ்
ஆகியோர் வருகை தந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வருகிறது. ஆனால் ஒலிம்பிக்கில்
கபடி இடம்பெற்றதாக ஆதாரபூர்வமான செய்திகள் ஏதும் இல்லை.
ஒலிம்பிக்கில் ஏதேனும் ஒரு
விளையாட்டு சேர்க்கப்பட வேண்டும் என்றால், குறைந்தது மூன்று
கண்டங்களில் ஐம்பது நாடுகளில் ஆடப்படும் விளையாட்டாக இருக்க வேண்டும் என்பது
ஒலிம்பிக் விதி. கபடி இப்போது ஆசியக் கண்டத்தில் மட்டுமே - அதிலும் தெற்காசிய
நாடுகளில் மட்டுமே ஆடப்படுகிறது. எனவே, இப்போதைக்கு இந்த
ஆசை நிறைவேற வாய்ப்பில்லை.
வங்கத்தில் கபடி தேசிய
விளையாட்டு. ஈரானில் கபடி தேசிய விளையாட்டுகளில் ஒன்று. சீன தைபெய், நேபாளம், மலேசியா, தாய்லாந்து,
தென் கொரியா, இலங்கை ஆகிய
நாடுகளில் கபடி மிகவும் பிரபலம். இந்தியாவின் சகோதர நாடான பாகிஸ்தானிலும் கபடி
பிரபலம் என்று கூறத்தேவையில்லை.
1990 ஆசிய விளையாட்டில்
கபடி முதல் முறையாக இடம் பெற்றது. இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது - அடுத்த ஆசிய
விளையாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து சாம்பியன் பட்டத்தைத் தக்க
வைத்துக்கொண்டுள்ளது. 2010இல் ஆசிய
விளையாட்டில் மகளிர் கபடி அறிமும் ஆனது, இந்திய மகளிர்
தாய்லாந்தை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
கபடி உலகக் கோப்பை 2004இல் அறிமுகம் ஆனது. இந்தியா சாம்பியன் ஆனது.
தொடர்ந்து 2007, 2010, 2011 உலகக் கோப்பையிலும்
இந்தியா சாம்பியன் ஆனது, மகளிர் உலகக் கோப்பை
கபடிப் போட்டி முதல்முதலாக 2012 ஜனவரியில் பீகாரில்
நடைபெற்றது. இந்திய மகளிர் ஈரானை வென்று சாம்பியன் பட்டம் வென்றனர்.
இங்கிலாந்து, நியூ சிலாந்து,
அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய
நாடுகளிலும் கபடி ஆடப்படுகிறது. 2010இல் பஞ்சாபில்
நடைபெற்ற கபடி உலகக் கோப்பையில் இத்தாலியும் ஸ்பெயினும்கூட இடம் பெற்றன. 1979இல் ஜப்பானில் கபடி அறிமுகம் ஆனது. ஆசிய நாடுகளைத்
தவிர வேறு நாடுகளைப் பொறுத்தவரை, கபடி அணிகளில்
இடம்பெறுபவர்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்தவர்கள்தான். இன்றைய
தேதியில் முப்பது நாடுகளில் கபடி ஆடப்படுவதாகத் தெரிகிறது.
ஆக, ஒலிம்பிக் போட்டியில் இடம் பெற வேண்டுமானால் கபடி
இன்னும் பல நாடுகளில் ஆடப்பட்டு ஒலிம்பிக் குழுவைத் திருப்திப் படுத்தும் அளவுக்கு
முக்கியமான ஆட்டமாக வேண்டும். 2020 ஒலிம்பிக்கில் கபடி
சேர்க்கப்படும் என்று இந்திய கபடி ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள். அப்படி
நிகழ்ந்தால் 2020 ஒலிம்பிக்கில்
இந்தியாவுக்கு ஒரு பதக்கம் நிச்சயம்.
- 2012இல் வானொலியில் நான் வழங்கிய
நிகழ்ச்சியிலிருந்து சுருக்கப்பட்டது.