Saturday, 20 August 2016

சிந்து

தந்தை ரமணா, தாயார் விஜயா. இருவரும் வாலிபால் விளையாட்டு வீர்ர்களாக இருந்தவர்கள். 1995 ஜூலை 5ஆம் தேதி இவர்களுக்குப் பிறந்தவர் சிந்து. தந்தை ரமணா அர்ஜுனா விருது பெற்றவர். பெற்றோர் வாலிபால் ஆர்வம் கொண்டவர்கள் என்றாலும், சிந்து பேட்மின்டனை தேர்வு செய்தார். 8 வயதில் ஆடத் தொடங்கினார். இவருடைய ஆதர்சம் கோபிசந்த்.

முதலில் செகந்திராபாதில் இந்திய ரயில்வே பேட்மின்டன் மைதானத்தில் மெஹபூப் அலி என்பவரிடம் விளையாடக் கற்றார். பிறகு கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தார். பயிற்சிக்காக தினமும் வீட்டிலிருந்து 56 கிமீ பயணம் செய்வார். கோபிசந்த் அகாடமியில் சேர்ந்தபிறகு சிறிதும் பெரிதுமாக வெற்றிகளைக் குவிக்கத் தொடங்கினார்.
• 10 வயதுக்குட்பட்ட இரட்டையர் பிரிவில் செர்வோ ஆல் இண்டியா ரேங்கிங் சாம்பியன்ஷிப்.
அம்புஜா சிமென்ட் ஆல் இண்டியா ரேங்கிங்கில் ஒற்றையர் பிரிவில் சேம்பியன்.
• 13 வயதுக்குட்ட பிரிவில் சப்-ஜூனியர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன்.
கிருஷ்ணா கைதான் ஆல் இண்டியா டோர்னமென்ட் சாம்பியன்.
ஐஓசி ஆல் இண்டியா ரேங்கிங் சாம்பியன்
தேசிய சப் ஜூனியர் சாம்பியன்
• 14 வயதுக்குட்பட்ட பிரிவில் 51ஆவது நேஷனல் ஸ்கூல் கேம்ஸில் தங்கம்.

அடுத்து வந்தன பன்னாட்டுப் போட்டிகளில் வெற்றிகள்.
கொழும்புவில் 2009 சப் ஜூனியர் ஆசியன் பேட்மின்டனில் வெண்கலம்.
• 2010இல் ஈரான் ஃபஜர் இன்டர்நேஷனல் பேட்மின்டன் போட்டியில் வெள்ளி.
• 2010 ஜூனியர் வேர்ல்ட் பேட்மின்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதிவரை எட்டினார். உபேர் கோப்பைப் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பெற்றார்.
• 2012இல் ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப்பில் தங்கம்.
• 2012இல் லி நிங் சீனா மாஸ்டர் சூப்பர் சீரிஸ் போட்டியில், ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற லி சுயுருயியை வென்று அரையிறுதியை எட்டினார்.
ஸ்ரீநகரில் தேசிய பேட்மின்டன் போட்டியில் சயாலி கோகலேயிடம் தோல்வி கண்டார். அதற்கு முந்தைய சீனா ஓப்பன் போட்டியின் காயம் பட்டதுதான் தோல்விக்குக் காரணம் என்பது பின்னர் தெரிய வந்த்து. எனவே வேர்ல்ட் ஜூனியர் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கவில்லை.
• 2012இல் சையத் மோடி இண்டியா கிராண்ட் பிரி போட்டியில் இரண்டாம் இடம்.
• 2013இல் மலேசியன் மாஸ்டர்ஸ் பேட்மின்டனில் சாம்பியன். இதுதான் சிந்துவின் முதல் கிராண்ட் பிரி வெற்றியாகும்.
• 2013 வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம். பேட்மின்டன் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கம் வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார்.
• 2013 மகாவ் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் சாம்பியன்.
• 2014இல் கிளாஸ்கோ காமன்வெல்த் கேம்ஸ் போட்டியில் அரையிறுதி வரை எட்டி தோல்வி கண்டார்.
• 2014 மகாவ் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் சாம்பியன்.
• 2015 டென்மார்க் ஓப்பன் போட்டியில் இறுதிவரை எட்டினார்.
• 2015 மகாவ் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் சாம்பியன். (தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சாம்பியன்.)
• 2016இல் மலேசியா மாஸ்டர்ஸ் கிராண்ட் பிரி போட்டியில் சாம்பியன்.

ஆக, ஆறு சர்வதேசப் போட்டிகளில் சாம்பியன் பட்டமும், ஐந்து சர்வதேசப் போட்டிகளில் இரண்டாம் இடமும் பெற்றார். 
2014இல் இந்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றார். 2015இல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.

இப்போது ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றில், கனடாவின் மிஷெல் லி-யை தோற்கடித்தார் (19-21, 21-15, 21-17). அடுத்த தகுதிச் சுற்றில் ஹங்கேரியின் லாரா சரோசியை இரண்டு செட்களில் (21-4, 21-9) தோற்கடித்தார். முன் காலிறுதியில் தைபேயின் தாய்-சு யிங்-கை இரண்டுசெட்களில் (21-13,21-15) தோற்கடித்தார். காலிறுதில் சீனத்தின் வாங் யிஹானை இரண்டுசெட்களில் (22-20, 21-19) தோற்கடித்தார். நேற்று அரையிறுதியில் ஜப்பானின் நொசோமியை இரண்டுசெட்களில் (21-19, 21-10) தோற்கடித்தார்.

இன்று இறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த கரோலினா மரியாவுடன் மோத இருக்கிறார். முந்தைய போட்டிகளில் பெரும்பாலும் இரண்டு செட்களில் வெற்றி பெற்றிருக்கிறார் சிந்து. ஆனால் 19 சர்வதேசப் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற கரோலினாவை வெல்வது அவ்வளவு எளிதல்ல. (சாய்னாவை 3 சர்வதேசப் போட்டிகளில் வென்றவர் கரோலினா. படத்தில் கறுப்பு உடை அணிந்திருப்பவர்.) சர்வதேசத் தர வரிசையில் முதலிடத்தில் இருப்பவர் கரோலினா, பத்தாவது இடத்தில் இருப்பவர் சிந்து.


வெற்றி-தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் சிந்து தன் திறமையை வெளிப்படுத்த வாழ்த்துவோம்.

*

மேலே எழுதியிருப்பது இறுதிப்போட்டிக்கு முன்னர் எழுதியது. எதிர்பார்த்தது போலவே இறுதிப்போட்டி கடுமையாக இருந்தது. முதல் செட்டை சிந்து வெல்ல, இரண்டாவது செட்டை கரோலினா வெல்ல, அப்போதே முடிவு தெரிந்து விட்டது. கரோலினா தங்கம் வென்றார், சிந்து வெள்ளியை வென்றார்.

*

இந்தியா ஓப்பன் பேட்மிண்டன் போட்டிகள் தில்லியில் நடைபெற்றன. மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து காலிறுதியை எட்டி, தோல்வி கண்டு வெளியேறினார். ஆனாலும், இந்தியா ஓப்பனில் காலிறுதியை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை அவருக்குக் கிடைத்தது. ஆனால் இதே சிந்து, அடுத்து பங்கேற்றது மலேசியா ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில். இதில் அபாரமாக முன்னேறி, இந்த மாதம் 4ஆம் தேதி நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூரின் ஜுவான் கு-வைத் தோற்கடித்து முதல் கிராண்ட் பிரி சாம்பியன் பட்டத்தை வென்றார். ஹைதராபாதிலிருந்து வந்திருக்கும் இந்த 17 வயது நட்சத்திரம், பேட்மின்டனில் மற்றொரு நம்பிக்கையாகத் திகழ்கிறார்.
*
மேலே இருப்பது, சுமார் 25 ஆண்டுகளாக வானொலியில் வழங்கி வந்த ஆட்டக்களம் நிகழ்ச்சியில் 7-5-2013 அன்று நான் சொன்னது.


நம்பிக்கையை நிறைவேற்றிய சிந்துவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். 

1 comment: