(Vivek Kaul என்பவர் www.equitymaster.com என்ற வலைதளத்தில் 25 Things PM Modi Did Not Tell You About the Indian Economy என்ற தலைப்பில் Oct 9, 2017 அன்று ஒரு கட்டுரை எழுதியுள்ளார். காப்புரிமை காரணமாக அதன் தமிழாக்கத்தை வெளியிட இயலவில்லை என்பதால், அந்தக் கட்டுரையின் முக்கியமான அம்சங்களை என் குறிப்புகளோடு பார்க்கலாம்.)
* * *
பத்து நாட்களுக்கு முன்னால் தணிக்கையாளர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் மத்தியில் உரையாற்றினார் மோடி. வாய்ச்சொல் வீரரடி என்பதற்கு சரியான உதாரணமாக இருப்பவர் அவர்தான். அவ்வளவு சவடால் பேச்சு அது. அப்போதுதான், தான் ஒன்றும் பொருளாதார நிபுணன் இல்லை என்ற உண்மையை வெளியிட்டார். பொருளாதார நிபுணராக இல்லாதவர், தனது அமைச்சரவையின் மிக முக்கியமான நிதியமைச்சரிடம் கூடக் கலந்தாலோசிக்காமல் கடந்த ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி பண நீக்கத்தை அறிவித்தாரா என்று அங்கிருந்த எவரும் கேட்கவில்லை. ஊடகங்களைப் போலவே முதுகெலும்பைக் கழற்றி வைத்துவிட்டார்கள் தணிக்கையாளர்கள், அதிகாரிகள்.
“இந்தியப் பொருளாதாரம் நன்றாகத்தான் இருக்கிறது என்று நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கும் வகையில் பல புள்ளி விவரங்களை முன்வைத்தார். பொருளாதார நிலை சரியில்லை என்று நினைப்பவர்களை, தேவையில்லாமல் எதிலும் குறை காண்கிற சந்தேகவாதிகள் என்றும் சாடினார்” என்று கூறுகிறார் விவேக் கவுல்.
முந்தைய பாஜக ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த மூத்த தலைவர்களில் ஒருவரான யஷ்வந்த் சின்ஹாவே இந்தியப் பொருளாதார நிலை குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். பிரதமர் பேசியது அவருக்குப் பதிலடிதான் என்பது கவனிக்கத் தக்கது. இந்தியப் பொருளாதார நிலை மோசமாக இருக்கிறது என்று உலகளாவிய நிறுவனங்களும் கூறத்தொடங்கிய பிறகும் சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார்கள் மோடியும் ஜெட்லியும்.
இந்தியப் பொருளாதாரம் சிறப்பான நிலையில் இல்லை என்பதற்கான பல புள்ளிவிவரங்களைக் காட்டும் விவேக் கவுல், “பிரதமர் தான் முன்வைக்க விரும்பிய புள்ளிவிவரங்களுக்கு அப்பால் அவர் கொஞ்சம் பார்த்திருந்தால், நிலைமையே வேறாக இருந்திருக்கும்” என்று கூறுகிறார்.
1) இந்த ஆண்டு வங்கிகள் விநியோகித்த கடன்களில் உணவுப்பொருள் அல்லாத கடன்கள் குறித்துப் பேசுகிற விவேக் கவுல், “இதுதான் இந்திய உணவுக் கார்ப்பரேஷன் அல்லது இதர கொள்முதல் நிறுவனங்கள், ரேஷன் போன்ற பொது விநியோகத்துக்காக அரிசி அல்லது கோதுமையை விவசாயிகளிடமிருந்து நேரடியாக குறைந்தபட்ச நிர்ணய விலையில் வாங்குவதற்காகத் தரும் தொகைக்கு மேலாக வங்கிகள் கொடுக்கும் கடன் தொகையாகும்” என்று கீழ்க்கண்ட படத்தைக் காட்டுகிறார்.
உணவுப் பொருள் அல்லாத கடன் என்பது, விவசாயம், தொழில்துறை, சேவைத்துறை, சில்லறை விற்பனைத் துறை போன்றவற்றுக்குத் தரப்படும் கடன் ஆகும். “இந்தப் படம், உணவுப் பொருள் அல்லாத விஷயங்களுக்காக வங்கிகள் கொடுத்த கடன் படிப்படியாகக் குறைந்து கீழே போய் இருப்பதை தெளிவாகக் காட்டுகிறது. அதாவது, அத்தனை வங்கிகளும் ஒரு ரூபாய்கூட கடன் தரவில்லை” என்கிறார் விவேக் கவுல். கடந்த ஐந்தாண்டுகளில் இதுதான் மிக மோசமான நிலவரமாகும். அடுத்து, இந்த ஒவ்வொரு துறையையும் அலசினார்.
2) வங்கிகள் விவசாயிகளுக்கு கடன் தருகின்றன. ஆனால் வேளாண் கடன் குறைக்கப்பட்டு விட்டது.
2014 முதல் படிப்படியாகக் குறைந்து இந்த ஆண்டில் இதுவும் கீழே சரிந்திருக்கிறது. அதாவது, விவசாயத்துக்காக எந்த வங்கியும் ஒரு ரூபாய் கூடக் கடன் கொடுக்கவில்லை. “தொழில்நுட்பரீதியாகச் சொன்னால், விவசாயத்துக்காக அவர்கள் வழங்கி வந்த கடன் தொகை குறைக்கப்பட்டு விட்டது. மாநில அரசுகளால் வேளாண் கடன்கள் தள்ளுபடி செய்வதுதான் காரணமா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்” என்கிறார் கவுல். உ.பி.யில் யோகி அரசு பதவியேற்றவுடன் வேளாண் கடன் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டது, உண்மையில் தள்ளுபடி செய்யப்படவில்லை என்று நினைவு. வேறு மாநிலங்களிலும் பெரிய அளவுக்கு கடன் தள்ளுபடி செய்ததாகத் தெரியவில்லை.
3) தொழில்துறைக்கு வங்கிகள் கொடுத்த கடன்களும் குறைக்கப்பட்டது என்பதை நிறுவுகிறார் கவுல்.
2013 துவங்கி இன்று வரை தொழில்துறைக்கு வழங்கப்பட்ட வங்கிக் கடனும் படிப்படியாக குறைந்து விட்டது என்பதை படம் 3 தெளிவாகக் காட்டுகிறது. “தொழில்துறைக்கு எக்கச்சக்கமாகக் கடன் கொடுத்து வாரக்கடன்களாக சேர்த்து வைத்திருக்கிற வங்கிகளின் நிலைமையில், இதில் வியப்பதற்கு ஏதுமில்லை. வங்கிகள் தொழில்துறையை நம்புவதில்லை.” - கவுல்.
4) இதேபோல, சேவைகள் துறைக்கும் வங்கிகள் கொடுத்த கடனும் குறைக்கப்பட்டது.
“சேவைகள் துறைக்கு வழங்கப்பட்ட கடன் இந்த நிதியாண்டில் மிக அதிகமாகக் குறைந்து விட்டது என்பது வியப்பை அளிக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தில் பாதிப் பங்கு சேவைத்துறைக்குத்தான் உள்ளது. இந்தத் துறையில் இருக்கும் நிறுவனங்கள் கடன் வாங்கவில்லை என்றால், இந்தியப் பொருளாதாரம் எப்படி நன்றாக இருக்க முடியும்?” என்ற முக்கியமான கேள்வியை முன்வைக்கிறார் கவுல்.
5) வங்கிகள் வழங்கிய சில்லறைக் கடன்கள்.
சில்லறைக் கடன்கள் என்ற ஒரு துறையில் மட்டும்தான் ஓரளவு கடன் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கடந்த ஆண்டுகளோடு ஒப்பிட்டால் பெரிய அளவுக்கு பெரிய அளவுக்கு மாற்றம் இல்லை.
“அதிலும், வட்டி விகிதம் கணிசமாகக் குறைந்த பிறகும்கூட கடன் தொகை அதே அளவில் இருக்கிறது. குறைந்த வட்டி விகிதத்தில்கூட மக்கள் கடன் வாங்க முன்வரவில்லை என்றால், இந்தியப் பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக எப்படிச் சொல்ல முடியும்?“ என்பது கவுல் முன்வைக்கும் முக்கியமான கேள்வி. “துரதிருஷ்டவசமாக, பிரதமர் மோடி இந்தப் புள்ளிவிவரங்களில் எதையும் தன் உரையில் சேர்க்கவில்லை” என்றும் சாடினார்.
6) இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட 2017 செப்டம்பர் மாதத்துக்கான நுகர்வோர் நம்பிக்கைக் கணக்கெடுப்பு கூறியுள்ளதை முன்வைக்கிறார் கவுல் : "பொருளாதார நிலவரம் குறித்து குடும்பங்களின் தற்போதைய கருத்து, நம்பிக்கையற்றதாகவே இருக்கிறது, கடந்த நான்கு காலாண்டுகளுக்கும் இப்படியே இருந்திருக்கிறது, மக்களின் கண்ணோட்டம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. ... கணக்கெடுப்பில் பதில் கூறியவர்களின் முக்கியமான கவலை வேலைவாய்ப்பு நிலவரமாகவே இருந்தது, மனோபாவம் மேலும் நம்பிக்கையற்றதாக சரிந்திருக்கிறது, வேலைவாய்ப்பு குறித்த கண்ணோட்டமும் பலவீனமடைந்துள்ளது."
7) அடுத்து சிமென்ட் உற்பத்தி பற்றிய புள்ளிவிவரத்தைக் காட்டுகிறார்.
முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சிமென்ட் உற்பத்தி குறைந்து விட்டது. அதாவது, கட்டுமானத்துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறைகள் சிரமத்தில் இருக்கின்றன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்தத் துறைகள்தான் மிக அதிக வேலை வாய்ப்புகளை – அதிலும் குறிப்பாக, தனித்திறமை இல்லாத சாமானிய உழைப்பாளிகளுக்கு - வேலை வழங்குபவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
8) புதிய திட்டங்கள் துவக்கப்படுவது குறைந்து விட்டது என்பதைக் காட்ட, இந்தப் புள்ளிவிவரங்களைத் தொகுக்கும் Centre for Monitoring Indian Economy அறிக்கையை மேற்கோள் காட்டுகிறார் : "2017 செப்டம்பருடன் முடிந்த காலாண்டில் 512 பில்லியன் ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் துவக்கப்பட்டன. வரும் வாரத்தில் இது அதிகரிக்கும், 700 பில்லியன் வரை தொடக்கூடும். இப்படி நடந்தாலும், மோடி ஆட்சியின் இத்தனை ஆண்டுகளில் இதுதான் புதிய திட்டங்கள் துவக்கத்தில் இதுதான் மிகக் குறைவாக இருக்கும்."
9) புதிய முதலீட்டுத் திட்டங்களில் சரிவு ஏற்பட்டிருக்கிறது என்பதை அதே Centre for Monitoring Indian Economy, அறிக்கையிலிருந்து தருகிறார் : "செப்டம்பர் 2017 வரையான காலாண்டில் 845 பில்லியன் முதலீடு திட்டமிட்டப்பட்டது. மோடி ஆட்சியின் அத்தனை காலாண்டுகளிலும் மிகக் குறைவான முதலீடு வந்த காலாண்டு இதுதான்."
10) நிறுவனங்களின் லாபத்தில் பெரும் சரிவு ஏற்பட்டிருக்கிறது. Centre for Monitoring Indian Economy புள்ளிவிவரத்தின்படி: "1127 நிறுவனங்களின் நிதி அறிக்கைகளிலிருந்து இதைத் தொகுத்திருக்கிறோம். ... இந்த நிறுவனங்களில், ஓராண்டுக்கு முன்னால் இருந்ததைவிட இந்த ஆண்டு வரிக்கு முந்தைய வருவாய் 27.9% குறைந்திருக்கிறது."
11) டிரேட் டெபிசிட் என்பது ஏற்றுமதி-இறக்குமதி இடையிலான வர்த்தகப் பற்றாக்குறையாகும். அதாவது, ஏற்றுமதி மதிப்பைவிட இறக்குமதி அதிகரித்தல்
“இந்த நிதியாண்டில் வர்த்தகப் பற்றாக்குறை எகிறியிருக்கிறது. எண்ணெய் அல்லாத, தங்கம்/வெள்ளி அல்லாத இறக்குமதிகளின் காரணமாகவே இது நடந்தது என்பதை முன்னரே எழுதியிருக்கிறேன். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் கண்ணுக்குத் தெரியாத பாதகமான விளைவுகள் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளன.” என்கிறார் கவுல்.
12) தனியார் நுகர்வுச் செலவு கடந்த ஆறு காலாண்டுகளில் மிகக் குறைவான அளவில் இருந்துள்ளது என்பதை RBI Monetary Policy Statement அறிக்கையிலிருந்து சுட்டுகிறார் : "ஒட்டுமொத்த டிமாண்ட் என்ற அம்சங்களில், தனியார் நுகர்வுச் செலவு அதிகரிப்பு என்பது கடந்த ஆறு காலாண்டுகளில் 2017-18இன் முதல் காலாண்டில்தான் – அதாவது ஏப்ரல்-ஜூன் 2017 காலத்தில்தான் மிகக் குறைவாக இருக்கிறது. "
13) அதே RBI Monetary Policy Statement அறிக்கையை சுட்டிக்காட்டும் கவுல், இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி குறைவான வேகத்தில் இருப்பதை சுட்டுகிறார் : "வளரும் இதர பொருளாதாரங்களில், பிரேசில், இந்தோனேசியா, தென் கொரியா, துருக்கி, வியட்னாம் உள்ளிட்ட சில நாடுகள் உலகளாவிய பண்டங்களின் விலை மாற்றங்களால் பயன்பெற்றன, அவற்றோடு ஒப்பிட்டால் இந்தியாவின் ஏற்றுமதி வளர்ச்சி குறைவாகவே இருந்து வருகிறது."
14) முதலீட்டுக்கும் ஜிடிபி-க்கும் உள்ள விகிதம்
2017 ஜூன் வரையான மூன்று மாதங்களில் முதலீடு-ஜிடிபி விகிதம் சற்றே அதிகரித்துள்ளது என்றாலும்கூட, அது தொடர்ந்து குறைந்து கொண்டே வந்திருக்கிறது என்பதை மேற்கண்ட படத்துடனும், RBI Monetary Policy Statement மூலமும் நிறுவுகிறார் கவுல். "இது வரையில் ஜிஎஸ்டியை நடைமுறைப் படுத்தியதும் பாதகமான விளைவை ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. ஜிஎஸ்டி உற்பத்தித் துறையின் நம்பிக்கையை குறுகிய காலத்துக்குக் குலைத்திருக்கிறது. இது முதலீட்டு நடவடிக்கை உயிர் பெறுவதை இன்னும் தாமதப்படுத்தும். ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள வங்கிகள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் நிதி அறிக்கைகளில் இதைக் காணலாம்" என்கிறது அந்த அறிக்கை.
15) அரசுத்துறை அல்லாத ஜிடிபி வளர்ச்சி
ஆண்டுதோறும் ஒரு கோடி வேலைவாயப்புகளை உருவாக்குவோம் என்று முழங்கியவர் மோடி. வேலைவாய்ப்புகள் உருவாக்குவேன் என்ற சவால் அடுத்த தேர்தலில் மோடிக்கு ரிஸ்க்கா இருக்கும் என்று ப்ளூம்பெர்க் கடந்த மாதம் எழுதியுள்ளது. அரசு சாராத பொருளாதாரம்தான் இந்தியப் பொருளாதாரத்தில் 87 முதல் 92 விழுக்காடு வரை பங்கு வகிக்கிறது. இது 4 விழுக்காட்டுக்கும் மேலே குறைந்து விட்டது. முக்கியமான இந்த விவரம் மோடியின் உரையில் இடம் பெறவே இல்லை என்று குறிப்பிடும் கவுல், “அரசு சாரா பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவுபட்டால், ஒவ்வொரு மாதமும் உருவாகி வரும் ஒரு மில்லியன் உழைப்புசக்திக்கு எப்படி வேலைவாய்ப்பு உருவாக்க முடியும்?”
16) . பொதுவாகவே தொழில்துறையிலும், குறிப்பாக உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறையிலும் ஐந்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டிருப்பதை படம் தெளிவாகக் காட்டுகிறது.
2017 ஏப்ரல்-ஜூன் காலத்தில் உற்பத்தித் துறை 1.17 சதவிகிதமும், கட்டுமானத் துறை 2 சதவிகிதமும் மட்டுமே உயர்ந்தன என்பதை மேற்கண்ட படத்தின் மூலம் காட்டும் கவுல், “இது மிகவும் கவலைக்குரிய விஷயம். ஏனென்றால், உற்பத்தி மற்றும் கட்டுமானத் துறைகள்தான் புதிய வேலைவாயப்புகளை உருவாக்கும் வளம் கொண்டவை. Crisil Research எடுத்த ஒரு கணக்கெடுப்பின்படி, கட்டுமானத்துறையில் 10 லட்சம் மதிப்புள்ள உற்பத்தி செய்ய 12 தொழிலாளர்கள் தேவைப்படுகிறார்கள், உற்பத்தித் துறையில் 7 தொழிலாளர்கள் தேவை.” என்கிறார்.
17) 2017 ஜனவரி முதல் ஜூன் வரை தொழிலாளர்கள் பங்கேற்பு மிகுந்த துறைகளில் - அதாவது வேலைகள் மிகுந்திருந்த துறைகளில் பின்னடவு ஏற்பட்டுள்ளது.
Crisil Research வெளியிட்ட அண்மை ஆய்வறிக்கையைச் சுட்டுகிறார் விவேக் கவுல் : "கடந்த இரண்டு காலாண்டுகளில் இந்த மூன்று துறைகள் ஜிடிபி வேகத்தை விட அதிக வேகமாக வளர்ந்தன: 1) வர்த்தகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு தொடர்பான சேவைகள்; 2) மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம் மற்றும் இதர சேவைகள்; 3) பொது நிர்வாகம், பாதுகாப்புத்துறை மற்றும் இதர சேவைகள். இந்த மூன்று துறைகளில் வர்த்தகம், ஹோட்டல்கள், ரெஸ்டாரன்ட்கள் உள்ளிட்ட உள்துறைகள்தான் உழைப்பாளர் தேவையைக் கொண்டவை. 10 லட்சம் ரூபாய் உற்பத்திக்கு சுமாராக 6 தொழிலாளர்கள் தேவைப்படுபவை. ஆனால் இந்த துணைத்துறையின் மொத்த உற்பத்தி வெறும் ~12%தான். இதற்கு மாறாக, பொது நிர்வாகம், பாதுகாப்பு போன்ற விரைவாக வளரும் துறைகளில், உற்பத்தி அதிகம் இருந்தாலும், தொழிலாளர் தேவை 3 தான். அதிக உழைப்பாளர் தேவைப்படும் துறைகள் – 10 லட்சம் ரூபாய்க்கு 12 பேர் தேவைப்படும் கட்டுமானம், 10 லட்சம் ரூபாய்க்கு 7 பேர் தேவைப்படும் உற்பத்தித் துறைகள் – ஒட்டுமொத்த ஜிடிபியைக் குலைக்கின்றன."
பொது நிர்வாகம், பாதுகாப்பு மற்றும் இதர ஊழியர் சேவைகள் துறைகள் என்பவை எல்லாம் அடிப்படையில் அரசின் மற்றொரு பாகம்தான். ஆக, அரசு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதை முற்றிலும் நிறுத்தி விட்டது என்று சாடுகிறார் கவுல்.
18) தொழில்துறை உற்பத்திக் குறியீடு
இதன் முதல் 12 புள்ளிகள் தொழில்துறை உற்பத்திக் குறியீடுகள் (IIP) ஆகும், நாட்டின் தொழில்துறை நடவடிக்கையைக் கணக்கிட்டுக் காட்டும். இதில், IIPஇல் முக்கால் பாகத்துக்கும் மேல் பங்குவகிக்கும் உற்பத்தித் துறையையும் காட்டும். இந்த இரண்டுமே அண்மைக்காலமாக ஒற்றை இலக்கத்தில் இருக்கிறது, இது கவலைக்குரிய விஷயம் என்கிறார் கவுல்.
19) சில ஆண்டுகளில் பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு
மக்கள் தொகை வளர்ச்சி, வாகனப் பெருக்கம் ஆகியவற்றையும் கருத்தில் கொண்டால், உண்மையில் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் இருந்தால், பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு, அதிகரித்துக்கொண்டே போக வேண்டும். ஆனால், “கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால், பெட்ரோலியப் பொருட்களின் நுகர்வு கிட்டத்தட்ட சம்மாகவே இருந்திருக்கிறது. இது பொருளாதார வளர்ச்சி பின்னடைவதன் மற்றொரு அடையாளம் ஆகும்” என்கிறார்.
20) வர்த்தக வாகனங்களின் விற்பனை
வர்த்தக வாகனங்கள் விற்பனை விவரம் என்பது, பொருளாதாரத்தின் அங்கமான தொழில்துறை எப்படி இருக்கிறது என்பதற்கான சிறந்த அடையாளம் ஆகும். வாகன விற்பனை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு குறைந்திருக்கிறது என்ற வாதத்தை முன்வைக்கிறார் கவுல்.
21) Fiscal deficit
Fiscal deficit என்பது, அரசு ஈட்டும் வருவாய்க்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம். “கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் நிதிப் பற்றாக்குறை ஏன் இவ்வளவு உயர்ந்திருக்கிறது. பொருளாதார வளர்ச்சி பின்னடைவு கண்டுள்ளது, எனவே அரசு நிறைய செலவு செய்வதன் மூலம் அதை ஈடுகட்ட முயற்சி செய்கிறது.” என்கிறார் கவுல்.
22) கடந்த இரண்டு ஆண்டுகளில் ஜிடிபி அதிகரித்தது என்றால், அரசின் செலவு அதிகரிப்பு முக்கியப் பங்கு வகித்துள்ளது.
2015 ஏப்ரல் முதல் ஜூன் வரை அரசின் செலவுகள், ஜிடிபியில் 1.3 சதவிகிதம் வரை உயர்ந்திருக்கிறது. அதற்குப் பிறகு, 2017 ஜனவரி-மார்ச் காலத்தில் அது 39.2 சதவிகிதம், 20174 ஏப்ரல்-ஜூன் காலத்தில் 34.1 சதவிகிதம் என உயர்ந்திருக்கிறது என்ற புள்ளிவிவரத்தைக் காட்டும் கவுல், “பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்த அரசு மேலும் மேலும் செலவு செய்கிறது. இதுவும் பொருளாதார வளர்ச்சி பின்தங்கி வருகிறது என்பதை அரசு நம்புகிறது, அதற்கான நடவடிக்கைதான் இது என்று காட்டுகிறது. ஆனா பிரதமர் மோடி மக்களிடையே பேசும்போது இதை சொல்லவே மாட்டார்” என்று சாடுகிறார்.
23) பொதுத்துறை வங்கிகளின் வாராக்கடன் விகிதம்
படம் 17, கடந்த சில ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் மொத்த non-performing advances ratio – அதாவது, வாராக் கடன்களின் விகிதத்தைச் சுட்டுகிறது. வாராக்கடன் என்பது, கடன் வாங்கியவர் திருப்பிச் செலுத்தாமல் 90 நாட்கள் அல்லது அதற்கும் அதிகமாக நிலுவையில் வைத்திருக்கும் கடன் தொகையாகும். இது வட்டியாகவும் இருக்கலாம், கடன் தொகையாகவும் இருக்கலாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன்களின் அளவு பெரிதும் எகிறியுள்ளது என்கிறார் கவுல்.
24) வங்கிகள் கொடுத்த கடன்களில் வாராக்கடன்களின் விகிதத்தை கீழ்க்கண்ட அட்டவணை காட்டுகிறது.
அட்டவணையில் உள்ள தலைப்புகளுக்கு சிறு விளக்கம் கீழே
Gross NPAs – மொத்த வாராக்கடன் – நான் பர்ஃபாமிங் அசெட் என்றால், திருப்பிச் செலுத்த வேண்டிய காலத்துக்குள் கொடுத்த கடனுக்கு வட்டி வராமலிருப்பது, கடனும் நிலுவையில் இருப்பது.
Gross Advances – மொத்த கடன்தொகைகள்
Gross non-performing advances ratio – தரப்பட்ட மொத்த கடன் தொகையில், வாராக்கடனாக இருக்கும் தொகையின் விகிதம்
|
Gross NPAs (in Rs Crore)
|
Gross Advances
|
Gross non-performing advances ratio
|
Indian Overseas Bank
|
35,098
|
1,40,459
|
24.99%
|
IDBI Ltd.
|
44,753
|
1,90,826
|
23.45%
|
Central Bank of India
|
27,251
|
1,39,399
|
19.55%
|
UCO Bank
|
22,541
|
1,19,724
|
18.83%
|
Bank of Maharashtra
|
17,189
|
95,515
|
18.00%
|
Dena Bank
|
12,619
|
72,575
|
17.39%
|
United Bank of India
|
10,952
|
66,139
|
16.56%
|
Oriental Bank of Commerce
|
22,859
|
1,57,706
|
14.49%
|
Bank of India
|
52,045
|
3,66,482
|
14.20%
|
Allahabad Bank
|
20,688
|
1,50,753
|
13.72%
|
Punjab National Bank
|
55,370
|
4,19,493
|
13.20%
|
Andhra Bank
|
17,670
|
1,36,846
|
12.91%
|
Corporation Bank
|
17,045
|
1,40,357
|
12.14%
|
Union Bank of India
|
33,712
|
2,86,467
|
11.77%
|
Bank of Baroda
|
42,719
|
3,83,259
|
11.15%
|
Punjab & Sind Bank
|
6,298
|
58335
|
10.80%
|
Canara Bank
|
34,202
|
3,42,009
|
10.00%
|
ஆதாரம்: Indian Banks' Association தரவுகளிலிருந்து தொகுத்தது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவுடன் அண்மையில் இணைக்கப்பட்ட இதர ஸ்டேட் பேங்குகளின் வாரக்கடன் விவரங்கள் இதில் சேர்க்கப்படவில்லை என்கிறார் கவுல்.
“வாரக்கடன் விஷயத்தில் பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய சிக்கலில் இருக்கின்றன. இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் வாராக்கடன் விகிதம் 24.99%, ஐடிபிஐ வாராக்கடன் விகிதம் 23.45%. இவற்றை எந்த வங்கியுடன் இணைத்தாலும் இவை அந்த வங்கிகளின் திறமையையும் சரித்து விடும். யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் பரோடா, பஞ்சாப் நேஷனல் பேங்க், கனரா பேங்க் போன்ற பெரிய வங்கிகளிலும் வாராக்கடன் விகிதம் 10% அல்லது அதற்கும் அதிகமாக இருக்கிறது. அவ்வப்போது பலவீனமான வங்கிகள் இவற்றுடன் இணைக்கப்பட்டால், இவற்றின் செயல்திறன் இன்னும் மோசமடையவே செய்யும். இப்படிப்பட்ட வங்கிகள் செயல்பட எதற்கு அனுமதிக்க வேண்டும்? என்று கேட்கிறார் கவுல்.
25) 805 உற்பத்தி நிறுவனங்களில் RBI OBICUS நடத்திய கணக்கெடுப்பு 2017 ஏப்ரல்-ஜூன் காலத்தில் உற்பத்திப் பயன்பாடு 71.2 விழுக்காடாகக் குறைந்திருக்கிறது என்று காட்டியது. ஏழு காலாண்டுகளில் இதுவே மிகக் குறைவானதாகும் என்று கூறுகிறார் கவுல்.
“இந்தியப் பொருளாதாரம் மோசமான நிலையில் இருக்கிறது என்பதைக் காட்ட இன்னும் பல பொருளாதார விவரங்களை சுட்ட முடியும் என்றாலும், இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்” என்று கூறும் விவேக் கவுல், “பொருளாதாரத்தில் சாதகமான அடையாளங்களே இல்லை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் பாதகமான அடையாளங்கள் சாதகமான அடையாளங்களை விட மிக அதிகமாக இருக்கின்றன” என்கிறார்.
விவேக் கவுல் முத்தாய்ப்பாகச் சொன்னது இதுதான் — “நான் அடிக்கடி சொல்வது போல, ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முதல் செயல், பிரச்சினை இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்வது. ஆனால் பிரதமர் மோடி விஷயத்தில் அப்படி இல்லை போலும்! அவருடைய உலகில் எல்லாம் சுகமே.”!
நன்றி : EquityMaster & Vivek Kaul
ஆங்கிலக் கட்டுரையை இங்கே வாசிக்கலாம்.