Thursday, 7 December 2017

நானறிந்த சினிமா - உதிரித் தகவல்கள்

எனக்கும் சினிமாவுக்கும் வெகுதூரம். ஏதாவது வாசிக்கும்போது சினிமா பற்றிய தகவல்கள் கிடைத்தால் தோண்டிக்கொண்டே போவேன். அப்படித்தான், இன்று கோவையைப்பற்றி எதையோ தேடப்போக, வேறேதோ ஒரு தகவல் கிடைக்க, சங்கிலிபோலத் தோண்டிக் கொண்டே போனபோது கிடைத்த தகவல் இது. 

* * *
கன்னியின் காதலி
கோவை சென்டிரல் ஸ்டுடியோவை ஜூபிடர் பிக்சர்ஸ் லீசுக்கு எடுத்து நடத்தி வந்த காலம். சென்டிரல் ஸ்டியோவுக்குள் வாய்ப்புத் தேடி நுழைகிறார் இவர். வெங்கடசாமி என்பவரை சந்திக்கிறார்.

என்ன வேலை எதிர்பார்க்கிறீர்கள் என்று கேட்கிறார் வெங்கடசாமி
அருமையாக கதை எழுதுவேன், கதை வசனம் எழுதுவேன் என்கிறார் இவர்.
அதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள். பாட்டெழுதத் தெரியுமா என்று கேட்கிறார் அவர்.
ஓ... எழுதுவேனே என்கிறார் இவர்.

இவரை ராம்நாத் என்பவரிடம் அழைத்துக் கொண்டு போகிறார் வெங்கடசாமி.

ஜூபிடர் பிக்சர்சுக்காக ஒரு படத்தை எடுத்துக் கொண்டிருந்தார் ராம்நாத். ஷேக்ஸ்பியர் எழுதிய பன்னிரண்டாவது இரவு என்ற நகைச்சுவை நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம் அது. பாட்டு எழுத புதியவர்கள் போதும் என்று கருதியவர் ராம்நாத். மாதுரி தேவி, அஞ்சலி தேவி, லலிதா, பத்மினி நடித்த படம்.

ஆண் வேடம் போட்ட பெண் ஒருத்தி, இன்னொரு பெண்ணுக்கு ஆறுதல் சொல்லும் காட்சிக்கு பாட்டெழுது. பாட்டு எழுதிக் கொண்டு வந்த பிறகு இசையமைப்பாளரோடு உட்காரலாம் என்கிறார் ராம்நாத். (மெட்டுக்குப் பாட்டெழுதிய காலம் அல்ல, பாட்டுக்கு மெட்டுப்போட்ட காலம் என்று புரிகிறது.)இவர் ஓடினார். ஒரு தேனீர் குடித்துவிட்டு, ஒரு பாக்கெட் சிகரெட்டும் காகிதம் வாங்கிக்கொண்டு, பாட்டு எழுத உட்கார்கிறார்.
கலங்காதிரு மனமே - உன் கனவெல்லாம்
நனவாகும் ஒரு தினமே.

இதுதான் அவர் எழுதிய முதல் பாடல்.

படம் - கன்னியின் காதலி

முதல் பாட்டுக்குக் கிடைத்தது 100 ரூபாய் ஊதியம்.

இந்தப் பாடல் திரைப்படத்துக்காக மட்டுமல்ல, அவன் தனக்கே சொல்லிக் கொண்ட ஆறுதலுமாகும்என்றார் பாடலை எழுதியவர் - கண்ணதாசன். (இந்தப் பாடலைப் பற்றிப் படித்ததும், இதே போன்ற சூழலில் இன்னொரு கவிஞர் எழுதிய வருங்காலம் வசந்தகாலம் என்ற பாடலும் உங்களுக்கு நினைவு வரலாம்.)கோவைக்கு வருவதற்கு முன் கண்ணதாசனுடன் ரயிலில் வந்தவர் கருணாநிதி. அவர் மாடர்ன் ஸ்டுடியோவுக்காக சேலத்தில் இறங்கிக் கொள்கிறார். கண்ணதாசன் கோவை வருகிறார். வருகிற வழியில் இருவரும் கையில் காசு இல்லாமல் பட்டினியாகவே வருகிறார்கள். 

மேலும் வாசிக்க : வனவாசம் (கண்ணதாசனின் சுயசரிதை), கண்ணதாசன் பதிப்பகம்.

* * *

சஷி கபூர்

இரண்டு நாட்களுக்கு முன் மறைந்த சஷி கபூர், இந்தித் திரையுலகில் கோலோச்சிய கபூர் குடும்பத்தைச் சேர்ந்தவர். பிருத்விராஜ் கபூர், ராஜ் கபூர், ஷம்மி கபூர், சஷி கபூர்...

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பிருத்விராஜ் கபூர், ராஜ் கபூர், சஷி கபூர் மூவருமே தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர்கள் என்பது ஒரு சிறப்பு.

சஷி கபூர்தான் நிறைய ஹாலிவுட் திரைப்படங்களில் பங்கேற்ற இந்திய நடிகர். காரணம் இஸ்மாயில் மர்ச்சன்ட்.

சஷி கபூரின் எத்தனையோ திரைப்படங்கள் புகழ் பெற்றவையாக இருக்கலாம். எனக்குப் பிடித்தது இன் கஸ்டடி (In Custody)

செல்வாக்கிழந்து வந்த மன்னர், அவரது உருதுக் கவிதை ஈடுபாடு, அவரது குடும்பம், கல்லூரியில் உருது ஆசிரியராக இருப்பவர், மங்கி வரும் உருதுமொழி ஆர்வம், இவற்றை மையமாக வைத்து அனிதா தேசாய் எழுதிய In Custody என்ற கதைதான் திரைப்படம் ஆனது. 1990களில் மும்பை தியேட்டர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொடிகட்டிய காலத்தில் வந்த திரைப்படம்.

ஷபனா ஆஸ்மி, ஓம் புரி, சுஷ்மா சேத், நீனா குப்தா, டின்னு ஆனந்த் என நாடக இயக்கத்திலிருந்து திரையுலகுக்கு வந்தவர்களின் ஈடுபாடு மிக்க, இயல்பான, மிகையற்ற நடிப்பைப் பார்க்கலாம். சஷி கபூருக்கு கதாநாயகன் என்ற முக்கியத்துவம் இல்லாத படம். இதில் எல்லாருக்கும் சம முக்கியத்துவம். ஷபனா ஆஸ்மி வழக்கம்போலவே அசத்தல். ஓம்புரி-நீனா குப்தா அறிமுகமாகும் முதல் காட்சியில், எந்தவித ஆர்ப்பாட்டமோ பிரச்சாரமோ இல்லாமல் பெண்ணியம்/ஆணாதிக்கம் மிக அழகாகக் காட்டப்படுகிறது. ஃபிரேம்-பை-ஃபிரேம் ரசிக்கலாம்.


படத்தைப் பார்க்க விரும்புவோர் இந்த யூடியூப் இணைப்பில் பார்க்கலாம். 

* * *
பீஷம் சாஹ்னி

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் படம் பார்த்திருப்பீர்கள். பார்க்காவிட்டால் பார்த்து விடுங்கள். படத்தை இயக்கிய அபர்ணா சென்னின் மகள் கொங்கணா சென் மிசஸ் மீனாட்சியாக நடித்திருக்கிறார். மீனாட்சியைப் பார்த்தபிறகு கொங்கணா சென் மீது காதல் கொள்ளாதிருப்பீர்களாக.

படத்தில் ஓரிடத்தில் வாகன நெரிசலில் பஸ் நின்றுவிடுகிறது. வகுப்புக் கலவரச் சூழல் வேறு. போலீஸ் இன்ஸ்பெக்டர் வந்து யாரும் வெளியே சுற்றக்கூடாது, பஸ்சுக்குள்ளே இருங்கள் என்று எச்சரித்துவிட்டுப் போகிறார்.

சற்றுநேரத்தில் ஒரு மதவெறிக் கும்பல் வருகிறது. பஸ்சில் ஏறி முஸ்லிம்களை மட்டும் அடையாளம் காண முனைகிறது. அதற்காக கீழாடையை அவிழ்த்தும் (circumcision - ஆணுறுப்பின் நுனித்தோல் நீக்கம் செய்யப்பட்டுள்ளதா என்று) பரிசோதிக்கிறது. circumcision செய்யும் வழக்கம் முஸ்லிம்களிடம் மட்டுமல்ல, யூத சமூகத்திலும் உண்டு. அந்த பஸ்சில் யூதர் ஒருவரும் இருக்கிறார். தான் மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், தானாகவே முந்திக்கொண்டு, முன்வரிசையில் இருந்த முதிய முஸ்லிம் தம்பதிகளைக் காட்டிக் கொடுக்கிறார். அவர்களை இழுத்துச் செல்கிறது மதவெறிக் கும்பல். (அவர்கள் கொலை செய்யப்பட்டார்கள் என்பது பிறகு சூசகமாகக் காட்டப்படுகிறது)

அந்த முதியவராக நடித்தவர் யார் என்று பலருக்கும் தெரியாது. அவர்தான் பீஷம் சாஹ்னி - இந்தியின் குறிப்பிடத்தக்க நாவலாசிரியர். விடுதலைக்கு முந்தைய தலைமுறையைச் சேர்ந்தவர். பிரிவினை - வகுப்புவாதத்தை மையக்கருவாக வைத்து தமஸ் (இருட்டு) என்னும் அருமையான நாவலைப் படைத்தவர்.

இவருடைய சகோதரர் பால்ராஜ் சாஹனி பற்றி அறிந்த அளவுக்குக்கூட பீஷம் சாஹ்னி பற்றி நமக்குத் தெியாது.

தமஸ் தொலைக்காட்சித் தொடராக வெளி வந்தது. சாகித்ய அகாதமி வெளியீடாக தமிழிலும் வெளி வந்தது. (தமிழாக்கம் கொடுமை.)

சாகித்ய அகாதமியில் தமஸ் வெளிவருவதற்கு முன்பே நேஷனல் புக் டிரஸ்ட் அந்த நூலை தமிழாக்கம் செய்ய எடுத்திருந்தது. இந்தி-தமிழ் மொழியாக்கம் செய்ய ஒருவரிடம் தரப்பட்டது. பெயர் பெற்ற அந்த மொழிபெயர்ப்பாளர், பாதி நூலை தமிழாக்கம் செய்து கொடுத்து சுமார் 20 ஆண்டுகள் இருக்கலாம். மீதியை அவர் தரவே இல்லை. பாதி தட்டச்சு செய்தது இப்போதும் என்னிடம் ஏதோவொரு கணினியின் ஹார்ட் டிஸ்கில் அப்படியே கிடக்கிறது. அவர் செய்து முடித்திருந்தால் ஓரளவு நல்ல தமிழாக்க நூல் கிடைத்திருக்கும். பீஷம் சாஹனி குறித்து தமிழுலகும் அறிந்திருக்கும்.

மிஸ்டர் அண்ட் மிசஸ் ஐயர் படத்தை இந்த இணைப்பில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment