இது கடந்த ஆண்டு
பேஸ்புக்கில் எழுதிய பதிவு. தில்லிக்கு வந்திருந்த முஷ்தாக் அகமத் என்னும் நண்பரை சந்திக்கச்
சென்றபோது கிடைத்த அரியதொரு தகவலும் இதில் இருக்கிறது என்பதால் வலைப்பூவில்
பதிகிறேன். வழக்கத்துக்கு மாறாக, வழக்குத் தமிழில் ஒரு பதிவு.
*
கவிதைகள்,
கதைகள், கட்டுரைகள், வரலாறு, நண்பர்கள்னு, மணிக்கணக்கா பேசிட்டு உக்காந்திருந்தோம் நானும்
முஷ்தாக் அகமதும். ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு தோணலே.
பேச்சு சுவாரஸ்யத்துல ஞாபகமே வரலே!
போட்டோதான் எடுத்துக்கலையே
தவிர... இன்னொரு விஷயம் கிடைச்சுது. ரெண்டு பேரும் அப்படியே ரோட்டுல நடந்து போகும்போது
ஒரு பக்கத்திலிருந்து மக்கள் வெளிய வர்றதைப் பார்த்தோம். என்னவா இருக்கும்னு உள்ளே
போய் பார்த்தேன்... பழைய காலத்துப் படிக்கிணறு.
நாங்க நடந்து போயிட்டிருந்தது
மெஹரோலி பகுதியில் ஒரு சின்ன சாலை. குதுப் மினார் இருக்கே, அந்தப் பகுதியின் பெயர்தான் மெஹரோலி. ஒரு
காலத்தில் கிராமம். முஸ்லிம்கள் அதிகம் வசித்த பகுதி. இப்போது பல
மாடிக்கட்டிடங்கள் வந்துவிட்டன.
ராஜோன் கீ பாவ்லி-ன்னு
ஒரு கிணறு மெஹ்ரோலியில் இருக்குன்னு முன்னமே படிச்சிருக்கேன். ஆனா இது அதுவல்ல. (பாவ்லி
/ பாவ்டி-ன்னா கிணறுன்னு அர்த்தம்.) இதுக்கும் நிச்சயமா ஒரு வரலாறு இருக்கும்னு தோணிச்சு.
ஆனா அங்கே பக்கத்துல இருந்த யாரைக் கேட்டாலும் பெயர் தெரியலே. பெரிய்ய்ய்யய கெணறு...
எப்பவுமே வத்தாது... இப்படி பதில்கள் மட்டும்தான் கிடைச்சுது.
பசங்க குதிச்சு கும்மாளம்
போடறதைப் பாத்ததும் உடனே தண்ணியில குதிக்கணும்னு தோணிடுச்சு. ஆனா கையில் மாற்று டிரஸ்
இல்லே. முஷ்தாக் கூட அரட்டை அடிக்கப் போனது... இப்படியொரு கிணறு இருக்கும்னு எனக்கென்ன
தெரியும்?! அடுத்தவாட்டி மாற்று
டிரஸ்ஸோட வரணும்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன். சரி மறுபடி கதைக்கு வரலாம்.
கிணறு எவ்வளவு ஆழம்
இருக்கும்? தெரியலே. பசங்க ஓரமாதான்
குளிச்சாங்க. சில பேர் மட்டும் மேலே இருந்து குதிச்சாங்க. படம் மட்டும் எடுத்துகிட்டு
வந்துட்டேன்.
வீடு வந்ததும் நெட்ல
தேடிப் பாத்தேன். பெயர் கிடைச்சுடுச்சு. இதுக்குப் பேரு கந்தக் கீ பாவ்லி (கந்தகக்
கிணறு.) இதுக்கு ஒரு கதை உண்டு.
மெஹரோலியில,
குதுப் மினாருக்கு பின்னாடி,
இப்ப இருக்கிற பஸ் ஸ்டாண்டுக்குப்
பின்னாடி, ஊருக்குள்ள ஒரு தர்கா
இருக்கு. அந்த தர்காவில் அடக்கமாகி இருப்பவர் குத்புதீன் பக்தியார். தர்காவுக்கு இந்தப்பக்கம்
இருக்குது இந்தக் கிணறு.
1296 – 1316 காலகட்டத்தில் இந்தப்
பகுதியை ஆட்சி செய்தவர் சுல்தான் ஷம்சுதீன் இல்துமிஷ். அப்பதான் ஹஜரத் குத்புத்தீன்
பக்தியார் காகி என்கிற இஸ்லாமியத் துறவி அங்கே வருகிறார். அப்போ மெஹரோலியில் கடும்
தண்ணீர் பஞ்சம் இருந்திருக்கு. துறவியார் குளிக்கிறதுக்கு கஷ்டப்படறதைப் பார்த்தார்
மன்னர் ஷம்சுதீன். உடனே கிணறு வெட்ட ஏற்பாடு செய்தார். அப்படி உருவான கிணறுதான் இந்த
கந்தகக் கிணறு. இந்த நீரில் இருக்கிற கந்தகம் பலவிதமான தோல் நோய்களையும் குணப்படுத்தும்
என்பது நம்பிக்கை.
ராஜோன் கிணறுக்கு
இன்னொரு பெயரும் உண்டு - காய்ந்த கிணறு. ராஜோன் கீ பாவ்லி அப்படீன்னா, ராஜாக்களின்
கிணறுன்னு நினைச்சிருந்தேன். இல்லையாம். ராஜோன்-னு சொன்னா, கொத்தனார்கள்னு
பொருளாம். கொத்தனார்களுக்காக வெட்டப்பட்ட கிணறாம். ஆனா இந்த கந்தகக்
கிணறு எப்பவுமே வற்றாதாம்.
நாங்க வெளியே வந்தப்போ,
பக்கத்துல ஒரு பம்ப் ரூம்
பார்த்தோம். ஒரு பெரிய மோட்டார் தண்ணி இறைச்சுட்டிருந்தது. படத்துல பாத்தீங்க இல்லையா.... அது நாங்க பாத்த தண்ணீர் மட்டம். உண்மையில் கிணறு எவ்வளவு
ஆழம்? 2004-05இல் தொல்லியல் துறை கிணற்றைத் தூர் வாரி சுத்தம் செய்த பிறகு கிணற்றில் தண்ணீர் நிறைய இருக்குதாம்.
நெட்டிலிருந்து
எடுத்த சில படம் மேலே இருக்கு. இந்த வீடியோவிலும் பாக்கலாம். அப்புறம் விக்கிலயும் தேடிப் படிச்சுப்பாருங்க.