Monday, 26 December 2011

சுந்தரம் பிஎஸ்சி. பி.எட்.


அவன் வயதை 25க்கும் 30க்கும் இடையே அவரவர் வசதிக்கேறப் மதிப்பிட்டுக் கொள்ளலாம். இஸ்திரி போடாத பேன்ட், கட்டம் போட்ட சட்டை, சுத்தமாகத் தலைசீவி எண்ணெய் தடவிய தலைமுடி.
ஹலோ, குட் மார்னிங்...
குட் மானிங் - எங்களுக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் பதில் சொல்வோம்.
ஹவ் டு யூ டூ... தெளிவான ஆங்கிலத்தில் எங்களைப் பார்த்துக் கேட்பான்.
தாங்யூ - எங்களுக்குத் தெரிந்த மற்றொரு ஆங்கில வார்த்தையில் பதில் அளிப்போம். இந்த தாங்யூ கூட அவரவர் பின்னணியைப் பொறுத்த உச்சரிப்புக் கொண்டதாக இருக்கும்.
ஐயாம் வெய்ட்டிங் ஃபார் மை அப்பாயின்மென்ட் ஆர்டர் என்பான். அவ்வளவு நீள வாக்கியத்துக்கு எங்களால் அர்த்தம் புரிந்து கொள்ள முடியாது என்றாலும் கேட்டுக் கேட்டுப் பழகிப்போய் அதன் அர்த்தம் எங்களுக்கு மனப்பாடமாகி இருந்தது. எங்களுக்கு என்றால், என்னைப் போன்ற விடலைப் பருவச் சிறுவர்களுக்கு.
ஐஆம் சுந்தரம், பிஎஸ்சி பிஎட் என்பான். எஸ்... எஸ்... என்போம்.
1970களில் பிஎட் முடித்த ஆசிரியர்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டு அன்டிரெயின்ட் எனப்பட்ட, பிஎட் படிக்காத பட்டதாரிகளுக்கு பள்ளிகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உருவான காலம் அது. இவர்களில் பெரும்பாலானவர்கள் நிரந்தர ஆசிரியர்கள் ஆனார்கள்.
எங்கள் பள்ளிக்கும் இளைஞர்கள் நான்கு பேர் ஆசிரியர்களாக வந்தார்கள். இருவர் கணிதத்திற்கு, இருவர் அறிவியலுக்கு. அறிவியலுக்கு வந்தவர்கள் எங்களை அவ்வளவாக ஈர்க்கவில்லை. ஆனால் கணிதத்திற்கு வந்தவர்களில் ஒருவர் அபார ஆங்கிலப் புலமையும் கணிதம் கற்பிக்கும் திறமையும் கொண்டவராக வாய்த்தார். மற்றொருவர் தமிழில் தீராத ஆர்வமும், சித்திரக் கலையில் வல்லுநராகவும் கணக்கைத் தமிழிலேயே புரிய வைப்பதில் சிறந்தவராகவும் இருந்தார். இளைஞர்கள் என்பதால் மாணவிகள் மத்தியில் ஈர்ப்பும் இருந்தது. தீராத தமிழார்வலர் பெண்கள் பக்கம் அதீதமாகவே கவனம் செலுத்துவதை நாங்கள் பொறாமையுடனும் வியப்புடனும் கவனித்து வந்தோம்.. ஆங்கிலப் புலமைக் கணக்காசிரியரோ சாமியார் என பெயர் எடுத்தார். கணக்கு என்றாலே காத தூரம் ஓடுகிறவனைக்கூட கணக்கில் பாஸ் மார்க் வாங்க வைத்தவர். அவரிடமிருந்து நாங்கள் ஒற்றை ஒற்றை ஆங்கில வார்த்தைகளாகக் கற்றுக் கொண்டு பரிசோதிக்க முயன்று கொண்டிருந்த காலத்தில்தான் சுந்தரம் எங்கள் ஊருக்கு வந்து சேர்ந்தான்.
இட் அது பட் ஆனால் வாட் என்ன சே சொல்லு என்பதான ஆங்கிலப் புலமைகளை நாங்கள் அவன் பக்கம் விட்டெறிவோம். சிரிப்பான். இப்படிப்பட்ட நபர்களுக்கு எல்லா ஊர்களிலும் தரப்படும் பட்டம் அவனுக்கும் கிடைத்தது - பைத்தியம்.
இருந்தாலும் நாங்கள் உள்பட யாரும் அவனை சீண்டியதோ கோபமூட்டியதோ கிடையாது. காரணமாக இருந்தது அவனுடைய ஆங்கிலம். மென்மையான குரலில், அதே சமயம் தெளிவான உச்சரிப்பில் ஆங்கிலத்தில் பேசுவான். அண்ணா அமெரிக்கா சென்று அமெரிக்கப் பல்கலைக் கழகத்து மாணவர்களையே தனது ஆங்கிலப் புலமையால் வியப்பில் ஆழ்த்தியதான செய்தி எங்களை எல்லாம் ஆட்கொண்டிருந்த காலம். அதை அவனிடம் திருப்பிச் சொல்லுமாறு  கேட்போம். எனி சென்டென்ஸ் வில் நாட் எண்ட் வித் த வேர்ட் பிகாஸ் பிகாஸ் பிகாஸ் ஈஸ் எ கன்ஞக்சன்... எத்தனை முறை கேட்டாலும் எங்களுக்கும் சலிக்காது, அவனுக்கும் சலிக்கவில்லை என்பதும் அவன் எங்கள் மேல் கோபம் காட்டாததிலிருந்து தெரிந்தது.
எங்கேயும் தூங்குவான், செட்டியார் அல்லது ஐயர் அல்லது பாய் கடை முன் வந்து நிற்பான் - ஒரு குட் மார்னிங். அவன் புண்ணியத்தில் எங்கள் ஊர் பெட்டிக்கடை சாகுல் அமீது முதல் மளிகைக் கடை கருப்பசாமி செட்டியார் வரை எல்லாரும் குட் மார்னிங் கற்றுக் கொண்டார்கள். எந்தக் கடைக்குப் போனாலும் வெளியே மௌனமாக நிற்பான். டீக்கடைக்கார் டீ போட்டு நீட்டுவார். பேசாமல் ஓரமாக நின்று குடித்து விட்டு தாங்க் யூ சொல்லி விட்டு நடப்பான். பெட்டிக்கடைக்காரர் வாழைப்பழம் தருவார். ஓட்டல் வைத்திருந்த ஐயர் இலையில் இட்லி வைத்துத் தருவார். எல்லாருக்கும் ஒரே பதில் - தாங்க் யூ.
பஸ் ஸ்டாண்டில் ஏதேனும் ஒரு பெஞ்சில் அமர்ந்து கொண்டு தன் தோளில் மாட்டியிருக்கும் ஜவுளிக்கடை மஞ்சள் பையிலிருந்து தாள்களை எடுப்பான். சட்டைப் பாக்கெட்டிலிருந்து பென்சிலை எடுத்து கணக்குப் போட ஆரம்பிப்பான். எங்களுக்குத் தெரிந்திருக்காத ஏதேதோ சின்னங்கள் எல்லாம் பயன்படுத்தி ஏதேதோ கணக்குகள் போடுவான். நாங்கள் அவனுக்குப் பின்னால் நின்று கொண்டு வேடிக்கை பார்ப்போம்.
ஒருநாள் எனக்கு ஒரு சந்தேகம் வந்தது - உண்மையிலேயே இவன் கணக்கில் புலியா, எப்போதோ படித்த ஒரு கணக்கை தினமும் போடுகிறானா என்று. அன்று முதல் நேரம் கிடைத்த போதெல்லாம் நான் அவன் பின்னால் செல்லத் தொடங்கினேன். பஸ் ஸ்டாண்ட் எனும் புளியமரத்தடி பெஞ்சில், ரயில்வே ஸ்டேஷனின் பூவரச மரத்தடி பெஞ்சில், மூடிய கடையின் திண்ணையில் என அவன் எங்கே உட்கார்ந்து கணக்குப் போடுவதைக் கண்டாலும் நானும் பக்கத்திலோ பின்னாலோ நின்று கவனிக்கத் தொடங்கினேன். என் சந்தேகம் தீர்ந்தது. ஒரு நாள் போட்டுப் பார்த்த கணக்கை அவன் மறுநாள் போட்டுப் பார்த்ததை நான் பார்த்ததே இல்லை. உண்மையிலேயே கணக்குப் படித்தவன்தான், எதனாலோ மூளை குழம்பி விட்டிருக்கிறது என்று கண்டுபிடித்தேன். இதை என் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டேன். சிரித்தார்கள் அவர்கள் - ஆமா... இவரு பெரிய தாமஸ் ஆல்வா எடிசன் பாரு, கண்டு பிடிச்சுட்டாராம்... ஏண்டா, அவன் பேசற இங்கிலீசுல இருந்தே அவம் படிச்சவந்தான்னு புரியலையா ஒனக்கு...
இவனுக்கும் ஒருநாள் வேலை கிடைத்து விடும் என்று நான் நம்பினேன். அப்போது பைத்தியமும் தெளிந்து விடலாம். ஒருவேளை இவனே எங்கள் பள்ளிக்கும் ஆசிரியராகலாம். கற்பனை செய்து பார்த்தபோது ஆசிரியர் வடிவத்தில் அவன் பொருத்தமாகத் தோன்றவில்லை.
யாரிடமும் அவன் யாசகம் கேட்டதில்லை, .யாரும் அவனுக்கு் தேவையானதை அவன் கேட்காமலே வழங்கத் தயங்கியதும் இல்லை.
அவன் அழுக்காகவோ கிழிசலாகவோ ஆடைகள் அணியவில்லை. பல நாட்களில் வேட்டி சட்டை, சில நாட்களில் பேன்ட் சட்டை. மாறாமல் இருந்தது அவன் தோளில் போட்டிருந்த மஞ்சள் பை. ஊருக்குள் இருந்த யாரேனும் ஒருவர் அவனுக்கு பழைய ஆடைகளைக் கொடுக்கிறார்கள் என்பது எங்களுக்குப் புரிந்தது. பள்ளி முடியும் வரை காக்கி அரைக்கால் சட்டை தவிர பேன்ட் என்ற கனவே காண முடியாதவர்களாக இருந்த எங்களுக்கு இவன்மேல் கொஞ்சம் பொறாமைகூட இருந்ததுண்டு.
கோடை கால விடுமுறைக் காலங்களில் ஆற்றுநீரில் ஆட்டம்போட நாங்கள் போகும்போது அவனையும் ஆற்றில் பார்ப்பதுண்டு. ஆற்றுப் பாறைகளில் எப்படியும் சின்னச் சின்ன சோப்புத் துண்டுகள் கிடைக்கவே செய்தன. சிலர் மறுநாளுக்காக தனக்கு மட்டுமே தெரிந்த குழியில் மறைத்து வைத்து விட்டிருப்பார். பலர் மறந்து விட்டுச் சென்றிப்பார்கள். சிலர் சிறிய சோப்புத் துண்டுகளை இனியும் பயன்படுத்த முடியாது என்பதற்காக விட்டுச் சென்றிருப்பார்கள். பெரும்பாலும் கதர் கடையின் மஞ்சள் சோப்புகள். அவற்றைப் பொறுக்கி எடுத்து தன் ஆடைகளை சுத்தமாகத் துவைத்து மணலிலோ பாறையிலோ காய வைப்பான். குளிப்பான். பாதி உலர்ந்த ஆடைகளை அணிந்து கொண்டு ஊருக்குள் வருவான். வருகிற வழியிலேயே ஆடைகள் உலர்ந்து விடும்.
இவனைப் போல் இருந்து விடுவது எவ்வளவு சுபலம் என்று பல சமயங்களில் எனக்குத் தோன்றும். பள்ளிக்குப் போக வேண்டியதில்லை, வீட்டுப் பாடம் இல்லை, டியூஷன் இல்லை, வாத்தியார்களிடம் அடி இல்லை, போலீஸ்-திருடன் விளையாட்டில் மறைந்திருந்தவனை அவன் அப்பாவோ அம்மாவோ ஆட்டத்தின் நடுவிலேயே காதைப் பிடித்து இழுத்துச் செல்லும் அபாயமில்லை. மேற்படிப்பு என்ன படிக்க வேண்டும் என்ற கவலையும் இல்லை. இப்படி எத்தனையோ இல்லைகள். ஆனால் அந்த சுலபமான வாழ்க்கை எனக்கு வாய்க்கவில்லை, எல்லாருக்கும் என்ன வாய்த்ததோ அதுவே எனக்கும் வாய்த்தது. படிப்பு, மேற்படிப்பு, வேலை தேடல், அலைச்சல், விரக்தி, தற்காலிக வேலைகள், ஊர்விட்டு ஊர் மாற்றங்கள்....
2011 டிசம்பர் 22
பஸ் ஸ்டாண்டில் இறங்கி சுற்றிலும் பார்த்து, என்னை வினோதமாகப் பார்க்கும் அறிமுகம் இல்லாத நபர்களின் பார்வையைப் பொருட்படுத்தாமல் சிகரெட்டைப் பற்ற வைத்து பழைய ஊரின் நினைவுகளை மீட்க முயன்று மேலே நடந்தேன்.
குட் மார்னிங் சார்...
குரலின் மென்மையில் அதிர்ந்து திரும்பினேன். கட்டம் போட்ட சட்டை, பேன்ட், தோளில் மஞ்சள் பை. ஹவ் டு யூ டூ சார்.
நொடியில் அவனை அடையாளம் காண முடிந்தது, அவன் பெயர் மட்டும் நினைவுக்கு வர மறுத்தது. கண்களில் கண்ணீர் துளிர்த்தது. அடக்கிக் கொண்டேன். நீ என்பதா, நீங்கள் என்பதா.....
பொத்தாம் பொதுவாக சௌக்கியமா என்றேன்.
நல்லா இருக்கேன் சார். வாத்தியார் சார் சன்தானே நீங்க என்றான். மறுபடியும் கண்ணீர் வர வைக்கிறான் இவன்.
சரியா கண்டுபுடிச்சுட்டீங்க...
சிரித்தான்.
நல்லா இருக்கீங்களா...
இருக்கேன் சார்...
மீண்டும் அதே சிரிப்பு.
உங்க பேரு மறந்துட்டேன்...
சுந்தரம் சார். சுந்தரம் பிஎஸ்சி பிஎட்.
சட்டைப் பைக்குள் கைவிட்டபோது கிடைத்த பத்து ரூபாயை நீட்டினேன். தாங்க் யூ என்ற படி வாங்கிக் கொண்டான்.
சே.... பாக்கெட்டில் கைவிட்டபோது ஏன் ஐம்பது ரூபாய் நோட்டோ நூறு ரூபாய் நோட்டோ வரவில்லை.... அட, அது போகட்டும். பர்ஸை எடுத்துப் பார்க்க விடாமல் செய்தது எது...
அவனுடைய ஆங்கிலமா இல்லை நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு என்னையும் ஒருவன் அடையாளம் கண்டு கொண்டான் என்ற அதிர்ச்சியா... தெரியவில்லை. 

Saturday, 24 December 2011

பண்பாட்டு அதிர்ச்சி - 1


வீரன் ஒருமுறைதான் சாகிறான், கோழையோ தினமும் சாகிறான் - இந்தப் பழமொழி ஏனோ நினைவு வந்தது பண்பாட்டு அதிர்ச்சி என்ற தலைப்பினை இட்டதும்.
தமிழகத்தை விட்டு தலைநகருக்குக் குடிபுகுந்தவர்கள் பெரும்பாலோர் பண்பாட்டு அதிர்ச்சியிலிருந்து தப்பியிருக்க முடியாது. அது ஒருமுறைதான் நிகழ்வது. ஆனால் தலைநகரிலேயே வசிக்க நேர்ந்தவர்கள தாயகம் வரும் ஒவ்வொரு முறையும் பலமுறை அதிர்ச்சிகளுக்கு ஆளாக நேருகிறது - மற்றவர்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் எனக்கு.
நீ.....ண்.....ட பயணத்துக்குப் பிறகு ரயிலிறங்கியதும் முதலில் சந்திப்பது பேருந்துகளில் ஏற்பட்ட - ஏற்படுகிற மாற்றங்கள். என்னைப் பொறுத்தவரை இதுதான் முதல் அதிர்ச்சி. அடுத்து வீடு சேர்ந்ததும் மின்வெட்டு அதிர்ச்சி... அப்புறம் தொலைக்காட்சித் தொடர்களின் அதிர்ச்சி...
நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்ற ஒருநாளில் வந்திறங்கி ஊருக்கு பேருந்துப் பயணம் மேற்கொள்ளும்போது பஸ்களில் எல்லாம் வீடியோ. கவுண்டமணியும் செந்திலும் மண்டைத் தலையா... எருமைத் தலையா என்று செந்தமிழில் ஒருவரை ஒருவர் திட்டி பாசத்துடன் உதைத்துக் கொள்ளும் தமிழ் நாகரிகத்தைப் பிரதிபலிக்கும் காட்சிகளை ஒரு பஸ் விடாமல் எல்லாவற்றிலும் காணும் பாக்கியம் எனக்கும் கிடைத்தது. அரசு பஸ்களும் இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. யார் போட்ட வழக்கோ, யார் தொடுத்த புகாரோ தெரியாது - வீடியோக்களுக்கு முற்றுப்புள்ளி விழுந்தது.
இப்போது வீடியோ இல்லாத குறையை இரண்டு மடங்காகத் தீர்ப்பது என முடிவு செய்து விட்டன பேருந்து நிறுவனங்கள். எந்தப் பேருந்தில் ஏறினாலும் உசுரே போகுது-வும் ஒய் திஸ் கொல வெறி டி என்றும் தொண்டை கமறும் குரலைக் கேட்டாக வேண்டிய தலைவிதி... அதிலும் எங்கே போக வேண்டும் என்று கேட்கிற நடத்துநரின் குரலும் போகிற இடத்தைச் சொல்கிற பயணியின் குரலும் அமுங்கிப் போகிற வகையில் உச்சஸ்தாயியில் தொம்தொம் என ஒலிக்கின்றன பாடல்கள். காலையில் பள்ளிக்குத் தேர்வு எழுதச் செல்லும் மாணவன் பேருந்தில் பயணம் செய்தால் அவன் காதில் நாள் முழுதும் இந்தப் பாடல் எதிரொலித்துக்கொண்டே இருக்கும் என்பது நிச்சயம். ஏன் இந்தக் இரைச்சல் வெறி தமிழகமே....
எங்கே போவதானாலும் அரசுப் பேருந்துகளில் மட்டுமே செல்வது என்ற எழுதப்படாத விதியை கடுமையாகப் பின்பற்றுபவனாக இருப்பதால் எனக்கு ஓரளவு இதிலிருந்து விடுதலை. அப்படியும் அரசுப் பேருந்துகள் சிலவற்றிலும் பாடல்கள் ஒலிக்கவே செய்கின்றன - சற்றே இரைச்சல் குறைவாக.
சில நேரங்களில் வேறு வழியே இல்லாமல் தனியார் பேருந்தில் பயணிக்க வேண்டிய கட்டாயமும் நேர்ந்து விடுகிறது. உதாரணமாக இரண்டு நாள் முன்பு திருப்பூரிலிருந்து ஈரோடு செல்ல நேர்ந்தது போல.
ஈரோடு செல்வதற்காக திருப்பூர் புதிய பேருந்து நிலையத்துக்கு நான் சென்ற போது பிற்பகல் 3.30 மணி. அரசுப் பேருந்து ஒன்று காலியாகக் காத்திருந்தது. ஏறி அமர்ந்து கொண்டேன். 5...10...15... நிமிடங்கள் கழிந்தன. ஒரு தனியார் பேருந்து அதிரும் ஸ்பீக்கர்களில் பாட்டுகள் ஒலிக்கப் புறப்பட்டது. இந்த பஸ்சில் அமர்ந்திருந்த எல்லாரும் சந்தோஷமாக ஏறிக்கொள்ள அது போய்விட்டது. நான் காத்திருந்தேன். 5...10...15 நிமிடங்கள் கழிந்தன. மற்றொரு தனியார் பஸ் வந்து நின்று பாட்டை அலற விட்டு என் பஸ்சுக்கு முன்னால் நின்று கொண்டது. முன் நிகழ்ந்தது போலவே இப்போதும் இந்த பஸ்சில் ஏறியவர்கள் ஓடிப்போய் அதில் ஏறிக்கொண்டார்கள். எனக்கு பைப்பர் கதை நினைவுக்கு வந்தது. இரைச்சல் பாடல்கள்தான் தமிழகப் பயணிகளை இழுக்கும் பைப்பரோ...
இந்த பஸ் லேட்டாகுங்க... என்று அந்த பஸ்காரர் சொன்னதற்கு தலையாட்டி விட்டு அப்படியே அமர்ந்திருந்தேன். அதுவும் போய்விட்டது. 5...10...15....
காக்கிச் சட்டை அணிந்த இருவர் தோளின்மேல் கைகளைப் போட்டுக்கொண்டே வந்தார்கள். ஒருவர் நானிருந்த பேருந்தில் ஏறி டிரைவர் ஸீட்டுக்கு மேலே ஏதோ ஒன்றை செருகிவிட்டு கீழே இறங்க இருவரும் மீண்டும் தோள்மீது கைபோட்டுக் கொண்டு மாயமாகி விட்டார்கள். ஓஹோ.... டிரைவர் வந்து விட்டார் எப்படியும் புறப்பட்டு விடும் என்ற நம்பிக்கை பிறந்தது.
இப்போது மூன்றாவது தனியார் பேருந்து வந்து நின்று அதுவும் போய் விட்டது. 5...10...15 நிமிடங்கள் யாரையும் காணவில்லை. குமுறலை அடக்கிக் கொண்டு கீழே இறங்கினேன். நேரக்காப்பாளர் - டைம்கீப்பர் என்பதன் தமிழாக்கமாக இருக்க வேண்டும் ... அபாரமான தமிழாக்கம்தான் - என்று போடப்பட்டிருந்த அறைக்குச் சென்றேன். ஒரு மணி நேரமாக காத்திருப்பது பற்றிச் சொன்னேன். ஒரு மாவட்டத் தலைநகருக்கும் மற்றொரு மாவட்டத் தலைநகருக்கும் இடையே ஒரு மணி நேரத்திற்கு அரசுப் பேருந்தே இல்லாமல் இருப்பது விந்தையாக இல்லையா என்று கேட்டேன்.
நேரக்காப்பாளர் அன்று மௌனவிரதம் போல.... பக்கத்தில் இருந்தவர் பேசினார். நான் காத்திருந்த பஸ்சுக்கு டிரைவர் வந்து விட்டாராம், கண்டக்டர் வரவில்லையாம், அதனால் அந்த பஸ் போகாதாம்...
சரி அடுத்த பஸ் எப்போது ...
அது ஐந்தரை மணிக்கு வரும்... அதான் முன்னாடி நிக்குதே பிரைவேட் அதுல போயிடுங்க என்று அருமையான ஆலோசனை கிடைத்தது.
போலாந்தாங்க, ஆனா கவர்மென்டு பஸ்சுல மட்டும்தான் போகணும்னுதான் இவ்வளவு நேரம் வெய்ட் பண்றேன் என்றேன். என்னங்க பண்றது கண்டக்டர் இல்லியே என்றார்.
சரி இதைப்பத்தி எங்க கம்ப்ளைண்ட் பண்ணணும், நம்பர் இருந்தா குடுங்க என்றேன். அதெல்லாம் எங்ககிட்ட இல்லேங்க... வந்தா வந்த டைமைக் குறிக்கிறதும் புறப்பட்டா புறப்பட்ட டைமைக் குறிக்கிறதும்தான் எங்க வேலை என்றார்.
அருமையான வேலைப் பகிர்வு முறை. ஒருவேளை மௌன விரதம் இருந்தவர் பேருந்துகளின் வருகிற நேரத்தையும், அழகாக பதிலளித்தவர் புறப்படுகிற நேரத்தைக் குறிப்பவருமாக இருக்கலாம். அரசுப் பேருந்துக் கழகங்கள் கடும் நஷ்டத்தில் இயங்குவதில் வியப்பேதும் இல்லை.
தலைவிதியை நொந்து கொண்டு தனியார் பேருந்தில் ஏறினேன். மீண்டும் ஒலித்தது ஒய் திஸ் கொல வெறி டி....
பண்பாட்டு அதிர்ச்சிகள் தொடரும் - பேருந்துப் பயணங்களுக்கு இடையே.
பி.கு. இந்தப் பதிவும் ஒரு அரசுப் பேருந்தில்தான் எழுதப்படுகிறது. திருப்பூர் - உடுமலை அரசுப் பேருந்து, 21 டிசம்பர் 3.30 மணி. பாட்டுகள் ஒலிக்காத இந்தப் பேருந்தின் ஓட்டுநருக்கும் நடத்துநருக்கும் கோடானுகோடி நன்றிகள். 

Monday, 19 December 2011

அழைப்பிதழ்

அன்பு நண்பர்களே,
எங்கள் கனவு இல்லத்தின் திறப்பு விழா - புதுமனை புகு விழா - அழைப்பிதழ் கீழே. 





அன்புடையீர்
எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும்
உங்கள் அனைவரின் அன்பான ஆதரவாலும்
அஜீமா ரஹ்மான் இல்லம்
என்னும் எமது கனவு இல்லத்தின்
திறப்பு விழா
28 டிசம்பர் 2011, புதன்கிழமை
காலை 10.30 மணிமுதல் பகல் 12.00 மணிக்குள்
உடுமலைப்பேட்டை, ஏரிப்பாளையம்
தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகத்தின் பின்புறம்
ஆவணாண்டீஸ்வரர் லேஅவுட்-இல் 42ஆம் இலக்கத்தில் நடைபெற உள்ளது.

வருகை புரிந்து வாழ்த்த வேண்டுகிறோம்.

அன்புடன்
எஸ். அஜீமுன்னிஸா                     ஆர். ஷாஜஹான்
எஸ். ஜஹான் ஆரா                        எஸ். ஆமீனா

உங்கள் நல்வரவை நாடும் - சுற்றமும் நட்பும்


நண்பர்கள் அனைவரையும் இயன்றவரை நேரில் சந்தித்து அழைக்கத்தான் விரும்பினோம். ஆனால் தவிர்க்க இயலாத வேலைப்பளுவும் இதர பிரச்சினைகளும் இதை சாத்தியப்படுத்தவில்லை. நீங்களும் இதைப் பொருட்படுத்த மாட்டீர்கள் என நம்புகிறேன்.
இந்த இனிய நாளில் உங்கள் வாழ்த்துகளை வேண்டுகிறோம்.