Wednesday, 4 April 2012

குரங்குக்கும் கொஞ்சம் பட்ஜெட்


இது நேற்று நடந்தது. இன்று நடந்திருந்தாலும் அதில் பெரிய வித்தியாசம் எதுவும் இருந்திருக்காது. நேற்று மார்ச் 11 என்பது மட்டும்தான் வித்தியாசம் - அதாவது போன கணக்காண்டின் இறுதி மாதம். சரி, நடந்தது என்ன என்று கேட்கிறீர்களா? சொல்கிறேன்.
நேற்று வானொலி நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது ஒரு நிகழ்ச்சி ஒலிப்பதிவுக்காக. இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். விஷயம் ஒலிப்பதிவு சம்பந்தப்பட்டதல்ல என்பதுதான் விசேஷம்.
அதற்கு முன்னால் ஒரு கேள்வி. நீங்கள் எப்போதாவது ரேடியோ ஸ்டேஷனுக்குப் போயிருக்கிறீர்களா? போயிருக்கிறவர்கள் அடுத்த பத்து பத்திகளை ஒதுக்கிவிட்டு மேலே போகலாம். போகாதவர்கள் தொடர்ந்து மேற்கொண்டு படிக்கலாம்.
வானொலி நிலையம், மைய அரசின் பாதுகாப்பு அதிகம் தேவைப்படுகிற அலுவலகம் அல்லவா? அதனால், நுழையும் வாசல்கள் எல்லாவற்றிலும் செக்யூரிட்டி இருக்கும். பாதசாரிகள் நுழைவதற்கான வாசலில் நுழைந்ததும் கீழே விரிக்கப்பட்டிருக்கிற பளபளவென மின்னும் வழுக்கும் மொசைக் டைல்ஸ் உங்களை மிரட்டும்.
சில நாட்கள் முன்னால் நான் போனபோது அங்கே வினைல் புளோரிங்தான் போடப்பட்டிருந்தது. பாவப்பட்டிருந்த கற்களில் காலை வைக்கவே பயமாய் இருந்தது. வழுக்கல் என்றால் வழுக்கல் அப்படியொரு வழுக்கல். ஒருவழியாக சர்க்கஸ் வித்தைக்காரன் மாதிரி பேலன்ஸ் செய்து, ஒருவழியாக வரவேற்பரையில் நுழைவுக்கான அனுமதிச்சீட்டு வாங்கிக்கொண்டு அங்கிருந்து வெளியே வந்தேன்.
புதிய வழுக்கு மொசைக் கற்கள் எதற்கு, உள்ளே நுழைவதற்கான கதவு சாத்தப்பட்டிருந்தது எதனால் என்ற கேள்விகள் உள்ளே குடைந்து கொண்டே இருந்தன. ஒருவேளை தீவிரவாதிகள் திபுதிபுவென்று ஓடிவர முனைந்தால் வழுக்கி விழட்டும் என்று போடப்பட்டிருக்கலாம். தீவிரவாதிகளுக்குத்தான் பாஸ் எதுவும் தேவையில்லையே. அல்லது இந்த மொசைக் கற்கள் போடுவதில் யாரேனும் ஒரு அதிகாரிக்கு காண்ட்ராக்டரிமிருந்து லாபம் கிடைத்திருக்கலாம். அல்லது யாராவது ஒரு விஐபி அண்மையில் வந்திருப்பாராக இருக்கலாம்.
இப்படி பல 'கலாம்'களை அலசிப்பார்த்துக்கொண்டே கம்பிவலை சுழல் கதவை நெருங்கினேன். அங்கே இருந்த செக்யூரிட்டி ஆட்கள் மும்முரமாக ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவேளை பாலஸ்தீன பிரச்சினையை அலசிக் கொண்டிருக்கலாம். என்னை எதுவும் கேட்கவும் இல்லை. சோதனை செய்யவும் இல்லை. தீவிரவாதிகள் திபுதிபுவென உள்ளே ஓட வேண்டியதே இல்லை. எத்தனை கிலோ வெடிமருந்தையும் எடுத்துக்கொண்டு நிதானமாக பந்தாவாக நடந்து நுழைந்தால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்கள் என்று தோன்றியது. அதைப்பற்றி இப்போது எதற்கு? நான் சுழல் கதவைக் கடந்து உள்ளே போனேன்.
நல்லவேளையாக உள்ளே அதுபோல வழுக்குக் கற்கள் பதிக்கப்படவில்லை என்பது ஆறுதலாக இருந்தது. வட்ட வடிவில் அமைந்திருந்த தாழ்வாரம் வழியாக நடந்து நடந்து பிரிட்டிஷ் காலத்துக் கட்டிடத்தின் மையப் படிகளை அடைந்தேன். ஒவ்வொரு முறையும் வியப்பை ஏற்படுத்துகிற உயரமான கூரை. வட்டவடிவக் கூடத்தின் நடுவிலும் ஓரங்களிலும் பழைய கால வானொலிப் பெட்டிகள், ஒலிப்பதிவுக் கருவிகள் எல்லாம் கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
இதைப் பார்க்கும்போதெல்லாம் மாமனார் வீட்டில் பழைய சாமான்களிடையே இன்னும் கிடக்கிற வால்வு ரேடியோவை இங்கே கொண்டு வந்து வைக்க வேண்டும் என்று வழக்கம்போல நேற்றும் நினைவு வந்தது. அங்கே இருந்த வானொலிப் பெட்டிகளைவிட அரதப்பழசு அது. நானும் ஒவ்வொரு முறை ஊருக்குப் போகும் போதும் அந்த ரேடியோவைத் தூக்கி எறியுங்கள் என்று சொல்லி வெளியே எடுத்து வைப்பேன். நான் இருக்கிற நாட்கள் எல்லாம் பேரீச்சம்பழக்காரன் வரவே மாட்டான். நான் அடுத்த முறை மறுபடியும் மாமனார் வீட்டுக்குப் போகும்போது மீண்டும் அந்த ரேடியோ அதே இடத்தில் கம்பீரமாக அடைத்துக் கொண்டிருக்கும். அதற்கு ஆன்ட்டிக் வேல்யூ இருக்கும் என்று தெரிந்துதான் என் மாமியார் இன்னும் பத்திரமாக வைத்திருக்கிறாரோ என்று எனக்கு ஒரு பெரிய சந்தேகம் இருக்கிறது. இதை எப்படித் தீர்த்துக் கொள்வது என்று இன்னும் தெரியவில்லை. சரி அதை விடுங்கள்.
அந்த வட்டவடிவக் கூடத்திலிருந்து மேலே செல்லும் படிகளில் ஏறிச் சென்றால்தான் தமிழ்ப்பிரிவுக்குப் போகலாம். நானும் பார்த்துவிட்டேன் - நான் இடப்புறப் படிகளில் செல்லும் போதெல்லாம் யாரேனும் அந்த வழியில் இறங்கிக் கொண்டிருப்பார்கள். அல்லது படிகளில் நின்றபடி பேசிக்கொண்டிருப்பார்கள். பெரும்பாலும் உட்கார்ந்து தின்று உட்கார்ந்து தின்று உட்கார்ந்து தின்று பொழுதுபோக்கிய பெரிய உடம்புக்காரர்கள். அவர்களைப் பற்றிய வர்ணனை இப்போது எதற்கு? நான் விஷயத்துக்கு வருகிறேன்.
மாடிப்படியேறி முதல் மாடிக்கு வந்து தமிழ்ப்பிரிவுக்குச் செல்ல வேண்டிய திசையில் திரும்பியதும் அங்கும் வட்ட வடிவத்தில் செல்லும் ஒரு வராந்தா. நானும் பார்த்துவிட்டேன் - வராந்தாவின் முதல் அறையை ஒட்டி வெளியே இரண்டு நாற்காலிகள் இருக்கும். அங்கே எப்போதும் இரண்டு மூன்று பியூன்கள் உட்கார்ந்து பீடி குடித்துக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டிருப்பார்கள். அரசு அலுவலகங்களுக்குள் பீடி குடிக்கக்கூடாது என்ற சட்டமெல்லாம் அவர்களைப் பொறுத்தவரை ஒரு ம...க்குச் சமம் என்பது அவர்களின் கண்களில் தெரியும். பக்கத்தில்தான் இருக்கிறது அதிகாரியின் அறை. இந்த பீடி நாற்றம் அங்கும் எட்டாமல் இருக்காது. ஒருவேளை அவருக்கு இது பழக்கமாகி விட்டிருக்கலாம். அல்லது அவரும் உள்ளே சிகரெட் புகைத்துக் கொண்டிருக்கலாம். எக்கேடு கெட்டால் என்ன, நாம் விஷயத்திற்குப் போவோம்,
மேலும் தொடர்ந்து நடந்தால் பத்திருபது அடி வைத்ததும் ஒரு வாட்டர்கூலர் வரும். அவ்வப்போது நீலக்கலர் பெயின்ட் அடித்த அடையாளங்கள் அதில் தெரியும். அதுவும்கூட ஸ்பிரே முறையில் பெயின்ட் அடித்ததல்ல. தில்லிக்கே உரித்தான வகையில் துணியால் தடவித் தடவி பெயின்ட் அடித்தது. பெயின்ட் அடித்த அடையாளங்கள் கோடு கோடாகத் தெரியும். சுற்றிலும் கம்பிவலை போடப்பட்டு சிறை வைக்கப்பட்ட ஒரு கூலர். கம்பிவலை பல இடங்களில் துருப்பிடித்திருக்கும். தண்ணீர் பிடிக்கும் பைப்புக்குக் கீழே ஒரு டிரே இருக்கும் - வீணாகி வழிகிற தண்ணீர் வெளியேறுவதற்காக. சில மாதங்களுக்கு முன்பு வரை மக்களின் நம்பகத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் ஒரு சங்கிலியில் கோக்கப்பட்ட டம்ளர் ஒன்று அதன்மீது இருக்கும். அண்மைக்காலமாக அதையும் காணவில்லை. அதை எடுத்துக்கொண்டு போனவன் சங்கிலியோடு சேர்த்து எடுத்துக் கொண்டு போனானா அல்லது சங்கிலியிலிருந்து டம்ளரை மட்டும் எடுத்துக்கொண்டு போனானா என்பது இன்னும் எனக்குத் தெளிவாகவில்லை. அதிகம் போனால் பத்து ரூபாய் மதிப்புடைய டம்ளர். அதைப் போய் திருட வேண்டுமா என்ற கேள்விக்கும் எனக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
கூலரின் பைப்பில் எப்போதும் நீர்த்துளி பனித்துளிகள் போல கோத்துக்கொண்டிருக்கும். ஆனால் அதுவும் துருப்பிடித்து இற்றுப்போய் ஒருபக்கமாகச் சாய்ந்து இளித்துக் கொண்டிருக்கும். அங்கே டம்ளர் இருந்த வரைக்கும் தண்ணீர் பிடிக்கிற ஒவ்வொரு முறையும் ஷாக் அடிக்குமோ என்ற அச்சம் வராமல் இருந்ததே இல்லை. தண்ணீர் கீழே வடிந்து வராந்தாவில் ஓரடி அகலத்திற்கு ஈரமாக ஓடிக்கொண்டிருக்கும் அல்லது ஈர அடையாளம் இருக்கும். ஜாக்கிரதையாக அதைக் கடந்து செல்ல வேண்டும்.
கூலரைத் தாண்டியதும் வரும் ஒரு மரம். மாடி வராந்தாவில் மரம் எங்கே வந்தது என்று கேட்காதீர்கள். கீழே இருக்கும் ஒரு மரத்தின் கிளை மாடியின் கைப்பிடிச் சுவரைத் தொட்டுக்கொண்டு உள்ளே வரை நீள முயற்சி செய்து கொண்டிருக்கும். இதில் ஏதும் தவறில்லைதான். மரம் பசுமையாய் இருந்தால் எங்கேயும் அழகுதான். ஆனால் இந்த மரம் ஒரு பெரிய பிரச்சினை. என்ன... ஒருகாலத்தில் மரத்தை வெட்டியே கட்சி வளர்த்தவர்கள்கூட பசுமை இயக்கம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்...மரம் எப்படி பிரச்சினையாகும் என்று கேட்கிறீர்கள் இல்லையா?
சௌத் பிளாக், நார்த் பிளாக் உள்ளிட்ட நாடாளுமன்றப் பகுதிகளில் அலுவலக நேரத்திலும் சுற்றித் திரிகிற பல அரசு ஊழியர்கள் மாதிரி சுதந்திரமாகச் சுற்றித் திரிகிற பல குரங்குகள் இந்த மரத்திற்கும் வரும். மேலே ஏறி மாடிக்கும் வந்துவிடும். தில்லிவாசிகளுக்கு இதில் வியப்படைய ஏதுமில்லை. ஏனென்றால் சில மாதங்களுக்கு முன்னால் ஒருநாள் பிரதமரின் நாற்காலியில் ஒரு குரங்கு உட்கார்ந்திருந்ததாம். பத்திரிகைகளில் செய்தி வந்தது. ஆனால் அது எத்தனை கோப்புகளில் கையெழுத்துப் போட்டு கிளியர் செய்தது என்ற செய்தி வரவில்லை என்பதுதான் என் வருத்தம்.
மேலும், குரங்கு அனுமாருடன் தொடர்புடையது. எனவே அதை மதிக்க வேண்டும் என்று தெரிந்து வைத்திருக்கிறார்கள் தில்லிவாசிகள் - குறிப்பாக அரசு அலுவலர்கள். அதனால் மதிய நேரங்களில் உணவு நேரத்தில் அல்லது ஒரு நாளுக்கு ஆறேழு முறை டீ குடிக்க வெளியே வரும்போது தாம் உண்ணும் உணவு அல்லது வேர்க்கடலை அல்லது கொய்யாப்பழம் அல்லது வாழைப்பழம் என்று சீசனுக்கு ஏற்றாற்போல எதையாவது கொடுத்து கடவுளுடன் சமரசம் செய்து கொள்வார்கள். நாடாளுமன்றமும் அதையொட்டி இருக்கும் பகுதிகளும் ரிட்ஜ் என்னும் காட்டை ஒட்டி இருப்பதால்தான் குரங்குகள் இங்கே அதிகம் உலவுகின்றன என்பதைவிட, இத்தகைய தர்மவான்களின் ஆதரவால்தான் இங்கே குரங்குகள் அதிகம் உலவுகின்றன என்பது அந்தக் குரங்குகளுக்கும்கூடத் தெரிந்த விஷயம். எனக்கும்தான். சரி. நேற்று என்ன நடந்தது என்று கேட்கிறீர்கள். இல்லையா? சொல்கிறேன்.


அன்றைக்கும் அப்படித்தான் ஒரு குரங்கு மரத்தின் மீதேறி மாடியை அடைந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியாது. நான் வழக்கம்போல ஸ்டுடியோ காலியாக இருக்குமா, ரிகார்டிங் முடித்துவிட்டு சீக்கிரம் வீடு திரும்ப முடியுமா என்ற சிந்தனையுடன் போய்க்கொண்டிருக்கையில் திடீரென்று ரஷ்ய அறையிலிருந்து வெளியே வந்தது ஒரு குரங்கு. நிச்சயமாக அது ரஷ்ய மொழி செய்திகளைப் படிப்பதற்காக உள்ளே போயிருக்காது என்பது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன். சரி அதை விடுங்கள்.
குரங்கு உள்ளேயிருந்து வெளியே வந்தது. என்னைப் பார்த்தது. ஒரே தாவில் மாடியின் கைப்பிடிச் சுவரின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. எனக்கு இப்போது என்ன செய்வது என்று தெரியவில்லை. வட்ட வராந்தா என்பதால் பீடி குடித்துக்கொண்டிருந்த பியூன்கள் என் பார்வை எல்லையில் இல்லை என்பதை திரும்பிப் பார்க்காமலே என்னால் சொல்ல முடியும். முன்னே போகத் தயக்கமாக இருந்தது. குரங்கு என்னைப் பார்ததது, மரத்தைப் பார்த்தது, கீழே பார்த்தது, சொய்ங் என்று தாவி. வெயில் திரையின் கயிறைப் பிடித்துக் கொண்டு ஊஞ்சலாடியது. நிச்சயமாக எனக்குப் பொறாமை ஏற்படுத்துவதற்காக அது அப்படிச் செய்யவில்லை என்று எனக்குத் தெரியும் என்றாலும் ஒரு கணம் எனக்குள் பொறாமைத் தீ பற்றியெரியத்தான் செய்தது.
அதைவிட வயிற்றுக்குள் அச்சத்தீ ஆட்டி வைத்தது. சாலையில் நடந்து செல்லும்போது தெருவோரத்தில் அதுபாட்டுக்கு உட்கார்ந்து கொண்டிருந்தாலும் சற்றே தலையைச் சாய்த்து நம்மைப் பார்க்கிற நாயின் பார்வை சில நொடிகளுக்கு அடிவயிற்றில் ஒரு இழுப்பு ஏற்படுத்துவது போல ஒரு அச்சம். சில மாதங்களுக்கு முன்புதான் என் நண்பர் ஒருவரை குரங்கு கடித்துவிட்டது என்று கேள்விப்பட்டேன். குரங்கு கடித்தாலும் பதினாலு ஊசிதான். நாய் கடித்தாலும் பதினாலு ஊசி. குரங்கு கடித்தாலும் பதினாலு ஊசியா? என்ன இருந்தாலும் குரங்கிலிருந்து பிறந்தவன்தானே மனிதன். அதனால் ஊசிகளைக் குறைத்துக் கொண்டால் என்ன? இந்தக் கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை. அந்தக் கேள்விகளெல்லாம் இப்போது எதற்கு?
குரங்கு ஊஞ்சலாடுவதை நிறுத்தி விட்டு மீண்டும் சுவரில் உட்கார்ந்து கொண்டது. என்னைப் பார்த்தது, கீழே பார்த்தது, வராந்தாவின் மறுபக்கம் பார்த்தது. ஒருவேளை என் பார்வைக்கு எட்டாத அந்தப் பகுதியிலிருந்து யாராவது வந்து கொண்டிருக்கிறார்களோ என்று உள்ளுக்குள் பிறந்த நம்பிக்கை மீண்டும் குரங்கு என்னைப் பார்த்த பிறகும். அந்தப் பக்கத்திலிருந்து யாரும் வராததாலும் சிதைந்துவிட்டது. திரும்பிப் போகலாமா என்று ஒரு எண்ணம் வந்தது. அப்படியே திரும்புவதானாலும் சில நிமிடங்கள் கழித்துவிட்டுத்தான் திரும்ப வேண்டும். இல்லையேல் அங்கே உட்கார்ந்திருந்த பியூன்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் உடனே திரும்புவதைத் தடை செய்தது.
திடீரென்று குரங்கு என்னைப் பார்த்துப் பல்லைக் காட்டியது. நிச்சயமாக அது சிரிப்பாக இருக்காது என்றுதான் நினைக்கிறேன். அசையாமல் நின்று கொண்டிருந்த எனக்குள் ஒரு யோசனை பளிச்சிட்டது. குரங்கு என்னைப் பார்த்துச் சிரிக்கிறது, நாமும் கொஞ்சம் சிரித்தால்தான் என்ன? என்ன இருந்தாலும் ஒரு காலத்தில் புன்னகை மன்னன் என்று பட்டம் பெற்றவன்தான். அப்படியொன்றும் என் சிரிப்பு அசிங்கமாக இருக்காது...  இருந்தாலும் குரங்கின் சிரிப்பை விடவா அசிங்கமாக இருந்துவிடும்... கொஞ்சம் நம்பிக்கை பிறக்கவே, நானும் சிரித்தேன். இருப்பினும் அந்தச் சிரிப்பு பல்லைக்காட்டாமல் வெறும் புன்னகையாக இருந்திருக்க வேண்டும். குரங்கு எந்த எதிர்வினையும் காட்டவில்லை. சில நொடிகள் கழிந்தன. குரங்கு மீண்டும் பல்லைக் காட்டியது, இந்த முறை எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்தது. நானும் பல்லைக் காட்டினேன். அது கண்களை விரித்துப் பார்த்தது. மீண்டும் பல்லைக் காட்டியது. இப்போது எனக்குக் கொஞ்சம் தைரியம் வந்துவிட்டிருந்தது. குரங்கு ஒருவேளை நட்புப் பாராட்ட விரும்புகிறதோ என்றும் தோன்றியது. நானும் பல்லைக் காட்டினேன். ஒருவேளை இந்த முறை என் வாய் சற்றே அதிக அகலமாகத் திறந்து விட்டதோ என்னவோ தெரியவில்லை, குரங்கு எழுந்து நின்று தலையை முன்னே நீட்டி பல்லைக் காட்டியது. இதுவரை கிடைத்த எதிர்வினைகளால் எனக்குத் தைரியம் மிகவும் அதிகமாகி விட்டிருக்க வேண்டும். நானும் கொஞ்சம் அதிகமாகவே பல்லைக்காட்டி, தலையை முன்னே நீட்டி பழித்துக் காட்டினேன். கூடவே ஒரு உற்சாகத்தில் 'ஹீ...' என்று குரலும் எழுப்பி விட்டேன்.
அவ்வளவுதான், குரங்குக்குக் கோபம் வந்திருக்க வேண்டும்... இந்த அற்ப மானிடன் என்னை நகலடிக்க முனைகிறானே என்று தோன்றியிருக்க வேண்டும். ஜிவ்வென்று தாவி என்னை நோக்கி முன்னால் குதித்தது. பேலன்ஸ் தவறி ஸ்கேட்டிங் செய்வது போல மூன்றடி தூரம் சறுக்கிக் கொண்டே என்னை நோக்கி வந்தது. அப்போது நான் எழுப்பிய சத்தம் ''''வா, ''''வா. ''பே''வா என்று இப்போது என்னால் சொல்ல முடியவில்லை. தூக்கத்தில் பயங்கரக் கனவு கண்டால் எழுப்புகிற சத்தம். சத்தம் போட்டவாறே கணப்பொழுதில் ஓடத் திரும்பினேன். ஆனால் என்ன அதிசயம்? குரங்கு அப்படியே மீண்டும் சுவரின்மீது தாவியது. அங்கிருந்து மரத்தின்மீது தாவியது. கிளைக்குக் கிளை தாவி மாயமாய் மறைந்துவிட்டது. ஒருவேளை அதன் தாவலைக் கண்டு நான் பயந்தது போலவே என் அலறலைக் கேட்டு அதுவும் பயந்திருக்கலாம்.
அந்த இடைப்பட்ட கணநேரத்தில் நான் பத்தடி பின்வாங்கி விட்டிருந்தேன். பின்னாலிருந்து 'க்யா ஹுவா?' என்ற குரல்கள் எழுந்தன. ''ஒன்றுமில்லை, ஒரு குரங்கு வந்தது. போய் விட்டது'' என்று அவர்களைப் பார்த்து குரல் கொடுத்துவிட்டு தைரியமாய் இருப்பவன் போல மேலே போனேன். யாரும் பார்க்கவில்லை என்றாலும் மார்பின் படபடப்பையும். கால்களின் நடுக்கத்தையும் சமாளிப்பது சிரமமாகத்தான் இருந்தது. தமிழ்ப் பிரிவு ரூமுக்குப் போனேன். அங்கே யாரும் இருக்கவில்லை. நான் போட்ட சத்தம் பியூன்களுக்குக் கேட்டிருக்குமா என்ற சந்தேகம் உள்ளுக்குள் உளைந்து கொண்டே இருந்தது. நிச்சயம் கேட்டிருக்கும். அல்லது இந்த மாதிரிச் சத்தம் அவர்களுக்குப் பழகிப் போனதாகவும் இருக்கலாம். இருந்தாலும் அவர்களின் கண்களைச் சந்திக்க வெட்கப்பட்டுக்கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தேன்.
கொஞ்ச நேரத்தில் குருமூர்த்தி வந்துவிட்டார். நான் எதுவும் நிகழாதது போல குரங்கு வழியில் நின்றதைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு விட்டு, இதற்கு ஏதாவது செய்யக்கூடாதா, குரங்குகளை விரட்ட வழி இல்லையா? இங்கே வந்து பேப்பர்களை எல்லாம் கிழித்து விடாதா என்றெல்லாம் அக்கறையாகக் கேட்டேன். ''ஏன் இல்லாமே? இந்தக் குரங்குகளை விரட்டுறதுக்குன்னே கறுப்பு மூஞ்சிக் குரங்கு வச்சிருக்காங்க. அதைப் பாத்ததும் இந்தக் குரங்குகளெல்லாம் ஓடிப்போயிரும்'' என்றார் அவர்.
நானும் பலமுறை பார்த்திருக்கிறேன் - சௌத் பிளாக், நார்த் பிளாக் கட்டடங்களுக்கு அருகே ஒரு ஆள் சைக்கிளில் போவான். அவன் சைக்கிள் கேரியரில் கறுப்பு மூஞ்சிக் குரங்கு ஒன்று உட்கார்ந்திருக்கும். அதைப் பார்த்ததும் சாலையில் திரியும் குரங்குகள் எல்லாம் 'கீச்...  கீச்... '' என்று கத்திக்கொண்டே மாயமாய் மறைந்து விடும். சில குரங்குகள் அப்படியும் தைரியமாக காம்பவுண்ட் சுவர்களின் மீதோ அல்லது கம்பி வலைகளின்மீதோ உட்கார்ந்திருக்கும். சைக்கிள்காரன் ஸ்டாண்ட் போட்டுவிட்டு. கேரியரிலிருந்து குரங்கை இறக்குவான். கறுப்பு மூஞ்சிக் குரங்கு நாலடி எடுத்துவைக்கும். அதுவரை தைரியமாக இருப்பது போல காட்டிக்கொண்டிருந்த குரங்குகள் ஓட்டமாய் ஓடி மறைந்துவிடும்.
சைக்கிள்காரனும் கறுப்பு மூஞ்சிக் குரங்கும் இப்படியே பகல் முழுவதும் டியூட்டி செய்துவிட்டுப் போவார்கள். இந்தக் கறுப்பு மூஞ்சிக் குரங்கின் வேலைக்கு மாதம் இருபதாயிரம் ரூபாய் என்றும், இப்படிப்பட்ட குரங்குகளை சப்ளை செய்தே சில நிறுவனங்கள் லட்ச லட்சமாய் சம்பாதிப்பதாகவும் பத்திரிகைகளில் படித்திருக்கிறேன், அந்த விஷயம் நினைவுக்கு வந்ததும் ''அந்தக் கறுப்பு மூஞ்சிக் குரங்குக் காரனைக் கொண்டுவந்து இதையெல்லாம் விரட்டலாமே?'' என்று கேட்டேன்.
''செய்யலாம்தான். ஆனா இந்த வருஷம் குரங்குக்காக வைச்சிருந்த பட்ஜெட் முடிஞ்சு போச்சு மார்ச் முதல் தேதியே... அதனாலதான் இந்த பத்திருபது நாளா தொல்லை தாங்க முடியல. இனி அடுத்த பட்ஜெட்டுல அலொகேட் ஆனப்புறம்தான் கறுப்பு மூஞ்சிக் குரங்குக்காரனைக் கூப்பிட முடியும்'' என்றார் குருமூர்த்தி.
இதுதான் சிக்கல். மானியக் கோரிக்கை பற்றிய விவாதத்தில் யாராவது எம்.பி. கேள்வி எழுப்பினால் பத்திரிகைகளில் செய்தி வரும். ரேடியோ ஸ்டேஷனுக்கு குரங்குக்காக பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு வேண்டும் என்று எவராவது கேட்க முடியுமா?
இனி அடுத்த வருஷம் மார்ச் மாதத்தில் வானொலி நிலையத்துக்குப் போவதாக இருந்தால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டே, அடுத்த மார்ச் மாதத்தில் இந்த விஷயம் ஞாபகத்தில் இருக்க வேண்டுமே என்ற கவலையோடு திரும்பி வந்தேன்.
 இது நடந்து சில ஆண்டுகள் ஆகிவிட்டன. எந்த மார்ச்சிலும் முன்னெச்சரிக்கை தோன்றவே இல்லை. வானொலி நிலையம் இப்போது புதிய கட்டிடத்துக்கு மாறி விட்டது. அதனால் என்ன... நீ போகுமிடமெலாம் நானும் வருவேன் என்பதுபோல அங்கும் வந்து விட்டன குரங்குகள். நேற்றும் குரங்கோடு ஒரு திடீர் நேர்முகம் கிடைத்தது. முந்தைய அனுபவம் தந்த பாடத்தால் சற்று நேரம் ஒதுங்கி நின்று மோதலை தவிர்த்துக்கொண்டேன். அடுத்த மார்ச் மாதம் தவறாமல் நினைவு வைத்துக்கொண்டு எச்சரிக்கையாக இருக்க என்ன செய்வது என்பதுதான் தெரியவில்லை.
அப்புறம் இன்னொரு விஷயம், இந்த சம்பவத்தை நான் யாருக்கும் இதுவரை கூறவில்லை. அதனால் நீங்களும் யாருக்கும் சொல்ல வேண்டாம். சரியா?

4 comments:

 1. பொய் இல்லை; புனைந்துரையும் இல்லை; சுவாரசியத்திற்கோ குறைவில்லை. இத்தகைய பதிவுகள் வரவேற்புக்குரிய. தொடர்ந்து எழுதுங்கள். மகிழ்ச்சி.

  ReplyDelete
 2. நல்ல நகைச்சுவை.அருமையாக இருந்தது.அச்சுப் பத்திரிகையில் எழுதினால் எல்லோரும் படிப்பார்கள்.தமிழில் நகைச்சுவை எழுத்தாளர்கள் குறைவு.நீங்கள் ஏன் அந்த இடத்தை நிரப்பக்கூடாது.தொடர்ந்து எழுதுங்கள்.நல்ல மொழி வளம்.அதைச் சொல்லும் பாங்கு எல்லாமே நன்கு வந்திருக்கின்றன.உங்கள் பக்கங்களைத் தொடர்ந்து விடாமல் வாசிப்பவன்.நீங்கள் கூடங்குளம் பற்றி எழுதினாலும் ஈழம் பற்றி எழுதினாலும் பல விஷயங்களில் எனக்கு உடன்பாடு உண்டு.தில்லித் தமிழோசையை மீண்டும் எழுப்ப இயலுமா?
  கி.நாச்சிமுத்து

  ReplyDelete
 3. ஆமாம் என்ன கொழுப்பு இருந்தா கவிகளை பத்தி விலாவாரியா எழுதிட்டு பின்னூட்டங்களையும் கவிதைகளாய் எழுதுகிறார்கள் தில்லி கவிகள் அப்படின்னு எழுதுவீங்க அண்ணாச்சி!! எம்புட்டு தில்லு!
  ஜோதியோட கவிதையில நாலாவது பாராவை ஒருதடவ நல்லா ந..ல்..ல்...ல்...லா படிச்சுகோங்க அண்ணாத்தை! அம்புட்டுத்தான் சொல்லுவேன் நான்! சொல்லிட்டேன் சொல்லிட்டேன்! அப்புறம் வருத்தபடகூடாது அம்புடுதேன்!

  சத்யா அசோகன்

  ReplyDelete
 4. த.நா. சந்திரசேகரன்8 April 2012 at 13:20

  நண்பருக்கு வணக்கம்.......
  தங்கள் வாழ்க்கைப் பட்டறிவினூடே
  சமூக அக்கறையுடன் மேற்கொள்ளும் இத்தகையப் படைப்பு அவதானிப்பு தொடர்ந்திடவாழ்த்துக்கள்

  ReplyDelete