Friday, 26 October 2012

சின்மயி விவகாரம் - தாமதமான விழிப்பா? விரைவில் வந்த தளையா ?


சின்மயி விவகாரம் வெடித்து தமிழ் வலையுலகமே இதே பிரச்சினை பற்றி விவாதிக்கத் தொடங்குவதற்கு முன் - 20 அக்டோபர் அன்று மாமல்லனின் ஒரு பதிவை ராஜன்குறை முகநூலில் பகிர்ந்திருந்தார்.  அந்தப் பதிவின் துவக்கம் இது -

அறியாத முகங்களை அறிந்த முகங்கள்

* * *
நான்கு நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளில் செய்தியைப் படிக்கும் வரை சின்மயி என்பவர் யார் என்றே எனக்குத் தெரியாது. அப்படி ஒரு பாடகி இருக்கிறார் என்பதும்கூடத் தெரியாது. அதே போல ராஜன் யார் என்றும் தெரியாது. என்னடா இவன்... சின்மயியைக் கூடத் தெரியாத இவன் எந்த உலகத்துல இருக்கிறான் என்று யாரோ கிண்டலடிப்பது புரிகிறது. ஆனால் இதுதான் உண்மை. இவரைப் போன்றவர்களைத் தெரிந்துகொள்ளாமலே நன்றாக வாழ்க்கை நடத்த முடிகிற சிலரின் நானும் ஒருவன். இவர்களைப் பற்றித் தெரியாமல் இருப்பதாலேயே பயனுள்ள வேறு பலவற்றையும் தெரிந்துகொள்ள முடிகிறது என்று இப்போது தோன்றுகிறது.
இணையம் இந்தியாவுக்குள் வந்த காலத்திலிருந்தே பயன்படுத்தி வருபவன்தான் என்றாலும் வலைப்பதிவு துவங்கி ஓராண்டுதான் ஆகிறது. முகநூலுக்கு வந்து ஏழெட்டு மாதங்கள்தான் இருக்கும். ட்விட்டரில் பதிந்து, ஓரிரு நாட்களுக்குள் அதில் நுழைவதையே விட்டு விட்டேன். பக்கம் பக்கமாக கட்டுரைகள் எழுதினாலே ஒத்த கருத்து நண்பர்களை உருவாக்குவது கடினமாக இருக்கின்ற நிலையில் 140 எழுத்துகளில் எதை சாதித்துவிட முடியும் என்ற எண்ணம் காரணம். அதற்காக துவித்தர்களின்மீது காழ்ப்பு என யாரும் கருதிவிட வேண்டாம். எனக்கு அது ஒத்து வராது, அவ்வளவுதான்.
முகநூலில் யாரோ சில நண்பர்களின் கருத்துகளில் சில ட்வீட்களின் படங்களைப் பார்த்தேன். அதில் மீனவர்களை இலங்கை ராணுவம் கொல்வது தவறில்லை என்பதான பொருளில் சின்மயி என்பவரின் ஒரு ஸ்கிரீன்ஷாட் பார்த்தேன். இதுபோன்ற அர்த்தமற்ற பலவற்றையும் முகநூலில் பார்த்திருப்பதாலும், சின்மயி யார் என்றும் தெரியாமல் பின்னணி என்ன என்றும் தெரியாமல் இருந்ததாலும் இதைப் பொருட்படுத்தவில்லை.
அடுத்து விவகாரம் வெடித்தது - புகார்-புலம்பல்-கைது-தொடர் கைது எனத் தொடர்ந்தது. முதலில் செய்தியைப் படித்ததும், பெரும்பாலானவர்களைப் போலவே என்னடா இது, ஒரு பெண்ணையும் தாயையும் இழிவுபடுத்தி விட்டார்களே என்றுதான் எனக்கும் தோன்றியது. விவரங்களைத் தேடத் துவங்கிய பிறகுதான் முழு விவரமும் புரிந்தது.
சின்மயி ட்வீட்டுகள் என்ன, ராஜன் போன்றோரின் பதில் ட்வீட்டுகள் என்ன என்பதையெல்லாம் நானும் தேடித்தேடி இணைப்புக்கொடுக்க வேண்டியதில்லை. அவையெல்லாம் இணையத்தில் நிறையவே உண்டு. எனக்கத் தோன்றியது --- தவறு அனைத்துத் தரப்பினரிடமும் இருந்திருக்கிறது.
இங்கே நான் தேட/தொட விரும்புவது முற்றிலும் வேறு --- இது போன்ற பிரச்சினைகளுக்கான மூலம் எது, இதன் விளைவு என்னவாக இருக்கும் என்பதற்கான பதில் அறியும் முயற்சி.
மேலே குறிப்பிட்ட மாமல்லனின் சுட்டி இதற்கு உதவுகிறது.
பிரச்சினையின் மூலமாக இருப்பது முகம் மறைக்கும் வசதி. புனைபெயரில், போலிப்பெயரில் எத்தனை அடையாளங்களையும் உருவாக்கிக்கொள்ள முடியும் என்கிற வசதி. அதுவே கருணாநிதியையும், ஜெயலலிதாவையும், மன்மோகனையும், சோனியாவையும் தாக்கி எழுத தைரியம் தருகிறது. நாகரிகமான கேலிச்சித்திரங்கள் அல்லது கருத்துகளால் விமர்சிப்பதையும் தரக்குறைவான வார்த்தைகளால் அல்லது படங்களால் தாக்குவதையும் சமமாகக் கருத முடியாது. இணையத்தில் இந்த இரண்டு வகைகளுமே பரவலாகவே இருக்கின்றன. காரணம், எழுதியவன் யார் என்று தெரியாது என்கிற தைரியம்தான்.
சைபர் கிரைம் துறை நினைத்தால் யாருடைய ஜாதகத்தையும் தோண்டி எடுத்துவிட முடியும் என்பது புரியாதவர்கள், ஆமா... இருபது கோடிப் பேரில் என்னைத்தான் வந்து பிடிக்கப் போறாங்களாக்கும் என்று நினைப்பவர்கள்தான் பெரும்பாலும் இப்படி புனைபெயர்களில் எழுதுகிறார்கள்.
மற்றொரு காரணமாக எனக்குத் தெரிவது --- திடீரெனக் கிடைத்த கருத்துச் சுதந்திரம். ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்வதற்கு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. வெளிப்படுத்த ஊடகங்களில் வாய்ப்பில்லை, சாத்தியமும் இல்லை. கேட்பதற்கு ஆளும் இல்லை. நாமாகவே வலிந்து மாற்றிக்கொண்ட வாழ்க்கைமுறையில் நிஜ நட்புகளை அறுத்துக்கொண்டு வர்ச்சுவல் நட்புகள்மீதான சார்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் பரவலாகிவிட்ட சமூக வலைதளங்கள் இத்தகைய கருத்து வெளிப்பாட்டுக்கு அபாரமான கருவியாகி விட்டன. இந்த வர்ச்சுவல் நட்புவட்டத்தினர் வழங்கும் பாராட்டும் அங்கீகாரமும் இன்னும் தைரியத்தைக் கொடுத்து விடுகிறது. அப்புறம் இது ஒரு விஷச்சுழல்போலத் தொடர்கிறது. ஆனால் இங்கே பலர் புரிந்து கொள்ளாத ஒரு விஷயம் --- கருத்துச் சுதந்திரம், வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பதோடு சமூகப் பொறுப்பு என்பதும் அதில் அடங்கியிருக்கிறது என்பது.
இதைக்குறிப்பிடும் வகையில்தான் மாமல்லனின் பதிவுக்கு முகநூலில் நான் கீழ்க்கண்ட பின்னூட்டம் இட்டேன் -
புனைபெயர் பயன்படுத்துபவர்கள், தம் முகமறிய வாய்ப்பில்லை என்ற தைரியம் உள்ளவர்களுக்கு மட்டுமே விஜயலட்சுமியின் எச்சரிக்கை பொருந்தும். உண்மைப்பெயரில், நண்பர்களை எச்சரிக்கையாகத் தேர்வு செய்வோர், நிஜவாழ்வில் இருப்பதுபோலவே இந்த வர்ச்சுவல் உலகிலும் உலவுகிறார்கள் என்பது என் ஓராண்டு முகநூல் அனுபவம்.
* * *
மீண்டும் சின்மயி விவகாரத்துக்கு வருவோம்.
அவருடைய பதிவு, ட்வீட்டுகள், பதில் ட்வீட்டுகள், வவ்வாலின் ஆராய்ச்சிப் பதிவு எனப் பலதையும் பார்த்தபிறகு எனக்கு சில விஷயங்கள் வியப்பளிக்கின்றன.
மீனவர் விவகாரம், இட ஒதுக்கீடு, வருணமுறை போன்ற பல விஷயங்களில் அவருடைய ட்வீட்டுகள் ஆட்சேபத்துக்கு உரியவை என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி தான் கூறவே இல்லை என்று சொன்னால் யாரும் நம்பத்தேவையும் இல்லை. அந்த அளவுக்குத் தெளிவாகவே இருக்கின்றன.
அப்படி இருக்கும்போதும் அவரை எதற்காகத் தொடர வேண்டும்.... பிரபலம் என்ற மோகம் தவிர வேறு என்ன காரணம் இருக்க முடியும்... இந்தச் செயல், ஒருவர் பிரபலம் என்பதாலேயே அவர் எல்லா விஷயங்களிலும் கருத்துக்கூறும் தகுதியுடையவராக அங்கீகாரம் அளிப்பதாக ஆகிவிடுகிறது அல்லவா... அதே அங்கீகாரம் பிரபலங்களை இஷ்டப்படி இன்னும் பேச வைத்திருக்கிறது அல்லவா....
தான் படித்தவர், மேல் ஜாதியைச் சேர்ந்தவர், சகலமும் அறிந்தவர் என்பதான தொனி அவருடைய பல ட்வீட்டுகளிலும் அப்பட்டமாகத் தெரிகிறது. அப்படியிருக்கையில் 140 எழுத்துகளுக்குள் விமர்சனம் செய்து அவரை மாற்றிவிட முடியும் என்று யாரேனும் எண்ணியிருந்தால் அவர்களை என்னவென்று அழைப்பது...
இந்துஸ்தான் டைம்சில் சின்மயி பெயருக்கு இணையாக ராஜனின் பெயர் வந்தபிறகுதான் மோதல் தொடங்கியிருக்கிறது. ராஜன் இதை மார்ச்-ஏப்ரல் மாதத்திலேயே தன் பதிவில் எழுதி இருக்கிறார். நான் பார்த்த அளவில் இந்த விவகாரத்தில் ராஜன் ஆபாசமாக எழுதியதாக எனக்குத் தோன்றவில்லை. அப்படியும் அவர் கைது செய்யப்படுகிறார் என்றால் அதற்குக் காரணம் அரசியல் தலையீடும் காவல்துறையின் ஒருபக்கச்சார்பும்தான். இணையமுகவரி எண்ணை வைத்துப் பிடித்ததாக காவல்துறை சொன்னதாக பத்திரிகைகள் சொல்வதெல்லாம் கட்டுக்கதை.
சின்மயியும் அவரது தாயாரும் தமது இசைப்பாரம்பரியம், ராமநாதபுரம் மகாராஜா குடும்பத்துடன் உறவு, இசைப்பயிற்சி என பல கட்டுக்கதைகளை தம் வலைப்பக்கத்தில் இட்டுக்கட்டியிருக்கிறார்கள். சரி. ஆனால் இப்போதுதான் இதை ஆராய வேண்டுமா... வவ்வால் மிகவும் சிரமப்பட்டு பலமணிநேரம் செலவுசெய்து இதை எழுதியிருக்கிறார் என்பது உண்மைதான். ஆனால் சின்மயி புகார் செய்து ராஜன் கைது செய்யப்படுவதற்கு முன்பே செய்திருந்தால் சின்மயியின் உண்மை முன்னரே இன்னும் பலருக்கும் தெரிய வந்திருக்கும் அல்லவா...
குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் - யாரை நாம் நட்பு வட்டத்துக்குள் இணைத்துக்கொள்கிறோம், யாரைத் தொடர விரும்புகிறோம் என்பது. வேலைகளுக்கு இடையில் மாற்றத்துக்காக முகநூல் நண்பர்களின் விவரங்களைப் பார்ப்பது உண்டு. அப்போது எனக்குப் புரிய வந்தது --- வலைப்பூக்கள், முகநூல் போன்ற சமூகவலை வசதிகளில் கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்பட எந்தெந்தப் பெண்கள் கொஞ்சம் அழகாகத் தோன்றுகிறார்களோ அவர்கள் பின்னால் நண்பர்களின் எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது. அவர்கள் எந்தக் கருத்தை உதிர்த்தாலும் சொத்தைக் கருத்தாக இருந்தாலும் பின்னூட்டமிடுவதற்கான துடிப்பு அவற்றில் தெரிகிறது. உதாரணங்கள் கொடுக்க விரும்பவில்லை. அப்புறம் இவரையா அழகு என்று சொல்கிறாய் என்று ஒரு கூட்டம் படையெடுத்து வரலாம்.

உதாரணத்துக்கு ஒரு அனுபவம். இரண்டு நாட்கள் முன்புவரையில் என் முகநூல் பக்கத்தில் புகைப்படம் ஏதும் இருக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன் ஒருவர் உரையாடலில் வந்தார். நீங்கள் என்ன படிக்கிறீர்கள் என்பது போன்ற கேள்விகளிலிருந்து என்னை பெண் என்று நினைத்திருக்கிறார் என்பது புரிய வந்தது. அப்பனே நான் படிப்பதை எல்லாம் நிறுத்தி நாற்பது ஆண்டுகள் ஆகிவிட்டன என்றாலும் அவர் நம்பவில்லை. அப்போதுதான் என் பக்கத்தில் படம் ஏதும் போடவில்லை என்பது புரிந்து, புகைப்படத்தை இணைத்தேன்.
சின்மயி விவகாரத்திலும் இத்தகைய போக்கைத்தான் நான் பார்க்கிறேன். அவர் திரைப்பாடகராம். நல்லது. இவருடைய கருத்துகள் பலவும் அரைவேக்காட்டுத்தனமானவை, ஜாதிப்பற்று கொண்டவை என்று தெரிந்தபின் இவரை ப்ளாக் செய்துவிட்டு ஒதுங்கிக்கொண்டல்லவா இருக்க வேணடும்... அவருடைய கருத்துகளுடன் உடன்படவில்லையா, எதிர்த்து எழுதலாம். --- ஆனால் நாகரிகமாக. பெண்தானே, என்ன செய்துவிட முடியும் என்ற தைரியமா அல்லது பேருந்தில் சீண்டும்போது கூச்சல் எழுப்பாத பெண்ணை இன்னும் கொஞ்சம் சீண்டிப் பார்க்கலாம் என்ற எண்ணமா...
* * *

சின்மயி மீதும் புகார் கொடுக்கப்பட்டு விட்டது என இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த விஷயத்தில் சமரசம் ஆகவும் வாய்ப்புண்டு. அல்லது ராஜனும் மற்றவர்களும் கண்டனத்துடன் வெளியே வந்து விடலாம். அல்லது குற்றமற்றவர்களாகவே வெளியே வரலாம். ஆனால் காவல்துறை, கைது ஜெயில், வழக்கு, நீதிமன்றம் ஆகிய உளைச்சல்களை மறக்க முடியுமா... 
* * *
இந்த விவகாரத்தின் விளைவுகளாக கண்ணிலும் மனதிலும் படுபவை -
ஆங்கிலத்தில் Pandora’s box என்பார்களே, அப்படி புதிய புதிய செய்திகள் எல்லாம் வெளியாகியுள்ளன. இன்னும் வெளிவந்துகொண்டே இருக்கின்றன. உதாரணத்துக்கு, ராஜமௌலியின் ஜாதிவெறி அப்பட்டமாகியது.
இந்த விவகாரம் வெளியானதும் ஆளாளுக்கு ட்வீட்களை கட்-பேஸ்ட் செய்து தனக்குப் பிடிக்காத நபர்கள்மீது தாக்குதல் நடத்தத் தொடங்கி விட்டார்கள். இது கவலைக்குரியது என்றாலும் சில நாட்களில் அடங்கி விடும்.
ஆபாசத்தையே எழுத்தாக வைத்திருக்கும் சாரு நிவேதிதா எல்லாம் நாகரிகம் பற்றிப் பேசுகிற நிலை வந்துவிட்டது. இதுவும் நல்லதுதான். இனி எழுதுவதற்குமுன் அவரும்கூட யோசிக்க வேண்டியிருக்கும்.
இந்த ஒருவாரத்தில் மதத்துவேஷ-ஜாதித்துவேஷ வெறித்தனமான கருத்துகள் குறைந்துள்ளன. இன்னும் குறையும். இது வரவேற்கத்தக்கது.
ஆனால் வரவேற்கத்தக்க இந்த மாற்றத்துக்கு நாம் கொடுக்கப்போகும் விலை மிக அதிகமானதாக இருக்கும். சின்மயி இதற்கு அஸ்திவாரம் இட்டு விட்டார், அவர் எதிரிகளாகக் கருதுபவர்கள் அந்த அஸ்திவாரத்துக்கு சிமென்டும் மணலும் கலந்து கொடுத்திருக்கிறார்கள். இந்தக் கடைசி விஷயம்தான் எனக்கு முதன்மையான கவலையாக இருக்கிறது.
ஏற்கெனவே கட்டுக்குள் அடங்காத அதிகாரங்களைக் கையில் வைத்திருக்கும் காவல்துறைக்கு இன்னும் வசதியாகி விடும். ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம் என்பது போல, பதிவர்கள்-சமூகவலைதள நண்பர்களுக்குள் எழும் மோதல்கள் காவல்துறையின் மிரட்டலுக்கு, துன்புறுத்தலுக்கு, பணம் பிடுங்கலுக்கு மேலும் வாய்ப்புகளை அளிக்கும். அதிலிருந்து தப்பிக்க அரசியல்வாதிகளை அண்ட வேண்டியிருக்கும்.  
கட்டற்ற சுதந்திரம் இனி சாத்தியமில்லை. தளைகளோடுதான் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
* * *
மாமல்லனின் சுட்டியில் துவங்கியதை அவரது வரியுடன் முடிக்கலாம்.
இத்துனைபேர் சுற்றி இருக்கிறார்கள் என்பது வியப்பாகவும் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது எச்சரிக்கையாகவும் கவிழாமல் மிதந்து கொண்டிருப்பது மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.  கூச்சத்தைக் கொஞ்சம்போல கூட வைத்துக்கொண்டிருந்தால் பொய்யின் சுமையை மட்டுமின்றி உண்மையின் உப்புசத்தைக்கூட கணிசமாகக் குறைத்துக்கொள்ள உதவியாக இருக்கும்.

Saturday, 6 October 2012

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ...



இப்படியும் இருந்தார்கள் - 
நான் ஆரம்பித்த இந்தக் கப்பல் கம்பெனி, வியாபாரக் கம்பெனி மட்டுமல்ல... மூட்டை முடிச்சுகளுடன் வெள்ளையர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேறுவதற்காகவும் சேர்த்தே இந்தக் கப்பல்கள் பயன்படும் என்று வ.உ.சி. அறிவித்தார்.
இதனை அறிந்த வ.உ.சி.யின் நண்பர் சிவா... மூட்டை முடிச்சுகளை வெள்ளையர்கள் இங்கேயே விட்டு விட வேண்டும். ஏனெனில் அவை நம்மிடம் கொள்ளையடிக்கப்பட்டவை. அவற்றை விட்டுவிட்டே வெள்ளையர் ஓட வேண்டும் என்று உரக்கக் கூறினார். 

* * *

கடைசியில் புலி வந்தே விட்டது. இங்கே மிட்டல்களும் அம்பானிகளும் என்ன விரும்புகிறார்களோ அதெல்லாம் நிச்சயம் நடக்கும். வேதாந்தாக்கள் என்ன நினைக்கின்றனவோ அதுவும் நடக்கும். சாமானியர்களாகிய நீங்களும் நானும் என்ன எதிர்பார்க்கிறோமோ அதற்கு எதிரானவை நிச்சயம் நடக்கும்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை இப்போது அனுமதிப்பதற்கு சிறப்பான காரணம் ஏதும் இப்போது புதிதாக உருவாகி விடவில்லை. 2 அல்லது 4 அல்லது 6 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையைவிட இப்போது புதிய மாற்றம் ஏதும் ஏற்பட்டு விடவில்லை - எதிர்ப்புக்காட்டக்கூடிய வலியவர்கள் இல்லை இப்போது என்பதைத் தவிர.

பொருளாதார சீர்திருத்தம் என்பது தொடர்நிகழ்வு - continuous process - என்று மன்மோகன் சிங் சொன்னதெல்லாம் ஒரே பொருளைத்தான் குறிக்கும் - தொடர்ந்து ஒவ்வொன்றாக அந்நிய நிறுவனங்கள் உள்ளே நுழைந்து கொள்ளைகொண்டு செல்ல அனுமதிப்பது என்பதே அது. அதில் லாபம் சிலருக்கு மட்டுமே இருக்கும். நாட்டுநலன் என்பதற்கு அந்தச் சிலரின் நலன் என்றுதான் மன்மோகன்-அலுவாலியாக்களின் அகராதியில் இருக்கும்.

வால்மார்ட்-உடன் இணைந்து சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என்று பல ஆண்டுகளாக முயற்சி செய்து வந்தார் மிட்டல். யுபிஏ-1இன் காலத்தில் இடதுசாரிகளும் காங்கிரஸ் ஆதரவில் இருந்தார்கள் கடைசிவரை. அவர்கள் இருக்கும்வரை சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க மாட்டார்கள் என்று தெரிந்திருந்த காங்கிரஸ் வாய்மூடி இருந்தது. நியூக்ளியர் லயபிலிடி விவகாரத்தில் இடதுசாரிகள் வெளியேறினார்கள். காங்கிரசுக்கு தைரியம் பிறந்தது. அடுத்த தேர்தலில் இடதுசாரிகள் பலமிழந்தார்கள். இன்னும் தைரியம் அதிகரித்தது. யுபிஏ-2இல் உண்மையில் நிரந்தரக் கூட்டாளிகள் யார் என்று காங்கிரசுக்குக் கவலையே இல்லை. எல்லாருடைய குடுமியும் அவர்களிடம் சிக்கியிருக்கிறது. பாஜக பலவீனப்பட்டிருப்பதும், அதன் உள்கட்சி மோதலும் காங்கிரசுக்கு அபார தைரியத்தை அளித்திருக்கிறது என்பதில் வியப்பதற்கு ஏதுமில்லை.

இந்து நாளிதழில் வந்த கேலிச்சித்திரம் இதை அழகாக வெளிப்படுத்துகிறது.
 
நிலக்கரி ஊழல் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு சரியான வாய்ப்பாகி விட்டது. பிரச்சினையிலிருந்து தப்பிக்க அல்லது கவனத்தை திசைதிருப்ப சரியான வழி - அதைவிடப் பெரிய பிரச்சினையை உருவாக்கி விடுவது. காங்கிரசும் பாஜக-வும் இதில் கரைகண்டவை. காங்கிரஸ் இப்போதும் அதைத்தான் செய்தது.

குளிர்பான நிறுவனங்கள் வந்தன. உள்நாட்டு குளிர்பானத் தொழிலை முற்றமுழுக்க அழித்தன. கார் நிறுவனங்கள் வந்தன. உள்நாட்டு கார் உற்பத்தி நிறுவனங்கள் - மாருதி உள்பட - திணறுகின்றன. புத்திகெட்ட நடுத்தரவர்க்கம் இதெல்லாம் ஏதோ பெரிய சாதனையாக, வாழ்க்கைத் தரம் உயர்ந்து விட்டதாகப் போற்றி ஏமாளிச்சந்தையாக மாறிக் கொண்டிருக்கிறது. பெப்சி-கோலா நிறுவனங்கள் நிலத்தடி நீர்வளத்தை சுரண்டி, பாழ்படுத்தி வருவதைப்பற்றி இவர்களுக்கு கவலை இல்லை. பொதுப்போக்குவரத்து வசதி அதிகரிக்கப்பட்டால் வாகன நெரிசல், புகை, மாசு, பெட்ரோல் விலையேற்றம் போன்ற பல பிரச்சினைகள் குறையும் என்பதைப்பற்றி இவர்களுக்குக் கவலை இல்லை. சிறுநகரங்களில்கூட கென்டுக்கி வந்ததுதான் முன்னேற்றம் இவர்களுக்கு. இவர்கள்தான் கருத்துகளை உருவாக்குபவர்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பவர்கள் காதில் எந்தச்சங்கின் ஒலியும் விழப்போவதில்லை. அமெரிக்காவில் வால்மார்ட் நுழைந்த இடத்தில் எல்லாம் அதைச்சுற்றிலும் இருந்த சிறு வர்த்தகங்களை எவ்வாறு அழித்தது என்று எத்தனை ஆவணப்படங்கள் பார்த்தாலும் அவர்கள் புரிந்து கொள்ள மறுப்பவர்களாகவே இருப்பார்கள். பத்து லட்சம் மக்கள் தொகை உள்ள நகர்களில் மட்டும்தானே அனுமதி, இதில் என்ன தவறு என்று கூறுபவர்கள், இந்தப் பத்து லட்சத்தை 5 லட்சமாக, 1 லட்சமாகக் குறைக்க அதிக காலம் எடுக்காது என்பதை முன்கணிக்க மறுக்கிறார்கள். இதில் அன்னிய முதலீடு வந்தால் விவசாயிகளுக்கு பயன் கிடைக்குமாம்...! அப்படியானால் அரசு எதற்கு? நம்முடைய அரசுகளும் நம்முடைய தனியார் துறைகளும் செய்ய முடியாததை, செய்யத்தவறியதை அன்னியர்கள் செய்வார்கள் என்றால் சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்வதுதான் எதற்கு? இனி காப்பீட்டுத்துறையில் அன்னிய முதலீட்டாளர்கள் இன்னும் வரப்போகிறார்கள். இந்தியர்கள் மேல் அவர்களுக்குத்தான் எத்தனை அக்கறை ! தொண்டு செய்து பழுத்த பழங்களோ இவை...?!

அன்னிய முதலீட்டை அனுமதிப்பது என்றால் அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு நம் அரசுகள் தரக்கூடியவை, செய்யக்கூடியவை -
  • வரிச்சலுகைகள்
  • வரிவிலக்குகள்
  • மானியங்கள்
  • சிறப்பு மண்டலங்கள்
  • இலவசமாக அல்லது சலுகை விலையில் நிலங்கள்
  • அதற்காக எவருடைய நிலங்களையும் கையகப்படுத்தல்
  • கட்டமைப்பு வசதிகளை உருவாக்க உதவிகள்
  • அவற்றுக்கான மானியங்கள்
  • கூட்டுசேரும் நிறுவனங்களுக்கு கடன் உதவிகள்
  • தொழிலாளர்களுக்கு தொழிற்சங்க உரிமைகள் தராமல் கொத்தடிமைகளாக நடத்த அனுமதி
  • கூட்டுசேரும் பெருநிறுவனங்கள் நம் பொதுத்துறை வங்கிகளை சுரண்டி பல்லாயிரம் கோடிகளை கடன் வாங்க அனுமதித்தல், அவற்றைக் கட்டாமல் இருந்தால் கண்டு கொள்ளாமலும் இருத்தல்
இவையெல்லாம் இல்லை என்றால் எந்த வெளிநாட்டு நிறுவனமும் இந்தத் திசையில் தலைவைத்துப்படுக்கவும் எண்ணாது.
சுமார் 15-20 ஆண்டுகளாக அறிமுகமான BOOT / BOT (Build, Own, Operate, Transfer / Build, Operate, Transfer) திட்டங்கள் நெடுஞ்சாலைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டபோது தொலைதூர, பெருநகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகளுக்காகத்தான் அறிமுகமாயின. இப்போது என்ன ஆயிறறு. முக்கியச் சாலைகள் அனைத்துமே கிட்டத்தட்ட தனியார்மயமாகி வருகின்றன. மக்களின் போக்குவரத்துக்கான சாலை வசதி என்னும் பொறுப்பிலிருந்து அரசு கைகழுவிக்கொண்டது. அடுத்து மின்விநியோகம், அப்புறம் மின் உற்பத்தி என படிப்படியாக தனியாருக்குத் தரப்பட்டது. இயற்கை வளங்கள் ரிலயன்சுக்கு தாரை வார்க்கப்பட்டன. நீர்வளத்தையும் தனியார்மயமாக்கும் திட்டங்கள் தொடங்கி விட்டன. இப்படித்தான் தொடர்நிகழ்வில் இப்போது வந்திருப்பது சில்லறை வர்த்தகம்.

இந்தியாவின் சில்லறை வர்த்தகம் என்பது மிகப்பெரிய சந்தை. இன்றுவரை சில தனிநபர்களிடம் மட்டும் சிக்காமல் கிராமப் பெட்டிக்கடையிலிருந்து நகரின் மளிகைக்கடை வரை என பலகோடிப் பேரின் கைகளில் இருக்கிறது. அப்படி பலருக்கும் வாழ்வாதாரமாக, வருவாய் தரக்கூடியதாக இருப்பதை விட முடியுமா? சிலருக்கு மட்டும் லாபம் தருவதாக இருந்தால்தானே அடுத்த ஆண்டுகளின் பில்லியனர்ஸ் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ! பட்டினியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது பத்திரிகைகளில் வரப்போகிறதா என்ன...?

மம்தா பானர்ஜி மீது எனக்கு மரியாதை என்று ஏதும் இருந்ததில்லை. இருந்தாலும் அவருடைய தைரியம் பாராட்டக்கூடியது. இதை சற்று வெட்கத்துடன்தான் கூறுகிறேன் - தமிழன் என்ற வகையில். காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தமிழகத்தின் மிகப்பெரிய கட்சிகளில் ஒன்று தமிழர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இந்தியர்களுக்கும் துரோகமிழைக்கும் செயலுக்கு துணை போயிருக்கிறது. மம்தாவும் அதே கூட்டணியில் அமைச்சராகத்தான் இருக்கிறார். தான் வெளியேறினால் முலாயமும் மாயாவதியும் காங்கிரசின் வால்பிடிக்கத் தயாராக இருக்கிறார்கள் என்பது அவருக்கும் தெரியும். தெரிந்தே ஆதரவை விலக்கிக் கொள்ளும் தைரியம் அவருக்கு இருந்தது. ஆனால் தமிழகத்தின் தானைத்தலைவருக்கு 2-ஜி முக்கியமானது, எதிர்த்து முனகக்கூட தைரியம் வரவில்லை.

திமுக எதிர்க்காமல் போனதற்கு இது மட்டுமே காரணமா... எனக்கு சந்தேகமாக இருக்கிறது. வால்மார்ட்டோ, கீல்மார்ட்டோ - எது வந்தாலும் அதில் கூட்டுசேர தன் குடும்பத்திற்கும் வாய்ப்புக்கிட்டும் என்று எண்ணி இருக்கலாம் என்றே தோன்றுகிறது.
பத்து-இருபது-முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தொலைக்காட்சி இப்போது இருப்பதுபோன்ற வருவாய் தரக்கூடிய தொழிலாக இருக்குமா...? அப்படியே இருந்தாலும் இன்னும் போட்டியாளர்கள் அதிகரித்து விடலாம் இல்லையா...? மக்கள் காலாகாலத்துக்கும் இதேபோல குப்பை சினிமாக்களையே பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று என்ன நிச்சயம்...? அதுபோக, ஆளும் கட்சியாக அல்லது அரசியல் கட்சியாக கழகம் இருக்கும் வரைதானே அதிகாரத்தை குடும்ப லாபத்துக்குப் பயன்படுத்த முடியும்....? எத்தனை காலத்துக்கு இந்த ஆட்சிகளும் அரசியலும் நீடித்துவிட முடியும்...? ஆக, எதுவும் நிரந்தரமில்லை.

ஆனால் ஒன்றுமட்டும் நிரந்தரமாக இருக்கும் - மக்களின் அத்தியாவசியத் தேவைகள் என்பதே அது. அரிசியும் பருப்பும் காய்கறியும் மளிகையும் இல்லாமல் மனிதன் எக்காலத்திலும் இருக்க முடியாது. இப்போதே அதில் நுழைந்துவிட்டால் இப்போது பத்து தலைமுறைக்கு மட்டுமே இருக்கிற சொத்து பலநூறு தலைமுறைக்கும் வரக்கூடியதாக பெருகும் என்ற கணக்கும் இருக்கலாம். அதுவே அவர்களை வாய்மூடி மௌனிகளாக வாழச்செய்திருக்கலாம்.

என் சந்தேகங்கள் பொதுவாக பொய்த்துப்போவதில்லை. இது பொய்த்துப்போனால் மகிழ்ச்சிதான்.

Tuesday, 2 October 2012

காந்தியும் கால்பந்தும் + பயணம்




ஒவ்வொரு பயணத்தின் இறுதியிலும் எஞ்சுபவை பயணிக்காத இடங்கள், சந்திக்கத் தவறிய நண்பர்கள், என்றெனத் தெரியாத அடுத்த பயணம் பற்றிய ஏக்கங்கள் மட்டுமே...
* * *
ஆட்டக்களம் நிகழ்ச்சியை வழங்குவதற்காக வானொலிக்குச் சென்ற பிறகு குருமூர்த்தி கேட்டார் - நாளை காந்தி ஜெயந்தி. காந்திஜி விளையாட்டு குறித்து ஏதும் சொல்லியிருக்கிறாரா... இருந்தால் முத்தாய்ப்பாக சேருங்களேன் என்றார். உடனே இணையத்தில் தேடினேன்.
காந்தி காலத்தில் தேசிய விளையாட்டு இருக்கவில்லை. அவர் பள்ளியில் படித்த காலத்தில் கிரிக்கெட் இருந்திருக்கிறது. பள்ளிப்பருவத்தில் காந்தி கிரிக்கெட் ஆடியிருக்கிறார் என்று தெரிகிறது.

ஆனால் காந்திக்கு ஒரு விளையாட்டில் ஆர்வம் இருந்தது - கால்பந்து. தென்ஆப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அவர் கால்பந்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார். உடனே காந்தி பந்தை உதைத்துக்கொண்டு ஓடுவதாக யாரும் கற்பனை செய்து விடாதீர்கள்.
டர்பன், ஜோகன்னஸ்பர்க், பிரிட்டோரியா ஆகிய மூன்று நகரங்களில் கால்பந்து மன்றங்களை அமைக்க ஊக்குவித்திருக்கிறார் காந்தி. மூன்று மன்றங்களுக்கும் பெயர் ஒன்றேதான் - Passive Resisters Soccer Club - அகிம்சைப் போராளிகள் கால்பந்து மன்றம். மன்றங்களுக்கு இடையே கால்பந்துப் போட்டிகள் நடந்திருக்கின்றன. அணிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார். ரசிகர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார். மன்றங்களின் பெயரைப் பார்க்கும்போதே இதில் காந்தியின் தாக்கம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. அவர் என்ன உரையாற்றியிருப்பார் என்று ஊகிக்க முடியும். ஆட்ட இடைவேளையில் அகிம்சை பற்றி உரையாற்றியிருக்கிறார், துண்டறிக்கைகள் விநியோகித்திருக்கிறார்.
கடைசி வரிசையில் ஆறாவது நபராக தொப்பி அணிந்த பெண்மணியின் அருகில் நிற்பவர் காந்தி
கிரிக்கெட் மேற்குடி மக்களின் ஆட்டம் என்று கருதினாரோ என்னவோ, சாமான்ய மக்களின் ஆட்டமான கால்பந்தின்மீது ஆர்வம் காட்டியிருக்கலாம். கால்பந்தும்கூட காந்திக்கு அகிம்சைப் போராட்டத்துக்கான கருவியாக இருந்திருக்கிறது என்பதை எண்ணும்போது வியப்பாகவும் இருக்கிறது. மனதுக்குள் மதிப்பும் கூடுகிறது.
* * *
இதை எழுதும்போதுதான் நினைவு வருகிறது - என் வலைப்பூவை ஆரம்பித்து ஓராண்டு ஆகிறது. இந்த ஓராண்டு காலத்தில் ஏழாயிரம் வருகைகள் பதிவாகி உள்ளன. வருகை தந்தவர்களுக்கும் கருத்துகளை அளித்தவர்களுக்கும் நன்றி.
* * *
அன்றாட வாழ்க்கையும் புத்தகங்களும் தரும் அனுபவங்களைவிட அதிக அனுபவங்களை பயணங்கள் தருகின்றன. குறிப்பாக இரயில் பயணங்கள் - அதிலும் குறிப்பாக இரண்டாம் வகுப்புப் பயணங்கள். குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் அனுபவங்களைவிட ஆத்திரம் மூட்டும் சந்தர்ப்பங்கள்தான் அதிகமாகக் கிடைக்கின்றன.
இந்த முறை அமைந்த பயணம் நட்புக்காக. கூடவே கொஞ்சம் உறவுகளுக்காக. சுமார் நாற்பத்தைந்து ஆண்டுகாலமாகத் தொடரும் பள்ளிப்பருவ நண்பனின் மகன் திருமணத்துக்காகவே ஊருக்குப் புறப்பட்டேன்.
போகும்போது சென்னை வரை கரீப் ரத் பயணம் - குளிர்சாதன வசதி காரணமல்ல, நேரச் சிக்கனத்துக்காக. மற்ற ரயில்களில் ஏசி பெட்டிகளில் 64 இருக்கைகள் / படுக்கைகள். கரீப் ரத்தில் 84. மற்றவற்றில் ஒரு பகுதிக்கு எட்டு, இதில் ஒன்பது. அதிலும் இரண்டு இருக்கைகள் உள்ள பக்கப்பகுதியில் இடம் கிடைத்தவர்கள் முற்பிறவியில் ஏதோ பாவம் செய்திருக்க வேண்டும். இல்லையேல் இரண்டு படுக்கைகளுக்கு இடையே இருக்கிற கடகடக்கும் தொங்கல் படுக்கையில் தூங்காமல் நோக வேண்டிய நிலை வருமா... அதே போல கதவுப் பக்கத்தில் வாஷ் பேசின் பகுதியில் மூன்று படுக்கைகள்.
நான் எந்தப்பிறவியிலும் எந்தப் பாவமும் செய்யவில்லை போல... அதனால்தான் நடுப்பகுதியில் நல்ல இருக்கை கிடைத்தது என்ற மகிழ்ச்சியைக் குலைத்தது ஹரியாணாவிலிருந்து திருப்பதிக்குப் பயணிக்க வந்த 20-25 பேர் அடங்கிய ஒரு ஜாட் கூட்டம். பெருத்த உடம்புப் பெண்களுக்காக வழக்கம்போல இந்த முறையும் சன்னலோர இருக்கையை தியாகம் செய்துவிட்டு பக்கத்து இருக்கைக்கு மாற வேண்டிய துரதிர்ஷ்டம். அதுதான் போகட்டும் என்றால், ஆறுமாதக் குழந்தை முதல் ஐம்பது வயதுப் பெண் வரை அத்தனை பேருக்கும் நல்ல குரல்வளம். இறங்கும்வரை உரத்த குரல்களில் ஓயாமல் சளசளத்து தம் ஆற்றலை நிரூபித்தார்கள் நேரு மாமா புகழ்ந்து பாராட்டிய வீர ஜாட் மக்கள்.
இரவு எட்டேகால் மணிக்கு சென்னை அடைய வேண்டிய ரயில் 10 நிமிடம் 20 நிமிடம் 30 நிமிடம் என்று தாமதம் ஆக ஆக மனசுக்குள் பதற்றம் எகிறிக்கொண்டே இருந்தது. எப்படியோ ஒன்றரை மணிநேரத் தாமதத்தில் போய்ச் சேர்ந்து விட்டது. ஒன்றாவது பிளாட்பாரத்திலிருந்து பத்தாவது பிளாட்பாரத்தை அடைந்து கோவை ரயிலைப் பிடிக்கவும், வழியில் தயிர் சாதம் வாங்கிக்கொள்ளவும் போதுமான அவகாசம் கிடைத்தது. அடேயப்பா... நம்ம ஊர்...
ஈரோடு வந்து விட்டதாக எண்ணி சேலத்திலேயே விழித்தெழுந்து பல்துலக்கி ரெடியாகிக் காத்திருந்த முக்கால் மணி நேரம் கழிந்து பாலத்தைக் கடகடக்கும் சத்தம் வந்தபிறகுதான் புரிந்தது இனிதான் ஈரோடு வர இருக்கிறது என்று. இருந்தாலும் ஒரு திருப்தி - எல்லா ரயில் நிலையங்களின் பிளாட்பாரங்களும் இரவுகளில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க ஈரோட்டில் மட்டும்தான் இரவுநேரத்திலும் டீ-சாய் குரல்கள் கேட்கும்.
டீ குடித்த திருப்தியுடன் மங்கலான விடியலில் திருப்பூரில் இறங்கினேன். காத்திருக்கும் ஆட்டோக்காரர்கள் எல்லாரையும் கொடூரக் கொள்ளைக்காரர்களாக மனதுக்குள் திட்டித்தீர்த்து, கையில் இழுபெட்டி இருந்த தைரியத்தில் "ஹ... உன்னிடம் இன்று நான் கெஞ்ச வேண்டிய தேவையில்லை" என்று வாயைக் கெக்கலித்துக் காட்டாத குறையாகப் புறக்கணித்து தரதரத்துச் சென்று முதல் டிரிப்பாக வரும் காலிப் பேருந்தில் ஏறி பஸ் ஸ்டாண்ட்.
உடுமலைக்குச் செல்லும் முதல் பேருந்தில் அந்த விடியல் வேளையிலும் எப்படி அத்தனை பேர் வந்து அமர்ந்து விட்டார்கள் என்ற வியப்பு. முகூர்த்த நாள். வெள்ளை வேட்டிகளும் பட்டுப்புடவைகளும் மல்லிகைப் பூக்களுமாய் மணக்க மணக்க என்னை வரவேற்றார்கள் தமிழ்ப்பெருமக்கள். வழியில் காற்றாலைகள் இன்னும் கொஞ்சம் அதிகரித்துள்ளன. வயல்களும் தோப்புகளும் இன்னும் கொஞ்சம் குறைந்துள்ளன. நிலங்களின் விலை மதிப்பை அரசு கூட்டிவிட்டதால் ரியல் எஸ்டேட் மந்தம். இருந்தாலும் புதிது புதிதாய் மனைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
வயலாகுமோ... மனையாகி விலைபோகுமோ...
கோவைக்காரர்கள் சிறுவாணி நீரின் பெருமையையும் கர்வத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். உடுமலைக்காரர்கள் சிறுவாணிக்கு சற்றும் குறையாத திருமூர்த்தி நீரின் பெருமையை இன்னும் கொஞ்ச காலத்தில் இழக்கத் துவங்குவார்கள். குளியலறைக் குளியல்தான் என்றாலும் குளிர்நீரில் குளிப்பதில்தான் என்ன சுகம்...
நண்பன் குடும்பம் திருமண மண்டபத்துக்குப் புறப்பட்டாகி விட்டதா என்று விசாரித்தேன். நீ வந்தாக வேண்டும், நீயும் வந்த பிறகுதான் புறப்படுவோம் என்று கூறி விட்டான். அக்காவின் ஸ்கூட்டியில் புறப்பட்டேன். உடுமலையில் நான் இறங்கிய நேரம் முதல் பூத்தூவி வரவேற்பது போல் மழைச் சாரல்...

நண்பனை சந்தித்து, மணமகனை வாழ்த்திவிட்டு, அவர்களுடன் கோயிலுக்கு சிறு நடைபயணம். முப்பது ஆண்டுகளுக்கு முன் பார்த்த மாரியம்மன் கோயில். கோயிலில் வணங்கியபின் மண்டபத்துக்குப் பயணம். நானும் நண்பனும் மட்டும் என் வாகனத்தில்.
கழுகரை மாரியம்மன் கோவில்
திருமண மண்டபத்தில் பழைய நண்பர்களுடன் சந்திப்பு. வேலுச்சாமி, பழனிச்சாமி, திருமலைசாமி, வெள்ளைச்சாமி என வந்த சாமிகளிடம் எல்லாம் வராத சாமிகள் பற்றிய விசாரிப்புகள். ஒரு விஷயம் - பேருந்தே போகாத கிராமத்திலிருந்த இந்த பல சாமிகளின் மகன்களும் மகள்களும் துபாயிலும் பெங்களூரிலும் லண்டனிலும் ஹைதராபாதிலும் சென்னையிலும் இலட்சம் லட்சமாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இரவு சந்தித்த நண்பர்களைத் தொடர்ந்து காலையில் முகூர்தத்துக்கு வந்த மேலும் சில நண்பர்கள். அவன் கடன் கேட்பானோ, இவன் கடன் கேட்பானோ என்ற கவலைகள் ஏதுமில்லாத பழங்கால நட்புகளின் கூடல் அது. மணமக்களுக்கு எப்போதும் என் வாழ்த்துகள் இருக்கும், அது அவர்களுக்கும் தெரியும் என்பதால் மண மேடைப்பக்கமே போகவில்லை. என் கவனமெல்லாம் எந்த நண்பன் வருகிறான். அவன் அடையாளம் கண்டுகொள்கிறானா என்பதில்தான்.
அடுத்துத் தொடர்ந்தது உறவுகளுக்கான சில நாட்கள். ஊர் ஊராகச் சென்று உறவுகளுடன் சிலமணிநேர உரையாடல்கள். குழந்தைகளுக்கு பரிசுகள், புத்தகங்கள். வாகனப் பயணங்கள்.

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் நினைவு வருவது Zen and the Motorcycle Mechanism என்ற நூலில் இருபதாண்டுகள் முன் படித்த வரிகளின் மங்கலான நினைவு.
நீங்கள் காரிலோ பஸ்சிலோ பயணிக்கும்போது சன்னல் வழி கண்ணில் தெரிகிற காட்சி ஒரு சட்டத்துக்குள் அடங்கியது. அது ஒரு பிரேம் போட்ட தோற்றம். ஆனால் பைக்கில் பயணிக்கும்போது உங்கள் கண்முன் விரிவது முழு உலகம்.

தொடுவானம் வரை விரிந்திருக்கும் வானம், வானத்தின் கீழ் பரந்து கிடக்கும் நிலம், வானோடு ஒன்றிவிட்டதாய் தோன்றும் மலைகள்... மலைகளுக்கு மேலாடை போட முயலும் மேகங்கள், மேகங்களிடையிலிருந்து முகம் காட்ட முயலும் மலைகள். கிராமங்களைக் காவல் காக்கும் அய்யனார்கள்.  

நிற்காத பயணமாய் காட்சிகளை விழுங்கிக்கொண்டு போய்க்கொண்டே........... இருக்க வேண்டுமாய் எப்போதும் எழுகிற நிறைவேறாத ஆசை இப்போதும் எழுகிறது.



அடுத்து காரில் பெங்களூர் பயணம். ஈரோட்டுக்கும் பெங்களூருக்கும் மத்தியில் தனியார் கட்டண சாலைகளில் மட்டும் ஒருவழிப் பயணத்துக்கு நானூறு ரூபாய் கொள்ளை. வாழ்க தனியார்மயம். வழியில் ஒரு மலைக்கோவிலில் அலங்காரமாக 1008 லிங்கங்கள். (தில்லி வந்த பிறகு சச்சிதானந்தன் ஐயா காம்போஜம் சென்றிருந்தபயணத்தைப் பற்றியும் 1008 லிங்கங்கள் பற்றியும் எழுதியிருந்ததைப் படித்ததும் இதன் நினைவும் எழுந்தது.)
மூன்று மைல்தூரம் நடந்து பள்ளிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த இந்தக் குழந்தைகளை காமிராவில் பதியும்போது தெரியவில்லை செருப்பணியாத சிறுமியின் கால்கள்.
பெங்களூரில் ஒருநாள் முழுக்க ஓய்வு. நண்பர்களை சந்திக்கச் செல்லலாம் என்ற எண்ணம் இருந்தது. இவரைச் சந்தித்தது அவருக்குத் தெரிந்தால் அவருக்கு வருத்தம் ஏற்படும். பத்து-பதினைந்து பேரில் யாரைச் சந்திப்பது என்று யாருக்கும் தகவலே சொல்லவில்லை. மாலையில் மட்டும் பதினைந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ஒரு மார்க்கெட்டுக்கு விஜயம். தில்லியின் அகன்ற சாலைகளில் வாகன நெரிசல்களையே நொந்து கொண்டிருக்கும் எனக்கு பெங்களூர்வாசிகள் மிகவும் பொறுமைசாலிகள் எனத் தோன்றுகிறது. தில்லிக்குத் திரும்பி வந்தபிறகு தோன்றியது - தியோடர் பாஸ்கரனை அல்லது அவரது சகோதரர் கிறிஸ்டோபரை சந்தித்திருக்கலாமே என்று. காலம் கடந்த வருத்தம்.

பெங்களூரிலிருந்து தில்லிக்கு தவறுதலாக டிக்கெட் எடுத்து விட்டிருந்தேன். சம்பர்க் கிராந்தி இரண்டு வகையான ரயில்கள் உள்ளன. ஒன்று, வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கும், 39 மணி நேரப் பயணம், நாக்பூர் வழி. மற்றொன்று வாரத்தில் இரண்டு நாட்கள், 45 மணிநேரப் பயணம், கொங்கண ரயில்வே வழி. நான் அவசரத்தில் இந்த இரண்டாவது ரயிலுக்கு பதிவு செய்து விட்டிருந்தேன். புறப்படும்வரை 45 மணிநேரப் பயணமா என்று நொந்து போயிருந்தவனை வியக்க வைத்தது கொங்கணப் பகுதி. 12 நிறுத்தங்கள் மட்டுமே. ஆக்ராவில்கூட நிற்காது.
ஒப்பீட்டில் கர்நாடகத்தின் மேற்குப்பகுதியும் மகாராட்டிரமும் செழிப்பாகவே இருக்கின்றன. தென்னைகளின் ஊடே பாக்கு மரங்கள் அடர்ந்த தோப்புகள், வெங்காயம்-மக்காச்சோளம் இன்னபிற பயிர்கள், மலைகள், சுரங்கங்கள், வளைந்து நெளிந்து போகும் பாதைகள். சுழித்தோடும் ஆறுகள்.
வழியில் எத்தனையோ மலைகள் தமிழகத்தைப் போலவே கிரானைட்டுக்காக அறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. காற்றாலைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. மலை ஒன்று கண்ணில் பட்டது. அதை தம்ஸ் அப் என்று சக பயணி ஒருவர் அறிமுகம் செய்தார். அதன் முகட்டில் கட்டை விரலை உயர்த்திக்காட்டுவது போன்ற இயற்கை அமைப்பு.

வழியில் மிராஜ் ஸ்டேஷனில் மாதுளம்பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன. 3 கிலோ 100 ரூபாய் மட்டுமே. பத்து ரூபாய்க்கு பாக்கெட்டில் விற்கும் சிவப்பு மணிகள். மன்மாட் ஸ்டேஷனில் உலர் திராட்சை - கிஸ்மிஸ் - நன்கு உலர்ந்த ரகம் கிலோ 140 ரூபாய். சுமார் ரகம் 100 ரூபாய். குழந்தைகள் விரும்பிச் சாப்பிட்டுத் தீர்க்கிறார்கள்.
இந்திய ரயில்வேயின் சிறப்பை வெளிப்படுத்தக்கூடிய பாதை இது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை. பாதி தூரம் டீசல் எஞ்சின். பாதி தூரம் மின்சார எஞ்ஜின். இரண்டு ஸ்டேஷன்களில் ரயில் எந்தத் திசையில் வந்ததோ அதே திசையில் திரும்பிச் செல்கிறது. அடடா... நம்ம டிரைவர் வழி தெரியாமல் குழம்பி விட்டாரா என்றெல்லாம் யாரும் கவலைப்படத்தேவையில்லை.
புணே அருகே ஒரு இடத்தில் மலையைப் பிளந்து பாதை அமைத்திருக்கிறார்கள். ரயில் வளைந்து செல்கிறது. வளைந்து என்றால் சாதாரண வளைவல்ல. U வளைவு. அந்த இடத்தை நான் பயணித்த ரயில் அடைந்தபோது இரவு என்பதால் ரசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் அழகிய படம் ஒன்று வலையில் கிடைத்தது. எஞ்சினும் கடைசிப்பெட்டியும் கிட்டத்தட்ட இணையாகத் தோன்றச்செய்யும் வளைவு. அடார்க்கி என்னும் ஊரின் அருகே இருக்கிறது இந்த அதிசய வளைவு.
படம் - indiarailinfo.com
உங்களில் யாருக்கேனும் வாய்ப்புக் கிடைத்தால் கொங்கண ரயில்வேயிலும் ஒருமுறை பயணம் செய்து விடுங்கள். நிச்சயமாக வருத்தப்பட மாட்டீர்கள்.