ஒவ்வொரு பயணத்தின்
இறுதியிலும் எஞ்சுபவை பயணிக்காத இடங்கள், சந்திக்கத் தவறிய நண்பர்கள், என்றெனத்
தெரியாத அடுத்த பயணம் பற்றிய ஏக்கங்கள் மட்டுமே...
* * *
ஆட்டக்களம்
நிகழ்ச்சியை வழங்குவதற்காக வானொலிக்குச் சென்ற பிறகு குருமூர்த்தி கேட்டார் - நாளை
காந்தி ஜெயந்தி. காந்திஜி விளையாட்டு குறித்து ஏதும் சொல்லியிருக்கிறாரா...
இருந்தால் முத்தாய்ப்பாக சேருங்களேன் என்றார். உடனே இணையத்தில் தேடினேன்.
காந்தி காலத்தில்
தேசிய விளையாட்டு இருக்கவில்லை. அவர் பள்ளியில் படித்த காலத்தில் கிரிக்கெட் இருந்திருக்கிறது.
பள்ளிப்பருவத்தில் காந்தி கிரிக்கெட் ஆடியிருக்கிறார் என்று தெரிகிறது.
ஆனால் காந்திக்கு
ஒரு விளையாட்டில் ஆர்வம் இருந்தது - கால்பந்து. தென்ஆப்பிரிக்காவில் வசித்த
காலத்தில் அவர் கால்பந்தில் ஆர்வம் காட்டியிருக்கிறார். உடனே காந்தி பந்தை உதைத்துக்கொண்டு
ஓடுவதாக யாரும் கற்பனை செய்து விடாதீர்கள்.
டர்பன்,
ஜோகன்னஸ்பர்க், பிரிட்டோரியா ஆகிய மூன்று நகரங்களில் கால்பந்து மன்றங்களை அமைக்க
ஊக்குவித்திருக்கிறார் காந்தி. மூன்று மன்றங்களுக்கும் பெயர் ஒன்றேதான் - Passive Resisters Soccer Club - அகிம்சைப்
போராளிகள் கால்பந்து மன்றம். மன்றங்களுக்கு இடையே கால்பந்துப் போட்டிகள்
நடந்திருக்கின்றன. அணிகளுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.
ரசிகர்கள் மத்தியில் உரையாற்றியிருக்கிறார். மன்றங்களின் பெயரைப் பார்க்கும்போதே
இதில் காந்தியின் தாக்கம் இருந்திருக்கிறது என்று தெரிகிறது. அவர் என்ன
உரையாற்றியிருப்பார் என்று ஊகிக்க முடியும். ஆட்ட இடைவேளையில் அகிம்சை பற்றி
உரையாற்றியிருக்கிறார், துண்டறிக்கைகள் விநியோகித்திருக்கிறார்.
கடைசி வரிசையில் ஆறாவது நபராக தொப்பி அணிந்த பெண்மணியின் அருகில் நிற்பவர் காந்தி |
கிரிக்கெட்
மேற்குடி மக்களின் ஆட்டம் என்று கருதினாரோ என்னவோ, சாமான்ய மக்களின் ஆட்டமான
கால்பந்தின்மீது ஆர்வம் காட்டியிருக்கலாம். கால்பந்தும்கூட காந்திக்கு அகிம்சைப்
போராட்டத்துக்கான கருவியாக இருந்திருக்கிறது என்பதை எண்ணும்போது வியப்பாகவும்
இருக்கிறது. மனதுக்குள் மதிப்பும் கூடுகிறது.
* * *
இதை
எழுதும்போதுதான் நினைவு வருகிறது - என் வலைப்பூவை ஆரம்பித்து ஓராண்டு ஆகிறது. இந்த
ஓராண்டு காலத்தில் ஏழாயிரம் வருகைகள் பதிவாகி உள்ளன. வருகை தந்தவர்களுக்கும்
கருத்துகளை அளித்தவர்களுக்கும் நன்றி.
* * *
அன்றாட
வாழ்க்கையும் புத்தகங்களும் தரும் அனுபவங்களைவிட அதிக அனுபவங்களை பயணங்கள் தருகின்றன.
குறிப்பாக இரயில் பயணங்கள் - அதிலும் குறிப்பாக இரண்டாம் வகுப்புப் பயணங்கள்.
குளிர்சாதன வசதி கொண்ட பெட்டிகளில் அனுபவங்களைவிட ஆத்திரம் மூட்டும்
சந்தர்ப்பங்கள்தான் அதிகமாகக் கிடைக்கின்றன.
இந்த முறை அமைந்த
பயணம் நட்புக்காக. கூடவே கொஞ்சம் உறவுகளுக்காக. சுமார் நாற்பத்தைந்து
ஆண்டுகாலமாகத் தொடரும் பள்ளிப்பருவ நண்பனின் மகன் திருமணத்துக்காகவே ஊருக்குப்
புறப்பட்டேன்.
போகும்போது சென்னை
வரை கரீப் ரத் பயணம் - குளிர்சாதன வசதி காரணமல்ல, நேரச் சிக்கனத்துக்காக. மற்ற
ரயில்களில் ஏசி பெட்டிகளில் 64 இருக்கைகள் / படுக்கைகள்.
கரீப் ரத்தில் 84. மற்றவற்றில் ஒரு பகுதிக்கு எட்டு, இதில் ஒன்பது. அதிலும் இரண்டு
இருக்கைகள் உள்ள பக்கப்பகுதியில் இடம் கிடைத்தவர்கள் முற்பிறவியில் ஏதோ பாவம்
செய்திருக்க வேண்டும். இல்லையேல் இரண்டு படுக்கைகளுக்கு இடையே இருக்கிற கடகடக்கும்
தொங்கல் படுக்கையில் தூங்காமல் நோக வேண்டிய நிலை வருமா... அதே போல கதவுப்
பக்கத்தில் வாஷ் பேசின் பகுதியில் மூன்று படுக்கைகள்.
நான்
எந்தப்பிறவியிலும் எந்தப் பாவமும் செய்யவில்லை போல... அதனால்தான் நடுப்பகுதியில்
நல்ல இருக்கை கிடைத்தது என்ற மகிழ்ச்சியைக் குலைத்தது ஹரியாணாவிலிருந்து
திருப்பதிக்குப் பயணிக்க வந்த 20-25 பேர் அடங்கிய ஒரு ஜாட் கூட்டம். பெருத்த
உடம்புப் பெண்களுக்காக வழக்கம்போல இந்த முறையும் சன்னலோர இருக்கையை தியாகம்
செய்துவிட்டு பக்கத்து இருக்கைக்கு மாற வேண்டிய துரதிர்ஷ்டம். அதுதான் போகட்டும்
என்றால், ஆறுமாதக் குழந்தை முதல் ஐம்பது வயதுப் பெண் வரை அத்தனை பேருக்கும் நல்ல
குரல்வளம். இறங்கும்வரை உரத்த குரல்களில் ஓயாமல் சளசளத்து தம் ஆற்றலை
நிரூபித்தார்கள் நேரு மாமா புகழ்ந்து பாராட்டிய வீர ஜாட் மக்கள்.
இரவு எட்டேகால்
மணிக்கு சென்னை அடைய வேண்டிய ரயில் 10 நிமிடம் 20 நிமிடம் 30 நிமிடம் என்று தாமதம்
ஆக ஆக மனசுக்குள் பதற்றம் எகிறிக்கொண்டே இருந்தது. எப்படியோ ஒன்றரை மணிநேரத்
தாமதத்தில் போய்ச் சேர்ந்து விட்டது. ஒன்றாவது பிளாட்பாரத்திலிருந்து பத்தாவது
பிளாட்பாரத்தை அடைந்து கோவை ரயிலைப் பிடிக்கவும், வழியில் தயிர் சாதம்
வாங்கிக்கொள்ளவும் போதுமான அவகாசம் கிடைத்தது. அடேயப்பா... நம்ம ஊர்...
ஈரோடு வந்து
விட்டதாக எண்ணி சேலத்திலேயே விழித்தெழுந்து பல்துலக்கி ரெடியாகிக் காத்திருந்த
முக்கால் மணி நேரம் கழிந்து பாலத்தைக் கடகடக்கும் சத்தம் வந்தபிறகுதான் புரிந்தது
இனிதான் ஈரோடு வர இருக்கிறது என்று. இருந்தாலும் ஒரு திருப்தி - எல்லா ரயில்
நிலையங்களின் பிளாட்பாரங்களும் இரவுகளில் உறக்கத்தில் ஆழ்ந்திருக்க ஈரோட்டில்
மட்டும்தான் இரவுநேரத்திலும் டீ-சாய் குரல்கள் கேட்கும்.
டீ குடித்த
திருப்தியுடன் மங்கலான விடியலில் திருப்பூரில் இறங்கினேன். காத்திருக்கும்
ஆட்டோக்காரர்கள் எல்லாரையும் கொடூரக் கொள்ளைக்காரர்களாக மனதுக்குள்
திட்டித்தீர்த்து, கையில் இழுபெட்டி இருந்த தைரியத்தில் "ஹ... உன்னிடம் இன்று நான் கெஞ்ச
வேண்டிய தேவையில்லை" என்று வாயைக் கெக்கலித்துக் காட்டாத குறையாகப் புறக்கணித்து தரதரத்துச்
சென்று முதல் டிரிப்பாக வரும் காலிப் பேருந்தில் ஏறி பஸ் ஸ்டாண்ட்.
உடுமலைக்குச்
செல்லும் முதல் பேருந்தில் அந்த விடியல் வேளையிலும் எப்படி அத்தனை பேர் வந்து
அமர்ந்து விட்டார்கள் என்ற வியப்பு. முகூர்த்த நாள். வெள்ளை
வேட்டிகளும் பட்டுப்புடவைகளும் மல்லிகைப் பூக்களுமாய் மணக்க மணக்க என்னை வரவேற்றார்கள்
தமிழ்ப்பெருமக்கள். வழியில் காற்றாலைகள் இன்னும் கொஞ்சம் அதிகரித்துள்ளன. வயல்களும் தோப்புகளும் இன்னும் கொஞ்சம் குறைந்துள்ளன. நிலங்களின் விலை மதிப்பை அரசு கூட்டிவிட்டதால் ரியல் எஸ்டேட் மந்தம். இருந்தாலும் புதிது புதிதாய் மனைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன.
வயலாகுமோ... மனையாகி விலைபோகுமோ... |
கோவைக்காரர்கள்
சிறுவாணி நீரின் பெருமையையும் கர்வத்தையும் இழந்து கொண்டிருக்கிறார்கள்.
உடுமலைக்காரர்கள் சிறுவாணிக்கு சற்றும் குறையாத திருமூர்த்தி நீரின் பெருமையை
இன்னும் கொஞ்ச காலத்தில் இழக்கத் துவங்குவார்கள். குளியலறைக் குளியல்தான்
என்றாலும் குளிர்நீரில் குளிப்பதில்தான் என்ன சுகம்...
நண்பன் குடும்பம்
திருமண மண்டபத்துக்குப் புறப்பட்டாகி விட்டதா என்று விசாரித்தேன். நீ வந்தாக
வேண்டும், நீயும் வந்த பிறகுதான் புறப்படுவோம் என்று கூறி விட்டான். அக்காவின்
ஸ்கூட்டியில் புறப்பட்டேன். உடுமலையில் நான் இறங்கிய நேரம் முதல் பூத்தூவி
வரவேற்பது போல் மழைச் சாரல்...
நண்பனை சந்தித்து,
மணமகனை வாழ்த்திவிட்டு, அவர்களுடன் கோயிலுக்கு சிறு நடைபயணம். முப்பது
ஆண்டுகளுக்கு முன் பார்த்த மாரியம்மன் கோயில். கோயிலில் வணங்கியபின்
மண்டபத்துக்குப் பயணம். நானும் நண்பனும் மட்டும் என் வாகனத்தில்.
கழுகரை மாரியம்மன் கோவில் |
திருமண மண்டபத்தில் பழைய
நண்பர்களுடன் சந்திப்பு. வேலுச்சாமி, பழனிச்சாமி, திருமலைசாமி, வெள்ளைச்சாமி என
வந்த சாமிகளிடம் எல்லாம் வராத சாமிகள் பற்றிய விசாரிப்புகள். ஒரு விஷயம் -
பேருந்தே போகாத கிராமத்திலிருந்த இந்த பல சாமிகளின் மகன்களும் மகள்களும்
துபாயிலும் பெங்களூரிலும் லண்டனிலும் ஹைதராபாதிலும் சென்னையிலும் இலட்சம் லட்சமாய்
சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
இரவு சந்தித்த
நண்பர்களைத் தொடர்ந்து காலையில் முகூர்தத்துக்கு வந்த மேலும் சில நண்பர்கள். அவன்
கடன் கேட்பானோ, இவன் கடன் கேட்பானோ என்ற கவலைகள் ஏதுமில்லாத பழங்கால நட்புகளின்
கூடல் அது. மணமக்களுக்கு எப்போதும் என் வாழ்த்துகள் இருக்கும், அது அவர்களுக்கும்
தெரியும் என்பதால் மண மேடைப்பக்கமே போகவில்லை. என் கவனமெல்லாம் எந்த நண்பன்
வருகிறான். அவன் அடையாளம் கண்டுகொள்கிறானா என்பதில்தான்.
அடுத்துத்
தொடர்ந்தது உறவுகளுக்கான சில நாட்கள். ஊர் ஊராகச் சென்று உறவுகளுடன் சிலமணிநேர
உரையாடல்கள். குழந்தைகளுக்கு பரிசுகள், புத்தகங்கள். வாகனப் பயணங்கள்.
இருசக்கர
வாகனத்தில் பயணிக்கும் ஒவ்வொரு முறையும் நினைவு வருவது Zen
and the Motorcycle Mechanism என்ற நூலில் இருபதாண்டுகள் முன் படித்த வரிகளின் மங்கலான நினைவு.
நீங்கள் காரிலோ பஸ்சிலோ பயணிக்கும்போது
சன்னல் வழி கண்ணில் தெரிகிற காட்சி ஒரு சட்டத்துக்குள் அடங்கியது. அது ஒரு பிரேம்
போட்ட தோற்றம். ஆனால் பைக்கில் பயணிக்கும்போது உங்கள் கண்முன் விரிவது முழு உலகம்.
தொடுவானம் வரை விரிந்திருக்கும் வானம், வானத்தின் கீழ் பரந்து கிடக்கும் நிலம், வானோடு ஒன்றிவிட்டதாய் தோன்றும் மலைகள்... மலைகளுக்கு மேலாடை போட முயலும் மேகங்கள், மேகங்களிடையிலிருந்து முகம் காட்ட முயலும் மலைகள். கிராமங்களைக் காவல் காக்கும் அய்யனார்கள்.
நிற்காத பயணமாய் காட்சிகளை விழுங்கிக்கொண்டு போய்க்கொண்டே........... இருக்க வேண்டுமாய் எப்போதும் எழுகிற நிறைவேறாத ஆசை இப்போதும் எழுகிறது.
அடுத்து காரில்
பெங்களூர் பயணம். ஈரோட்டுக்கும் பெங்களூருக்கும் மத்தியில் தனியார் கட்டண
சாலைகளில் மட்டும் ஒருவழிப் பயணத்துக்கு நானூறு ரூபாய் கொள்ளை. வாழ்க தனியார்மயம்.
வழியில் ஒரு மலைக்கோவிலில் அலங்காரமாக 1008 லிங்கங்கள். (தில்லி வந்த பிறகு
சச்சிதானந்தன் ஐயா காம்போஜம் சென்றிருந்தபயணத்தைப் பற்றியும் 1008 லிங்கங்கள் பற்றியும் எழுதியிருந்ததைப் படித்ததும் இதன்
நினைவும் எழுந்தது.)
மூன்று மைல்தூரம் நடந்து பள்ளிக்குச் சென்று திரும்பிக்கொண்டிருந்த இந்தக் குழந்தைகளை காமிராவில் பதியும்போது தெரியவில்லை செருப்பணியாத சிறுமியின் கால்கள். |
பெங்களூரில் ஒருநாள் முழுக்க ஓய்வு. நண்பர்களை சந்திக்கச் செல்லலாம் என்ற எண்ணம் இருந்தது. இவரைச் சந்தித்தது அவருக்குத் தெரிந்தால் அவருக்கு வருத்தம் ஏற்படும். பத்து-பதினைந்து பேரில் யாரைச் சந்திப்பது என்று யாருக்கும் தகவலே சொல்லவில்லை. மாலையில் மட்டும் பதினைந்து கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ஒரு மார்க்கெட்டுக்கு விஜயம். தில்லியின் அகன்ற சாலைகளில் வாகன நெரிசல்களையே நொந்து கொண்டிருக்கும் எனக்கு பெங்களூர்வாசிகள் மிகவும் பொறுமைசாலிகள் எனத் தோன்றுகிறது. தில்லிக்குத் திரும்பி வந்தபிறகு தோன்றியது - தியோடர் பாஸ்கரனை அல்லது அவரது சகோதரர் கிறிஸ்டோபரை சந்தித்திருக்கலாமே என்று. காலம் கடந்த வருத்தம்.
பெங்களூரிலிருந்து தில்லிக்கு தவறுதலாக டிக்கெட் எடுத்து விட்டிருந்தேன். சம்பர்க் கிராந்தி இரண்டு வகையான ரயில்கள் உள்ளன. ஒன்று, வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கும், 39 மணி நேரப் பயணம், நாக்பூர் வழி. மற்றொன்று வாரத்தில் இரண்டு நாட்கள், 45 மணிநேரப் பயணம், கொங்கண ரயில்வே வழி. நான் அவசரத்தில் இந்த இரண்டாவது ரயிலுக்கு பதிவு செய்து விட்டிருந்தேன். புறப்படும்வரை 45 மணிநேரப் பயணமா என்று நொந்து போயிருந்தவனை வியக்க வைத்தது கொங்கணப் பகுதி. 12 நிறுத்தங்கள் மட்டுமே. ஆக்ராவில்கூட நிற்காது.
பெங்களூரிலிருந்து தில்லிக்கு தவறுதலாக டிக்கெட் எடுத்து விட்டிருந்தேன். சம்பர்க் கிராந்தி இரண்டு வகையான ரயில்கள் உள்ளன. ஒன்று, வாரத்தில் ஐந்து நாட்கள் இயங்கும், 39 மணி நேரப் பயணம், நாக்பூர் வழி. மற்றொன்று வாரத்தில் இரண்டு நாட்கள், 45 மணிநேரப் பயணம், கொங்கண ரயில்வே வழி. நான் அவசரத்தில் இந்த இரண்டாவது ரயிலுக்கு பதிவு செய்து விட்டிருந்தேன். புறப்படும்வரை 45 மணிநேரப் பயணமா என்று நொந்து போயிருந்தவனை வியக்க வைத்தது கொங்கணப் பகுதி. 12 நிறுத்தங்கள் மட்டுமே. ஆக்ராவில்கூட நிற்காது.
ஒப்பீட்டில்
கர்நாடகத்தின் மேற்குப்பகுதியும் மகாராட்டிரமும் செழிப்பாகவே இருக்கின்றன.
தென்னைகளின் ஊடே பாக்கு மரங்கள் அடர்ந்த தோப்புகள், வெங்காயம்-மக்காச்சோளம் இன்னபிற பயிர்கள், மலைகள், சுரங்கங்கள்,
வளைந்து நெளிந்து போகும் பாதைகள். சுழித்தோடும் ஆறுகள்.
வழியில் எத்தனையோ
மலைகள் தமிழகத்தைப் போலவே கிரானைட்டுக்காக அறுக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
காற்றாலைகள் அறிமுகமாகிக் கொண்டிருக்கின்றன. மலை ஒன்று கண்ணில் பட்டது. அதை தம்ஸ்
அப் என்று சக பயணி ஒருவர் அறிமுகம் செய்தார். அதன் முகட்டில் கட்டை விரலை உயர்த்திக்காட்டுவது போன்ற இயற்கை அமைப்பு.
வழியில் மிராஜ்
ஸ்டேஷனில் மாதுளம்பழங்கள் கொட்டிக்கிடக்கின்றன. 3 கிலோ 100 ரூபாய் மட்டுமே. பத்து
ரூபாய்க்கு பாக்கெட்டில் விற்கும் சிவப்பு மணிகள். மன்மாட் ஸ்டேஷனில் உலர்
திராட்சை - கிஸ்மிஸ் - நன்கு உலர்ந்த ரகம் கிலோ 140 ரூபாய். சுமார் ரகம் 100
ரூபாய். குழந்தைகள் விரும்பிச் சாப்பிட்டுத் தீர்க்கிறார்கள்.
இந்திய
ரயில்வேயின் சிறப்பை வெளிப்படுத்தக்கூடிய பாதை இது என்பது எனக்குத் தெரிந்திருக்கவில்லை.
பாதி தூரம் டீசல் எஞ்சின். பாதி தூரம் மின்சார எஞ்ஜின். இரண்டு ஸ்டேஷன்களில் ரயில்
எந்தத் திசையில் வந்ததோ அதே திசையில் திரும்பிச் செல்கிறது. அடடா... நம்ம டிரைவர்
வழி தெரியாமல் குழம்பி விட்டாரா என்றெல்லாம் யாரும் கவலைப்படத்தேவையில்லை.
புணே அருகே ஒரு
இடத்தில் மலையைப் பிளந்து பாதை அமைத்திருக்கிறார்கள். ரயில் வளைந்து செல்கிறது.
வளைந்து என்றால் சாதாரண வளைவல்ல. U வளைவு. அந்த இடத்தை நான் பயணித்த ரயில்
அடைந்தபோது இரவு என்பதால் ரசிக்கக் கிடைக்கவில்லை. ஆனால் அழகிய படம் ஒன்று வலையில்
கிடைத்தது. எஞ்சினும் கடைசிப்பெட்டியும் கிட்டத்தட்ட இணையாகத் தோன்றச்செய்யும்
வளைவு. அடார்க்கி என்னும் ஊரின் அருகே இருக்கிறது இந்த அதிசய வளைவு.
படம் - indiarailinfo.com |
உங்களில்
யாருக்கேனும் வாய்ப்புக் கிடைத்தால் கொங்கண ரயில்வேயிலும் ஒருமுறை பயணம் செய்து
விடுங்கள். நிச்சயமாக வருத்தப்பட மாட்டீர்கள்.
Good read. If you had told me, I would have come and met you. Next time. Theodore Baskaran
ReplyDeleteகாந்தியின் கால்பந்தாட்ட ரசனையும் அதையே தன் போராட்டக்கருவியாக அவர் ஆக்கியதும் புதுச் செய்திகள்.ஊக்கமுடையவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் சிறு இடைவெளிகள் மூலமாகவும் கூட இலக்கை அடையும் வழியையே தேடி அடைகிறார்கள் என்பது ஒரு பாடம்.
ReplyDeleteதங்கள் பயணம் ஊர் நினைவுகளைக் கிளறியதோடு கொங்கணி ரயில்வே தடத்தில் பயணிக்கும் ஆவலையும் கிளர்த்தி விட்டது.
Shajahan Sir,
ReplyDeletePayanak Katturai Ezhuthuvathil, Lena avarkalin thakkam therigirathu. Keep writing.
Sankar
Dear Puthiyavan Sir, It is nice to visit the site and witness those precious memorable things on traveling experiences and I am continuing to read all other remaining matters like Gandhiji and Football.. etc.. and I will share my feelings later. My Best and Heartiest Regards to all of our dearest Circle at Delhi.Bye Sir.
ReplyDeleteYour's
SAKTHISEKARAN
நன்றி சங்கர்.
ReplyDeleteஆம் சுசீலா அவர்களே. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பது இதுதான்.