Sunday 16 September 2012

கதம்பம் - 2


முந்தைய கதம்பத்தில் மின்வாரியம் பற்றிய நகைச்சுவையான வர்ணனையை எழுதியவர் யார் என்ற கேள்விக்கு 'எழுதின அளகை வைத்து' கி. ராஜ நாராயணன் என்று சரியாக பதிலளித்தவர் சத்யா அசோகன். பாராட்டுகள்.


* * *
வதந்திகளின் வல்லமை
அஸாம், பர்மா, பெங்களூர் விவகாரங்களில் வதந்திகள் ஆற்றிய பங்கு பற்றி இங்கே விவரமாக எழுதத் தேவையில்லை.
அஸாம் மிகச்சிக்கலான விவகாரம். குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் அரசியல்வாதிகளாலும் மதவாதிகளாலும் இன்னும் குழப்பப்படுவது. பேஸ்புக், மின்னஞ்சல்களால் பகிரப்படும் தவறான தகவல்கள் இன்னும் பெரிய குழப்பத்தை உருவாக்குகின்றன. குழப்பத்தை நாடு முழுவதற்கும் பரப்பி விடுகின்றன. தவறான செய்திகளால், தவறான தலைவர்களால் தூண்டப்பட்டவர்கள் மும்பையில் வன்முறையில் இறங்கி, உயிர்கள் பலியாயின. கும்பல் மனநிலைத் தைரியத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் பலர் சிறையில் இருக்கிறார்கள்.

இது ஒருபக்கம் என்றால், ''ஆர்ப்பாட்டக்காரர்கள் பாகிஸ்தான் கொடியை ஏந்தியிருக்கிறார்கள், இவர்களை பாகிஸ்தானுக்கு விரட்டுங்கள்'' என்று பேஸ்புக் நண்பர் ஒருவர் ஒரு படத்தை பதிவேற்றியிருந்தார். இந்துக்களின் கொடிகள் காவி நிறத்தில் இருப்பது போல இஸ்லாமியர்களின் கொடிகள் பச்சை நிறத்தில் இருக்கும். இஸ்லாமியர்களின் சின்னம் பிறையும் நடசத்திரமும். அதற்காக பச்சையும் பிறை-நட்சத்திரமும் இருப்பதாலேயே அது பாகிஸ்தான் கொடியாக இருக்க வேண்டியதில்லை. இந்திய முஸ்லீம் லீக் கொடியும்கூட பச்சையும் பிறை-நட்சத்திரமும்தான். விவரத்தை சரிபார்க்காமல் தேசபக்தி பொங்கியெழ அவசரகதியில் வெளியிட்டு விட்டார்.

பர்மாவில் முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டதாக ஒரு படத்தை இஸ்லாமிய நண்பர்கள் உள்பட சிலர் பேஸ்புக்கில் பகிர்ந்திருந்தனர். அந்தப்படம் சீனத்தில் நிலநடுக்கத்தில் இறந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதில் ஈடுபட்டிருந்த திபேத்திய லாமாக்களின் படம். சிந்தனைக்கு இடம் தராமல் உணர்ச்சிவசப்பட்ட பலர் உண்மையை சரிபார்க்காமல் சட்டென்று பகிர்ந்து விட்டனர்.

நம் ஒற்றைச் சொடுக்கல் எவ்வளவு குழப்பத்தை ஏற்படுத்த முடிகிறது என்பது இணையத்தின் ஆற்றல்களில் ஒன்று என்பதுதான் முரண்நகை.

(மேலே குறிப்பிட்ட படங்கள் எல்லாம் இப்போதும் வலையுலகில் உள்ளன என்றாலும் அவற்றில் எதையும் இங்கே சேர்க்க விருப்பம் இல்லை எனக்கு)

ரம்ஜான் நாளுக்கு முன்தினம் இரவு பதினோரு மணிக்கு ஒருவர் தொலைபேசினார். இரவு இரண்டு மணிக்கு மற்றொருவர் தொலைபேசி, மருதாணி போட்டதால் ஹைதராபாதில் ஐந்து பேர் செத்துப் போனார்கள், பெங்களூரில் இரண்டு பேர் இறந்து விட்டார்கள், பலர் மருத்துவமனையில் இருக்கிறார்கள்... என விளக்கி, குழந்தைகளை மருதாணி போட வேண்டாம் என்று அறிவுறுத்தினார். இது வதந்தி என்று அவரிடம் விவாதித்துப் பயனில்லை என்பதால் சரி சரி என்று விட்டு விட்டேன். இணையத்தில் தேடியதில் 2008 வாக்கில் ஜார்க்கண்டில் இதேபோல வதந்தி பரவியது என அறிந்தேன். இதே வதந்தி இந்த ஆண்டு தெற்கே புதுப்பிக்கப்பட்டது.

அண்மைப் பயணத்தில் தெரிய வந்தது - மருதாணி போட வேண்டாம் என்ற எச்சரிக்கையை ஒவ்வொரு ஊரின் பள்ளிவாசல்களிலும் ஒலிபெருக்கி வழியே இரவில் எச்சரித்திருக்கிறார்கள். உறவினர் வீட்டில் ஒரு குழந்தை மருதாணி போட்டு நான்கு மணிநேரம் கழித்து அதை நீக்கி ஒரு மணிநேரம் ஆன பிறகு இந்த எச்சரிக்கை வந்திருக்கிறது. என்ன செய்வது. தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை எழுப்பி கைகளை கழுவு கழுவு என்று கழுவியிருக்கிறார்கள் !!

மருதாணி இலைகளை நாமே அரைத்து இட்டுக்கொண்டால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் மாறிவிட்ட உலகத்தில், நம் வீடுகளில் எல்லாருமே ரெடிமேடாக தயாரித்து வைத்திருக்கும் மருதாணி கோன்களை வாங்குகிறோம். நன்றாக சிவக்க வேண்டும் என்பதற்காக அதில் ஏதோ ரசாயனம் சேர்க்கப்படுகிறது. அந்த இராசயனம் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அப்படிப்பட்டவர்களுக்கு கையில் எரிச்சலும், சிலருக்கு கடுமையான கொப்புளங்களும் ஏற்படக்கூடும். என் சின்ன மகள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவள் என்பது அனுபவத்தில் கிடைத்த மோசமான பாடம்.

பேஸ்புக்கில் படங்களையும் செய்திகளையும் பகிர்பவர்கள், தேசபக்தி-சேவைபக்தி-நோய் எச்சரிப்பு போன்ற பிரச்சார மின்னஞ்சல்களை மற்றவர்களுக்கு பரிந்துரை செய்பவர்கள், உலகமகாமுக்கியமான சேதிகளை குறுஞ்சேதிகளாக அனுப்புவோருக்கு ஒரு வேண்டுகோள் - ஏதொன்றையும் பகிரும்முன் சேதி உண்மையா என்று தயவுசெய்து சரிபாருங்கள். இணைய உலகில் இதற்கான வசதி ஏராளம். குறிப்பிட்ட ஒரு சேதி மிக அவசியமானதா, அதனால் சாதி-மத-இன-அரசியல்சார்பு பேதங்களின்றி அனைவருக்கும் பயன் கிடைக்குமா, அந்தச் சேதி நாகரிகமானதா, அதைப் பகிர்வதால் என் கண்ணியம் மாசுபடும் ஆபத்து இருக்கிறதா, ஏற்கெனவே பிளவுபட்டுக்கொண்டிருக்கும் சமூகத்தை இது இன்னும் பிளவுபடுத்துமா, பார்ப்பவர் அல்லது படிப்பவரின் மனதில் மகிழ்ச்சியை அல்லது நெகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடியதா என்று யோசியுங்கள், சரிபாருங்கள், பிறகு அனுப்புங்கள்.

* * *
கூடங்குளத்திலிருந்து ஜெய்தாபூர்...
கூடங்குளம் போராட்டம் வலுத்து வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக அகிம்சைப் போராட்டம் நடத்தி வந்தவர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்த முனைந்தபோது தடியடியும், கண்ணீர்ப்புகை குண்டுவீச்சும், துப்பாக்கி சூடும் நடந்து ஒருவர் உயிரிழந்தது வருத்தத்துக்கு உரியது. முற்றுகைப் போராட்டம் என்பதால், அரசு வன்முறைக்கு நியாயம் கற்பிக்க வாய்ப்பாகி விட்டது.

அரசுதான் அப்படி என்றால் தமிழ்ப் பத்திரிகைகளும் பெரும்பாலான தொலைக்காட்சிகளும் போராளிகள் வன்முறையில் இறங்கியதால்... என்று தயங்காமல் எழுதிவிட்டன. காவல்துறை பத்திரிகையாளர்களை தாக்கியது, காமிராக்களை சேதப்படுத்தியது, கடலில் எறிந்தது, கடலில் விழுந்த ஒரு பத்திரிகையாளரை போராட்டக்காரர்கள்தான் காப்பாற்றினர் என்றாலும் போராளிகளின்மீதுதான் வன்முறைக் குற்றச்சாட்டு அதே ஊடகத்துறைகளால் சுமத்தப்படுவதை என்னவென்று சொல்ல. நிச்சயம் இது காலத்தின் கட்டாயம் அல்ல, ஊடகங்கள் யார் பக்கம் நிற்கின்றன என்பதன் வெளிப்பாடு.

இடிந்தகரை மக்கள் விதவிதமான போராட்டங்களில் இறங்கி விட்டனர். கழுத்தளவு நீரில் கடலில் நிற்பது, மணலில் கழுத்தளவு வரை புதைத்துக்கொள்வது என போராட்டம் தொடர்கிறது. படைப்பாளர்களும் எழுத்தாளர்களும் செயல்பாட்டாளர்களும் கையெழுத்து இயக்கம் துவங்கியிருக்கிறார்கள். - http://www.facebook.com/kavinnnn/posts/4642934074632

கூடங்குளத்தில் அரசு இன்னும் பிடிவாதமாகவே இருக்கும். மக்களின் போராட்டம் தோல்வி அடையும் என்று நான் கூற விரும்பவில்லை. ஆனால் அரசு சகலவழிமுறைகளையும் பயன்படுத்தி அடக்கவே முனையும். இதற்குக் காரணமாக எனக்குப்படுவது கூடங்குளம் மட்டுமல்ல. கூடங்குளப் போராட்டக்காரர்கள் வெற்றி பெற்றுவிட்டால் ஜெய்தாபூர் மக்களும் வலிமை பெற்று விடுவார்கள், ஏற்கெனவே ஜெய்தாபூர் உலைக்கு எதிராக பெரும்பாலான எதிர்க்கட்சிகள் சேர்ந்து விட்டதால், கூடங்குளத்தை எப்படியாவது நடத்தியே தீரவேண்டும் என அரசு பிடிவாதமாகவே இருக்கும்.

எனவே, இந்தப் போராட்டத்தை கூடங்குளத்தோடு மட்டும் நிறுத்தாமல் ஜெய்தாபூர் பிரச்சினையையும், இதர எதிர்கால அணுஉலைப் பிரச்சினைகளையும் சேர்த்துக்கொள்வது அவசியம். ஒருவேளை அரசு தன் பிடிவாதத்தில் வெற்றி கண்டுவிட்டால் ஜெய்தாபூரிலும் அதே வெற்றி கிடைக்காமல் செய்ய இது அவசியம்.

கொசுறாக ஒரு செய்தி. பிரான்ஸ் அணுமின்சாரத்தை படிப்படியாகக் குறைத்துக்கொள்ள திட்டமிட்டிருக்கிறது. ஜப்பானும் பரிசீலித்து வருகிறது என்று நாம் கூறியபோது அதை இல்லை என்று பலர் மறுத்தார்கள்.
சனிக்கிழமை இந்து நாளிதழில் ஒரு செய்தி - http://www.thehindu.com/opinion/op-ed/article3897913.ece முப்பது ஆண்டுகளில் அணுஉலைகள் அனைத்தையும் மூடுவது, மாற்று ஆற்றலில் கவனம் செலுத்துவது என ஜப்பான் முடிவு செய்திருக்கிறது.

* * *

ஊழல் குற்றச்சாட்டுகள் என்னும் புதைசேற்றில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்த காங்கிரஸ் அரசுக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிந்தது பெரிய ஆசுவாசம். முடிந்ததுமே பெட்ரோல்-டீசல் விலை உயர்வும், சமையல் எரிவாயு ஆண்டுக்கு ஆறு என்ற கட்டுப்பாட்டையும் விதித்து விட்டது. 

இந்த ஆலோசனையை முன்வைத்தவர்களின் கணக்குப்படி, ஒரு சிலிண்டர் சராசரிக் குடும்பத்துக்கு 45 முதல் 60 நாட்கள் வரை பயன்படுகிறதாம். எனவே ஆண்டுக்கு ஆறு போதுமாம். மிகச் சிக்கனமாக வாழ்க்கை நடத்தும் 4 பேர் கொண்ட என் வீட்டிலேயே ஒரு சிலிண்டர் 30-35 நாட்களுக்கு மேல் வருவதில்லை. இவர்கள் இந்தக் கணக்கை எப்படி எட்டினார்கள் என்பதில் மிகவும் வியப்பு எனக்கு. மைய அரசின் கூட்டணியில் முக்கிய இடம் பெற்றிருக்கிற மம்தா வழக்கம்போல ஆதரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இன்னொரு முறை அறிவித்து விட்டு சிந்தனையில் மூழ்கி விட்டார். ஊழலில் காங்கிரசுக்கு சோடை போகாத திமுக, அடுத்த அமைச்சரவை மாற்றத்தில் தனக்கு ஏதாவது கிடைக்குமா என்று வாய் பிளந்து கொண்டிருப்பதால் இந்த அநியாய விலையேற்றத்துக்கு எதிராகப் பேச முடியவில்லை. ஆக, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஆண்டுக்கு குறைந்தது 2000 ரூபாய் செலவு அதிகரிக்கப்போகிறது. அல்லது கேசை மிச்சப்படுத்த மின்அடுப்புகள் பயன்படுத்தி மின் கட்டண செலவு அதிகரிக்கப்போகிறது.

இதைவிடக்கொடுமை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகை. சாதாரண நுகர்வோருக்கு ஒரு சிலிண்டருக்கும் மற்றொரு சிலிண்டருக்கும் இடையை 21 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும். ஆனால் அமைச்சர்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெரும்புள்ளிகளும் வாங்கிய சிலிண்டர்களின் எண்ணிக்கை மலைக்க வைக்கிறது. உதாரணமாக -
Vice President Hamid Ansari's official residence in New Delhi - 171 cylinders
BJP leader Rajnath Singh consumed 80 cylinders
Suresh Kalmadi of Congress got 63 refills in the year
Minister of State for External Affairs Preneet Kaur used up 161 cylinders
Coalgate-fame Naveen Jindal's house received 369 refills
பட்டியல் நீளமானது. - mega consumers
இதுஒரு பக்கம் இருக்க, இந்த 6 சிலிண்டர் கட்டுப்பாடு சாதாரண மக்களுக்குத்தானாம். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையில்லை என்று இந்த ஆலோசனையை முன்வைத்த குழு கருதியிருக்கிறதாம். பத்திரிகைச் செய்தி தெரிவிக்கிறது.
என்னே அரசு! என்னே ஜனநாயகம்!

* * *

தில்லித் தமிழ்ச் சங்கத்தில் அனைத்திந்தியத் தமிழ்ச் சங்கங்களின் மாநாடு என்று ஒரு மாநாடு 15-16 தேதிகளில் நடந்தது. மாநாடு எதற்காக என்பது குறித்து எனக்கு ஒரு ஐயம் இருக்கிறது. என் ஐயம் உண்மையாகிறதா என்று அறியக் காத்திருக்கிறேன்.

மாநாட்டின் ஒரு சிறப்பம்சம் இலக்கியக் கருத்தரங்கம். தமிழண்ணல் தலைமையில் ஆறுபேரின் அருமையான உரைகள். இது குறித்து தனியாக ஒரு பதிவு எழுத ஆசை.

4 comments:

  1. நன்றி சச்சிதானந்தன் ஐயா.
    படித் தேன் என்று பாராட்டிய குட்டிபிசாசுக்கு நன்றி.

    ReplyDelete
  2. முன்பெல்லாம் ஒரு தபால் கார்டில் திருப்பதி வெங்கடாஜலபதி மகிமை, நாகூர் தர்காவில் அதிசயம் இதை மேலும் 10 பேருக்கு அனுப்பவும் என்பன போன்ற பல செய்திகள் வரும். இப்பொழுது பெரும்பாலான முகநூல் செய்திகள் இது போலவே இருக்கிறது. எவ்வளவு வி்ரைவில் செய்திகள் பரவுகின்றனவே அதைவிட 10 மடங்கு விரைவில் வதந்’தீ’கள் பரவுகின்றன. நல்ல அலசல்.

    ReplyDelete