Tuesday, 13 November 2012

கதம்பம் 3

இன்னுமொரு தீபாவளி
இதே தலைப்பில் ஏற்கெனவே ஒரு பதிவை படித்தது போலத் தெரிகிறதே என்று யோசிக்கும் நண்பர்களே... புதிதாக வேறு எந்த மாற்றமும் வந்துவிடவில்லை என்பதால் (இன்னுமொரு தீபாவளி) அதையே படிக்கலாம். கொசுறாக சில செய்திகள்.

இந்த ஆண்டு பட்டாசுச்சத்தம் மிகமிகக் குறைவு. எந்தவொரு விஷயத்தையும் அது சிறப்பு, இது பெரிது, இது குறைவு என்று கூறும்போது நம் மனம் பின்னணியில் ஒப்பீடு ஒன்றைச்செய்த பிறகுதானே நமக்குத் தெரிவிக்கிறது. நானும் அதைத்தான் கூறுகிறேன். 1991இல் நான் தில்லிக்கு வந்த காலத்தில் இருந்ததில் கால்பங்குகூட இல்லை என்று நிச்சயம் கூறலாம். கடந்த ஆண்டில் இருந்ததில் பாதி அளவுக்கு இருக்கும் என்று தோன்றுகிறது. வரவேற்கத்தக்க இந்த மாற்றத்துக்கு இப்போதும் விலைவாசி உயர்வே காரணமாக இருக்கும் என்று தோன்றுகிறது. 


முகநூலில் இப்படி ஒரு வாழ்த்து எழுதினேன் -
            Wish you all a happy Diwali.
            Celebrate this festival of light by caring the unfortunate ones.
            Experience the joy of sharing by lighting their hopes.
இந்த ஆண்டு முந்தைய தீபாவளிகளைவிட ஏராளமான தின்பண்டங்கள் வந்து குவிந்ததற்கு இது காரணமாக இருக்காது என்றே நம்புகிறேன். வந்ததில் நாங்களும் தந்தது போக இருக்கிற டப்பாக்களில் அடைத்து வைத்திருக்கிற தீனி இன்னும் ஒருவாரத்துக்குக் காணும். நட்புக்கு வணக்கம்.

* * *

யார் அது...?
அதிகம் விளம்பரப்படுத்தப்படாத என் வலைப்பூவுக்கு வருகை தரும் நண்பர்களுக்கு நன்றி. என் பதிவுகள் உங்களுக்கு விருப்பமானவையாக இருந்திருக்கும் - இல்லாவிடினும் வெறுப்பூட்டுவதாக இருந்திருக்காது என நம்புகிறேன்.

கூகுளில் புதியவன் என்று தேடி சிலர் வந்தடைகிறார்கள், சரி. வேறு சிலர் இருக்கிறார்கள் - ஒருவர் " கண்காட்சி நடைபெறும் " என்று கூகுளில் தேடியே வந்து கொண்டிருக்கிறார். மற்றொருவர் ஒவ்வொருமுறையும்  " வரவேற்புரை கவிதை " என்று தேடியே வந்து சேர்கிறார். இது ஏன் என்றுதான் புரியவில்லை.

வலைப்பூவுக்கு வருகை தந்தவர்கள் யார் என்று பார்க்கும்போது ரஷ்யாவிலிருந்தும் உக்ரைனிலிருந்தும் சிலர் தொடர்ந்து - தினமும் படித்து வருகிறார்கள் என அறிகிறேன். ஜெர்மனி, போலந்து, லண்டன், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளிலிருந்து தொடர்ந்து பார்வையிடுபவர்கள் யார் என்பதை கொஞ்சம் ஊகிக்க முடிகிறது. ரஷ்யாவிலிருந்து பார்வையிடும் நண்பர்(கள்) யார் என்பதுதான் புரியவில்லை. அறிமுகம் செய்து கொண்டால் எனக்கு திருப்தியாக - மகிழ்ச்சியாக இருக்கும்.

* * *

ஆதம் குன்று
வீட்டில் வாக்காளர் அட்டையைத் தேடிக் குடையும்போது பான் கார்டு கிடைப்பதில்லையா.... எப்போதோ யார் யாரோ கொடுத்துவைத்த விசிட்டிங் கார்டுகள் கிடைப்பதில்லையா... அவர்களின் முகம் எப்படியிருக்கும் என்று கொஞ்சநேரம் குழம்ப வைக்கும் இல்லையா. அப்படித்தான் நிகழ்ந்தது அண்மையில் இணையத்தில் ஒரு விஷயத்தைத் தேடியபோது.

இலங்கைச் சிறுகதை ஒன்றில், . . . . . . . . . . (என்ற நபர்) புகழின் உச்சியை அடைந்தார் என்று தமிழில் மொழிபெயர்த்திருந்தார் ஒருவர். வாக்கியம் பொருந்தவில்லையே என்று ஆங்கிலத்தை சரிபார்த்தபோது ஆதம்ஸ் பீக் என்று இருந்தது. அட, ஆதம்ஸ் பீக் என்பதற்கு புகழின் உச்சி என்றுகூடப் பொருள் உண்டா என்று வியந்துபோய் சரிபார்க்கப் புகுந்தேன். அப்போது தெரிந்தது - இலங்கையில் இருக்கிற ஆதம் குன்று அது என்று. 


உலகில் நான்கு மதங்களுக்குப் புனிதமான மலை இது ஒன்றுதான் என்று தோன்றுகிறது. ஆதம்ஸ் பீக் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் சிவனொளி பாதமலை என்னும் மலை, இந்துக்கள், முஸ்லீம்கள், பௌத்தர்கள், கிறித்துவர்கள் ஆகிய நான்கு சமூகத்தினருக்கும் புனிதமான மலையாம். அங்கே இருக்கிற பாதக் குறியை நான்கு சமூகத்தினரும் தமது நம்பிக்கைகளுக்கேற்ப தமது மதத்துக்குச் சொந்தமான பாதக்குறி என்று வழிபடுகின்றனர்.


இறைவனால் அனுப்பப்பட்ட ஆதம் நபியின் பாதக்குறி என்று இஸ்லாமியர்கள் கருதுவதால் அவர்களுக்கு இதுவும் ஒரு புனிதத்தலம்.
சிவதாண்டவத்தில் கால் பதித்த சிவனின் காலடி என்று இந்துக்கள் கருதுவதால் இது இந்துக்களின் பூஜைத்தலம்.
புத்தரின் காலடி என்று நம்புவதால் பௌத்தர்களின் புண்ணியத்தலம்.
கிறுத்துவர்களின் ஈடன் தோட்டம் என்பதாலும், ஆதிமனிதன் ஆதாம் அவர்களுக்கும் உரியவர் என்பதாலும் மட்டுமல்ல, புனித தாமசின் காலடி அது என்று போர்த்துகீசிய கிறித்துவர்கள் நம்புவதாலும் இது கிறித்துவர்களுக்கும் புனிதத்தலம்.
எது எப்படியோ, நான்கு மதத்தினரும் உரிமை கோரி மோதிக்கொள்ளாமல் அவரவர் முறைப்படி போற்றிக்கொள்கிறார்கள் என்ற வகையில் மகிழ்ச்சி.

(சிறுகதையில் குறிப்பிடப்பட்ட நபர், ஒருகாலத்தில் ஏறுவதற்குக் கடினமான ஆதம் மலையின் உச்சிக்கு ஏறுகிற அளவுக்கு வலிமையானவராக இருந்தவர் என்பதுதான் மூலக் கதையில் கூறவந்த கருத்து என்பது வேறு விஷயம்.)

* * *

சிறகுக்கு கைகொடுப்போம்
யாரோ ஒரு நண்பர் முகநூல் பக்கத்தில் சுயம் என்றொரு தொண்டு நிறுவனம் பற்றிய செய்தியைப் பகிர்ந்திருந்தார். இணையத்தில் தேடி அந்த நிறுவனம் மேற்கொண்டுவரும் பணிகளைப் பற்றி அறிந்தேன். நான் புரிந்துகொண்டவரை சிறப்பான சேவை செய்வதாகத் தோன்றியது. அந்த அமைப்புக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்துவிட்டேன். நீங்களும் என்னைப்போலவே உதவி செய்ய விரும்பலாம் அல்லவா...  அதற்காக விவரங்கள் கீழே.

சுயம் - http://www.suyam.org
வங்கி விவரங்கள் 
Name of the Account : Suyam Charitable Trust
Nature of the Account : Savings Bank Account
Account Number : 603101272441 
Bank : ICICI Bank, Sowcarpet Branch
IFSC/NEFT Code : ICIC0006031
மேலதிக தகவலுக்கு - http://www.suyam.org/donatenow.htm

* * *

தமிழில் தட்டச்ச
ஏற்கெனவே சில தட்டச்சுக் கருவிகள் இணையத்தில் இருந்தாலும், கூகுளும் இப்போது தட்டச்சுக் கருவிகளை உருவாக்கியுள்ளது. ஏற்கெனவே இந்த வசதி http://www.google.co.in/transliterate என்ற பக்கத்தில் இருக்கிறது. ஆனால் இணைய இணைப்பு இருந்தால் மட்டுமே இதில் தட்டச்ச முடியும். இப்போது உருவாக்கியிருக்கும் கருவியை பதிவிறக்கி கணினியில் நிறுவிக்கொள்ளலாம், இணைய இணைப்பு இல்லாமலே பயன்படுத்தலாம் என்பது இதன் சிறப்பு. முக்கியமான இந்திய மொழிகள் அனைத்துக்கும் கருவிகள் இங்கே கிடைக்கின்றன. 

* * *

தேவி... ஸ்ரீதேவி...
இங்கிலிஷ் விங்கிலிஷ் திரைப்படம் பற்றி நண்பர் சந்துரு எழுதியது சொல்வனம் இதழில் வந்திருக்கிறது. நானும் பார்த்த அந்தத் திரைப்படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது ஒரு விஷயம்.

படத்தைப் பார்த்ததும் எனக்கும் ( ! ) கூட இதைப்பற்றி ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்று தோன்றியது. நேரமின்மை தடையாய் இருந்தது ஒருபுறம் இருக்க, அதை நன்றாகவே செய்வதற்கு நிறையப்பேர் இருக்கிறார்கள் நாம் எதற்கு என்று விட்டுவிட்டேன். இருந்தாலும் நம்ம ஸ்ரீதேவி இல்லையா... எத்தனை வருசமாச்சு அவரைப் பாத்து...! கட்டுரை எழுதியிருந்தால் ஸ்ரீதேவி நடிப்பைப் பாராட்டியே என் கட்டுரை அமைந்திருக்கும். குறிப்பாக அது ஸ்ரீதேவியின் பலவிதமான பாவங்கள். 

ஆங்கிலப்பள்ளிக்குச் செல்லும்போதும் திரும்பும்போதும் காட்டும் பாவங்கள். முதல்முதலாக ஆங்கில வகுப்புக்குச் செல்லும்போது காட்டும் தயக்கம், வெளிவந்து நடக்கும்போது அச்சம், அடுத்து கொஞ்சம் தைரியம், அதற்குப்பிறகு இன்னும் கொஞ்சம் தைரியம், பிறகு அபார தன்னம்பிக்கையுடன்கூடிய நடை, காதல் வெளிப்படுத்தப்பட்ட பிறகு முகத்தில் குழப்பமும் கலக்கமுமான நடை. 



இயக்குநர் இதை எதிர்பார்த்தார் என்றால், அதை அருமையாக வெளிப்படுத்தியிருக்கிறார் ஸ்ரீதேவி. எத்தனைபேர் இதைக் கவனித்து ரசித்தார்கள் அல்லது புரிந்து கொண்டார்கள் என்று தெரியாது. ஆனால் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. மேலே இருக்கும் படங்களில் இது சற்றே வெளிப்படுவதை உணர முடியும் என்று நம்புகிறேன்.

ஒரு ரகசிய வேண்டுகோள் : படத்தில் மனைவியை கிண்டல் செய்து கொண்டே இருக்கும் ஸ்ரீதேவியின் கணவருக்கும், இதைப்படிக்கும் பெரும்பாலான கணவர்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்பதை யாரும் வெளியே சொல்லி விடாதீர்கள்.

Friday, 2 November 2012

முதல் ஆசிரியை



பதினாறு ஆண்டுகளுக்கு முன் பதிப்பக வேலையிலிருந்து விலகி, கணினியில் புத்தகங்களை வடிவமைக்கும் தொழிலை நிறுவிய நேரம். நான் கணினியை வாங்கியிருந்தேனே தவிர அதற்குமுன் கணினியைத் தொட்டதே இல்லை. முன்னர் வேலை செய்த நிறுவனத்தில் எனக்குக் கீழே இருந்தவர்கள் கணினியில் வேலை செய்வார்கள், அவர்களிடம் வேலை வாங்கியிருக்கிறேனே தவிர கணினியைத் தொட்டதில்லை. கம்ப்யூட்டரை ஏசி ரூமில்தான் வைக்கணும், ஏதாவது தப்பா கீ அமுக்கிட்டா எல்லாமே போயிடும் என்று ஆளாளுக்கு பயமுறுத்தியிருந்த காலம்.

386 சிஸ்டம், 4 எம்பி ராம், 260 எம்பி வன்தட்டு. விண்டோஸ் 3.0, பேஜ்மேக்கர் 4 என ஒற்றைக் கணினியுடன் ஆரம்பித்திருந்தேன். கோப்புகளை பிரதி எடுக்கவும் நீக்கவும் எம்எஸ்-டாஸ் சரளமாகப் பயன்படுத்திய காலம். எம்.எஸ். வேர்ட் உருவாகிக்கொண்டிருந்த காலம். ஆங்கிலத்தில் அடிக்க வேண்டியிருந்தால் டாஸ்-இல் அடித்துக்கொண்ட காலம். முடித்த வேலைகளை அவ்வப்போது பிளாப்பியில் சேமித்து வைத்துக்கொண்ட காலம். 

தில்லியின் இந்திரபுரியில் முதல்முதலாக அலுவலகம் அமைத்த காலம். அப்போது வேலைக்கான நேர்காணலுக்கு வந்தார் ஒருவர். ஐந்தடி உயரம், ஒல்லியான தேகம். நீள நீள விரல்கள். துணைக்கு அவருடைய கணவர்.

அவரிடம் தமிழில் சில பக்கங்களைக் கொடுத்து அடிக்கச் சொன்னேன். மெல்லிய விரல்கள் தட்டச்சுப்பலகையே அரங்கமாய் பாவித்து சுழன்று சுழன்று நடனமாடின. நான் வாங்கியிருந்த தமிழ் மென்பொருளும் கணினியும் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் அடித்து முடித்த அரை நிமிடம் கழித்தபிறகே ஒவ்வொரு எழுத்தாக திரையில் வந்தன. நியமனம் உறுதியானது. அவர் பெயர் மைதிலி. மைதிலி சங்கரன்.

அதற்குப் பின்னால் பதினைந்து ஆண்டுகளில் எத்தனையோ கணினிகள் வாங்கியாயிற்று. எத்தனையோ பேர் வேலைக்கு வந்தார்கள், போனார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் அங்கத்தினர் போலவும், வேலையில் உசாத்துணையாகவும் இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. நான் ஊருக்குப் போவதாக இருந்தாலும் கவலையில்லை. அவர் தனியாகவே கவனித்துக்கொள்வார். 

பள்ளிப்படிப்பு முடித்தபின் விடுமுறையில் இரண்டுமாதம் தட்டச்சு கற்க வேண்டும் என்ற நியதிப்படி நானும் ஒரு காலத்தில் கையில் பேப்பரை சுருளாக்கிக்கொண்டு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் சென்றவன்தான். அதற்குப்பின் முப்பது ஆண்டுகளில் எல்லாம் மறந்து போய்விட்டிருந்தது. அவரிடம்தான் நான் A S D F G F என்று தட்டச்சவும் கற்றேன். கணினியின் அரிச்சுவடியும் கற்றேன். தமிழ் டைப்ரைட்டிங் முறையில் அடிக்கவும் கற்றேன். கணினியில் என் முதல் ஆசிரியர் அவர்.

விண்டோஸ் 3.1, 3.1.1, .... XP என காலம் மாறியது. பேஜ் மேக்கர் 5.0, 6.0, 6.5, 7.0 என முன்னேறியது. வேலையின் ஊடாக இருவருமே மேலும் நிறையக் கற்றுக்கொண்டோம். இருவருமே இன்ஸ்கிரிப்ட் கீபோர்ட் கற்றுக்கொண்டோம். எம்.எஸ். வேர்டில் ஆட்டோகரெக்ட் வசதியைப் பயன்படுத்தி நீளமான சொற்களுக்கு பலவித குறுகிய குறியீடுகளை உருவாக்கி தட்டச்சை எளிதாக்கிக் கொள்வதில் அவர் திறமை அபாரம். நேரமும் தேவையும் இருந்ததால் நான் விரைவாக மேலும் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். "சார் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் ஆயிட்டேள்" என்று அவர் கிண்டல் செய்தது காதுகளில் ஒலிக்கிறது.


அவர் தட்டச்சு செய்யும் முறையே தனியாக இருக்கும். நாற்காலியில் சப்பணமிட்டு உட்காருவார். கையெழுத்துப் பிரதியைத்தான் பார்ப்பார், மானிட்டரை பார்க்கவே மாட்டார். ஒவ்வொரு பத்தி அல்லது பக்கம் அடித்து முடித்ததும் ஒரு கன்ட்ரோல் + எஸ். அப்புறம் மேலோட்டமாக கண்ணோட்டி பிழைகளை சரிசெய்வது, மீண்டும் ஒரு கன்ட்ரோல் + எஸ். அவர் தட்டச்சு செய்து முடித்த பல புத்தகங்கள் இன்னும் முடிக்கப்படாமல் என்னிடம் இருக்கின்றன. அந்தக் கோப்புகளைத் திறக்கும்போதெல்லாம் அவர் தட்டச்சு செய்த காட்சி கண்முன் விரிகிறது.

* * *
ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும்...
யாரு... ராகவனா... எப்படி இருக்கடா... மன்னி நன்னாருக்காளோன்னா... ஆத்துல மத்தவால்லாம்.... ஆமா நேத்து தலைக்கு ஊத்திண்டு நேரே ஆபீசுக்கு வந்துட்டேனோ, ஜலதோஷம் பிடிச்சுண்டுடுத்து... ஆரு அத்திம்பேரா... ஆஹா அவருக்கென்ன...

அடுத்து வேறொரு தொலைபேசி வரும்
யெஸ் சார். இல்லியே... போன் பிசியா இருந்துச்சு. சார்தானே, இருக்காரே. என்ன விஷயம்... அதெல்லாம் கரெக்‌ஷன் போட்டு ரெடியா இருக்கே. சரி, இன்னிக்கே பிரின்ட் எடுத்து வைக்கறேன்.

பிராமண பாஷைக்கும் சாதாரண மொழிக்கும் சட்டென மாறிக்கொள்ளும் திறன். 

* * *

- ஏன் சார், இந்த கவிஞருங்க எல்லாருமே ஒரே மாதிரிதான் இருப்பாங்களா...
- ஏன்... என்ன ஆச்சு... இப்படி மொட்டையாக் கேட்டா...
- ஆமா இனி கிராப்பு வைச்சு கேக்கணும்.... வேற ஒண்ணுமில்லே. செல்லம்மா அங்கங்கே கடன்வாங்கி அரிசி வாங்கி வச்சா இந்தாளு பாட்டுக்கு குருவிக்கும் காக்காய்க்கும் தூக்கிப்போட்டிருக்காரே... இந்த மனுசனுக்கு கொஞ்சமாச்சும் மண்டையில மசால் இருந்திருந்தா இப்பிடிச் செஞ்சிருப்பாரா...
இது பாரதி சுயசரிதை அடித்துக்கொண்டிருக்கும்போது நடந்தது.

* * *

- ஏன் சார்... திருவள்ளுவருக்கு ஒரு முன்னூறு வயசு இருந்திருக்குமா...
- ஏன் இப்படி ஒரு சந்தேகம்
- இல்லே... அப்பாவுக்கு வளவளன்னு நம்ம பாஷையில ஒரு லெட்டர் எழுதணும்னு ஆரம்பிச்சாலே முடிக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுது. இந்த மனுசன் சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் ஆராஞ்சு ஒரு விஷயம் பாக்கி வைக்காம அத்தனையையும் நுனுக்கி நுனுக்கி எழுதியிருக்காருன்னா எவ்வளவு அனுபவம் இருந்திருக்கணும்... எவ்வளவு யோசிச்சிருக்கணும்... 
இது திருக்குறள் வேலை நடந்து கொண்டிருந்தபோது.

* * *

- ஹை... . . . . . . . . . . . . . எழுதுன புக்கு வந்துடுச்சா... அப்பாடா கொஞ்ச நாளைக்கு மண்டையப் பிச்சுக்காம அடிக்கலாம்.
மணிமணியான எழுத்துகளில் மொழிபெயர்க்கும் ஒருவரின் கையெழுத்துப் பிரதி வந்ததும் கிடைக்கிற கமென்ட் இது.
- சுத்தம்... இவங்க விரல்களை ஒடிச்சு எழுதச் சொல்லிக்குடுக்கணும்....
என் நெருங்கிய நண்பர்கள் இருவரின் எழுத்தைப் பார்க்கும்போது வரும் கோபம்.
- ஏன் சார்... இந்த ஆளு எப்படி பொம்பளைங்க மனசுக்குள்ள ஓடறதை புகுந்து பாத்தாருன்னு தெரியணும்...
இது ஆதவன் சிறுகதைகள் அடிக்கும்போது.

* * *

எப்படி எல்லாரையும் அவரால் நட்பாக்கிக்கொள்ள முடிந்தது என்பது எனக்கு மிகப்பெரிய வியப்பளிக்கும் விஷயம். எனக்குத் தெரிந்தவர்கள், எங்கள் உறவினர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவருக்கும் தெரியும். என் பிறந்த நாளன்று முதல் வாழ்த்து அவரிடமிருந்துதான் வரும்.

ஒருநாள் கையில் பையுடன் வந்தார்.
- என்ன இது ?
- நேத்து மார்க்கெட்டுக்குப் போனே... டீ-சர்ட் வாங்கிட்டு வந்தே...
- யாருக்கு ?
- நம்ம ஜெயாவுக்கு...
- ஜெயாவா... ?
- அட நம்ம ஜெயகுமாருக்கு சார். அவருக்கு இன்னிக்கு பொறந்த நாளில்லே...!
ஜெயகுமார் திருநெல்வேலிக்காரர். தில்லிக்கு வந்தும் சரியாக வேலை அமையாமல் போனவர். என் குடும்பத்தில் ஒருவராக இருந்த மற்றொருவர். 

* * *

ஒவ்வொருவருடைய பிறந்த நாளையும் மணநாளையும் இதர முக்கிய நாட்களையும் நினைவு வைத்து, அன்று காலையில் முதல் காரியமாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவிக்கத் தவறாத குரல் அவருடையது.

... இன்னிக்குத்தா நா வேலையில சேந்த நாளு.
... இன்னிக்கு ஜெய்சங்கர் மேரேஜ் டே இல்லே ?
... இன்னிக்குத்தா நீங்க முனீர்க்காவுக்கு குடிவந்த நாளு.
... இன்னிக்கு உங்க அக்கா பொண்ணுக்கு கல்யாண நாளில்லே ?
... போன வருசம் இதே நாள்லதானே நாமெல்லாம் இண்டியா கேட் போனோம் ?

* * *

முதல் மகளுக்குப் பிறகு இரண்டாவதாக மகன் பிறந்த பிறகு உடல்நலம் குன்றியது. சர்க்கரை நோய் வந்தது. சிறுநீரகங்கள் இரண்டுமே பாதிக்கப்பட்டு விட்டன. இரண்டும் சராசரியாக ஐம்பது சதவிகிதம் வேலை செய்து வந்தன. அதனால் அதிகம் பிரச்சினை இல்லாமல் பத்திய உணவும் தைரியமும் கொடுத்த நம்பிக்கையில் தொடர்ந்து வேலை செய்து வந்தார்.

பிறகு சிக்கல் கொஞ்சம் அதிகமானபோது வீட்டில் கணினியை வைத்து வேலை செய்து வந்தார். மின்னஞ்சல் வசதி வந்தது இன்னும் வசதியாகிப்போனது. அவர் வீட்டிலேயே வேலை செய்து அனுப்பிக் கொண்டிருந்தார். 2010இல் சிக்கல்கள் அதிகமாயின. டயலிசிஸ் தொடர வேண்டியதாயிற்று. சங்கிலித்தொடர்போல பிரச்சினைகளும் அதிகமாயின. இருந்தாலும் 2010 ஆகஸ்ட் வரை வேலை செய்து கொண்டே இருந்தார்.

2010 அக்டோபர் இறுதி... எனக்கு ஊருக்குப்போக வேண்டியிருந்தது. செல்வதற்கு முன் தொலைபேசியில் தெரிவித்தேன். ஒருதடவை வீட்டுக்கு வந்துட்டுப் போங்களேன் சார் என்றார். இல்லம்மா... வேல நிறைஞ்சு கிடக்கு, ரோகிணிக்கு வந்தா ஒரு நாள் போயிடும். வந்ததும் வர்றேன் என்று கூறிவிட்டுச் சென்றேன்.

2010 நவம்பர் 1 - ஊரில் இருந்தவாறே வானொலிக்கு ஆட்டக்களம் நிகழ்ச்சிக்கு எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய கணவரின் தொலைபேசி அழைப்பு வந்தது. உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக. இதுபோல ஏற்கெனவே பல முறை மருத்துவமனைக்குச் சென்று சிரித்துக்கொண்டே திரும்பியவர் என்று தைரியம் கொடுத்தேன். அப்படியே இருக்கும் என்று நம்ப விரும்பினேன். ஆனால் அவர் நம்பிக்கைத்துரோகம் செய்து விட்டார்.

இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன அவர் மறைந்து.


எத்தனையோ தேதிகளை நினைவு வைத்திருந்த அவரே இப்போது தேதியாகி விட்டார். தேதியாய் நினைவுகளில் வாழ்கிறார் என் முதல் ஆசிரியை.