Friday, 2 November 2012

முதல் ஆசிரியைபதினாறு ஆண்டுகளுக்கு முன் பதிப்பக வேலையிலிருந்து விலகி, கணினியில் புத்தகங்களை வடிவமைக்கும் தொழிலை நிறுவிய நேரம். நான் கணினியை வாங்கியிருந்தேனே தவிர அதற்குமுன் கணினியைத் தொட்டதே இல்லை. முன்னர் வேலை செய்த நிறுவனத்தில் எனக்குக் கீழே இருந்தவர்கள் கணினியில் வேலை செய்வார்கள், அவர்களிடம் வேலை வாங்கியிருக்கிறேனே தவிர கணினியைத் தொட்டதில்லை. கம்ப்யூட்டரை ஏசி ரூமில்தான் வைக்கணும், ஏதாவது தப்பா கீ அமுக்கிட்டா எல்லாமே போயிடும் என்று ஆளாளுக்கு பயமுறுத்தியிருந்த காலம்.

386 சிஸ்டம், 4 எம்பி ராம், 260 எம்பி வன்தட்டு. விண்டோஸ் 3.0, பேஜ்மேக்கர் 4 என ஒற்றைக் கணினியுடன் ஆரம்பித்திருந்தேன். கோப்புகளை பிரதி எடுக்கவும் நீக்கவும் எம்எஸ்-டாஸ் சரளமாகப் பயன்படுத்திய காலம். எம்.எஸ். வேர்ட் உருவாகிக்கொண்டிருந்த காலம். ஆங்கிலத்தில் அடிக்க வேண்டியிருந்தால் டாஸ்-இல் அடித்துக்கொண்ட காலம். முடித்த வேலைகளை அவ்வப்போது பிளாப்பியில் சேமித்து வைத்துக்கொண்ட காலம். 

தில்லியின் இந்திரபுரியில் முதல்முதலாக அலுவலகம் அமைத்த காலம். அப்போது வேலைக்கான நேர்காணலுக்கு வந்தார் ஒருவர். ஐந்தடி உயரம், ஒல்லியான தேகம். நீள நீள விரல்கள். துணைக்கு அவருடைய கணவர்.

அவரிடம் தமிழில் சில பக்கங்களைக் கொடுத்து அடிக்கச் சொன்னேன். மெல்லிய விரல்கள் தட்டச்சுப்பலகையே அரங்கமாய் பாவித்து சுழன்று சுழன்று நடனமாடின. நான் வாங்கியிருந்த தமிழ் மென்பொருளும் கணினியும் அவருடைய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர் அடித்து முடித்த அரை நிமிடம் கழித்தபிறகே ஒவ்வொரு எழுத்தாக திரையில் வந்தன. நியமனம் உறுதியானது. அவர் பெயர் மைதிலி. மைதிலி சங்கரன்.

அதற்குப் பின்னால் பதினைந்து ஆண்டுகளில் எத்தனையோ கணினிகள் வாங்கியாயிற்று. எத்தனையோ பேர் வேலைக்கு வந்தார்கள், போனார்கள். ஆனால் எங்கள் குடும்பத்தில் அங்கத்தினர் போலவும், வேலையில் உசாத்துணையாகவும் இருந்தவர் அவர் ஒருவர் மட்டுமே. நான் ஊருக்குப் போவதாக இருந்தாலும் கவலையில்லை. அவர் தனியாகவே கவனித்துக்கொள்வார். 

பள்ளிப்படிப்பு முடித்தபின் விடுமுறையில் இரண்டுமாதம் தட்டச்சு கற்க வேண்டும் என்ற நியதிப்படி நானும் ஒரு காலத்தில் கையில் பேப்பரை சுருளாக்கிக்கொண்டு டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட் சென்றவன்தான். அதற்குப்பின் முப்பது ஆண்டுகளில் எல்லாம் மறந்து போய்விட்டிருந்தது. அவரிடம்தான் நான் A S D F G F என்று தட்டச்சவும் கற்றேன். கணினியின் அரிச்சுவடியும் கற்றேன். தமிழ் டைப்ரைட்டிங் முறையில் அடிக்கவும் கற்றேன். கணினியில் என் முதல் ஆசிரியர் அவர்.

விண்டோஸ் 3.1, 3.1.1, .... XP என காலம் மாறியது. பேஜ் மேக்கர் 5.0, 6.0, 6.5, 7.0 என முன்னேறியது. வேலையின் ஊடாக இருவருமே மேலும் நிறையக் கற்றுக்கொண்டோம். இருவருமே இன்ஸ்கிரிப்ட் கீபோர்ட் கற்றுக்கொண்டோம். எம்.எஸ். வேர்டில் ஆட்டோகரெக்ட் வசதியைப் பயன்படுத்தி நீளமான சொற்களுக்கு பலவித குறுகிய குறியீடுகளை உருவாக்கி தட்டச்சை எளிதாக்கிக் கொள்வதில் அவர் திறமை அபாரம். நேரமும் தேவையும் இருந்ததால் நான் விரைவாக மேலும் பலவற்றைக் கற்றுக்கொண்டேன். "சார் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யன் ஆயிட்டேள்" என்று அவர் கிண்டல் செய்தது காதுகளில் ஒலிக்கிறது.


அவர் தட்டச்சு செய்யும் முறையே தனியாக இருக்கும். நாற்காலியில் சப்பணமிட்டு உட்காருவார். கையெழுத்துப் பிரதியைத்தான் பார்ப்பார், மானிட்டரை பார்க்கவே மாட்டார். ஒவ்வொரு பத்தி அல்லது பக்கம் அடித்து முடித்ததும் ஒரு கன்ட்ரோல் + எஸ். அப்புறம் மேலோட்டமாக கண்ணோட்டி பிழைகளை சரிசெய்வது, மீண்டும் ஒரு கன்ட்ரோல் + எஸ். அவர் தட்டச்சு செய்து முடித்த பல புத்தகங்கள் இன்னும் முடிக்கப்படாமல் என்னிடம் இருக்கின்றன. அந்தக் கோப்புகளைத் திறக்கும்போதெல்லாம் அவர் தட்டச்சு செய்த காட்சி கண்முன் விரிகிறது.

* * *
ஊரிலிருந்து தொலைபேசி அழைப்பு வரும்...
யாரு... ராகவனா... எப்படி இருக்கடா... மன்னி நன்னாருக்காளோன்னா... ஆத்துல மத்தவால்லாம்.... ஆமா நேத்து தலைக்கு ஊத்திண்டு நேரே ஆபீசுக்கு வந்துட்டேனோ, ஜலதோஷம் பிடிச்சுண்டுடுத்து... ஆரு அத்திம்பேரா... ஆஹா அவருக்கென்ன...

அடுத்து வேறொரு தொலைபேசி வரும்
யெஸ் சார். இல்லியே... போன் பிசியா இருந்துச்சு. சார்தானே, இருக்காரே. என்ன விஷயம்... அதெல்லாம் கரெக்‌ஷன் போட்டு ரெடியா இருக்கே. சரி, இன்னிக்கே பிரின்ட் எடுத்து வைக்கறேன்.

பிராமண பாஷைக்கும் சாதாரண மொழிக்கும் சட்டென மாறிக்கொள்ளும் திறன். 

* * *

- ஏன் சார், இந்த கவிஞருங்க எல்லாருமே ஒரே மாதிரிதான் இருப்பாங்களா...
- ஏன்... என்ன ஆச்சு... இப்படி மொட்டையாக் கேட்டா...
- ஆமா இனி கிராப்பு வைச்சு கேக்கணும்.... வேற ஒண்ணுமில்லே. செல்லம்மா அங்கங்கே கடன்வாங்கி அரிசி வாங்கி வச்சா இந்தாளு பாட்டுக்கு குருவிக்கும் காக்காய்க்கும் தூக்கிப்போட்டிருக்காரே... இந்த மனுசனுக்கு கொஞ்சமாச்சும் மண்டையில மசால் இருந்திருந்தா இப்பிடிச் செஞ்சிருப்பாரா...
இது பாரதி சுயசரிதை அடித்துக்கொண்டிருக்கும்போது நடந்தது.

* * *

- ஏன் சார்... திருவள்ளுவருக்கு ஒரு முன்னூறு வயசு இருந்திருக்குமா...
- ஏன் இப்படி ஒரு சந்தேகம்
- இல்லே... அப்பாவுக்கு வளவளன்னு நம்ம பாஷையில ஒரு லெட்டர் எழுதணும்னு ஆரம்பிச்சாலே முடிக்கறதுக்கு ஒரு மாசத்துக்கு மேல ஆயிடுது. இந்த மனுசன் சின்னச் சின்ன விஷயத்தை எல்லாம் ஆராஞ்சு ஒரு விஷயம் பாக்கி வைக்காம அத்தனையையும் நுனுக்கி நுனுக்கி எழுதியிருக்காருன்னா எவ்வளவு அனுபவம் இருந்திருக்கணும்... எவ்வளவு யோசிச்சிருக்கணும்... 
இது திருக்குறள் வேலை நடந்து கொண்டிருந்தபோது.

* * *

- ஹை... . . . . . . . . . . . . . எழுதுன புக்கு வந்துடுச்சா... அப்பாடா கொஞ்ச நாளைக்கு மண்டையப் பிச்சுக்காம அடிக்கலாம்.
மணிமணியான எழுத்துகளில் மொழிபெயர்க்கும் ஒருவரின் கையெழுத்துப் பிரதி வந்ததும் கிடைக்கிற கமென்ட் இது.
- சுத்தம்... இவங்க விரல்களை ஒடிச்சு எழுதச் சொல்லிக்குடுக்கணும்....
என் நெருங்கிய நண்பர்கள் இருவரின் எழுத்தைப் பார்க்கும்போது வரும் கோபம்.
- ஏன் சார்... இந்த ஆளு எப்படி பொம்பளைங்க மனசுக்குள்ள ஓடறதை புகுந்து பாத்தாருன்னு தெரியணும்...
இது ஆதவன் சிறுகதைகள் அடிக்கும்போது.

* * *

எப்படி எல்லாரையும் அவரால் நட்பாக்கிக்கொள்ள முடிந்தது என்பது எனக்கு மிகப்பெரிய வியப்பளிக்கும் விஷயம். எனக்குத் தெரிந்தவர்கள், எங்கள் உறவினர்கள், வாடிக்கையாளர்கள் அனைவரையும் அவருக்கும் தெரியும். என் பிறந்த நாளன்று முதல் வாழ்த்து அவரிடமிருந்துதான் வரும்.

ஒருநாள் கையில் பையுடன் வந்தார்.
- என்ன இது ?
- நேத்து மார்க்கெட்டுக்குப் போனே... டீ-சர்ட் வாங்கிட்டு வந்தே...
- யாருக்கு ?
- நம்ம ஜெயாவுக்கு...
- ஜெயாவா... ?
- அட நம்ம ஜெயகுமாருக்கு சார். அவருக்கு இன்னிக்கு பொறந்த நாளில்லே...!
ஜெயகுமார் திருநெல்வேலிக்காரர். தில்லிக்கு வந்தும் சரியாக வேலை அமையாமல் போனவர். என் குடும்பத்தில் ஒருவராக இருந்த மற்றொருவர். 

* * *

ஒவ்வொருவருடைய பிறந்த நாளையும் மணநாளையும் இதர முக்கிய நாட்களையும் நினைவு வைத்து, அன்று காலையில் முதல் காரியமாக தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவிக்கத் தவறாத குரல் அவருடையது.

... இன்னிக்குத்தா நா வேலையில சேந்த நாளு.
... இன்னிக்கு ஜெய்சங்கர் மேரேஜ் டே இல்லே ?
... இன்னிக்குத்தா நீங்க முனீர்க்காவுக்கு குடிவந்த நாளு.
... இன்னிக்கு உங்க அக்கா பொண்ணுக்கு கல்யாண நாளில்லே ?
... போன வருசம் இதே நாள்லதானே நாமெல்லாம் இண்டியா கேட் போனோம் ?

* * *

முதல் மகளுக்குப் பிறகு இரண்டாவதாக மகன் பிறந்த பிறகு உடல்நலம் குன்றியது. சர்க்கரை நோய் வந்தது. சிறுநீரகங்கள் இரண்டுமே பாதிக்கப்பட்டு விட்டன. இரண்டும் சராசரியாக ஐம்பது சதவிகிதம் வேலை செய்து வந்தன. அதனால் அதிகம் பிரச்சினை இல்லாமல் பத்திய உணவும் தைரியமும் கொடுத்த நம்பிக்கையில் தொடர்ந்து வேலை செய்து வந்தார்.

பிறகு சிக்கல் கொஞ்சம் அதிகமானபோது வீட்டில் கணினியை வைத்து வேலை செய்து வந்தார். மின்னஞ்சல் வசதி வந்தது இன்னும் வசதியாகிப்போனது. அவர் வீட்டிலேயே வேலை செய்து அனுப்பிக் கொண்டிருந்தார். 2010இல் சிக்கல்கள் அதிகமாயின. டயலிசிஸ் தொடர வேண்டியதாயிற்று. சங்கிலித்தொடர்போல பிரச்சினைகளும் அதிகமாயின. இருந்தாலும் 2010 ஆகஸ்ட் வரை வேலை செய்து கொண்டே இருந்தார்.

2010 அக்டோபர் இறுதி... எனக்கு ஊருக்குப்போக வேண்டியிருந்தது. செல்வதற்கு முன் தொலைபேசியில் தெரிவித்தேன். ஒருதடவை வீட்டுக்கு வந்துட்டுப் போங்களேன் சார் என்றார். இல்லம்மா... வேல நிறைஞ்சு கிடக்கு, ரோகிணிக்கு வந்தா ஒரு நாள் போயிடும். வந்ததும் வர்றேன் என்று கூறிவிட்டுச் சென்றேன்.

2010 நவம்பர் 1 - ஊரில் இருந்தவாறே வானொலிக்கு ஆட்டக்களம் நிகழ்ச்சிக்கு எழுதிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவருடைய கணவரின் தொலைபேசி அழைப்பு வந்தது. உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சேர்த்திருப்பதாக. இதுபோல ஏற்கெனவே பல முறை மருத்துவமனைக்குச் சென்று சிரித்துக்கொண்டே திரும்பியவர் என்று தைரியம் கொடுத்தேன். அப்படியே இருக்கும் என்று நம்ப விரும்பினேன். ஆனால் அவர் நம்பிக்கைத்துரோகம் செய்து விட்டார்.

இன்றோடு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டன அவர் மறைந்து.


எத்தனையோ தேதிகளை நினைவு வைத்திருந்த அவரே இப்போது தேதியாகி விட்டார். தேதியாய் நினைவுகளில் வாழ்கிறார் என் முதல் ஆசிரியை.

16 comments:

 1. உங்கள் முதல் ஆசிரியை - அவரது நினைவுகள் என்று மனதைத் தொட்ட பகிர்வு.

  சிலரின் நினைவுகள் மனதிலிருந்து அகலாது.

  ReplyDelete
 2. பொதுவாகத் தமது “பாஸ்”களைத்தான் பாராட்டி எழுதுவார்கள். முதல்முறை, தன்னிடம் வேலைபார்த்தவரைப் பற்றிப் பாராட்டி எழுதுவதைப் படிக்கிறேன்.

  அவர் இன்றில்லை என்று அறியும்போது வாசிப்பவர்களுக்கும் மனம் கனத்துப் போகின்றது.

  ReplyDelete
 3. நன்றி வெங்கட்.
  பதிவின் மனவோட்டத்தைப் புரிந்து கொண்டு கருத்துக் கூறியதற்கு நன்றி ஹுசைனம்மா. இது அவருக்குச் செலுத்திய அஞ்சலி. இருவரும் பரஸ்பரம் ஒருவர் மற்றவரிடமிருந்து கற்றவை நிறை. பதிவில் புரிந்திருக்கும் - அவர் வேலை பார்த்தவர் மட்டும் அல்ல, எங்கள் குடும்பத்தில் ஒருவராக இருந்தவர்.

  ReplyDelete
 4. நாக. வேணுகோபாலன்7 November 2012 at 22:15

  நானும் இப்படி பொறிதட்டுகின்ற பதில்களை அவரிடம் நேர்கொண்டிருக்கிறேன். சிலசமயங்களில் அசந்து போயிருக்கிறேன். கம்போசிடராக இருந்த, அதிலேயே கற்க ஆரம்பித்து சாகித்ய அகாதமி வரை வந்த ம.பொ.சி., ஞானபீடம் வரை வந்த ஜெயகாந்தன் என்றெல்லாம் சொல்லுவதை நம்ப முடிகிறது. அதிருக்கட்டும். அந்த உன்னதமான கையெழுத்துக்குரிய இருவரில் ஒருவர் நிச்சயம் நான்தானே...? எளிதாக மறக்க முடியாத சகோதரி மைதிலியின் நினைவுடன்.

  ReplyDelete
 5. சரியாகக் கேட்டீர்கள் வேணு ஐயா. ஒருவர் நீங்கள்தான், மற்றவர் தமிழர் அல்ல.

  ReplyDelete
 6. Great Sir. I have spent almost 1 hour to read all your posting in your blog. This is a tribute to Madam Mythili. I could understand the respect you have for her. Coming from Rohini to Delhi on Green line or white line, is not a easy job. Great . The way you narrated is also very nice. May god Bless
  Ram

  ReplyDelete
 7. உண்மையிலேயே அவரது நினைவுத்திறன் அபாரமானதுதான். ஜனகபுரியில் எனது தோழியின் அத்திம்பேர் வீட்டில் அவர் dtp வேலை செய்யும்போது ஒருமுறை என்னை பார்த்திருக்கிறார் என்று நினைக்கிறேன். பல்லாண்டுகளுக்கு பிறகு உங்கள் வீட்டில் பார்த்த கணமே நீங்கள் சுமதியின் தோழி சத்யா அல்லவா, எப்படியிருக்கிறீர்கள், என்னை நினைவிருக்கிறதா என்று கேட்டவர்! (சத்தியமாக நினைவில் இல்லை என்பது அவமானப்படவேண்டிய விஷயம்). உடல்நிலை சரியில்லை என்று தெரியும். ஆனால் மறைந்தே 2 ஆண்டுகள் ஆகி விட்டன என்று அறிந்ததும் மனம் கனத்து போனது.

  பி.கு : ஒருவர் அதில் மாமா என்பது படித்தவுடனே புரிந்து விட்டது.


  சத்யா அசோகன்

  ReplyDelete
 8. நன்றி ராம். தில்லியில் இருந்தவர் என்பதால் உங்களுக்குப் புரிந்தது. ஆனால் அவருக்கு காட் பிளஸ் பண்ணவில்லை. அல்லது இதுதான் அவர் பிளஸ் பண்ணும் முறையோ என்னவோ...
  நன்றி சத்யா. அவர் உங்களிடம் கேட்ட அன்று நானும் இருந்தேன். அந்தக் காட்சி இன்னும் கண்முன் இருக்கிறது. இப்படி எத்தனையோ காட்சிகள் கண்முன் திரைகளாய் விரிவதுதான் அவஸ்தை. அவ்வப்போது சில நினைவுநாட்களை கேட்டுத் தெரிந்து கொள்ள இல்லாதது இன்னொரு அவஸ்தை.

  ReplyDelete
 9. தெரியாத எங்களுக்கும் அவங்களை நேரில் பார்த்தது போல் அறிமுகம் செய்தது பதிவு..
  அஞ்சலிகள்..

  ReplyDelete
 10. இப்படியான பதிவு என்று தெரிந்திருந்தால் நாளைக்குப் படித்திருப்பேன். ஒரே நாளில் இரு கனமான விஷயங்களை (மற்றது சகோதரி நயீமுன்னிசா சேக் அவர்களைப் பற்றியது) எதிர்கொள்வது கடினம்.

  உங்கள் முதல் ஆசிரியை மைதிலி அவர்களைப் பற்றிய முழு ஆகிருதியும் படிப்பவர் மனதை அடைந்துவிடும் அற்புத நடை..

  ReplyDelete
 11. மஜீத், அதுதான் சொன்னேனே நம் உரையாடலில். என்னிடம் சோகக் கதைகள் நிறையவே இருக்கின்றன.

  ReplyDelete
 12. கலங்கி விட்டேன்.
  அவர்கள் ஆன்மா சாந்தியடையட்டும்.

  ReplyDelete
 13. நான் அவர் தங்களின் ஆரம்ப பள்ளி ஆசிரியராக இருக்குமென நினைத்தேன்.தன்னிடம் பணியாற்றிய ஒருவரை, கணினி தொடர்பான விவரங்களை அவர் சொல்லித் தர காரணமாக இருந்ததாலேயே , அவரை ஒரு ஆசிரியர் அந்தஸ்திற்கு உயர்த்தி வைத்துள்ளதில் இருந்து, தாங்கள் மட்டுமல்ல , திருமதி மைதிலி அவர்களும் கூட அண்ணாந்து பார்த்து வியக்கத்தக்க உயரத்தில் அமர்ந்து விட்டீர்கள் ! அவர் தனது பணியை கடனே என்றும் , கடமையாகவும் கூட இல்லாது, அவற்றையும் தாண்டி நேசித்து செய்துள்ளது பிரமிக்க செய்து விட்டது.

  ReplyDelete
 14. இருந்தாலும் நீங்க போய்ப் பார்த்திருக்கலாங்க.
  என்று காண்பீர் இனி?

  க.கதிரவன் கணேசன்

  ReplyDelete
 15. i was with her when she was slowly dying everday evening i used to go to her house and give counselling one evening when i went there she was not able to get up and in her bed she went latrine immediately i called my neighbour and cleaned she suffered a lot in her last stage
  pl give sent dharini's no
  devarajan

  ReplyDelete
 16. not only for u for me that the sudden demise of mrs mytheli i was with her when she was battling for life every evening afterreturning fro school i used to go to her house and talked to her

  ReplyDelete