Sunday, 14 April 2013

சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்நாலுவாரம் போகவேணும் நல்லகாலம் பொறந்திடும்
நாப்பதுநா பூஜை செய்யி துன்பமெல்லாம் பறந்திடும்
ராகுகேது பார்க்கும்போது வெற்றிகளே வந்திடும்
ஆகமொத்தம் நானுமிங்கு சோதிடனாய் பாடவோ !

ஆளவந்த நூறுநாளில் அரிசிவெல கொறஞ்சிடும்
ஏழபாழை குடிசையெல்லாம் கோபுரமா ஆயிடும்
ராமருக்கும் பாபருக்கும் ராசியாகிப் போயிடும்
ஆகஇப்படி அளந்துவிடும் தலைவனாக ஆகவோ !

எத்தனைதான் பொய்யச்சொல்லு நம்பசனம் நம்பிடும்
என்பதற்காய் நானுமொரு பொய்யெதுக்குப் பாடணும்
புத்தாண்டு பிறக்கும்போது புலம்பலெதுக்குக் கேக்கணும்
ஐயம்உமக்கு வந்ததுன்னா கேட்டதெல்லாம் மறக்கணும்.

சின்னச் சின்னச் குழந்தைகளை சிறப்பாக வளர்க்கணும்
சினந்திடாமல் பெற்றோரிதை சிந்திக்கவே செய்யணும்.
ஏட்டுப்படிப்பு மட்டுமிங்கே போதாதுன்னு எண்ணுங்க
நாட்டைப்படித்தல் அவசியங்க நயமாகச் சொல்லுங்க.

கணிதத்தோடு கணிப்பொறியும் களிப்புடனே கற்கலாம்
அறிவியலும் பொறியியலும் இயற்பியலும் படிக்கலாம்.
எத்தனைதான் படித்துமென்ன வரலாறும் முக்கியம்
இத்தனைநாள் மறந்திருந்தோம் வரும்நாளை நினைக்கணும்.

சொந்தச்சரிதம் மறந்துபோன எந்ததேசம் உயர்ந்தது?
வந்துபோகும் தொல்லையெல்லாம் மறந்ததாலே கண்டது!
இப்படியே காலம்போனா சொல்லுகிறேன் பாருங்க
தலைநகரின் தமிழரெல்லாம் ரயிலேற நேருங்க!

மாநிலமாய் அமைந்ததெல்லாம் உதட்டசைவை ஒட்டித்தான்
மராத்தியோ குஜராத்தோ மக்கள் யாரும் ஒன்றுதான்
பொய்யில்லாத சரித்திரத்தை நாமசொல்லிக் கொடுக்கணும்
பொல்லாங்குக் கருத்துகளை குழிதோண்டிப் புதைக்கணும்.

கன்னடமும் கவித்தமிழும் கைகோத்து நடக்கணும்
கடந்துபோன கவலவரங்கள் கனவாக மறையணும்
தென்னகமும் வடக்கும்சேர்ந்து தெம்மாங்கு பாடணும்
தேய்கிறது வாழ்கிறது சொற்களொழிந்தது போகணும்.

பாடுகின்ற பாட்டினிலே பொருளேதும் இருக்கணும்
பாட்டுக்கேட்ட உங்களுக்கும் பலனேதும் கிடைக்கணும்
என்பதாலே சொல்லிவைத்தேன் என்மனதில் பட்டதை
ஏற்றிடவோ மறுத்திடவோ யார்தருவார் கட்டளை !

4 comments:

 1. புத்தாணடிலே புதியவன் பாட்டையும் பார்த்துபுட்டேன்!
  …பார்த்துபுட்டு போகையிலே கமெண்டுஒன்னு போட்டுபுட்டேன்!

  …புத்தாண்டு வாழ்த்துகள்!

  ReplyDelete
 2. நல்ல பேர் வச்சிருக்கீங்க நண்பரே... குட்டிபிசாசு... எப்படி நன்றி சொல்றது - குட்டிப்பிசாசுக்கு நன்றின்னா...

  ReplyDelete
 3. “சொந்தச் சரிதம் மறந்து போன எந்த தேசம் உயர்ந்தது?” என்ற ஒரு வரிக்கே ஒரு லட்சம் தரலாம். “சித்திரை மகள் வந்தாள்” “மார்கழிப் பெண் மலர்ந்தாள்” என்று பாடும் வழக்கமான கேலண்டர்க் கவிஞர்கள் நடுவில், உண்மையான புத்தாண்டுக் கவிதை யென்றால் அது இது தான். வாழ்க புத்தாண்டு!

  ReplyDelete
 4. புத்தாண்டிலே உங்களுக்கு நல்ல ஆசை.... இத்தனையும் நடந்துவிட்டால் எனக்கும் மகிழ்ச்சி.

  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  ReplyDelete