Monday, 1 April 2013

ஒரு முட்டாளின் வாக்குமூலம்


ஆசிரியருக்கு மகனாக இருப்பதில் சில வசதிகளும் உண்டு, வாதைகளும் உண்டு.

* * *

சுமார் நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு. இதேபோன்ற ஒரு ஏப்ரல் தினம். பேனாவை வாளாய்க் கருதி, சட்டையில் இங்க் அடித்து கொண்டாடியிருந்த காலம்.... ரப்பரில் A F என்று வெட்டி, அச்சு தயாரித்து நண்பனின் முதுகில் அச்சுப்பதித்த காலம்...



அப்பாவை முட்டாளாக்கலாமே என்று எனக்கு யோசனை வந்தது. சின்னவளிடம் கேட்டேன், அவளும் சரி என்றாள். முந்தைய நாளே பழைய தீப்பெட்டி ஒன்றை எடுத்து, எரிந்த தீக்குச்சிகளைப் போட்டு அடுக்கி வைத்துக்கொண்டோம். சின்ன துண்டுக் காகிதத்தில் ஏப்ரல் பூல் என்று ஆங்கிலத்தில் எழுதி அதையும் தீப்பெட்டிக்குள் வைத்துவிட்டேன்.

ஏப்ரல் முதல் நாள்... வழக்கம்போல ரெண்டு கட்டு கோபால் பீடியும் தீப்பெட்டியும் வாங்கிட்டு வா என்றார் அப்பா. வழக்கம்போல என் பஸ்ஸை ஸ்டார்ட் செய்து, புர்...........ரென்று ஓட்டிக்கொண்டே போய் நிமிடத்தில் வாங்கிக்கொண்டு வந்தேன், புதிய தீப்பெட்டிக்குப் பதிலாக நான் தயாரித்து வைத்திருந்த தீப்பெட்டியை அவரிடம் கொடுத்தேன்.

வழக்கம்போல கண்ணாடிக் கண்களால் எதையோ படித்தவாறே அனிச்சைச் செயலாக பீடிக் கட்டைக் கிழித்தார், ஒரு பீடியை வாயில் வைத்தார். கண் பார்க்காமலே தீப்பெட்டிக்குள்ளிலிருந்து குச்சியை எடுத்துப் பற்றவைக்க முயன்றார். சரக்...சரக்... எரியவில்லை. அடுத்த குச்சி... அதுவும் எரியவில்லை. மூன்றாவது...

புத்தகத்திலிருந்து கண்களைத் திருப்பி தீப்பெட்டியைப் பார்த்தார். முழுதாகத் திறந்து பார்த்தார். சீட்டைக் கண்டார். சாலேஸ்வரம் கண்ணாடியின் கீழ்ப்புறமாக துண்டுச்சீட்டைப் படித்தார். இளக்காரப் புன்னகை முகத்தில் ஓட, சீட்டை தன் முன் விரி்த்து வைத்தார்.

- "சார்... கொஞ்சம் இங்கே வர்றீங்களா..."

சார் என்றது என்னைத்தான்.

அடடா... கோபம் வந்து விட்டது போல இருக்கிறதே என்று உள்ளுக்குள் கலக்க, பாதங்களைத் தேய்த்துத் தேய்த்து மெதுவாக முன்னால் போய் நின்றேன்.

- "சார் ரொம்ப புத்திசாலின்னு நினைப்போ..."

இதற்கு பதில் சொல்லாமல் தலையைக் குனிந்திருப்பதே புத்திசாலித்தனம் என்பது என் அனுபவத்தில் கண்ட உண்மை.

- "கேக்கறேன்ல... பதில் சொல்லுங்க சார்...."

இதுதான் சிக்கல். சொன்னாலும் சிக்கல், சொல்லாவிட்டாலும் சிக்கல்.

ஆம் என்றும் இல்லாமல் இல்லை என்றும் இல்லாமல் மௌனமாகத் தலையை இலேசாக ஆட்டுவதுதான் புத்திசாலித்தனம் என்பதும் என் அனுபவம் தந்த உண்மை. ஆட்டினேன்.

- "சார் இந்த சீட்டை எடுத்துப் படிச்சுச் சொல்றீங்களா..."

அடி விழுமோ என்ற அச்சத்தில் கண்ணீர் துளிர்த்த கண்களில் எழுத்துகள் மங்கலாகத் தெரிந்தன. நான் எழுதியதுதானே, தெரியாதா...

- "ஏ...ப்...ர...ல்... ஃபூ...ல்....." - தயங்கித் தயங்கி முணுமுணுத்தேன்.

- "ஃபூலுக்கு ஸ்பெல்லிங் என்ன சார்...?"

- "எஃப் ஓ ஓ எல்..."

- "சார் என்ன எழுதியிருக்கீங்க...?"

அடி இல்லை என்று உறுதியானதில் கண்ணீர் கட்டுப்பட்டு விட்டது. எழுத்துகள் தெரிந்தன.

- "எஃப் யு யு எல்..." - படபடப்பில் FULL என்று எழுதியிருக்கிறேன்.

- "அஞ்சாப்பு வந்துட்டே, இன்னும் ஃபூலுக்கும் ஃபுல்லுக்கும் ஸ்பெல்லிங் தெரியாம நீயெல்லாம் என்னத்தை படிச்சுக் கிழிக்கப்போறயோ..."

* * *

நான் படிக்கவும் இல்லை, கிழிக்கவும் இல்லை. அதற்குப் பிறகு அவரை ஒருநாளும் ஏப்ரல் ஃபூல் ஆக்க நினைக்கவும் இல்லை. நான் மட்டும் முட்டாளாவது தொடர்கிறது, இன்றைக்கும், அனுதினமும், பலரிடமும்.....

1 comment:

  1. இதைப் படித்து எனக்குப் பழைய ஞாபகம்.

    ReplyDelete