Sunday 24 March 2013

காலமும் நீரும் காத்திருப்பதில்லை


காலம் யாருக்காகவும் எதற்காகவும் காத்திருப்பதில்லை. நீங்கள், தூங்கிக் கொண்டிருக்கிறீர்களா, வேலை செய்கிறீர்களா, அரட்டை அடிக்கிறீர்களா, படிக்கிறீர்களா, படிப்பிக்கிறீர்களா, சமையல் செய்கிறீர்களா, சாப்பிடுகிறீர்களா, ஊடலில் இருக்கிறீர்களா, கூடலில் இருக்கிறீர்களா, பயணம் செய்கிறீர்களா, பயணத்துக்குக் காத்திருக்கிறீர்களா... இவற்றில் எதுவுமே காலத்திற்குப் பொருட்டேயில்லை.
திருப்பூருக்கு வருகிற தண்ணீரும் அப்படித்தான். யாருக்காகவும் காத்திருப்பதில்லை, நீங்கள் வீட்டில் இருக்கிறீர்களா, வெளியில் இருக்கிறீர்களா, வெளியூரில் இருக்கிறீர்களா, உடல்நலமின்றி இருக்கிறீர்களா, அவசரத்தில் இருக்கிறீர்களா... எதுவும் அதற்குப் பொருட்டல்ல.
காலத்துக்கும் திருப்பூருக்கு வரும் தண்ணீருக்கும் ஒரே வித்தியாசம். காலம் நிற்காது ஓடிக் கொண்டே இருக்கும். தண்ணீர் அதன் இஷ்டத்துக்கு வரும். அதன் இஷ்டத்திற்கு நின்று விடும். அது எப்போது வேண்டுமானாலும் வரலாம். நாளின் துவக்கத்தில் பரபரப்பாக இருக்கும் காலையில், மனது மந்தமாக இருக்கும் மதியத்தில், உறங்கத் தயாராகும் நள்ளிரவில், ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும் பின்னிரவில் என எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
இன்று தண்ணீர் வந்தது சரியாக இரவு 12 மணிக்கு. இரண்டு மணி நேரம் வரக்கூடும் என்பது எதிர்பார்ப்பு. அதற்குள் குடிக்க நிரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கிற அத்தனை பாத்திரங்களிலும் - தண்ணீர் நின்று போகிற வரை - நிரப்பி நிரப்பி அடுக்கி வைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.
நான் இருந்த காலனி முழுக்கவும் அரைத்தூக்கத்தில் தண்ணீர் பிடிப்பதில் முனைந்திருந்தது. சுற்றி இருந்த வீடுகளில் மூன்றில் யாரும் தண்ணீர் பிடிக்க வரவில்லை. அவர்கள் வீட்டு ஜன்னல்களில் வண்ண விளக்குகளுடன் நட்சத்திரங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. அவர்கள் கிறிஸ்துமஸை முன்னிட்டு இன்று நள்ளிரவு பிரார்த்தனைக்குச் சென்றிருக்க வேண்டும். அவர்கள் திரும்பி வரும்போது மணி எப்படியும் இரண்டாகி விடும். அதற்குள் தண்ணீர் நின்று விட்டிருக்கும்.
அவர்கள் திரும்பி வரும்போது தண்ணீர் வந்தது தெரிய வரும்போது அவர்களின் மனநிலை எப்படியிருக்கும் என்ற யோசனை எழுந்தது. இயேசுபிரானைத் திட்ட முடியாது. இன்று இரவு 12 மணிக்குத் தண்ணீர் திறந்து விடுவது நிச்சயம் இயேசுபிரான் செய்த வேலையில்லை. கொள்ளைலே போனவன், இன்னிக்குன்னு பாத்து திறந்து விட்டிருக்கான் என்று முகம் தெரியாத முனிசிபாலிடி ஊழியனை அவர்கள் திட்டக்கூடும்.
அதுவும் இன்று வந்தது நல்ல தண்ணீர். அடுத்து எட்டு நாட்களுக்குப் பிறகு வரப்போவது சப்பைத் தண்ணீர். இன்னும் எட்டு நாட்களுக்குப் பிறகுதான் மீண்டும் நல்ல தண்ணீர் வரும். அதனால் திட்டுகள் வலுவாகவே இருக்கும். வாழ்த்துகளுக்கும் சாபங்களுக்கும் உண்மையிலேயே வலிமை இருக்குமானால் தண்ணீர் திறந்து விடும் ஊழியன் எப்போதோ போய்ச் சேர்ந்திருப்பான்.
* * *
வீடுகளுக்கு தனி இணைப்பு இல்லாதவர்கள், பொதுக்குழாயை நம்பி இருப்பவர்கள் தண்ணீர் வருவதற்குமுன் வரிசை வைப்பதற்கு கண்டுபிடிக்கும் வழிகளும் இங்கே புதுமையானவை. ஒருகாலத்தில் அவர்களே வரிசைகளில் காத்திருந்தார்கள். எப்போது வரும் என்கிற நிச்சயமின்மை அதிகரிக்க அதிகரிக்க, குடங்களை வைத்துவிட்டுப் போனார்கள். குடங்கள் காணாமல் போகும் வாய்ப்புகள் அதிகரிக்க அதிகரிக்க, அங்கே பழைய அல்லது உடைந்த பக்கெட்டுகள் அவர்களைப் பிரதிநிதித்துவம் செய்தன. அடுத்து வந்தது செங்கல் அல்லது ஏதேனும் ஒரு கல். குழாயை நோக்கி கற்களின் வரிசை காத்திருப்பதை திருப்பூரைத் தவிர வேறெங்கும் காண முடியாது.
* * *
திருப்பூரும் தண்ணீரும் எனக்கு ஒன்றும் புதிதல்ல. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு நான் இங்கே இருந்தபோது தினமுமோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ தெரிந்தவர்களிடம் சைக்கிளை இரவல் வாங்கிக் கொண்டு, கேரியரின் இரண்டு பக்கத்திலும் இரண்டு குடங்களை டயர் வளையத்தில் மாட்டிக்கொண்டு, ஒரு குடத்தை கேரியரில் வைத்துக் கொண்டு, நானும் என்போன்ற நண்பர்களுமாக பூண்டிக்குப் போவோம்.
இவ்வாறு சாகசப் பயணம் போவது அநேகமாக இரவு பத்து மணிக்குப் பிறகுதான். அங்கே எப்போதும் நல்ல தண்ணீர் படு வேகமாகக் கொட்டிக் கொண்டிருக்கும் இரண்டு குழாய்கள் சாலையோரத்தில் இருக்கும். எவ்வளவு பெரிய வரிசை இருந்தாலும் அதிகபட்சம் 15-20 நிமிடங்களுக்குள் தண்ணீரை நிரப்பிக் கொள்ள முடியும். வரும் வழியில் ஏதேனும் ஒரு டீக்கடையில் நிறுத்தி டீ சாப்பிட்டு, சிகரெட் புகைத்து மீண்டும் மிதிக்கத் துவங்குவோம்.
குடங்களில் இருக்கும் தண்ணீர் தளும்பித் தளும்பி வீணாகி விடாமல் இருக்க புதுப் புதுக் வழிகளை நாங்கள் கண்டுபிடித்தோம். பனியன்களை மடித்து பேக் செய்யப் பயன்படுகிற பாலிதீன் உறைகள்தான் இந்த விஷயத்தில் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு என்பது என் கருத்து. மெல்லிய பாலிதீன் உறைகளைக் கிழித்து பந்தாகச் சுருட்டி, தண்ணீரில் நனைத்து, குடத்தின் கழுத்தில் வைத்து விடுவது. பாலிதீன் பந்து விரிந்து கொள்ளும், ஆனால் வெளியேயும் விழாது, தளும்புகிற தண்ணீர் வெளியேறவும் விடாது.
* * *
இந்தியாவில் இருக்கிற பிளாஸ்டிக் குடங்களின் எண்ணிக்கையில் பாதி திருப்பூரில்தான் இருக்கும் என்பது என் மதிப்பீடு. பிளாஸ்டிக் குடங்களை வாங்குவதற்கும் தனித்திறமை வேண்டும். விவரமில்லாதவர்கள் வாங்கிய குடங்களில் தண்ணீர் நிரப்பி டயர் சுருக்கை மாட்டியதும் கழுத்து களக்கென்று முறிந்துவிடக்கூடும்.
பொதுக்கிணற்றில் அல்லது குழாயில் பிடித்த நீருடன் தரமற்ற குடத்தில் விரல்களால் பிடித்துத் தூக்கிக்கொண்டு வரும்போது ஒவ்வொரு காலடிக்கும் விரல்கள் மில்லிமீட்டர் மில்லிமீட்டராக வழுக்கிக் கொண்டே வரும். வீடு சேர்வதற்குள் நான்கைந்து முறை கீழே இறக்கி கைமாற்ற வேண்டியிருக்கும். அப்படி இறக்கி எடுத்து வருவதை இளம் பெண்கள் யாரும் பார்த்து விடக்கூடாது என்பதில் இயன்ற அளவுக்கு கவனமாக இருப்போம். இருந்தாலும் பல சமயங்களில் இந்த முயற்சி தோல்வி அடையும்.

பெண்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. எவ்வளவு பெரிய இடுப்புக்காரிகளாக இருந்தாலும் சரி, குடம் அவர்களின் இடுப்பில் கச்சிதமாக உட்கார்ந்து விடுகிறது. பாரமே இல்லாத குடத்தைத் தூக்குவது போல, லேசாக நனைந்த பாவாடை தாவணியுடன் ஒயிலாக வீட்டுக்கு நடப்பார்கள். உள்பகுதி கொஞ்சம் சொரசொரப்பாக இருக்கக்கூடிய குடங்கள் விரைவிலேயே கண்டுபிடிக்கப்பட்டன. எங்களுக்கு கொஞ்சம் மானம் தப்பியது.
* * *
நான் திருப்பூரில் வசித்த காலத்திலேயே இரண்டாம் குடிநீர்த் திட்டம் என்ற பேச்சுகள் பரவத் தொடங்கின. அது நிறைவேறியதும் வீட்டுக்கு வீடு தினமும் தண்ணீர் ஆறாகப் பாயும் என்பதான எதிர்பார்ப்பு நகரம் முழுக்கவும் இருந்தது. அதுவும் வந்தது. அப்புறம் பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் என்றானது. அப்புறம் மூன்றாம் குடிநீர்த் திட்டம் என்று கேள்விப்பட்டேன். இப்போது எத்தனாம் குடிநீர்த்திட்டம் நடப்பில் இருக்கிறது என்று தெரியவில்லை. எட்டு நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் நிச்சயம் வருகிறது.
திருப்பூர்வாசிகளுக்கு இது வரமா சாபமா என்று சந்தேகம்கூட எனக்கு இருக்கிறது. பக்கத்து வீட்டுக்காரன் சண்டைக்காரனாக இருந்தாலும்கூட, தண்ணீர் வருகிற நாளில் அவன் வீட்டில் இல்லாதுபோனால், அடடா, தண்ணீர் இல்லாமல் அவன் என்ன செய்வான்... என்றுதான் ஒரு திருப்பூர்வாசி எண்ணுவான். பகையாளிகள் மனங்களில்கூட கனிவை ஏற்படுத்துகிற இந்த தண்ணீர்ப்பஞ்சம் ஒரு வரம்தான் இல்லையா?
மற்றொரு கோணத்தில் பார்த்தால், தண்ணீர் வருகிற நாள் மற்ற எல்லா பிரச்சினைகளையும் ஒன்றுமில்லாததாக்கி விடுகிறது. துக்க வீடோ, திருமண வீடோ, மாடியோ, குடிசையோ, செல்வனோ, ஏழையோ, எல்லா வீடுகளிலும் அன்று பேசப்படுகிற ஒரே பொருள் - தண்ணீர் எத்தனை மணிக்கு வரும் என்பதே. விலைவாசி, ஊதியப் பிரச்சினை, மின்வெட்டு, குடும்பச்சண்டைகள் எல்லாம் மறக்கப்பட்டு விடும். சில மணி நேரத்துக்கே என்றாலும் பெரும்பெரும் கவலைகளை எல்லாம் மறக்க இப்படியொரு வாய்ப்பு வேறு யாருக்கு இருக்கிறது!
எனக்கு இன்னொரு சந்தேகமும் உண்டு. கத்தரிக்காயின் தலையில் கிரீடத்தையும் வைத்து அதற்கு மேல் ஆணியும் அடித்தது போல, தொழில்துறையில் அபாரமாக முன்னேறிய பெருமை என்னும் கிரீடங்களை சுமந்திருக்கும் திருப்பூருக்கு இயற்கை அடித்த ஆணிதானோ இந்த தண்ணீர் பிரச்சினை…?
விடையை யோசித்துக் கொண்டிருக்கும்போதே தொட்டியில் தண்ணீர் விழும் ஓசை மெலிதாகிறது.... தண்ணீர் சொட்டத் தொடங்கியது.... இதோ, ஓசை நின்று விட்டது. குழாயடியில் அங்கங்கே சிந்தி கொஞ்சமாகத் தேங்கியிருக்கும் நீர் நாளை காலை காகங்களுக்கும் குருவிகளுக்கும் தாகம் தீர்க்கலாம்.
இனி நாம் வழக்கமான கவலைகளுக்கு மீண்டும் திரும்பலாம்.

(ஒரு 'டிசம்பர் மாதப் பயணத்தின்போது எழுதி, கணினியில் ஏதோவொரு மூலையில் காண இயலாமல் மறைந்து கிடந்தது.) 

3 comments:

  1. pathnainthu varudangal munbu tiruppuril sila naal thanginen. appothe athu thanni illaatha kaadu thaan! innumaa athe nilai?

    ReplyDelete
  2. அங்கே எப்போதும் இதே நிலைதான். எனக்குத் தெரிந்து 40 ஆண்டுகளாக.

    ReplyDelete
  3. கோவையிலும் இதே நிலைதான். நல்ல தண்ணீர் பதினைந்து நாளுக்கு ஒரு முறை தான்....

    சப்பை தண்ணீர் எட்டு நாட்களுக்கு ஒரு முறை....

    ReplyDelete