Thursday 23 May 2013

வலிகளை மறைத்து வழியனுப்புதல்


     அன்றுபோல நேற்றும் ஒரு நண்பர் வந்தார்
     தமிழகத்துக்கு புலம் பெயர்வதாய் சொன்னார்.
     மனம்நிறைய வாழ்த்தி விடைதந்த பின்னாலும்
     நட்பைத் தந்ததும் பெற்றதும் விடைபெறத்தானோ
     என்றெனக்குள் விடை தெரியாக் கேள்வியின் பின்
     நானும் விடைபெற இயலாததன் ஏக்கமோ...

நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் சென்னைக்குப் புலம் பெயர்ந்தபோது முகநூலில் எழுதிய இந்த வரிகளுடன்தான் உரையைத் துவங்கினேன் கடந்த மாதம் நிகழ்ந்த ஒரு வழியனுப்பு விழாவில். ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் (ஜேஎன்யு) தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் கி. நாச்சிமுத்து அவர்கள் பணிக்காலம் முடிந்து கோவைக்குப் புலம் பெயர்ந்தார். அவருக்கு மாணவர்களும் சகாக்களும் சேர்ந்து ஏற்பாடு செய்த வழியனுப்பு விழாவில் என்னையும் பேச அழைத்திருந்தார்கள். 


தமிழ்மொழி செம்மொழியாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மைய அரசுப் பல்கலைக்கழகங்களில் தமிழ்ப்பிரிவு துவங்கப்பட வேண்டியிருந்தது. அவ்வாறு ஜேஎன்யு-வில் தமிழ்ப்பிரிவு துவங்கப்பட்டபோது பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்டவர் திரு நாச்சிமுத்து. எந்தவொரு அரசு அமைப்பிலும் இருக்கக்கூடிய அரசியல்களை சமாளித்து, தமிழ்ப்பிரிவை கட்டியெழுப்பிய பெருமை இவரையே சாரும். 

இவருக்குத் துணையாக பின்னர் வந்தார் த.நா. சந்திர சேகரன் என்னும் இளைஞர். இருவரும் இணைந்து பணியாற்றி, ஜேஎன்யு-வில் இன்று சுமார் 25 தமிழ் மாணவர்கள் ஆய்வுப்படிப்பில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழகத்துக்கு வெளியே ஒரு பல்கலையில் இத்தனை தமிழ் மாணவர்கள் என்பது இதுவே முதல்முறையாக இருக்கும் என்பது என் மதிப்பீடு. ஜேஎன்யு-வுக்கே உரிய சுதந்திரமான சூழலில், பாலின அடையாள் பாதிக்காத வகையில் சுதந்திரமான கற்றல்சூழலைப் பெற்ற இவர்கள் கொடுத்த வைத்தவர்கள். இவர்களுக்கான தமிழ் நூல்களை வாங்கச்செய்து, வலுவான நூலகத்துக்கும் உதவியிருக்கிறார் நாச்சிமுத்து.

நாச்சிமுத்து அவர்கள் செய்தவற்றில் குறிப்பாக நான் பாராட்டியது மாணவர்களின் ஆய்வுக்கு அவர் பரிந்துரைத்த ஒப்பிலக்கியம். இதன் காரணமாக உருது, அரபி, கொங்கணி, மராத்தி, இந்தி என பலமொழிகளுடனும் இலக்கணங்களுடன் தமிழை ஒப்பீடு செய்கிறார்கள் மாணவர்கள். இது என்னைப்பொறுத்தவரை முக்கியான பங்களிப்பு. இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, வங்கம் தவிர்த்து பிற மொழிகளிலிருந்து நேரடியாக தமிழுக்கோ, தமிழிலிருந்து நேரடியாக பிற மொழிகளுக்கோ மொழிபெயர்க்க இன்று நம்மிடையே ஆட்கள் இல்லை. இப்போது நேரடி மொழிபெயர்ப்பில் இருக்கும் மூத்தவர்களுக்குப் பிறகு யார் என்ற கேள்வி ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தக் கேள்விக்கு விடையாக வருவார்கள் ஜேஎன்யு மாணவர்கள். 


தன் வேலை, தன் துறை என்பதோடு நிறுத்திக்கொள்ளாமல் தமிழ்ச்சங்கத்துடன் நெருங்கிய உறவு வைத்திருந்ததும், இலக்கிய நிகழ்ச்சிகளில் தன் பங்களிப்பை அளித்ததோடு, தன் மாணவர்களையும் பங்கேற்கச் செய்ததும் நாச்சிமுத்து அவர்களின் மற்றொரு சாதனை. இன்று தில்லியில் நடைபெறும் தில்லிகை இலக்கியச் சந்திப்பின் முதுகெலும்பாக இருக்கிறார்கள் அந்த மாணவர்கள். 

நாச்சிமுத்து அவர்கள் பலமுறை அழைத்தும் அவருடைய இல்லத்துக்குச் செல்லும் வாய்ப்பு அமையவில்லை. அதனைப் பொருட்படுத்தாது பல முறை தன் துணைவியாருடன் எங்கள் இல்லத்துக்கு வந்து சென்ற பெருந்தகை அவர். வழியனுப்பு விழா முடிந்த இருநாட்கள் கழித்து ஒரு மாலையில் குடும்பத்துடன் அவர் இல்லம் சென்று சற்றுநேரம் உரையாடி வந்தோம். அவர் தமிழகம் செல்வது தில்லிக்குப் பேரிழப்புதான். ஆனால் இழப்புகள் தவிர்க்க முடியாதவை. 
ஒரே ஒரு திருப்தி எனக்கு அவர் செல்வது கோவைக்கு. நானும் என்றோ ஒருநாள் கோவைப்பகுதிக்குத்தான் புலம் பெயரப்போகிறேன். 

* * *

மற்றொரு பிரிவு 19ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த நிகழ்ச்சியின் நாயகர் சுசீலாம்மா. எம்.ஏ. சுசீலா, மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர். தில்லிக்கு மகளுக்குத் துணையாக வந்தவர். கடந்த சுமார் 7 ஆண்டுகளில் தில்லியில் இலக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றில் பேச்சாளராக, பங்கேற்பாளராக, தமிழ்ச்சங்கத்துக்கு உதவியவர். 


இவருக்கான வழியனுப்புவிழா நடந்த அதே இடத்தில், நான் பேசிய அதே இடத்தில் சுமார் பத்தாண்டுகளுக்கு முன் ஒரு வழியனுப்புவிழா நடைபெற்றது. அதன் நாயகர் சுப்புலட்சுமி நடராசன். நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தில் தமிழ்ப்பிரிவு பதிப்பாசிரியராக இருந்தவர். அவர் கணவர் நடராசன் வானொலியில் தமிழ்ப்பிரிவுக்குப் பொறுப்பாக இருந்தவர். சுப்புலட்சுமி அவர்கள் உடல்நிலை சீர்கெட்டபோது தமிழகம் புலம்பெயர்ந்தார். அவருக்கான வழியனுப்புவிழாவில் உணர்ச்சிவசப்பட்டு பேச முடியாமல் பாதியில் நிறுத்தி விட்டேன். சில மாதங்களுக்குப் பிறகு அவர் மறைந்தார். அது ஏனோ தெரியவில்லை, என் குடும்பத்தினர் பலரையும் என் நட்புக்குகந்த பலரையும் பறித்துக்கொள்வதில் இந்தப் புற்றுநோய்க்கு என்னதான் திருப்தியோ தெரியவில்லை.


அவர் மறைவுக்குப்பிறகு, அவர் எழுதி முடிக்காமல் வைத்திருந்த மற்றொரு நாவலை பதிப்பிக்கும் பணியை நான் செய்தேன். அதன் வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றபோது நான் நிகழ்ச்சித் தொகுப்பு செய்தபோது சந்தித்தவர் சுசீலாம்மா. தோப்பிலும், வீரபாண்டியனும் இருந்தனர். நேற்று உரையாற்றும்போது அதெல்லாம் கணநேரத்தில் சலனப்படங்களாக நினைவில் விரைந்தோடி மறைந்தன.  சுசீலாம்மாவின் பிரியத்துக்குந்த மாணவியாக இருந்தவர் சுப்புலட்சுமி.

தில்லியில் சுசீலாம்மாவின் பங்களிப்பு இந்தக் காலகட்டத்தில் முக்கியமானது. தில்லியில் இலக்கிய வறட்சி ஏற்பட்டுள்ள காலம் இது. இலக்கிய ஆர்வலர்களாக இருந்தவர்கள் பலர் உலகிலிருந்தே மறைந்து விட்டார்கள், பலர் தமிழகத்துக்குப் புலம் பெயர்ந்து கொண்டே இருக்கிறார்கள். இந்த நெருக்கடியான காலகட்டத்தில், சங்கம் ஏதேனும் இலக்கிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும்போது இலக்கியப் பரிச்சயம் உள்ளவராக கைகொடுக்க வாய்த்தவர் சுசீலாம்மா. தமிழகத்திலிருந்து வருகிற பேச்சாளப்பெருமக்களைப்போல, எங்கேயோ அரைத்ததை எல்லா இடங்களிலும் அரைத்து, சில நகைச்சுவைகளையும் சேர்த்து, கைதட்ட வைத்து நினைவிலிருந்து மறையும் பிரபலம் அல்ல அவர். என்ன தலைப்புக் கொடுத்தாலும் அதற்கு முழுமையாகத் தயார்செய்து கொண்டு வந்து, அவருக்கே உரிய ஆற்றொழுக்கு நடையில் எங்களை மயக்கியவர் சுசீலாம்மா. 

அதுமட்டுமல்ல, தில்லிகை நிகழ்ச்சிகளிலும் உரையாற்றினார், பார்வையாளராகப் பங்கேற்று வந்தார். வலைப்பதிவில் தீவிரமாக எழுதி வருகிறார். தன்னிலும் வயது குறைந்தவர்களை சமமாக மதிக்கும் பண்பாளர். மகளுக்குப் பணியிட மாற்றம் நிகழ்வதால் இவரும் தமிழகம் செல்கிறார். இணையம், மின்னஞ்சல், முகநூல் என பலவழிகளில் தொடர்பில் இருக்க முடியும் என்றாலும் இவர் விட்டுச்செல்லும் இடைவெளி நிரப்பப்பட முடியாத இடைவெளி என்பது புரிந்தே இருக்கிறது.

நிகழ்ச்சி முடிந்து திரும்பிய சில நிமிடங்களில், சுசீலாம்மா எப்போது வருகிறார் எங்கே வருகிறார் என்று முகநூலில் கேள்விக்கணைகளால் துளைத்தார் இரா. எட்வின். இரவு முதல்முறையாக நாங்கள் தொலைபேசியில் உரையாடும்போதும் அவருடைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். சுசீலாம்மாவின் வழியனுப்பு விழா செய்தியை முகநூலில் பகிர்ந்தபோது கிடைத்த பின்னூட்டங்களே போதுமாக இருக்கிறது எனக்கு பொறாமை ஏற்படுத்த. பத்தாண்டுகளுக்கு முன்புபோல இல்லாமல் வலிகளை அடக்கிக்கொண்டு வார்த்தைகளைச் சிந்தப் பழகிப்போயிருக்கிறது இப்போதெல்லாம்.


ஆனாலும் எனக்கு ஒரு திருப்தி. இவரும் கோவைக்குதான் செல்கிறார். நானும் என்றோ ஒருநாள் கோவைப்பகுதிக்குத்தான் புலம் பெயரப்போகிறேன் என நம்பிக்கொண்டிருக்கிறேன்.

கோவை மற்றும் தமிழக இலக்கிய நண்பர்களே... இரண்டு அரிய பெருமக்களை உங்களிடம் ஒப்படைக்கிறோம். 

பத்திரமா பாத்துக்குங்க.

1 comment:

  1. பதிவும் அதை மிகச் சுருக்கமாகச்
    சொல்லிப்போன தலைப்பும் மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    ReplyDelete