Friday, 14 June 2013

உளவையும் களவையும் நிந்தனை செய்வோம்


இன்று சூடாக விவாதிக்கப்பட்டு வரும் விஷயம் அமெரிக்க உளவு விவகாரம்.  நண்பர் ஈரோடு கதிரும்கூட சன்டிவியில் ஒரு விவாதத்தில் கலந்து கொண்டார். அமெரிக்கா மட்டும்தான் உளவு பார்க்கிறதா... நம் அரசு என்ன செய்கிறது... பழைய நினைவுகளிலிருந்து ஒரு பதிவு.

1994-95வாக்கில் நடந்தது இது. வேலை செய்து வந்த நிறுவனத்திலிருந்து விலகியிருந்தேன். சொந்தத் தொழில் துவங்குவதற்கான இடைக் காலத்தில் கரோல்பாகில் பழைய அச்சகத்தை குத்தகைக்கு எடுத்து நடத்திக்கொண்டிருந்தேன். தமிழ்ச்சங்கத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வந்த காலம் அது. 

ஒரு நாள் வழக்கம்போல அச்சகத்தில் அமர்ந்திருந்தேன். சற்றுத் தொலைவில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அந்த நபரை ஏற்கெனவே பார்த்திருந்தது போலத் தோன்றியது. நினைவுகளைக் கிளறியபோது, 2-3 நாட்களாகவே அவர் அப்படி நிற்பது நினைவு வந்தது. நான் வாசலில் வந்து நின்று அவரைப் பார்த்தேன். அவர் சரசரவென நகர்ந்து போய்விட்டார். மீண்டும் உள்ளே போய் அமர்ந்து ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டிருந்தேன். அருகே இருந்த ரவுண்டானா அருகே ஒரு கம்பத்தின்பின் நின்றவாறு கவனித்துக் கொண்டிருந்தார். 

அவர் கவனிக்காத கணத்தில் சட்டென வெளியே சென்றவன் வேறு வழியாகச் சுற்றிவந்து அவர் நின்று கொண்டிருந்த ரவுண்டானாவுக்குச் சென்றேன். அவருக்குப் பின்னால் நின்று யாராய் இருக்கும் என்று கவனித்தேன். தோளைத் தட்டினேன். திடுக்கிட்டுத் திரும்பியவர் வெலவெலத்துப் போனார். சாடையிலிருந்தே அவர் தமிழர் என்று தெரிந்தது. உடலமைப்பும் தலைமுடி அமைப்பும் அவர் யார் என்று யூகம் செய்ய வைத்தன.
- “என்ன சார்... எதுக்காக என்னையே கவனிச்சுகிட்டு இருக்கீங்க...
- “நானா... இல்லையே... வேற ஒருத்தருக்காக காத்திட்டிருக்கேன்.
- “சார்... எனக்கும் கொஞ்சம் மூளை இருக்குன்னு நம்புங்க. நீங்க கிரைம் பிராஞ்ச்னு தெரியும் எனக்கு
சிரித்துக்கொண்டே உத்தேசமாக ஒரு போடு போட்டேன். அவரிடம் வேறு பதில் இருக்கவில்லை. முகத்தில் ஏமாற்றம் தெரிந்தது. நான் சிரித்துக்கொண்டே பேசியதால் அவர் முகத்திலும் கடுமை இருக்கவில்லை. 
- “பரவாயில்லை சார். நீங்க உங்க டியூட்டிய செய்யறீங்க. அதை நான் வேண்டாம்னு சொல்லலே. ஆனா என்ன விஷயம்னு சொன்னா நல்லது. சொல்ல விருப்பமில்லேன்னா விடுங்க. எனக்கும் ஆளுக இருக்கு, கண்டுபிடிச்சுடுவேன்.
அவர் சுற்றுமுற்றும் பார்த்தார். 
- “இங்கே வேண்டாம் சார்...
தன்னை வேறு யாராவது வேவு பார்க்கிறார்களா என்று அவர் அஞ்சியிருக்கலாம்.
சரி, வாங்கஎன்று பக்கத்தில் இருந்த டீக்கடைக்குப் போய் அமர்ந்தோம்.
- “சொல்லுங்க என்ன விஷயம்... என்கிட்ட சொல்றது எதுவும் வெளியே போகாது. உங்களுக்கும் ஏதும் சிக்கல் வராது. சொல்லுங்க.
- “சார்... உங்களைப் பத்தித் தெரியும் எனக்கு. ஆனா என்ன செய்யறது... எங்க பொழப்பு அப்படி. தப்பா எடுத்துக்காதீங்க.
வழக்கமான போலீஸ் பாழை.
- “கண்டிப்பா இல்லை. விஷயத்தைச் சொல்லுங்க.
- “எவனோ ஒரு தே...ப்பய மொட்டைக் கடுதாசி போட்டிருக்கான் சார். எங்க தலையில விடியுது.
- “என்னன்னு போட்டிருக்கான்....
- “நீங்களும் இன்னும் சிலபேரும் சேர்ந்து பிரைம் மினிஸ்டரைக் கொலை செய்ய திட்டமிட்டிருக்கீங்கன்னு அதுல எழுதியிருக்கான்.
- “சிரிக்கிறதைத்தவிர வேற எதுவும் செய்ய முடியாதுங்க என்னால.
- “நீங்க சிரிக்கலாம் சார். ஆனா நாங்க சிரிக்க முடியாது. ஏன்னா... நீங்க இதுக்காக ஒரு டிரை ரன்கூட நடத்தியிருக்கிறதாவும் அதுல எழுதியிருக்கான். இப்படி டெக்னிகலா எழுதும்போது அலட்சியம் செய்ய முடியாது இல்லியா... அதனால்தான் என்னைய இங்கே டியூட்டி போட்டிருக்கு.
ராஜீவ் காந்தி கொலைக்குப் பிறகு டிரை ரன் போன்ற சொற்கள் எல்லாம் பரவலாகிக் கொண்டிருந்த நேரம் அது. விஷயத்தின் தீவிரம் புரிந்தது.
- “சரி, வேறு யார் யார் பேரில் புகார் வந்திருக்கிறது.
அவர் பதில் சொல்லத் தயங்கினார்.
- “கவலையே படாம சொல்லுங்க. நீங்களே சொன்னீங்க என்னைப்பத்தித் தெரியும்னு. என்கிட்டயிருந்து எதுவும் வெளியே போகாது.” 
அவர் சில பெயர்களைச் சொன்னார். அவர்கள் எல்லாரும் மைய அரசில் உயர் பதவியில் பணிபுரிபவர்கள், என் நெருங்கிய நண்பர்கள். நேர்மையின் சின்னங்கள். பெயர்களைக் கேட்டதுமே இது யாருடைய வேலையாக இருக்கும் என்று புரிந்துவிட்டது.
- “சரி. இப்போது இதை யார் செஞ்சிருப்பாங்கன்னு புரிஞ்சு போச்சு. இப்போ என்ன செய்யப்போறீங்க.... ” 
- “நான் நேற்றே ரிப்போர்ட் கொடுத்தாச்சு சார். இன்னிக்கு கடைசியா ஒருதடவை வந்துட்டுப் போலாம்னு வந்தேன். எனக்கு உங்க மேல சந்தேகமே இல்லை. ஆனா பைல் குளோஸ் பண்ணனும்னா அதுக்கான எல்லாம் செஞ்சுதானே ஆகணும்....
- “நீங்க விஷயத்தைச் சொன்னதுக்கு ரொம்ப சந்தோஷம். உங்க நம்பிக்கைக்காக தேங்க்ஸ். சரி, அந்த மத்தவங்களை யாரு பாக்கிறாங்க... அவங்க என்ன சொன்னாங்கன்னு தெரியுமா...
- “அவங்களுக்கு எல்லாம் பேவரபிளாதான் சார் இருக்கு. கவர்மென்ட் செர்வன்ட்ஸ் இல்லியா... மேலோட்டமா ரெகார்டையும் சேத்துப் பாத்ததுல அவங்க பேரு எல்லாம் கிளியர் ஆயிடுச்சு. இப்போ உங்க பேரையும் கிளியர் பண்ணிட்டு கேசை க்ளோஸ் பண்ணிடுவோம்.

அவரை விடைகொடுத்து அனுப்பியபிறகு மனதுக்குள் பெருத்த நிம்மதி ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது. காரணம் உண்டு. நான் அமர்ந்திருந்த அச்சகத்துக்கு இலங்கைப் போராளிகளின் ஆதரவாளர்களாகக் கருதப்படும் தமிழகத்தின் முக்கியப்புள்ளிகள் சிலர் வந்து சென்றிருக்கிறார்கள். எப்படியோ, விஷயம் முடிந்ததில் நிம்மதி.

அந்த கிரைம் பிராஞ்ச் காவலர் பிறகு நண்பராகிவிட்டதும், பத்திரிகையாளராக நான் செல்லும் இடங்களில் எல்லாம் அவரும் பொது மக்களில் ஒருவராக இருந்து கண்காணிப்பதும், நாங்கள் இருவரும் மௌனப் புன்னகை பரிமாறிக்கொண்டதும் தனிக்கதை.

எங்களுக்கு எதிராக இதைச் செய்தவர்கள் யாரும் இப்போது தில்லியில் இல்லை. 

இதற்கு முந்தைய வேவு அனுபவம் எப்படி இருந்தது. 1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டபோது நான் தில்லியில் இருந்தேன். இரவு நடந்த சம்பவம் என்பதால், இந்திரா கொலையுண்டபோது ஏற்பட்ட கலவரத்தையும் கணக்கில் கொண்டு, இரவோடு இரவாக நகரெங்கும் பாதுகாப்பை பலப்படுத்திவிட முடிந்தது. நகரில் எந்தவொரு இடத்திலும் தமிழர்கள் எவரொருவரும் பாதிக்கப்படவில்லை. வெங்கட்ராமன் குடியரசுத் தலைவராக இருந்ததால்தான் தமிழர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்று இன்றும் தில்லிவாழ் தமிழர்கள் சிலர் பேசிக்கொள்வதுண்டு. எனக்குத் தெரியும், அந்த இடத்தில் யார் இருந்திருந்தாலும் இப்படித்தான் செய்திருப்பார்கள். இந்திரா காந்தி கொல்லப்பட்டது பகலில். செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. செல்பேசிகள் இல்லாத, தனியார் தொலைக்காட்சிகள் இல்லாத அக்காலத்தில் இரவோடு இரவாக ராஜீவ் கொலை பற்றிய செய்தி பரவ வழி இருக்கவில்லை. கிடைத்த அவகாசத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. 

நான் அப்போது வசித்தது கரோல்பாகில். காலையில் பிபிசி கேட்டுத்தான் ராஜீவ் காந்தி கொலை விஷயம் எனக்குத் தெரிந்தது. கடைகள் எல்லாம் மூடப்பட்டுவிட்டன. சரஸ்வதி மார்கில் இருந்த உடுப்பி ராகவேந்திரா ஹோட்டல் சர்வர் எனக்கு நண்பராகி இருந்தார். அவர்தான் பாதிக் கதவைத் திறந்து வைத்து எனக்கும் இன்னும் சில நண்பர்களுக்கும் உணவு படைத்தார். யாரும் அந்தக் கடையை அடைக்கச் சொல்லவில்லை.

இப்படி இருந்தும்கூட, தில்லியில் சரஸ்வதி மார்க் மூலையில் எப்போதோ மூடப்பட்ட, சிதிலமான ஒரு ஹோட்டலின் சாய்ந்து கிடந்த தமிழ்ப் பெயர்ப்பலகையைப் படம் எடுத்துப்போட்டு, தமிழர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன என்று எழுதி தன் பரபரப்பு அரிப்பைத் தீர்த்துக்கொண்டது ஒரு விகடப் பத்திரிகையின் தம்பி. அதை விடுங்கள்.

அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழர்கள் உளவுபார்க்கப்பட்டனர். எனக்கு வந்த கடிதங்கள் எல்லாமே உடைக்கப்பட்டே கிடைத்தன. தினமும் 2-3 கடிதங்கள் வரும். விலைப்பட்டியல்கள் வரும். அத்தனையும் கிழிக்கப்பட்டிருக்கும், அல்லது கிழித்தது அரைகுறையாக ஒட்டப்பட்டிருக்கும். மாதாமாதம் வருகிற சம்பளமும் செலவுக்காசும் கிழிக்கப்பட்டால் காசோலை காணாமல் போய்விடக்கூடும் என்ற அச்சம் இருந்துகொண்டே இருந்தது.

அலுவலகத்துக்குத் தெரிவித்து, தனியார் கூரியர் வாயிலாக அனுப்பச் சொன்னேன். அவையும் கிழிக்கப்பட்டே வந்தன. கூரியர் ஆளும் பழகிப்போனபிறகு அவனிடம் கேட்டேன். என்ன சார் செய்யறது. லெட்டர் சார்ட் பண்ணி, சந்தேகமான எல்லாத்தையும் அவங்க கிழிச்சுப்பாத்து கிளியர் செஞ்ச பிறகுதான் கொண்டுவர முடியும். எங்களுது மட்டுமில்லே. எல்லா கூரியர் ஆபீஸ்லயும் இப்பிடித்தான் என்றான். பல மாதங்களுக்குத் தொடர்ந்தது.

எங்கெங்கோ வீடு மாறி மாறி சுற்றியபிறகு இப்போது இருக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தேன். பாபர் மசூதி, மும்பை சம்பவங்களைத் தொடர்ந்து மீண்டும் துவங்கியது தலைவலி. கடிதங்கள் உடைபட்டே வந்தன. தொலைபேசியில் பேசும்போது இடையே ஏதேதோ ஒலிகள் கேட்கும். சில மாதங்களில் இதுவும் முடிந்தது.

இப்படிப்பட்ட நேரங்களில் சொந்தக் குடிமகனையே சந்தேகிக்கும் நிலைகுறித்து வருத்தம் ஏற்படாமல் இருப்பதில்லை. மாதாமாதம் தாமதமாகவே வருகிற சம்பள உறை கிழிந்திருக்கும்போது, உள்ளே காசோலை இருக்குமா என்ற அச்சத்துடன் அவசரஅவசரமாகப் பார்க்கிற வேதனையை வார்த்தைகளில் விளக்க முடியாது. நேசத்துக்கு உரியவர்கள் எழுதிய கடிதத்தை எவனோ படித்திருப்பான் என்று தோன்றும்போது எழுகிற இயலாமையை சொல்லி முடியாது.

இப்போதும் நான் உளவுபார்க்கப்பட்டுக் கொண்டிருக்கலாம். தமிழ்நாட்டிலிருந்து கடிதம் வருவதால் நான் தீவிரவாதியாக இருக்கக்கூடும், இஸ்லாமியப் பெயராக இருப்பதால் நான் தீவிரவாதியாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவது எத்தனை பெரிய துரதிர்ஷ்டம். அப்படியொரு கொந்தளிப்பான மனநிலையில் நான் யார் (Who am I?) என்றொரு கட்டுரை எழுதி வைத்தேன். எங்கே இருக்கிறது என்று தேடி ஒருநாள் அதையும் பதிய வேண்டும். 


என்று தணியும் இந்த உளவெனும் சோகம்....

4 comments:

 1. என்னது, உங்களை உளவு பார்த்தார்களா? அவ்வளவு பெரிய மனிதரா நீங்கள்? இவ்வளவு நாளாக சொல்லாமல் போனீர்களே! உங்களை சாதாரணமாக நினைத்துப் பழகி விட்டேனே, அட்டா...! (அது சரி, இப்போதும் பலர் உளவு பார்ப்பதாக செய்திகள் சொல்கின்றன. ஷாஜகான் எப்படி இவ்வளவு தூரம் உயர்ந்தார் என்று. ஜாக்கிரதையாக இருங்கள்). –நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய. செல்லப்பா.

  ReplyDelete
 2. இங்கே குறிப்பிடப்பட்ட உளவுபார்க்கப்பட்ட மற்றவர்களில் உங்களுக்குத் தெரிந்தவர்களும் உண்டு. சிலருக்குத் தெரியும், சிலருக்குத் தெரியாது.

  ReplyDelete
 3. உங்களுக்கு நடந்த இந்தச் சம்பவத்தை வேறு ஒரு நண்பர் மூலம் கேள்விபட்டதுண்டு (ஆனால் இதில் சம்பந்தப்பட்டவர் நீங்கள் என்பது இப்பொழுது தான் தெரியும்). நானும் அந்த சமயத்தில் (91-93) கரோல்பாகில் தான் இருந்தேன்.

  ReplyDelete
 4. அடடா... வேங்கட ஸ்ரீநிவாசன்... அப்படியானால் இது இன்னும் சிலருக்கும் தெரிந்திருக்கிறது. பரவாயில்லை. இப்போது கொஞ்சம் நிம்மதி.

  ReplyDelete