Wednesday 19 June 2013

படித்ததில் பிடித்தது - தூப்புக்காரி


நான் மறுபிறவி எடுக்க விரும்பவில்லை. ஆனால் நான் மறுபிறவி எடுத்தே ஆகவேண்டுமானால் ஒரு தீண்டப்படாதவனாகவே பிறக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய துயரங்களையும், துக்கங்களையும் பகிர்ந்து கொள்ள முடியும்; அவமதிப்பைத் தாங்க முடியும்; என்னையும் விடுவித்துக்கொண்டு அந்த அவல நிலை யிலிருந்து அவர்களுக்கும் விடுதலைத் தேடித் தர முயல முடியும்.
- காந்தி

திங்கள்கிழமை வானொலி நிலையத்துக்குச் செல்லும் வழியில் தூப்புக்காரி படித்து முடித்து வீடுவந்த சற்று நேரத்தில் வேறொரு நூலில் இந்த வாக்கியங்களையும் படிக்க நேர்ந்தது தற்செயல் நிகழ்வாகத்தான் இருக்க வேண்டும்.

* * *

நம் சமூக வாழ்வின் அதலபாதாளங்களில் பீ வாளியும் அகப்பையுமாக, விளக்குமாறும் பிளீச்சிங் பவுடருமாக, மலிவான நீலச்சேலையில் அலையும் துப்புரவுத் தொழிலாளர்களோடு வாகரையும் அலையவிடும் தீவிர எழுத்து மலர்வதியின் தூப்புக்காரி நாவலில் அதன் முழு வீரியத்துடனும், வன்மத்துடனும், கொந்தளிப்புடனும் பதிவாகியிருக்கிறது. எல்லாரும் அன்றாடம் பார்க்கிறவர்கள்தான் இந்தத் தூப்புக்காரிகள். இதுவரை வாசகரின் புலனுக்குப் புலப்படாத துண்டுதுண்டான பீயையும், திட்டுத்திட்டான தூமை இரத்தத்தையும், அது ஏற்படுத்தும் அருவருப்பையும், அழுகிப்போன அழுக்குகள் அள்ளப்படும்போது குபீரென எழும்பும் குடலைப் புரட்டும் வாடையையும்... இப்படி சமூக குண்டியைக் கழுவி, குளிப்பாட்டி, பவுடருக்குப் பதிலாக பிளீச்சிங் பவுடர் பூசி, ஒப்பனை பண்ணும் இந்தச் சமூகத் தாய்மாரை நன்றிகெட்ட சமூகம் நாயிலும் பன்றியிலும் கீழாக நடத்தும் கேவலத்தை கனகம், ரோஸ்ஸிலி, கனகத்தின் மகள் பூவரசி, மாரி என அழுக்குப் பாத்திரங்களின் ஊடாக மனித மனத்தை அழவைக்கும் சித்திரங்களாக அணு அணுவாக வரைந்து காட்டியிருக்கிறார் மலர்வதி.

அணிந்துரையில் பொன்னீலன் மேற்கண்டவாறு சீறுவதன் காரணம் நாவலைப் படிக்கையில் புரிகிறது. எவராலும் புரிந்து கொள்ளப்படாத வேதனைகளை, அவலங்களை, வலிகளை உள்ளது உள்ளபடிக் காட்டுகிறது தூப்புக்காரி. 

* * *

மருத்துவமனையில் கழிப்பறை உள்பட எல்லாவற்றையும் சுத்தம் செய்யும் தூப்புக்காரி கனகம். ரோஸ்ஸிலி, கனகத்தின் சக உழைப்பாளி. கனகத்தின் ஒரே மகள் பூவரசி. நகரின் தோட்டியாக வேலை செய்கிற மாரி. மருத்துவமனைக்கு வெளியே டாக்சி ஓட்டுகிற மனோ. இவர்கள்தான் கதையின் முக்கியப்பாத்திரங்கள்.

இறந்து போன கணவனின் மருத்துவச் செலவுக் கடனை ஈடுகட்டவும் சோற்றுக்காகவும் தூப்புக்காரியாக இருக்கிறாள் கனகம். மகள் பூவரசி மனோவை மனதுக்குள் நேசிக்கிறாள். மனோவும் பூவரசியை மனதுக்குள் நேசிக்கிறான். மாரி பூவரசியை நேசிக்கிறான். இந்த முக்கோணக் காதல்கதையைச் சுற்றி வலைபின்னி இருப்பது வறுமையும் அவலமும் தீண்டாமையும் சமூக மதிப்பீடுகளும்.

மனோவின் வீட்டுத் திருமணத்தில் பந்தியிலை எடுக்கும் வேலைக்குச் செல்லும் கனகம், பசிக்குச் சாப்பிட உட்காரும்போது அவமதிக்கப்படுகிறாள். அதை பூவரசி பார்க்க நேருகிறது. அவமதிக்கப்பட்ட கனகத்தின் உடல்நிலை மோசமாகிறது. அவளுடைய இடத்தின் வேலையை செய்ய வேண்டிய கட்டாயம் வருகிறது பூவரசிக்கு. மனோ செய்வதறியாது தவிக்கிறான். ஆபத்பாந்தவனாக வருகிறான் மாரி. கனகத்தை பூவரசியோடு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, அவளுடைய வேலையை தான் செய்கிறான். பூவரசிக்கு மாரியின்மீதான மதிப்பு உயர்கிறது. இருந்தாலும் மனோவின் நினைப்பும் வாட்டுகிறது.

கனகம் மருத்துவமனையில் இருக்க, வீட்டுக்குச் செல்லும் பூவரசிக்கு ஆறுதலாக வருகிறான் மனோ. மூன்றாண்டுகளாகப் பூட்டிவைத்திருந்த காதல் இருவருக்குள்ளும் பரஸ்பர வெள்ளமாய்ப் பாய்கிறது. பூவரசியைத் தேடி முதல்முறை வீட்டுக்கு வரும் மாரிக்கு இது தெரிந்து உடைந்து போகிறான். ஆனாலும் மனதுக்குள் புதைத்துக்கொள்கிறான். 

கனகத்தின் இடத்தில் தூப்புக்காரியாக நேர்கிறது பூவரசிக்கு. அறிமுகமில்லாத, குமட்டும் வேலையை தவிர்க்க இயலாமல் சுமக்கிறாள் பூவரசி. மருத்துவமனைக்குள் அவளைத் தேடிவரும் மனோவின் தோளில் சாய்கிறாள். ஆனால் மனோவால் அந்தக் கோலத்தில் அவளை அணைக்க முடியாமல் இரும்பாகி நிற்கிறான். இதைக்கண்டுவிட்ட கனகம் மனமுடைந்து இறந்து போகிறாள்.

பூவரசி நிரந்தரத் தூப்புக்காரி ஆகிறாள். குடும்பத்தினரின் வற்புறுத்தல் தாளாமல், வெளியே சொல்லும் தைரியமும் இல்லாமல் மனோ வேறு ஒருத்தியை திருமணம் செய்துகொண்டு வெளியூர் சென்று விடுகிறான். ஒருநாள் காதல் கூடலில் பூவரசி கருத்தரிக்க, அவளுடைய குழந்தைக்குத் தானே தகப்பனாக வருகிறான் மாரி. 

குற்ற உணர்வுடன் குமுறிக்கொண்டிருக்கும் மனோ ஊருக்குத் திரும்பி வருவதிலும், அவனுடைய நினைவுகளிலும் துவங்குகிறது முதல் அத்தியாயம். கடைசி அத்தியாயத்தில் அவன் மருத்துவமனைக்குச் சென்று பார்க்கையில், மாரி விபத்தில் இறந்து போயிருப்பதையும், பூவரசி தூப்புக்காரியாய் இருப்பதையும் பார்த்து நொந்து வெளியேறுவதில் முடிகிறது. 

மருத்துவமனைக்கு வரும் ஒருவருக்கு குழந்தையை தத்துக் கொடுத்தால் குழந்தையாவது நன்றாக இருக்கும் என்கிறார் மருத்துவர். முதலில் ஒப்புக்கொள்ளும் பூவரசி, கடைசியில் மனம் மாறி அவர்களிடமிருந்து குழந்தையைப் பறித்துக்கொண்டு போகிறாள். 

* * *

மேலாண்மை பொன்னுசாமி அணிந்துரையில் குறிப்பிட்டதுபோல முதல் ஐந்தாறு பக்கங்கள் கற்றுக்குட்டித்தனமான பிரதியைப் படிப்பது போலத்தான் இருந்தது. அதைமட்டும் சீர்செய்திருந்தால் நாவல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். எப்படியிருப்பினும், மலர்வதிக்கு இது இரண்டாவது நாவல்தான் என்று எண்ணும்போது பாராட்டியே தீர வேண்டும்.

கதை மாந்தர்கள் எவருமே கெட்டவர்கள் இல்லை. அவரவர் அவரவரின் சூழ்நிலைக் கைதிகள். இந்த சமூகத்தின் தீண்டாமைப் பார்வைதான் மிகப்பெரிய தீய பாத்திரம். 

உரையாடல்களின் ஊடே தீயாக வந்துவிழுகின்றன சொற்கள். அன்றாட உரையாடல்களில் பயன்படுத்தாத அசிங்கச் சொற்கள் முகத்தில் அறைகின்றன. சொற்களே அறையும்போது, அந்தச் சொற்களுக்கு உரிய பொருட்களின் அறைகளை அன்றாடம் தாங்கிக்கொண்டிருக்கும் தூப்புக்காரிகளுக்கும் துப்புரவுத் தொழிலாளிகளுக்கும் எப்படி இருக்கும்...? வாசிப்பின் இடையே பல இடங்களில் கண்ணீர் கட்டிக்கொண்டதைக் கூறிக்கொள்ள வெட்கமில்லை எனக்கு.

* * *

நாவலிலிருந்து சில வரிகள்

குடலைப்பிடுங்கும் நாற்றத்திலும் முகம் சுழிக்காமல் நின்றான் மாரி. சாக்கடை வெள்ளத்தில் மூழ்கி அதை வாரி கரையேற்றிக் கொண்டிருந்தான். ... கறுப்புக்கலரில் பாய்ந்து வந்த அழுக்குகளை வாரியபோது எழுந்த துர்நாற்றத்தில் பக்கத்தில் சென்ற பலரும் மூக்கில் கைவைத்தபடியே கடந்து சென்றனர்.

உள்ளதுபோல சாக்கடைய ஓடவிட்டுட்டு இப்ப ஒண்ணும் தெரியாதது மாதிரி நல்லா பொத்திக்கிட்டு போங்க. தூறியதையும் வாரி எறிஞ்சிட்டு, தூமத்துணிகளையும் கலக்கி விட்டு, மீன் கழுவிய வெள்ளத்தையும் இதுல ஊத்தி, மோண்டு துப்பி விட்டுட்டு, இப்ப மட்டும் நாறுதோ... இதெல்லாம் வாரியவனுக்கு மணம், கொணம் ஒண்ணும் தெரியாதுன்னு நினைச்சீங்களோ... 

* * *

அடுத்தமுறை சாக்கடை சுத்தம் செய்யும் எவரையேனும் பார்க்க நேர்ந்தால் கைகொடுக்க இயலாவிட்டாலும், ஒரு புன்னகையைப் பரிமாறிக்கொள்ள இயலாவிட்டாலும் பரவாயில்லை, கேவலமான பார்வையை வீசிவிடாமல் போனாலே போதும்.  மலர்வதிக்கு அது வெற்றிதான். 

* * *

மலர்வதி வேறு யாருமில்லை. சில மாதங்களுக்கு முன்னால் சாகித்ய அகாதமி அழைப்பின்படி அஸாம் செல்ல பணமில்லாமல் தவிக்கிறார் என்று பத்திரிகைகள் மிகைப்படுத்தி எழுத, அதை ஆளாளுக்கு பேஸ்புக்கில் பகிர்ந்தார்களே, அதே எழுத்தாளர்தான். அவரை தில்லிக்கு வரவழைத்து தில்லித் தமிழ்ச் சங்கத்தின் வாயிலாக பணமுடிப்பு தரவும் ஏற்பாடு செய்திருந்தேன். மலர்வதிதான் வர இயலவில்லை என்று தெரிவித்து விட்டார். கடந்த மாதம் நூலை வரவழைத்தேன், இப்போதுதான் வாசிக்க முடிந்தது. 


அனல் பதிப்பகம், அனலகம், தண்ணீர்பந்தல், பாலூர், கருங்கல்-629157, தொலைபேசி - 9442584238

10 comments:

  1. இளைஞர் இலக்கியத்திற்கான சாகித்ய அகாதெமி பரிசு மலர்வதியின் ‘தூப்புக்காரி’க்குக் கிடைத்தது என்றதுமே இந்த நூலைப் படிக்க விழைந்தேன். வழியில்லை. புதியவனின் நூல் அறிமுகம் அந்த இயலாமையை ஓரளவு ஈடு செய்தது எனலாம். எடுத்துக்காட்டிய சில பகுதிகளைப் படிப்பதற்குள்ளேயே மனம் வலிக்க ஆரமித்துவிட்டது. முழுநூலையும் படித்தால் என்ன ஆகுமோ? எல்லாரும் படிக்கவேண்டும். இத்தகைய உணர்ச்சி ததும்ப எழுதும் இளம் தலைமுறையைப் போற்றி வளர்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு. -நியூஜெர்சியிலிருந்து கவிஞர் இராய.செல்லப்பா.

    ReplyDelete
  2. நல்ல நூல் அறிமுகம். நீங்கள் குறிப்பிட்டுள்ள காந்தியடிகளின் வார்த்தைகளுக்கு இந்தக் கதை மிகப் பெரிய அர்ததம் தருக்கிறது.

    ReplyDelete
  3. ஆமாம் ஸ்ரீநிவாசன். அதிலேயே எழுதியிருந்தேனே... புத்தகம் படித்து முடித்து வீடு திரும்பி வேலையில் இறங்கியதும் இந்த வாசகங்களைப் படிக்க நேர்ந்தது. தற்செயல் நிகழ்வு என்றாலும் அப்படியே அசைத்துவிட்டது. நன்றி.

    ReplyDelete
  4. உங்களைப் போலவே எனக்கும் ஒரு தற்செயல் நிகழ்வு...நானும் நேற்றுதான் தூப்புக்காரியைப் படித்து விட்டு என் முக நூல் பக்கத்தில் இப்படித்தொடங்கும் ஒரு பதிவிட்டிருந்தேன்..இன்று உங்களின் பக்கத்தை எட்வின் சார் அறிமுகம் மூலமாக வந்து படிக்கிறேன்...
    ## நாம் சாப்பிட்ட உணவு செரித்து கழிவுகள் நம் வயிற்றில் தங்கியிருந்து அது வெளி வந்த பின் அதனை மலம் எனச் சொல்லக் கூட வெட்கப்படுகிறோம்.ஆனால் அந்த இடத்தை சுத்தம் செய்து நாம் அங்கே நிம்மதியாக வாழ வகை செய்பவரை கையைப்பிடித்து கொண்டாட வேண்டாமா? வேண்டாம் அப்படியான மனிதர்களே வேண்டாம் என்கிறேன் ##...
    காந்தியடிகள் கூறியது போல் கதையைப் படிக்கும் போது பூவரசியுடன் அவளின் வாழ்விடத்தில் உட்புகுந்து வந்த உணர்வு பல இடங்களில் கண்ணீர் வரவழைத்தது உண்மையே....
    என் பதிவில் உங்களுடைய இந்தப் பதிவையும் இணைக்கிறேன்...

    ReplyDelete
  5. படிக்க தூண்டும் பதிவு இப்படி எழுத்தாளர்கள் கொண்டாடும் ஆரோக்கியமான ஒரு சமுகத்தை இப்பொழுது பார்க்க நேருகிறது விரைவில் தூப்புகாரி இல்லாத ஒரு சமூகத்தையும் பார்க்க வேண்டும் என்பதே அனைவரின் ஆசையை போல எனக்கும் ...........நன்றி வெளிச்சம் காட்டும் பதிவிற்கு

    ReplyDelete
  6. நானும் படிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருந்தேன்.. நிச்சயம் படிக்கிறேன்.

    ReplyDelete
  7. அருமையான நூல் விமர்சனம்...

    அழகான எழுத்து நடையில் தூப்புக்காரி குறித்த உங்கள் விமர்சனம் படித்ததும் பிடித்தது... வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  8. வேல்முருகன், எழில், கோவை சரளா, உஷா, சேகர் - உங்கள் அனைவரின் கருத்துக்கும் நன்றி.
    இந்நூலின் நடையும், முதிர்ச்சியின்மையும் பலராலும் விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இழிவாகக் கருதப்படுகிற மலத்தை அதன் முழு அர்த்தத்தில் வெளிப்படுத்திய முதல் தமிழ்நாவல் இதுதான் என்பது என் கணிப்பு.

    ReplyDelete
  9. தூப்புக்காரி நாவல் படித்தேன். ஒரு சிறந்த நாவல்.........

    ReplyDelete