ஏதேனுமொரு நூல்
பிடித்துப்போவதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். முக்கியமான ஒரு காரணம் அந்த நூலின்
பாத்திரங்களோடு அல்லது நிகழ்வுகளோடு நாம் ஒன்றிப்போவது. நூலில் உள்ள ஒன்று அல்லது
பல நிகழ்வுகள் நம்மோடு தொடர்புடையவையாக இருந்தால் இன்னும் அதிக ஒட்டுதல் ஏற்படும்.
அப்படிப்பட்ட அனுபவத்தைத் தந்தது காகிதப்படகில் சாகப்பயணம். பெ. கருணாகரன்
எழுதியது.
கருணாகரன் பேஸ்புக்கில் என்
நட்புவட்டத்தில் இருக்கவில்லை. ஆனாலும் நண்பர்களின் தயவால் அவ்வப்போது அவருடைய பதிவுகள்
அல்லது கமென்ட்கள் காணக்கிடைக்கின்றன. அண்மையில் பேஸ்புக் வழியாக வெளியிடப்பட்ட
அவருடைய நூலை பேஸ்புக் தோழி வடுவூர் ரமா கொண்டு வந்து தந்தார். வழக்கம்போல, இரண்டு நாட்களின் உணவுவேளைகளில் முடித்து விட்டேன்.
கருணாகரன் கடந்துவந்த பாதை
கிட்டத்தட்ட நான் கடந்து வந்த அதே பாதை என்பதே நூலுடன் என்னை மிகவும் ஒன்ற
வைத்தது. அவர் சென்னையில் வசித்த காலத்தில் நானும் சென்னையில் சில ஆண்டுகள்
இருந்தேன். அவர் கண்ட அரசியல் நிகழ்வுகளை நானும் கண்டேன். அவர் சந்தித்த
பத்திரிகையாளர்கள் சிலரை நானும் சந்தித்திருக்கிறேன். அவர் பணியாற்றிய சிறுகதைக்
கதிர் இதழின் தலைப்பு நக்கீரனுக்காக நான் ஆர்என்ஐ அலுவலகத்தில் வாங்கி அனுப்பிய
தலைப்புதான். அவர் பணியாற்றிய நக்கீரனுக்கு நானும் எழுதியிருக்கிறேன். நாளிதழும்
வார இதழும் எப்படி இயங்கும் என்பதை நானும் நேரில் கண்டிருக்கிறேன்.
பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்படும் பண உறைகள் குறித்து நானும்
கொதித்திருக்கிறேன். பணம் வாங்கிக் கொண்டு சிலரைப் போற்றி அல்லது சிலரின்
சின்னத்தனங்களை மறைத்து எழுதியவர்களை நானும் பார்த்திருக்கிறேன். இவர் பத்திரிகைத்
துறையிலேயே இருந்திருக்கிறார், நான் வேறு பக்கம்
திரும்பி விட்டேன்.
நூல் நேர்கோடாகச் செல்லாமல்
வாழ்வின் பல்வேறு கட்டங்களை முன்னும் பின்னுமாக முன்வைக்கிறது. விகடன் மாணவ
நிருபராகத் தொடங்கும் நூல், பள்ளி வாழ்வுக்குப்
பின் நகர்கிறது. மீண்டும் பத்திரிகையாள அனுபவத்துக்கு நகர்கிறது, மறுபடி மாணவ காலம் செல்கிறது.... ஒவ்வொரு
அத்தியாயத்தின் இறுதியிலும் பத்திரிகைத் துறையில் காலடி வைக்க விரும்புவோருக்கு, ஆசிரியர்களுக்கு, சக மனிதர்களுக்கு ஒரு செய்தி காத்திருக்கிறது. உபதேசமாக அல்ல, அனுபவத்தின் பாடமாக. தவிர, 31-32ஆம் அத்தியாயங்களில் இதழியல் குறித்து அருமையான சில
ஆலோசனைகள் இடம்பெற்றுள்ளன. இளையவர்களுக்குப் பயனுள்ளவை.
தமிழகத்தின் குறிப்பிடத்தக்க
இதழாளர்கள் அனைவரும் இந்நூலில் வருகிறார்கள். அவர்களுடனான அனுபவங்கள் இடம்
பெற்றுள்ளன. சிலரை பிரமிக்கவும், சிலரை பிரேமிக்கவும்
வைக்கிறார் கருணாகரன். ஒரு பத்திரிகையாளனும் அரசியல்வாதியும் மனம்திறந்து
எல்லாவற்றையும் எழுதிவிட முடியாது. சில பிம்பங்களை உடைத்து விடாதிருக்க
வேண்டியிருக்கும், சில பெயர்களைக்
குறிப்பிடாமல் இருக்க வேண்டியிருக்கும், சில விஷயங்களை
மறைக்க வேண்டியிருக்கும். இந்த நூலிலும் அதைக் காண முடிகிறது. நூலாசிரியரே அதை
முன்னுரையில் கோடிகாட்டியிருக்கிறார். எனக்குப் புரிகிறது.
கருணாகரன், இருபத்தேழு ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில்
இருக்கிறார் என்பதை நூலின்வழி அறிகிறேன். தன்னை ஸ்திரப்படுத்திக்கொண்ட, பிரபலமாகிவிட்ட பத்திரிகையாளராக பல்லாண்டுகாலம்
நீடிப்பது பெரிய விஷயம் இல்லை. வெளித்தெரியாத இடைநிலைப் பத்திரிகையாளராக 27 ஆண்டுகளைக் கடத்துவது என்பது சாமானிய விஷயமில்லை.
பாராட்டுகள் கருணாகரன். சமரசமில்லா இதழாளராகத் தொடருங்கள் உங்கள் பயணத்தை.
யான் பெற்ற இன்பம் பெறுக
இவ்வையகம் என எனக்குக் கிடைத்த நூலை தில்லித் தமிழ்ச் சங்க நூலகத்துக்கு அனுப்பி
விட்டேன்.
காகிதப் படகில் சாகசப் பயணம், பெ. கருணாகரன்
குன்றம் பதிப்பகம், 73/31, பிருந்தாவனம் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை - 600 033. விலை ரூ. 150
கருணாகரனின் ஃபேஸ்புக் : https://www.facebook.com/perumal.karunakaran.1