Wednesday, 3 December 2014

திறந்துவிடு சீசேம்...
தகவல் தொழில்நுட்ப யுகத்தில் பாஸ்வேர்டுகளை நம்ப வேண்டிய தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. எந்தப் பாஸ்வேர்ட் எதற்கானது என்று நினைவு வைப்பதும், மிகவும் யோசனை செய்து ஜாக்கிரதையாக உருவாக்கிய பாஸ்வேர்டுகளை நினைவு வைப்பதும் சிரமம்... இதைப்பற்றி உங்களுக்கெல்லாம் சொல்லத் தேவையில்லை.

சிறிது காலத்திற்கு முன்பு வரை வாழ்க்கை எவ்வளவு எளிதாக இருந்தது! பரிமாற்றத்திலிருந்த தகவல்களும் டேட்டாக்களும் குறைவு. எனவே நினைவுத் திறனுக்கு வேலையும் குறைவுதான். ஆனால் இன்று எல்லாத் திசைகளிலிருந்தும் எல்லாவிதத் தகவல்களும் வந்து குவிகின்றன. எதை ஏற்பது எதை ஒதுக்குவது என்றே தெரியவில்லை!

அப்படி ஏற்றுக் கொள்ள வேண்டியவற்றில் பாஸ்வேர்டும் ஒன்று. நினைவு வைத்துக் கொள்ள வேண்டிய பாஸ்வேர்டுகளை எல்லாம் எழுதி வைத்துக் கொள்ளவும் முடியாது. பட்டியல் நீ...ண்...டு... கொண்டே போகும்.
 • கம்யூட்டர் லாகின் பாஸ்வேர்ட் ஒன்று.
 • பயாஸ் செட்டிங்கில் போக ஒரு பாஸ்வேர்ட்.
 • லேன் இணைப்பில் லாக்இன் பாஸ்வேர்ட்.
 • அடுத்த கம்ப்யூட்டரை நோண்டவும் பாஸ்வேர்ட்
 • கம்ப்யூட்டரில் நீங்கள் அடித்துவைத்த பைல்களுக்கான பாஸ்வேர்டுகள் வேறு. இல்லையேல் உங்கள் பயோ-டேட்டா போன்ற முக்கிய ரகசியங்களை வேறுயாரும் பார்த்துவிடக்கூடும்!
 • இணைய இணைப்புக்கு ஒரு பாஸ்வேர்ட்...
 • உங்கள் மின்அஞ்சலுக்கு ஒரு பாஸ்வேர்ட். இப்போதெல்லாம் யாரும் ஒரு மின்னஞ்சல் கணக்கு வைத்துக்கொள்வதில்லை. நான்கு கணக்குகள் இருந்தால் நான்கு பாஸ்வேர்டுகள்.
 • பேஸ்புக் பாஸ்வேர்ட்.
 • டிவிட்டர் பாஸ்வேர்ட் வேறு.
 • வலைப்பூவில் நுழைய ஒரு பாஸ்வேர்ட்
 • எத்தனை திரட்டிகளில் வலைப்பூவை சேர்க்கிறீர்களோ அத்தனைக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்ட்
 • வங்கிகள் இன்று ஏராளமான வசதிகளைச் செய்து வருகின்றன. அத்துடன் உங்கள் மூளைக்கு வேலையையும் பளுவையும் சேர்த்து விட்டன! தானியங்கி காசு தரும் ஏடிஎம் இயந்திரத்துக்கு ஒரு பாஸ்வேர்டு.
 • போன் பேங்கிக் வசதி வேண்டுமா? கஸ்டமர் ஐடி எண், தொலைபேசி ஐடி எண், சொந்த ஐடி எண் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
 • லாக்கருக்கு ஒரு பாஸ்வேர்ட்...
 • கடன் அட்டைகளுக்கும் பாஸ்வேர்டு...
 • இணைய வங்கிக் கணக்குக்கு லாகின் பாஸ்வேர்டு. டிரான்சாக்‌ஷன் பாஸ்வேர்டு. இரண்டு மூன்று வங்கிக் கணக்குகள் இருந்தால் இன்னும் தொல்லை!
 • வாடிக்கையாளர்கள் சாவியைத் தொலைத்து விட்டு அவதிப்படுகிறார்களே என்று ப்ரீப்கேஸ் உற்பத்தியாளர்கள் நம்பர் பூட்டு வைத்தார்கள். நமக்கு இன்னும் ஒரு நம்பரை நினைவில் வைக்க வேண்டியதாயிற்று! உங்கள் பெட்டியில் இரண்டு நம்பர் பூட்டுகளா? இரண்டு நம்பர்களை நினைவில் வைத்திருக்க வேண்டும்!!
 • உங்கள் செல்போனை ஆன் செய்வதற்கு ஒரு ஐடி எண்ணும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க உங்கள் செல்போனின் பத்து இலக்க எண்ணும் ஞாபகத்தில் இருக்க வேண்டும்.
 • செல்போனுக்கு பின் நம்பர் ஒன்று
 • தவறுதாலக லாக் ஆகிவிட்டால் திறப்பதற்கு பிஏகே எண் தனி.
 • ஏற்கெனவே உங்களிடம் இருக்கும் தொலைபேசி, பேக்ஸ், ஈ-மெயில், இணையத்தளப் பெயருடன் இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • இணைய விற்பனைத் தளங்களுக்கு லாகின்-பாஸ்வேர்டு.
 • கிரெடிட் கார்டுக்கு ஒரு பின் எண். பாதுகாப்பு வலைக்கு மற்றொரு பாஸ்வேர்ட்
இத்தோடு போகப்போகிறதா... நாளை வரவிருக்கும் புதிய புதிய கண்டுபிடிப்புகள் ஒவ்வொன்றையும் இயக்க ஒவ்வொரு பாஸ்வேர்ட் தேவைப்படுமாம்!

நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய, எண்ணும் எழுத்துமான அத்தனை பாஸ்வேர்டுகளையும் நினைவுக்குக் கொண்டுவர முடியுமா? எண்களால் மட்டும் அமைந்த பாஸ்வேர்டுகளை நினைவில் வைத்திருப்பது சிரமம். சொற்களாக இருந்தால் கொஞ்சம் சுலபம்.

உங்களுடைய அல்லது உங்கள் மனைவியுடைய அல்லது குழந்தையின் பிறந்த தேதியை பாஸ்வேர்டாகக் கொள்வது உங்களுக்கு சுலபம்தான். ஆனால் மற்றவர்களுக்கும் சுலபம். இனிஷியல், புனைப்பெயர், சுருக்கப்பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்துவது மிகவும் பழைய உத்தி.

இப்போதெல்லாம் எந்தத் தளத்திலும் சாதாரண எழுத்துகள் அல்லது எண்கள் மட்டுமே ஏற்பதில்லை. மிகவும் சிறியதாகவும் இருக்கக்கூடாது, மிக நீளமாகவும் இருக்க முடியாது. * போன்ற சிறப்புக் குறிகளும் பாஸ்வேர்டில் சேர்க்க வேண்டும். அல்லது ஓரெழுத்தாவது கேபிடல் எழுத்தில் இருக்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தினாலும் பயன்படுத்தாவிட்டாலும் சில வங்கிக் கணக்குகளில் 6 மாதத்துக்கு ஒருமுறை பாஸ்வேர்ட் மாற்றவும் வேண்டியிருக்கும்.

எனவே, இதோ சில ஆலோசனைகள் -

 • உங்கள் பாஸ்வேர்டுகளை எல்லாம் துண்டுச்சீட்டில் எழுதி பர்சில் வைத்துக் கொள்ளுங்கள் - ஆனால் பர்ஸ் திருடுபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் தலைவலி!
 • பழைய காதலியின் (காதலிகளின்) / காதலனின் (காதலர்களின்) பெயர்களையும் நிறையப்பேர் பயன்படுத்துகிறார்கள். வாழ்க்கைத் துணைக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு.
 • உங்கள் பாஸ்வேர்டுகளை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து வைத்துக் கொள்ளுங்கள் - யாருக்கும் தமிழ் தெரியாத அலுவலகமாக இருக்கட்டும். தமிழ் அலுவலகமாக இருந்தால் பிரெஞ்சு அல்லது ஜப்பானிய மொழியில் வைத்துக் கொள்ளுங்கள் (அதற்காக அந்த மொழிகளைப் படிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு!)
 • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பெயர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். என் நண்பர் ஒருவர் மதுபானக் கம்பெனிகள் அல்லது மதுபானங்களின் பெயர்களை பாஸ்வேர்டாக மாற்றி மாற்றிப் பயன்படுத்துகிறார்.
 • எண்களை எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய மனைவி உங்களுக்கு வாய்த்திருந்தால் அவரை நடமாடும் டைரியாகப் பயன்படுத்தலாம்! ஆனால் உங்கள் எல்லா விவரங்களும் அவரும் பார்க்கும் வாய்ப்பு அல்லது ஆபத்து இருக்கிறது
 • பாஸ்வேர்டுகளை எல்லாம் எழுதி எல்லாருக்கும் தெரிகிற மாதிரி இடத்தில் மாட்டிவிடுங்கள். இது ஏதோ சூழ்ச்சி என்று கருதி யாரும் தொட மாட்டார்கள்! நான் பார்த்த ஓர் அரசு அலுவலகத்தில் கதவின் உள்புறத்தில் பெரிய எழுத்தில் அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது இப்படி - PASSWORD FOR THE COMPUTER IS THE ROOM NUMBER
2013இல் மிக அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட பாஸ்வேர்டுகளில் முதலிடம் பிடித்த 5 (படத்தில் இருப்பது இவைதான்) --
123456
password - ஆமாம் பாஸ்வேர்ட்தான் !
12345678
qwerty
abc123

உங்கள் பாஸ்வேர்டுகளை எல்லாம் கம்ப்யூட்டரில் ஒரு பைலில் பதிந்து அந்த பைலுக்கு ஒரு பாஸ்வேர்டு கொடுத்து விடுங்கள். இன்னும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டுமானால் அந்த பைலை மறைத்தும் வைக்கலாம். பாஸ்வேர்டால் பாதுகாக்கப்பட்ட பாஸ்வேர்டுகள் அடங்கிய பைலின் பாஸ்வேர்டை எப்படி நினைவுக்குக் கொண்டு வருவது என்பது உங்கள் பிரச்சினை.

இன்றைய கல்வித் திட்டத்தில் உருப்போடுவதைக் காட்டிலும் உருவாக்குவதற்குத்தான் முக்கியத்துவம் அதிகமாம். உருப்போட்டுப் படித்துவந்த நமக்கே இவ்வளவு சிக்கல் என்றால் நம் குழந்தைகளுக்கு என்ன ஆகும்? இந்த 'அதிர்ஷ்டமில்லாத' குழந்தைகளை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்!

 - ஸ்டிரைட்ஸ் என்னும் இதழுக்காக என்றோ மொழியாக்கம் செய்ததை சுருக்கி, விரித்து, மேம்படுத்தியது.

2 comments:

 1. பாஸ்வேர்ட் பற்றி நல்ல பகிர்வு... உங்கள் யோசனைகளைச் சொல்லி அதற்குள் நகைச்சுவையையும் புகுத்தி விட்டீர்களே...
  அருமை சார்.

  ReplyDelete
 2. அத்தனைக்கும் பாஸ்வேர்ட்.... ரொம்பவே தொந்தர்வு தரும் விஷயம் தான்.....

  ReplyDelete