Wednesday, 28 September 2016

கனவுதேசம் நூலுக்கு பகத்சிங் முன்னுரை

`கனவு தேசம்' நூலுக்கு முன்னுரை 

பகத் சிங்


என் இனிய நண்பர் எல். ராம் சரண் தாஸ், `கனவு தேசம்' என்ற தன் கவிதைத் தொகுப்புக்கு முன்னுரை எழுதுமாறு கேட்டிருக்கிறார். நான் கவிஞனும் இல்லை, இலக்கியப் படைப்பாளியும் இல்லை; நான் ஒரு பத்திரிகையாளனோ அல்லது விமர்சகனோ அல்ல. ஆகையால், எந்த வகையில் பார்த்தாலும் அவருடைய கோரிக்கையில் நியாயம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

ஆயினும், நான் இப்போது வைக்கப் பட்டிருக்கிற சூழ்நிலை, கவிதை நூலாசிரியருடன் விவாதம் புரிய வாய்ப்பாக இல்லை என்பதால் என் நண்பரின் விருப்பத்துக்கு இணங்குவதைத் தவிர வேறு வழி இல்லை. நான் கவிஞன் அல்ல என்பதால் கவித்துவப் பார்வையில் அதைப்பற்றி விவாதிக்கப் போவதில்லை. எதுகை மோனை பற்றி எனக்கு அட்சரமும் தெரியாது; எனவே கவிதை இலக்கணத்தின்படி பார்த்தால் இந்நூல் நன்றாக இருக்கிறதா என்பதும் தெரியாது. நான் இலக்கியப் படைப்பாளி அல்ல என்பதால் தேசிய இலக்கியத்தில் இந்நூலுக்கு உரிய இடம் தருவது என்ற நோக்கில் நான் விவாதிக்கப் போவதில்லை. நான் ஒரு அரசியல் போராளி என்பதால் அந்த நோக்கில் மட்டுமே அதைப் பற்றி விவாதிக்க முடியும். ஆனால் இதிலும்கூட ஒரு அம்சம் என் வேலையை கடினமாக்கி விடுகிறது பொதுவாக, நூலாசிரியரின் படைப்பில் உள்ள கருத்துகளுடன் ஒத்த சிந்தனை உடையவரால்தான் முன்னுரை எழுதப்படும். ஆனால் இங்கே இதற்கு நேர்மாறாக இருக்கிறது. எல்லா விஷயங்களிலும் எனக்கும் என் நண்பருக்கும் ஒத்த கருத்து இருப்பதாகக் கூற முடியாது. முக்கியமான பல விஷயங்களில் நான் மாறுபட்ட கருத்துக் கொண்டிருக்கிறேன் என்பதை அவர் நன்கு அறிவார். ஆகவே, நான் எழுதப்போவது நிச்சயம் முன்னுரையே அல்ல. அதிகபட்சமாகச் சொன்னால் அதை விமர்சனம் என்று கூறலாம்; அது இடம் பெற வேண்டிய இடம் நூலின் ஆரம்பம் அல்ல, இறுதியாகத்தான் இருக்க முடியும். 

அரசியல் களத்தில் `கனவு தேசம்' முக்கியமான இடத்தை வகிக்கிறது. நடப்புச் சூழ்நிலைகளில், இயக்கத்தில் உள்ள முக்கியமான இடைவெளியை இது இட்டு நிரப்புகிறது. சரியாகச் சொன்னால், நம் நவீன வரலாற்றில் இதுவரை முக்கியப் பங்காற்றி வந்திருக்கிற நம் நாட்டு அரசியல் இயக்கங்கள் அனைத்துமே தம்முடைய இறுதி இலக்கு எது என்பதில் தெளிவாக இல்லை. புரட்சி இயக்கமும் இதற்கு விதிவிலக்கு அல்ல. நான் ஏராளமான முயற்சிகளைச் செய்த பிறகும், தாம் எதற்காகப் போராடுகிறோம் என்பது பற்றிய தெளிவான சிந்தனைகளைக் கொண்ட அரசியல் இயக்கம் எதையும் காண முடியவில்லை; கதார் கட்சி இதற்கு விதிவிலக்கு அமெரிக்க பாணி அரசின்பால் ஈர்க்கப்பட்ட கதார் கட்சி, தற்போதைய அரசை அகற்றி விட்டு அந்த இடத்தில் குடியரசு வகையான ஆட்சி அமைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறியது. மற்ற கட்சிகளில் இருப்பவர்களுக்கெல்லாம் ஒரே கருத்துதான் — அதாவது, அன்னிய ஆட்சியாளர்களை எதிர்த்துப் போராடுவது. இது கருத்தளவில் பாராட்டத் தக்கதுதான், ஆனால் புரட்சிகரக் கருத்து என்று கூற இயலாது. 

புரட்சி என்றால் வெறும் கலக எழுச்சியோ அல்லது இரத்தம் சிந்தும் மோதலோ அல்ல என்பதை நாம் தெளிவுபடுத்தியாக வேண்டும். தற்போதைய அரசாங்க அமைப்பை (அதாவது, ஆட்சியை) முற்றிலுமாகத் தகர்த்து விட்டு புதிய, மேம்பட்ட அடித்தளத்தில் சமூகத்தை மறுகட்டமைப்புச் செய்வதற்கான அமைப்பு ரீதியான திட்டம் என்பதும் புரட்சியில் உள்ளடங்கி இருக்க வேண்டும். அரசியல் களத்தில், தற்போதைய அரசின்கீழேயே சில சலுகைகள் வேண்டும் என்றார்கள் மிதவாதிகள்; இன்னும் அதிகமாக வேண்டும் என்று கோரும் தீவிரவாதிகள் அதற்காக தீவிர வழிமுறைகளைப் பின்பற்றவும் தயாராக இருந்தார்கள். அன்னிய ஆதிக்கத்தைத் தூக்கியெறிவது என்ற ஒரே கருத்தில் அதற்காக எத்தகைய தீவிர வழிமுறையையும் பின் பற்றலாம் என்று புரட்சிக்காரர்கள் எப்போதும் கருதி வந்திருக்கிறார்கள். இந்த வழிகளின்மூலம் சில சலுகைகளைக் கறந்து விடலாம் என்று கருதிய சிலர் இருந்தார்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை. இந்த இயக்கங்கள் அனைத்தையுமே புரட்சி இயக்கங்கள் என்று துல்லியமாக வகைப்படுத்த முடியாது. 

ஆனால் ராம் சரண் தாஸ், 1908இல் வங்கத்திலிருந்து தலைமறைவான ஒருவரால் பஞ்சாபில் முறையாகப் பயிற்சியளிக்கப்பட்ட முதல் புரட்சிக்காரர். அன்று முதல் பல்வேறு புரட்சி இயக்கங்களுடன் அவர் தொடர்பு வைத்திருந்தார்; இறுதியில் கதார் கட்சியில் சேர்ந்தார். இருந்தாலும் தன் பழைய புரட்சிக் கருத்துகளையும் விட்டு விடாமலிருந்தார். 

இதில் சுவையும் மதிப்பும் மிக்க இன்னொரு அம்சமும் உண்டு. 1915ஆம் ஆண்டில் ராம் சரண் தாஸுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது நாடு கடத்தும் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது. இன்று மரண தண்டனைக் கைதியாக சிறைக் கொட்டடிக்குள் உட்கார்ந்திருக்கிற நான் வாசகர்களுக்கு உறுதியாகச் சொல்ல முடியும் — ஆயுளுக்கும் நாடு கடத்தப்படும் தண்டனை, மரண தண்டனையை விட பல மடங்கு கடுமையானது. ராம் சரண் தாஸ் பதினான்கு ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியதாயிற்று. 

தெற்கே உள்ள ஒரு சிறையில் இருக்கும்போதுதான் அவர் இந்தக் கவிதை நூலை எழுதியிருக்கிறார். அந்தச் சிறைவாசத்தின் போது ஏற்பட்ட உளப்பாங்கும் மனப்போராட்டமும் அவர் கவிதைகளில் பதிந்துள்ளன; இது கவிதைகளுக்கு அழகும் சுவையும் சேர்க்கிறது. இதை எழுதுவதற்கு முன்னால், தனக்கு ஏற்பட்ட விரக்தியான மனநிலையை எதிர்த்து அவர் கடுமையாகப் போராடியிருக்கிறார். அவருடைய தோழர்கள் பலர் அரசுக்கு உறுதிமொழி எழுதிக்கொடுத்து விட்டு விடுதலை பெற்ற சூழலில், இதே போன்ற உந்துதல் நூலாசிரியர் உள்பட ஒவ்வொருவருக்குள்ளும் கடுமையாக இருக்கும் என்ற சூழலில், மனைவி குழந்தைகள் பற்றிய இனிதான, வேதனையான நினைவுகள் விடுதலை ஏக்கத்தை மேலும் தீவிரமாக்கும் சூழலில், நம்பிக்கை இழக்க வைக்கும் அவற்றின் தாக்கத்திலிருந்து விடுபட அவர் கடுமையாகப் போராடி இருக்கிறார்; அவற்றிலிருந்து மனதைத் திருப்ப இதை எழுதியிருக்கிறார். அதனால்தான் இந்த முதல் கவிதை சட்டென்று வெடிக்கிறது: 
நண்பர்கள், மனைவி, குழந்தைகள் 
என்னைச் சுற்றி 
நாற்றிசையிலும் நச்சுப் பாம்புகள் 

துவக்கத்திலேயே அவர் தத்துவத்தைப் பேசுகிறார். வங்கத்திலும் சரி, பஞ்சாபிலும் சரி, இந்தத் தத்துவம்தான் புரட்சி இயக்கங்கள் அனைத்துக்கும் முக்கியமாக இருக்கிறது. இந்த விஷயத்தில் நான் அவருடைய கருத்திலிருந்து மிகவும் விலகி நிற்கிறேன். பிரபஞ்சத்தைப் பற்றிய அவருடைய கருத்து முடிவு சார்ந்தது, இயற்கைக்கு அப்பாற்பட்டது. ஆனால் நானோ பொருள்முதல்வாதி; பிரபஞ்சத்தைப் பற்றிய என் கருத்து, காரணகாரியம் சார்ந்தது. இருந்தாலும் அவருடைய கருத்து கால வர்த்தமானத்திற்குப் பொருந்தாதது அல்ல. நம் நாட்டில் பொதுவாக நிலவும் கருத்துகள் இவர் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு இசைந்தவை. விரக்தியூட்டும் மனநிலையை எதிர்த்துப் போராட இவர் பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்; நூலின் தொடக்கப்பகுதி முழுவதும் கடவுளுக்கு அர்ப்பணிக்கப் பட்டு, கடவுளின் புகழ் பாடுகிறது. விரக்தியின் இயற்கையான தொடர்விளைவாக ஏற்படும் கற்பனா வாதத்தின் விளைவுதான் கடவுள் நம்பிக்கை. இந்த உலகம் ஒரு `மாயை' அல்லது `புனைவு' என்ற கருத்து சங்கராச்சாரியார் போன்ற புராதன இந்துத் துறவிகளால் உருவாக்கப்பட்டு வளர்ந்து வந்திருக்கிற கற்பனா வாதம். ஆனால் பொருள்முதல்வாதத் தத்துவத்தில் இத்தகைய சிந்தனைக்கு சிறிதும் இடமே இல்லை. 

இருப்பினும், நூலாசிரியரின் கற்பனாவாதம் இலக்கற்றது அல்லது தரமற்றது என்று கூறிவிட இயலாது. அதில் அதற்கே உரிய அழகும் கவர்ச்சியும் உண்டு. கருத்துகள் ஊக்கமளிப்பதாக உள்ளன. இதைப் பாருங்கள்: 
கண்ணுக்குத் தெரியாத அடிக்கல்லாய் இரு 
உன் மார்பின்மீது எழும்பி நிற்கட்டும் 
உயர்ந்து பரந்த விரிந்த கட்டிடம் 
துன்பம் சுமப்பதில்தான் உண்மை இன்பம் 
உலகமே புகழ்ந்து போற்றிப் பாடிடும் 
உச்சியில் பொதிந்து மின்னும் கல்லிடம் 
உனக்குத் தேவையில்லை பொறாமை எதுவும். 

என்னுடைய சொந்த அனுபவங்களிலிருந்து நான் உறுதியாகக் கூற முடியும்: `நம்பிக்கையும் இன்றி, அச்சமும் இன்றி', `யாராலும் அறியப்படாமல், போற்றப்படாமல், புகழப்படாமல் உயிர் துறக்க எப்போதும் தயாராக இருந்து' எந்தநேரமும் உயிருக்கு ஆபத்தான வேலைகளை மேற்கொண்டு இரகசிய வாழ்க்கை நடத்துகிற ஒரு மனிதன், எந்த வகையிலும் உற்சாகத்தைக் குலைக்காத இத்தகைய கற்பனா வாதத்தின் துணையில்லாமல் தனக்குள் எழும் சுயநல உந்துதல்களை வெற்றி கொள்ள இயலாது. 

அடுத்ததாக அவர் எடுத்துக் கொள்வது, ஒரு புரட்சிக் காரனின் மனப்போக்கு. வன்முறைச் செயல்கள் பலவற்றுக்குப் பொறுப்பான ஒரு புரட்சிக் கட்சியின் உறுப்பினராக இருந்தவர் ராம் சரண் தாஸ். ஆயினும் புரட்சிக்கார்களை இரத்தவெறி பிடித்தவர்கள் என்றோ, அழிப்பதில் மகிழ்ச்சி காண்பவர்கள் என்றோ கூறி விட முடியாது. இதைப் படியுங்கள்: 
வேளை வந்தால் வெளியே முரட்டுத்தனம் காட்டு 
எனினும் இதயத்தில் மென்மையைப் போற்று 
தேவை வந்தால் சீறு, எனினும் கடிக்காதே 
மனதில் நேசம் கொள் வெளியே போராடு ... 

புதியதைக் கட்டியெழுப்பும்போது பழையதை அழித்தல் அவசியமானது மட்டுமல்ல, தவிர்க்க முடியாதது. புரட்சிக்காரர்கள் தமது திட்டத்தின் அவசியமான ஒரு அங்கமாக இதனைப் பின்பற்ற வேண்டும் என்பதையும், வன்முறை மற்றும் அகிம்சைத் தத்துவங்களும் மேலே குறிப்பிட்ட வரிகளில் அழகாக விளக்கப்பட்டுள்ளன. லெனின் ஒருமுறை கார்க்கியிடம் கூறினார் ``என்னால் இசையைக் கேட்க இயலாது. காரணம், இசை என் நரம்புகளைத் தூண்டி விடுகிறது, இசைக்கலைஞர்களின் தலையைத் தட்டிக்கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் இது தட்டிக் கொடுக்க வேண்டிய தருணமல்ல. நமது இறுதி இலக்கு எல்லாவித வன்முறைகளையும் ஒழித்துக்கட்டுவதே என்றாலும்கூட, கைகள் இப்போது மண்டைகளைத் தகர்க்கவே கீழே இறங்குகின்றன.'' அத்தியாவசியத் தேவையாக வன்முறை வழிகளைக் கைக்கொள்ள நேரும்போது புரட்சிக்காரர்கள் இவ்வாறுதான் உணர்கிறார்கள். 

அடுத்ததாக, முரண்பட்டு நிற்கும் பல்வேறு மதங்களைப் பற்றி அலசுகிறார் ஆசிரியர். தேசியவாதிகள் பலரும் முயற்சி செய்வது போலவே இவரும் மதங் களுக்கு இடையே சமரசத்தையே பேசுகிறார். மதம் என்ற பிரச்சினையை விளக்க இவர் கைக்கொள்ளும் பாதை நீளமானது, சுற்றி வளைத்துச் செல்வது; நானோ, இதை காரல் மார்க்சின் ஒற்றை வரியில் ஒதுக்கித் தள்ளி விடுவேன் `மதம் என்பது மக்களை மயக்கும் அபின்''. 

கடைசியாக வருகிறது கவிதைத் தொகுப்பின் மிக முக்கியமான பகுதியான எதிர்காலச் சமுதாயம்; நாம் உருவாக்க ஏங்கும் சமுதாயம். இருப்பினும் நான் ஒரு விஷயத்தை ஆரம்பத்திலேயே தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன். `கனவுதேசம்' தெளிவான ஒரு கற்பனை. இதை நூலாசிரியர் தலைப்பில் மிகத் தெளிவாகவே ஒப்புக் கொள்கிறார். இந்த விஷயத்தைப் பற்றி அறிவியல் பூர்வமான கட்டுரை எழுதுவதாக நடிக்கவில்லை. `கனவு தேசம்' என்ற தலைப்பு இதைத் தெளிவுபடுத்தி விடுகிறது. இருப்பினும், சமூக முன்னேற்றத்தில் கற்பனா வாதங்களும் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றன என்பதில் ஐயமில்லை. செயின்ட் சைமன், ஃபூரியர், ராபர்ட் ஓவன் போன்றோரும் அவர்களுடைய சூத்திரங்களும் இல்லை என்றால் அறிவியல்பூர்வமான மார்க்சிய சோஷலிசமும் கிடைத்திருக்க முடியாது. ராம் சரண் தாசின் கற்பனாவாதமும் இதே ரகத்தைச் சேர்ந்தது. நமது இயக்கம் அவர்களுடைய இயக்கத் தத்துவங்களை முறைப்படுத்த வேண்டிய முக்கியத்துவத்தை உணர்ந்து, இயக்கத்தைப் பற்றிய அறிவியல் பார்வையை உருவாக்கும்போது இந்தப் புத்தகம் மிகவும் உதவியாக இருக்கும். 

கருத்து வெளிப்பாட்டு விதம் கரடுமுரடாக இருக்கிறது என்பதைக் காண்கிறேன். தனது கற்பனா வாதத்தைப் பேசும்போது தற்காலச் சமுதாயத்தின் கருத்துகள் அவர் மனதை பாதிக்கத்தான் செய்கின்றன. ``தேவையில் உள்ளவர்களுக்கு தர்மம் செய்தல்.'' எதிர்காலச் சமுதாயத்தில், அதாவது நாம் கட்டியமைக்க விரும்பும் கம்யூனிச சமூகத்தில், நாம் தானதர்ம நிறுவனங்களை நிறுவப்போவதில்லை; ஏனெனில், அதில் தேவையுள்ளவர்களும் ஏழைகளும் இருக்க மாட்டார்கள், தானம் கொடுப்பதும் இருக்காது, பெறுவதும் இருக்காது. நூலாசிரியர் அலசுகிற பொதுவான வழிமுறை விஞ்ஞான சோஷலிசத்தை மிகவும் ஒத்திருக்கிறது. என்றாலும், இதில் எதிர்க்க வேண்டிய அல்லது முரண்பட வேண்டியவை தெளிவாகச் சொன்னால் திருத்த வேண்டியவை உள்ளன. எடுத்துக்காட்டாக, 427ஆம் பத்திக்கான அடிக்குறிப்பில் கூறுகிறார் — அரசுப் பணியாளர்கள் தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக சம்பாதிப்பதற்கு பண்ணைகளில் அல்லது தொழிற் சாலைகளில் தினமும் நான்கு மணி நேரம் உழைக்க வேண்டும். 

இது கற்பனாவாதம், நடைமுறைக்கு ஒவ்வாதது. சொல்லப்போனால், அரசாங்க ஊழியர்களுக்கு மிக உயர்ந்த ஊதியம் வழங்கப்படுகிற தற்போதைய சமூக அமைப்பின்மீது ஏற்பட்ட எதிர்ப்பு உணர்வால் உருவான கருத்து இது. உண்மையைச் சொன்னால், மூளை உழைப்பும் உடலுழைப்பு போலவே ஆக்கப்பணிதான் என்று போல்ஷ்விக்குகள்கூட ஒப்புக் கொண்டுள்ளனர். எதிர்காலச் சமுதாயத்தில், பல்வேறு பிரிவுகளின் உறவுகள் சமத்துவத்தின் அடிப்படையில் சரிசெய்யப்படும்போது, உற்பத்தி செய்பவர்களும் விநியோகம் செய்பவர்களும் சமமாகவே கருதப் படுவார்கள். ஒரு மாலுமி தன் வாழ்க்கைத் தேவைக்காக தினமும் கப்பலை நிறுத்தி விட்டு நிலத்திற்கு வந்து தினமும் நான்கு மணி நேரம் உழைக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா? அல்லது ஒரு விஞ்ஞானி தன் ஆய்வுக்கூடத்தையும் சோதனையையும் (பணியை) விட்டு விட்டு தனக்கிடப்பட்ட பண்ணை வேலையை செய்ய முடியுமா? இரண்டு பிரிவினருமே மிகவும் ஆக்கபூர்வமான உழைப்பையே செய்து வருகிறார்கள். சோஷலிச சமூகம் எதிர்பார்க்கிற ஒரே ஒரு வித்தியாசம் உடலுழைப்பாளர்களைவிட மூளை உழைப்பாளர்கள் உயர்ந்தவர்கள் என்று கருதப்பட மாட்டார்கள்.

ராம் சரண் தாஸ் கூறும் இலவசக் கல்வி என்பது உண்மையியே கவனிக்க வேண்டிய கருத்து; ரஷ்யாவில் உள்ள சோஷலிச அரசு கிட்டத்தட்ட இதேபோன்ற வழியைத்தான் ஏற்றுக் கொண்டுள்ளது. குற்றம் பற்றிய நூலாசிரியரின் கருத்து உண்மையில் மிகவும் நவீனச் சிந்தனையாகும். குற்றம்தான் சமூகத்தின் மிகக் கடுமையான பிரச்சினை, மிகவும் சாதுர்யமாகக் கையாள வேண்டிய பிரச்சினை. தன் வாழ்வின் பெரும் பகுதியை சிறையில் கழித்திருக்கிறார் என்பதால் அவருக்கு நேரடி அனுபவம் உண்டு. சிறையில் புழங்கும் `இலேசான உழைப்பு, மிதமான உழைப்பு, கடும் உழைப்பு' போன்ற சொற்களை அவர் ஒரு இடத்தில் பயன்படுத்தி இருக்கிறார். குற்றம் செய்தவருக்கு பதிலடி தருவது, அதாவது பழிக்குப் பழியாக என்று இல்லாமல், சீர் திருத்தும் வழியாகவே தண்டனை அமைய வேண்டும் என்று எல்லா சோஷலிசவாதிகளைப் போலவே இவரும் கூறுகிறார். தண்டிப்பது அல்ல, சீர்திருத்தி திரும்பிப் பெறுவதே நீதிமுறை நிர்வாகத்தின் வழிகாட்டிக் கொள்கையாக இருக்க வேண்டும். சிறைகள் சீர்திருத்தும் மையங்களாக இருக்க வேண்டும், நரகங்களாக இருக்கக் கூடாது. இந்த விஷயத்தில் ரஷ்ய சிறை அமைப்பு பற்றி வாசகர்கள் படிக்க வேண்டும்.

இராணுவத்தைப் பற்றி எழுதும்போது இவர் போர் பற்றியும் எழுதுகிறார். என்னைப் பொறுத்தவரை, போர் என்பது உலகக் கலைக்களஞ்சியத்தில் மிகச் சில பக்கங்களை மட்டுமே நிரப்ப வேண்டும்; போர்த் தளவாடங்கள் அருங்காட்சியகங்களை அலங்கரிக்க வேண்டும். ஏனெனில், போருக்குக் காரணமாகும் முரண்பாடுகளோ, மாறுபட்ட சுயநலன்களோ, அந்தச் சமூகத்தில் இருக்காது.

அதிகபட்சமாக, மாற்றம் பெறுகின்ற இடைக் காலத்திற்கு மட்டுமே போர் என்ற நடைமுறையை ஏற்கலாம். இன்றைய ரஷ்யாவை உதாரணமாக எடுத்துக்கொண்டால் இதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். தற்போது அங்கே தொழிலாளி வர்க்க சர்வாதிகாரம் நிலவுகிறது. அவர்கள் சமத்துவ சமூகத்தை நிறுவவே விரும்புகிறார்கள். இதற்கு இடையில், முதலாளித்துவ சமுதாயத்திடமிருந்து தம்மைக் காத்துக்கொள்ள அவர்கள் ராணுவத்தை வைத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் போரின் நோக்கங்கள் வெவ்வேறாக இருக்கும். கனவுதேச மக்கள் போர் தொடுக்கும்படி ஏகாதிபத்திய வழிமுறைகள் இனியும் தூண்ட முடியாது. போரில் வென்றதற்கான கோப்பை களும் அங்கே இருக்காது. புரட்சிப் படை வேற்று நாட்டில் நுழைவது ஆட்சி செய்யவோ அல்லது மக்களைக் கொள்ளை அடிப்பதற்காகவோ இருக்காது; ஒட்டுண்ணிகளின் ஆட்சியை சிம்மாசனத்திலிருந்து இறக்கவும், இரத்தத்தை உறிஞ்சும் சுரண்டலை நிறுத்தவும், இதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்களை விடுதலை செய்வதற்காகவுமாக இருக்கும். ஆனால், நமது மக்களை சண்டையிடத் தூண்டுகிற ஆரம்பகால தேசியவாத அல்லது இனவாத வெறுப்புகள் இருக்கக் கூடாது.

உலகக் கூட்டமைப்பு என்பது சுதந்திரமாகச் சிந்திக்கும் அனைவரின் உடனடி இலக்காகவும் மிகவும் பிரபலமாகவும் இருக்கிறது. இதைப்பற்றி ஆசிரியர் நன்றாக விவாதித்திருக்கிறார்; `லீக் ஆஃப் நேஷன்ஸ்' என்று அழைக்கப்படும் அமைப்பின்மீதான அவரது விமர்சனம் மிக அற்புதமாக உள்ளது. 571 (572)ஆம் பத்திக்கான அடிக்குறிப்பில், வழிமுறைகள் பற்றி தொட்டுச் சென்றிருக்கிறார். அவர் கூறுகிறார்: ``இத்தகைய அரசாட்சியை வன்முறைப் புரட்சியினால் கொண்டுவர இயலாது. சமூகத்தின்மீது இதை வெளியிலிருந்து திணிக்க முடியாது. இது உள்ளுக்குள்ளேயே வளர வேண்டும்... மேலே சொன்ன வழிமுறைகளில் மக்களைப் பயிற்றுவிப்பதன் மூலம் படிப்படியான பரிணாம வளர்ச்சியின் வாயிலாகவே இதைக் கொண்டுவர முடியும்...'' இதை மட்டும் எடுத்துக் கொண்டு பார்த்தால் குறை ஏதும் கூற முடியாது, மிகவும் சரிதான்; ஆனால் இதை முழுமையாக விளக்காமல் விட்டால் தவறான புரிதல்களுக்கு — அல்லது அதைவிட மோசமாக குழப்பத்திற்கு — இட்டுச் செல்லக்கூடும். இதற்குப் பொருள் என்ன? வன்முறை வழி தோல்வியே தரும் என்று ராம் சரண்தாஸ் புரிந்து கொண்டாரா? அகிம்சையின்மீது அசையாத நம்பிக்கை கொண்டவராக ஆகி விட்டாரா? இல்லை, இதன் பொருள் அதுவல்ல. மேலே குறிப்பிட்ட வாசகம் என்ன பொருள் தருகிறது என்று விளக்குகிறேன். 

வன்முறை வழிகளால் மட்டும் சோஷலிச சமூகத்தை உருவாக்கிவிட முடியாது, அது உள்ளுக்குள்ளேயே உருவாகி வளர வேண்டும் என்பதை மற்ற எவரையும்விட புரட்சிக்காரர்கள் நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். இதற்கு கல்வி ஒன்றே பயன்படுத்தப்பட வேண்டிய ஆயுதம் என்கிறார் நூலாசிரியர். ஆனால், தற்போதைய அரசு, அல்லது உண்மையைச் சொன்னால் எந்தவொரு முதலாளித்துவ அரசும், இத்தகைய முயற்சிக்கு எந்தவித உதவியும் அளிக்காது; மாறாக இத்தகைய எந்த முயற்சியையும் இரக்கமின்றி ஒடுக்கவே முயலும் என்பதை எவரும் எளிதாகப் புரிந்து கொள்ளலாம். அப்படியானால், இவர் கூறுகிற `பரிணாம வளர்ச்சி' எதை சாதிக்கும்? புரட்சிக் காரர்களாகிய நாம் அதிகாரத்தை நம் கையில் எடுத்துக் கொள்ளவும், இன்று ரஷ்யாவில் செய்யப்படுவது போல தனது எல்லா வளங்களையும் மக்களைப் பயிற்றுவிக்கப் பயன்படுத்துகிற புரட்சி அரசை ஏற்படுத்தவும் போராடுகிறோம். அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு ஆக்கபூர்வமான பணிகளுக்கு அமைதி வழிமுறைகள் பயன்படுத்தப்படும்; தடைகளை ஒடுக்குவதற்கு வன்முறை பிரயோகிக்கப்படும். 

ஆசிரியர் கூறுவது இதுதான் என்றால், அவருடைய கருத்தும் என் கருத்தும் ஒன்றே. அவர் கூற வந்ததன் பொருள் இதுதான் என்று நான் நம்புகிறேன். புத்தகத்தைப் பற்றி விரிவாகவே விவாதித்து விட்டேன். ஏன், விமர்சனமும் செய்து விட்டேன். என்றாலும் இதில் மாற்றங்கள் எதையும் செய்ய வேண்டும் என்று கேட்க மாட்டேன்; ஏனெனில் இதற்கு வரலாற்றுபூர்வமான மதிப்பு உண்டு. 

இதில் உள்ளவை 1914-15 காலகட்டத்துப் புரட்சிக்காரர்களின் கருத்துகள். இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும் என்று குறிப்பாக இளைஞர்களை நான் வலியுறுத்துகிறேன். என்றாலும் ஒரு எச்சரிக்கை: இதைப்படித்து அப்படியே குருட்டுத்தனமாக பின்பற்ற வேண்டும் என்பதற் காகவோ, அல்லது இதில் எழுதப்பட்டுள்ளதை எல்லாம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்காகவோ படிக்க வேண்டாம். இதைப் படியுங்கள், விமர்சனம் செய்யுங்கள், இதைப்பற்றி சிந்தனை செய்யுங்கள், இதன் உதவியுடன் உங்கள் சொந்தக் கருத்துகளை உருவாக்கிக் கொள்ள முயலுங்கள்.

No comments:

Post a Comment