Monday, 31 October 2016

தில்லியிலே தீபாவளி

தமிழ்நாட்டில் நடப்பதுபோல விடிய விடிய தீபாவளி, விடிஞ்சா அமாவாசைஎன்ற ரீதியில் ஒருநாள் தீபாவளி வடக்கே கிடையாது. இங்கே ஐந்து நாட்கள் தொடரும். தீபாவளி எப்படி வந்தது என்பது குறித்து சர்ச்சைகள் உண்டு. உழைத்துக் களைக்கும் மனிதனுக்கு அவ்வப்போது உற்சாகம் ஊட்டிக்கொள்ள பண்டிகைகள் பிறந்திருக்கலாம். அவற்றை அதே மனிதர்களில் சிலர் சுயநலத்துக்காக வணிகமயமாக்கிக் கொண்டார்கள். இப்போது அந்த விஷயங்களுக்குள் நான் போக விரும்பவில்லை. தீபாவளி குறித்து பழைய பதிவிலிருந்து திருத்திய பதிவு.

தீபாவளி கொண்டாடுவதற்கான காரணம் பகுதிக்குப் பகுதி வேறுபடுகிறது. தெற்கே நரகாசுரனைக் கொன்றதைக் கொண்டாடுவதாக ஒரு நம்பிக்கை. ஒருநாள் பண்டிகையோடு இது முடிந்து விடுகிறது. வடக்கே இது ஐந்து நாள் பண்டிகை. வடக்கே தீபாவளி கொண்டாட பல காரணங்கள் நம்பிக்கைகளாக உலவுகின்றன. இராமன் வனவாசம் முடித்து திரும்பி வந்ததைக் கொண்டாடுகிறார்கள். இராமன் இராவணனை வென்று சீதையை மீட்டு வந்ததையும் கொண்டாடுகிறார்கள்.

தில்லியில் தீபாவளி பெரும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. கடைகள் எல்லாம் மாறி விடுகின்றன. நடைபாதைகள் எல்லாம் கடைகள் முளைத்து விடுகின்றன. எந்தக் கடை எதை விற்பது என்ற வேறுபாடின்றி எல்லாக் கடைகளும் எதையெதையோ விற்பனை செய்யும். அதுவும் தன் தேரஸ் நாளில் கடைவீதிகளில் கூட்டம் சொல்லி முடியாது. சீரியல் விளக்குகள், அலங்காரப் பூக்கள், பட்டாசுகள், பாத்திரங்கள்... என்னது... பாத்திரங்களா...? பாத்திரங்கள் எதற்கு என்று கேட்பீர்கள். சொல்கிறேன்.


தன் தேரஸ் என்றால் என்ன தெரியுமா? தமிழர்கள் பலருக்கும் தெரிந்திருக்காது. செல்வத்தின் திருமகளான லட்சுமி எப்படி வந்தாள் என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும். பாற்கடலைக் கடையும்போது உருவானவள் லட்சுமி, இல்லையா? ஆனால் லட்சுமி மட்டும் இருந்தால் போதுமா? அதை அனுபவிக்க ஆரோக்கியமும் ஆயுளும் வேண்டும் அல்லவா? அதற்காக மீண்டும் கடைந்தபோது கையில் அமிர்த கலசத்துடன் வந்தவர்தான் தன்வந்தரி. தன்வந்தரிதான் தேவர்களுக்கே மருத்துவராம். தன்வந்தரியைக் கொண்டாடுவதுதான் தன் தேரஸ்.


தன்வந்தரி கையில் கலசத்துடன் வந்தார் அல்லவா? அதனால்தான் தன் தேரஸ் தினத்தில் ஏதேனும் ஒரு பாத்திரத்தை வாங்குவது நல்லது என்று நம்புகிறார்கள். பணம் கொழித்தவர்கள் தங்கம் வாங்குகிறார்கள். குறைவாக இருப்பவர்கள் வெள்ளியில் ஏதேனும் வாங்குகிறார்கள். அதுவும் இல்லாதவர்கள் ஏதேனும் ஒரு பாத்திரமேனும் வாங்குவார்கள். அதனால்தான் தன் தேரஸ் நாளில் கடைவீதிகளில் கடும் நெரிசல் இருக்கும். வியாபாரிகளுக்கு இந்த நம்பிக்கை மிகவும் வசதியாகி விட்டது. ஏகப்பட்ட விளம்பரங்கள், ஏகப்பட்ட வியாபாரம். படத்தில் இருப்பது தி.நகர் போன்ற பெரிய மார்க்கெட் ஏதும் இல்லை. சாதாரணமாக தெருவில் அமைந்திருக்கும் கடைவீதிதான். தன்தேரஸ் நாள் மாலையில் என் வீட்டு வாசலிலிருந்து எடுத்தது.

பலருக்கும் தெரியாத இன்னொரு செய்தி இந்த தன் தேரஸ் தினத்தைத்தான் இந்த ஆண்டு முதல் ஆயுர்வேத தினமாக அறிவித்துள்ளது மத்திய அரசு. இந்த ஆண்டுக்கான மையக்கருத்து சர்க்கரை நோயைத் தடுப்பதிலும் கட்டுப்படுத்துவதிலும் ஆயுர்வேதா’. இனிப்புகள் முக்கியப் பண்டமாக இருக்கிற தீபாவளி நேரத்தில் சர்க்கரை நோய் பற்றிப் பேசுவது நகைமுரண். சர்க்கரை நோயால் ரொம்பவுமே வாட்டப்பட்ட எவனோ ஒரு அதிகாரி முடிவு செய்திருக்கலாம்.

ஆக, தில்லி போன்ற வடபகுதிகளில் முதல் நாள் அதாவது வெள்ளிக்கிழமை தன் தேரஸ் முடிந்தது. சனிக்கிழமை சின்ன தீபாவளி அதாவது நரக சதுர்தசி. ஞாயிற்றுக்கிழமைதான் தீபாவளி லட்சுமியைப் போற்றுகிற நாள். லட்சுமியை எப்படி வேண்டுமானாலும் பெறலாம். எனவே இரவு முழுவதும் சீட்டு விளையாட்டும் சூதாட்டமும் நடைபெறுவதுண்டு. அடுத்த நாள் பட்வா - கணவன்-மனைவி உறவைக் கொண்டாடும் நாள். தலை தீபாவளியும் இதுதான். கடைசியாக பாய் தூஜ், அல்லது பையா தூஜ் சகோதரன்-சகோதரி உறவைக் கொண்டாடும் நாள்.

ஆக, பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஐந்து நாட்களிலும் வேலைகள் ஓடாது. பெரிய தலைகள் பலான காரியங்களில் ஈடுபடுவதற்கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் பண்ணைவீடுகள் ஒன்றில் தீபாவளி ஸ்பெஷல் சூதாட்ட கேசினோவில் சில கோடி ரூபாயும் சில ஆட்களும் பிடிபட்டார்கள் போன வாரம்.
*
- என்ன தாத்தா... உங்க ஏரியாவில தீபாவளி எல்லாம் எப்படி?
- தீவாளியா... தீவாளியும் இல்லே ஒண்ணும் இல்லே.
- ஏன் என்னாச்சு
- எங்கத்த...தீவாளின்னா பட்டாசு சத்தம் கேக்கணும். பட்டாசு சத்தமே காணமே.
- இன்னிக்கிதானே இங்கே தீபாவளி. ராத்திரி வெடிப்பாங்க.
- இருந்தாலும் நேத்திக்கி வெடிக்கோணுமில்லே. ஒண்ணும் சத்தமே காணம்.
- ஏன்... மக்கள் கையில காசு பஞ்சமா
- காசு பஞ்சமும்தான். வெலவாசி அப்படி இருக்கில்லே... அல்லாரும் கைய இறுக்கிப் புடிச்சுட்டாங்க.
- யாரு?
- வேற யாரு? அவியவிய அவியவிய கைய இறுக்கிப் புடிச்சுகிட்டாங்க. முன்னமாரி இல்லே
- அப்படியா... பட்டாசு வேணாம்னு புரிஞ்சுகிட்டாங்களா.
- பின்னே...? பட்டாசுக் கடையப் பாத்தீங்களா... போயிப் பாருங்க. ஒரு கடையில ஒரு சனத்தையும் காணம். இப்படியே போனா அடுத்த வருச பட்டாசுக் கடையே இருக்காது.

மேலே உள்ள பகுதி எங்கள் வீட்டுக்கு வேலை செய்ய வரும் தாத்தா-பாட்டியுடன் நடந்த உரையாடல். கடந்த ஆண்டு எழுதியது. இந்த ஆண்டு பட்டாசுகள் இன்னும் குறைவு என்பது பட்டவர்த்தனமாகத் தெரிகிறது. தொழில்கள் படுமந்தமாக இருக்கிறது. விலைவாசி உயர்வு அத்தியாவசியச் செலவுகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தர வைத்திருக்கிறது. தீபாவளியைப் பொறுத்தவரை பட்டாசுகள் குறைவது மகிழ்ச்சியான விஷயம். தீபாவளி தீபங்களை மட்டுமே கொண்ட பண்டிகையாக இருந்தது. அதில் பட்டாசுகள் எப்படி நுழைந்தன என்பதையும் இணையத்தில் தேடிப் படித்தறியுங்கள்.


ஐந்தாண்டுகளுக்கு முன்னால் தில்லியின் தீபாவளி குறித்து வலைப்பூவில் எழுதிய பதிவை இங்கே காணலாம். இப்போதும் பெரிய மாற்றம் ஏதுமில்லை. வாசித்துப்பாருங்கள், சுவையாகவே இருக்கும்.

Sunday, 30 October 2016

பொட்டு வெடிக் கதைகள்

தீபாவளி என்றதும் யாருக்குத்தான் பழைய நினைவுகள் வராதிருக்கும்? கேப் வெடியைப் பற்றி பேசும்போது கொள்ளுப்பட்டாசு என்று சொன்னதற்கு, “கொள்ளுப்பட்டாசுன்னா என்ன?” என்று கேட்டார் ஒருவர். கேப் என்கிற கொள்ளுப்பட்டாசு என்கிற பொட்டு வெடி குறித்து எழுத நிறைய இருக்கிறது.

எவ்வளவுதான் வெடிகளும் மத்தாப்புகளும் லட்சுமி வெடிகளும் யானை வெடிகளும் பாம்பு மாத்திரைகளும் வாங்கினாலும் பொட்டுவெடி இல்லாத தீபாவளி தீபாவளியாக இருக்கவே முடியாது. ஒருகாலத்தில் பொட்டு வெடிகள் தனித்தனியான பட்டாசுகளாய்த்தான் இருந்தன. மேலும் கீழும் சிவப்பு நிறக் காகிதத்தில் நடுவே சின்னதாக ஒரு புள்ளிபோல புடைத்திருக்கும். கால்வாசி பொட்டுவெடிகளில் மருந்தே இருக்காது. “லட்சுமி வெடி, வெல்ல மத்தாப்பு, சங்குச் சக்கரம்னு செலவு செய்யற காசுல நிறைய்ய்ய்ய்ய கொள்ளுப்பட்டாசா வாங்கி வச்சுகிட்டா நாள் பூராவும் பொட்டு....பொட்டு....ன்னு வெடிச்சுட்டே இருக்கலாமே... இந்தப் பெரியவங்களுக்கு இது ஏன் தெரிய மாட்டேங்குது?” என்று சிந்தனை செய்தவன் நான்.

இத்தனூண்டு பட்டாசுகளை வட்டமாக வெட்டுவதற்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்? அதிலும், அந்த சிவப்பு நிறம் காகித்த்தின் நிறமல்ல. காகிதத்தின்மீது அச்சிட்ட நிறம். மருந்து இருக்கும் உள்பகுதியில் வெள்ளையாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பொட்டு வெடிகளை எண்ணி எண்ணி அட்டை டப்பாவுக்குள் போடுவது எவ்வளவு பெரிய வேலையாக இருந்திருக்கும்? அன்றைய ஒரு ரூபாய் அளவுக்கு மட்டுமே இருந்த அட்டை டப்பா, அதற்கு ஒரு மூடி, அந்த மூடியின்மீது அச்சிட்டு ஒட்டிய லேபல்... பன்னிரண்டு டப்பாக்களை வரிசையாக அடுக்கி ஓர் உருளை போல சுருட்டிய காகித உறை... இருக்கிற வெடிகளிலேயே பொட்டுவெடிதான், உழைப்பின் உச்சத்தை வேண்டி நின்றிருக்கும் என்பது இப்போது புரிகிறது.


அப்போதெல்லாம் ஒற்றை பொட்டு வெடிகளுக்கு துப்பாக்கி (டுபாக்கி) இருந்தது. ஒவ்வொன்றாக வைத்துத்தான் சுட வேண்டும். வெடித்த பிறகு லேசாக எழுகிற புகையின் வாசம்.... வெடித்த பிறகு, ஜெய்சங்கரின் ரிவால்வரில் வருவதுபோல குழாய்க்குள்ளிருந்து புகை வரும் என்ற எதிர்பார்ப்பு... டவுசர் பாக்கெட்டில் அல்லது நழுவிக் கொண்டே இருக்கிற டவுசரின் இடுப்புப் பகுதியில் செருகிக்கொண்டு ஜேம்ஸ்பாண்ட் போல திடீரென்று துப்பாக்கியை எடுத்து எதிரியை நோக்கி நீட்டி டிஷ்யூம்... நம் வாயிலிருந்துதான் குரல் வருமே தவிர, டுபாக்கியை மேலே உயர்த்திப் பிடித்ததில் பட்டாசு கீழே விழுந்து விட்டிருக்கும். டிரிக்கர் போய் வெறுமனே அடிக்கும் சத்தம் மட்டுமே கேட்கும். அப்புறம் பட்டாசைத்தேட வேண்டும். கீழே கிடக்கிற குப்பைகளில் துக்கனூண்டு பொட்டுவெடியா கிடைக்கப்போகிறது? மறுபடி ஒரு பொட்டுவெடியை லோட் செய்ய வேண்டும்.

இந்தத் தொல்லைகளிலிருந்து விடுவிக்க விரைவிலேயே வந்தது சுருள் கேப். சுருளை டுபாக்கியில் பொருத்தி டொபுக்கு டொபுக்கு என்று சுட்டுக்கொண்டே இருக்கலாம். ஆமாம், அப்படித்தான் நினைத்துக் கொள்வோம். பட்டாசுச் சுருளை மேலே தூக்கிக் கொடுக்கும் தகடு சமயத்தில் சுருளைக் கிழித்து விடும். அப்புறம் மறுபடி டுபாக்கியைப் பிரித்து, மேலே இழுத்து, ட்ரிக்கருக்கு நேராகப் பொருத்தி, எனிமியை சுட்டுக்கொண்டிருக்கும்போது புஸ்கு புஸ்கு என்று சத்தம் கேட்கும். ஆமாம், சுருள் தீர்ந்து போய், மேலே தூக்கிக் கொடுக்கும் மெகானிசத்தில் சிக்காமல் கடைசி நான்கைந்து பட்டாசுகள் வெடிக்காமலே உள்ளுக்குள் கிடக்கும். அதை தூக்கி எறியவும் மனமில்லாமல், வெடிக்கவும் முடியாமல் பாக்கெட்டுக்குள் திணித்துக் கொவோம். பிறகு வெடிக்கலாம் என்று.

 

தீபாவளிக்கு முதல்நாளே டுபாக்கி கையில் கிடைத்து, பரிசோதித்து, வெறும் டுபாக்கியை வெடித்து அல்லது அம்மாவிடம் கெஞ்சி லூசில் ஒற்றை பொட்டுவெடி டப்பாவை வாங்கி வந்து வெடித்து சோதனை செய்து, மறுநாள் பொட்டு வெடிகளை எடுத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்புவதாக கற்பனை செய்து வைத்திருப்போம். ஆனால் அடுத்த நாள் காலையே துப்பாக்கி உயிரை விட்டுவிடும். ஸ்பிரிங் கெட்டுப்போயிருக்கும். லிவர் வளைந்து கொண்டிருக்கும். அல்லது சரியான அழுத்தத்தில் போய் அடிக்காது. புதிதாக வேறு துப்பாக்கி வேண்டும் என்று கேட்டால் அடி விழும். ஒரு சாமானையும் ஒழுங்கா வைக்கத் தெரியலே... வாங்கி ஒரு நாள்கூட ஆகலே... அதுக்குள்ள போட்டு உடைச்சுட்டு புதுசா கேக்கறே...?” என்பது எல்லா வீடுகளிலும் கேட்கும் வசனம். பண்டிகை நாள் என்பதால் முதுகு தப்பிக்கும். இல்லேயேல் பழுத்திருக்கும். அதிர்ஷ்டம் இருந்தால், வீட்டுக்கு வருகிற விருந்தினர்களின் தயவால் புதிய துப்பாக்கியும் கிடைக்கலாம்.

எனக்கு எப்போது துப்பாக்கி கிடைத்தது என்று நினைவில்லை. ஆனால் கேப்பு வெடிக்க வேறொரு சாதனம் கிடைக்கும். அப்போது அது 25 பைசாவுக்குக் கிடைத்ததாக நினைவு. தகரத்தால் செய்ததுதான். படத்தில் இருப்பது போன்ற அமைப்பு. ஆனால் அப்போது அதில் நீலம் அல்லது பச்சை பெயின்ட் அடித்திருக்கும். இன்னும் கொஞ்சம் மெலிசாக, இன்னும் கொஞ்சம் அழகாக இருக்கும். முன்பக்கத்தில் வட்டமாக குமிழ் போல இருக்கும் இடத்தில் பொட்டுவெடியை வைத்து, மேலிருக்கும் தகரத்தை இழுத்து டிரிக்கர் தகரத்தின் ஓட்டைக்குள் செருகி, விரலால் இழுத்து விட்டால் பட்டீர் என்று வெடிக்கும்.


எனக்கு ஓர் அனுபவம் இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது. ஊரில் நாங்கள் வசித்த வீட்டுக்கு மேற்குப்பகுதியில் தறிகாரச் செட்டியார்கள் வசித்தனர். அவர்களுக்கென சாயப்பட்டறையும் இருந்த்து. சாயப்பட்டறை நடத்தி வந்தவரின் மகள் என் வகுப்புத்தோழி. படிப்பில் மட்டுமே மக்கு. பெயர் லட்சுமி என்று வைத்துக்கொள்வோம். ஒரு தீபாவளி நாளில் மேலே சொன்ன தகரத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு யாரை சுடலாம் என்று தேடிக்கொண்டிருக்கையில் இவளை தெருவில் பார்த்தேன். அவளை நோக்கி தகரத்தை நீட்டிக்கொண்டே ஓட, அவள் அலறிக்கொண்டு ஓட, நான் துரத்த, ஓட்டமாய் ஓடி அவள் வீட்டுக்குள் நுழைந்து கொள்ள, அவள் வீட்டில் புகார் செய்து வீட்டுக்குள்ளிருந்து யாரேனும் என்னைப் பிடிக்க வந்து விடுவார்களோ என்று நான் திரும்பி ஓட... சற்று தொலைவு போன பிறகுதான் பார்த்தேன். தகரத் துப்பாக்கியில் பொட்டுவெடியே இருக்கவில்லை. யாரும் துரத்தவும் இல்லை.

அந்த லட்சுமிக்கு திருப்பூரில் திருமணமானது. நான் சிலகாலம் அக்கா வீட்டில் அண்ணா காலனியில் வசித்தபோது அதே காலனியில் அடுத்த தெருவில் அவள் வீடும் இருந்த்து. அவளுடைய கணவன் ஒரு பள்ளியில் ஆசிரியனாக இருந்தான். எப்போதாவது எதிரே சந்திக்க நேர்ந்தால், யாரும் இல்லாதிருந்தால் மட்டுமே லட்சுமி ஓரப் புன்னகை ஒன்றை உதிர்ப்பாள். யாராவது இருந்தால் அறிமுகமே இல்லாதவள்போலச் செல்வாள். நான் எங்கோ ஊருக்குப் போய்விட்டுத் திரும்பிய ஒரு நாள், லட்சுமி தீக்கிரையாகி விட்டாள் என்ற தகவல் கிடைத்தது. வரதட்சணை கேட்டு சித்ரவதை செய்து வந்ததாகவும், அவனும் அவனுடைய அம்மாவும்தான் தீவைத்துக் கொலை செய்து விட்டதாகவும் செய்திகள் உலவின. அந்த ஆசிரியன் சிறைக்குப் போனான். எல்லாம் சில நாட்கள்தான். அடுத்த மாதம் அவன் சுதந்திரமாக உலவிக் கொண்டிருந்தான். வழக்கு என்னவாயிற்று என்றே தெரியவில்லை. சின்னப் பொட்டுவெடியின் தீப்பொறிகளுக்கே பயந்து ஓடியவள் தீயிலேயே குளிக்கும்போது எப்படி உணர்ந்திருப்பாள் என்பதும் தெரியவில்லை. தீபாவளியை நினைக்கும்போதெல்லாம் தகரத் துப்பாக்கி நினைவு வரும், தகரத் துப்பாக்கி நினைவு வரும்போதெல்லாம் லட்சுமியின் நினைவு வரும்.

தகரத் துப்பாக்கியும் கிடைக்காத அல்லது துப்பாக்கி வாங்கியும் கெடுத்து விட்டவர்களுக்கு பொட்டுவெடி வெடிப்பதில் பல்வேறு வழிகள் இருக்கின்றன. பெரிய கீல் வைத்த கதவு இருந்தால், கதவை லேசாகத் தூக்கி, கீலுக்கு இடையே வைத்து, கதவை மூடி அல்லது திறந்து வெடிக்கலாம். (ஆனால் கதவில் எண்ணெய்ப் பிசுக்கு இருக்கக்கூடாது. பட்டாசு நவுத்துப் போகும்.) சைக்கிளின் பிரேக் பிடிக்கும்போது ஹாண்டில் பாரில் ஒரு கொக்கி இடிக்குமே... அதற்கும் ஹாண்டில் பாருக்கும் இடையை வைத்து வெடிக்கலாம். போல்ட்-நட் இடையே வாஷர் வைத்து, வாஷர்களுக்கு இடையே வைத்து டைட் செய்து, தரையில் ஓங்கி அடித்து வெடிக்கலாம். இதில்தான் அதிகபட்ச ஓசை கிடைக்கும். சொரசொரப்பான சிமென்ட் தரையில் நகத்தால் உரசி வெடிக்கலாம். பெண்களின் முன்னால் வீரத்தை வெளிப்படுத்த நினைப்பவர்கள் சிங்கப்பல்லில் வைத்துக் கடித்து வெடிக்கலாம். எதுவுமே இல்லாவிட்டாலும் வெங்கச்சாங்கல் போதும். திண்ணையில் வெடிக்கிறேன் என்று சிமென்ட்டை உடைத்து விட்டால், முதுகில் வெடி விழும். ஆள் இல்லாதபோது எரியும் அடுப்பில் போடலாம்.


பொட்டுவெடியை டப்பாவிலிருந்து உதிர்த்து டவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு உலவுவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. சமயத்தில் பொட்டுக்கடலையை அதே பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருப்போம். பொட்டுக்கடலையை வாயில் போடும்போது பொட்டு வெடி வந்துவிடும். அப்புறம்...

அப்புறமென்ன... போங்க போங்க. போய் பட்டாசு வெடிங்க. பத்திரமா.


தீபாவளி நினைவில் மூழ்க வாழ்த்துகள்.