Thursday, 1 December 2016

செத்துச் செத்து விளையாடலாம்



புழக்கத்தில் இருக்க வேண்டிய ரூபாய் நோட்டுகளை மக்கள் முடக்கி வைக்காமல் இருப்பதற்காக, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துங்கள், நீங்கள் எவ்வளவு தேவை என்றாலும் எடுத்துக்கொள்ளுங்கள் என்று அரசு கூறியுள்ளது. (வாரத்துக்கு 24 ஆயிரம் மட்டுமே எடுக்கலாம் என்ற வரம்பு இதற்குப் பொருந்தாது.) இது உண்மையா என்று ஏராளமானோர் சந்தேகம் கேட்டார்கள்.

இது உண்மை. ஆனால் சரியான புரிதல் தேவை.

பழைய 500 / 1000 ரூபாய் நோட்டுகளை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தியிருந்தால் இது பொருந்தாது. வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட உங்கள் சம்பளம் போன்ற வரவுகளுக்கும் இது பொருந்தாது. 29ஆம் தேதிக்கு முன்னர் உங்கள் கணக்கில் இருக்கிற பணத்துக்கும் இது பொருந்தாது. இதற்கெல்லாம் வாரம் 24 ஆயிரம் மட்டுமே எடுக்க முடியும்.

29ஆம் தேதிக்கு மேல், நடப்பு தேதியில் செல்லுபடியாகும் ரூபாய் நோட்டுகளை எவ்வளவு செலுத்தினீர்களோ அதை எடுக்கலாம். இதற்கு உச்ச வரம்பு கிடையாது.

அதாவது, புதிய 2000 / 500 ரூபாய் நோட்டுகளாக அல்லது 100 / 50 / 20 / 10 / 5 ரூபாய் நோட்டுகளாக எவ்வளவு செலுத்தியிருந்தாலும் அதை நீங்கள் எடுக்கலாம். நீங்கள் எடுக்கும்போது 2000 / 500 ரூபாய் நோட்டுகளாகத் தரப்படும்.
2. As it is impeding active circulation of currency notes, it has been decided, on careful consideration, to allow withdrawals of deposits made in current legal tender notes on or after November 29, 2016 beyond the current limits; preferably, available higher denominations bank notes of ₹ 2000 and ₹ 500 are to be issued for such withdrawals.


*

இந்த விளக்கம் பலருக்கும் புரியவில்லை. மேலும் சந்தேகம் வந்து கொண்டே இருந்தது. கேள்விகளும் தொடர்ந்தன. எனவே, எளிதாகப் புரிகிற வழக்குத் தமிழில் விளக்குகிறேன்.

பழைய 500 / 1000 ரூபாய் நோட்டுகளை மறந்துடுங்க. ஓகேவா?

நீங்க பேங்க்ல அல்லது ஏடிஎம்ல லைன்ல நின்னு உங்க அகவுன்ட்லிருந்து பணம் எடுத்தீங்க. அதாவது, புது 2000 ரூபாய் நோட்டு எடுத்தீங்க. அல்லது 100 ரூபாய் நோட்டு எடுத்தீங்க. (500 ரூபா நோட்டு எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஏன்னா, அது இன்னும் வரவே இல்லை.) ஓகேவா?

வாரத்துக்கு அதிகபட்சம் 24 ஆயிரம் ரூபாய் எடுக்கலாம்னு சொன்னாலும், 2000 / 10000 எடுக்கிறதுக்குள்ளயே கண்ணாமுழி திருகிப் போயிருக்கும். இருந்தாலும் ஏதோ கொஞ்சம் பணம் புது நோட்டா எடுத்திருப்பீங்க. ஓகேவா....?

இப்படி லைன்ல மணிக்கணக்குல நின்னு எடுத்த பணத்தைக் கொண்டுபோய், யார்கிட்டேயாவது கெஞ்சிக்கூத்தாடி சில்லறை நோட்டா மாத்தியிருப்பீங்க. ஓகேவா?

அங்கங்கே செலவு செஞ்சது போக 10 / 20 / 50 ரூபா நோட்டு சில்லறையா சேர்ந்திருக்கும். ஓகேவா?

இப்படி எல்லாரும் ஆளாளுக்கு கையில நோட்டுகளை வச்சுகிட்டா பணம் புழங்குமா? பணம்னா புழங்கிட்டே இருக்கணும்லா?

அதனாலே, லைன்ல நின்னு நீங்க எடுத்த 2000 ரூபா நோட்டு, 10 / 20 / 50 / 100 ரூபாய் நோட்டுகளை கையில் வச்சுக்காதீங்க. நேரா பேங்குக்குப் போயி லைன்ல நின்னு உங்க கணக்குல போட்டுடுங்க. ஓகேவா?

இப்படி 29ஆம் தேதிக்குப் பொறவு, ரொக்கமா கணக்குல நீங்க எவ்ளோ போட்டாலும் அதிலிருந்து எப்போ வேணாலும் எவ்ளோ வேணாலும் எடுக்கலாம். எடுக்கும்போது புது 500 / 2000 நோட்டுகளாகத் தருவாங்க. (வாரத்துக்கு 24 ஆயிரம்தான் எடுக்க முடியும்கிற விதி இதற்குப் பொருந்தாது.)

அதாவது,
லைன்ல நின்னு எடுத்த பணத்தை
லைன்ல நின்னு பேங்க்ல போடுங்க.
மறுபடி லைன்ல நின்னு எடுத்துக்குங்க.

மறுபடி எவன்கிட்டேயாவது கெஞ்சி சில்லறை மாத்துங்க.
மறுபடி லைன்ல நின்னு பேங்க்ல போடுங்க.
அப்புறம் லைன்ல நின்னு எடுத்துக்குங்க.

இவ்ளோதான். எவ்ளோ சிம்பிள் இல்லே?

லைன்ல நின்னு நின்னு வெளையாடலாம். பொழுது போறதே தெரியாதாக்கும். க்க்கும்!

2 comments:

  1. தலைப்பும் சொல்லிச் சென்றவிதம்
    மிகமிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. கண்ணில் இரத்த கண்ணீரும் வாயில் மானம் கெட்ட ?????? சிரிப்பும் ஒன்றாக வந்து தொலைக்கறது.......

    ReplyDelete