வீட்டில் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டிதான்
இருந்தது. முன்னர் எல்லாம் டிவி, டேப் ரிகார்டர் போன்ற சாதனங்களை நான் புதிதாக வாங்கியதில்லை. செகண்ட்
ஹாண்டில்தான் வாங்குவேன். ஏற்கெனவே இருந்தது 1500 ரூபாய்க்கு வாங்கிய
போர்ட்டபிள் டிவி. ஆன்டெனாக்கள் மறைந்த பிறகு, நாடே கலர் டிவிக்கு மாறிய
பிறகு, அந்தப் பழைய
பெட்டியில் கேபிளை மாட்ட முடியாத நிலை வந்த பிறகு, நிர்ப்பந்தத்தால் கலர் டிவி
வாங்கும் யோசனை வந்தது.
“எங்க பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்தில் ஒருத்தர் புது கலர்
டிவி வாங்கிட்டார். பழசை விக்கிறார். வாங்கறீங்களா?” என்று கேட்டார் அவர். சரி
என்று ரோகிணி போனோம். ஒரு கலர் டிவியுடன், பழைய 286 கம்ப்யூட்டரும்கூட இருந்தது. டிவியுடன் ஸ்டாண்டும் கொடுத்தார்கள். மாருதி ஆம்னி
ஒன்றை வாடகைக்குப் பிடித்து, டிவியையும் கம்ப்யூட்டரையும் பின் சீட்டில் வைத்துக்கொண்டு நான் உட்கார்ந்து
கொண்டேன். டிவி ஸ்டாண்ட் மாருதி காரின் டிக்கி பகுதியில் வைத்தாயிற்று. ஆனால்
பின்கதவை மூட முடியவில்லை. யாராவது உட்கார்ந்து மூடியதுபோல பிடித்துக்கொள்ள வேண்டும்.
“அதுக்கென்ன... நான்
உக்காந்துக்கிறேன்” என்று அவர் உட்கார்ந்து கொண்டார். சுமார் 30 கிலோமீட்டர் அப்படியே
உட்கார்ந்து கொண்டு எங்கள் வீடுவரை வந்தார். இருக்கை இல்லாமல், தடதடக்கும் இரும்புப் பலகை
மீது உட்காரந்து வருவதற்கு ரொம்பவே பொறுமை வேண்டும். அவருக்கு இருந்தது பொறுமை
மட்டுமல்ல.
*
ஒருநாள் நாங்கள் எல்லாரும் அவருடைய வீட்டுக்கு
விருந்துக்குப் போனோம். சாப்பிட்டு, பேசிக் கழித்த பிறகு, பக்கத்தில் இருக்கும்
ஜப்பானீஸ் பார்க் போகலாமா என்றார். ஜப்பானீஸ் பார்க் என்பது ஜப்பானிய
நிதியுதவியில் ரோகிணியில் நிறுவப்பட்ட ஒரு பூங்கா. பொழுதுபோக்கும் அளவுக்கு
வசதிகள் ஏதும் இல்லை என்றாலும் தெற்கு தில்லியில் இருப்பது போல மிகப்பெரியது இல்லை
என்றாலும், ஓரளவுக்கு பெரிய பூங்காதான். எல்லாரும் ரிக்சாக்களில் போனோம். எல்லாரும்
ரிக்சா இருக்கைகளில் உட்கார்ந்து கொள்ள, அவர் ஒருவருக்கு இடம் போதவில்லை. தில்லி ரிக்சாக்களில்
பின்னால் ஒரு பலகை அடிக்கப்பட்டிருக்கும். சென்னை ஷேர் ஆட்டோக்களில் பலகை
போட்டிருப்பார்களே, அது போல. அந்தப் பலகையில் உட்காருவோர், விழுந்து விடாதிருக்க பழைய
சவாரி வண்டிகளில் ஒரு கம்பி இருக்குமே, அதுபோல ஒரு கம்பியும் இருக்கும். நான் பின்னாடி
உக்காந்துக்கிறேன் என்று அவரும் அவருடைய மகன் பொடியனாக இருந்த மணிகண்டனும் அந்தப்
பலகையில் உட்கார்ந்து கொண்டு வந்தார்கள்.
*
ஒரு கோடை விடுமுறையில் மனைவியும் குழந்தைகளும் ஊருக்குப்
போய்விட்டார்கள். “சார்... இன்னிக்கு எங்க வீட்டுக்கு வந்து தங்குங்களேன்.... காலையில்
வந்துடலாம்” என்றார். ரோகிணியிலிருந்து சார்ட்டர்ட் பஸ்சில் மோதி பாக் வரை வந்து, டவுன் பஸ் ஏறி எங்கள்
வீட்டுக்கு வேலைக்கு வருவார். அதேபோல வீட்டிலிருந்து மோதி பாக் வரை டவுன் பஸ்சில்
போய், அங்கிருந்து
சார்ட்டர்ட் பஸ்சில் ரோகிணி செல்வது அவருடைய வழக்கம். சரி, இதுவரை அவர் வீட்டில்
தங்கியதில்லை, போகலாமே என்று புறப்பட்டோம்.
சார்ட்டர்ட் பஸ் என்பது, வேலைக்குச் செல்பவர்கள்
வசதிக்காக குறிப்பிட்ட இடத்திலிருந்து குறிப்பிட்ட இன்னொரு இடத்துக்கு காலையில்
சென்று மாலையில் திரும்பும் பேருந்து. உதாரணமாக, ரோகிணியிலிருந்து நேரு
பிளேஸ் என்றால், வேலைக்குச் செல்லும் யாராவது ஒருவர் அதன் பொறுப்பை எடுத்திருப்பார். வண்டி
உரிமையாளருக்கு ஒரு தொகை கொடுத்துவிட வேண்டும். போவதும் திரும்புவதுமாக நாளுக்கு
இரண்டே டிரிப்கள்தான். பஸ் புறப்படுகிற இடத்தில் வாடிக்கையாக தினமும் வருபவர்களுக்கு
உட்கார இடம் இருக்கும். வழியில் சிலர் ஏறினால் நின்றுகொண்டும் பயணிக்கலாம். இந்த
வாகனத்தை ஏற்பாடு செய்பவர் தினமும் வசூலிலிருந்து கணக்கை முடித்து விடுவார்.
அவருக்கும் ஓரளவு வருவாய் கிடைக்கும்.
அவருடைய வழக்கமான சார்ட்டர்ட் பஸ் ரோகிணியிலிருந்தே புறப்படும்
என்பதால் அவர் வரும்போது உட்கார இடம் கிடைக்கும். திரும்பிப் போகும்போது, நேரு பிளேசிலிருந்து வரும்
பஸ் மோதி பாக் வருவதற்குள் நிறைந்து விடும். இவருக்கு பொதுவாக உட்கார இடம்
கிடைக்காது. ரோகிணி வரை 25 கிமீ – ஒன்று-ஒன்றரை மணிநேரம் பெரும்பாலும் நின்றுகொண்டுதான் போக வேண்டும்.
நாங்கள் மோதி பாக் சென்று சார்ட்டர்ட் பஸ் ஏறினோம். நான்
நின்று கொண்டேன். அவருக்கு பானட்டில் உட்கார இடம் கிடைத்தது. அவர் பஸ்
பொறுப்பாளரிடம் டிக்கெட் பணம் கொடுக்கும்போது எனக்கும் சேர்த்து காசு கொடுத்தார்.
பஸ் பொறுப்பாளர் என்னைத் திரும்பிப் பார்த்தார், அவரிடம் ஏதோ பேசினார்,
மறுபடி திரும்பிப்
பார்த்தார். என்னிடம் வந்தவர், தன்னுடைய இருக்கையில் அமரச் சொன்னார். பரவாயில்லை, நிற்பது சிரமமில்லை என்றேன்.
வற்புறுத்தி உட்கார வைத்தார். அவர் கதவுப்படியில் நின்று கொண்டார். சிறிதுதூரம்
போனதும் பெண்கள் ஏறினார்கள். பெண்கள் நின்று கொண்டு வரும்போது உட்கார்ந்திருக்க
எனக்கு மனம் வரவில்லை. எழுந்து இடம் கொடுத்துவிட்டேன். பஸ் பொறுப்பாளர் என்னைப்
பார்த்து சிரித்தார்.
ரோகிணி போனேன், சாப்பிட்டேன், குழந்தைகளுடனும் அவருடைய கணவருடனும் பேசிக் கழித்தேன்,
அங்கேயே உறங்கினேன்.
காலையில் அதே பஸ்சில் இருவரும் திரும்பி வந்தோம்.
வீட்டுக்கு வந்து வேலையைத் துவங்கும்போது அவர் கேட்டார் –
“சார்... உங்களை
உக்காரச் சொன்ன சார்ட்டர்ட் பஸ்காரன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன சொன்னான்?”
“உங்களுக்கும் சேத்து காசு கொடுத்தேன். உங்களைத் திரும்பிப்
பாத்தான் இல்லியா... நீங்க யாருன்னு கேட்டான். எங்க சார்னு சொன்னேன். உங்களுக்குக்
காசு வாங்க மாட்டேன்னுட்டான்.”
“அட... அது ஏன்?”
“உங்களைப் பாத்தா ஏதோ மரியாதை வந்துடுச்சாம். திரும்பித்
திரும்பி பாக்கணும்னு தோணுச்சாம். ஏன்னு தெரியலியாம். அவருக்கெல்லாம காசு வாங்கினா
அது செரிக்காதுன்னு தோணிச்சாம்.”
“ஹாஹாஹா”
“அது மட்டுமில்லே. நேத்து உங்களுக்கு உக்கார சீட் குடுத்தா
நீங்க யாரோ பொம்பளைங்களை உக்கார வச்சுட்டீங்க இல்லே... இன்னிக்கி காலையில சொல்றான்
- இனி நீங்க எப்போ வந்தாலும் உங்களுக்கு ஃப்ரீதானாம். உங்க சார் மாதிரி ஆளுகளைப்
பாக்கறதே பெரிய விஷயம். அவரு கண்ணுலயே ஏதோ சக்தி இருக்குன்னு சொன்னான். ஆமா...
பின்னே... எங்க சாரை யார்னு நினைச்சேன்னு கேட்டேன்.”
சொல்லும்போது அவர் முகத்தில் இருந்த பெருமித உணர்வு...!
*
ஓரிரு ஆண்டுகள் எங்கள் கட்டிடத்திலேயே மேல் மாடியில்
வாடகைக்கு வீடு எடுத்து வசித்தார். அப்போது ஞாயிறு காலைகளில் அவருடைய வீட்டுக்குச்
சென்று காபி குடிப்பது வழக்கம். உடுமலையில் நான் முதல் முறையாக ஒரு வீட்டு மனை
வாங்கும்போது எங்கள் மனைக்குப் பக்கத்தில் தனக்கும் வீட்டு மனை வாங்கினார். “புள்ளைங்களுக்கு கல்யாணம்
எல்லாம் முடிஞ்சு ஓஞ்சு போய் ரிடையர் ஆனப்புறமும் பக்கத்துப் பக்கத்து வீட்டிலேயே
இருப்போம்” என்பார்.
“அப்பவும் காபி கிடைக்கும் இல்லியா?” என்று கேட்பேன்.
*
1996இல் பணியில் சேர்ந்து,
2010இல் உடல்நிலை
மிகவும் சீர்கெடும் வரை என்னிடம் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக வேலை செய்த – இல்லையில்லை, எங்கள் குடும்பத்தில்
அங்கமாக இருந்த மைதிலி மறைந்து இன்றோடு ஏழு ஆண்டுகள் ஆகி விட்டன. மூன்று ஆண்டுகளுக்கு
முன் அவருடைய கணவர் சங்கரனும் மறைந்து விட்டார்.
எங்கள் வீட்டுமனையை விற்று விட்டேன். அவர் கம்போஸ் செய்த
சில புத்தகங்கள் இன்னும் முடிக்கப்படாமல் கம்ப்யூட்டரில் இருப்பதுபோல உடுமலையில்
வாங்கிய அவருடைய மனை இப்போது என்னிடம்தான் இருக்கிறது.
This comment has been removed by the author.
ReplyDeleteஏற்கெனவே வாசித்தது போலவே இருந்தது, அந்த 286 கம்ப்யூட்டர், டிவி, மாருதி கார் என்றதும் சட்டென்று நினைவு வந்துவிட்டது. நம்முடன் பலகாலம் கூட இருந்தவர்கள், நம்முடன் ஒன்றோடு ஒன்றாகக் கலந்துவிட்டவர்கள், நம்மைவிட்டுப் பிரியும்போது நம் குடும்பத்தில் ஒருவரை இழந்துவாடும் அதே மனநிலை வந்துவிடும். என்ன ஒரே ஆறுதல் என்றால் அவர்கள் பிரிந்தாலும் அந்தப் பிணைப்புச் சங்கிலியின் ஏதோ ஒரு கண்ணியை நம்மிடம் நமக்கெ தெரியாமல் ஒப்படைத்துவிட்டு நாம் இருக்கும்வரை அவர்களை மறக்கவே முடியாதபடி செய்துவிடுகிறது காலம். உடல்தானே பிரிந்திருக்கிறது உணர்வுகளுக்குள் ஒன்றுடன் கலந்துவிட்டவர்களுக்கு பிரிவேது?
ReplyDelete