Wednesday, 21 February 2018

தாய்மொழி தினம்


இன்று தாய்மொழி தினம்.

தாய்மொழி தினம் என்றால் தாய்மொழியின் சிறப்பை மட்டும் பேசுவதற்காக அல்ல. தன்னுடைய மொழி மட்டுமே மற்ற மொழிகளினும் உயர்ந்தது என்று கருதுவதற்காக அல்ல.

உலகின் எல்லா மொழிகளும் காக்கப்பட வேண்டும் என்பதற்கானது தாய்மொழி தினம். இதன் நோக்கத்தில், மொழிகள் மற்றும் பண்பாடுகளின் பன்முகத்தன்மையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது, பன்மொழிச் சிந்தனைகளை ஊக்குவிப்பது ஆகியவையும் அடங்கும்.



தாய்மொழி தினத்துக்காக பிப்ரவரி 21ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டது ஏன்?

இந்தியா விடுதலை பெற்றபோது இந்தியா-பாகிஸ்தான் என பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் இரண்டு பகுதிகளாக இருந்தது. ஒன்று இப்போது இருக்கிற பாகிஸ்தான். மற்றொன்று, கிழக்கு வங்காளம். அதாவது, இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்துக்கு கிழக்கே இருக்கிற வங்கம். 1956இல் இதற்கு கிழக்கு பாகிஸ்தான் என பெயர் மாற்றம் செய்தது பாகிஸ்தான்.

பாகிஸ்தானின் பெரும்பான்மையினர் முஸ்லிம்களாக இருந்தாலும் கிழக்கு வங்கத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் வங்கத்தினர்தான். ஆனால், பாகிஸ்தான் முழுமைக்கும் உருது மட்டுமே தேசிய மொழியாக இருக்கும் என 1948இல் பாகிஸ்தான் முடிவு செய்தது. அப்போது முதல் துவங்கியது வங்கத்தினரின் மொழிப்போராட்டம். மொழிக்கான போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது என அரசு தடை செய்தது.

1952 பிப்ரவரி 21ஆம் நாள் டாக்கா பல்கலை மாணவர்களும் மக்களும் தடையை மீறி போராட்டத்தில் இறங்கினர். காவல்துறை வழக்கம்போல அடக்குமுறையை ஏவியது. ஏராளமான மாணவர்கள் கொல்லப்பட்டனர். மாணவர்கள் கொல்லப்பட்ட செய்தி பரவி நாடெங்கும் கலகம் மூண்டது. மேலும் அடக்குமுறையும் மேலும் பல படுகொலைகளும் நிகழ்ந்தன. கிழக்கு பாகிஸ்தானின் அரசியல் சூழலும் மாறியது. அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்ட கூட்டணி அமைத்து, வங்கத்தை தேசிய மொழியாக ஆக்க வேண்டும் என்று கோரின.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை இது மொழி சார்ந்த சிக்கல் மட்டுமல்ல. அரசுக்கு எதிரான போராட்டமாகவும் இதைக் கண்டது. கிழக்கு வங்கம் தனியாகப் பிரிந்து போய்விடக்கூடும் என அஞ்சியது. அதனாலேயே வங்க மொழியை அங்கீகரிக்க மறுப்பதில் பிடிவாதமாகவும் இருந்தது. (கிழக்கு பாகிஸ்தானில் பெரும்பான்மையினர் முஸ்லிம்கள் என்றாலும் தம்மை வங்கத்தினராக நினைத்தார்கள். மொழி ஆதிக்கத்தை வெறுத்தார்கள். 1972இல் இந்தியாவின் துணையோடு வங்க தேசம் சுதந்திர நாடாக ஆனதன் பின்னணியில் மொழியினால் அந்நியப்படுத்தியதும் ஒரு காரணம்.)

நீண்ட நெடிய போராட்டங்கள், அரசியல் கட்சிகளின் நிர்ப்பந்தம் காரணமாக, 1956 பிப்ரவரி 29ஆம் தேதி, உருது-வங்கம் இரண்டுமே பாகிஸ்தானின் ஆட்சிமொழியாக இருக்கும் என அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டது.

வங்க மொழிப்போர் நடந்த பிப்ரவரி 21ஆம் தேதியை முன்னிட்டே தாய்மொழி தினம் 21ஆம் தேதி என முடிவானது.

மற்ற எல்லா மொழிகளையும் மதிப்போம். அதே நேரத்தில் தாய்மொழிக்கும் மேலே வேறொரு மொழி ஆதிக்கத்தை திணிக்க முயன்றால் அதை எதிர்த்து வெல்வோம் என்ற செய்தி தாய்மொழி தினத்தை முடிவு செய்த தேதியில் மறைந்திருக்கிறது.

*

சில நாட்களுக்கு முன்னால் ஒரு பதிவைப் பார்த்தேன். பள்ளி ஆசிரியை ஒருவர் எழுதிய பதிவு அது. பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொள்ள முடியவில்லை, சிரமப்படுகிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு மொழிக்கு மேலே திணிக்கக்கூடாது.... அவர்களால் கற்க முடியாது... ஆங்கிலம் கற்பதைவிட இந்திய மொழியான இந்தியைக் கற்பிக்கலாம் என்று அவருக்கே உரித்தான புரிதலுடன் எழுதியிருந்தார். அரைகுறைப் புரிதல் கொண்ட பேஸ்புக் சமூகத்தினர் ஆஹா... மிகச்சரி என்று கமென்ட்டுகள் போட்டிருந்தார்கள். (இந்தி கற்க முடியாமல் போனதால் வீழ்ந்தோம் என்ற வழக்கமான உளறல்களும் இருந்தன)

அவர் சிறந்த ஆசிரியராக இருக்கலாம். ஆனால் இங்கே பிரச்சினை என்னவென்றால், ஆசிரியப் பணி தொடர்பான புரிதலுக்கும் கற்பித்தலுக்கும் மேலே மொழி குறித்த புரிதல் பலருக்கும் தெளிவாக இல்லை.

குடும்பத்தில் அல்லது சமூகத்தில் பன்மொழிப் பின்னணி கொண்ட குழந்தைகள் பல்வேறு செயல்பாடுகளில் ஒற்றை மொழிப் பின்னணி கொண்ட குழந்தைகளைவிட சிறந்து விளங்குகிறார்கள் என்று ஏராளமான ஆய்வுகள் காட்டுகின்றன. இணையத்தில் தேடி அவற்றைப் படித்து அறிவை விருத்தி செய்து கொள்ளலாம்.

பன்மொழி கற்பவர்கள் என்று சொல்லும்போது, இதிலும் பல வகையினர் உண்டு. பிறப்பிலிருந்து இருமொழி கற்கும் சூழல் உள்ளவர்கள். பள்ளிக்குச் செல்லும்போது இருமொழி கற்பவர்கள். தொழில் அல்லது புலம்பெயர்தல் காரணமாக வாழ்க்கையின் பிற்பகுதியில் இரண்டாவது மொழி கற்பவர்கள். இதைப்பற்றி எழுதினால் நீளமாகப் போகும். சுருக்கமாகச் சொன்னால், இளம் வயதிலேயே இரண்டாம் மொழியைக் கற்பது மூளையின் செயல்பாடு மேம்பட உதவுகிறது.

அந்த இரண்டாம் மொழி என்பது இரண்டாவது மொழியாக மட்டுமே இருந்தாக வேண்டியதில்லை. மூன்று நான்கு மொழிகளாகவும் இருக்கலாம்.

குழந்தையின் பத்தாவது மாதத்திலிருந்து மொழி கற்கும் சாளரம் திறக்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது. அதற்கும் முன்னரே அவர்களால் கேட்க முடியும்தான், கருவிலேயேகூட கேட்க முடியும். ஆனால் பத்தாம் மாதத்துக்குப் பிறகு தம் காதில் விழுந்த ஒலிகளை திருப்பிச் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அதாவது, பதில் பேச முயற்சி செய்யத் துவங்குகிறார்கள்.

வளரும் சூழலைப் பொறுத்து மூன்று நான்கு மொழிகளைக்கூட குழந்தைகள் கற்றுக்கொள்ள முடியும். கற்பதற்கான சூழலை எப்படி வழங்குகிறோம் என்பதே முக்கியம். எனவே, ஆங்கிலம் அந்நிய மொழியாக இருப்பதால் கற்க முடியவில்லை, இந்தி இந்திய மொழி என்பதால் கற்பது சுலபம் என்றெல்லாம் நினைப்பது அபத்தம்.

ஒரு மொழியை மட்டுமே அறிந்து வைத்துக்கொண்டு என் மொழியினும் சிறந்த மொழி வேறில்லை என நினைப்பதும் அபத்தம். வாய்ப்புக் கிடைக்கும்போது வேறு மொழிகளையும் கற்றுக் கொள்ளலாம். வாழ்க்கை இனிக்கும்.

*
தாய்மொழியைக் காப்போம்
எல்லா மொழிகளையும் மதிப்போம்
எந்த மொழித் திணிப்பையும் எதிர்ப்போம்.