Monday, 6 August 2018

நட்பு தினம்


இரண்டு நாட்களுக்கு முன்பு எல்லாரும் நட்புதின வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டார்கள்.

உலக நட்பு தினம் எப்போது முதல் அனுசரிக்கப்படுகிறது? துல்லியமாக யாராலும் சொல்ல முடியாது.

இணையத்தில் தேடினால், ஹால்மார்க் என்னும் வாழ்த்து அட்டை நிறுவனத்தால் 1930 முதல் தொடங்கப்பட்டதாகத் தெரிகிறது. அப்போது ஆகஸ்ட் 2ஆம் தேதி நட்புதினமாக இருந்தது. அதற்கும் முன்னால் 1920இலேயே நட்புதினத்தை கொண்டாட அமெரிக்காவின் வாழ்த்து அட்டைகள் தயாரிப்பாளர்கள் சங்கம் முன்வந்ததாகவும், இது வியாபார தந்திரம் என்று நுகர்வோர் அதை எதிர்த்ததாகவும் தெரிகிறது.

பராகுவே நாட்டைச் சேர்ந்த டாக்டர் ரமோன் ஆர்டெமியோ பிராகோ (Dr. Ramon Artemio Bracho) என்பவர் சிறந்த மருத்துவர். பல ஆண்டுகள் கிராமப் புறங்களில் மருத்துவப் பணி புரிந்தவர். பிறகு பராகுவே நாட்டின் ராணுவ மருத்துவராகப் பணியில் சேர்ந்தார். (இரண்டு படங்களிலும் இருப்பவர்கள் டாக்டர் பிராகோவும் அவருடைய துணைவியாரும்) 



1958 ஜூன் மாதம் நண்பர்களுடன் உரையாடியபோது, உலக நட்பு தினம் என்ற ஒன்றை அறிமுகம் செய்யலாமே என்று கூறியிருக்கிறார். அந்த ஆலோசனை நண்பர்களால் ஏற்கப்பட்டு, சரியாக ஒரு மாதம் கழித்து ஜூலை 20ஆம் நாள் ஓர் அமைப்புக்கான விதிகள் உருவாகும் என்றும், அடுத்த ஒரு வாரம் நட்புக்காக கொண்டாடப்படும் என்றும் முடிவானது.

அதன்படி, 1958 ஜூலை 20ஆம் தேதி உலக நட்புக்கான புனிதப்போர் (World Friendship Crusade) என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. 21 முதல் 27 வரை நட்பு வாரம் அனுசரிக்கப்பட்டது. அடுத்த ஆண்டிலிருந்து ஜூலை 24 முதல் 30 வரை நட்பு வாரம் என முடிவானது. 1968ஆம் ஆண்டு, இந்த அமைப்புக்கு World Crusade of Friendship என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இந்த அமைப்பினர், உலக நட்பு தினத்தை அறிவிக்க வேண்டுமென ஐ.நா. மன்றத்துக்கு முறையிடத் துவங்கினார்கள். ஜூலை 30ஆம் நாளை உலக நட்புதினமாக அனுசரிப்பது என ஐ.நா. மன்றம் 2011 ஜூலை 27ஆம் தேதி முடிவு செய்தது. (ஐ.நா. தீர்மானம் காண இங்கே சொடுக்கவும்.)

ஆயினும், இந்தியா போன்ற சில நாடுகளில் நட்புதினம் வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் இப்போது ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிறு நட்பு தினமாக இருக்கிறது. அமெரிக்காவில் இரண்டாவது ஞாயிறுதான் நட்பு தினம். எத்தனைக்கெத்தனை அதிக நாட்கள் அனுசரிக்கப்படுகிறதோ அத்தனைக்கு அத்தனை வாழ்த்துப் பரிசு தயாரிப்பு நிறுவனங்களுக்கு லாபம்தான்.



உலகெங்கும் இருக்கிற மக்கள் அரசியல், மத, பண்பாட்டு ரீதியான தடைகளை மீறி ஒன்றுபடுவதற்கு நட்பே பிரதானமானது என்பதே டாக்டர் பிராகோவின் கொள்கை. அதுவே நட்புதின சேதியாகவும் இருக்கட்டும்.

No comments:

Post a Comment