Monday, 6 August 2018

தாய்ப்பாலும் மார்பகப் புற்றுநோயும்


தாய்ப்பால் வாரம்

ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரம்.

ஆகஸ்ட் 1 முதல் 7 வரை தாய்ப்பால் வாரம் என யார் முடிவு செய்தது?
ஐ.நா. மன்றத்தின் யுனிசெஃப் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகிய அமைப்புகள் 1990ஆம் ஆண்டு இத்தாலியின் இன்னொசென்டி நகரில் நடைபெற்ற மாநாட்டில், இன்னொசென்டிபிரகடனத்தை வெளியிட்டன. (இந்தியாவும் அந்த மாநாட்டில் பங்கேற்றது.) ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியிடப்பட்ட அந்தப் பிரகடனத்தின்படி, தாய்ப்பால் தருவதை ஊக்கப்படுத்த நடவடிக்கைகள் எடுக்குமாறு அரசுகளுக்கு அறிவுறுத்தின.

1991ஆம் ஆண்டு தாய்ப்பால் தருவதற்கான உலகளாவிய கூட்டணி (World Alliance for Breastfeeding Action) என்ற அமைப்பை உருவாக்கினார் அன்வர் ஃபஸல்., மலேசியாவை தலைமையிடமாகக் கொண்ட WABA அமைப்பின் தலைவர் அன்வர் ஃபஸல்,  இன்னொசன்டி பிரகடனத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், 1992 முதல் தாய்ப்பால் வாரத்தை அனுசரிக்க அழைப்பு விடுத்தார். அதன்படி ஆகஸ்ட் முதல் வாரம் தாய்ப்பால் வாரம் என 170 நாடுகளில் அனுசரிக்கப்படுகிறது. (சில நாடுகள் வேறு நாட்களிலும் அனுசரிக்கின்றன.)

ஒவ்வோர் ஆண்டும் ஒரு கோஷம் இறுதி செய்யப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கோஷம் தாய்ப்பால் : வாழ்க்கையின் அஸ்திவாரம் (BREASTFEEDING: Foundation of Life)

*

எத்தனை காலத்துக்குத் தாய்ப்பால் தரலாம்?
குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு (தவிர்க்க முடியாத காரணங்கள் இருந்தால் தவிர) தாய்ப்பால் தவிர வேறு ஏதும் தரத் தேவையில்லை. அதற்குப் பிறகு, மேல் பால் கொடுத்தாலும்கூட தாய்ப்பாலும் தரலாம். குழந்தைக்கு திட உணவு கொடுக்கத் துவங்கிய பிறகும்கூட தாய்ப்பால் தரலாம். பொதுவாக இரண்டு ஆண்டுகள் வரை தாய்ப்பால் தரலாம் என கருதப்படுகிறது. ஆயினும், இரண்டு ஆண்டுகள் என்பதே உச்சவரம்பு கிடையாது. எப்போது வரை தாய்ப்பால் தரலாம் என்று கவலைப்பட தேவையில்லை. தாய்க்கும் குழந்தைக்கும் எத்தனை காலத்துக்கு வசதியோ அத்தனை காலத்துக்குத் தரலாம். எவ்வளவு அதிக காலத்துக்குத் தருகிறார்களோ அவ்வளவுக்கு நல்லது.

தாய்ப்பால் தருவதன் நன்மைகள் என்ன?
தாய்ப்பால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமை ஏற்படாமல் தடுக்கிறது. வயிற்றுக் கோளாறுகள், மூச்சுப் பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதில்லை. தாய்ப்பால் அருந்தும் குழந்தை அடிக்கடி மருத்துவமனைக்குச் செல்லத் தேவையில்லை.
தாய்ப்பாலில் புரோட்டீன்கள், கொழுப்பு, விட்டமின்கள், கனிமங்கள், தொற்றுகளை எதிர்க்கும் நோயெதிர்ப்பு சக்திகள் உண்டு. தொற்றுகள் ஏற்படாமல் காக்கிறது.
குழந்தையின் வளர்ச்சிக்கு உதவக்கூடிய ஹார்மோன்கள் தாய்ப்பாலில் உள்ளன.
தாய்ப்பால் தரும் தாய்மார்கள் உடல் பருமன் ஆகும் வாய்ப்புகள் குறைவு.
பற்கள் வலுவாகும், ஆஸ்துமா வராமல் காக்கும்.
தாய்க்கும் குழந்தைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துகிறது.
வெளியே போகும்போது குழந்தைக்காக உணவை கையில் எடுத்துச் செல்லத் தேவையில்லை.

இப்படி இன்னும் பல நன்மைகளை சொல்லிக்கொண்டே போகலாம். (முழுமையாக அறிய இங்கே சொடுக்கவும்.)

தாய்ப்பால் வாரம் இன்றுடன் முடிகிறது.

*

தாய்ப்பாலும் மார்பகப் புற்றுநோயும்

கேள்வி : தாய்ப்பால் தருவதால் மார்பகப் புற்றுநோய் வராது அல்லவா?
பதில் : இல்லை. தாய்ப்பால் தருவதால் புற்றுநோயைத் தடுக்க முடியாது, ஆனால் நோய் வரும் வாய்ப்பு குறைவு. இதற்கான காரணம் இன்னும் துல்லியமாகத் தெரியாது என்றாலும், குறைந்தது 12 மாதங்கள் பாலூட்டும் தாய்மாருக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வுகள் காட்டுகின்றன.


மார்பகப் புற்றுநோய் அறிந்த்தும் அறியாததும் என்னும் நூலில் மேற்கண்ட பதில் இருக்கிறது. அந்த நூலின் நோக்கம் கருதி, சுருக்கமாக தேவையான பதில் மட்டும் தரப்பட்டது.

தாய்ப்பால் தருவதால் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பு எப்படி குறைகிறது?

இந்தக் கேள்விக்கு நிரூபிக்கப்பட்ட பதில்கள் இல்லை என்றாலும் தர்க்கரீதியாக சில பதில்கள் கிடைக்கின்றன.
1. ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன், மார்பகப் புற்றுநோயைத் தூண்டுகிறது என கண்டறியப்பட்டுள்ளது. தாய்ப்பால் தரும் பெண்ணுக்கு, அவருடைய வாழ்நாளில் மாதவிடாய் சுழற்சி குறைவாகவே இருக்கும். அதனால் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறையும். அதனால் மார்பகப் புற்றுநோய் வாய்ப்பு குறையும்.
2. உயிரணுக்களின் டிஎன்ஏவில் ஏற்படும் பிறழ்வுகளால்தான் புற்றுநோய் வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். தாய்ப்பால் தருவதால், டிஎன்ஏவில் பிறழ்வுகள் ஏற்படுவதற்கு தடையாக இருப்பதாகத் தெரிகிறது. 24 மணி நேரமும் பால் உற்பத்தி செய்யும் வேலையில் இருக்கும் உயிரணுக்கள், பிறழ்வதற்கான வாய்ப்புகள் குறைவு. 
3. தாய்ப்பால் தருகிற (கருவுற்ற) பெண்கள் பொதுவாக மது / புகைப் பழக்கத்தைக் கைவிடுகிறார்கள். ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்கிறார்கள். தம்மைத் தாமே இன்னும் நன்றாக கவனித்துக் கொள்கிறார்கள். இந்த வாழ்க்கைமுறை மாற்றங்கள் மார்பகப் புற்றுநோய் வரக்கூடிய வாய்ப்பைக் குறைக்கின்றன.

தாய்ப்பால் தருபவர்களுக்கு மார்பகப் புற்றுநோய் வராது என்பது எவ்வளவு அபத்தமோ, அதே அளவுக்கு தாய்ப்பால் தராவிட்டால் மார்பகப் புற்றுநோய் வரும் என்பதும் அபத்தம்தான்.

பி.கு. மார்பகப் புற்றுநோய் : அறிந்ததும் அறியாததும் நூல் உடுமலை டாட் காம் வலைதளத்தில் கிடைக்கும். பேஸ்புக்கில் ராஜாமகளிடம் கிடைக்கும்.

No comments:

Post a Comment