அணுவின் துணைகொண்டு ஆயிரம் மனிதரை
அழித்ததைப் பார்த்தாச்சு - அட
அனுபவம் கண்ட பின்னரும் போரிடும்
ஆசைகள் போகலையே.
அழித்ததைப் பார்த்தாச்சு - அட
அனுபவம் கண்ட பின்னரும் போரிடும்
ஆசைகள் போகலையே.
கோள்களின் துணையால் உலகம் மிகவும்
குறுகிப் போயாச்சு - அட
கொள்ளை அடித்திட எல்லைகள் தாண்டிடும்
குணங்கள் மாறலையே.
குறுகிப் போயாச்சு - அட
கொள்ளை அடித்திட எல்லைகள் தாண்டிடும்
குணங்கள் மாறலையே.
புத்தர் காந்தி எனப்பலர் அஹிம்சை
போதனை செய்தாச்சு - அட
யுத்தம் நிறவெறி இனப்படு கொலைகள்
இன்னமும் தீரலையே.
போதனை செய்தாச்சு - அட
யுத்தம் நிறவெறி இனப்படு கொலைகள்
இன்னமும் தீரலையே.
ஆலைகள் வைத்து காற்றையும் நீரையும்
அசுத்தம் செய்தாச்சு - அட
வளமாய் வாழ்ந்திட வனங்களை மரங்களை
வளர்த்திட மனமிலையே.
அசுத்தம் செய்தாச்சு - அட
வளமாய் வாழ்ந்திட வனங்களை மரங்களை
வளர்த்திட மனமிலையே.
மதத்தின் பேரால் மக்களைப் பிரித்திடும்
மனிதரைப் பார்த்தாச்சு - அட
மதம்பிடித்தலையும் மனங்களை மாற்றிட
மார்க்கமும் தெரியலையே.
மனிதரைப் பார்த்தாச்சு - அட
மதம்பிடித்தலையும் மனங்களை மாற்றிட
மார்க்கமும் தெரியலையே.
அன்பே துணையென அத்தனை மதங்களும்
அறிவுரை செய்தாச்சு - அட
அன்பின் இடத்தில் ஆத்திரம் குடிகொண்டு
ஆண்டுகள் ஆனதுவே.
அறிவுரை செய்தாச்சு - அட
அன்பின் இடத்தில் ஆத்திரம் குடிகொண்டு
ஆண்டுகள் ஆனதுவே.
எத்தனை காலம் பொய்களில் திளைத்து
மாயையில் வாழ்ந்திருப்போம்? - அட
இத்தரை மீதில் அறிவுடை உயிரினம்
மனிதரென மறவோம்.
மாயையில் வாழ்ந்திருப்போம்? - அட
இத்தரை மீதில் அறிவுடை உயிரினம்
மனிதரென மறவோம்.
கந்தன் காவடி கறுப்பு இருமுடி
காவிச் சடாமுடியும்
ஏசுவின் திருவடி பறந்திடும் பிறைக்கொடி
எல்லாம் ஒர் நிரையே
காவிச் சடாமுடியும்
ஏசுவின் திருவடி பறந்திடும் பிறைக்கொடி
எல்லாம் ஒர் நிரையே
என்பது தெளிந்து அன்பினில் திளைத்து
பண்புற வாழ்ந்திடுவோம்
எல்லைகள் களைந்து வன்முறை மறந்து
புத்துலகம் படைப்போம்.
No comments:
Post a Comment