Sunday, 8 July 2018

மூன்றாம் பாலினத்தவரும் சில முட்டாள்களும்


2013 ஜூன் மாதம் இந்திய அரசு நடத்திய பொருளாதாரக் கணக்கெடுப்புப் படிவத்தில், கணக்கெடுப்புக் கேள்வி ஒன்றில் ஆண் என்றால் 1, பெண் என்றால் 2, மூன்றாம் பாலினத்தவர் என்றால் 9 என்று எண்கள் தரப்பட்டிருந்தன. இது சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது.

மூன்றாம் பாலினத்தவரை தமிழ்நாட்டில் கேலியாக சுட்டும் வழக்கத்தை ஒட்டி 9 என்ற எண் தரப்படவில்லை. கணக்கெடுப்புகளில் குறிப்பாக வகைப்படுத்த இயலாதவற்றுக்கு – ஆங்கிலத்தில் others என்ற வகைக்கு 9, 99 என எண்கள் தருவது பொதுவான வழக்கம்தான். இதுவும் இப்படித்தான் தரப்பட்டிருக்கும். ஆனால், அதற்கு முந்தைய கணக்கெடுப்பில் ஆண் என்றால் 1, பெண் என்றால் 2, அவர் பதிலளிக்க விரும்பவில்லை என்றால் 3 எனக் குறிப்பிடுமாறு சொல்லப்பட்டிருந்தது. 2013இல் 9 என்ற எண் தரப்பட்டது மட்டுமல்ல, ஈனுக் என்ற விளக்கமும் கையேட்டில் இருந்தது.

சமூக ஊடகங்களில் இந்த 9 விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியது. இது தொடர்பாக, அரசு திட்டமிட்டுச் செய்திருக்காது, இருந்தாலும் இதை கவனத்தில் கொண்டு செயல்பட்டிருக்கலாம் என்று பதிவு எழுதினேன். சிலர் என்னை கண்டித்தார்கள், சிலர் பாராட்டினார்கள்.

இதுகுறுத்தி மத்திய உள்துறை அமைச்சகத்தின் சம்பந்தப்பட்ட துறைக்கு நான் ஒரு அஞ்சலை அனுப்பினேன். நடந்தது நடந்து விட்டது, கணக்கெடுப்பு ஊழியர்களுக்கு சிக்கலான இந்த விஷயத்தைப் புரிய வைத்து, கேள்வி கேட்கும்போது எச்சரிக்கையாக இருக்கச் செய்யுங்கள் என்று அதில் விளக்கமாக எழுதினேன். கடிதத்தின் தமிழாக்கத்தையும் பேஸ்புக்கில் பதிவாகப் பகிர்ந்தேன். (சம்பந்தப்பட்ட அரசுத்துறை இந்தத் தவறுக்கு பிற்பாடு வருத்தம் தெரிவித்ததாக நினைவு.)

ஜூன் 30ஆம் தேதியுடன் இது நடந்து ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. அந்தக் கணக்கெடுப்பில், ஆண் பெண் தவிர மூன்றாம் பாலினத்தவரைக் கணக்கெடுக்க தனி குறியீட்டு எண் தரப்பட்டது எந்தளவுக்குப் பயன் தந்தது?

கணக்கெடுப்பின் இறுதி அறிக்கையைப் பார்த்தால்தான் விவரம் தெரியும் அல்லவா? எனவே, அதைத் தேடிப் பார்த்தேன். ‘அதர்ஸ்’ பிரிவில் எந்த விவரமும் கிடைக்கவில்லை என்று சொன்னது அறிக்கை.
Information on proprietary establishments owned by ‘Others’ i.e. transgenders, being collected for the first time, was difficult to collect. In the past, such information was compiled under male category. Therefore, there is some possibility of its contamination with data, pertaining to males

சொந்தமாக நிறுவனங்கள் வைத்திருப்பவர்கள் குறித்த தகவல் திரட்டும்போது, பாலினக் குறியீட்டில் மற்றவர்கள்” – அதாவது மூன்றாம் பாலினத்தவர் குறித்த விவரம் முதல் முறையாகத் திரட்டப்பட்டது, ஆனால் அது மிகவும் சிரமமாக இருந்தது. கடந்த காலத்தில், இந்த்த் தகவல் ஆண் என்ற பிரிவில் திரட்டப்பட்டது. எனவே, ஆண்கள் என்ற பிரிவில் திரட்டப்பட்ட தரவுகளில் (மூன்றாம் பாலினத்தவரும் சேர்ந்து கொண்டதால்) பிழைகள் இருக்கலாம்”.

அதாவது, மூன்றாம் பாலினத்தவர் சொந்த நிறுவனங்களை நடத்தி வந்தாலும்கூட, அவர்கள் தம்மை அவ்வாறு அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை என்று தெரிகிறது.

காரணம் என்னவாக இருக்கும்? கீழே இருக்கும் படத்தைப் பாருங்கள்.


மூன்றாம் பாலினத்தவருக்கு ஆதரவாக சட்டங்கள் இயற்றப்பட்ட பிறகும், கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் புதிய சில நடவடிக்கைள் எடுக்கப்பட்ட பிறகும், சமூக ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்ளும் கஸ்தூரி போன்ற முட்டாள் ஜென்மங்கள் இப்படி எழுதிக் கொண்டிருக்கும்போது, அவர்கள் தம்மை மூன்றாம் பாலினத்தவர்களாக அடையாளப்படுத்திக் கொள்ள முடியுமா என்ன?

No comments:

Post a Comment