2016 ஜூன் மாதம் சென்னையிலிருந்து தில்லிக்குத் திரும்பி வரும்போது ஸ்டூவர்ட்புரம்
ரயில் நிலையம் கண்ணில் பட்டது. இந்த ஊரைப் பற்றி ஏதோ எப்போதோ கேள்விப்பட்டதாக
மனதுக்குள் மணியடித்தது. ஆனால் அது என்ன என்பது மட்டும் நினைவு வரவில்லை. எதற்கும்
படம் பிடித்து வைத்துக்கொள்வோம், பிற்பாடு நினைவூட்ட
உதவியாக இருக்கும் என்று செல்போனில் பதிந்து கொண்டேன். பிறகு இணையத்தில்
துழாவினேன்.
ஸ்டூவர்ட்புரம் போலீஸ் ஸ்டேஷன் என்ற தலைப்பில் தெலுங்கில்
ஆக்ஷன் திரைப்படம் 1991இல்
வந்திருக்கிறது. (யூடியூபில் பார்க்கலாம்) சிரஞ்சீவி, விஜயசாந்தி
நடித்தது. ஸ்டூவர்ட்புரம் திருடர்களுக்காகப் புகழ் பெற்ற ஊர். தன் தந்தையும் ஒரு
காலத்தில் திருடனாக இருந்த ஸ்டூவர்ட்புரத்துக்கு வருகிறார் இன்ஸ்பெக்டர் ராணா
பிரதாப் (சிரஞ்சீவி). திருடர்களைத் திருத்துவதுதான் அவருடைய முக்கிய நோக்கம்.
மற்றொரு நோக்கம், செய்யாத
திருட்டுக்காக தன் தந்தையின் மீது பழி விழுந்து பெற்றோர் தற்கொலை செய்து
கொள்கிறார்கள். ராணா பிரதாப் உண்மைக் குற்றவாளியையும் கண்டுபிடிக்கிறார். அந்த
வில்லன் சரத் குமார். டைரக்டர் எண்டமூரி வீரேந்திரநாத்! “எனக்குத் திமிர்... சிரஞ்சீவியைப் போட்டாலே
ஓடிடும்னு நினைச்சேன். ஓம்புரி இடத்துல சிரஞ்சீவி எல்லாம் ஈடுகொடுக்க முடியுமா? படம் ஊத்திக்கிச்சு” என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அதே எண்டமூரி!
(இந்தப் படம் அர்த் சத்யா இந்திப் படத்தின் ரீமேக் என்கின்றன வலைதளங்கள்.)
சரி அது கிடக்கட்டும். நமக்கும் சினிமாவுக்கும் வெகு தூரம்.
இலக்கியத்தையும் சினிமாவையும் ஒருசேர அலசும் சுரேஷ் கண்ணன், எண்டமூரி இயக்கிய இந்தப் படத்தைப் பற்றி
எழுதியிருக்க வேண்டாமோ? கன்னடப்
படங்களைப் பற்றி எல்லாம் எழுதும் கருந்தேள் ராஜேஷாவது எழுதியிருக்கலாம்.
போகட்டும்.
உண்மையாகவே இருக்கும் ஓர் ஊர் திருடர்களைக் கொண்டது, திருட்டுக்காகப் புகழ் பெற்றது என்று அந்த
ஊரின் பெயரையே வைத்து திரைப்படம் எடுத்தால் அடிக்க வர மாட்டார்களா? இந்தப் படத்தின் விஷயத்தில் வரவில்லை. ஏனென்றால், உண்மையிலேயே ஸ்டூவர்ட்புரம் ஒரு காலத்தில்
திருடர்களால் நிறைந்திருந்தது. அது எப்படி சாத்தியம் என்றால், வரலாற்றையும் பார்க்க வேண்டியிருக்கிறது.
குற்றப்பரம்பரை என்ற சொல் நினைவிருக்கிறதா? குற்றப் பரம்பரை திரைப்பட விஷயத்தில்
பாலாவுக்கும் பாரதிராஜாவுக்கும் மோதல் என்ற செய்திகளை ஒதுக்கி விடுங்கள். நான்
சொல்வது, அந்தச் சொல்லின்
பின்னணியை, வரலாற்றை.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில், 1871இல் குற்றப்பரம்பரைச் சட்டம் இயற்றப்பட்டது. பின்னர் பல்வேறு திருத்தங்கள்
செய்யப்பட்டன. இச்சட்டம், குறிப்பிட்ட ஒரு
சமூகத்தை மொத்தமாக குற்றப்பரம்பரை என்று முத்திரை குத்தும் - அவர்களில் பலர்
குற்றமே செய்யாதவராக இருந்தாலும்,
பிறவியாலேயே
குற்றவாளிகள் என்று சொன்னது அச்சட்டம். எந்த ஒரு சாதியையும் குற்றப்பரம்பரை என
அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. அவ்வாறு முத்திரை
குத்தப்பட்ட சமூகத்தின் 18 வயதுக்கு
மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும்
கைரேகையைக் காவல் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். கூப்பிட்ட நேரத்தில் காவல்
நிலையத்துக்கு வர வேண்டும். இரவில் ஆண்கள் தங்கள் வீட்டில் தூங்கக்கூடாது. காவலர்
கண்காணிப்பில் பொது மந்தை அல்லது காவல் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர், புதிதாகத் திருமணமானவர்களுக்கும் விதி விலக்கு
கிடையாது. பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் கடவுச்சீட்டு பெறவேண்டும்.
இந்த விதிகளை மீறினால் 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும்.
தமிழ்நாட்டில் கள்ளர்கள் இந்தச்சட்டத்தின்கீழ்
ஒடுக்கப்பட்டார்கள். மதுரை பகுதியையே மையமாகக் கொண்டவர்களாக இருந்தாலும்
கள்ளர்களின் கைத்திறன் கோவை வரை விரிந்திருந்தது. மாடுகள் திருடுபோவதும், குறிப்பிட்ட ஆள் மூலமாக கப்பம் செலுத்தினால்
திரும்பக் கிடைத்ததுமான சம்பவங்களை எங்கள் கிராமத்தில் பல முறை
கேள்விப்பட்டிருக்கிறேன்.
ஆனால், ஒட்டுமொத்தமாக
ஒரு சாதியையே குற்றப்பரம்பரை என்ற பெயரில் ஒடுக்குவதற்கு எதிராக பெரியார் உள்பட பல
கட்சியினரும் போராட்டங்களை நடத்தினர். கிரிமினல் டிரைப்ஸ் ஆக்டிலிருந்து கள்ளர்கள்
விடுவிக்கப்பட்டு, சீர் மரபினர் -
டீநோடிஃபைட் டிரைப்ஸ் என மாற்றப்பட்டனர். கள்ளர் சீர்திருத்த நடவடிக்கைகள் பலவும்
எடுக்கப்பட்டன. இதைப்பற்றி மேலும் விவரங்களை அறிய விரும்புவோர் இணையத்தில் படித்து
அறியலாம்.
வேட்டையே முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்த ஒரு சமூகத்தை
குற்றப் பரம்பரை என்று முத்திரை குத்தி, அவர்களை ஒரே இடத்தில் குடியமர்த்தியது பிரிட்டிஷ் அரசு. அதுதான்
ஸ்டூவர்ட்புரம். வாழ்வாதாரம் இல்லாமல் போன அவர்கள் குற்றச் செயல்களையே தமது
தொழிலாக மாற்றிக்கொண்டனர். திருட்டு,
கொள்ளை, வழிப்பறி, மிரட்டிப் பணம் பறித்தல் உள்பட எல்லா வழிகளிலும் புகழ் பெற்றதாக மாறியது
ஸ்டூவர்ட்புரம். (2012இல் ஒரு
செய்தியின்படி, போக்கிரி
அருண்குமார் என்பவர் 1000 கோடிக்கு
மேல்சொத்து சேர்த்திருப்பதாக ஒருவர் எழுதியிருக்கிறார்!) எங்கே குற்றம் நடந்தாலும், காவல்துறை இந்த ஊருக்கு வந்துவிடும்.
இப்படிப்பட்ட ஊரைத் திருத்த வருகிறார் ஒருவர். அவர் பெயர்
ஹேமலதா. சாதியம், தீண்டாமை
ஆகியவற்றை எதிர்த்த போராளி, சமூக
சீர்திருத்தவாதி, எழுத்தாளர், நாத்திகர். அவருடைய கணவர் பெயர் லாவணம்.
ஹேமலதாவின் பரம்பரையே நாத்திகர்கள்,
சாதியக்
கொடுமைக்கு எதிராக இயங்கியவர்கள். விஜயவாடாவில் நாத்திகர் மையம் நிறுவியவர்
இவருடைய மாமனார் கோபராஜு ராமசந்திர ராவ்.
ஹேமலதா, ஆந்திரத்தில்
ஸம்ஸ்கார் என்ற தன்னார்வ நிறுவனத்தை ஆரம்பிக்கிறார். சமூகநீதி, மனித உரிமைகள், மனிதாபிமான உதவி, சமூக மேம்பாடு
ஆகிய துறைகளில் பணியாற்றுகிறார்.
சம்பல் கொள்ளைக்காரர்களைத் திருத்த வினோபா பாவே மேற்கொண்ட
முயற்சியால் உந்தப்பட்டு, ஹேமலதா-லாவணம்
தம்பதி ஸ்டூவர்ட்புரத்தின் திருடர்களைத் திருத்த முன்வருகின்றனர். பல்லாண்டுகால
முயற்சிகளுக்குப் பிறகு அதில் வெற்றியும் பெற்றனர். குற்றப்பரம்பரை காலனிகள்
என்பதை மாற்ற வேண்டும் என நிர்பந்தம் செய்து, அரசை கைவிடச் செய்கின்றனர். முதல்வர் என்.டி. ராமராவ் மூலமாக குற்றத் தொழிலில்
இருந்தவர்களுக்கு மாற்றுத் தொழில்களுக்கு வழி செய்கின்றனர். ஆந்திரத்தில் தேவதாசி
(ஜோகினி / யோகினி) முறைக்கு முடிவு கொண்டு வந்தவரும் இவர்தான். இவருடைய
முயற்சிகளுக்கு ஆந்திர மாநில அரசும் ஒத்துழைப்பு வழங்கியது என்பது சிறப்பு. (இவர்களுடைய
சேவையைப் பற்றிய வீடியோவை இந்த இணைப்பில் கிளிக் செய்து பார்க்கலாம்)
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஹேமலதா, 2008இல் மறைகிறார். ஸ்டூவர்ட்புரமே சோகத்தில்
ஆழ்ந்தது என்கிறது ஒரு பத்திரிகைச் செய்தி.
*
உண்மையில் ஸ்டூவர்ட்புரத்தின் பெயர் பெத்தபுடி. இந்தப்
பகுதியின் எருகுல சமூக பழங்குடி மக்கள் உப்பு, தானியங்கள் போன்ற பொருட்களை கழுதையின்மீது ஏற்றிக்கொண்டு, சென்னை மாகாணத்தில் ஊர் ஊராகச் சென்று விற்பனை
செய்து வந்தார்கள். பிரிட்டிஷார் 1850களில் ரயில்
பாதைகளைப் போட்ட பிறகு இவர்களுடைய தொழில் முடங்கிப் போனது.
இதைத் தவிர,
வனங்களில்
சேகரித்த பொருட்களைக் கொண்டு கூடைகள்,
பாய்கள் போன்ற
பொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வந்தார்கள். ஆனால் காடுகள்-மேய்ச்சல்
நிலங்களைப் பயன்படுத்தும் உரிமை பழங்குடிகளிடமிருந்து பறிக்கப்பட்டு விட்டது.
இரண்டு வழிகளிலும் வாழ்வாதாரம் சிதைந்து விட்டதால் அவ்வப்போது திருட்டுத் தொழிலில்
ஈடுபட ஆரம்பித்தார்கள்.
ஊர் ஊராகச் சென்று தொழில் செய்யும் நாடோடிகள் மீது
பொதுவாகவே மக்களுக்கு இருக்கும் சந்தேகமும் முன்முடிபுகளும் சேர்ந்து மொத்த
சமூகத்தையும் திருட்டு சமூகம் என முத்திரை குத்தி விட்டது.
சால்வேஷன் ஆர்மி என்பது ஆங்கிலேயர்களின் ஒரு கருவியாக
செயல்பட்டு வந்த கிறித்துவ அமைப்பு. புரொட்டஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்த கட்டுப்பாடு
மிக்க தன்னார்வ நிறுவனமாக இப்போதும் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பைச் சேர்ந்த
பிரடெரிக் பூத் டுக்கர் என்பவர் Criminocurology;
or The Indian Criminal என்ற நூலை எழுதினார். இதில் இவர்களை எப்படித் திருத்தலாம்
என்ற கருத்தை முன்வைத்தார். அப்படி முன்வைக்கப்பட்ட முத்திரை 21ஆம் நூற்றாண்டின் இன்றுவரையிலும் எருகுல
சமூகத்தினரை வாட்டி வருகிறது.
‘குற்றப் பரம்பரை’யைத் திருத்த, அங்கங்கே குடியிருப்புகளை அமைக்க பிரிட்டிஷ் அரசு முடிவு செய்த்து. திருத்தக்
காலனிகளை அமைக்கும் பொறுப்பை சால்வேஷன் ஆர்மிக்கு அளித்தது. முதல் காலனி விஜயவாடா
அருகே அமைக்கப்பட்டது. இரண்டாவது காலனி குன்டூர் அருகே அமைந்தது. அப்போதைய சென்னை
மாகாண அமைச்சராக இருந்த ஹெரால்ட் ஸ்டூவர்ட் என்பவர் இதற்கான ஆணையிட்டதால், அவர் பெயரால் அமைக்கப்பட்டது ஸ்டூவர்ட்புரம்.
(எம்ஜிஆர் நடித்த பல்லாண்டு வாழ்க திரைப்படம் நினைவு வரக்கூடும்.)
சுதந்திர மனிதர்களாக தொழில் செய்து வந்தவர்கள், அந்தப் பகுதியின் வயல்கள்-தோட்டங்களில்
கூலிகளாக மாறினார்கள். குறைந்த கூலியில் ஆட்கள் கிடைப்பது அந்தப் பகுதியின்
நிலச்சுவான்தார்களுக்கும் வசதியாகப்போனது. மக்கள் தொகை பெருகப்பெருக, பக்கத்துத் தொழிற்சாலைகளின் தொழிலாளர்களாகவும்
மாறினார்கள். இப்போதைய எருகுல சமூகத்தினருக்கு தமது பழங்குடிப் பாரம்பரியமே மறந்து
போயிருக்கும்.
ஸ்டூவர்ட்புரத்தின் திருடர்களில் பிரபலமானவர் டைகர்
நாகேஸ்வர ராவ். போலீசுக்கு டிமிக்கி கொடுப்பதில் வல்லவர் என்பதால், சென்னை சிறையிலிருந்து தப்பிச் சென்றவருக்கு
சென்னை போலீஸ் அதிகாரி ஒருவரால் டைகர் பட்டம் பெற்றார். டைகரின் தம்பி பிரபாகர
ராவ் பங்கனப்பள்ளி வங்கி கொள்ளையில் புகழ் பெற்றவர். ஒரு காவல் நிலையத்துக்கு
எதிரிலேயே இருந்த ஒரு வங்கியிலிருந்து இரவில் கொள்ளையடித்து 15 கிலோ தங்கத்தை எடுத்துச் சென்றவர்கள் இவருடைய
குழுவினர். பிறகு, லாவணம் குழுவின்
மூலம் போலீசிடம் சரணடைந்தனர். டைகர்,
1987இல் போலீசாரால்
சுட்டுக் கொல்லப்பட்டவர். 27 வயதில்
சுட்டுக்கொல்லப்பட்ட அவரது இறுதிச் சடங்குக்கு அந்தக் காலத்திலேயே 20,000 பேர் திரண்டார்களாம். டைகர் நாகேஸ்வர ராவ்
வாழ்க்கையும் திரைப்படம் ஆகிறது. வம்சி கிருஷ்ணா இயக்கத்தில் அடுத்த ஆண்டு வெளிவர
இருக்கிறது திரைப்படம்.
No comments:
Post a Comment