உயிர் காக்கும்
பணியில் உன்னதச் சேவை புரியும் மருத்துவ நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
குறிப்பாக, டாக்டர் செ.
சுந்தரேசன் (மூத்த பேராசிரியர், புற்றுநோய் சிகிச்சைத் துறை, சென்னை
மருத்துவக் கல்லூரி), டாக்டர் செல்வமணி (பேராசிரியர் மற்றும் துறைத்தலைவர், புற்றுநோய்
சிகிச்சைத் துறை,
கிறிஸ்டியன் மருத்துவக் கல்லூரி, வேலூர்), இருவருக்கும்
நன்றியுடன் வாழ்த்துகள். தமிழில் வாசிக்கக்கூடிய மருத்துவர்கள் அதிகம் இல்லாத
சூழலில், இவர்கள் இருவரும் நான் எழுதிய ‘மார்பகப் புற்றுநோய் : அறிந்ததும் அறியாததும்’
என்னும் நூலை தமிழில் வாசித்து அணிந்துரை எழுதிக் கொடுத்தார்கள். அவர்களுடைய
அணிந்துரைதான் நூலுக்கு மதிப்புச் சேர்க்கிறது. இன்னும் எழுதத் தூண்டுகோலாய்
இருக்கிறது.
(என்னது... நீங்கள் நூல்
எழுதியிருக்கிறீர்களா என்று கேட்கும் நண்பர்களே... மன்னிக்கவும். இரண்டு நூல்கள்
எழுதிய வெளியிட்டேன். வலைப்பூவில் பதிவு எழுதத் தவறி விட்டேன். மார்பகப் புற்றுநோய் குறித்த நூல் 1000 பிரதிகள் விற்றுப்போய், ஒரே மாதத்தில் மறுபதிப்பும் வந்து விட்டது. விரைவில்
எழுதுவேன்.)
*
மருத்துவர் தினம் – அறிந்ததும்
அறியாததும்
இன்று இந்தியாவில் தேசிய
மருத்துவர் தினம். சர்வதேச மருத்துவர் தினம் அல்ல. ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு
நாள்களில் மருத்துவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. (உதாரணமாக, பிரேசிலில் அக்டோபர்
18, வியட்நாமில்
பிப்ரவரி 28, கியூபாவில்
டிசம்பர் 3).
இந்தியாவில் ஜூலை 1ஆம் தேதியை
மருத்துவர் தினமாக அனுஷ்டிப்பதென 1991ஆம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ஏன் ஜூலை 1ஆம் தேதி? அதுதான் டாக்டர்
பிதன் சந்திர ராய் பிறந்த தினம் (1-7-1882). அவருடைய மறைவு தினம் கூட
(1-7-1962). பிதன் சந்திர
ராய் யார் என்று தெரியாதவர்களுக்கு அவரைப்பற்றி சுருக்கமாக ஓர் அறிமுகம் கீழே :
பட்னாவில் பிறந்தவர். கல்கத்தா
பிரசிடென்சி கல்லூரியில் இன்டர், பட்னா கல்லூரியில் பிஏ, கல்கத்தா
மருத்துவக் கல்லூரியிர் மருத்துவம் பயின்றவர். இங்கிலாந்துக்குச் சென்று
பார்த்தோலோம் மருத்துவமனையில் மேற்படிப்புக்கு விண்ணப்பித்தார். ஆனால் கல்லூரியின்
டீன் அவருடைய விண்ணப்பத்தை நிராகரித்தார். ராய் விடவில்லை. தொடர்ந்து விண்ணப்பம்
அனுப்பிக் கொண்டே இருந்தார். 30 முறை விண்ணப்பித்த பிறகு அனுமதி கிடைத்தது.
இரண்டு ஆண்டுகளில் M.R.C.P., F.R.C.S. முடித்துவிட்டு இந்தியா திரும்பினார். தான்
பயின்ற கல்கத்தா மருத்துவக் கல்லூரியிலேயே ஆசிரியரானார். நாட்டின் பல்வேறு
மருத்துவமனைகளில் பணியாற்றினார்.
சுதந்திரப் போராட்டத்தில்
ஈடுபாடு கொண்டவர். கல்கத்தா பல்கலையின் துணைவேந்தராக இருக்கும்போது, மாணவர்கள்
சுதந்திரப் போராட்டங்களில் பங்கேற்கவும் வேண்டும், அதே சமயத்தில் படிப்பிலும் கவனம் செலுத்த
வேண்டும் என்றும் வலியுறுத்திய விந்தை மனிதர்.
வெள்ளையனே வெளியேறு
இயக்கத்தின்போது 1933ஆம் ஆண்டு
காந்திக்கு உடல்நலம் குன்றியபோது, சிகிச்சை அளித்தார். வெளிநாட்டு மருந்துகளை
எடுத்துக்கொள்ள மறுத்தார் காந்தி. கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு இலவச சிகிச்சை
தர முடியுமா என்று கேட்டார் காந்தி. “முடியாதுதான். ஆனால் நான் இங்கே மோகன்தாஸ்
கரம்சந்த் காந்திக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை. அந்த கோடிக்கணக்கான மக்களின்
பிரதிநிதி என்று யாரைக் கருதுகிறோனே அவருக்கு சிகிச்சை அளிக்க வந்தேன்” என்றார் ராய்.
காந்தி சிகிச்சை எடுத்துக் கொண்டார்.
1948 முதல் 1962 வரை மேற்கு
வங்கத்தின் முதல்வராக இருந்தார். சுதந்திரம் மற்றும் தேசப் பிரிவினைக்குப் பிந்தைய
சோதனையான காலகட்டத்தில் முதல்வர் பொறுப்பை வகித்தவர். 1962 ஜூலை 1ஆம் தேதி
வழக்கம்போல நோயாளிகளைப் பார்ப்பது, தன் முதல்வர் பணிகளைப் பார்ப்பது என வழக்கம்போல
வேலைகளில் ஈடுபட்டிருந்தவர் 3 மணிக்கு இறந்தார்.
தன்னுடைய வீட்டை தன்
தாயாரின் பெயரால் மருத்துவமனைக்கு தானமாக வழங்கியவர் பி.சி. ராய்.
*
பி.சி. ராய் என்ற பெயர்
கொண்டவர்கள் எல்லாம் மக்கள் மீது அக்கறை கொண்டவர்களாகவே இருப்பார்கள் போல! இன்னொரு
பி.சி. ராய்
இந்தியாவில் இரசாயனத்
தொழில்துறையின் முன்னோடி. தன்னலம் கருதாத கல்வியாளர். 1921இல் தன் சம்பளப் பணம் முழுவதையும், அவர் பணியாற்றிய
கல்கத்தா பல்கலைக் கழகத்துக்குக் கொடுத்து, இரசாயனத் துறை
உருவாக்கச் செய்தார். தன் சேமிப்பு முழுவதையும் ஏழை மாணவர்களின் கல்விக்கும் செலவு
செய்தவர். இவரே ரசாயனத் தொழிற்சாலை நடத்தினார் என்றாலும், சிறுதொழில்களுக்காகக் குரல் கொடுத்தவர்.
"Big concerns
like Tata Iron Works or the Titagarh Paper Mills etc., can afford to raise a
hue and cry, make their voices heard and get heavy protective duties imposed,
but small industrial undertakings must suffer in silence and be wiped out of
existence. "
(டாடா இரும்புத்
தொழிற்சாலை அல்லது தீதாகர் காகித ஆலை போன்ற பெரும்பெரும் தொழில் நிறுவனங்கள்
பெருத்த கூப்பாடு போடவும், தன் குரல்களை கேட்கச் செய்யவும், அதன் மூலம்
வரிகளைக் குறைத்துக் கொள்ளவும் முடியும். ஆனால் சிறுதொழில் நிறுவனங்கள் மௌனமாக தன்
வேதனைகளை அனுபவித்து, அழிந்து போகும்.)
இதுவும் அவர் சொன்னதுதான்
:
Out excellent friends, the Hindu
revivalists, will talk by the hour on the transcendental truths and sublime
thoughts in the ‘Gita’ and deliver elaborate discourses on the catholicity of
Hinduism and its superiority over all other existing creeds; will condemn
untouchability in unmeasured terms and so on. When, however, it comes to
carrying the precepts into practice, they are the first to show the white
feathers.
(இந்து மறுமலர்ச்சி பற்றி
போதிக்கும் நம் அற்புதமான நண்பர்கள் கீதையில் இருக்கும் எல்லாம் கடந்த
சத்தியத்தையும் உன்னதமான சிந்தனைகளையும் பற்றி மணிக்கணக்கில் பேசுவார்கள். இந்து
மதத்தில் உள்ள பரந்த மனப்பாங்கையும், மற்ற மதங்கள்
எல்லாவற்றையும்விட எவ்வாறு அது உயர்ந்தது என்றும் மிக நீண்ட சொற்பொழிவுகளை ஆற்றுவார்கள்.
தீண்டாமையை கடும் சொற்களால் கண்டிப்பார்கள்..... ஆனால், போதித்ததை
செயலில் காட்டுகிற நேரம் வரும்போது, தாம் மேல்சாதியினர்
என்பதைக் காட்டுவதில் அவர்களே முதலாவதாக இருப்பார்கள்.)
பிரஃபுல்ல சந்திர ரே, 1930இல் கூறியது.
80 ஆண்டுகளுக்குப் பிறகும் பொருந்துகிறது.
No comments:
Post a Comment