Tuesday, 13 March 2018

சங்கப் பெண் கவிஞர் சக்தி ஜோதி


மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச் 8ஆம் தேதி சாகித்ய அகாதமி தில்லியில் ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தது. காலையில் ஒரு கருத்தரங்கம், மாலையில் பன்மொழிக் கவியரங்கம். பங்கேற்ற கவிஞர்கள் எல்லாரும் பெண்கள். தமிழ் மொழி சார்பில் சக்தி ஜோதி கலந்து கொண்டார்.

இதுபோன்ற பன்மொழிக்கவியரங்குகளில் - அதிலும் சாகித்ய அகாதமி போன்ற அமைப்புகள் வட்டமேசையில் நடத்தும் அரங்குகளில் - கவிதை வாசிப்பது என்பது சோதனையான அனுபவம். அதிலும் இந்தி மட்டுமே புரிந்து கொள்கிறவர்கள் அதிகம் இருக்கிற வடநாட்டில், அவர்களுக்குப் புரியாத வேற்று மொழியில் கவிதை வாசிப்பது கவனம் பெறாது. கவிதையை என்னதாம் சிறப்பாக மொழியாக்கம் செய்து வாசித்தாலும் மூலத்தின் உயிர்ப்பு அதில் இருக்காது. அளிக்கப்படும் நேரத்துக்குள் ஆளுமையை வெளிப்படுத்திவிட எல்லாராலும் இயலாது. அதற்கு நல்ல குரல் வளமும் ஏற்ற இறக்கத்துடன் வாசிக்கும் திறமையும் இருக்க வேண்டும், மைக்கும் ஒத்துழைக்க வேண்டும். இந்தக் கவியரங்கத்திலும் பல மொழிகளின் கவிஞர்களிடம் அந்தக் குறைபாடுகள் இருந்ததை உணர முடிந்தது. 15 கவிஞர்களுக்கு ரசிகர்களாக அந்தந்த மொழியிலிருந்து ஆளுக்கு இரண்டு பேர் வந்திருந்தாலும் 30 பேர் அங்கே இருந்திருக்க வேண்டும். ஆனால்... சரி, போகட்டும். என்னையும் ரவீந்திரமணியையும் போன்ற 60 வயதைக் கடந்த இளைஞர்கள் சுமார் ஏழெட்டு பேர் கவிதைகளை தலையாட்டி ரசித்துக்கொண்டிருந்தோம்.



ஒவ்வொரு கவிஞருக்கும் கிடைக்கக்கூடிய நேரம் மற்றொரு சிக்கல். அசாமி, பெங்காலி, குஜராத்தி... என ஆங்கில அகர வரிசையில் அழைக்கப்படும்போது தமிழ் தெலுங்கு உருது கடைசியில்தான் வரும். நிகழ்வின் துவக்கத்தில் வருகிற மொழிக் கவிஞர்கள் நிறைய நேரம் எடுத்துக்கொள்வார்கள். கடைசி ஆக ஆக நேரம் குறையும். மொழியாக்கம் வேண்டாம், கவிதை மட்டும் வாசித்து விடுங்கள் அல்லது மொழியாக்கம் மட்டும் வாசித்து விடுங்கள், கவிதை வேண்டாம் என்று சொல்லுகிற நிலை வரும். தெலுங்குக் கவிஞருக்கு அதுதான் நிகழந்தது. கடைசியாக வாசித்த உருதுக் கவிஞர் இதுபோன்ற நிகழ்வுகளை ஏற்கெனவே பலமுறை அனுபவித்தவர் போல...! ஆரம்பத்திலேயே சாகித்ய அகாதமி ஏற்பாட்டாளர்களை ஒரு வாங்கு வாங்கிவிட்டு கணீரென்ற குரலில் சொல்லிவிட்டார் - நான் என் நேரத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை என்று. சும்மா சொல்லக்கூடாது, கவிதையும் நன்று, மொழியாக்கமும் நன்று. உருது கவிதை மொழியாக இருப்பது அல்லது கவிதைக்கு உருது சிறப்பாகப் பொருந்துவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

சக்தி ஜோதி கவிதை வாசிப்பதற்கு முன்னால் தமிழில் பெண் கவிஞர்கள் குறித்து சிறிய அறிமுகமும் அளித்தார்.

For more than two thousand years, my language has not just produced poems. Its very existence itself is poetic. I take pride in the fact that our language has the highest number of poets among all Indian languages.
My language is my identity. The poems in my language are my identity, pride and treasure. I can never lose my identity, pride and treasure.
Forty five women poets have also contributed in making this two thousand year old treasure trove and I take immense pride in that as a woman. I take great pride in belonging to a society which has been celebrating a woman who wrote a four liner poem.
More than two thousand years ago itself women have poured their hearts out in poems. In Tamil language, not only men, but women themselves have also written about women, woman's body, language, freedom, love, affection, lust, yearning, sorrow, society, economy, political sociology, social evils etc. ... My great grandmothers have written. I am writing today only what they have written before in my own vocabulary. So, I am the descendant of those 45 ancient women poets, to become the 46th poet in the line. 

அதென்னடா அது தமிழ்நாட்டுல இருந்து வர்றவங்க எல்லாரும் தமிழ் பெருமை பேசறதை விடறதே இல்லேன்னு அங்கே இருக்கிறவங்க நினைச்சிருப்பாங்க. நினைக்கட்டும். 
*
மீன்களை வரைபவள்

அவள் விநோதமான சித்திரக்காரி
தூரிகை கொண்டு
நீரின் வண்ணம் தீட்டினால்
ஓவியத்து நதியில்
வெள்ளம் பெருக்கெடுக்கும்.

இப்போது நீரோடும் இடங்களிலெல்லாம்
மீன்களை வரைந்து கொண்டிருக்கிறாள்.

ஆற்றின் நடுவே
படகில் நின்றபடி வலைவீசும் ஒருவனையும்
கரையோரம் தனியே அமர்ந்து
தூண்டிலிடும் இன்னொருவனையும்கூட
எளிதாகத் தீட்டி விடுகிறாள்

அதன்பின்
அவற்றில் சிக்காமல்
துள்ளித் தப்பும் மீன்களை வரையத்தான்
அவளுக்கு அதிக நேரம் பிடிக்கிறது.

She Who Paints Fishes
Weird painter she is
when her brush daubs the colour of water
the painted river will get flooded.

Now she is painting
fishes
all over the water.

She paints with ease
the guy who casts his net
from a boat mid-river,
and the lone guy with a fishing rod
on the bank.

But it takes quite some time for her
to paint fishes
which (can) leap and escape
from these men.
- அசதா மொழியாக்கம்
*
சங்கப் பெண் கவிஞர்கள் 45 பேரின் தொடர்ச்சியாக 46ஆவது கவிஞர் தான் என்றார் சக்தி ஜோதி. சங்கப் பெண் கவிஞர்களை இவரைப்போல அறிமுகம் செய்தவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன். அறிமுகம் என்ன, பேசுபவர்களும் யாரும் இல்லை தமிழ் இலக்கிய உலகில். அவ்வப்போது இவருடைய எழுத்துகளை வாசிக்கும் சமயத்தில் ஏற்படும் பிரமிப்புக்கு பிரமிப்பு என்ற சொல் பொருந்தாது. சங்கக் கவிதை வரிகளை தற்காலச் சூழல்களோடும் நிகழ்வுகளோடும் இணைத்து எழுதுவது இவரது சிறப்பு.

நான் கவியரங்க நிகழ்வுக்குச் சென்றது கவிதை கேட்பதற்காக மட்டும் அல்ல. அவருடைய புதிய நூலைப் பெறுவதற்காகத்தான். நீங்கள் நிகழ்ச்சிக்கு வருகிறீர்கள் என்றால் புத்தகத்தை எடுத்து வருகிறேன், அல்லது நாளை சந்திப்போம் என்று சொல்லியிருந்தார். கவியரங்க நிகழ்ச்சியில் சந்திப்பது அவருக்கும் உற்சாகமாக இருக்கும் என்பதும் காரணம்.

சரியாக ஐந்தாண்டுகளுக்கு முன்னால் 2013 பிப்ரவரியில் உலகப் புத்தகத் திருவிழாவில் சாகித்ய அகாதமி நிகழ்வில் பங்கேற்க வந்தபோதுதான் அறிமுகம் ஆனோம். அவருடைய கவிதை குறித்தும், அந்த நிகழ்ச்சி குறித்தும் பதிவு பேஸ்புக்கில் பதிவு எழுதிய பிறகுதான் என் நட்பு வட்டம் விரிவடைந்தது. எல்லாருடனும் நட்பை நயமுடன் பராமரிப்பது எப்படி என்று இவரைப் பார்த்துக் கற்றுக் கொள்ளலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தையும் குறித்து எழுதிய ஐந்து நூல்களையும் எனக்கு அளித்தார். காற்றில் மிதக்கும் நீலம் என்ற தொகுப்பு குறித்து 2013இல் எழுதியதை இங்கே வாசிக்கலாம். அன்றிலிருந்து எப்போதும் தொடர்பில் இருக்கிறோம், பெரும்பாலும் இலக்கியம் குறித்த உரையாடல்களில். அவர் எழுதும் கட்டுரைகளை அனுப்பி கருத்துக் கேட்பார், தகவல்களை சரிபார்க்கக் கேட்பார்.

அவர் எழுதி, குங்குமம் தோழி இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளைத் தொகுத்து சங்கப் பெண் கவிதைகள் என்ற பெயரில் சந்தியா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் வெளிவந்த அந்த நூலையும், வெள்ளி வீதி என்ற கவிதை நூலையும் எனக்கு அளித்தார். பெற்றுக் கொண்டேன்.



வெள்ளி வீதியார் முதல் ஔவையார் வரை 45 சங்கப் பெண் கவிஞர்களைப் பற்றியும், அவர்களுடைய சில கவிதை வரிகளோடு சமகாலப் பிரச்சினைகளையும் அலசும் கட்டுரைகள் அடங்கியது இந்த நூல். அங்கேயே இரண்டு கட்டுரைகளை வாசித்தாயிற்று. தொடருக்காக எழுதிக் கொண்டிருந்தபோதும், பதிவுகளில் பகிர்ந்த போதும் சில கட்டுரைகளை வாசித்ததும் உண்டு. சங்ககாலக் கவிதைகளையும் சமகாலக் கவிதைகளையும் ஏதேனுமொரு புள்ளியில் இணைப்பதற்கு அவருடைய ஆழ்ந்த வாசிப்பு துணையாக இருந்திருக்கிறது.

சக்தி ஜோதியின் கவிதைகளில் பெண்ணியப் பார்வை இருக்கும், காதலும் காமமும் இருக்கும், எல்லாமே ஆர்ப்பாட்டங்கள் இன்றி நுணுக்கமாக அமைதியாக இருக்கும். இந்தக் கட்டுரைகளிலும் அவற்றைக் காண முடிகிறது. துணையாக நிற்கின்றன பல கவிஞர்களின் கவிதைகள். சசிகலா பாபு, லதா, கலாப்ரியா, மாலதி மைத்ரி, ரோஸ்லின், ரத்திகா, தமிழ்நதி, ராஜ சுந்தரராஜன், பாலபாரதி, சத்யா....... என எண்ணற்ற கவிஞர்களின் வரிகளை அங்கங்கே கோத்திருக்கிறார். ஆழமான வாசிப்பும், கடுமையான உழைப்பும் ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படுகின்றன.

பொதுவாக நான் நூல்களின் அணிந்துரைகளை முதலில் வாசிப்பதில்லை, அணிந்துரை எழுதியவரின் முன்முடிபுகள் வாசிப்பு அனுபவத்தை பாதித்துவிடும் என்பதே என் கருத்து. ஆனால் இந்த நூலில் முனைவர் எல். ராமமூர்த்தியின் அணிந்துரை, ஒரு நூலின் அணிந்துரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான உதாரணம். கற்றோரைக் கற்றோரே காமுறுவர்.

இதுவரை கவிதைத் தொகுப்புகள் மட்டுமே வெளியிட்டு வந்த சக்திஜோதியின் முதல் கட்டுரைத் தொகுப்பு, அவர் இன்னும் பல கட்டுரைத் தொகுப்புகளை அளிப்பார் என்ற நம்பிக்கையூட்டுகிறது.
வாழ்த்துகள் சக்தி ஜோதி
*
சங்கப் பெண் கவிதைகள், சக்தி ஜோதி, சந்தியா பதிப்பகம், 423 பக்கங்கள், 978-93-87499-22-5, ரூ. 400.

No comments:

Post a Comment