Saturday, 21 July 2018

ரஃபேல் ஊழல் விவகாரம்


நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை முன்வைத்தன எதிர்க் கட்சிகள். நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றி பெறும், அரசை வீழ்த்தி விடலாம் என்று நினைத்துக் கொண்டு வரப்பட்டது அல்ல அது. நாடாளுமன்றத்தில் தமக்கு வலிமை இல்லை என்பது எதிர்க்கட்சிகளுக்குத் தெரியாதா? அரசின் குறைகளை சுட்டிக்காட்ட நாடாளுமன்றம் என்கிற மேடையைப் பயன்படுத்திக் கொள்ளவே இந்தத் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. ராகுல் காந்தி மோடியை கிழித்துத் தொங்க விட்டு விட்டார். அதை இந்த வீடியோவில் பார்க்கலாம்.

ராகுல் காந்தி பேசியதில் முக்கியமான விஷயம் ரபேல் விமான விவகாரம்தான். ராகுல் பேசியது என்ன?

“யுபிஏ காலத்தில் ஒரு விமானத்துக்கு விலை 520 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டிருந்தது. இப்போது என்ன நடந்தது, யாருடன் என்ன பேசப்பட்டதோ தெரியவில்லை. பிரதமர் பிரான்ஸ் போனார். யாருடன் சென்றார் என்பதை நாடே அறியும். மந்திரம் போட்டதுபோல விமானத்தின் விலை 1600 கோடி ரூபாய் என முடிவு செய்யப்பட்டது.
“பாதுகாப்பு அமைச்சர் இங்கே இருக்கிறார். அவர் முதலில் சொன்னார் விமானத்தின் விலையை நான் நாட்டுக்குத் தெரிவிப்பேன். வெளிப்படையாகவே சொன்னார். ஆனால் அதற்குப் பிறகு, அதே பாதுகாப்பு அமைச்சர் சொன்னார் நான் இந்த விவரத்தை சொல்ல முடியாது. ஏனென்றால், பிரான்ஸ் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே ஒரு ரகசிய ஒப்பந்தம் இருக்கிறது.
“நான் பிரான்ஸ் அதிபரை நேரடியாகவே சந்தித்தேன். அவரிடம் நானே இந்தக் கேள்வியைக் கேட்டேன் இப்படி ஏதாவது ஒப்பந்தம் பிரான்ஸ் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே இருக்கிறதா? பிரான்ஸ் அதிபர் சொன்னார் –“பிரான்ஸ் அரசுக்கும் இந்திய அரசுக்கும் இடையே அப்படி எந்த ஒப்பந்தமும் இல்லை. இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. நீங்கள் இந்திய நாடு முழுமைக்கும்கூடச் சொல்லலாம்.பிரதமரின் நிர்ப்பந்தம் காரணமாக நிர்மலா சீதாராமன் நாட்டு மக்களுக்கு பொய்யான தகவலை சொல்லியிருக்கிறார். (இதைச் சொன்னபோதுதான் பெரும் கூச்சல் எழுப்பினார் நிர்மலா சீதாராமன்) யாருக்காக இந்த சலுகைகளை செய்கிறார்கள்? ஏன் செய்கிறார்கள்? நிர்மலா அவர்களே, பிரதமர் அவர்களே, நீங்கள் நாட்டுக்குப் பதில் சொல்லுங்கள்
“பிரதமருக்கும் இரண்டு பெரிய வர்த்தக ஆட்களுக்கும் இடையே இருக்கும் உறவை எல்லாரும் அறிவார்கள். இந்தியப் பிரதமரின் பெயரை மார்க்கெட்டிங் செய்வதற்கு எவ்வளவு பணம் போகிறது என்பதையும் எல்லாரும் அறிவார்கள். அது எங்கிருந்து வருகிறது என்பதும் புரிந்தே இருக்கிறது. அவர்களில் ஒருவருக்கு ரபேல் கான்டிராக்ட் தரப்பட்டது. அவருக்கு பல்லாயிரம் கோடி லாபம் கிடைக்கிறது. அந்த ஒப்பந்தம் எச்.ஏ.எல். இடமிருந்து பறிக்கப்பட்டது. அந்த நபருக்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் லாபம் கிடைக்கிறது. இதுதான் உண்மை. பாதுகாப்புக்கான கேபினட் கமிட்டி இந்த முடிவை எடுத்ததா என்பதை பிரதமர் இங்கே விளக்க வேண்டும்.
எச்ஏஎல்லிடமிருந்து இந்த ஒப்பந்தம் ஏன் பறிக்கப்பட்டது, ஏற்கெனவே 35 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வைத்திருக்கிற ஒருவருக்கு அதுவும் இதுவரை விமானத் துறையுடன் எந்தத் தொடர்பும் இல்லாதவருக்கு ஏன் இந்த ஒப்பந்தம் தரப்பட்டது என்பதையும் பிரதமர் விளக்க வேண்டும்.”

இதுதான் ராகுல் பேசியது.
இந்த விவகாரம் வெடித்தபோதே, இந்திய அரசிடமிருந்து பிரான்சுக்கு அழுத்தம் தரப்படும், மறுப்பு வெளியிடுமாறு தகவல் போகும் என்று எதிர்பார்த்தேன். அதேபோல, பிரான்ஸ் மறுப்பு வெளியிட்டுள்ளது. அந்த மறுப்பு என்ன?
security agreement signed between both countries in 2008 binds both the nation to protect the classified information provided by the partner which could impact both security and operational capabilities of the defence equipment of India or France
//இந்தியா அல்லது பிரான்சின் பாதுகாப்பு சாதனத்தின் (இந்த இடத்தில் விமானத்துக்கு) பாதுகாப்பு மற்றம் செயல்பாட்டில் தாக்கத்தை விளைவிக்கக்கூடிய தகவலை ரகசியமாக வைக்க வேண்டும் என்று 2008ஆம் ஆண்டின் ஒப்பந்தம் இரண்டு நாடுகளையும் கட்டுப்படுத்துகிறது.//
நிர்மலா சீதாராமன் ராகுலுக்கு பதில் அளிக்கும்போது, யுபிஏ அரசின் அமைச்சர் ஆன்டனி கையொப்பம் இட்ட ஒப்பந்தம் என்று இதைத்தான் தெரிவித்தார்.

இப்போது கேள்விகள் என்னவென்றால்,
1. பாதுகாப்பு தொடர்பான விஷயங்களைத்தான் அதாவது, தொழில்நுட்பத் தகவல்களைத்தான் ரகசியமாக வைக்க வேண்டுமே தவிர, விலையை எதற்கு ரகசியமாக வைக்க வேண்டும்?
2. விலையை ரகசியமாக வைக்க வேண்டும் என்றால், 2008இல் காங்கிரஸ் அரசு போட்ட ஒப்பந்தம் என்றால், அப்போதைய விலையை காங்கிரஸ் அரசால் வெளிப்படையாகத் தெரிவிக்க முடிந்ததே, இப்போது ஏன் தெரிவிக்க முடியாது? எதற்காக இந்த மூடிமறைப்பு?
3. யுபிஏ கால ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டுத்தான் புதிய ஒப்பந்தமே போட்டார்கள். பின்னே அந்த ஒப்பந்தத்தைப் பற்றி இப்போது எதற்குப் பேச வேண்டும்? இவர்கள் யோக்கிய சிகாமணிகள் என்றால் இன்னும் வெளிப்படையாக இருக்க வேண்டியதுதானே?
4. எச்ஏஎல் என்ற அரசுத்துறை நிறுவனத்துக்குக் கிடைத்திருக்க வேண்டிய ஒப்பந்தத்தை ஒரு தனியார் நிறுவனத்துக்கு அதுவும் போர் விமானத் துறையில் இதுவரை எந்தத் தொடர்பும் இல்லாத நிறுவனத்துக்கு தந்ததன் பின்னணி என்ன?
இவைதான் கேள்விகள்.
இவை பழைய கேள்விகள் ஆயிற்றே, ராகுல் புதிதாக ஏதும் கேட்கவில்லையே?
ஆமாம். பழைய கேள்விகள்தான். ஆனால் இதுவரை பிரதமர் தெளிவாக பதிலளிக்காத கேள்விகள்.
இப்போதும் அவர் பதிலளிக்கப் போவதில்லை. இப்போதும் வழக்கம்போல ஏதாவது நாடகமாடுவார். அழுது புலம்புவார். டீக்கடைக்காரன் பிரதமர் ஆனது பொறுக்கவில்லை என்பார். ஆனால் 500 கோடி ரூபாய் விமானம் 1600 கோடியாக ஆனது எப்படி என்பதை சொல்ல மாட்டார்.
*
ரபேல் டீல் ஆனபோது 2015 ஏப்ரலில் பேஸ்புக்கில் நான் எழுதிய பதிவு கீழே. அப்போதும் இதே கேள்விகளைக் கேட்டிருக்கிறேன்.

பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடி, 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் முடிவு செய்திருக்கிறார். இந்த விமானங்களைத் தயாரிப்பது தஸால்ட் நிறுவனம். அதுவும் ரெடி-டு-ஃபிளை பறப்பதற்குத் தயாரான நிலையில் இந்தியா வாங்குகிறது. இது மிகப்பெரிய சாதனை என ஊடகங்களில் கூறப்படுகிறது.

இந்திய விமானப்படையில் பழைய விமானங்கள் காலாவதி ஆகும்போது புதியவை வாங்குவது அவசியம், தேவை என்பதில் எந்தக் கேள்வியும் இல்லை. ஆனால் வேறு பல கேள்விகள் எழுகின்றன.

முந்தைய காங்கிரஸ் அரசு இதே ரஃபேல் விமானம் வாங்க ஒப்பந்தம் போட்டிருந்தது. அது 126 விமானங்களுக்கான ஒப்பந்தம். அந்த ஒப்பந்தப்படி 18 விமானங்கள் பறப்பதற்கு தயார் நிலையில் தரப்படும். மீதி 108 விமானங்கள் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தில் தயாரிக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தில் சிறிய சிக்கல் ஏற்பட்டது. இந்தியாவில் தயாராகும் விமானத்துக்கும் தஸாஸ்ட் நிறுவனம் உத்தரவாதம் தர வேண்டும் என்று இந்தியா கேட்க, அது எப்படி சாத்தியம் என்று தஸால்ட் கேட்க, விவகாரம் மூன்று ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருந்தது.

இந்த நிலையில்தான் இப்போது 36 விமானங்கள் வாங்க முடிவாகியுள்ளது. பழைய 126 விமானங்களுக்கான ஒப்பந்தம் குப்பையில் போடப்படுவதாக இப்போதைய அரசு கூறுகிறது. இனி நிறுவனங்களுடன் அல்ல, அரசுகளுக்கு இடையில்தான் பேரம் நடத்தப்படும் என்கிறார் பாதுகாப்பு அமைச்சர்.

எல்லா பேரங்களும் அரசுகளுக்கு இடையில்தான் என்றால், அணுஉலைகள் உள்பட இனி எல்லா பேரங்களும் அரசுகளுடன்தான் நடத்தப்படுமா?

பறக்கும் நிலையில் 36 விமானங்களும் வாங்கப்படும்போது அவற்றின் பராமரிப்பை யார் செய்வார்கள்? அரசுக்கும் அரசுக்கும் இடையிலான ஒப்பந்தம் என்றால் பிரான்ஸ் அரசா பராமரிப்புச் செய்யப்போகிறது? தஸால்ட் தயாரித்த விமானங்களுக்கு அரசு எப்படி பராமரிப்புச் செய்யும்?

முந்தைய 126 விமானங்கள் விஷயத்தில் 18 மட்டுமே பறக்கும் நிலையிலும் 108 இந்தியாவில் தயாரிப்பதாகவும் இருந்தது. இவற்றின் உத்தரவாதம் குறித்த சிக்கல் தீர்க்கப்பட்டிருந்தால் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனத்துக்கு அனுபவம், உற்பத்தி, எதிர்கால வளர்ச்சி என பலவற்றில் பெருமளவுக்கு நன்மை கிடைத்திருக்குமே?

இப்போது 36 விமானங்களும் பறக்கும் நிலையில்தான் வாங்கப்படுகின்றன. அப்படியானால் மேக் இன் இந்தியா என்னவாயிற்று?

அப்படியே பழைய ஒப்பந்தத்தைக் கைவிடுவதாக இருந்தாலும், தஸால்ட் நிறுவனத்துக்கு அடுத்ததாக இருந்த ஸ்வீடனின் கிரிபென் நிறுவனத்தின் விமானங்களை வாங்கியிருக்கலாமே. அந்த நிறுவனம் இந்தியாவிலேயே விமானங்களைத் தயாரித்துத் தருவதாக அப்போது சொன்னதே?

பொதுவாக ஒப்பந்தங்கள் காலாவதி ஆனால் புதிய டெண்டர்கள் கோரப்படும். விலைகளும் நிபந்தனைகளும் பேரம்பேசப்படும். அப்படி ஏதும் இல்லாமல் மொத்தமாக ஒப்பந்தம் போடுவது தவறான முன்னுதாரணம் ஆகாதா? இதில் தாமதம் ஏற்படக்கூடும் என்பது மட்டும்தான் காரணமா? அப்படியானால் ரஃபேல் விமானத்தையே வாங்க வேண்டிய அவசியம் என்ன?

2012இல் தஸால்டும் ரிலையன்சும் கூட்டுக்கான ஒப்பந்தம் ஒன்று போட்டிருந்தன. இப்போது வாங்கப்படும் 36 விமானங்களின் பராமரிப்பு ரஃபேல்-ரிலையன்ஸ் கூட்டு நிறுவனத்துக்குக் கிடைக்கும் என்பதுதான் காரணமா?

No comments:

Post a Comment