கோடை வந்துவிட்டது. ஒவ்வோர் ஆண்டும்
சொல்லப்படுவதுபோல, “போன வருசத்தைவிட இந்த வருசம் வெயில் ரொம்ப சாஸ்தி” என்று ஒவ்வொரு
வாயும் ஒருமுறையாவது சொல்லும். (அதெல்லாம் கிடையாது, வயதாகி விட்டதால்
அப்படித் தோன்றுகிறது என்று சொன்ன மாமேதை நினைவும் இந்த நேரத்தில் வந்து தொலைக்கிறது.)
கோடையில் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்,
குளிர்ச்சியான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதெல்லாம்
யாருக்கும் தெரியாத விஷயங்கள் அல்ல. ஆனால் பெரும்பாலும் யாரும் சரியாகச் செய்யாத
விஷயங்கள். டீஹைடிரேஷன் எனப்படும் நீர்ச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்படாதவர்கள் மிகவும் குறைவு. எனவேதான், எப்படியெல்லாம்
நாம் தவறிழைக்காமல் தப்பிக்கலாம் என்ற உதவிக்குறிப்புகளுடன் இந்தப்பதிவு.
நீர்ச்சத்துக் குறைபாடு என்றால் என்ன?
மனித உடலில் சராசரியாக 50-65 விழுக்காடு நீராக
இருக்கிறது என்கிறது அறிவியல். உடலுக்குத் தேவையான நீரின் அளவு குறைவதுதான்
நீர்ச்சத்துக் குறைபாடு – அல்லது, டீஹைடிரேஷன். உடலில் எவ்வளவு நீர் குறைந்தது
என்பதைப்பொறுத்து டீஹைடிரேஷன் மிதமாக, அல்லது கடுமையாக இருக்கும்.
உடலிலிருக்கும் நீர் பல விதங்களில் —
வியர்வை, சிறுநீர், மலம் போன்ற வழிகளில் வெளியேறுகிறது. எச்சில், கண்ணீர் போன்ற
வழிகளிலும்கூட நீர் வெளியேறுகிறது. நாம் உண்ணும் உணவுகள், அருந்தும்
பானங்கள் போன்றவற்றால் இழப்பை ஈடு செய்கிறோம். எவ்வளவு நீர் வெளியேறுகிறதோ
அதைவிடக் குறைவாக எடுத்துக் கொள்கிறோம் என்றால், டீஹைடிரேஷன்
ஏற்படுகிறது. (கடுமையான வயிற்றுப்போக்கினாலும் டீஹைடிரேஷன் ஏற்படும். என்றாலும்
இந்தக் கட்டுரையில் கோடையின் தாக்கம் பற்றியே பார்க்கிறோம்.)
நீரிழப்பு எப்படியெல்லாம் ஏற்படக்கூடும்?
காய்ச்சல்
வயிற்றுப்போக்கு
வாந்தி
அதிகமாக வியர்த்தல்
அதிகமாக சிறுநீர் கழிதல்
சர்க்கரை நோயாளிகளின் நீரிழிவு
நீரிழப்பு ஏற்படுவதை நாம் பொதுவாக
கவனிக்காமல் விட்டு விடுவோம். வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும்போது தண்ணீர்
குடிக்க மறந்து விடுவோம். தாகம் இருப்பதே உணராமல் இருப்போம். தொண்டைக்கரகரப்பு
அல்லது வாய்ப்புண் அல்லது வயிற்றுக் கோளாறு இருக்கும்போது குடிக்கவே தோன்றாது.
வெளியில் அலைபவர்களுக்கு மட்டுமல்ல, வீட்டுக்கு உள்ளேயே வேலை செய்து கொண்டிருப்பவர்களுக்கும்
நீர்ச்சத்துக் குறைபாடு ஏற்படக்கூடும்.
டீஹைடிரேஷன் அறிகுறிகள் என்ன?
அது மிதமாக அல்லது கடுமையாக இருப்பதைப்
பொறுத்து அறிகுறிகள் வேறுபடும்.
• தலைவலி
• தாகம்
• வாய் / உதடுகள் உலர்ந்து போவது
• சிறுநீர் குறைந்து விடுவது
• சிறுநீர் மஞ்சளாக இருப்பது
• தசைகளில் வலி
• தோல் உலர்ந்து போவது
• கிறுகிறுப்பு / தலைசுற்றல்
• இதயத்துடிப்பு தாறுமாறாக இருத்தல்
• மூச்சிரைப்பு / மூச்சிளைப்பு
• கண்களில் எரிச்சல், கண்கள் சிவத்தல்
• உறக்கமின்மை, எரிச்சல்
• மயக்கம்
பெரியவர்கள் இதுபோன்ற அறிகுறிகளைப்
புரிந்து கொள்ள முடியும். குழந்தைகளால் சொல்ல இயலாது. எனவே, நாம்தான் கவனமாகப்
பார்த்துப் புரிந்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கான அறிகுறிகள் —
• வாயும் நாக்கும் உலர்ந்திருத்தல்
• அழும்போது கண்ணீர் வராது
• கண்கள் சிவத்தல்
• கண்கள் குழிந்து போதல்
• உறக்கமின்மை, ஆற்றலிழப்பு
• எரிச்சலடைதல்
குழந்தைகள் வீட்டில் அடங்காமல் வெளியே
விளையாடிக்கொண்டு சுற்றிக் கொண்டிருக்கும். அவர்கள் போதுமான அளவுக்கு தண்ணீர்
குடிக்கிறார்களா என்பதை நாம்தான் கவனிக்க வேண்டும்.
நம் கிராமப்பகுதிகளில் யார் வீட்டுக்குப்
போனாலும் முதலில் தண்ணீர் தருவார்கள். நகர்ப்புறங்களில் அந்தப்பழக்கம் அருகி
வருகிறது. தில்லியில் வடக்கத்தியர்களின் எந்த வீட்டுக்குப் போனாலும் முதலில்
தண்ணீர் தரும் பழக்கம் தொடர்கிறது.
டீஹைடிரேஷனுக்கு தனி சிகிச்சை ஏதும்
தேவையில்லை. ரீஹைடிரேஷன் செய்தால் போதும் – அதாவது, மறுபடி நீரேற்றினால் போதும்.
டீஹைடிரேஷன் ஆகாமல் காத்துக்கொள்ள என்ன
செய்யலாம்?
• நாளுக்கு குறைந்தது 2 லிட்டர் தண்ணீர்
அருந்தியாக வேண்டும். அவரவர் உடலையும் வசிக்கும் பகுதியையும் பொறுத்து 3 /
4 லிட்டரும் தேவைப்படலாம்.
1 லிட்டர் என்பது சுமார் 34 அவுன்ஸ் |
• வெளியில் போகும்போது எப்போதும் கையில்
தண்ணீர் பாட்டில் வைத்திருங்கள். கைவசம் நீர் இல்லை என்பதாலேயே தாகம் இருந்தாலும்
குடிக்காமல் தவிர்ப்பவர்கள் பலர். (தில்லியில் இந்தக்கால இளைஞர்களைத்தவிர
பெரும்பாலோர் வெளியே போகும்போது தண்ணீர் எடுத்துக்கொண்டுதான் புறப்படுவார்கள்.)
• தாகம் எடுப்பதற்கு முன்பே தண்ணீர் அருந்த
வேண்டும்.
• தண்ணீர் மட்டுமல்ல, காபி / தேநீர்,
புட்டி பானங்கள், உண்ணும் பொருட்கள் ஆகியவற்றின் மூலமும் நீர் கிடைக்கிறது.
ஆனாலும் தண்ணீர்தான் சிறந்தது என்கிறார்கள்.
• வெள்ளரி, தர்பூசணி, நுங்கு, இளநீர், கிர்ணிப்பழம் /
முலாம்பழம், வெள்ளரிப்பழம் கோடையில் கிடைப்பது இயற்கை நமக்குத் தரும்
வரம். பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
• மார்க்கெட்டிங், டெலிவரி போன்ற
ஊர்சுற்றும் வேலைகளில் இருப்பவர்கள் எப்போதும் கைவசம் தண்ணீர் எடுத்துச்
செல்லுங்கள். போகிற இடங்களில் எங்கே தண்ணீர் கிடைத்தாலும் குடித்து, நிரப்பிக்கொள்ளுங்கள்.
• வீட்டுக்கு வரும் டெலிவரி ஆட்கள்,
கூரியர் ஆட்கள், அஞ்சல் துறையினர், மின்சாரப் பணியாளர்கள் போன்றவர்களுக்கு
குடிக்கத் தண்ணீர் தருவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.
• சாலையோர வீடுகளில் வசிப்பவர்கள், இயலுமானால்,
வீட்டுக்கு வெளியே பானையில் தண்ணீர் நிரப்பி வையுங்கள்.
சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு
டீஹைடிரேஷன் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால், அதிகப்படியான
சர்க்கரையை வெளியேற்ற சிறுநீரகங்கள் அதிகப்படியாக சிறுநீரை வெளியேற்ற வேண்டும்.
அதிக தண்ணீர் அருந்தவில்லை என்றாலும் குளுக்கோஸை வெளியேற்ற, உடலில் உள்ள நீரை
சிறுநீரகம் எடுத்துக்கொள்ளும். எனவே, அதிக குளுக்கோஸ் இருந்தால் அதிக திரவம்
தேவைப்படும். அதனால்தான் சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுக்கும்.
எவ்வளவு அருந்தலாம் என்று சந்தேகம் உள்ள சர்க்கரை நோயாளிகள், தமது
மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.
கடுமையான நீர்ச்சத்துக் குறைபாடு
எற்படும்போது உயிருக்கே ஆபத்து ஏற்படலாம். இதைத்தான் ஹீட் ஸ்டிரோக் (heat
stroke) என்கிறார்கள். இதைப்பற்றி அடுத்த பதிவில் பார்ப்போம்.
நன்றி - www.webmd.com
No comments:
Post a Comment