Saturday, 17 April 2010

படித்ததில் பிடித்தது - 2


படித்ததில் பிடித்தது - 2
ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், ஜான் பெர்கின்ஸ், தமிழில் – இரா. முருகேசன், விடியல் பதிப்பகம், கோவை வெளியீடு.

உலகமயமாக்கல் என்பது சந்தையின் விதிகளால் கட்டுப்படுத்தப்படுவது, சக்திமிக்கவர்களின் நலன்களுக்காகவே ஆனது, எனவே இதன் விளைவுகள் பாதகமாகவே இருக்க முடியும். உதாரணமாக, பொருளாதாரச் சுரண்டல், வேலையின்மை, அரசு வழங்குகிற பொதுமக்கள் சேவைகள் குறைதலும் சீர்கெடலும், சுற்றுச்சூழல் மற்றும் இயற்கைவளங்களுக்குப் பேரழிவு, ஏழைகள்-செல்வந்தர்களிடையே அதிகரிக்கும் வேறாபாடு, ஏழைநாடுகளை தாழ்மையுணர்வு கொள்ளச்செய்யும் முறையற்ற போட்டி... அமெரிக்கப் பொருளாதார முறையில் நவீன-தாராளவாதம் நியோ-லிபரலிசம் என்று அறியப்படும் இக்கொள்கை எந்தெந்த நாடுகளை எல்லாம் எட்டியதோ அங்கெல்லாம் இவையும் இன்னும் பல சீர்கேடுகளும்தான் எதார்த்த நிலைமை. இந்தப் பொருளாதார முறை லாபத்தையும் சந்தையின் விதிகளையும் மட்டுமே அளவுகோல்களாகக் கணக்கில் கொள்கிறது, தனிமனிதர்களுக்கே உரிய கண்ணியத்தையும் மதிப்பையும் புறம்தள்ளுகிறது.
- போப் ஜான் பால்-2

பொருளாதார அடியாள்... இந்தச் சொற்றொடரை நான் கேள்விப்பட்டதேயில்லை. எதைப்படித்தாலும் உடனே மொழியாக்கம் செய்து பார்த்துப் பழகிப்போன எனக்கு இதை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்தாலும் புரியவில்லை. நிகரான ஆங்கிலச்சொல் கிடைக்கவில்லை. நூல்விவரப் பக்கத்தில் இதற்குப் பதில் தெரிந்தது – Confessions of an Economic Hitman.

எகனாமிக் ஹிட்மேன் என்ற சொற்றொடரும் முற்றிலும் புதியது. அதுவே புத்தகத்தை மேலும் படிக்கத் தூண்டியது. படிக்கப் படிக்க கண்முன் விரிந்தது புது உலகம். இத்தனைகாலம் நான் புரிந்து வைத்திருப்பதாக எண்ணியிருந்த உலக அரசியல் வெறும் கைம்மண் என்று புரிந்தது.

உலகமயம், தாராளவாதம், சந்தைப்பொருளாதாரம், திறந்த சந்தை... இவையெல்லாம் நம் வாழ்வில் கலந்து விட்ட சொற்களாகி விட்டன. உலகமயம் என்ற பாதையிலிருந்து திரும்பிச்செல்ல இயலாத அளவுக்கு நாம் வெகுதூரம் பயணித்தாகி விட்டோம். அல்லது விரும்பியோ விருப்பமில்லாமலோ இழுத்துச்செல்லப்பட்டு விட்டோம். இந்த உலகமயமும் சந்தைப்பொருளாதாரமும் சராசரி இந்தியனுக்கு – அல்லது எந்தவொரு நாட்டின் சராசரிக் குடிமகனுக்கு – என்ன நன்மையைத் தரப்போகின்றன என்ற விவாதங்கள் அதிகம் இடம்பெறாமலே நம் அரசியல்வாதிகள் நம்மை இந்தப்பாதையில் இழுத்துச்சென்று விட்டார்கள். லத்தீன் அமெரிக்காவின் எத்தனையோ நாடுகள் இந்தப்பாதையில் சென்று பேரழிவைச் சந்தித்தன என்ற வரலாறு கண்முன்னே தெரிந்த பிறகும் நம் கண்களைக்கட்டி – அல்லது கண்களைத் திறந்து வைத்துக்கொண்டே நாம் பயணித்துவிட்டோம்.

லத்தீன் அமெரிக்க நாடுகளில் உலகமயமாக்கலுக்கு முன்பு ஏழைகளின் எண்ணிக்கை 13.5 கோடி. 1999இல் இது 20.4 கோடி. தாராளச் சந்தையும், கட்டமைப்புச் சீர்திருத்தங்களும், அரசின் பங்கைக்குறைக்கும் தனியார்மயமாக்கலும் இங்கே சிறுபான்மை மக்களுக்கே பயன்தந்தன. 1980-89 காலகட்டத்தில் நாளுக்கு 2 டாலருக்கும் குறைவான வருவாயில் இருந்த லத்தீன் அமெரிக்கர்களின் எண்ணிக்கை 4 கோடி.

காரணம் நமக்குத் தெரியாதது அல்ல. போட்டியை மையமாகக் கொண்ட சந்தைப் பொருளாதாரத்தால் உள்நாட்டுத்தொழில்கள் நசிய, பன்னாட்டு நிறுவனங்கள் அசுரத்தனமாக வளரும். படிப்படியாக உள்நாட்டுத்தொழில் நிறுவனங்கள் மடியும், அல்லது பன்னாட்டு நிறுவனங்களுக்கு கூலிக்கு மாரடிக்கும் வேலையைச் செய்யும். பன்னாட்டு நிறுவனங்கள் கோடி கோடியாக அள்ளிச் செல்லும். பகாசுரத் தொழிற்சாலைகளில் தானியங்கு முறை வேலைவாய்ப்பைக் குறைக்கும். வேலையிழந்தவர்கள் வருவாய் குறையும், வறுமையில் வாடும் மக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இதற்கு எளிய உதாரணம் நம் நாட்டின் குளிர்பான நிறுவனங்கள். இருபது ஆண்டுகளில் கோலாவும் பெப்சியும் உள்நாட்டு குளர்பான நிறுனங்கள் அனைத்தையும் அழித்தன. சில நிறுவனங்கள் கோலாவுக்கும் பெப்சிக்கும் புட்டியில் நிரப்பும் – பாட்டிலிங் - கூலி வேலையைச் செய்கின்றன. இப்படி உள்நாட்டு நிறுவனங்களை அழித்தொழிக்க பகாசுர நிறுவனங்கள் கையாண்ட வழிகள் பலவிதம். இதில் ஒன்று, சிறு நிறுவனங்களின் பாட்டில்களை கடைகளிலிருந்து எடுத்துச்சென்று வேலியிட்ட பகுதிகளில் சும்மா கொட்டி வைத்துவிடுவது. கடைக்காரர்களுக்கு இதற்காக சிறு தொகை கொடுக்கப்படும். சிறு நிறுவனங்கள் ஒவ்வொரு முறையும் புதிய பாட்டில்களை வாங்கிக்கொண்டிருக்க முடியாது. சுற்றுக்குவிட பாட்டில்கள் இல்லாததால் சப்ளை செய்ய முடியாது. கடையில் நாம் கேட்டாலும் உள்நாட்டு பானம் கிடைக்காது. பதிலாக பன்னாட்டு நிறுவன பானங்கள் வரிசையாக அடுக்கப்பட்டு, தங்கு தடையில்லாமல் தொடர்ந்து கிடைக்கும். கூடவே குளிர்பதனப் பெட்டிகளும் இலவசமாக அல்லது சலுகை விலையில் பன்னாட்டு நிறுவனங்கள் வழங்கிவிடும் என்பதால் கடைக்காரர்களுக்கும் வசதி. போதாதற்கு நமது திரைப்பட நட்சத்திரங்களின் விளம்பரங்கள் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து ஒளிபரப்பாகி மக்களின் மூளையைச் சலவை செய்யும். இது ஒரு விஷக்கூட்டணி. காலப்போக்கில் உள்நாட்டு நிறுவனம் இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோகும். பார்லேவுக்கு சொந்தமான தம்ஸ்அப் போன்ற பெரிய நிறுவனங்கள் சிலகாலம் தாக்குப்பிடித்துப்பார்த்தன. அதுவும் முடியாமல் போகும்போது பன்னாட்டு நிறுவனங்களுக்கு விலையாயின. இன்று இந்திய பானச் சந்தையில் 95 சதவிகிதம் இந்த கோகா கோலா மற்றும் பெப்சி நிறுவனங்களிடம்தான் இருக்கிறது.

இப்படி அசுரத்தனமாக உள்நாட்டுச் சிறுதொழில்களை அழித்து பகாசுர கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடித்துச் செல்வது உலகமயமாக்கலின் ஒரு சிறு பக்கம்தான். நமக்குத் தெரியாத மற்றொரு பக்கம் இருக்கிறது – அதைத்தான் இந்தப் புத்தகம் விவரிக்கிறது, துப்பறியும் நாவலின் விறுவிறுப்புடன் நம்மை அசரச் செய்கிறது.

அந்த மற்றொரு பக்கத்தை நடத்துபவர்கள் மேலை நாடுகளின் அரசுகள், அவர்களின் கைக்கூலி நிறுவனங்கள், உலக வங்கி, சர்வதேச நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்கள். இவர்களின் சுரண்டல் திட்டங்களுக்கு விதை போடும் பணியைச் செய்பவர்கள்தான் பொருளாதார அடியாட்கள். அப்படிப்பட்ட பொருளாதார அடியாளாக இருந்த ஒருவர் எழுதியதுதான் இந்தப் புத்தகம். ஒருவகையில் இது ஒரு சுயசரிதை, இன்னொரு வகையில் பாவமன்னிப்புக் கோரும் முயற்சி. நூலாசிரியரே இதைக் குறிப்பிடுகிறார் – ஒரு இடத்தில் அல்ல, நூலின் பல இடங்களிலும் குறிப்பிடுகிறார்.

இவரது பணி முறையை சற்று விவரித்தால்தான் விஷயம் புரியும்.
ஏதேனுமொரு வளரும் நாடு அல்லது ஏழை நாட்டை எடுத்துக்கொள்வது. அந்நாடு புவியரசியல்ரீதியாக (ஜியோபொலிடிகல்) மேலைநாட்டுக்கு முக்கியத்துவம் உடையதாகவும் இருந்தால் இன்னும் சிறப்பு. அந்நாட்டில் ஏதேனுமொரு திட்டம் செயல்படுத்தப்பட்டால், அந்நாட்டின் பொருளாதாரம் வலுப்படும், வேலைவாய்ப்புகள் பெருகும், வறுமை குறையும் என்பதுபோன்ற வெற்றுவாதங்களை உண்மையைப் போலக் காட்டுவதற்காக ஊகப் புள்ளிவிவரங்களைத் தயாரிப்பதுதான் இவர்களது பணி. இதற்கு அவர்களுக்குத் துணையாக பல நிபுணர்களும் இருப்பார்கள். அந்தப் பலரில் சிலர் திட்டத்தின் உள்நோக்கத்தை அறிந்தவர்களாகவும் இருக்கலாம், அறியாதவர்களாகவும் இருக்கலாம்.

அவர்கள் அந்நாட்டில் தங்கி, புள்ளிவிவரங்களை அலசி, எந்தத் திட்டம் பயன்தரும் என்று மதிப்பிட்டு, அது தொடர்பான அனைத்துப் புள்ளிவிவரங்களையும் தயாரித்து வெளியிடுவார்கள். பலதுறை நிபுணர்களும் அதில் இருக்கும்போது, அத்திட்டத்திற்கு உண்மைமுகம் கிடைத்து விடுகிறது.

பிறகு மேலைநாடுகளின் பகாசுர நிதி நிறுவனங்கள் அரசியல்வாதிகளை அல்லது ஆட்சியாளர்களை வலைக்குள் போடும். திட்டம் அந்நாட்டில் திணிக்கப்படும். திட்டத்தை நிறைவேற்றுதற்கான கடனுதவி வழங்கப்படும். அந்த நிதி, திட்டத்தை செயல்படுத்தும் நிறுவனங்களின் வாயிலாக மீண்டும் அதே நாட்டுக்குத் திரும்பி விடும். கடன் அப்படியே இருக்கும். எதிர்பார்த்த அளவுக்கு பலன் கிடைக்காது என்பது மக்களுக்குப் புரியாது. அப்படியே புரிந்தாலும் அவர்கள் செய்யக்கூடியது ஏதும் இல்லை. காரணம், அரசியல்வாதிகள் அல்லது ஆட்சியாளர்கள் தமக்கு லாபம் கிடைக்கும் என்றால் பெண்டாட்டியைக்கூட விற்றுவிடக்கூடியவர்கள்.

ஆக, திட்டத்தின் பயன் அந்நாட்டின் மிகச்சிலருக்கு மட்டும் லாபத்தைத் தரும். ஆனால் நாடு கடனாளியாகவே இருக்கும். அதை சரிசெய்ய அந்நாட்டின் அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகளைக் கைவிடும் அல்லது குறைக்கும். அதே சேவைகளை தனியார்துறைகள் வழங்குவதற்கு முன்வரும். முன்பு இலவசமாகக் கிடைத்துவந்த அதே சேவையை மக்கள் பணம்கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும்.

இதற்கு ஏராளமான உதாரணங்களை இங்கேயே காட்டலாம். 90கள் வரையில் சாலைப்போக்குவரத்தும் அரசிடமே இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக தனியார் நுழைந்து, எண்ணற்ற இடங்களில் கட்டணச் சாலைகள் உருவாகி விட்டன. குடிநீர் வழங்கல் எப்போதுமே அரசின் கடமைதான். ஆனால், நமது பெருநகரங்களில் அனைவரும் நம்பியிருப்பது அரசையல்ல, பிஸ்லெரி போன்ற தனியார் நிறுவனங்களை. விமானப் போக்குவரத்துத் துறை அரசிடமே இருந்தது. அரசு அதற்கு மானியம் வழங்கி வந்தது. இப்போது ஏராளமான தனியார் விமான நிறுவனங்கள் நுழைந்து விட்டன. கட்டணங்கள் குறைந்திருக்கின்றன என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்கிறோம். உண்மையில் பெட்ரோலுக்கும் டீசலுக்கும் வரிமேல் வரி போட்டு விலையை உயர்த்தும் அரசு, விமான நிறுவனங்களின் நஷ்டம் என்ற அழுகுரல் கேட்டு உடனே விமானத்திற்குத் தேவையான டீசலுக்கு வரிச்சலுகைகள் அள்ளித் தருகிறது, பலவகையான பொருளாதார சலுகைகளும் வழங்குகிறது. இது அரசு வழங்குகிற மானியத்தில் சேராது. ஏதோ தனியார் துறைகள் லாபத்தில் இயங்குவது போலவும், அரசுத் துறைகள் சரியாக செயல்படுவதில்லை என்பது போலவும் அரசே காட்டுவதற்கு முயலும். அப்போதுதான் மேலும் தனியார்மயப்படுத்த முடியும்.

நவீன இந்தியாவின் கோயில்கள் என்று நேரு வர்ணித்த பிரம்மாண்ட அணைக்கட்டுகள் நாட்டுக்கு நன்மை தரும் என்று பெரும்பாலானவர்களைப் போல நானும் நம்பியவன்தான். ஆனால் சுற்றுச்சூழல் பற்றிய புரிதலும் அரசியல் தெளிவும் கிடைக்கக்கிடைக்க பழைய பார்வைகள் மறுபரிசீலனைக்கு உள்ளாகும்போது, மேதா பாட்கர் போன்றவர்கள் முன்வைக்கும் வாதங்களின் நியாயங்கள் புரியும்போது நாம் எவ்வளவு முட்டாள்களாக இருக்கிறோம் என்பது புரிகிறது. முட்டாள்கள் மட்டுமல்ல, சுயநலவாதிகளாகவும் இருக்கிறோம். இன்று நம் நாட்டில் முன்வைக்கப்படும் திட்டங்கள் எல்லாமே பெருநகர-நகர்ப்புற மற்றும் மேல்தட்டு-நடுத்தட்டு வர்க்கத்தினரின் நலனுக்காக மட்டுமே என்பது நாளுக்கு நாள் தெளிவாகிக் கொண்டே போகும்போது, இந்நூலாசிரியர் போலவே எனக்குள்ளும் மனச்சாட்சியின் குத்தல் உறங்க விடாமல் செய்கிறது.

பகாசுர பன்னாட்டு நிறுவனங்களின் நுழைவும், அரசியல்வாதிகளின் விலைபோகலும், நகர்ப்புறம் சார்ந்த கட்டமைப்பு வசதிகளின் உருவாக்கங்களும், மேலும் அன்னிய முதலீடுகளும் என இது ஒரு விஷச்சுழலாகத் தொடரும்.

இதற்கான அஸ்திவாரம் போடும் பணியைச் செய்பவர்கள்தான் பொருளாதார அடியாட்கள். நூலாசிரியர் தான் ஒரு அடியாளாக இருந்தபோது எந்தெந்த நாட்டில் என்னென்ன திட்டங்களுக்கு பொய்யான புள்ளிவிவரங்களை தயாரித்துக் கொடுத்தாரோ அவற்றை எல்லாம் விரிவாகவே எழுதியிருக்கிறார்.

என் விருப்பம் எல்லாம், மெய்யான பொருளாதாரத் தன்னிறைவில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும் இந்நூலைப் படிக்கவேண்டும் என்பதுதான்.

படித்ததில் பிடித்தது-1


படித்ததில் பிடித்தது-1

புதுதில்லி உலகப் புத்தகக் கண்காட்சியில் எத்தனையோ புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒவ்வொன்றாக இப்போதுதான் படிக்கத் துவங்கினேன். முதலில் படித்தது இரா முருகனின் இரட்டைத் தெரு. அவருடைய எழுத்துகளிலிருந்து புரிந்தது அவர் என்னைவிட சுமார் 2 வயது மூத்தவர். எனவே அவர் குறிப்பிட்ட நிகழ்வுகள் பலவற்றை நானும் கண்டிருக்கிறேன், அனுபவித்திருக்கிறேன். அதுவே அந்த நூலின்பால் அதீத ஈர்ப்பை ஏற்படுத்தியது. கடந்த கால நினைவுகளில் அலைபாய வைத்தது. எனக்கு மட்டுமல்ல, நூலைப் படித்த என் மனைவி, தங்கை, மற்றொரு தோழி என மூவரும் ஒரே மூச்சில் படித்து முடித்தார்கள். இந்த நூலைப் பற்றி பிறிதொரு சமயம் பேசுவோம்....

அடுத்துப் படித்தது ஜோதி நரசிம்மன் என்பவர் எழுதிய அடியாள், கிழக்கு வெளியீடு.
நடுத்தர நகரமொன்றில் அடியாளாக இருந்தவரின் ஒப்புதல் வாக்குமூலம். முதல் சிறை அனுபவங்கள் சிறப்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. எனினும் அடியாளாக இருந்தகாலத்தின் தன் செயல்களை முழுவதுமாக வெளியிட்டாரா என்று சொல்ல இயலவில்லை. பிற்பாடு அவர் திருந்தி, தமிழ் தேசிய இயக்கத்தில் முனைப்பாக ஈடுபடுகிறார். அரசியல் போராட்டத்தில் மீண்டும் ஒருமுறை சிறை செல்கிறார்.

அண்மைக்காலமாக இப்படிப்பட்ட அதிர்ச்சி மதிப்பு நூல்கள் நிறையவே வெளிவருகின்றன இதுவும் அதில் அடக்கம். படிக்க வேண்டிய நூல்தான், ஆனாலும் படித்தேயாக வேண்டிய வரிசையில் என்னால் சேர்க்க முடியவில்லை.

மின்சாரம் தடைபட்டிருந்த ஒரு நேரத்தில் ஏதாவதொரு புத்தகத்தைப் புரட்டலாமே என்று தோண்டியபோதுதான் கண்ணில் பட்டது ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற நூல். இப்படியொரு நூலை வாங்கிய நினைவும்கூட இருக்கவில்லை. அடியாளைப் படித்து விட்டோம், அது என்ன பொருளாதார அடியாள்... கேள்விப்படாத சொற்றொடராக இருக்கிறதே என்று எண்ணி புத்தகத்தைப் புரட்டத் துவங்கினேன். 302 பக்க நூலை ஒரே நாளுக்குள் படித்து முடித்தும் ஆயிற்று, படிக்கும்போது எழுந்த சந்தேகங்களை இணையத்தில் தேடி பல வலைப்பக்கங்களை மேய்ந்தும் ஆயிற்று.

படித்ததில் கிடைத்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் சில வரிகளையேனும் பதிவு செய்துவிட வேண்டும் என்று தோன்றியது. அதன் விளைவுதான் இந்தப் பதிவு. எங்கே, எப்படித் துவங்குவது என்பதுதான் பெரும் கேள்வியாக இருக்கிறது. காரணம், இது எழுப்பிய அதிர்ச்சி... எதிராளி எப்போதாவது அறையப் போகிறான் என்று நமக்குத் தெரிந்தே இருந்தாலும், திடீரென அடுக்கடுக்காக அறைகள் விழுந்தால் எப்படியிருக்கும்... அப்படித்தான் இருந்தது இதன் அதிர்ச்சி.

காண்க - படித்ததில் பிடித்தது-2

Sunday, 28 March 2010

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா

புதுதில்லி உலகப் புத்தகத் திருவிழா


இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தில்லியில் நடைபெறும் உலகப் புத்தகத் திருவிழாவுடன் எனது உறவு 1992ஆம் ஆண்டில் தொடங்கியது. இதை ஏற்பாடு செய்யும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்துடன் புத்தக வடிவமைப்பில் எனது உறவு வலுப்பட்டதால் 2004 முதல் திருவிழாவுடனான உறவும் வலுப்பட்டது. இதன் பயனாக, ஒவ்வொரு புத்தகத் திருவிழாவின்போதும் தினமும் வெளியிடப்படும் நான்குபக்க நாளிதழ் வடிவமைக்கும் பொறுப்பு எனக்குக் கிடைக்கும்.

ஆரம்பத்தில் இருபொருள் தரும் வகையில் ஃபேர்டாக் (FairTalk) என்று இதற்குப் பெயர் இருந்தது. வாசிப்பு ரசனையற்ற ஒருவரின் தலைமை காரணமாக வேர்ல்ட் புக் ஃபேர் புல்லடின் (Bulletin) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த ஆண்டின் புத்தகத் திருவிழாவிலும் புல்லடின் வடிவமைப்புப் பணி எனக்குக் கிடைத்தது.

இந்தப் பணி இரண்டு வகைகளில் எனக்குப் பிடித்தமானது, திருப்தி தருவது. ஒன்று – திருவிழாவில் பகலில் நடைபெற்ற நிகழ்வுகளை மாலையில் தொகுத்து, இரவு இரண்டு மணிவாக்கில் வடிவமைப்பை முடித்து அச்சுக்கு அனுப்பிவிட்டு வீடு திரும்பும்போது மணி 3 ஆகி விடும். நான் அனுப்பிய குறுந்தகடு பிரச்சினை இல்லாமல் திறந்ததா, அச்சுக்கான ஏற்பாடு ஆகிவிட்டதா என்பதை உறுதிசெய்த பிறகுதான் உறங்கச் செல்வேன். அப்போதும்கூட உறக்கம் பிடிக்காது. நாள் முழுதின் நினைவுகள், சந்தித்த நண்பர்கள், கடைகள், பதிப்பாளர்கள், புத்தகங்கள், புகைப்படங்கள், வந்திருந்த பிரமுகர்கள், இன்னபிற நினைவுகள் அரைத் தூக்கத்தில் மங்கல் கனவுகளாக நிழலாடும். மறுநாள் காலை வெளிவந்த இதழைப் பார்த்ததும், பிள்ளை பெற்ற தாயைப்போல மனம் களிப்படையும். இப்படி பத்துநாட்கள் இரவுபகலாக உறக்கமின்றி அலைந்தாலும் களைப்பின்றி, பரபரப்பாக நாட்கள் நகரும். செய்த வேலைக்கு ஓரளவுக்குப் பணமும் கிடைக்கும்.

இரண்டாவது காரணம் – புத்தகங்கள் படிப்பதுதான் எனக்கு இருக்கும் முக்கியப் பொழுதுபோக்கு. அரங்கம் அரங்கமாய் அலைந்து அலைந்து, ஒவ்வொரு புத்தகமாய் பிரித்துப் பிரித்து, பின்அட்டைகளைப் படித்துப் படித்து, வாங்கும் சக்திக்கு உட்பட்ட புத்தகங்களைத் தேர்வுசெய்து தினமும் வீடு திரும்பும்போது ஒரு கட்டுப் புத்தகங்களுடன் வருவது ஒரு தனி அனுபவம். மறுநாள் காலை என் மனைவி புத்தகங்களைப் பிரித்துப் பார்த்து முதல் பக்கத்தில் பெயரை எழுதி வைத்திருப்பார். முன்னர் இப்படிச் செய்ததில்லை. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய புத்தகங்களில் பாதி எப்படி, எப்போது, யாரால் இரவல் வாங்கிச் செல்லப்பட்டன என்பது புரியாமல் போனபோது, குறைந்தது பெயராவது இருக்கட்டுமே என்று முடிவுசெய்து விட்டார் அவர். நல்லதுதான், எந்தப் புத்தகம் எந்த ஆண்டு வாங்கியது என்பதும் இதில் தெளிவாகி விடும்.

1992இல் நான் பணியாற்றி வந்த நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மட்டும்தான் தமிழ்ப் புத்தகக் கடையாகப் பங்கேற்கும். பிறகு சாந்தா பப்ளிஷர்ஸ் என்று ஒரு நிறுவனம் ஒரு ஸ்டாண்ட் புக் செய்யத் துவங்கியது. பிறகு காலச்சுவடு பங்கேற்கத் துவங்கியது. 2008இல் கிழக்கு வரத் துவங்கியது. 2010இல் பாரதி புத்தகாலயம் ஒரு ஸ்டாண்டை வாடகைக்கு எடுத்தது. மொத்தத்தில் பார்த்தால் தமிழ்க்கடைகளின் எண்ணிக்கை அதிகரிப்பது போலத் தோன்றும். ஆனால் உண்மை வேறு. இந்த முறை சாந்தா பதிவு செய்தாலும் வரவில்லை. பாரதி, திருவிழா துவங்கிய நான்கு நாட்களுக்குப் பிறகுதான் தலைகாட்டியது – அதிலும் மிகக் குறைவான நூல்களுடன்.

கடந்த திருவிழாவில் காலச்சுவடு வெளியார் புத்தகங்களையும் நிறைய வைத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு சொந்த நூல்களை அதிகம் வைத்திருந்தது. விற்காத நூல்களை திரும்ப எடுத்துச் செல்வது கடினமாக இருக்கிறது என்று காலச்சுவடு கண்ணன் கூறியது நியாயம்தான்.

1991 ஜனவரியில் தில்லிக்குப் புலம் பெயர்ந்தபோது ஒரு பதிப்பகத்தில் பணியாற்றி வந்ததால், 1992 திருவிழாவின்போது அதன் கடையை நிர்வகிக்கும் பொறுப்பு எனக்கு இருந்தது. 1994இல் நடைபெற்ற புத்தகத் திருவிழாவின் இறுதிநாளில் நான் அந்நிறுவனத்திலிருந்து விலகினேன்.

அதற்குப் பிறகு நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்துடன் உறவு வலுப்பட்டு, அதன் புத்தகங்களை வடிவமைக்கும் தொழிலில் முன்னிலை வகிக்கத் துவங்கினேன். 1996 முதல் 2002 வரையான பிந்தைய எட்டு ஆண்டுகளில் நடைபெற்ற வெறும் பார்வையாளனாக, வாசகனாக பிரகதி மைதானுக்குச் சென்று வந்தேன். அதிகம் புத்தகங்களை வாங்கியதில்லை. காரணம் – என்சிபிஎச் தவிர தமிழ்ப் பதிப்பாளர்கள் எவரும் பங்கேற்கவில்லை என்பது ஒன்று. ஆண்டுக்கொருமுறை தமிழகம் செல்லும்போது தில்லித் தமிழ்ச்சங்க நூலகத்துக்காக நானே ஒவ்வொரு பதிப்பகமாகத் தேடி நூல்களைத் தேர்வு செய்வேன். அப்படியே எனக்குப் பிடித்த நூல்களை, புதிதாக வந்தவற்றை சுடச்சுட வாங்கவும் முடிந்தது மற்றொரு காரணம். உலகப் புத்தகக் காட்சிக்கு வரும் நூல்களில் எல்லாமே புதியவையாக இருக்காது – எது அதிகம் விற்பனையாகுமோ அவைதான் அதிகமாக இடம்பெறும் நியாயம். காலச்சுவடும் கண்காட்சியில் பங்கேற்கத் துவங்கிய பிறகு, கண்காட்சியில் எனக்கும் பணிப்பங்கு கிடைத்த பிறகு நிலைமை மாறியது. அதுமட்டுமின்றி, ஆண்டுக்கொருமுறை தமிழகம் செல்வது குறைந்து போனது. கடைசியாக தமிழகம் சென்றது நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த டிசம்பரில்தான். இந்த சூறாவளி சுற்றுப்பயணம் குறித்து தனியாக எழுதலாம். அது கிடக்கட்டும்.

எனவே இந்த முறையும் காலச்சுவடை மட்டுமே முக்கியமாக நம்ப வேண்டியிருந்தது. கிழக்கிலும் சில நல்ல நூல்கள் இருந்தன. ஆனால் கிழக்கில் இருந்தவை பெரும்பாலும் கனமான விஷயங்களை சாதாரண வாசகர்களுக்காகத் தருகிற புத்தகங்கள்தான். அவற்றில் பல நூல்கள் மொழியாக்கங்கள். மொழியாக்கம் செய்தவர் அல்லது ஆசிரியர் பற்றிய குறிப்புகள் அரிதாகவே இருந்தன. நூலின் நம்பகத்தன்மையை மதிப்பீடு செய்வதற்கு இந்த விவரங்கள் அவசியம். இருப்பினும் அங்கும் சில நூல்கள் வாங்க முடிந்தது. இந்தக் குறையை கிழக்கு பதிப்பக உரிமையாளரை சந்தித்தபோது தெரிவித்தேன். அவரும் இனிமேல் கவனிப்பதாகக் கூறினார்.

காலச்சுவடின் - கண்ணனின் நட்பில் ஒரு சௌகரியம் – தினமும் ஒரு விசிட் செய்து, விருப்பமான புத்தகங்களை தேர்வு செய்து என் பெயரில் தனியாக வைத்து விடலாம், பிறகு கடைசியாக எல்லாவற்றையும் மறுபரிசீலனை செய்து வாங்கலாம்.

ஆங்கிலப் புத்தகங்களின் விலையுடன் ஒப்பிட்டால் தமிழ்ப் புத்தகங்களின் விலை குறைவுதான். ஆனாலும் தமிழில் நல்ல நூல்களின் விலை கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாகப் படுகிறது. இருந்தாலும் இந்த வாய்ப்பைத் தவற விட்டால் தமிழ் நூல்களை வாங்க முடியாது என்பதால் ஆர்வத்திற்கும் தீனிபோட்டு, செலவுக்கும் கணக்குப்போட்டு வாங்க வேண்டியிருக்கும். எது எப்படியிருந்தாலும் உலகப் புத்தகக் கண்காட்சியில் தமிழ் நூல்களை வாங்குவதற்கு அதிக செலவு செய்யும் தில்லித் தமிழன் நானாகவே இருப்பேன்.

எப்படியும் என் குழந்தைகள் இரண்டு முறை வருகை தருவார்கள், அவர்கள் இஷ்டத்துக்கு வாங்குவார்கள். கடந்த புத்தகத் திருவிழாவில் 6000 ரூபாய் செலவானது. இந்த முறை சுமார் 8000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கி விட்டோம். கிட்டத்தட்ட ஆறேழு மாதங்களுக்குப் படிக்கத் தேவையான புத்தகங்கள் சேர்ந்து விட்டன. ஒரே பிரச்சினைதான் – அலமாரி நிரம்பி விட்டது. இப்போதைக்கு ஏதோ ஒரு இடத்தில் அடைத்து வைக்க வேண்டியுள்ளது.

வாங்கிய நூல்களைப் பற்றி பேசிப் பரிமாறிக்கொள்ளும் நண்பர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. நாக. வேணுகோபாலன் வருவார், எல்லாவற்றையும் புரட்டிப் பார்த்து தனக்குப் பிடித்த ஏதேனும் ஒரிரு நூல்களை மட்டும் இரவல் வாங்கிச் செல்வார். படிக்க நேரமில்லாத போது இரவல் வாங்கிச்சென்று வைத்திருப்பதில் என்ன பயன் என்று உண்மையைக்கூறுகிற ஒரே சத்தியசீலர். அதேபோல எடுத்துச் சென்றதை அடுத்தமுறை மறக்காமல் திருப்பித்தருபவரும் அவர்தான்.

தொலைக்காட்சிகளின் தாக்கத்தால் வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிறது என்ற வாதம் தவறானது... எந்தக் காலத்திலும் புத்தகங்களின் தேவை குறையாது... அதனால்தான் பதிப்பகத்துறை முன்னர் இருந்ததைவிட செழிப்பாக இருக்கிறது... புதிய புதிய பதிப்பகங்கள் நுழைந்துள்ளன... புத்தகக் கண்காட்சிகள் வெற்றிகரமாக நடைபெறுகின்றன...

இந்த வாதங்கள் எல்லாம் நம்மை ஏமாற்றி்க்கொள்வதற்குத்தான். உண்மையிலேயே வாசிக்கும் வழக்கம் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. டிஜிடல் டிவைட் என்கிறார்களே, அதுபோல ஒரு இடைவெளி இங்கும் இருக்கிறது. மிகச்சிலர் மட்டும் மிக அதிக நூல்களை வாங்குகிறார்கள், மிகப்பலர் மிகக்குறைவான நூல்களை வாங்குகிறார்கள். மிகச்சிலர் வர்க்கம்தான் பதிப்பகங்கள் பிழைத்திருக்க முக்கிய ஆதாரங்களாக இருக்கின்றன. மிகப்பலர் வர்க்கம் வாங்கும் மிகச்சில நூல்கள் அவர்களின் பொழுதுபோக்குப் பசிக்குத் தீனிபோடும் நூல்களேயன்றி சிந்தனைக்குத் தீனி போடும் நூல்கள்அல்ல. எனவே இந்த மிகப்பலர் வர்க்கம் காலம் செல்லச்செல்ல இன்னும் குறுகிக்கொண்டே போகும். மிகச்சிலர் வர்க்கம் மட்டும் விரிவடையுமா.... என் மதிப்பீட்டின்படி இதுவும் குறுகும். இந்த மிகச்சிலர் வர்க்கத்தின் அடுத்த தலைமுறையும் இதேபோல வாசிப்பு ஆர்வம் கொண்டவர்களாக இருந்தால் மட்டுமே இந்த மதிப்பீடு பொய்யாகும். ஆனால் அவ்வாறு நிகழும் என நம்புவதற்கு எந்த வாய்ப்பும் இல்லை.

செல்பேசி உண்மையிலேயே நல்லதொரு வசதிதான். ஆனால் தொலைக்காட்சி எந்த அளவுக்கு வாசிப்புக்குக் கேடு விளைவித்ததோ அதைவிட அதிகக்கேட்டை விளைவிக்கிறது செல்பேசி. முன்னர் அரைமணி நேரப் பேருந்துப் பயணத்துக்கும்கூட ஏதேனுமொரு நூலை அல்லது பத்திரிகையை கையில் எடுத்துச்சென்றதுபோல இப்போது யாரும் எடுத்துப்போவதில்லை. பாக்கெட்டில் செல்பேசி. காதுக்கு ஒலிவாங்கி இணைப்பு. பொழுதுக்கும் உளறிக்கொண்டிருக்கும் பண்பலைகள்... நினைவுச்சில்லுகளில் பதியப்பட்ட பாட்டுகள்.... கவைக்குதவாத குறுஞ்சேதிப் பரிமாறல்கள்... அழைப்புமணியோசைப் பரிமாறல்கள் இணைய வசதிகள்... பயணத்தின்போது பேசாத நேரங்களில் எல்லாரும் இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அடுத்த தலைமுறையை நினைத்தால் அச்சமாக இருக்கிறது. அப்போதும் புத்தகக் கண்காட்சிகள் இருக்கலாம். ஆனால் அங்கே அறிவுக்குத் தீனிபோடும் நூல்களைவிட பாடம்-படிப்பு-மேல்படிப்பு நூல்களை வாங்கத்தான் அதிகம்பேரைப் பார்க்க முடியும். நிச்சயம் இலக்கிய நூல்களைத் தேடுபவர்களை அல்ல.

அத்தகைய ஒரு காலத்தைப் பார்க்க நேர்வதற்கு முன் இங்கிருந்து விடைபெற்றுக்கொள்வது நல்லது என்று தோன்றுகிறது.

Sunday, 28 February 2010

Numbers

NUMBERS

(Translation of a Tamil poetry recited at a poets meet)


I tried and tried in vain
to unfold the eternal riddle
how this single word has been
confined within a few numbers!

Twin towers hit by two planes.
In the garb of democracy
and in the name of weapons
Afghan and Iraq reduced to rubbles.

Earth trembled beneath the seas
triggering waves along the coasts
tremors, cyclones and blasts
provide fodder for news channels
for days, even weeks

Number of lives lost is simply a matter of statistics
Figures of casualties alone live for years and years

I tried and tried in vain
to unfold the eternal riddle
how this single world has been
confined within a few numbers

“Give me a poetry” – I seek
“In how many lines” – they ask

“Give me a story” – I seek
“In how my pages” – they ask

“Give me an article” – I seek
“In how many words” – they ask

“Give us a lecture” – I seek
“For how many minutes” – they ask

I tried and tried in vain
to unfold the eternal riddle –

Could creative mind be
confined within a few numbers?

Inventor of wheel would never have thought
that the number of wheels could become
a symbol of status.

Two-wheel owners are useless folks
Four-wheel owners are worth a lot
Are you a commuter of six-wheel bus?
Poor guy you are unworthy to live!

Buses are numbered
flights are numbered
trains are numbered
streets are numbered
telephone numbers
cellphone numbers
bank account numbers
credit card numbers
pin code numbers
password numbers…

Without these numbers
we are just zeroes

We are in need of a house
“of how many rooms” they ask

we need a plot
“of how many yards” they ask

No need to know your neighbours
No need to count their friendly hands
Once known by their names – the humans
are now identified by their house numbers

Stars get fame by crores they charge.
Movies get their fame by crores they spend.
Talents are here just zeroes
waiting for numbers on to their left sides

Students are praised on their numbers in marks.
Dailies are praised on their numbers of copies.
Magazines are praised on their number of colours.
Channels are praised on their number of viewers.

No need to worry about the contents
profit ratio is enough for content

Computer revolution of these days
confined the world within two numbers.
One-and-zero are more than enough
to make this earth a global village

Entire wealth of nations
within the reach of a few hands.

Stock markets and inflations
are nothing more than numbers.

Those who lost their savings and
those who sleep with empty stomachs
will surely be assessed in surveys
and we can see their numbers.

Polity as well is changed by these numbers.
Any means and any ways - everyone's
aim is to reach the magic numbers.

While the average age goes on to increase
while the rate of birth goes on to increase
while the rate of mortality goes on to decrease
I become frightened and frightened…
Would I have to call my grandchildren
not by their names but by numbers?

Whenever I open my eyes to see
Numbers play their hide and seek

One can go on narrating the reign of numbers but
the numbers in clocks may go to sleep

Permit me to leave – I have to rush to sleep
to see and enjoy any number of dreams
Dreams have no limitations of seconds
Dreams have no limitations of numbers

Permit me to leave – I have to rush to sleep

அடையாளம்

அடையாளம்


தில்லியில் 2007 செப்டம்பர் 29 அன்று நடைபெற்ற 'இலக்கியச் சந்திப்பு' கூட்டத்தில், இலங்கை எழுத்தாளர் சேரனின் 'உயிர் கொல்லும் வார்த்தைகள்' நூலுக்கான மதிப்புரை.


அடையாளம் என்ற சாதாரணச் சொல்லை ஒரு மனிதனுடன் பொருத்திப் பார்க்கும்போது அது வித்தியாசமான பரிமாணங்களைப் பெறுகிறது. அவனது இந்த அடையாளத்தை அவன் பெரும்பாலும் உணர்வதில்லை. மார்பு வலி ஏற்படும்போது மட்டும் இதயத்தின் துடிப்பு தெரிவதுபோல, மூக்கு அடைத்துக் கொண்டிருக்கும்போது மட்டுமே மூச்சின் இயக்கத்தை உணர்வது போல, இந்த மனித அடையாளமும் சில சமயங்களில் மட்டுமே அவனால் உணரப்படுகிறது. பெரும்பாலும் தெரியாமலே இருக்கிறது. ஆனால் இந்த அடையாளத்தை அவன் உணராமல் இருந்தாலும், மற்றவர்கள் எப்போதுமே அவனை அந்த அடையாளத்துடன் இணைத்தே பார்க்கிறார்கள். அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்த அடையாளம் அவனுடன் ஒட்டிக்கொண்டே இருக்கிறது. பல சமயங்களில் இந்த அடையாளம் அவனுக்கு உதவியாக அமைகிறது என்றாலும், பாதகமான சூழல்களை ஏற்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களையும் இந்த அடையாளம் அவனுக்கு ஏற்படுத்துகிறது.

ஒவ்வொரு மனிதனையும் மற்றவர்கள் எப்படி அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதற்கு, ஓரளவுக்கு அவனுடைய பெயர், மொழி, இனம், மதம், சாதி, கட்சிச் சார்பு, அரசியல் கொள்கை, உலகாயத விஷயங்களின் அவனுக்கு இருக்கும் கருத்துகள் போன்ற காரணங்களே முக்கியக் காரணிகளாக அமைகின்றன என்றாலும், அவன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவன் வெறுத்தாலும் வெறுக்காவிட்டாலும், அவன் ஏற்பதாக இருந்தாலும், எதிர்ப்பதாக இருந்தாலும், மற்றவர்கள் அவரவர் கருத்தோட்டத்தையும், வாழ்நிலையையும் பொறுத்துத்தான் அந்த அடையாளத்தை அர்த்தப்படுத்திக் கொள்கிறார்கள். இதில் அவன் செய்யக்கூடியது மிகக் கொஞ்சம் என்றுகூடச் சொல்ல முடியாது, அவன் கையில் எதுவுமே இல்லை என்றுதான் சொல்ல முடியும்.

ஏனென்றால், இந்த அடையாளப்படுத்தல் எந்த முகாந்திரமும் இன்றி தானே துவங்கி விடுகிறது. எந்தவொரு மனிதனையும் முழுதாக அறியாமலே, அவனுடன் பேசாமலே, அவனுடன் பழகாமலே, அவன் கொண்டிருக்கிற கருத்துகள் பற்றிய அரிச்சுவடிகூடத் தெரியாமலே நாம் மற்றவர்களை அடையாளப்படுத்தி விடுகிறோம். நாமும் இப்படி மற்றவர்களால் அடையாளம் காணப்படுகிறோம். ஆதிகாலம் தொட்டு இந்த அடையாளப்படுத்தல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய அடையாளப்படுத்தல் புதிய பரிமாணங்களை எட்டியிருக்கிறது – விபரீதமான விளைவுகளைக் கொண்டதாகவும் ஆகியிருக்கிறது.

மதவாதத்தை முளையிலேயே கிள்ளி எறிவதற்கான வாய்ப்புகளை நம் நாடு பயன்படுத்திக் கொள்ளாத நிலையிலும், தனிநபர் நம்பிக்கை என்ற அளவுக்குள் இருக்க வேண்டிய மதத்தை, சமூக வாழ்வில் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக மாற்றுவதற்கு மதம் வெற்றிகரமான வழி என்று பலமுறை நிரூபிக்கப்பட்டு விட்ட நிலையிலும், இந்த அடையாளப்படுத்தலை மதவாதம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்திக் கொள்கிறது என்பதைப் பற்றிய விளக்கங்கள் இங்கு அதிகம் தேவையில்லை. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமானால், கோவை நகரிலும் குஜராத்திலும் அடையாளப்படுத்தப்பட்ட கடைகளும் மக்களும் மட்டுமே தாக்கப்பட்டதை சுலபமான உதாரணமாகக் கொள்ளலாம். எந்தவொரு கண்டுபிடிப்பையும் புதிய தொழில்நுட்பத்தையும் தவறான நோக்கத்தில் பயன்படுத்துவதில் வல்லவர்கக்கு, இவையெல்லாம் இந்தப் புதிய அடையாளப்படுத்தலுக்கும் உதவியாய் இருக்கின்றன. இந்தத் தொழில்நுட்பங்கள் இல்லாவிட்டாலும் அடையாளப்படுத்தல் நிகழ்ந்தே தீரும் என்றாலும், இவை அடையாளப்படுத்தலை விரைவுபடுத்தியுள்ளன, எளிதாக்கியுள்ளன. உதாரணமாக, கணினியைப் பயன்படுத்தி மொத்த வாக்காளர் பட்டியலிலிருந்து சில நிமிட நேரத்தில் குறிப்பிட்ட மதத்தை அல்லது இனத்தை அல்லது சாதியைச் சேர்ந்தவர்கள் யார் என்பதைப் பட்டியலிட்டு விட முடியும். அவர்களின் ஜாதகம் தவிர, அனைத்து விவரங்களையும் திரட்டிவிட முடியும். அடையாளப்படுத்தலில் தொழில்நுட்பத்தின் பங்கைப் பற்றிப் பேசுவதில், இப்போது விவாதிக்கப்படும் விஷயத்திலிருந்து திசைதிரும்பிவிடக்கூடிய ஆபத்து இருப்பதால் இத்தோடு இதை நிறுத்திக் கொள்ளலாம்.

பனிப்போர் முடிவும், சோவியத் சிதறலும், ரஷ்ய பொருளாதாரச் சரிவும் அமைத்துக் கொடுத்த ஒற்றை ஏகாதிபத்திய ஆற்றலைப் பயன்படுத்தி எண்ணெய் வளம் மிக்க மத்தியக் கிழக்கு நாடுகளில் தன் ஆதிக்கத்தை அப்பட்டமாக நிலைநாட்டிக் கொள்ம் அமெரிக்காவின் முயற்சியால் விளைந்த செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு இந்த அடையாளப்படுத்தல் சர்வதேச அளவில் மற்றொரு பரிமாணம் பெற்றிருக்கிறது. மத்தியக் கிழக்கு நாடுகள் என்று அடையாளப்படுத்துவதுகூடத் தவறு என்று சிலர் கூறுகிறார்கள். தூரக்கிழக்கு நாடுகள், மத்தியக் கிழக்கு நாடுகள் என்று குறிப்பிடுவதே, மேற்கு நாடுகளை மையமாக வைத்துக் கொண்டுதான். எனவே இத்தகைய சொற்களை ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள். இது தனியாக விவாதிக்க வேண்டிய விஷயம். ஆக, இனம் சார்ந்த அடையாளப்படுத்தல் இன்று உலகளாவிய என்று சொல்ல முடியாவிட்டாலும் பலநாடுகள் தழுவிய பரிமாணத்தைப் பெற்றிருக்கிறது.
இவையெல்லாம் நிகழ்வதற்குப் பல ஆண்டுகள் முன்பாகவே ஒரு இனம் குறிப்பான அடையாளத்தைப் பெற்றுவிட்டது. அதுதான் ஈழத் தமிழினம். அறுபதுகளில் துவங்கிய இனப்பிரச்சினை பலவாறாக வளர்ச்சியும் மாற்றங்களும் பெற்று அந்த இனத்தையே மாற்றி விட்டிருக்கிறது. தமிழர் என்று ஒரு இனம்தான் இருக்க முடியும், ஈழத் தமிழினம் என அதைத் தனி இனமாகக் கூற முடியுமா என்று ஒரு கேள்வி எழுகிறது. இங்கே ஈழத் தமிழினம் என்று குறிப்பிடப்படுவது தமிழினத்திலிருந்து தனித்துப் பிரித்துக் காட்டுவதற்கு அல்ல. தொப்புள்கொடி உறவு, தாய்-பிள்ளை உறவு என்று எப்படி மார்தட்டிக் கொண்டாலும் எதார்த்தம் வேறாக இருக்கிறது. இனமானத் தமிழர்கள் அதிகமாக வாழும் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களையும் - நூறாண்டுகளுக்கு முன் புலம்பெயர்ந்து இலங்கை சென்று இன்னும் காலூன்ற முடியாமல் புலம் பெயர்ந்துகொண்டே இருக்கும் தமிழர்களையும் ஒரே இனம் என்று அடையாளப்படுத்த என்னால் இயலவில்லை. தமிழகத் தமிழினம் திரைப்படங்களில் மட்டுமே பார்த்துக கொண்டிருக்கும் துப்பாக்கிகளையும் பீரங்கிகளையும் விமான குண்டுமழைகளையும் ஈழத் தமிழினம் அன்றாடம் நேரில் பார்த்துக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முழுக்கப் பாதயாத்திரை நடத்தி முன்னறிவிப்புக் கொடுத்து, பெரிய பெரிய பேனர்களால் விளம்பரம் செய்து இலங்கைக்குப் படகில் போகப்போவதாக நாடகம் காட்டிக் கொண்டிருக்கிறது தமிழகத் தமிழினம். எந்த அறிவிப்பும் இல்லாமல், இருப்பதை எல்லாம் கைவிட்டு, இரவோடு இரவாக உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கள்ளத்தோணி ஏறி, நிறைவேறாக் கனவுகடன் புலம் பெயர்வது ஈழத் தமிழினம். குக்கிராமத்துக் குப்பாயியின் குழந்தையும் மம்மி-டாடி என்று பேச ஆங்கிலப்பள்ளிகக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது தமிழகத் தமிழினம். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நூலகம் தீவைத்துக் கொத்தப்பட்ட பின்னும் உலகளாவிய முறையில் இணையத் தமிழில் பல சோதனைகளை மேற்கொண்டுள்ளது ஈழத் தமிழினம். இந்த இரண்டு இனங்களையும் ஒரே தமிழினம் என்று என்னால் அடையாளப்படுத்த முடியாது. இதை இத்துடன் நிறுத்திவிட்டு, மீண்டும் ஈழத் தமிழர் என்ற பிரச்சினைக்குப் போவோம்.
அறுபதுகளில் ஈழத் தமிழர் பிரச்சினையாக இருந்தது, பிறகு ஈழத் தமிழரே பிரச்சினை என்றாகி விட்டதற்கு, பல நாடுகள், பல அரசியல் கட்சிகள், பல அரசியல் கட்சித் தலைவர்கள், பல இயக்கத் தலைவர்கள் காரணமாக இருந்ததுடன் இந்த அடையாளப்படுத்தலும் ஒரு காரணம். இந்தியாவில் இந்துத்துவவாதிகள் "அவர்கள்" என்று இஸ்லாமியரை அடையாளப்படுத்துவதுபோல, ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் அனைவரையுமே "அவர்கள்' என்று அமெரிக்கா அடையாளப்படுத்துவதுபோல, இன்று தீவிரப்பட்ட பிரச்சினையாக இல்லாமல், முப்பதாண்டுகளாக இந்த அடையாளம் ஈழத் தமிழர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. இன்று இந்து போன்ற சில பத்திரிகைகளில் மட்டுமே ஆழமான கட்டுரைகளில் விமர்சிக்கப்படும் நாம் - அவர்கள் என்ற கருத்தோட்டத்தின் பாதிப்பை ஈழத் தமிழர்கள் பல பத்தாண்டுகளாகவே அனுபவித்து வருகிறார்கள். இதிலும் குறிப்பாக, ஈழத் தமிழர் என்றாலே புலிகள் என்ற அடையாளப்படுத்தலாக மாறிவிட்டதுதான் விந்தை.

இதுபோலவே, சர்வதேச அளவில் ஈழத் தமிழர் என்றாலே புலிகள் என்ற கருத்து உருவானால் அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. அவர்களுக்கு இலங்கை-இனப்பிரச்சினை-புலம்பெயர்ந்த தமிழர்-ஈழத்தமிழர்-ஈழ இயக்கம் போன்ற வரலாறுகள் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், இந்தியாவின் வடபகுதியில் இருப்பவர்கள் தெற்கே உள்ள தமிழும் தெலுங்கும் மலையாளமும் கன்னடமும் எல்லாமே மதராசிதான் என்றே அடையாளப்படுத்துவதுபோல, இந்தியாவில் உள்ள படித்த வர்க்கத்தினர்கூட ஈழத் தமிழர் எவரையும் புலிகள் என்று மட்டும் அடையாளப்படுத்துவதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இதுவும் ஒருவகையில் இனஆதிக்க, மொழியாதிக்க உணர்வின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. எது எப்படியிருந்தாலும் ஈழத்தமிழர் எவரும் புலியாக அடையாளம் காணப்படும் அபாயம் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதனால் ஏற்படும் வேதனையை அனுபவித்தவர் மட்டுமே உணர முடியும். அதுவும் தொப்புள்கொடி உறவு உள்ள நாட்டில் இந்த அடையாளப்படுத்தலின் வேதனை அனுபவிக்கப்படுமானால் அந்த வேதனை இன்னும் அதிகமாக இருக்கும்.

சேரனின் இந்த நூலில் உள்ள ஒரு கட்டுரை அங்கதச்சுவையுடன் எழுதப்பட்டிருக்கிறது என்றாலும் அதன்பின்னே ஒளிந்துள்ள வேதனையை உணர முடிகிறது. இந்த நூலில் சர்வதேசப் பிரச்சினைகள் பலவும் அலசப்பட்டுள்ளன என்றாலும் குறிப்பாக இந்த ஒரு அனுபவக்கட்டுரை, அவர் அனுபவித்த வேதனையை நானே அனுபவித்ததாக உணரச் செய்தது.
நேபாளத்தில் சர்வதேச மன்னிப்புச் சபை - ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் நடத்திய ஒரு மாநாட்டில் பங்கேற்க சேரன், கோல்கத்தா வழியாகச் செல்ல நேர்கிறது. கோல்கத்தா விமான நிலையத்தில் அவர் எதிர்கொண்ட சிக்கல்தான் இந்த அனுபவம்.

கட்டுரையின் இறுதியில் எழுதுகிறார் - "யாருக்காவது நேபாளம், பூடான், திம்பு என்ற போகிற உத்தேசம் இருந்தால் சிங்கப்பூர் பாங்காக், ஊடாகச் செல்லவும். பயணம் தொலைவு, பணமும் அதிகம் எனினும் புண்ணிய பாரதத்தினால் புண்படாமல் போய்ச் சேருவீர்கள்''
இந்தச் சொற்றொடரின் அங்கதத்தைப் புரிந்து சிரிக்க வேண்டும் ஆனால் சிரிப்பு வரமறுக்கிறது. அடையாளப்படுத்தலின் முழுஅர்த்தம் அங்கே புரிகிறது.

தமிழர் அனைவரும் புலிகள் என்று அடையாளம் காணப்படுவது ஒருபுறம் இருக்க, சார்புநிலை எடுக்காத ஈழத் தமிழர்கள் எவரும் புலிகளின் எதிரிகளாக புலிகளால் அடையாளம் காணப்படும் அபாயமும் ஈழத் தமிழர்களுக்கு உண்டு. மற்ற அடையாளப்படுத்தல்களைவிட இந்த அடையாளப்படுத்தலுக்குக் கொடுக்கும் விலை மிக உயர்ந்த விலையாக இருக்கும். புலிகளின் அகராதியே வேறு என்பதை அண்மை வரலாற்றை அறிந்த நாம் விவாதிக்க வேண்டியதில்லை.
எனவேதான், இன்னொரு கட்டுரையில் - ஒன்றல்ல, பல கட்டுரைகளில் - புலிகள்மீதான பார்வை வெளிப்படும்போது சேரனின் நேர்மை வெளிப்படுகிறது.
சேரனின் நண்பர் சபாலிங்கம் பாரிஸ் நகரில் சுட்டுக்கொல்லப்படுகிறார். புலிகளின் மறுப்பாளர்கள் ஈழத்தில்தான் இருக்க வேண்டும் என்பதில்லை பத்மநாபா இருந்த சென்னை என்றாலும் சரி, சபாலிங்கம் இருந்த பாரிசானாலும் சரி, புலிகளால் அடையாளம் காணப்பட்டவர்களின் கதி அதோ கதிதான். இந்தப் படுகொலைக்கு புலிகள்தான் காரணம் என்று தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்று சேரன் குறிப்பிட்டாலும், 'கேள்விகளுக்கு அப்பாலான ஒரு தலைமைப் பீடமும், நம்பிக்கையும் தலைவர்மீதான விசுவாசத்தையும் தவிர வேறெதையுமே கருதாத ஒரு விடுதலைப்பட்டாளமும் - அது எவ்வளவு சாமர்த்தியம் மிக்கதாக இருந்தாலும் - அது உண்மையான விடுதலையைப் பெற்றுத் தந்துவிடப் போவதில்லை. இது வரலாற்றின் துயரம், துயரத்தின் வரலாறு... பேனா முனையை துப்பாக்கிக் குண்டுகளால் சிதைப்பதுதான் மாவீரம் என்பது எங்கடைய கருத்தியலாக மாறி விட்டால் எங்கடைய தேசத்தின் கல்லறைக்குள் ஒரு எலும்புக்கூடுகூட மிஞ்சாது' என்கிற வாசகங்கள், ஈழப்போராட்டத்தின் திசைவழியைக் கண்டு வேதனைப்படுகிற ஒரு மனதின் குரல்கள்.

ஈழத் தமிழர்களையே முஸ்லீம்கள் - மற்றவர்கள் என்று புலிகள் அடையாளப்படுத்துவதை "ஈழத்தின் தேசியத் தற்கொலை' என்ற கட்டுரை விவரிக்கிறது. பாலஸ்தீனத்தை ஒப்பிட்டுக்காட்டும் சேரன் -

'வடக்கிலிருந்து முஸ்லீம் மக்களை விரட்டியடிப்பது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு குறுக்குவழி என்று யாராவது நினைத்தால் அதைவிட மூடத்தனம் வேறு ஒன்றுமில்லை. ஈழத்தின் தேசியத் தற்கொலைதான் இது, முஸ்லிம் மக்களை அடித்துத் துரத்தி விட்டு உருவாக்கப்படும் ஈழம் இஸ்ரேலாகத்தான் இருக்குமே தவிர ஈழமாக இருக்க முடியாது.' என்கிறார். தமிழ்த் தேசியவாதத்தில் நோய்க்கூறாகப் பரவி வரும் முஸ்லிம் எதிர்ப்பையும் ஆக்ரோஷமாக எதிர்க்க வேண்டும் என்கிறார்.

தேசியவாதத்தின் எல்லைகள் என்கிற கட்டுரை, இன அடையாளப்படுத்தலை விவாதிக்கிறது.

'தேசியவாதத்தின் பொதுவானதும் குறிப்பானதுமான வரலாற்றுப் பாடங்கள் சுட்டுவது என்னவென்றால், தேசியவாதம் மற்றவர்களை அல்லது "வெளியார்கள்" என்று தான் உருவகிப்பவர்களை விரட்டுகிறது அல்லது கொல்கிறது. யார் இந்த "வெளியார்கள்" என்பது காலத்துக்கும், அரசியல், சமூக வரலாற்றுத் தேவைகளுக்கும் ஏற்ப உருவகித்துக் கொள்ளப்படுவது வழக்கம். சிங்கள-பௌத்த தேசியவாதத்திற்கு தமிழர்கள், முஸ்லிம்கள், மலையாளிகள் அனைவரும் வெளியார். இந்துத் தேசியவாதிகளுக்கு முஸ்லீம்கள் வெளியார். ஈழத் தமிழ் தேசியவாதத்திற்கு (இப்போதைக்கு) முஸ்லீம்கள் வெளியார்.

'இத்தகைய வெளியார் என்ற உருவகிப்பும் வெளியார் நீக்கமும் தேசிய வாதங்களுக்கு அடிப்படையிலேயே ஒரு ஜனநாயக இயல்பைத் தருகின்றன. இன்னொரு தளத்தில், தன்னுடைய இருப்பையும் உன்னதத்தையும் வலியுறுத்த எல்லாத் தேசியவாதங்களும் கடந்துபோன "பொற்காலங்களின்' வரலாற்று, இலக்கிய, கலாச்சார மேன்மைகளிலிருந்து தமக்குத் தேவையான தமது இன்றைய அரசியலுக்குச் சாதகமான விவரங்களையும் அம்சங்களையும் மட்டுமே பொறுக்கி எடுத்துத் தமது அடையாளத்தை நிறுவுகின்றன...' என்று தேசியவாதப் பிரச்சினையை சர்வதேச வரலாறுகளை ஒப்பிட்டுச் சுட்டிக்காட்டுகிறது இக்கட்டுரை.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் இப்போது எழுப்பப்பட்டுள்ள ராமர் சேது பிரச்சினை. ஆட்சியில் இருந்தபோது சேதுசமுத்திரம் திட்டத்தை எந்தக் கட்சி அங்கீகரித்ததோ, அதே கட்சி இப்போது முழுக்கரணம் அடித்து திட்டத்தை எதிர்க்கிற விந்தை இத்தகைய தேசியவாதத்தினால் மட்டுமே சாத்தியம். 'விடுதலையும், தேசிய விடுதலையும் எங்கடைய புரிந்துகொள்ளலின்படி சமத்துவம், சுதந்திரம், மானுடம், ஆகிய விழுமியங்களின் மேல் கட்டப்படுவது. இந்த சமத்துவம், இனத்துவ சமத்துவம் மட்டுமல்ல, பொருளாதார சமத்துவம், பால் அடிப்படையிலான சமத்துவம் போன்ற அனைத்தையும் உள்ளடக்க வேண்டும்' என்ற ஆவலை வெளிப்படுத்துகிறது. ஆனால் இது நிறைவேறுமா என்கிற ஐயப்பாடுடன்தான் கட்டுரை முடிகிறது.
வதைமுகாம்கள் எழுப்புகிற கேள்விகள் என்னும் கட்டுரை, நாஜி கொலை முகாம்களைப் பற்றி விளக்கிவிட்டு, நீங்களே சிந்திக்க வேண்டும் என்ற வேண்டுகோடன் முடிகிறது. 'நாஜிகனின் கொலை முகாம்கள் வரலாற்றின் ஒருபக்கமாக ஆவணங்களுக்குள் சென்று விட்டது என்று நாம் அமைதி கொள்ள முடியாது. பல்வேறு வடிவங்களிலும் பல்வேறு அரசியலுக்கூடாகவும் இத்தகைய பயங்கரங்களின் கூறுகள் மேலெழுவதை ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும், வளர்ந்துவரும் நவ-நாஜிகளிலும் இன்று பர்க்கிறோம. நிறவெறியும், இனவெறியும் இன்னொருமுறை மனிதகுல அழிப்புகளுக்குக் காரணமாகாது என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் இல்லை. நீங்கள் பயப்படுகிறீர்கள். பயப்படுவதில் அர்த்தமில்லை. மனிதநேயம் எங்கிருந்து ஆரம்பமாகிறது என யோசித்துப் பாருங்கள். உங்கள் அயலவர்களை உண்மையாக இதயபூர்வமாக உங்களால் நேசிக்க முடிகிறதா என்று உங்கள் மனச்சாட்சியைக் கேட்டுப் பாருங்கள்' என்கிறார் சேரன்.
சேரன் நிச்சயம் வன்முறைவாதி அல்ல என்றாலும் காந்தியவாதி என்றும் கருதிவிட இயலாது. ஆனால் இங்கே தேசியவாதத்துக்கு மருந்தாக அவர் குறிப்பிடுகிற வழி உண்மையில் பயன்தரக் கூடியதுதானா என்பதில் அவருக்கும் சந்தேகமாகத்தான் இருக்கும். இறுதிவரிகள் சாத்தியப்பாட்டில் ஐயத்தை எழுப்புவன என்றாலும், இக்கட்டுரையும் ஆழமானது, விரிவானது.

மகாகவியின் மகனான சேரன், கவிதையின் மூலம் அறிமுகமாகி, பிறகு பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதினார். இந்த நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள் 1989 முதல் 97 வரையான காலகட்டத்தில் எழுதப்பட்டவை. கருத்துச் சுதந்திரத்திற்காக குரல் கொடுக்கும் இவரது ஒரு கட்டுரை "உயிர் கொல்லும் வார்த்தைகள்" என்ற தலைப்பில் அமைந்துள்ளது. செல்வி என்பவருக்கு எழுதப்பட்ட கடிதமாக அது இருக்கிறது. இலங்கையில் புலிகளால் கடத்திச் செல்லப்பட்ட கவிஞர் செல்வியைத்தான் இவர் குறிப்பிடுகிறார் என்று எண்ணுகிறேன். 'எங்கடைய வார்த்தைகள் உயிர் கொல்லும் வார்த்தைகள் என்று அவர்கள் கருதினால் கருதட்டும். உயிர் கொல்வது அல்ல எங்கடைய வேலை. வார்த்தைகளுக்கு உயிர் கொடுப்பதே எங்கள் வேலை. விரைவில் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்' என்று முடிக்கிறார். இவர் சந்திக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்த அந்த செல்வி 97இல் புலிகளால் கொல்லப்பட்டு விட்டார் என்று நினைவு.
அமைதி வழி விமர்சனம் என்றாலும் சரி, ஆயுதமேந்திய எதிர்ப்பானாலும் சரி, புலிகள் தமக்கு வேண்டாதவர் என்று அடையாளம் கண்டவர்கள் எங்கே இருந்தாலும் அவர்களை ஒழித்துக் கட்டுவதில் குறியாக இருப்பவர்கள். இவர்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ்ப் பத்திரிகையாளர்களும் தமிழ்க் கவிஞர்களும் தலைவர்களும் ஏராளம். கனடாவுக்குப் புலம் பெயர்ந்துவிட்டார் சேரன். யார்க் பல்கலையில் சமூகவியல் ஆசிரியராக இருக்கிறார்.
இந்த நூல், சேரனே குறிப்பிடுவதுபோல நான்கு தளங்களில் இயங்குகிறது. கருத்துச் சுதந்திரம் ஒன்று. தேசியவாதம், அடையாளங்கள் எழுப்புற சிக்கல்கள் இரண்டாவது. போராட்டங்களும், அதற்கான வழிமுறைகளும் என்பது மூன்றாவது. அறம்சார்ந்த அணுகுமுறை என்பது நான்காவது தளம்.
'நியாயமான வழிமுறைகள்தான் நியாயமான முடிவுகளுக்கும் இட்டுச் செல்லும்' என்று போராட்ட வழிமுறைகள் பற்றிய இவரது கூற்று, காந்தியின் ways justifies the means என்பதோடு நெருங்கி நிற்கிறது.
தமிழ், சுற்றுச்சூழல், சோசலிசம், உலகமயமாக்கம், ஈழத் தமிழர் பிரச்சினை, கஷ்மீர், மனித உரிமைகள், என பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகள் இருக்கின்றன. பல கட்டுரைகளில் இடுக்கண் வருங்கால் நகுக என்பதை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார் சேரன். வேதனை தரக்கூடிய சில கட்டுரைகளையும்கூட அங்கதச் சுவையுடன் இவரால் தர முடிந்திருக்கிறது.
ஏ.கே. 47இலிருந்து பேஸ்பால் மட்டை வரை என்கிற கட்டுரை, ஆயுதப் போராளிகளையும் காய்ச்சுகிறது, ஈழத்தைவிட்டு மேலை நாடுகளுக்குப் பறந்தோடிவிட்டவர்களைக் காய்ச்சுகிறது. 'ஆயுதபாணிகளை மட்டுமல்ல, நிராயுதபாணிகளையும் குழந்தைகளையும் சுட்டுவீழ்த்துகிற வீரம் எங்களுடையது... வீரமும் களத்தே விட்டுவிட்டு, பாஸ்போர்ட்டையும் மலசல கூடத்தில் வீசிவிட்டு, வெறுங்கையோடு கனடா புக்க வீரத் தமிழ் மறவர்கள் பலர் ஏ.கே. 47க்குப் பதில், பேஸ்பால் மட்டைகளை ஆயுதமாகத் தரித்திருப்பதுதான் இன்றைய அவல நிலை. . . இந்த வீரத்தைப் பற்றி எழுதிக்கிழிக்க என்ன இருக்கிறது? வெல்பேர் காசில் தூள் கிளப்புகிறது வீரம்...'
என்று முடிகிறது. வெல்பேர் காசு என்று இவர் சுருக்கமாக எழுதியிருப்பது எத்தனை பேருக்குப் புரியும் என்று தெரியவில்லை. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த அகதிகளுக்கு இங்கிலாந்து, கனடா, நெதர்லாந்து போன்ற நாடுகள் தற்காலிக இருப்பிடமும், செலவுக்குப் பண உதவியும் தருவார்கள். இதை வெல்பேர் நிதி என்பார்கள். குடியுரிமை கிடைக்கும் வரை, அல்லது தஞ்சம் அனுமதிக்கப்படும் வரை, இருப்பிடம் உணவு போக்குவரத்து எல்லாவற்றுக்கும் அரசின் உதவி கிடைக்கும். இதை வாங்கி திருப்தியாகச் சாப்பிட்டுக்கொண்டு அங்கேயே இருந்து கொண்டு வீரம் பேசுபவர்களைச் சாடுவதாகவும் சொல்லலாம். அந்த வெல்பேர் காசில் ஒரு பகுதி கட்டாயமாக புலிகளால் வசூலிக்கப்பட்டு அது இலங்கையில் ஆயுதங்களுக்குப் பயன்படுவதைக் குறிப்பிடுவதாகவும் சொல்லலாம். எல்லாமே வெல்பேர் காசு என்பது புரிந்தவனுக்கு மட்டுமே இதுவும் புரியும்.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் என்கிற கட்டுரையில், புலம்பெயர்ந்து உலகெலாம் பரவியிருக்கிற தமிழர்களை 'எட்டுத் திக்கும் சென்றாயிற்று. கொலைச் செல்வங்களுக்குப் பதில் கலைச் செல்வங்களைக் கொண்டு வந்துசேருங்களேன் தயவுசெய்து' என்று வேண்டுகிறார்.
பல்லவ புராணம் என்று ஒரு கட்டுரை தமிழ்ப் பத்திரிகையாளர்களை நகைச்சுவையாகச் சாடுகிறது. இவர் புதுவைக் கல்லூரியில் பேராசிரிய நண்பரை சந்திக்கப் போயிருந்தாராம். அப்போது அங்கே வருகிறார் ஒரு தமிழ்ப் பத்திரிகையாளர். இவர் இலங்கைக் கவிஞர் என்று தெரிந்ததும், தன் பத்திரிகைக்கு ஒரு கவிதை கேட்கிறார். இவர் தயங்க, கடைசியாக பத்திரிகயாளர் கூறுகிறார் - நானே ஒரு நாலுவரி எழுதி உங்க பேரில போட்டுடட்டுமா? தமிழ்ப் பத்திரிகையாளர்களை இதைவிட மோசமாக சாட முடியாது.

சிந்தனையைத் தூண்டும் இக்கட்டுரைத் தொகுப்பை காலச்சுவடு வெளியிட்டுள்ளது. விலை 90 ரூபாய். நூலில் உள்ள கட்டுரைகள் அனைத்துமே ஆழமானவை, விவாதத்துக்கு உரியவை. இவற்றைப் படித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழ் வாசக வட்டம் விரிவடைய வேண்டும் என்பதே என் ஆவல்.

ஆட்டக்களத்தில் இந்தியா - 2009 ஒரு மீள்பார்வை

ஆட்டக்களத்தில் இந்தியா


2009 ஒரு மீள்பார்வை

ஜனவரி மாதம் நடைபெற்ற ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில், உத்திரப் பிரதேச அணியைத் தோற்கடித்த மும்பை அணி கோப்பையை வென்றது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், நூறாண்டு நிறைவை முன்னிட்டு புகழ் அரங்கம் என ஒரு பட்டியலை அறிவித்தது. வரலாற்றில் மிகச்சிறந்த பவுலர்கள், மற்றும் பேட்ஸ்மேன்கள் இதில் இடம் பெற்றனர். பவுலர்களில் பிஷன்சிங் பேடி, பேட்ஸ்மேன்களில் சுனில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகிய மூன்று இந்தியர்களுக்கு மட்டுமே இதில் இடம் தரப்பட்டனர் என்பது சற்றே சர்ச்சையைக் கிளப்பியது.

தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றில் இந்தியன் ரயில்வே அணி, தமிழக அணியைத் தோற்கடித்தது. மகளிர் பிரிவிலும் இந்தியன் ரயில்வே அணி வெற்றி கண்டது.

சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டியில், சோமதேவ் காலிறுதியை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமை பெற்றார்.

ஒற்றையர் ஆட்டங்களில் காலிறுதி-அரையிறுதி வரை எட்டி வந்த சானியா, மெல்போர்ன் நகரில் நடைபெற்ற ஆஸ்திரேலியன் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் மகேஷ் பூபதியுடன் ஜோடி சேர்ந்து, மிக்ஸ்டு டபிள்ஸ் பிரிவில் வெற்றி கண்டார். சானியாவுக்கு முதல் கிராண்ட் ஸ்லாம் சாம்பியன் பட்டம் கிடைத்தது.

இதே ஆஸ்திரேலியன் ஓப்பனில், ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்றிருக்கிறார் யுகி பாம்ப்ரி.

பாரஸ்வநாத் இன்டர்நேஷனல் ஓப்பன் செஸ் போட்டியில் சூரியசேகர் கங்குலி சாம்பியன் பட்டம் பெற்றார்.

கடந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளில், அபினவ் பிந்த்ராவுக்கு பத்மபூஷண் விருதும், பல்பீர் சிங் குல்லார், ஹர்பஜன் சிங், பங்கஜ் அத்வானி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருதுகளும் வழங்கப்பட்டன.

இந்தியா – இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி தொடர்ந்து நான்கிலும் வெற்றி கண்டு சீரிஸ் வெற்றி பெற்றது. அடுத்து நடைபெற்ற ஒருநாள் போட்டியிலும் இந்திய அணி வெற்றி கண்டது.

பஞ்சாப் தங்கக் கோப்பை ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவைத் தோற்கடித்தது.

அடுத்து, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற நான்கு ஹாக்கி போட்டிகளில் இரண்டில் டிரா செய்தும், இரண்டில் வெற்றி கண்டும் சீரிஸ் வெற்றி பெற்றது.

துலிப் கோப்பைக்கான உள்நாட்டு டெஸ்ட் போட்டியில் மேற்கு மண்டல அணி தென்மண்டல அணியைத் தோற்கடித்து கோப்பையைக் கைப்பற்றியது.

லினாரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்த் நான்காவது இடத்தைத்தான் பெற முடிந்தது.

இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகளுக்கிடையில் 21 வயதுக்குட்பட்டவர்களுக்கான ஹாக்கி போட்டிகள் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி இந்திய அணியைத் தோற்கடித்தது.

விஜய் ஹஜாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, வங்க அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றது.

ஐசிசி மகளிர் உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. இந்திய அணி சூப்பர் சிக்ஸை எட்டியது. ஆனால் இறுதியை எட்ட முடியாமல் மூன்றாம் இடத்தைப் பிடித்தது.

இந்தியா-நியுசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டு 20-20 போட்டிகளிலும் நியூ சிலாந்து வெற்றி பெற்றது.

அதனையடுத்து நடைபெற்ற ஐந்து ஒருநாள் போட்டிகளில், ஒன்றில் நியூ சிலாந்து வெற்றி கண்டது. ஒரு ஆட்டம் கைவிடப்பட்டது. மூன்று ஆட்டங்களில் வென்ற இந்திய அணி சீரிஸ் வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து மூன்று டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றன.

1967-68க்குப் பிறகு 13 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய கிரிக்கெட் அணி தோல்வியே கண்டிருந்தது. எனவே, இந்த டெஸ்டில் வெற்றி கண்டால் நாறபதாண்டு கால வறட்சிக்கு முடிவு கிடைக்கும் என்பது இந்திய அணியின் ஆவலாக இருந்தது. எண்ணியதுபோலவே, முதல் டெஸ்ட்டில் வெற்றி கிடைத்தது, இரண்டாவது டெஸ்ட் டிராவில் முடிந்தது. மூன்றாவது டெஸ்ட் மழையின் காரணமாக டிராவில் முடிந்தது. இந்திய அணி சீரிஸ் வெற்றி கண்டது.

இந்தப் போட்டியின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்தவர் என்ற பெருமை டெண்டுல்கருக்கும், அதிக கேட்ச் செய்தவர் என்ற பெருமை டிராவிடுக்கும் கிடைத்தது.

இஸ்தான்புல் நகரில் நடைபெற்ற மகளிர் கிராண்ட்பிரி செஸ் போட்டியில் கொனேரு ஹம்பி சாம்பியன் பட்டம் வென்றார்.



ஆம்பர் பிளைண்ட்போல்ட் மற்றும் ராபிட் செஸ் போட்டியில் பங்கேற்ற விஸ்வநாதன் ஆனந்த், பிளைண்ட்போல்ட் பிரிவில் வெல்ல முடியவில்லை என்றாலும், ராபிட் பிரிவில் அரோனியன், கடா காம்ஸ்கி ஆகிய இருவருடன் சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஹூஸ்டனில் நடைபெற்ற டபிள்யு.டி.ஏ. சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில், சீனத்தின் ச்சியா ஜுங் சுவாங்-உடன் ஜோடி சேர்ந்து ஆடிய சானியா மிர்சா, இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஐ-லீக் கால்பந்துப் போட்டியில் இறுதியை எட்டிய சர்ச்சில் பிரதர்ஸ் அணி, 6-2 என்ற கோல் கணக்கில் மொகமதன் ஸ்போர்ட்டிங் அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டமும் ஐம்பது லட்சம் ரூபாய் பரிசையும் வென்றது.

அஸ்லன் ஷா கோப்பைக்கான ஹாக்கி போட்டிகள் மலேசியாவில் நடைபெற்றன. இறுதிப் போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியைத் தோற்கடித்து கோப்பையை வென்றது.

துப்பாக்கித் திறனில் உலகக் கோப்பைக்கான போட்டிகள் சீனத்தில் நடைபெற்றன. இந்தியர்கள் பலர் அதில் பங்கேற்றாலும், இந்தியாவுக்கு இரண்டே பதக்கங்கள் கிடைத்தன. ஏர் பிஸ்டல் மகளிர் பிரிவில் ஹீனா சித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். ராபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவில் விஜய் குமார் வெள்ளிப் பதக்கம் பெற்றார்.

ஐபிஎல் துவக்கப்படுவதற்கு முன்பே தனியாரால் துவக்கப்பட்டது ஐசிஎல் எனும் இந்திய கிரிக்கெட் லீக். இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் அங்கீகாரம் பெற பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. ஆனால், இந்திய கிரிக்கெட் வாரியம் எப்படியோ தடுத்துக்கொண்டே வந்தது. கடைசியாக, மே மாதம் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் ஐசிஎல்-இன் அங்கீகார விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து, ஐசிஎல்-லுக்குப் போன கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் தமது தவறை உணர்ந்து உறவைத் துண்டித்துக்கொண்டு திரும்பி வந்தால் உள்நாட்டு அணிகளில் சேர்க்கப்படுவார்கள் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வலைவீசி பலரையும் இழுத்து விட்டது.

கொச்சி, கோவை, சென்னை ஆகிய நகரங்களில் கிராண்ட் பிரி தடகளப் போட்டிகள் நடைபெற்றன. மூன்றிலும் கேரளம் அதிக பதக்கங்களை வென்றது.

அரபு நாட்டில் நடைபெற இருந்த ஆசியா கோப்பை கால்பந்துப் போட்டிகள் மலேசியாவில் நடைபெற்றன. அஸ்லன் ஷா கோப்பையை வென்ற உற்சாகத்தில் இருந்த இந்திய அணி, காலிறுதியைக்கூட எட்டவில்லை.

ஆசிய கிராண்ட்பிரி தடகளப் போட்டிகள் சீனத்தில் நடைபெற்றன. இந்தியர்கள் 8 தங்கம், 10 வெள்ளி, 15 வெண்கலம் ஆகிய பதக்கங்களைப் பெற்றனர்.

மார்ச் மாதம் பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கச் சென்ற இலங்கை அணியினர்மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இத் தாக்குதல், பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றிய பார்வையை மாற்றி விட்டது. ஏப்ரல் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக, இந்தியாவில் நடைபெற இருந்த இந்திய பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டன.

முதல்முறை இருந்த அளவுக்குப் பரபரப்பு இந்த முறை இருக்கவில்லை. தொலைக்காட்சியில் டிஆர்பி விகிதமும் குறைவாகவே இருந்தது. முதல் ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த அணிகள் வெற்றி கண்டன. இந்த முறை வேகமாக விக்கெட்டுகளை வீழ்த்திய அணிகள்தான் வெற்றி கண்டன.

முதல் ஐபிஎல் போட்டியின்போது கடைசி இடத்தில் இருந்தது டெக்கான் சார்ஜர்ஸ் அணி, அதே அணி இந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்றது. பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் இரண்டாவது இடம் பெற்றது. தென் ஆப்பிரிக்க அதிபர் ஜேக்கப் சூமா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு ஐபிஎல் கோப்பையை வழங்கினார்.

பிலிப்பைன்சில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் சூரிய சேகர் கங்குலி சாம்பியன் பட்டம் வென்றார். மகளிர் பிரிவில் மீனாட்சி நான்காம் இடம் பிடித்தார்.

இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக இருக்கும் பைச்சுங் புட்டியாதான் மோகன் பகான் அணிக்கும் கேப்டனாக இருந்தார். ஐ-லீக் கால்பந்துப் போட்டியில் மோகன் பகான் வெற்றி பெற இயலவில்லை. அத்துடன், தனியார் தொலைக்காட்சியில் நடனப் போட்டியில் பங்கேற்ற புட்டியா அதில் வெற்றியும் பெற்றார். இதெல்லாம் பிடிக்காத மோகன் பகான் நிர்வாகம், புட்டியாவுக்கு நோட்டீஸ் அனுப்புவதாக மீடியா வாயிலாக அறிவித்தது. இதனால் கோபம் கொண்ட புட்டியா மோகன் பகான் அணியிலிருந்து விலகிக்கொண்டார்.

சந்தோஷ் கோப்பை கால்பந்துப் போட்டிகள் தமிழகத்தில் நடைபெற்றன. தமிழக அணி அரையிறுதியில் கோவாவிடம் தோல்வி கண்டது. இறுதிப் போட்டியில் கோவா அணி வங்கத்தைத் தோற்கடித்து சந்தோஷ் கோப்பையை வென்றது. தமிழகம் மூன்றாம் இடத்தையே பிடித்து என்றாலும் பி. முத்து சிறந்த ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார். பி.சி. ரிஜு, தங்கக் கால்கள் என்ற பதக்கத்தைப் பெற்றார்.

ஒலிம்பிக் பதக்க வீரர்கள் விஜேந்தர், ஜிதேந்தர் இருவரும் சீனத்தில் நடைபெற்ற ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகளில் வெண்கலம் வென்றனர். பரம்ஜித் சமோடா, தினேஷ் குமார் ஆகியோரும் வெண்கலம் வென்றனர். தோக்சம் நானோ சிங், ஜெய் பகவான் ஆகிய இருவரும் வெள்ளியை வென்றனர். சுரன்ஜய் சிங் தங்கம் வென்றார். சர்வதேச அளவிலான குத்துச்சண்டையில் 1994இல் ராஜ்குமார் சங்வான் தங்கம் வென்ற பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கம் இது. பதக்க வரிசையில் இந்தியா மூன்றாம் இடம் பிடித்தது.

20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன்-ஜூலையில் நடைபெற்றன. நடப்புச் சாம்பியனாக இருந்த இந்தியா, சூப்பர் எய்ட் குழுவிலும்கூட இடம்பெறாமல் வெளியேறியது. இறுதிப் போட்டியில் இலங்கை அணியைத் தோற்கடித்த பாகிஸ்தான் உலகக் கோப்பையைக் கைப்பற்றியது.

ஜோஸ் பிராசா, இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். முந்தைய பயிற்சியாளரான ரிக் சார்லஸ்வொர்த், கேட்டது எதுவும் கிடைக்காமல் வெறுத்துப்போய் விலகிய பல மாதங்களுக்குப் பிறகு, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஜோஸ் பிராசா நியமிக்கப் பட்டார்.

அதைத் தொடர்ந்து, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் அறிவுரைப்படி இந்திய ஆடவர் ஹாக்கி – மகளிர் ஹாக்கி என இரண்டையும் சேர்த்து ஹாக்கி இந்தியா பதிவு செய்யப்பட்டது. இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் பொருளாளராக இருக்கும் ஏ.கே. மட்டு தலைமையில் உருவாக்கப்பட்ட ஹாக்கி இந்தியாவுக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் அங்கீகாரம் அளித்தது, சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பும் அங்கீகாரம் அளித்தது. நிர்வாகிகள் தேர்தல் விஷயத்தில் இன்னும் குழப்பம் நீடிக்கிறது. விரைவில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பொறுப்புகளை ஏற்பார்கள் எனறு நம்பலாம்.

20-20 உலகக் கோப்பையில் இந்தியாவின் கனவை சிதறடித்த மேற்கிந்திய அணியுடன் ஆடுவதற்காக இந்திய அணி மேற்கிந்தியா சென்றது. நான்கு ஒருநாள் போட்டிகளில் ஒரு போட்டி மழையின் காரணமாகக் கைவிடப்பட்டது. இரண்டில் வென்ற இந்திய அணி, சீரிஸ் வெற்றி பெற்றது.

ஜாகர்த்தாவில் நடைபெற்ற இந்தோனேசியன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில் சீனத்தின் லின் வாங்கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வென்றார் சைனா நேவால். ஓப்பன் சீரிஸ் சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற பெருமையைப் பெற்றார். இவருக்கு முன்னர் இந்தியாவுக்கு ஓப்பன் சீரிஸ் சாம்பியன் பட்டம் பெற்றுத் தந்தவர்கள் இருவர் பிரகாஷ் படுகோனே, மற்றவர் புல்லேல கோபிசந்த். அதே கோபிசந்த் இந்த சைனா நேவாலுக்கு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேசியன் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் பங்கேற்ற சைநா நேவால், காலிறுதியை எட்டிய பிறகு வெளியேறினார்.

புனே நகரில் பயிற்சியில் இருந்த இந்திய ஹாக்கி அணியின் முக்கிய ஆட்டக்காரர் பல்ஜித் சிங்-குக்கு கண்ணில் காயம் பட்டு இன்று வரை ஆட இயலாத நிலையில் இருக்கிறார். அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கோலாலம்பூரில் நடைபெற்ற என்எஸ்சி சீரிஸ் ஸ்குவாஷ் போட்டியில் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார் ஜோஷ்னா சின்னப்பா.

உலக ஜூனியர் வாலிபால் போட்டியில் பங்கேற்க ரஷ்யாவுக்குச் சென்ற இந்திய அணி அரையிறுதி வரை எட்டியது.

ஒலிம்பிக் பதக்க வீரர் விஜேந்தர் சிங், சுஷில் குமார், மேரி கோம் ஆகிய மூவருக்கும் விளையாட்டு ரத்தின விருதுகள் வழங்கப்பட்டன.

வில்வித்தை வீரர் மங்கல் சிங் சம்பியா, தடகள வீராங்கனை சினிமோல் பவுலோஸ், பேட்மின்டன் சைநா நேவால், குத்துச் சண்டை சரிதா தேவி, சதுரங்கத்தில் தானியா சச்தேவ், கிரிக்கெட்டில் கௌதம் கம்பீர், ஆடவர் ஹாக்கியில் இக்னேஸ் திர்க்கி, மகளிர் ஹாக்கியில் சுரீந்தர் கௌர், கபடியில் பங்கஜ் ஷிர்சத் உள்ளிட்ட பலருக்கு அர்ஜுனா விருதுகள் வழங்கப்பட்டன.

பேட்மின்டன் பயிற்சியாளர் கோபி சந்த், மல்யுத்தப் பயிற்சியாளர் சத்பால், ஹாக்கி பயிற்சியாளர் பல்தேவ் சிங், குத்துச் சண்டை பயிற்சியாளர் ஜெயதேவ் பிஷ்ட ஆகியோருக்கு துரோணாச்சாரியா விருது வழங்கப்பட்டது.

நேரு கோப்பை கால்பந்துப் போட்டிகள் புதுதில்லியில் நடைபெற்றன. கடுமையான போட்டிகளுக்குப்பிறகு இறுதியை எட்டிய இந்திய கால்பந்து அணி, சிரியாவைத் தோற்கடித்து நேரு கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

மிலான் நகரில் நடைபெற்ற உலகக் குத்துச் சண்டைப் போட்டியில் பங்கேற்ற விஜேந்தர், அரையிறுதியை எட்டி, உலகக் குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு முதல் முறையாக பதக்கம் பெற்றுத்தந்து சாதனை படைத்தார்.

சர்வதேச பில்லியர்ட்ஸ் சாம்பியன் போட்டியில் பங்கேற்ற 24-வயது பங்கஜ் அத்வானி, 41 வயது மைக் ரஸ்ஸலைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். கீத் சேத்திக்குப் பிறகு இரண்டாவது முறையாக இந்தியாவுக்குக் கிடைத்த சாம்பியன் பட்டம் இது.

இலங்கையில் நடைபெற்ற டிரைசீரிஸ் கிரிக்கெட் போட்டியில் நியூ சிலாந்து மற்றும் இலங்கை அணிகளை வெற்றி கண்டு, டிரை சீரிஸ் கோப்பையைக் கைப்பற்றியது இந்திய அணி. சர்வதேசத் தர வரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சாம்பியன் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தகுதிச் சுற்றில் தேறாமல் வெளியேறியது.

ஆண்டு தோறும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வழங்கும் சிறந்த ஆட்டக்காரர்கள் விருதுகளில், தோனி, கவுதம் கம்பீர், சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றன. சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டர் விருது கவுதம் கம்பீருக்கும், சிறந்த ஒருநாள் கிரிக்கெட்டர் விருது தோனிக்கும் கிடைத்தது.

டென்மார்க்கில் நடைபெற்ற உலக மல்யுத்தப் போட்டியில் 42 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் பெற்றுத் தந்தார் ரமேஷ் குமார்.

இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் முக்கியப் போட்டியான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சேவாக் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி, மும்பை அணியைத் தோற்கடித்து இரானி கோப்பையைக் கைப்பற்றியது.

49ஆவது நேஷனல் ஓப்பன் தடகளப் போட்டிகள் போபாலில் நடைபெற்றன. 57 பதக்கங்கள் பெற்ற ரயில்வே முதலிடம் பெற்றது. 18 பதக்கங்கள் பெற்ற சர்வீசஸ் இரண்டாம் இடம் பிடித்தது. 13 பதக்கங்கள் பெற்ற கேரளம் மூன்றாம் இடம் பிடித்தது.

ஆடவர் பிரிவில் மும்முறை தாண்டலில் புதியா சாதனை படைத்த எம். ரஞ்சித் ஆடவர் பிரிவின் சிறந்த தடகளவீரர் பெருமையைப் பெற்றார்.

800 மீட்டர் ஓட்டம், 400 மீட்டர் தொடர் ஓட்டம் என இரண்டிலும் தங்கம் வென்ர டின்ட்டு லுகா, மகளிர் பிரிவில் சிறந்த தடகள வீராங்கனை எனும் பெருமையைப் பெற்றார். 5 பதக்கங்கள் பெற்று தமிழகம் பத்தாம் இடத்தைப் பிடித்தது.

எம்.சிசி முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டியில் ஆர்மி-லெவன் அணி கோப்பையை வென்றது.

இந்தியன் ஓப்பன் கோல்ஃப் சாம்பியன்ஷிப் போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த சின்னசாமி முனியப்பா, கொரியாவின் லீ சுங்-கைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார். அலி ஷேர், ஃபிரோஸ் அலி, அர்ஜுன் அத்வால், ஜோதி ரந்தாவா, விஜய் குமார் ஆகிய கோல்ஃப் சாம்பியன்களின் வரிசையில் சேர்ந்திருக்கிறார் சின்னசாமி.

இந்திய கிரிக்கெட் வாரியம், ஆஸ்திரேலிய கிரிக்கெட் குழு, தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் குழு ஆகிய மூன்றும் இணைந்து துவக்கியுள்ள சாம்பியன்ஸ் லீக் 20-20 கிரிக்கெட் போட்டிகள் முதல் முறையாக இந்தியாவில் நடைபெற்றன.

இந்தியா, தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, மேற்கிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து உள்நாட்டு 20-20 கிரிக்கெட் போட்டிகளில் வென்ற 12 அணிகள் இதில் பங்கேற்றன.

நியூ சவுத் வேல்ஸ் புளு அணி சாம்பியன்ஸ் லீக் கோப்பையை வென்றது. டிரினிடாட் டொபாகோ அணி இரண்டாம் இடம் பிடித்தது.

கனடாவில் இந்திய ஹாக்கி அணிக்கும் கனடிய ஹாக்கி அணிக்கும் இடையிலான ஏழு ஹாக்கி போட்டிகளில் முதல் நான்கிலும் வென்ற இந்திய அணி சீரீஸ் வெற்றியைப் பெற்றது.

இந்திய கால்பந்து அணியின் காப்டன் புட்டியா, 100 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற சாதனை புரிந்தவர் என்பதற்காக தில்லியில் அவருக்கு ஒரு பாராட்டு விழா நடைபெற்றது. இந்திய கால்பந்துக் கூட்டமைப்பு அவருக்கு ஒரு தங்கக் காசும், ஐந்து லட்ச ரூபாய் காசோலையும் அளித்துப் பாராட்டியது.

மாநிலங்களுக்கிடையிலான தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. வழக்கம்போல இந்த முறையும் கேரளம்தான் அதிக பதக்கங்கள் பெற்றது.

நவம்பர் மாதம் இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலியா சீரிஸ் வெற்றி கண்டது.

வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்கப் போட்டிகளில் பங்கேற்ற இந்தியர்கள் 6 தங்கம், 9 வெள்ளி, 25 வெண்கலப் பதக்கங்களுடன் ஏழாவது இடம் பிடித்தனர்.

சீனத்தில் நடைபெற்ற 18ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் 1 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் வென்ற இந்தியா ஆறாம் இடம் பிடித்தது.

பாங்காக்கில் நடைபெற்ற ஆசியக் கோப்பைக்கான மகளிர் ஹாக்கி போட்டியில் இந்திய மகளிர் அணி இறுதிவரை எட்டி சீனத்திடம் தோல்வி கண்டது. இருப்பினும், மகளிர் உலகக் கோப்பையில் பங்கேற்கும் தகுதியை இந்தியா பெற்று விட்டது. இந்த டோர்னமென்டின் சிறந்த ஆட்டக்காரர் என்ற பெருமையைப் பெற்றார் சுப்ரதா பிரதான்.

அர்ஜென்டினாவில் நடைபெற்ற உலக ஜூனியர் செஸ் சாம்பியன் போட்டியில் சௌம்யா சாம்பியன் பட்டம் வென்றார். கொனேரு ஹம்பி, ஹரிகா ஆகிய இருவருக்கும்பிறகு, இந்த சாம்பியன் பட்டம் வென்ற மூன்றாவது இந்தியர் சௌம்யா.

சர்வதேச கிரிக்கெட்டில் நுழைந்து இருபது ஆண்டுகளைக் கடந்து விட்ட சச்சின் டெண்டுல்கர் ஒருநாள் கிரிக்கெட்டில் 17000 ரன்கள் குவித்த சாதனை புரிந்திருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 13000 ரன்கள் குவிக்கும் சாதனையை நெருங்கி விட்டார்.



Tuesday, 2 September 2008

நான் ஏன் நாத்திகன் - பகத் சிங்

நான் ஏன் நாத்திகன்

பகத் சிங்

ஒரு புதிய கேள்வி எழுந்திருக்கிறது. எல்லாம் வல்ல, எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாம் அறிந்த கடவுளின் இருப்பை நான் நம்ப மறுப்பதற்கு என் அகங்காரம்தான் காரணமா? இப்படியொரு கேள்வியை எதிர்கொள்ள நேரும் என்று நான் கற்பனைகூடச் செய்ததில்லை. ஆனால், சில நண்பர்களுடன் நான் உரையாடியதில், சிறிது காலமே என்னுடன் பழகிய குறிப்பிட்ட சில நண்பர்கள் - அவர்களை நண்பர்கள் என்று நான் கருதுவது அதிகப்படி உரிமை எடுத்துக் கொள்வதாகாது என்றால் - கடவுளின் இருப்பையே மறுக்கின்ற அளவுக்கு நான் போகக்கூடாது; என்னுடைய இந்த நம்பிக்கைக்கு அகங்காரம்தான் காரணம் என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள் என்று அறிய நேர்ந்தது. இது முக்கியமான ஒரு பிரச்சினைதான். மனித குணங்களுக்கு அப்பாற்பட்டவன் என்று கூறிக்கொள்ள நான் விரும்பவில்லை. நான் சாதாரண ஒரு மனிதன்தான். மனிதருக்கும் மேற்பட்டவன் என்று யாரும் கூறிக் கொள்ளவும் முடியாது. என்னிடமும் குறைகள் உண்டு. என் இயல்பில் அகங்காரமும் ஒரு அங்கம்தான். என் தோழர்கள் என்னை எதேச்சாதிகாரி என்றார்கள். அவ்வளவு ஏன், என் நண்பர் திரு பி.கே. தத் கூட சில நேரங்களில் அப்படி அழைத்ததுண்டு. சில சந்தர்ப்பங்களில் நான் அடாவடிக்காரன் என்று கண்டனம் செய்யப்பட்டதும் உண்டு. நான் என்னை அறியாமலே என் கருத்துகளை மற்றவர்கள் மீது திணித்து, அவற்றை ஒப்புக்கொள்ளச் செய்கிறேன் என்று சில நண்பர்கள் கடுமையாக என் மீது புகார் செய்கிறார்கள். ஓரளவுக்கு இதில் உண்மை உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. இது அகம்பாவமாகவும் இருக்கலாம். பொதுவாக ஊறிக்கிடக்கும் வழக்கங்களை எதிர்ப்பதற்கு எந்த அளவுக்குத் தேவையோ, அந்த அளவுக்கு என்னில் அகங்காரம் இருக்கிறது. ஆனால் அதில் சுயநலம் ஏதும் இல்லை. அப்படி இருந்தாலும், நாம் பின்பற்றும் நம்பிக்கையின்பாற்பட்ட நியாயமான பெருமையே தவிர, அது அகங்காரம் ஆகாது. வீண் பெருமை, அல்லது தெளிவாகக் கூறினால், `அகங்காரம்' என்பது ஒருவன் தன்னைப் பற்றி அளவுக்கதிகமாக பெருமை கொள்வது. என்னை நாத்திகத்துக்கு இட்டுச் சென்றது இத்தகைய அளவுக்கதிகமான தற்பெருமையா அல்லது இந்த விஷயத்தைப் பற்றி நான் கவனமாகப் படித்து, தீவிரமாக சிந்தித்து, அதற்குப் பிறகு கடவுளின்மீது நம்பிக்கை இழந்தேனா என்பதைத்தான் இங்கே விவாதிக்க விரும்புகிறேன். தன்முனைப்பு, அகங்காரம் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை என்பதை முதலில் தெளிவுபடுத்திவிட விரும்புகிறேன்.

முதலாவதாக, தகுதிக்கு மீறிய தற்பெருமை அல்லது வீண் கௌரவம் ஒரு மனிதனின் கடவுள் நம்பிக்கைக்கு எவ்வாறு குறுக்கே நிற்க இயலும் என்பதை என்னால் சிறிதும் உணர்ந்து கொள்ள இயலவில்லை. எனக்குத் தகுதியற்ற புகழை நான் ஓரளவுக்குப் பெற்றிருந்தால், அல்லது அத்தகைய புகழைப் பெறுவதற்கு தேவைப்படும் தகுதிகள் உண்மையிலேயே இல்லாதவனாக இருந்தால் மட்டுமே, உண்மையாகவே உயர்ந்த மனிதராக இருக்கும் ஒருவரின் மகத்துவத்தை அங்கீகரிக்க மறுக்கலாம். ஆனால் கடவுள் நம்பிக்கை உடைய ஒருவன், தன் அகங்காரத்தின் காரணமாக அந்த நம்பிக்கையை எப்படி விட்டுவிட முடியும்? இதற்கு இரண்டே வழிகள்தான் உண்டு. அந்த மனிதன் தன்னை கடவுளின் எதிரி என்று சிந்திக்கத் துவங்கியிருக்க வேண்டும்; அல்லது அவன் தன்னைத்தானே கடவுளாக எண்ணத் துவங்கியிருக்க வேண்டும். இந்த இரண்டு வழிகளிலும் அவன் உண்மையான நாத்திகன் ஆகிவிட முடியாது. ஏனெனில், கடவுளின் எதிரி என்று கருதினால், தன் எதிரியான கடவுளின் இருப்பை அவன் ஒப்புக் கொள்கிறான். தானே கடவுள் என்று அவன் எண்ணினால், மறைமுகமான ஒரு சக்தி திரைக்குப் பின்னாலிருந்து இயற்கையின் இயக்கங்களை வழி நடத்துகிறது என்பதை ஒப்புக் கொள்கிறான். ஆக, தானே அந்த எல்லாம் வல்ல சக்தி என்று நம்புகிறானா, அல்லது தான் அல்லாத வேறொரு சக்தி எல்லாவற்றுக்கும் மேலாக இருக்கிறது என்று நம்புகிறானா என்பது நமக்கு முக்கியமல்ல. கடவுள் உண்டு என்ற அடிப்படையான நம்பிக்கை அங்கே இருக்கிறது. எனவே அவன் எவ்விதத்திலும் நாத்திகன் அல்ல.

இப்போது என் விஷயத்தை எடுத்துக் கொள்வோம். நான் மேலே சொன்ன முதல் வகையைச் சேர்ந்தவனும் அல்ல, இரண்டாவது வகையைச் சேர்ந்தவனும் அல்ல. எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளின் இருப்பையே நான் மறுக்கிறேன். ஏன் மறுக்கிறேன் என்பதைப் பற்றிப் பின்னர் விளக்குகிறேன். இங்கே ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். நாத்திகக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ள என்னைத் தூண்டியது அகங்காரம் அல்ல என்பதுதான் அது. நான் கடவுளின் எதிரியும் அல்ல, அவதாரமும் அல்ல, எல்லாம் வல்ல அந்த முழுமுதற் கடவுளும் அல்ல. ஒரு விஷயம் தெளிவாகி விட்டது - அதாவது, நாத்திக சிந்தனைக்கு என்னை இட்டுச் சென்றது அகங்காரம் அல்ல.

இந்தக் குற்றச்சாட்டுகளை மறுப்பதற்கான உண்மைகளைப் பற்றிப் பார்ப்போம். தில்லி வெடிகுண்டு வழக்கு மற்றும் லாகூர் சதி வழக்கு விசாரணைகளால் கிடைத்ததாகக் கருதப்படுகிற, என் தகுதிக்கு மீறிய புகழின் காரணமாக நான் வீண்பெருமை கொண்டவனாகி விட்டேன் என்பது இந்த நண்பர்களின் கருத்து. இவர்களுடைய கருத்து சரிதானா என்று பார்ப்போம். 

என் நாத்திக உணர்வு ஏதோ அண்மையில் ஏற்பட்டது அல்ல. நான் அறியப்படாத இளைஞனாக இருந்தபோதே - அப்படிப்பட்ட இளைஞன் இருந்ததை மேலே குறிப்பிட்ட என் நண்பர்கள் அறிந்திராத காலத்திலேயே - நான் கடவுளை நம்புவதை விட்டு விட்டேன். சாதாரண கல்லூரி மாணவனாக இருக்கிற ஒருவன் தன்னை நாத்திகத்துக்கு இட்டுச் சென்றிருக்கக் கூடிய அளவுக்கு தற்பெருமை பாராட்டுபவனாக இருக்க முடியாது. சில பேராசிரியர்களின் அன்புக்கும், சில பேராசிரியர்களின் வெறுப்புக்கும் ஆளானவனாக இருந்த நான், சுறுசுறுப்பான மாணவனாகவோ அல்லது படிப்பில் ஆர்வம் கொண்டவனாகவோ இருந்ததே இல்லை. அகங்காரத்தில் தலைக்கனம் பிடிக்கும் அளவுக்கு உணர்ச்சியூட்டும் சந்தர்ப்பங்கள் ஏதும் எனக்கு வாய்க்கவில்லை. சொல்லப்போனால், நான் மிகவும் கூச்ச சுபாவமுடைய பையனாக, எதிர்கால வாழ்க்கை பற்றிய நிச்சயமற்றவனாக இருந்தேன்; அந்த நாட்களில் நான் முழுமையான நாத்திகனாக இருக்கவில்லை. என் பாட்டனார் - அவருடைய கவனிப்பில், அவருடைய தாக்கத்துடன்தான் நான் வளர்ந்தேன் - ஆரிய சமாஜத்தில் மிகவும் பிடிப்புள்ளவர். ஒரு ஆரிய சமாஜி எதை ஏற்றுக் கொண்டாலும் சரி, நிச்சயம் நாத்திகத்தை ஏற்பவராக இருக்கவே முடியாது. தொடக்கக் கல்வியை முடித்த பிறகு நான் லாகூரில் டி.ஏ.வி. பள்ளியில் சேர்ந்தேன்; அதன் விடுதியில் முழுதாக ஓராண்டு தங்கியிருந்தேன். அங்கே காலையும், மாலையும் பிரார்த்தனைகள் செய்வது தவிர, மணிக்கணக்கில் காயத்ரி மந்திரத்தை ஜெபித்துக் கொண்டிருப்பேன். அக்காலத்தில் நான் முழுமையான பக்தனாகவே இருந்தேன். பிற்பாடு என் தந்தையுடன் வசிக்கத் துவங்கினேன். மதப்பற்று என்கிற விஷயத்தில் அவர் தாராள மனப்போக்கு உடையவர். அவருடைய அறிவுரைகளின் வாயிலாகத்தான் என் வாழ்க்கையை விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொள்ள முடிவு செய்தேன். ஆயினும் அவர் ஒரு நாத்திகர் அல்லர், உறுதியான கடவுள் நம்பிக்கை கொண்டவர். தினமும் பிரார்த்தனை செய்யுமாறு என்னை உற்சாகப்படுத்துவார். ஆக, இப்படித்தான் நான் வளர்க்கப்பட்டேன். ஒத்துழையாமை இயக்கக் காலத்தில் நான் தேசியக் கல்லூரியில் சேர்ந்தேன். அங்குதான் நான் சுதந்திரமாக சிந்திக்கவும், கடவுள் உள்பட மதம் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கவும் விமர்சிக்கவும் துவங்கினேன். என்றாலும், அப்போதும் நான் கடவுள் நம்பிக்கை உடையவன்தான். அதுவரையில் மத ஆச்சாரப்படி தலைமயிரைக் கத்தரிக்காமல் வளர்த்து வந்தேன் என்றாலும், சீக்கிய மற்றும் பிற மதங்களின் புராணங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் மீது ஒருபோதும் நம்பிக்கை கொள்ள இயலவில்லை. என்றாலும் கடவுள் உண்டு என்பதில் மட்டும் உறுதியான நம்பிக்கை இருந்தது. 

பிறகு நான் புரட்சிக் கட்சியில் சேர்ந்தேன். நான் அதில் சந்தித்த முதல் தலைவர், கடவுள் இல்லை என்று தெளிவுபட நம்பியவர் அல்ல; என்றாலும், கடவுளின் இருப்பை மறுக்கிற அளவுக்கு துணிவுடையவரும் அல்ல. கடவுளைப் பற்றி விடாமல் நான் கேள்வி எழுப்பினால், ``உனக்கு எப்போது விருப்பமோ அப்போது வணங்கு'' என்று அவர் கூறுவது வழக்கம். இந்தப் பதிலில் நாத்திகம் உண்டு என்றாலும், அதை ஒப்புக் கொள்வதற்கான தைரியம் இல்லாத நாத்திகம்தான் இது. இரண்டாவதாக நான் சந்தித்த தலைவர் உறுதியான கடவுள் நம்பிக்கை உடையவர். அவருடைய பெயர் - மரியாதைக்குரிய தோழர் சச்சீந்திர நாத் சன்யால்; காக்கோரி சதி வழக்கில் ஆயுளுக்கும் நாடுகடத்தப்பட்ட தண்டனையை இப்போது அனுபவித்து வருபவர். அவருடைய ஒரே நூலும், புகழ் பெற்ற நூலுமான `அடிமை வாழ்க்கை'  (பந்தி ஜீவன்) என்ற புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே கடவுளின் புகழ் பாடப்பட்டுள்ளது. அருமையான அந்தப் புத்தகத்தின் இரண்டாம் பாகத்தின் கடைசிப் பக்கத்தில் வேதாந்தம் செறிந்த புகழ்மாலைகள் கடவுளுக்கு சூட்டப்பட்டுள்ளன; இவை அவருடைய சிந்தனைகளின் முக்கிய அங்கமாகும். 1925 ஜனவரி 28ஆம் தேதி இந்தியா முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட `புரட்சிப் பிரசுரம்' என்ற துண்டறிக்கை, அரசு வழக்குரைஞர் தரப்பின் கருத்துப்படி கூறினால், சன்யாலின் அறிவுக்கூர்மையின் வெளிப்பாடாகும். எந்தவொரு இரகசியப் பணியிலும் தவிர்க்க முடியாமல் ஏற்படுவது போலவே, இதில் அந்த முன்னணித் தலைவர் தனது சொந்தக் கருத்துகளை - தனக்கு மிகவும் பிடித்தமானவற்றை - வெளியிடுகிறார்; இயக்கத்தின் மற்றவர்களுக்கு அதில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கூட அவற்றை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அந்தப் பிரசுரத்தில் ஒரு பத்தி முழுவதும் எல்லாம் வல்ல இறைவனையும், இறைவனின் திருவிளையாடல்களையும் புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது. அது முழுக்கவும் `மறைபொருள் ரகசியம்'. நான் இங்கே கூற விரும்புவது என்னவென்றால், புரட்சிக் கட்சியில் கடவுள் மறுப்பு என்ற சிந்தனைகூட எழுந்திருக்கவில்லை என்பதுதான். புகழ் பெற்ற காக்கோரி தியாகிகள் நான்கு பேரும் தம் கடைசி நாட்களை பிரார்த்தனையில் கழித்தார்கள். ராம் பிரசாத் பிஸ்மில், ஆர்ய சமாஜத்தில் பற்றுள்ளவர். சோஷலிசம், கம்யூனிசம் ஆகிய துறைகளில் மிகவும் கற்றறிந்தவராக இருந்த ராஜன் லஹரி, உபநிடதங்கள் மற்றும் கீதையின் சுலோகங்களை ஜெபிக்க வேண்டும் என்ற ஆவலை அடக்க முடியாதவராக இருந்தார். அவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே பிரார்த்தனை செய்யாதவராக இருந்தார். ``மனிதனின் பலவீனம், அல்லது வரம்புக்கு உட்பட்ட அறிவால் விளைந்ததுதான் தத்துவம்'' என்பார் அவர். அவரும் இப்போது நாடு கடத்தப்பட்ட ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இருந்தாலும், அவரும்கூட ஒருபோதும் கடவுளின் இருப்பை மறுக்கத் துணியவில்லை.

அந்தக் காலகட்டம் வரை நான் கற்பனைக் கொள்கைகளால் கவரப்பட்ட புரட்சிக்காரனாகத்தான் இருந்தேன். அதுவரை நாங்கள் மற்றவர்களை பின்பற்றுபவர்களாக இருந்தோம். பிறகு முழுப் பொறுப்பையும் சுமக்க வேண்டிய நேரம் வந்து விட்டிருந்தது. சிறிது காலத்திற்குத் தொடர்ந்த, தவிர்க்க முடியாத எதிர் நடவடிக்கைகள் காரணமாக, கட்சி பிழைத்திருப்பதே இயலாத காரியமாகத் தோன்றியது. உத்வேகம் கொண்ட தோழர்கள் - ஏன், தலைவர்கள்கூடஎம்மைப் பார்த்து பரிகசிக்கத் துவங்கினார்கள். எங்கள் திட்டம் பயன் தருமா என்ற சந்தேகம் எனக்கே ஒருநாள் ஏற்பட்டு விடக்கூடும் என்ற அச்சமும் சில நேரங்களில் எனக்கு ஏற்பட்டது உண்டு. அதுதான் என் புரட்சி வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை. ``கற்றுணர்'' என்று என் உள்ளத்தின் ஒவ்வொரு மூலையிலும் ஒரு குரல் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. எதிராளி முன்வைக்கும் வாதங்களை எதிர்கொள்வதற்கு கற்றுணர வேண்டும். உன் நம்பிக்கைக்கு ஆதரவான வாதங்களை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காகக் கற்றுணர வேண்டும். நான் படிக்கத் தொடங்கினேன். என் பழைய நம்பிக்கைகளும் முடிபுகளும் மகத்தான மாற்றத்துக்கு ஆளாயின. எமக்கு முந்தைய புரட்சிக்காரர்களுக்கு வன்முறை வழியின் பால் மட்டுமே பிரதானமான பிடிப்பு இருந்தது; இந்த இடத்தை தீவிர சிந்தனைகள் பிடித்துக் கொண்டன. அதீத சக்திகள் மீதான நம்பிக்கையோ, மூட நம்பிக்கையோ இனியும் இருக்க முடியாது என்று ஆனது. எதார்த்தவாதம் எமது நம்பிக்கை ஆனது. தவிர்க்கவே முடியாத நிலையில் மட்டுமே பலப் பிரயோகத்தை நியாயப்படுத்த முடியும்; மக்கள் இயக்கங்கள் அனைத்துக்கும் அகிம்சை என்பது கொள்கை அளவில் அத்தியாவசியமானது என்று தெளிந்தோம். வழிமுறைகளைப் பொறுத்தவரை இவ்வளவுதான். நாம் எதற்காகப் போராடுகிறோம் என்ற இலக்கு பற்றிய தெளிந்த கருதுகோள்தான் முக்கியமான விஷயம். செயல்பாட்டுக் களத்தில் முக்கியமான நடவடிக்கைகள் ஏதும் இருக்கவில்லை என்பதால் பல்வேறு இலட்சியங்கள் பற்றியும் உலகப் புரட்சியைப் பற்றியும் படிக்க எனக்கு நிறைய வாய்ப்பு கிடைத்தது. அராஜகவாதத் தலைவர் பகூனின் எழுதியதைப் படித்தேன்; கம்யூனிசத்தின் தந்தை மார்க்ஸ் எழுதிய சிலவற்றைப் படித்தேன்; தமது நாட்டில் புரட்சியை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய லெனின், டிராட்ஸ்கி மற்றும் பலரது எழுத்துகளை நிறையப் படித்தேன். அவர்கள் அனைவரும் நாத்திகர்கள்தான். பகூனின் எழுதிய `கடவுளும் அரசும்' (காட் அண்ட் ஸ்டேட்) என்ற நூல் முழுமையானது அல்ல என்றாலும்கூட, இவ்விஷயத்தைப் பற்றிய ஆர்வமூட்டும் நூலாகும். பின்னர் நிர்லம்ப ஸ்வாமி எழுதிய `பொதுப் புத்தி' (காமன் சென்ஸ்) என்ற நூலைப் படித்தேன். அது ஒருவகையான மறைபொருள் நாத்திகவாதம். நாத்திகம் என்பது எனக்கு மிகவும் விருப்பமான ஒரு விஷயமாக ஆகிப்போனது. 1926ஆம் ஆண்டின் முடிவுவாக்கில், இந்த உலகத்தைப் படைத்து, வழிகாட்டி, கட்டுப்படுத்துகிற எல்லாம் வல்ல இறைவனின் இருப்பைப் பற்றிய தத்துவத்தில் சாரம் எதுவுமே இல்லை என்று தெளிந்தேன். கடவுளின்பால் நம்பிக்கை இன்மையை வெளியிட்டேன். இந்த விஷயத்தைப் பற்றி என் நண்பர்களுடன் விவாதங்கள் நடத்தினேன். இப்போது நான் பிரகடனம் செய்யப்பட்ட நாத்திகன் ஆகிவிட்டேன். ஆனால், அது எப்படி நிகழ்ந்தது, நாத்திகம் என்றால் என்ன என்பதைத்தான் இப்போது கீழே பார்க்கப் போகிறோம்.

1927 மே மாதத்தில் நான் கைது செய்யப்பட்டேன். அது ஒரு திடீர் நிகழ்வு. காவல்துறை என்னைத் தேடிக் கொண்டிருக்கிறது என்பதை சிறிதும் அறியாதவனாக இருந்தேன். ஒரு பூங்காவின் வழியாகப் போய்க் கொண்டிருக்கும்போது திடீரென்று காவலர்கள் என்னைச் சுற்றி வளைத்துக் கொண்டார்கள். அப்போது நான் மிகவும் அமைதியாக இருந்தேன் என்பது எனக்கே வியப்புதான். எனக்கு எந்தவித உணர்வோ அல்லது பரபரப்போ ஏற்படவில்லை. முதலில் போலீஸ் காவலில் வைக்கப்பட்டேன். மறுநாள் ரயில்வே போலீஸ் காவலில் வைக்கப்பட்டு முழுமையாக ஒரு மாதம் அங்கே இருந்தேன். காவல்துறை அதிகாரிகளுடன் பல நாட்கள் உரையாடிய பிறகுதான் காக்கோரி சம்பவத்துடனும் புரட்சி இயக்கத்தின் நடவடிக்கைகளுடனும் எனக்கு உள்ள தொடர்பு பற்றி ஏதோ தகவல் அவர்களிடம் இருக்கிறது என்று ஊகம் செய்ய முடிந்தது. காக்கோரி சதி வழக்கு லக்னோவில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது நான் லக்னோ சென்றதாகவும், புரட்சிக்காரர்களை காப்பாற்ற ஏதோ ஒரு திட்டத்தை வகுத்ததாகவும், அவர்களின் ஒப்புதல் கிடைத்த பிறகு நாங்கள் வெடிகுண்டுகளை ஏற்பாடு செய்தோம் என்றும், வெடிகுண்டுகளை பரிசோதிப்பதற்காக 1926ஆம் ஆண்டு தசரா திருவிழாவில் மக்கள் கூட்டத்தின்மீது ஒரு குண்டை வீசினோம் என்றும் அவர்கள் கூறினார்கள். என்னுடைய நன்மைக்காகக் கூறுவதாக அவர்கள் சொன்னார்கள்: புரட்சிக் கட்சியின் நடவடிக்கைகள் பற்றி ஒரு வாக்குமூலம் அளித்தால் நான் சிறையில் வைக்கப்பட மாட்டேன்; அதற்குப் பதிலாக, நீதிமன்றத்தில் அப்ரூவராக சாட்சியம் அளிக்காமலேகூட விடுதலை செய்யப்படுவதோடு உரிய பரிசுகளும் வழங்கப்படும் என்று சொன்னார்கள். அதைக்கேட்டு நான் சிரித்தேன். அது முழுக்கவும் புரட்டுதான். எம்மைப்போன்ற லட்சியங்களைக் கொண்டவர்கள் தமது சொந்த மக்கள் மீது, அப்பாவி மக்கள்மீது வெடிகுண்டை எறிய மாட்டார்கள்.

ஒரு நாள் காலை, புலனாய்வுத்துறையின் அன்றைய கண்காணிப்பாளர் திரு. நியூமேன் என்னிடம் வந்தார். அனுதாபத்துடன் நீண்டநேரம் பேசிய பிறகு, தன்னை மிகவும் வருத்திய செய்தியைக் கூறினார்: அவர்கள் கேட்டபடி நான் வாக்குமூலம் தரத் தவறினால் காக்கோரி வழக்கு தொடர்பாக போர் தொடுக்கும் சதி செய்ததற்காகவும், தசரா வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக கொலைக் குற்றத்துக்காகவும் என்மீது விசாரணை நடத்துவதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியில்லை என்றார். என்னை குற்றவாளி என்று நிரூபித்து தூக்கிலேற்ற போதுமான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும் அவர் கூறினார். அந்த நாட்களில் நான் மிகவும் அப்பாவியாக இருந்தேன் என்றாலும், காவல்துறையினர் தாம் விரும்பியதை நிறைவேற்றி விட முடியும் என்று நம்பினேன். அதே நாளில், நான் இரண்டு நேரமும் இறைவனிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று இன்னும் சில காவல்துறை அதிகாரிகள் எனக்கு அறிவுரைகளை வழங்கினார்கள். நான் இப்போது நாத்திகன். அமைதியும் மகிழ்ச்சியும் நிலவுகிற காலத்தில் மட்டும் நான் நாத்திகன் என்று சொல்லிக் கொள்வதா, அல்லது இப்படிப்பட்ட கடினமான சூழ்நிலைகளிலும் என் கொள்கையை விடாமல் பற்றிக் கொண்டிருப்பதா என்ற கேள்விக்கு நானே முடிவு செய்ய வேண்டும் என விரும்பினேன். மிகுந்த சிந்தனைக்குப் பிறகு, கடவுள்மீது நம்பிக்கை கொள்ளவும், இறைவனைப் பிரார்த்திக்கவும் என்னை நானே தயார் செய்து கொள்ள முடியாது என்ற முடிவுக்கு வந்தேன். இல்லை, அப்படி ஒருபோதும் நான் செய்யவில்லை. அதுதான் உண்மையான சோதனை, அதில் நான் வெற்றி கண்டேன். மற்ற சிலவற்றை காவு கொடுத்துவிட்டு என் உயிரைக் காத்துக் கொள்ளலாம் என்று ஒரு கணப்போதும்கூட நான் விருப்பம் கொண்டதில்லை. ஆக, நான் ஒரு முழு நாத்திகன், நாத்திகனாக ஆனது முதல் அவ்வாறே இருந்து வந்திருக்கிறேன். இந்தப் பரிசோதனையை எதிர் கொள்வது அவ்வளவு எளிதல்ல. ஏதேனும் ஒன்றின் மீதான `நம்பிக்கை', துன்பங்களை எளிதாக்குகிறது, ஏன், அவற்றை மகிழ்ச்சி தருவதாகவும்கூட ஆக்குகிறது. மனிதன் கடவுளில் மிகுந்த ஆறுதலையும் ஆதரவையும் காண முடியும். கடவுள் நம்பிக்கை இல்லை என்றால், மனிதன் தன்னைத்தானே நம்பியிருக்க வேண்டும். கடும் புயலும் சூறாவளியும் சுழன்றடிக்கும்போது ஒருவன் தன் சொந்தக்கால்களின் பலத்தில் மட்டும் நிற்பது என்பது ஒன்றும் சிறுபிள்ளை விளையாட்டு அல்ல. இத்தகைய சோதனையான தருணங்களில் அகங்காரம் - அது இருந்தால் - காற்றில் கரைந்து விடும்; பொதுவான நம்பிக்கைகளை மனிதன் மறுக்கத் துணிய மாட்டான்; அவ்வாறு செய்யத் துணிகிறான் என்றால், அவனிடம் அகங்காரம் என்பதைவிட வேறு வலிமைகள் உள்ளன என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். இதுதான் இப்போதைய என் நிலைமை. தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது ஏற்கெனவே நன்கு தெரிந்ததுதான். ஒரு வாரத்துக்குள் தீர்ப்பு வழங்கப்பட இருக்கிறது. ஒரு இலட்சியத்துக்காக நான் தியாகம் செய்யப்போகிறேன் என்ற ஒரு விஷயத்தைத் தவிர ஆறுதல் தரக்கூடிய விஷயம் வேறு என்ன இருக்கிறது? கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு இந்து, தான் ஒரு மன்னனாக மறுபிறவி எடுப்பதாகக் கற்பனை செய்யலாம்; ஒரு முஸ்லீம் அல்லது கிறித்துவர், தான் அனுபவித்த வேதனைகளுக்கும் செய்த தியாகங்களுக்கும் பிரதிபலனாக சுவர்க்கத்தில் கிடைக்கப்போகும் சுகங்களைப் பற்றிக் கனவு காணலாம். ஆனால் நான் என்ன எதிர்பார்ப்பது? என் கழுத்தில் தூக்குக்கயிறு மாட்டப்பட்டு காலுக்குக் கீழே பலகைகள் நீக்கப்படும் கணம் எப்படிப்பட்டது என்று எனக்குத் தெரியும் - அதுதான் கடைசிக் கணம், இறுதிக் கணமாக இருக்கும். நான் - அல்லது இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வேதாந்த சாத்திரங்களில் கூறப்படுகிற என் ஆன்மா - அங்கே முடிந்து போகும். அதற்கு அப்பால் ஏதுமில்லை. இந்தக் கண்ணோட்டத்துடன் பார்க்கும் தைரியம் எனக்கு இருந்தால், மகத்தான முடிவு ஏதும் இல்லாத போராட்டம் நிறைந்த குறுகிய வாழ்க்கையே ஒரு பரிசுதான். அவ்வளவுதான். 

எந்த சுயநலமும் இன்றி, இந்த வாழ்க்கையில் அல்லது இந்த வாழ்க்கைக்குப் பிறகு பரிசு கிடைக்கும் என்ற ஆவல் ஏதுமின்றி, பற்றுகள் அற்றவனாக என் வாழ்வை சுதந்திரத்திற்காக அர்ப்பணித்திருக்கிறேன்; ஏனெனில், என்னால் வேறு மாதிரியாகச் செய்திருக்கவும் முடியாது. வேறு எதற்காகவும் இன்றி மனிதகுல சேவைக்கும், மனித குலத்தை துன்பங்களிலிருந்து விடுவிக்கவும் மட்டுமே தம்மை அர்ப்பணித்துக் கொள்ளும் இத்தகைய மனப்பாங்கு கொண்ட ஆண்கள்-பெண்களின் எண்ணிக்கை பெருகுகிற நாள்தான் சுதந்திர யுகத்தின் துவக்க நாளாக அமையும். ஆளும் அரசனாக ஆவதற்கோ. இப்பிறப்பில் அல்லது அடுத்த பிறப்பில் வேறு பரிசுகள் கிடைக்கும் என்பதற்காகவோ, அல்லது சுவர்க்கத்தில் கிடைக்கும் சுகங்களுக்காகவோ ஒடுக்குவோரையும் சுரண்டுவோரையும் எதிர்ப்பவர்களாக இல்லாமல், அடிமைத்தனம் என்னும் நுகத்தடியிலிருந்து மனிதகுலத்தை விடுவிக்கவும், சுதந்திரத்தையும் அமைதியையும் நிலைநாட்டவும் தனிநபர்கள் என்ற வகையில் அபாயகரமானதும், உணர்வு என்ற வகையில் உன்னத மானதுமான இந்தப் பாதையை மேற்கொள்வார்கள். அவர்களுடைய இந்த உன்னதமான இலட்சியத்தின் பெருமையை அகங்காரம் என்று தவறாகப் பொருள் கூறலாமா? இப்படிப்பட்ட கடுமையான அவதூறு பேச யாருக்குத் துணிவு உண்டு? அப்படி யாரேனும் இருந்தால் அவன் ஒரு முட்டாள் அல்லது பித்தலாட்டக்காரன் என்றுதான் கூறுவேன். இலட்சியப் போராளிகளின் இதயத்தில் குமுறும் உத்வேகம், எழுச்சி, உன்னத உணர்வுகளின் ஆழத்தை அவன் உணர முடியாது என்பதால் அவனை மன்னித்து விடுவோம். அவனுடைய இதயம் வெறும் தசைப் பிண்டம் போன்றது; சுயநலங்கள் என்னும் படலம் கண்களை மூடியிருப்பதால் அவனுடைய கண்கள் மங்கிப் போனவை. சுயநம்பிக்கை என்பது எப்போதுமே அகங்காரம் என்று பொருள்படக்கூடியதுதான். இது மிகவும் வேதனையும் வருத்தமும் தருவது, என்றாலும் வேறு வழியில்லை.

வழக்கத்தில் உள்ள ஒரு நம்பிக்கையை நீங்கள் எதிர்த்துப் பாருங்கள்; விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் என்றும், தவறேதும் செய்ய முடியாதவர் என்றும் பொதுவாக நம்பப்படுகிற ஒரு தலைவரை விமர்சனம் செய்து பாருங்கள் - உங்கள் வாதத்தின் வலிமை, நீங்கள் வீண்பெருமை பேசுபவர் என்று பொதுமக்கள் கூறும்படி செய்து விடும். சிந்தனைத் தேக்கம்தான் இதற்குக் காரணம். விமர்சனமும், சுதந்திரமான சிந்தனையும் ஒரு புரட்சிக்காரனிடமிருந்து பிரிக்க முடியாத இரண்டு குணங்கள். மகாத்மா காந்தி பெரிய மனிதர் என்பதால் யாரும் அவரை விமர்சனம் செய்யக் கூடாது; அவர் மேலே உயர்ந்து விட்டார் என்பதால் அரசியல் அல்லது மதமாக இருந்தாலும், பொருளாதாரம் அல்லது அறம் என்றாலும் - அவர் சொல்வதுதான் சரி. அவருடைய கருத்தை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களோ, இல்லையோ, ``ஆமாம், அது சரிதான்'' என்று நீங்கள் கூற வேண்டும். இத்தகைய மனப்போக்கு முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லாது. சொல்லப்போனால் இது மிகப் பிற்போக்குச் சிந்தனை.

அனைத்துக்கும் மேலான ஒன்றில் - எல்லாம் வல்ல இறைவனில் நமது முன்னோர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதால், அந்த நம்பிக்கையை அல்லது அந்த அனைத்துக்கும் மேலான ஒன்றின் இருப்பை எவரேனும் எதிர்க்கத் துணிந்தால் அவன் மதத் துரோகி என்று கூறப்படுவான். அவனுடைய வாதம், எதிர்வாதங்களால் தகர்க்க முடியாத அளவுக்கு வலுவாக இருந்தால், எல்லாம் வல்லவனின் கோபத்துக்கு ஆளாகி கெட்டழிந்து போவான் என்ற அச்சுறுத்தலுக்குப் பயப்படாத அளவுக்கு அவனுடைய ஊக்கம் திடமாக இருந்தால், அவன் வீண்பெருமை பேசுபவன் என்று கூறப்படுவான். அவனுடைய ஊக்க உணர்வு அகங்காரம் என்று இகழப்படும். அப்படியானால், பயனற்ற இந்த விவாதத்தில் எதற்காக நேரத்தை வீணடிக்க வேண்டும்? எதற்காக இதை விவாதிக்க வேண்டும்? இந்தக் கேள்வி மக்கள் முன்னால் முதன்முறையாக வந்திருக்கிறது; முதன்முறையாக உள்ளது உள்ளபடி கையாளப்படுகிறது; அதனால்தான் இவ்வளவு நீண்ட விவாதம் தேவைப்படுகிறது.

முதல் கேள்வியைப் பொறுத்தவரை, என்னை நாத்திகத்திற்கு இட்டுச்சென்றது அகங்காரம் அல்ல என்பதை தெளிவாக்கி விட்டேன் என்று நம்புகிறேன். நான் முன்வைத்த வாதம் ஏற்கத் தக்கதா இல்லையா என்பதை வாசகர்கள்தான் முடிவு செய்ய வேண்டும், நான் அல்ல. தற்போதைய சூழ்நிலையில், கடவுளின்மீது நான் நம்பிக்கை கொண்டிருந்தால் வாழ்க்கை இன்னும் எளிதாக இருந்திருக்கும், என் சுமை குறைந்திருக்கும்; இறைவனின்மீதான என் நம்பிக்கையின்மை, சூழலை வறண்டதாக்கி விட்டது, நிலைமை இன்னும் கடுமையாகும் என்பதை நான் அறிவேன். சிறிதே இறையுணர்வு இருந்தால் வாழ்க்கை கவிதைநயம் உடையதாக ஆகும். ஆனால் என் விதியை சந்திக்க எந்த போதையின் உதவியையும் நான் விரும்பவில்லை. நான் ஒரு எதார்த்தவாதி. எனக்குள் எழுகிற தூண்டலை பகுத்தறிவின் துணை கொண்டு தீர்க்க முயன்று வந்திருக்கிறேன். இதில் எல்லா நேரங்களிலும் நான் வெற்றி கண்டதாகச் சொல்ல முடியாது. இருப்பினும், தொடர்ந்து முயற்சி செய்வது மனிதனின் கடமை; வெற்றி கிடைப்பது சந்தர்ப்பங்களையும் சூழ்நிலைகளையும் பொறுத்தது.

இரண்டாவது கேள்விக்கு வருவோம்; அகங்காரம் இல்லை என்றான பிறகு, கடவுளின் இருப்பு பற்றிய பழமையான, இப்போதும் வழக்கத்திலிருக்கிற நம்பிக்கையை மறுப்பதற்கு வேறேதோ காரணம் இருக்க வேண்டும். ஆம், காரணம் இருக்கிறது. பகுத்தறியும் ஆற்றல் சிறிதேனும் உள்ள ஒரு மனிதன், தன் சூழலின் காரண காரியத்தை அலச எப்போதும் முயற்சி செய்வான் என்பது என் கருத்து. நேரடி சாட்சியங்கள் எங்கே இல்லையோ, அந்த முக்கியமான இடத்தை தத்துவங்கள் பிடித்துக் கொள்கின்றன. நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போல, `தத்துவம் என்பது மனித பலவீனத்தின் விளைவு' என்று என் புரட்சிக்கார நண்பர் ஒருவர் கூறுவது வழக்கம். நம் முன்னோர்கள் இந்த உலகத்தின் கடந்த கால, நிகழ்கால, எதிர் கால மர்மங்களை விளக்கவும், ஏன், எதனால் என்ற கேள்விகளை எழுப்புவதற்கும் போதிய நேரம் இருந்த போது நேரடியான சாட்சியங்கள் இல்லாத பட்சத்தில் அவரவர் தத்தம் வழிகளில் பிரச்சினையைத் தீர்க்க முனைந்தனர். அதனால்தான் பல்வேறு மதப்பிரிவுகளுக்கிடையே மிகுந்த வேறுபாடுகளை நாம் காண்கிறோம்; இந்த வேறுபாடுகள் சில நேரங்களில் முரண்களாகவும் மோதல்களாகவும் வடிவம் கொள்வதைக் காண்கிறோம். கீழை மற்றும் மேலைத் தத்துவங்கள் வேறுபடுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வட்டத்துக்குள்ளும் இருக்கிற வெவ்வேறு சிந்தனைப் பள்ளிகளுக்கு இடையிலும்கூட வேறுபாடுகள் உள்ளன. கிழக்கத்திய மதங்களில் இஸ்லாமிய நம்பிக்கை இந்து நம்பிக்கையுடன் சிறிதும் இணைவதில்லை. இந்தியாவில் கூட புத்த மதமும் ஜைன மதமும் சில வேளைகளில் பிராமணியத்திலிருந்து மிகவும் வேறுபடுகின்றன; பிராமணியத்திலும்கூட ஆரிய சமாஜம், சனாதன தர்மம் என முரண்படும் நம்பிக்கைகள் நிலவுகின்றன. சார்வாகனர் கடந்த காலத்தின் சுதந்திரச் சிந்தனை யாளராக இருக்கிறார். பண்டைக் காலத்திலேயே அவர் கடவுளின் அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கினார். இந்த எல்லாப் பிரிவுகளும் அடிப்படைக் கேள்வியில் ஒன்றிலிருந்து மற்றொன்று வேறுபட்டு நிற்கின்றன, ஒவ்வொருவரும் தமது வழியே சரியானது என்று நினைக்கிறார்கள். இதுதான் நமது துரதிர்ஷ்டம். அறியாமைக்கு எதிரான நமது போராட்டத்திற்கும், இந்த மர்மப் பிரச்சினைக்குத் தீர்வு காணவும் பண்டைய சிந்தனையாளர்களின், ஞானிகளின் பரிசோதனைகளையும் வெளிப்பாடுகளையும் பயன்படுத்தாமல் நாம் சோம்பேறித்தனமாக இருந்து கொண்டு மத நம்பிக்கை என்று கூச்சலிடுகிறோம்; அவர்களுடைய கருத்துக்கு ஒத்துப்போகாத நம்பிக்கையைக் கொள்கிறோம்; அதனால் மனித முன்னேற்றத்தில் தேக்கத்தை ஏற்படுத்திய குற்றத்தைச் செய்கிறோம்.

முன்னேற்றத்தை விரும்பும் எந்தவொரு மனிதனும் பண்டைய நம்பிக்கையின் ஒவ்வொரு அம்சத்தையும் விமர்சனம் செய்யவும் கேள்விக்கு உள்ளாக்கவும் வேண்டும். நிலவுகிற நம்பிக்கையின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் பகுத்தாய்வதற்காக ஒவ்வொரு அம்சமாக அவன் அலச வேண்டும். போதுமான அளவுக்குப் பகுத்தாய்ந்த பிறகு ஒருவன் ஏதேனுமொரு கொள்கை அல்லது தத்துவத்தை நம்ப முன்வந்தால். அவனுடைய நம்பிக்கை வரவேற்கப்படுகிறது. அவனுடைய பகுப்பாய்வு தவறானதாக, குறையுடையதாக. தவறான திசைவழியிலானதாக, சில நேரங்களில் பொய் மயக்கமாக இருக்கலாம். இருப்பினும், பகுத்தறிவே அவன் வாழ்வில் வழிகாட்டும் நட்சத்திரமாக இருப்பதால் அவன் திருத்திக்கொள்ள வாய்ப்பு உண்டு. ஆனால் வெற்று நம்பிக்கையும் குருட்டு நம்பிக்கையும் ஆபத்தானது: அது மூளையை மந்தமாக்குகிறது, மனிதனை பிற்போக்குவாதியாக ஆக்குகிறது. எதார்த்த வாதி என்று சொல்லிக் கொள்ளும் ஒரு மனிதன் பண்டைய நம்பிக்கையை முற்றிலுமாக கேள்விக்கு உள்ளாக்க வேண்டும். பகுப்பாய்வின் முன் அந்த நம்பிக்கை நிலைத்து நிற்க இயலாதபோது அது நொறுங்கி விடும். அப்போது அவன் செய்ய வேண்டிய முதல் வேலை அதை முழுக்கவும் தகர்த்து விட்டு புதிய தத்துவத்தைக் கட்டமைப்பதற்காக இடம் ஏற்படுத்துவது தான். இது அழிப்பு வேலை; அதற்குப் பிறகு ஆக்க வேலை தொடங்குகிறது இதில் சில நேரங்களில் பழைய நம்பிக்கையின் சில இடிபாடுகளையும் மறுகட்டுமானப் பணிக்காகப் பயன்படுத்தலாம். என்னைப் பொறுத்த வரை, இந்த அம்சத்தைப் பற்றி நான் அதிகம் கற்றறிய இயலவில்லை என்பதை முதலில் ஒப்புக் கொள்கிறேன். கீழைத் தத்துவத்தைக் கற்க எனக்கு பெருத்த ஆர்வம் உண்டு; ஆனால் அதற்கேற்ற வாய்ப்போ சந்தர்ப்பமோ எனக்குக் கிட்டவில்லை. எனினும் இப்போது விவாதித்துக் கொண்டிருக்கும் அழித்தல் பற்றிய விஷயத்தில், பழைய நம்பிக்கையின் வலிமையை கேள்வி கேட்கும் அளவுக்கு நான் தெளிவு பெற்றிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன். இயற்கையின் அசைவுகளை வழிகாட்டி இயக்குகிற அனைத்துக்கும் மேற்பட்ட சக்தி எதுவும் இல்லை என்கிற அளவுக்கு நான் தெளிவாக இருக்கிறேன். நாம் இயற்கையை நம்புகிறோம்; இயற்கை நமக்காகப் பணியாற்றும்படி அதை ஆதிக்கம் செலுத்துவதில்தான் முற்போக்கு இயக்கம் முழுவதும் நாட்டம் கொண்டுள்ளது. அதன் பின்னாலிருந்து இயக்கும் அரூப சக்தி எதுவும் அதற்குக் கிடையாது. இதுதான் எங்கள் தத்துவம். 

பாதகமான பக்கத்தைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கையாளர்களிடம் சில கேள்விகள் கேட்கிறோம்:

(1) ஒருவேளை நீங்கள் நம்புவதுபோல, அங்கிங்கு எனாதபடி எங்கும் நிறைந்திருக்கிற, எல்லாவற்றுக்கும் மேலான, எல்லாம் வல்ல, எல்லாம் அறிந்த இறைவன் உண்டு என்றால், இந்த பூமி அல்லது உலகத்தைப் படைத்தது யார்? அதைப் படைத்தது எதற்காக என்று தயவுசெய்து சொல்லுங்கள். துன்பங்களும் துயரங்களும், முடிவே இல்லாத எண்ணற்ற துயரச் சம்பவங்களும் நிறைந்த, உலகத்தில் உள்ள ஒரேயொரு மனிதன்கூட முழுக்கவும் திருப்தியடைய இயலாத உலகம் இது.

அதுதான் கடவுளின் சட்டம் என்று சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்; இறைவன் சட்டத்திற்குக் கட்டுப்பட்டவன் என்றால், அவன் அனைத்திற்கும் மேலானவனாக இருக்க முடியாது; அவனும் நம்மைப் போலவே ஒரு அடிமைதான். அவனுடைய மகிழ்ச்சிக்கான திருவிளையாடல் என்று தயவுசெய்து கூறாதீர்கள்; நீரோ மன்னன் ஒரு ரோம் நகரை எரித்தான். அவன் கொன்றது எண்ணிக்கையில் அடங்கக்கூடிய அளவு மக்களைத்தான். சில துயரச் சம்பவங்களை நிகழ்த்தினான். எல்லாம் அவனுடைய மகிழ்ச்சிக்காக. ஆனால் வரலாற்றில் அவனுடைய இடம் எது? வரலாற்று ஆய்வாளர்கள் அவனை என்ன பெயர் சொல்லி அழைக்கிறார்கள்? இருக்கிற வசைச் சொற்கள் அனைத்தும் அவன்மேல் பொழியப்படுகின்றன. அவன் கொடுமைக்காரன், இதயமற்றவன், வெறிபிடித்தவன் என்ற வசைச் சொற்களால் வரலாற்று நூல்களின் பக்கங்கள் எல்லாம் கறைபடிந்துள்ளன. ஒரு செங்கிஸ் கான் தன் மகிழ்ச்சிக்காக சில ஆயிரம் உயிர்களை பலி கொடுத்தான்; நாம் அவன் பெயரையே வெறுக்கிறோம். இப்படி இருக்கையில், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொரு நொடியும் எண்ணற்ற துன்பங்களை ஏற்படுத்தி வந்திருக்கிற, இப்போதும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிற உங்களுடைய அந்த எல்லாம் வல்லானை, நிலைபேறுடைய நீரோவை எவ்வாறு நியாயப்படுத்தப் போகிறோம்? செங்கிஸ்கான் செய்ததை விட அதிகமாக ஒவ்வொரு கணமும் செய்கிற கொடுமைகளை ஆதரிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் நினைக்கிறீர்கள்? நரகம் என்ற பெயருக்கேற்ப எப்போதும் துன்பங்கள் நிலவுகிற இந்த உலகத்தை அவன் எதற்காகப் படைத்தான் என்று நான் கேட்கிறேன். இதெல்லாம் எப்படி நியாயமாகும்? துன்பப்படும் அப்பாவிகள் அடுத்த பிறப்பில் அதற்கான பரிசு பெறுவார்கள், தவறு செய்தவர்கள் அடுத்த பிறப்பில் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறுகிறீர்களா? சரி, இந்தப் பிறப்பில் உங்கள் உடலில் காயத்தை ஏற்படுத்தியவன் அடுத்த பிறப்பில் அதன்மீது மருந்தைத் தடவுவான் என்பதை எந்த அளவுக்கு நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள்? கிளேடியேட்டர் காட்சிகளை நிகழ்த்திக் காட்டியவர்களும் அதன் ஆதரவாளர்களும் பசியோடு இருக்கிற சிங்கங்களின் முன்னால் மனிதர்களை வீசினார்கள்; அந்த விலங்குகளிடமிருந்து அவர்கள் தப்பி வந்தால் அவர்களை நன்றாகக் கவனித்து ஆதரவு அளிப்போம் என்றார்கள்; இதை எந்த அளவுக்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள்? அதனால்தான் நான் கேட்கிறேன்: ``அனைத்துக்கும் மேலான அந்தக் கடவுள் எதற்காக உலகையும் அதில் மனிதனையும் படைத்தான்? உல்லாசத்துக்காகவா? அப்படியானால் அவனுக்கும் நீரோவுக்கும் என்ன வித்தியாசம்?''

முகமதியர்களையும் கிறித்துவர்களையும் கேட்கிறேன்: மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு இந்து மதத்திலாவது வேறொரு பதில் வாதம் இருக்கிறது; உங்களுடைய பதில் என்ன? முற்பிறப்பில் உங்களுக்கு நம்பிக்கை கிடையாது. ஏதுமறியாத அப்பாவிகளின் துன்பங்களுக்கு முற்பிறப்பின் பாவங்கள்தான் காரணம் என்று இந்துக்களைப்போல நீங்கள் வாதம் புரிய முடியாது. எல்லாம் வல்லவன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உலகமாகப் படைத்து விட்டு `எல்லாம் நன்றாக இருக்கிறது' என்று சொல்வதற்காக எதற்காக ஆறுநாட்கள் உழைக்க வேண்டும் என்று கேட்கிறேன். அவனிடம் கடந்த கால வரலாற்றைக் காட்டுங்கள். இப்போதைய நிலைமையையும் பார்க்கச் சொல்லுங்கள். அப்போது பார்ப்போம் ``எல்லாம் நன்றாக இருக்கிறது'' என்று அவன் சொல்லத் துணிவானா என்று.

சிறைக் கொட்டடிகளிலிருந்தும், சேரிகள், குடிசைகளில் பட்டினி கிடக்கும் கோடிக்கணக்கான மனிதர்களிடமிருந்தும், சுரண்டப்படும் உழைப்பாளிகளிடமிருந்தும் அவர்களுடைய இரத்தம் முதலாளித்துவக் காட்டேரிகளால் உறிஞ்சப்படுகிறது; சராசரி அறிவுடைய சாதாரண மனிதனையேகூட அதிர்ச்சியும் நடுக்கமும் ஏற்படுத்தக்கூடிய வகையில் மனித ஆற்றல் வீணடிக்கப் படுகிறது; உபரி உற்பத்தி, பட்டினியால் வாடுகிற தேவைப்படும் மக்களுக்கு அளிப்பதை விடுத்து கடலில் கொட்டப்படுகிறது; மனிதர்களின் எலும்புகளை அஸ்திவாரமாகக் கொண்டு அரசர்களின் மாளிகைகள் கட்டப்படுகின்றன... இதை எல்லாம் பொறுமையாக அல்ல அல்ல, உணர்ச்சியற்று பார்த்துக் கொண்டிருக்கிற கடவுள் சொல்லட்டும் ``எல்லாம் நன்றாகவே இருக்கிறது'' என்று. ஏன், எதற்காக என்பதே என் கேள்வி. உங்களிடம் பதில் இல்லை அல்லவா. சரி, இதற்குப் பதில் சொல்லுங்கள். இந்துக்களே, நீங்கள் சொல்கிறீர்கள் இன்று துன்பப்படுபவர்கள் எல்லாம் முந்தைய பிறவியில் பாவம் செய்தவர்கள் என்று. சரி. இன்றைய ஒடுக்குமுறைக் காரர்கள் எல்லாம் முந்தைய பிறவிகளில் துறவிகளாக இருந்தவர்கள். அதனால் இப்போது அதிகாரத்தை அனுபவிக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள்; அப்படி யானால் உங்கள் முன்னோர்கள் மிகவும் புத்திசாலிகள் என்று நம்புகிறேன். பகுத்தறிவும் அவநம்பிக்கையும் செய்கிற எல்லா முயற்சிகளையும் உடைத்தெறியும் அளவுக்கு உறுதியான கோட்பாடுகளைக் கண்டறிய அவர்கள் முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால் இந்த வாதம் எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்கும் என்று பார்ப்போம்.

புகழ்பெற்ற நீதிவல்லுநர்களின் கருத்துப்படி, குற்றம் செய்தவர்களுக்கான தண்டனை என்பதை மூன்று அல்லது நான்கு வழிகளில் நியாயப்படுத்தலாம். குற்றத்துக்குப் பதிலடி கொடுத்தல். சீர்திருத்தல். அச்சத்தை ஏற்படுத்தித் தடுத்தல். இவற்றில், பதிலுக்குப் பதில் தண்டனை என்பது முற்போக்கான சிந்தனை யாளர்கள் அனைவராலும் கண்டிக்கப்படுகிறது. அச்சத்தை ஏற்படுத்தித் தடுத்தல் என்பதும் அவ்வாறே. சீர்திருத்தல் கோட்பாடு ஒன்று மட்டுமே அவசிய மானது, மனித முன்னேற்றத்தில் இன்றியமையாதது, குற்றம் செய்தவனை திறமைசாலியாகவும், அமைதியை விரும்பும் குடிமகனாகவும் ஆக்கி சமுதாயத்திற்கு திருப்பி அனுப்புவதை நோக்கமாகக் கொண்டது. ஆனால். மனிதர்கள் குற்றம் செய்தார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கடவுள் வழங்குகிற தண்டனையின் தன்மை எப்படிப்பட்டது? அவர்களை மாடாக, எலியாக, மரமாக, ஆடாக அல்லது விலங்காகப் பிறக்க வைத்து அனுப்புகிறார் கடவுள் என்று நீங்கள் கூறுகிறீர்கள். இப்படி 84 லட்சம் தண்டனைகள் உள்ளன என்றும் நீங்கள் பட்டியல் போடுகிறீர்கள். இப்படிப் பட்ட தண்டனையில் மனிதனைச் சீர்திருத்துவதில் என்ன பயன் ஏற்பட்டுள்ளது என்று கேட்கிறேன். `தான் செய்த பாவத்துக்காக முந்தைய பிறப்பில் கழுதையாகப் பிறந்தேன்' என்று சொல்கிற எத்தனை பேரை நீங்கள் சந்தித்திருக்கிறீர்கள்? ஒருவரும் இல்லை. உங்கள் புராணங்களை இங்கே மேற்கோள் காட்டாதீர்கள். உங்கள் கற்பனைப் புராணங்களைத் தொடுகிற அளவுக்கு இங்கே எனக்கு இடமில்லை. மேலும், ஏழையாக இருப்பதுதான் மிகப்பெரிய பாவம் என்று நீங்கள் அறிவீர்களா? ஏழ்மை ஒரு பாவம், அது ஒரு தண்டனை. குற்றவியல் வல்லுநர், நீதி வல்லுநர், அல்லது சட்டத்தை வகுப்பவர், இத்தகைய தண்டனைகள் ஒரு மனிதனை மேலும் குற்றங்கள் செய்யத்தான் தூண்டும் என்று கூறினால் அதை எந்த அளவுக்கு உங்களால் ஏற்க முடியும்? இதைப்பற்றி உங்கள் கடவுள் சிந்திக்கவே இல்லையா? அல்லது மனிதர்களுக்கு சொல்ல வொணாத் துன்பங்களை ஏற்படுத்தி, அவற்றின் அனுபவத்தின் மூலம் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில்தான் கடவுள் இருக்கிறாரா? அருந்ததியர் அல்லது தெருக் கூட்டுபவர் போன்ற ஏழையான, படிப்பறிவற்ற ஒரு வீட்டில் பிறந்தவனின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? அவன் ஏழை, அதனால் கல்வி கற்க இயலாது. உயர் வகுப்புக் குடும்பத்தில் பிறந்தவர்கள் என்பதால் அவனை விட உயர்ந்தவர்கள் என்று கருதிக் கொள்கிற சக மனிதர்களால் அவன் வெறுக்கப்படுகிறான், விரட்டப் படுகிறான். அவன் மீதான புறக்கணிப்பும், ஏழ்மையும், சமூகத்தால் அவன் நடத்தப்படும் விதமும் சேர்ந்து அவன் மனதை இரும்பாக்கி விடும், சமுதாயத்தின்பால் அக்கறை அற்றவனாக்கி விடும். அவன் ஒரு குற்றம் செய்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதற்கு யார் பொறுப்பு? கடவுளா, அவனா, அல்லது சமூகத்தில் கற்றறிந்தவர்கள் என்று கூறிக் கொள்பவர்களா? வேதங்கள் என்னும் உங்கள் புனித நூல்களின் சில வாசகங்களைக் காதில் கேட்டு விட்டார்கள் என்பதற் காக காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்ற தண்டனைக்கு யார் பொறுப்பு? மமதையும் சுயநலமும் கொண்ட பிராமணர்களால் திட்டமிட்டே அறியாமையில் மூழ்கிக்கிடக்கும்படி தண்டனை அளிக்கப்பட்டுள்ளதற்கு யார் பொறுப்பு? அவர்கள் ஏதேனும் குற்றம் செய்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம்; அவர்களுக்கு யார் பொறுப்பு? யார் தண்டனையை ஏற்பது? நண்பர்களே, இந்தக் கோட்பாடுகள் எல்லாம் தனியுரிமை கொண்டவர் களின் கண்டுபிடிப்புகள் அவர்கள் தாமே கையில் எடுத்துக் கொண்ட அதிகாரம், செல்வம், ஆதிக்கம் இவற்றை நியாயப்படுத்த இந்தக் கோட்பாடுகள் அவர்களுக்கு உதவியாக நிற்கின்றன. அப்டன் சின்கிளேர் என்பவர்தான் இதை எழுதினார் என்று நினைக்கிறேன் `ஒரு மனிதனை நிலைபேற்றின்மீது நம்பிக்கை ஏற்படுத்தி விடுங்கள் போதும், அப்புறம் அவனுடைய செல்வம், உடைமை அனைத்தையும் கொள்ளையடித்துக் கொள்ளலாம். அவன் சிறிதும் எதிர்ப்புணர்ச்சியின்றி உங்களுக்கு உதவிகூடச் செய்வான்.' மதப் பிரச்சாரம் செய்பவர்களையும் அதிகாரத்தை வைத்திருப்பவர் களையும் கொண்ட கூட்டணிதான் சிறைகளையும் தூக்குமேடைகளையும், கசைகளையும் இந்தக் கோட்பாடுகளையும் உருவாக்கியது.

எல்லாம் வல்லவனான உங்கள் கடவுள், ஒரு மனிதன் பாவமோ குற்றமோ செய்யும்போதே ஏன் தடுப்பதில்லை என்று கேட்கிறேன். எல்லாம் வல்லவன் அதை எளிதாகச் செய்து விடலாமே? மாபெரும் போர்களை நடத்தும் படைத் தளபதிகளைக் கொன்றோ அல்லது அவர்களுடைய உள்ளத்தில் இருக்கும் போர் வெறியைக் கொன்றோ மனிதகுலத்தின் தலையில் விடியும் பேரழிவுகளைத் தவிர்க்கலாமே? இந்தியாவை விடுதலை செய்யும்படி ஆங்கிலேயர்களின் மனங்களில் அவன் நல்லுணர்வை ஏன் ஏற்படுத்தக்கூடாது? உற்பத்திச்சாதனங்களை எல்லாம் தம் உடைமையாக வைத்துக்கொண்டு உழைக்கும் வர்க்கம் முழுவதையும் அல்ல அல்ல, மனித சமுதாயம் முழுவதையும் முதலாளித்துவத்தின் அடிமைகளாக வைத்திருக்கும் முதலாளிகள் தமது உடைமைகளைத் துறக்கும்படி அவர்களின் மனங்களில் தயாளப் பண்பை கடவுள் ஏன் புகுத்தவில்லை? சமத்துவக் கோட்பாடு நடைமுறைக்கு உகந்தததுதானா என்று பகுத்தறிய விரும்புகிறீர்களா? அதைச் செயல்படுத்தும் வேலையை எல்லாம் வல்ல உங்கள் கடவுளிடமே விட்டு விடுகிறேன். பொது நலன் என்ற அளவில் சமத்துவக் கொள்கை சரியானது என்பதை மக்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் நடைமுறைப்படுத்த இயலுமா என்ற போர்வையில் அதை எதிர்க்கிறார்கள். எல்லாம் வல்லவன் இதில் தலையிட்டு, அனைத்தையும் முறையாக ஒழுங்கு படுத்தட்டுமே? இப்போது நீங்கள் தலையைச் சுற்றி மூக்கைப் பிடிக்கும் வாதங்களில் இறங்க முயற்சி செய்யாதீர்கள், அவையெல்லாம் காலம் கடந்தவை. ஆங்கிலேயர் ஆட்சி இங்கே இருக்கிறது என்றால் அது கடவுளின் விருப்பத்தால் அல்ல; அவர்களிடம் அதிகாரம் இருக்கிறது, நாம் அதை எதிர்க்கத் துணியவில்லை என்பதால்தான். ஆங்கிலேயர் நம்மை அடக்கி ஒடுக்குகிறார்கள் என்றால் அது கடவுளின் உதவியால் அல்ல; அவர்களிடம்இருக்கும் துப்பாக்கிகள், வெடிகுண்டுகள், ஆயுதங்கள், காவலர்கள், இராணுவம் ஆகியவற்றின் உதவியாலும், ஒரு நாடு இன்னொரு நாட்டைச் சுரண்டுகிற சமுதாயத்திற்கு எதிரான படுமோசமான பாவத்தைச் செய்கிறஅவர்களைப் பற்றி நாம் உணர்ச்சியற்றவர்களாக இருப்பதாலும்தான்; கடவுளின் உதவியால் அல்ல. கடவுள் எங்கே? அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்? மனித இனத்தின் அத்தனை துன்பங்களையும் அவன் பார்த்து மகிழ்ந்து கொண்டிருக்கிறானா? அவன் என்ன நீரோவா? அல்லது செங்கிஸ்கானா? அப்படிப்பட்ட கடவுள் ஒழிந்து போகட்டும்.

இந்த உலகம் எப்படி உருவானது, மனிதன் உருவானது எப்படி என்று கேட்கிறீர்களா? சரி, சொல்கிறேன். இந்த விஷயத்தைப் பற்றி சார்லஸ் டார்வின் சற்றே விளக்கமளிக்க முயற்சி செய்திருக்கிறார். அதைப் படித்துப்பாருங்கள். சோஹம் ஸ்வாமி எழுதிய `பொதுப் புத்தி' (காமன் சென்ஸ்) என்ற நூலைப் படியுங்கள். இது உங்கள் கேள்விக்கு ஓரளவு விடை தரும். உலகம் இயற்கையின் உருவாக்கம். நெபுலா என்று அழைக்கப்படும் வெவ்வேறான கூறுகள் தற்செயலாகச் சேர்ந்ததால் ஏற்பட்டது இந்த உலகம். எப்போது நிகழ்ந்தது என்று அறிய வரலாற்றைப் படியுங்கள். இயற்கையின் இதே இயக்கம்தான் விலங்குகளையும், பினனர் கால ஓட்டத்தில் மனிதனையும் பிறப்பித்தது. டார்வின் எழுதிய `உயிரினங்களின் தோற்றம்' (ஆரிஜின் ஆப் ஸ்பெசிஸ்) நூலைப் படியுங்கள். பிற்பாடு ஏற்பட்ட முன்னேற்றங்கள் எல்லாமே மனிதனுக்கும் இயற்கைக்கும் ஏற்பட்ட முரண்களால், இயற்கையை வசப்படுத்த மனிதன் மேற்கொண்ட முயற்சிகளால் விளைந்தவைதான். இதுவே உலகத் தோற்றம் பற்றிய கருத்தின் சுருக்கமான விளக்கம்.

முந்தைய பிறப்பின் பலன் அல்ல என்றால், ஒரு குழந்தை பார்வையிழந்தோ அல்லது முடமாகவோ பிறப்பது ஏன் என்று கேட்பீர்கள். இதற்கு உயிரியல்தான் காரணம் என்று உயிரியல் வல்லுநர்கள் ஏற்கெனவே விளக்கி விட்டார்கள். இதன் முழுப் பொறுப்பும் பெற்றோர்கள்தான் என்று கூறுகிறார்கள் அவர்கள்; பெற்றோர் அறிந்தோ அறியாமலோ செய்யும் செயல் களின் விளைவாகத்தான் குழந்தை பிறப்பதற்கு முன்பே ஊனம் ஏற்படுகிறது.

நீங்கள் இன்னொரு கேள்வியும் எழுப்பலாம் - அது குழந்தைத்தனமான கேள்வியாக இருந்தாலும் சரிதான். கடவுள் இல்லை என்றால், மக்கள் எப்படி கடவுளை நம்பத் துவங்கினார்கள்? இதற்கான என் பதில் சுருக்கமானது, தெளிவானது எப்படி பேய்களையும் பிசாசுகளையும் நம்பத் துவங்கினார்களோ அப்படியே தான்; இதில் ஒரே ஒரு வேறுபாடு என்னவென்றால், கடவுள் நம்பிக்கை என்பது உலகம் முழுக்கவும் நிலவுகிறது, கடவுள் நம்பிக்கைத் தத்துவம் நன்றாக வேரூன்றி விட்டது. அனைத்துக்கும் மேலான ஒரு சக்தி என்று உபதேசம் செய்து, மக்கள்மீது தம் அதிகாரத்தை செலுத்துவதற்கான தனியுரிமையை கடவுளிடமிருந்து தாம் பெற்றிருப்பதாகக் கூறி மக்களை அடக்கி ஒடுக்க விரும்பும் சுரண்டல்காரர்கள்தான் கடவுள் என்ற சிந்தனை தோன்றியதற்குக் காரணம் என்று சில புரட்சிக்காரர்கள் கூறுவது போல நான் கூற மாட்டேன். அதே சமயத்தில், எல்லா மதங்களும், நம்பிக்கைகளும், மதப்பிரிவுகளும், இதர அமைப்புகளும் காலப் போக்கில் சுரண்டும் அமைப்புகள், மனிதர்கள், இனங்களின் ஆதரவாளர்களாக ஆகி விட்டார்கள் என்ற அடிப்படை உண்மையில் அவர்களுடன் எனக்கு கருத்து வேறுபாடு ஏதுமில்லை. அரசனுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்வது எப்போதுமே அனைத்து மதங்களிலும் பாவமாகக் கருதப்படுகிறது.

கடவுளின் தோற்றம் என்பதைப் பொறுத்தவரை என் சொந்தக் கருத்து இதுதான் - மனிதன் ஒரு வரம்புக்கு உட்பட்டவன்தான் என்று புரிந்த பிறகு, மனிதனின் பலவீனங்களையும் குறைகளையும் கருத்தில் கொண்டு, மனிதன் கடுமையான சூழ்நிலைகளை எதிர்கொள்ள, அபாயங்களை தைரியமாக சந்திக்க, செழிப்பும் வளமும் சேரும்போது பகட்டைக் காட்டாமல் கட்டுப்படுத்த கடவுள் என்ற கற்பனைக் கருத்து உருவகப்படுத்தப்பட்டது. கடவுளுக்கு என சொந்த சட்டங்களும், பெற்றோருக்கு உள்ளது போன்ற பெருந்தன்மையும் கற்பனை செய்யப்பட்டு மேலும் விளக்கமாக சித்திரிக்கப்பட்டது. மனிதன் சமூகத்திற்கு ஆபத்தானவனாக மாறிவிடக் கூடாது என்று தடுப்பதற்காக கடவுளின் கோபம், சாபம் என்ற கற்பனையான தடுப்புக் காரணிகள் கண்டுபிடிக்கப் பட்டன. கடவுளின் தயாள குணத்தை விளக்க, கடவுள் தந்தையாக, தாயாக, தங்கையாக, சகோதரனாக, நண்பனாக, துணையாளாக உதவுகிறார் என்று கூறப்பட்டது. தன் எல்லா நண்பர்களும் தனக்குத் துரோகம் செய்து விட்ட பிறகு, மிகுந்த விரக்தியில் இருக்கும் மனிதனுக்கு எப்போதும் துணையாக நிற்கும் ஒரு சக்தியில் ஆறுதல் பெற முடியும் என்பதற்காகவே இது. கடவுள் அனைத்துக்கும் மேலான சக்தி, அவனால் இயலாதது எதுவுமே இல்லை என்று கூறப்பட்டது. உண்மையாகச் சொன்னால், ஆதிகாலத்தில் இது சமுதாயத்துக்கு உதவியாகத்தான் இருந்தது. கடவுள் என்ற கருத்து, விரக்தியில் உள்ள ஒரு மனிதனுக்கு மிகப்பெரிய ஆறுதல்.

சிலை வழிபாட்டுக்கும், மதம் என்ற குறுகிய சிந்தனைக்கு எதிராகவும் சமுதாயம் போராடியது போலவே இந்த நம்பிக்கைக்கு எதிராகவும் போராடியே தீரவேண்டும். அதே போல, மனிதன் தன் சொந்தக் கால்களில்நிற்க முயற்சி செய்யும்போது அவன் இந்த மூடநம்பிக்கைகளை புறம் தள்ளிவிட வேண்டும்; சந்தர்ப்பவசத்தால் ஏற்படும் விரக்திகளையும் சிக்கல் களையும் ஆண்மையுடன் எதிர்கொள்ள வேண்டும். இதுதான் என் கருத்து நிலைபாடு. நண்பர்களே, நான் கடவுளை மறுப்பது அகங்காரத்தினால் அல்ல. என் சிந்தனை முறைதான் என்னை நாத்திகன் ஆக்கி யிருக்கிறது. கடவுள் மீதான நம்பிக்கையும் அன்றாடப் பிரார்த்தனைகளும் மனிதரின் விஷயத்தில் மிகவும் சுயநலமிக்க, கௌரவக் குறைவான செயலாக நான் கருதுகிறேன். இந்தப் பிரார்த்தனைகள் உதவியாக இருக்குமா அல்லது என் விஷயத்தில் இன்னும் மோசமாக்கி விடுமா என்று எனக்குத் தெரியாது. கடவுள் மறுப்பாளர்கள் எல்லா சிரமங்களையும் மிகவும் உறுதியுடன் எதிர் கொள்வதை நான் படித்திருக்கிறேன்; அதேபோலத்தான் நானும் ஒரு ஆண்மகனாக இறுதி வரை தூக்கு மேடையிலும்கூட தலைநிமிர்ந்து நிற்க முயற்சி செய்கிறேன்.

நான் இதை எப்படிச் செய்கிறேன் என்று பார்ப்போம்: ஒரு நண்பர் என்னைப் பிரார்த்தனை செய்யுமாறு சொன்னார். என் நாத்திகக் கொள்கையைப் பற்றிக் கூறியதும் அவர் சொன்னார்: ``உன் கடைசி நாட்களில் கடவுளை நம்பத் தொடங்கி விடுவாய்''. நான் சொன்னேன்: `இல்லை நண்பரே, அது ஒருபோதும் நடக்காது. அப்படிச் செய்தால் என்னை நானே தரம் தாழ்த்திக்கொள்கிற, துணிவற்ற செயலாகத்தான் நான் எண்ணுவேன். சுயநல நோக்கங்களுக்காக நான் பிரார்த்தனை செய்யப்போவதில்லை.' வாசகர்களே, நண்பர்களே, இப்போது கூறுங்கள் ``இது அகங்காரமா?'' இது அகங்காரம்தான் என்றால், அப்படியே இருக்கட்டும், நான் அகங்காரம் உள்ளவனாகவே இருந்து விட்டுப் போகிறேன்.