Tuesday, 5 May 2020

வெறும் சோற்றுக்கே வந்ததிங்கே பஞ்சம்...

நண்பர்களுக்கு வணக்கம்.

கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நம் அனைவரின் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டு விட்டது. நடுத்தர வர்க்கம் எப்படியோ தாக்குப்பிடித்து விடும். ஆனால் விளிம்புநிலை மக்களின் துன்பங்கள் எழுதித்தீராதவை. எனவே, ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட ஏழைகள், அன்றாடக் கூலிகள், ரேஷன் கார்டு இல்லாதவர்கள், சாலையோர வாசிகள், முகவரி இல்லாதவர்கள், மனநலம் பிறழ்ந்தவர்கள், இரவலர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் என பல தரப்பினருக்கும் நாங்கள் உதவத் தொடங்கினோம்.






 







சென்னையில் இனியன், ஆன்மன்; கும்பகோணத்தில் புவனா; புதுக்கோட்டையில் புதுகை சத்யா; கடலூர் பகுதியில் ரமேஷ் பாபு; வேலூரில் திருநங்கை ஐஸ்வர்யா; திருச்சியில் ராஜாமகள்; விழுப்புரத்தில் சுந்தரபாண்டியன்; திருவாரூரில் மணிமாறன்; நாகப்பட்டினத்தில் ரம்யா; திருப்பூரில் அன்வர் பாட்சா; கோவை பகுதியில் ஒடியன் லட்சுமணன் எனப் பலரும் களத்தில் வேலை செய்து வருகிறார்கள்.

இந்தப் பணிகளுக்காக நிதி கேட்டு பேஸ்புக் பக்கத்தில் வேண்டுகோள் விடுத்தேன். ஏராளமான நண்பர்கள் முன்வந்தார்கள். அவர்கள் தர முன்வந்த தொகையை களத்தில் வேலை செய்கிறவர்களுக்கு நேரடியாக அனுப்பச் செய்தேன். கடந்த ஒரு மாதத்தில் என் நண்பர்கள் மூலமாக கிடைத்த தொகை சுமார் 6 லட்சம் ரூபாய். களத்தில் இயங்கும் நண்பர்களும் தமது நட்பு வட்டத்திலிருந்து நிதியும் பொருட்களும் திரட்டி விநியோகித்து வருகின்றனர். ஆயிரக்கணக்கானோருக்கு உணவும், ஆயிரக் கணக்கானோருக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களும் வழங்கி வருகிறோம்.

இந்நிலையில், 3ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவுக்கு வந்து விடும் என்று நம்பினோம். ஆனால் மேலும் 14 நாட்களுக்கு நீடித்து விட்டது. அரசுத் தரப்பிலிருந்து மேலும் நிவாரணம் வழங்கும் அறிவிப்பு ஏதும் வரவில்லை. சில இடங்களில் அம்மா உணவகத்தில் இலவசமாக வழங்கி வந்த உணவும் நிறுத்தப்பட்டு விட்டது. இத்தனை நாட்களும் எமது குழுவினர் வழங்கி வந்த உணவைக்கொண்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டிருந்தவர்கள் இனிவரும் நாட்களிலும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். வழக்கமான நேரத்தில் உணவு வராமல் ஏமாந்து போவார்கள் என்பதை நினைக்கவே வேதனையாக இருக்கிறது.

எனவேதான் பணிகளைத் தொடர்வதற்கு பொதுவெளியில் நன்கொடை திரட்டுவதென முடிவுசெய்தேன். இதற்காக crowd funding வலைதளங்களில் பதிவு செய்து நிதிக் கோரிக்கை வைத்திருக்கிறேன்.

1. Milap என்னும் நிதிதிரட்டும் வலைதளம். 
2. Ketto என்னும் நிதிதிரட்டும் வலைதளம்.

17ஆம் தேதி வரை எமது பணிகள் தொடர வேண்டுமானால் உங்கள் நிதியுதவியால் மட்டுமே இது சாத்தியம்.

நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்
அதுவுமற்றவர் இணைப்பினைப் பகிர்வீர்.

எனவே, இந்தப் பதிவில் உள்ள நிதியுதவித் தளங்களின் இணைப்புகளை உங்கள் நண்பர்களுக்குப் பகிருங்கள். உங்கள் வாட்ஸ்அப் / பேஸ்புக் குழுக்களில் பகிருங்கள். சங்கிலித் தொடர்போல இச்செய்தி பரவட்டும்.
  
(மிலாப் தளத்தில் இதுவரை ஒரு லட்சம் நிதி வந்திருக்கிறது.)

 *

ஒரு நிறுவனமாக இல்லாமல் தனிமனிதனாக விடுக்கும் வேண்டுகோளுக்கு நிதி வழங்குவதில் சிலருக்குத் தயக்கம் வரும் என்பது புரிகிறது. எனவே, இதுவரை நானும் நண்பர்களும் பேஸ்புக் நண்பர்கள் உதவியுடன் மேற்கொண்ட பணிகள் குறித்து சிறு குறிப்பைத் தர விரும்புகிறேன்.

தில்லியில் சாலையோரவாசிகளுக்கு குளிர்காலத்தில் கம்பளி வழங்கும் பணி ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

2015 சென்னை கடலூர் வெள்ளத்தின்போது சுமார் பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணம் திரட்டித் தரப்பட்டது.

கேரள வெள்ளத்தின்போது பத்து லட்சத்துக்கும் அதிகமான நிதி திரட்டி உதவி செய்திருக்கிறேன்.

கஜா புயலின்போதும் பத்து லட்சம் வரை நிதிதிரட்டி உணவும் அத்தியாவசியப் பொருட்களும் தார்பாலின்களும் வழங்க ஏற்பாடு செய்தேன்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்களுக்காக சுமார் நான்கு லட்சம் ரூபாய் மதிப்புள்ள நோட்டுப் புத்தகங்கள், பேனா-பென்சில் போன்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.

புயலால் சேதமடைந்த சில பள்ளிகளின் கட்டுமானப் பணிக்காகவும் நண்பர்களின் மூலமாக பல லட்சம் ரூபாய் ஏற்பாடு செய்து கொடுத்தேன்.

இவை தவிர, அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பு, கட்டுமானம், போன்ற பணிகளுக்காகவும், அவசியம் உதவி தேவைப்படும் சிலருக்கு மருத்துவ உதவிகள், ஆதரவற்றவர்களுக்கு சுயதொழில் உதவிகள் என ஆண்டுதோறும் சுமார் இரண்டு லட்சம் நிதி திரட்டித் தரப்படுகிறது.

இவை எல்லாமே பேஸ்புக் நண்பர்கள் மூலமாகவே திரட்டித் தரப்பட்டு வருகிறது. எனவேதான் இதுவரை வலைப்பூவில் இதைப்பற்றி எழுதியதே இல்லை.

இப்போது மேற்கொண்ட பணிகளைச் செய்வதற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதன் காரணமாகவே உங்களிடம் வந்திருக்கிறேன்.

உதவுங்கள். உதவச் செய்யுங்கள்.

நன்றி வணக்கம்.

களத்தில் இருப்போருக்கு நேரடியாக அனுப்ப விரும்புவோர் கீழ்க்கண்ட கணக்குகளுக்கும் அனுப்பலாம்

ENIYAN
027001000039224
Indian Overseas Bank
Anna Nagar
IFSC - IOBA0000270
N. Syed Ibrahim
802010110002739
Bank of India
Triplicane Branch
IFSC - BKID0008020
R SHAHJAHAN
90092010103160
Syndicate Bank
R.K. Puram Sector V
IFSC - SYNB0009009
R Lakshmanasamy
006601000028731
Indian Overseas Bank
Coimbatore
IFSC - IOBA0000066





Friday, 4 October 2019

சின்ன விஷ(ய)ங்கள்


இரண்டு மாதங்களுக்கு முன்னால் பேஸ்புக்கில் ஒரு பதிவு எழுதினேன். நாம் வாங்கும் பால் பாக்கெட்டை வெட்டும்போது எப்படி வெட்டினால் சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கலாம் என்பதே அது. அந்தப் பதிவு கீழே :
*
நகரங்களில் இருக்கிற நாம பெரும்பாலும் பாக்கெட் பால்தான் வாங்கறோம்.
பாலிதீன் பாக்கெட்டின் மூலையில் கட் பண்ணி பாத்திரத்தில் ஊத்தறோம்.
அரை லிட்டரோ, ஒரு லிட்டரோ... அந்த பாலிதீன் பாக்கெட், பெரும்பாலும் ரீசைக்கிளுக்குப் போகும்.
ஆனா, வெட்டப்பட்ட அந்த சின்ன பாலிதீன் துண்டு... ?
கண்ணுக்குத்தெரியாத பல லட்சம் பாலிதீன் துண்டுகள் நீர் நிலைகளில் சேருது.
சென்னையில் ஒரு நாளில் பயன்படும் பாக்கெட் பாலின் அளவு சுமார் 25 லட்சம் லிட்டர். ஆமாம், பாக்கெட் மட்டும்தான் சொல்றேன்.
25 லட்சம் லிட்டர் பாலை ஒரு லிட்டர், அரை லிட்டர்னு பாத்தா, சுமார் 40 லட்சம் பாக்கெட்டுகள். தயிர், மோர் பாக்கெட்டுகளும் சேர்த்தா, சென்னையில் மட்டும் ஒரு நாளில் சுமார் 60 லட்சம்!
சுமார் 60 லட்சம் சின்னத் துணுக்குகள் குப்பையிலும் கழிவுநீரிலும் போகுது.
எண்ணெய் பாக்கெட், ஷாம்பு சாஷே, இது மாதிரி பல விஷயங்களுக்கும் இது பொருந்தும்.
இந்த பாக்கெட்டுகளை எல்லாம் நான் எப்போதும் படத்தில் இருப்பது போலத்தான் வெட்டுவேன். மூலையில் துண்டுப்பகுதியை வெட்டி எடுக்க மாட்டேன்.




நீங்களும் இப்படிச் செய்யலாம்.
சின்ன விஷயம்தான். ஆனா பெரிய விஷம் பரவாம தடுக்கலாம்.
தினமும் இதை செய்யப் பழகணும். இத்தனை காலம் ஊறிப்போன பழக்கத்துல டக்குனு வெட்டி எறியத்தான் கை போகும்.
நானும் உங்களை மாதிரிதான்னு சொல்றவங்களுக்கு என் அன்பு.

பதிவை என் பேர் போட்டோ, போடாமலோ ஷேர் செய்யலாம். அல்லது உங்கள் மொழியில் எழுதிப் பரப்பலாம். இந்தச் செய்தி பரவ வேண்டியது முக்கியம்.
*
இந்தப் பதிவு பேஸ்புக்கில் தீயாய்ப் பரவியது. பேஸ்புக் மெசஞ்சரிலும் வாட்ஸ்அப்பிலும் வந்த செய்திகளுக்கு அளவே கிடையாது. தமிழ் ஹிண்டு நாளிதழில் வெளிவந்தது. இன்னும் சில பத்திரிகைகளிலும் இந்தத் தகவல் பரப்பப்பட்டது.


பப்புவா நியூ கினி தமிழர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இது பகிரப்பட்டது. கனடாவிலும் அமெரிக்காவிலும், மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் என பல நூறு செய்திகள் வந்தன.

இன்னும் சிலர் அந்தப் பதிவை வீடியோவாகவும் செய்து வெளியிட்டிருந்தார்கள். அப்படி வந்த வீடியோக்களில் இதுவும் ஒன்று.

*
அந்தப் பதிவில் சொல்லாமல் விடப்பட்ட மற்றொரு விஷயம் பால் பாக்கெட்களை எப்படி கழித்துக் கட்டலாம் என்பது.

பால் பாக்கெட்டுகளை அன்றாடம் தூக்கிப் போட வேண்டாம். என்னதான் முழுதாக குப்பையில் தூக்கி எறிந்தாலும், எல்லாமே மறுசுழற்சிக்குப் போய்விடுவதில்லை. எனவே, ஒரு கம்பியில் கோத்து வைக்கலாம். மாதம் ஒரு முறை பழைய பேப்பர் வாங்க வருகிறவர், அல்லது குப்பை பொறுக்குவோர் உங்கள் தெரு வழியாகப் போகும்போது அவர்களிடம் கொடுக்கலாம். சென்னை போன்ற நகரங்களில் ஆவின் நிறுவனம் 10 பைசா விலைக்கு திரும்பப் பெறுவதாகத் தகவல் கிடைத்தது. அப்படி விற்று, மாதம் 3-5 ரூபாய் வந்து நமக்கு ஆவப்போவது ஏதுமில்லை. ஆனால் குப்பை பொறுக்கும் மகா மோசமான தொழிலில் இருக்கும் சிறுவர்களுக்கு, முதியோருக்கு, ஆதரவற்ற பெண்களுக்கு அது பேருதவியாக இருக்கும். அது மட்டுமல்ல, அந்த பால் பாக்கெட் உறைகள் எல்லாமே மறுசுழற்சிக்குப் போகும் வாய்ப்பும் கிடைக்கும்.


ஏன் இதற்கு இவ்வளவு முக்கியம்? முந்தைய பத்தியில் குறிப்பிட்ட அந்தக் காரணம் என்ன? இதுதான் காரணம், அந்தப் புத்தகத்தில் வந்த வரிகள்

பலவிதங்களிலும் பிளாஸ்டிக் நச்சுத்தன்மை கொண்டது என்று நாம் அறிந்துள்ள போதிலும், மற்றவர்களுக்கும் இந்த விவரங்களை எடுத்துச் சொல்லவேண்டும். நம் வேலை, ஒழிவுநேரம், சமூகப்பணி ஆர்வம் போன்றவற்றுக்கு ஏற்றவாறு மற்றவர்களுக்கு எடுத்துரைத்து அவர்களுடைய வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தத் துணையாக இருக்கலாம். நாம் மேற்கொள்கிற சின்னஞ்சிறு முயற்சிகளாலும் பெரிய மாற்றம் நிச்சயம் உருவாகும்.

பிளாஸ்டிக் ஒழிப்புக்குச் சாதகமாக எவரேனும் எத்தகைய சிறிய முன்னெடுப்பை மேற்கொண்டாலும் அதை நாம் பாராட்டுவதோடு, அதற்கு ஆதரவாக இருப்பதையும் தெரியப் படுத்துவோம். அதைப்பற்றி அறிய வரும் மற்றவர்களும் அவ்வாறே செயல்படுவார்கள்.
*
பி.கு. - அன்றாடம் பயன்படுத்திய பால் பாக்கெட்டுகளை இப்படி கம்பியில் கோத்து வைக்க விரும்பினால் ஒரு விஷயத்தை கவனத்திலை வைக்கவும். பால் / தயிரை பாத்திரத்தில் ஊற்றிய பிறகும் பாக்கெட்டின் உள்பகுதியில் கொஞ்சம் ஒட்டியிருக்கலாம். குறிப்பாக, பிரிஜ்ஜிலிருந்து எடுத்த பாக்கெட்டாக இருந்தால், உள்பக்கம் நிறையவே ஒட்டியிருக்கும். பாலை ஊற்றிய பிறகு பாக்கெட்டை அப்படியே வைத்தால், ஓரிருநாட்களில் நாற்றம் எடுக்கும். எனவே, பாத்திரத்தில் ஊற்றியபிறகு, பாக்கெட்டில் கொஞ்சம் தண்ணீர் விட்டு அலசி பாலில் ஊற்றிக்கொள்ளலாம். பாக்கெட்டையும் சுத்தமாக அலசி கம்பியில் கோத்து வைக்கலாம். மாதம் ஒருமுறை குப்பை பொறுக்க வருகிறவர்களுக்குக் கொடுக்கலாம்.

சரி, பால் பாக்கெட் பற்றி அந்தப் பதிவு எழுத எனக்குத் தூண்டுகோலாய் இருந்தது எது?
அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

Friday, 27 September 2019

எடுக்கத் தவறிய புகைப்படமும் அறியக் கிடைத்த வரலாறும்


இது கடந்த ஆண்டு பேஸ்புக்கில் எழுதிய பதிவு. தில்லிக்கு வந்திருந்த முஷ்தாக் அகமத் என்னும் நண்பரை சந்திக்கச் சென்றபோது கிடைத்த அரியதொரு தகவலும் இதில் இருக்கிறது என்பதால் வலைப்பூவில் பதிகிறேன். வழக்கத்துக்கு மாறாக, வழக்குத் தமிழில் ஒரு பதிவு.
*
கவிதைகள், கதைகள், கட்டுரைகள், வரலாறு, நண்பர்கள்னு, மணிக்கணக்கா பேசிட்டு உக்காந்திருந்தோம் நானும் முஷ்தாக் அகமதும். ஆனா ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக்கணும்னு தோணலே. பேச்சு சுவாரஸ்யத்துல ஞாபகமே வரலே!

போட்டோதான் எடுத்துக்கலையே தவிர... இன்னொரு விஷயம் கிடைச்சுது. ரெண்டு பேரும் அப்படியே ரோட்டுல நடந்து போகும்போது ஒரு பக்கத்திலிருந்து மக்கள் வெளிய வர்றதைப் பார்த்தோம். என்னவா இருக்கும்னு உள்ளே போய் பார்த்தேன்... பழைய காலத்துப் படிக்கிணறு.

நாங்க நடந்து போயிட்டிருந்தது மெஹரோலி பகுதியில் ஒரு சின்ன சாலை. குதுப் மினார் இருக்கே, அந்தப் பகுதியின் பெயர்தான் மெஹரோலி. ஒரு காலத்தில் கிராமம். முஸ்லிம்கள் அதிகம் வசித்த பகுதி. இப்போது பல மாடிக்கட்டிடங்கள் வந்துவிட்டன.

ராஜோன் கீ பாவ்லி-ன்னு ஒரு கிணறு மெஹ்ரோலியில் இருக்குன்னு முன்னமே படிச்சிருக்கேன். ஆனா இது அதுவல்ல. (பாவ்லி / பாவ்டி-ன்னா கிணறுன்னு அர்த்தம்.) இதுக்கும் நிச்சயமா ஒரு வரலாறு இருக்கும்னு தோணிச்சு. ஆனா அங்கே பக்கத்துல இருந்த யாரைக் கேட்டாலும் பெயர் தெரியலே. பெரிய்ய்ய்யய கெணறு... எப்பவுமே வத்தாது... இப்படி பதில்கள் மட்டும்தான் கிடைச்சுது.


பசங்க குதிச்சு கும்மாளம் போடறதைப் பாத்ததும் உடனே தண்ணியில குதிக்கணும்னு தோணிடுச்சு. ஆனா கையில் மாற்று டிரஸ் இல்லே. முஷ்தாக் கூட அரட்டை அடிக்கப் போனது... இப்படியொரு கிணறு இருக்கும்னு எனக்கென்ன தெரியும்?! அடுத்தவாட்டி மாற்று டிரஸ்ஸோட வரணும்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டேன். சரி மறுபடி கதைக்கு வரலாம்.

கிணறு எவ்வளவு ஆழம் இருக்கும்? தெரியலே. பசங்க ஓரமாதான் குளிச்சாங்க. சில பேர் மட்டும் மேலே இருந்து குதிச்சாங்க. படம் மட்டும் எடுத்துகிட்டு வந்துட்டேன்.

வீடு வந்ததும் நெட்ல தேடிப் பாத்தேன். பெயர் கிடைச்சுடுச்சு. இதுக்குப் பேரு கந்தக் கீ பாவ்லி (கந்தகக் கிணறு.) இதுக்கு ஒரு கதை உண்டு.

மெஹரோலியில, குதுப் மினாருக்கு பின்னாடி, இப்ப இருக்கிற பஸ் ஸ்டாண்டுக்குப் பின்னாடி, ஊருக்குள்ள ஒரு தர்கா இருக்கு. அந்த தர்காவில் அடக்கமாகி இருப்பவர் குத்புதீன் பக்தியார். தர்காவுக்கு இந்தப்பக்கம் இருக்குது இந்தக் கிணறு.

1296 – 1316 காலகட்டத்தில் இந்தப் பகுதியை ஆட்சி செய்தவர் சுல்தான் ஷம்சுதீன் இல்துமிஷ். அப்பதான் ஹஜரத் குத்புத்தீன் பக்தியார் காகி என்கிற இஸ்லாமியத் துறவி அங்கே வருகிறார். அப்போ மெஹரோலியில் கடும் தண்ணீர் பஞ்சம் இருந்திருக்கு. துறவியார் குளிக்கிறதுக்கு கஷ்டப்படறதைப் பார்த்தார் மன்னர் ஷம்சுதீன். உடனே கிணறு வெட்ட ஏற்பாடு செய்தார். அப்படி உருவான கிணறுதான் இந்த கந்தகக் கிணறு. இந்த நீரில் இருக்கிற கந்தகம் பலவிதமான தோல் நோய்களையும் குணப்படுத்தும் என்பது நம்பிக்கை. 

ராஜோன் கிணறுக்கு இன்னொரு பெயரும் உண்டு - காய்ந்த கிணறு. ராஜோன் கீ பாவ்லி அப்படீன்னா, ராஜாக்களின் கிணறுன்னு நினைச்சிருந்தேன். இல்லையாம். ராஜோன்-னு சொன்னா, கொத்தனார்கள்னு பொருளாம். கொத்தனார்களுக்காக வெட்டப்பட்ட கிணறாம். ஆனா இந்த கந்தகக் கிணறு எப்பவுமே வற்றாதாம்.

நாங்க வெளியே வந்தப்போ, பக்கத்துல ஒரு பம்ப் ரூம் பார்த்தோம். ஒரு பெரிய மோட்டார் தண்ணி இறைச்சுட்டிருந்தது. படத்துல பாத்தீங்க இல்லையா.... அது நாங்க பாத்த தண்ணீர் மட்டம். உண்மையில் கிணறு எவ்வளவு ஆழம்? 2004-05இல் தொல்லியல் துறை கிணற்றைத் தூர் வாரி சுத்தம் செய்த பிறகு கிணற்றில் தண்ணீர் நிறைய இருக்குதாம்.


நெட்டிலிருந்து எடுத்த சில படம் மேலே இருக்கு. இந்த வீடியோவிலும் பாக்கலாம்.  அப்புறம் விக்கிலயும் தேடிப் படிச்சுப்பாருங்க.

Saturday, 31 August 2019

அணு மின் கழிவுகளும் கூடங்குளமும்


அணுசக்தி மின்சாரம் எப்படி தயாரிக்கப்படுகிறது தெரியுமா? நான் படித்து அறிந்த வரையில் சுருக்கமாக எழுதுகிறேன்.

அணுசக்தி மின்சார நிலையங்களின் படங்களைப் பார்த்திருப்பீர்கள். பெரிய பெரிய கட்டிடங்கள் இருக்கும். அவற்றில் என்ன இருக்கும்
1. அணு உலை – கனமான கான்கிரீட் சுவர்களால் அமைக்கப்பட்டிருக்கும். 2. டர்பைன், ஜெனரேட்டர் கட்டிடங்கள் 3. குளிர்விக்கும் கோபுரங்கள்.


அணுமின் நிலையமும் ஒருவகையில் அனல் மின் நிலையம்தான். அணு உலையில் எரிசக்திக் குழாய்கள் ஃப்யூவல் ராடுகள் இருக்கும். இதற்குள் செறிவூட்டப்பட்ட யுரேனியம் போன்ற அணுக்களின் சிறு சிறு வில்லைகள் நிரப்பப்படும். இவை பிளவு அல்லது பிணைவின் மூலம் வினையாற்றி கடும் வெப்பத்தை உற்பத்தி செய்யும். அந்த வெப்பம் நீருக்குக் கடத்தப்படும். நீர் சுமார் 570 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெப்பமடையும் என்றாலும், அது கொதிக்காது. காரணம், அது அழுத்தமேற்றப்பட்ட நீராக இருக்கும். இந்த வெப்பநீர், வெப்ப மாற்றி அல்லது நீராவி ஜெனரேட்டருக்குச் செல்லும். நீராவி ஜெனரேட்டருக்குள் நீரும், நிறைய குழாய்கள் சுருள்களாகவும் இருக்கும். அணுஉலையிலிருந்து வரும் வெப்ப நீர் குழாய்களுக்குள் சுற்றி வருவதால், அந்த வெப்பத்தை ஏற்றுக்கொண்ட ஜெனரேட்டருக்குள் இருக்கும் நீர் கொதிக்கும். அது நீராவியாக வெளிவரும். இந்த நீராவி, குழாய்கள் மூலம் டர்பைன்களுக்குச் செல்லும். முதலில் அழுத்தம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிக அழுத்த டர்பைனுக்குள் செல்லும், பிறகு குறைந்த அழுத்த டர்பைன்களுக்குள் செல்லம். நீராவியின் அழுத்தத்தால் டர்பைனில் உள்ள தண்டு (ஷாஃப்ட்) சுழலும். அந்த ஷாப்ட் ஜெனரேட்டருடன் இணைக்கப்பட்டிருக்கும். ஷாப்டின் சுழற்சியால், ஜெனரேட்டர் மின்சாரத்தை உற்பத்தி செய்யும்.

இவ்வாறு டர்பைனுக்குள் பயன்படுத்திய நீராவியை ஒரு கண்டென்சர் மீண்டும் நீராக மாற்றும். அந்த வேலையைத்தான் கூலிங் டவர் செய்கிறது. கூலிங் டவருக்கு மேல் புகைபோலத் தெரிவது, வெப்பமடைந்த நீரின் நீராவிதான். இவ்வாறு நீராவி-நீர் என இவ்வாறு சுழற்சி முறையில் சுற்றிக் கொண்டே இருக்கும்.


அணு உலைக்குள், எரிசக்திக் குழாய்களுடன் நேரடித் தொடர்புக்கு உள்ளான நீர், இந்தச் சுழற்சியின்போது கதிரியக்கத்துக்கு ஆளாகியிருக்கும் என்பதால் வெளியே விடப்படாது.

அணுமின் நிலையத்திலும் நீராவி உற்பத்தி செய்துதான் மின்சாரம் எடுக்கப்படுகிறது. அதற்காக, அணுமின் நிலையத்துக்கு அருகில் உள்ள ஆற்றிலிருந்து அல்லது நீர் நிலையிலிருந்தே தண்ணீர் எடுக்கப்படும். அருகில் பெரிய நீர்நிலை அல்லது ஏரி இருக்குமானால், கூலிங் டவர் தேவைப்படாது. நீரை இயற்கையிலேயே குளிர்விக்க ஏரிக்குள் விட்டு விடலாம்.

இந்த விளக்கம் போதும் என்று நினைக்கிறேன்.

ஓர் அணுமின் நிலையத்திலிருந்து என்னென்ன கழிவுகள் வெளிவரும்?
கழிவுகளை மூன்றாகப் பிரிக்கிறார்கள். ஹை-லெவல், இன்டர்மீடியட் லெவல், லோ லெவல்.
ஹை லெவல் எனப்படும் கதிரியக்கம் மிகுதியான பொருட்கள் வெறும் 3%தான் வெளிவரும் என்கிறார்கள். ஆனால் இவை 95% கதிரியக்கம் கொண்டவை.
இன்டர்மீடியேட் லெவல் கழிவுகள் 7% இருக்கும். இவை 4% கதிரியக்கம் கொண்டிருக்கும்.
லோ லெவல் கழிவுகள் 90 %, இவை 1% கதிரியக்கம் கொண்டிருக்கும்.

பிரச்சினை என்னவென்றால், (வெறும்) 3 % என்று சொல்லப்படும் கழிவுகள்தான் பல்லாயிரம் ஆண்டுகள் வரை கதிரியக்கத்தை இழக்காமல் இருக்கும்.

எரிசக்திக்காகப் பயன்படும் குழாய்கள் (ராடுகள்) அதிகபட்சம் மூன்றாண்டுகளுக்குப் பிறகு கழிவு ஆகிவிடும். பயன்படுத்தப்பட்ட எரிசக்திக் குழாய்கள்தான் முக்கியமான பிரச்சினைக்குரிய கழிவுகள். உதாரணமாக, சீசியம் 137, ஸ்ட்ரோன்டியம்-90, புளூடோனியம்-239.
சிசியம், ஸ்ட்ரோன்டியம் இரண்டும் சுமார் 30 ஆண்டுகளில் கதிரியக்கத்தை தீர்த்துவிடும். ஆனால் புளூட்டோனியம்? அதன் கதிரியக்கம் தீருவதற்கு 24 ஆயிரம் ஆண்டுகள் ஆகும்.


படத்தில் இருப்பது சான் ஓனோஃப்ரே அணுமின் நிலையம். கலிபோர்னியாவின் சான் கிளமென்ட் நகருக்கு அருகே, பசிபிக் கடற்கரையின் ஓரத்தில் உள்ளது. 2012இல் ஒருமுறை நீர்க் கசிவு ஏற்பட்டது. உடனே மூடப்பட்டு விட்டது. இனி மீண்டும் அது திறக்கப்படும் சாத்தியம் இல்லை என்பதால், மின்நிலையத்தை அக்கு அக்காகப் பிரிக்க முடிவு செய்துவிட்டது அந்த தனியார் நிறுவனம். ஆனால், அதனிடம் இருக்கிறது 88000 டன் அணுக்கழிவுகள். பிரம்மாண்டமான கான்கிரீட் தொட்டிகளில் நீருக்குள் சில ஆண்டுகள் வைக்கப்பட்டிருக்கும். பிறகு, பிரம்மாண்டமான கான்கிரீட் தொட்டிகளுக்குள் குளிரூட்டப்பட்ட ஸ்டீல் கன்டெய்னர்களில் வைக்கப்பட்டிருக்கும். 24 ஆயிரம் ஆண்டுகளுக்கு இதைப் பராமரிக்க வேண்டும்!



அமெரிக்க அரசு இதில் என்ன செய்யும்? எல்லாக் கழிவுகளையும் நெவாடாவில் உள்ள யுக்கா மலைகளில் ஆழக் குழாய்கள் தோண்டி புதைத்துவிடலாம் என்று திட்டமிட்டது. ஆனால் நெவாடா மக்கள் அதை ஏற்கவில்லை. எனவே, அணுமின் நிலையங்கள் அரசைக் கேட்கின்றன. அரசு ஏதும் செய்ய இயலாது என்று சொல்கிறது. தற்போது அமெரிக்காவில் வெறும் 20 விழுக்காடு மட்டும்தான் அணுமின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 2200 டன் கழிவுகள் உற்பத்தி ஆகின்றன.

இத்தனைக்கும் இது அமெரிக்கா. ஒரு சிறு கசிவு ஏற்பட்டதும் அணுமின் நிலையத்தையே மூடிவிட்ட நாடு. கழிவுகள் வைக்கும் கானிஸ்டர்களை தயாரிக்கும் நிறுவனம், அந்த கானிஸ்டர்களில் சிறியதொரு மாற்றம் செய்ய முனைந்தபோது, உடனே அதை நிறுத்தச் சொன்ன நாடு. தன் மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் அரசைக் கொண்டது. அப்படிப்பட்ட அமெரிக்காவே என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. பூகம்பம், சுனாமி என எந்தவிதப் பேரிடரையும் தாங்கும் வகையில் கழிவுகளுக்கான கட்டுமானம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனாலும்கூட, கடலோரத்திலிருந்து அகற்ற வழி உண்டா என்று யோசிக்கப்படுகிறது. மறுபக்கத்தில் உள்ள மலைகளில் சுரங்கம் தோண்டிப் புதைக்கலாமா என்றும் யோசிக்கப்பட்டது.


கிட்டத்தட்ட இதேபோல கடலோரத்தில் இருப்பதுதான் கூடங்குளம். கூடங்குளத்தில் உருவாகும் அணுக்கழிவுகளையும் கூடங்குளத்தில் சேமிக்கப்போவதாக செய்திகள் வருகின்றன.

இந்தப் பிரச்சினை ஏற்கெனவே விவாதிக்கப்பட்டதுதான். அணு உலைக்கு அப்பால் (Away From Reactor) கழிவுகளை சேமிக்க ஏற்பாடு செய்ய அரசுக்கு ஐந்தாண்டு கால அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம். இது நடந்தது 2013இல்.

கழிவுகளை சேமிக்கும் தொழில்நுட்ப அறிவு தன்னிடம் இல்லை என்று நீதிமன்றத்திலேயே சொன்னது தேசிய அணு சக்திக் கழகம்.

ஐந்தாண்டுகள் போன பிறகு, 2018இல் உச்சநீதிமன்றத்தில் பூவுலகின் நண்பர்கள் தொடுத்த வழக்கைத் தொடர்ந்து, அணுசக்திக் கழகத்துக்கு மேலும் நான்கு ஆண்டுகள் கால அவகாசம் கொடுத்த்து உச்சநீதிமன்றம்.

இந்நிலையில், ஜூலை 10ஆம் தேதி மக்கள் கருத்துக் கேட்பு நிகழ்வை நடக்க இருப்பதாக அறிவித்தது அணு சக்திக் கழகம். சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையின்படி, கூடங்குளம் நிலைய வளாகத்துக்கு உள்ளேயே கழிவுகள் வைக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

AFR என்றாலே அணு உலைக்கு அப்பால் என்றுதான் பொருள். ஆனால், ஐந்தாண்டுகள் அவகாசம் கொடுத்தும் ஏற்பாடு செய்யாதவர்கள், சுற்றி வளைத்து கூடங்குளத்திலேயே சேமிக்கத் திட்டமிடுவதாகத் தோன்றுகிறது.

திருநெல்வேலி, ராதாபுரம் தாலூகா, நித்ய கல்யாண சுந்தரி வெள்ளையன் செட்டியார் அரசு மேநிலைப் பள்ளியில் மக்கள் கருத்துக்கேட்பு நடைபெற இருக்கிறது என்று தகவல்கள் வந்தன. ஆனால், காலவரையின்றி அது ஒத்திவைக்கப்பட்டது.

ஜூலை முதல் தேதி உச்சநீதிமன்றம் ஒரு முடிவை அறிவித்த்து – ஏஎஃப்ஆர் நிறுவுவதற்கான கால வரம்பை 2022 ஏப்ரல் வரை நீட்டித்து அனுமதி அளித்த்து. இதுதான் கடைசி, இதற்கு மேலும் நீட்டிப்புத் தர முடியாது என்று உறுதியாகத் தெரிவித்து விட்டது உச்சநீதிமன்றம். அட! அபாரம்!!