Friday, 26 April 2013

படித்ததில் பிடித்தது 6 - வேறிடம்


சொந்த ஊரில் அன்னியனாக உணர வேற்றூரில்தான் வசிக்க வேண்டும் என்பதில்லை. தில்லிக்கு வந்து 22 ஆண்டுகள் ஆகிவிட்டன. இங்கு வந்த புதிதில், தமிழர்களின் வழக்கப்படி முதலில் வசிக்கத் தேர்ந்தெடுத்த கரோல்பாக்கில் என் கால்படாத, அல்லது என் ஸ்கூட்டரின் சக்கரங்கள் படாத தெருக்களே இல்லை. ஆனால் பல ஆண்டுகளாக அந்தப்பக்கம் போகவே இல்லை. ஊரிலிருந்து பள்ளிப்பருவ நண்பர்கள் வடமாநில சுற்றுப்பயணம் வந்திருந்தனர். ஏதோவொரு வாய்ச்சவடால் டிராவல் ஏஜென்ட் கரோல்பாகில் ஒரு லாட்ஜில் தங்க ஏற்பாடு செய்திருந்தான். அது ஒரு தனிக்கதை. நண்பர்களைப் பார்க்கச் சென்றபோது தில்லியில் அன்னியனாகத்தான் உணர்ந்தேன். அன்றாடம் தன் அடையாளத்தை மாற்றிக்கொண்டே இருக்கிறது தில்லி. தில்லியுடன் ஒட்டுறவு இல்லாமல் விலகியே வசிக்கும் எனக்கே இப்படி என்றால், தில்லியில் பிறந்து இங்கேயே வளர்ந்து முதுமைதட்டிக்கொண்டிருக்கும் பெரியவர்களுக்கு எப்படி இருக்கும் என்று யோசிக்கும்போது கவலையாக இருக்கிறது. இருக்கட்டும். பயணத்தின்போது பஸ்சில் படிக்க எடுத்துச்சென்ற புத்தகம் சுப்ரபாரதி மணியனின் வேறிடம்.

*  *   *

சுப்ரபாரதி மணியன் என் நண்பர். அவ்வப்போது தொலைபேசியில் பேசிக்கொள்வோம். 1992இல் இவருக்கும் ஜெயமோகனுக்கும் கதா விருது கிடைத்தபோது தில்லித் தமிழ்ச்சங்கத்தில் வரவேற்பு விழா நடத்தி பாராட்டியது நினைவுக்கு வருகிறது. அவருடைய சிறுகதைதளும் நாவல்களும் படித்திருக்கிறேன். குறிப்பாக கொங்குதமிழ் இன்பத்துக்காக. கூடவே நெசவாளிகளின் கன்னடமும் அங்கங்கே ஒலிக்கும். இரண்டும் எனக்கு அறிமுகம். அதனாலேயே இவரது எழுத்துகளில் கொஞ்சம் ஒட்டுதல் அதிகம். ஆனால் இந்தப் புத்தகத்தில் கொங்குதமிழ் கொஞ்சம்தான். கன்னடம் மிகக் கொஞ்சம். பரவாயில்லை.

இதில் இருப்பவை 7 கதைகள். குறுநாவல்கள் என்கிறார் பதிப்பாளர். எனக்கு குறுநாவலாகப் படவில்லை. கொஞ்சம் நீண்டுவிட்ட சிறுகதைகள்தான். பெயர் எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும். எனக்கு வேண்டியது வாசிப்பனுபவம். ஒவ்வொரு கதையிலும் என்னையோ, எனக்குத் தெரிந்தவனையோ, தெரிந்தவனுக்குத் தெரிந்தவனையோ தேடுதல். கொஞ்சம் நெகிழ்தல். உறக்கத்தைத் துறந்து கதைகளில் வந்த பாத்திரங்களை அசைபோடல், சம்பவங்களை காட்சிப்படுத்திப் பார்த்தல். எதனால் அந்தச் சம்பவங்கள் நிகழ்ந்தன, இவை வேறுமாதிரியாக நடந்திருக்க முடியுமா, அந்தப் பாத்திரம் இப்படித்தான் செய்திருக்க வேண்டுமா, வேறுமாதிரியாக செய்திருந்தால் இந்தக் கதை என்னவாகியிருக்கும் என்று அக்குவேறு ஆணிவேறாக மனசுக்குள் அசைபோடுதல். என்னைப்பொறுத்தவரை இதுதான் வாசித்தல்.

ஆனால் இந்தப் புத்தகத்தில் உள்ள கதைகளின் எந்தப் பாத்திரமும் வேறுவிதமாகச் செய்திருக்க முடியாது என்று தோன்றுகிறது. ஒன்றைத் தவிர. மற்றொரு கதையை எப்படி முடிக்கலாம் என்று குழம்பிப்போய் முடித்ததாகத் தோன்றுகிறது. ஆனாலும் இரண்டும் குறைகள் கொண்டவை என்பதல்ல.

நகரம் 90 ஏர் இந்தியா குறுநாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது என்று குறிப்பு இருக்கிறது. அதற்கும் மேல் இதைப் பாராட்ட என்ன வேண்டும்.... மதக்கலவரத்தால் பாதிக்கப்படும் நகரம், சிதைவுறும் மானுடம், இழப்புக்கு உள்ளாகும் குடும்பங்கள். நகரத்தின் பெயர் சொல்லப்படாவிட்டாலும் ஹைதராபாத் என்பது புரிகிறது. எந்த இரண்டு மதங்கள் என்பதும் புரிகிறது. இங்கே யாரும் குறிப்பாக கெட்டவர்களும் இல்லை, நல்லவர்களும் இல்லை. அவர்கள் அவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய மதங்களால் வேற்று மனிதர்களாகப் பார்க்கப்படுகிறார்கள். தேசப்பிரிவினை குறித்தான நாவல்கள், சிறுகதைகளுக்குப் பிறகு நான் வாசிக்க நேர்ந்த, மதக்கலவரத்தின் முகங்களை விளக்கும் அருமையான சிறுகதை. படித்து முடிக்கும்போது மௌனம் சூழ்ந்துகொள்கிறது.

வாழ்வின் தீர்வு தற்கொலை செய்துகொள்ளச் சென்றவன் இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறான். கடைசியில் எதிர்காலத்தை நம்பிக்கையோடு எதிர்கொள்ளப்போகிறான் என்பதைச் சுட்டும் கதை. இடையிடையே தத்துவவிசாரங்கள். கதையின் போக்குக்கு இடையூறாக இல்லாதிருப்பது சிறப்பு.

இருள் இசை ஓர் இசைக்குழுவின் பாடகனின் ஒருநாள் அனுபவம். படிக்கப்படிக்க மாரியம்மன் திருவிழாக்களில் இசைக்குழுக்களின் திரைஇசை நிகழ்ச்சிகளின் நினைவு வருகிறது. இசைக்குழுவினர் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு போற்றற்குரிய மனிதர்கள். ஆனால் உள்ளே இருப்பவர்களும் வெளியில் இருப்பவர்களைப் போன்ற மனிதர்கள்தான் என்பதை சொல்லாமல் சுட்டிச்செல்கிறது கதை. இக்கதையின் முக்கியக்கரு, அந்தப் பாடகன் தன் பிறந்து வளர்ந்த ஊரை 25 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கச்செல்கிற அனுபவம். சொந்த ஊரில் அன்னியனாக உணரும் அனுபவம். நான் அடிக்கடி சந்திக்க நேர்கிற அனுபவம். ஒரேயொரு வித்தியாசம் அந்தப்பாடகன் மறுபடி அந்த ஊருக்குப்போக மாட்டான், நான் போவேன், இன்னும் போகாமல் மீதம் வைத்திருக்கிற ஊர்களுக்கும் போவேன்.

கவுண்டர் கிளப் விரசமில்லாத ஓர் உறவைச் சொல்லும் கதை. கிராமத்தில் மரியாதைக்குரிய கவுண்டர்தான் நாயகன். குறும்பும், வேடிக்கையுமான மனிதரிடம் இளகிய மனமும் இருக்கிறது. அதுவே சிக்கல்களுக்கும் காரணமாக மாறுகிறது. கிராமத்துப் பழமொழிகள் தாராளமாகப் புரளுகின்றன. கவுண்டரின் மனைவி அவருக்கே உரிய நியாயங்களுடன் ஒரு பெண்ணாக இருக்கிறார். இதிலும் யாரும் மனதறிந்து கெட்டவர்கள் இல்லை. இதிலும் சோகமுடிவு கனக்க வைக்கிறது.

வேறிடம் இதன் நாயகன் வேறுயாருமல்ல, ஏதோவொரு கிராமத்திலிருந்து நகரத்தில் வாழ விதிக்கப்பட்ட நீங்களோ நானோதான். அஞ்சலகத்தில் மணியார்டர் அனுப்பக் காத்திருப்பதில் ஏற்படும் சிரமங்களும் நீங்களும் நானும் ஏதோவொரு இடத்தில் அனுபவிப்பவைதான். அதற்குப்பிறகு வீட்டுக்குப்போகும்போது எரிச்சலும் நமக்கு வருவதில்லையா... ஊரிலிருந்து ஆள்மாற்றி ஆள் நகரத்துக்கு வந்து நம் வீடுகளில் தங்கி கழுத்தை அறுப்பதில்லையா... ஊரைச் சுற்றிக்காட்டியும், பொங்கிப்போட்டும் களைத்துப்போனாலும் அதை வெளிக்காட்ட முடியாமல் வெளியே சிரிப்பதில்லையா... இதையெல்லாம் மறக்க ஏதேனுமொரு வடிகாலை சினிமாவோ போதையோ தேடுவதில்லையா... அதுதான் கதை. எந்தவொரு சிறிய விஷயத்தையும் கதையாக்க முடியும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தக் கதை.

வர்ணங்களில் இதுவும் ஹைதராபாத் நகரை மையமாக வைத்து எழுதிய கதை. லட்சியத்தின் தீவிரத்தில் வாழ்க்கையுடன் ஒட்டமுடியாமல் போகும் ஓவியக்கலைஞன். பட்டினி கிடந்தாலும் ஓவியத்தையும், உண்மையையும் கைவிட முடியாதவன். அவனைப் புரிந்துகொண்ட ஒரு நண்பன். இந்த இருவர்தான் கதையின் நாயகர்கள். பார்வையற்றோர் ஆர்ப்பாட்ட ஊர்வலத்தை தற்செயலாகப் பார்க்க நேர்கிறது. அப்போது குண்டர்கள் அவர்களைத் தாக்க, பார்வையற்றோர் அடிபட்டுச் சிதறுகிறார்கள். அந்தக்காட்சியை நினைவிலிருந்து அகற்ற முடியாமல் போகும் கலைஞன் அதை ஓவியமாகத் தீட்டுகிறான். குண்டர்தலைவன் அடையாளம் காணப்பட, கலைஞன் உயிருக்கே ஆபத்து வருகிறது. அண்மையில் பெங்களூரில் காவிக்கும்பல்கள் ஓவியக்கண்காட்சிகளையும் கலைஞர்களையும் அடித்து நொறுக்குவது நினைவுக்கு வருகிறது, இங்கே எந்த அரசியல் கட்சியும் குறிப்பிடப்படவில்லை என்றாலும்கூட. அதனாலேயே கதை மனதோடு ஒட்டிக்கொள்கிறது. கடைசியில் என்ன செய்கிறான் என்பதை இங்கே சொல்ல விருப்பமில்லை. இப்படிச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது எனக்குள்.

இன்னொரு நாளை மனதைக் கனக்க வைக்கும் மற்றொரு கதை. மதக்கலவரப் பின்னணி. முந்தைய கதையின் சில நிகழ்வுகள் இதிலும் இருக்கின்றன. வீட்டைச் சோதனையிடுவதாக நுழையும் காவலர்களில் ஒருவன் அந்த வீட்டின் பெண்ணை பாலியல் வன்முறைக்கு ஆளாக்குகிறான். கையாலாகாத நிலையில் அடங்கிப்போகும் பெண், ஆதரவான அவள் கணவன், நீதி கேட்கத் துணியும்போது எதிர்கொள்கிற பிரச்சினைகள், ஊடகங்களின் இரக்கமற்ற கேள்விகள்... தொடரும் பாலியல் வன்முறைகள் நிறைந்த இன்றைய சூழலில் கவனம் பெறவேண்டிய சிறுகதை.

மரபு நசிந்துவரும் நெசவாளர் வாழ்க்கையைச் சித்திரிக்கும் கதை. கதாசிரியருக்கு நன்கு அறிமுகமான களம். நெசவாளர் குடும்ப ஆண்கள் சிலர் வேறுவழியின்றி நகருக்குப் புலம் பெயர்கிறார்கள். சிலர் கேரளத்துக்கு அரிசி கடத்தி வயிற்றுப்பாட்டை கவனிக்க முயற்சி செய்கிறார்கள். அடிபடுகிறார்கள், உயிரிழக்கிறார்கள், சகாக்களையும் இழக்கிறார்கள். யாரும் சரிசெய்யவே முடியாத சரிவை, எதிர்கொள்ள வழிதெரியாத ஒரு சிக்கலை, நாம் மௌனமாகவே பார்த்துக்கொண்டிருக்க வேண்டியிருக்கிறது என்பதைக் காட்டும் கதை. கதைமாந்தர்கள் எனக்கும் பரிச்சயமானவர்கள். கேரளாவுக்கு அரிசி கடத்துதல் நான் சிறுவனாக இருந்த காலத்திலேயே நடந்திருக்கிறது. அதனாலும் நெருக்கமாக உணர முடிகிறது. குழந்தையைக் குளிப்பாட்டும்போது காலாகாலத்துக்கும் பாடப்படும் பாட்டுடன் கதை முடிகிறது இந்தக் கால்கதா எங்க தங்கமணிக்கு காலம்பூரா பெரிய பெரிய பாடரெல்லாம் போட்டு நல்ல சேலை நெய்து சோறு போடப்போகுதாமா. இந்த வெரல்கதா காலம்பூரா அவங்கப்பனையும் அம்மைவையும் காப்பாத்தப் போகுதாமா...

பெரும்பாலான கதைகள் வேதனையை வெளிப்படுத்தும் கதைகள்தான். இங்கே வேதனைகளே வழக்கமாகிப்போயிருக்கும்போது கதைகளும் அப்படி இருப்பதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது.

ஒவ்வொரு கதையும் வெவ்வேறு களத்தையும் வித்தியாசமான பாத்திரங்களையும் கொண்டிருப்பதால் சலிப்பூட்டுவதில்லை. சோகங்களை கொட்டிமுழக்காமல் இயல்பான நகைச்சுவையை இழையோட விட்டிருப்பதால் வாசிப்பனுபவத்துக்கும் குறைவில்லை.



வேறிடம்
சுப்ரபாரதி மணியன்
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 198 பக்கம், 978-81-234-2023-3, ரூ. 125

வாசிப்பை நேசிப்போம்

Thursday, 18 April 2013

ஆட்டக்களம் 2012 - மீள்பார்வை


தெற்காசிய சேவை என்று முன்னர் அறியப்பட்ட, இன்று திரைகடல் ஆடிவரும் தமிழ்நாதம் என அறியப்படுகிற வானொலியில் ஒவ்வொரு மாதமும் முதல் செய்வாய், மூன்றாம் செவ்வாய் ஆகிய இரண்டு நாட்கள் "ஆட்டக்களம்" என்னும் நிகழ்ச்சி ஒலிபரப்பாகி வருகிறது. சுமார் 20 ஆண்டுகளாக நான் இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறேன்.  புத்தாண்டு துவங்கும் ஒவ்வொரு ஜனவரி மாதமும் முதல் செவ்வாயில், முந்தைய ஆண்டின் நிகழ்வுகளை சிறப்புப் பார்வையாக அலசுவது வழக்கம். அவ்வாறு 2013 ஜனவரி முதல் நாள் ஒலிபரப்பான நிகழ்ச்சியிலிருந்து 2012இல் ஆட்டக்களங்களில் நிகழ்ந்தவற்றின் சாரத்தை மட்டும் இங்கே பார்க்கலாம்.

* * *

ஜனவரியில் நடைபெற்ற 60ஆவது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் கேரள அணி சாம்பியன் ஆனது. மகளிர் பிரிவில் ரயில்வேஸ் அணி கேரளத்தைத் தோற்கடித்து சாம்பியன் ஆனது.

57ஆவது தேசிய பால் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் தமிழ்நாடு அணி சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவில் கர்நாடகம் சாம்பியன் ஆனது.

ஆஸ்திரேலியா சென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இடையில் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நான்கு டெஸ்ட்டுகளிலும் இந்தியாவை படுமோசமாகத் தோற்கடித்த ஆஸ்திரேலியா கோப்பையை வென்றது.

இந்திய மகளிர் 20-20 கிரிக்கெட் போட்டியில் தில்லியைத் தோற்கடித்த ரயில்வேஸ் அணி வெற்றி கண்டது.

சி.கே. நாயுடு கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் அணி, தில்லி அணியைத் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் முக்கியத்துவம் பெறும் ரஞ்சி கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில் தமிழ்நாடும் ராஜஸ்தானும் இறுதியை எட்டின. இருபத்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கோப்பையை மீண்டும் வெல்லும் ஆசையுடன் இறுதியை எட்டிய தமிழகம் ராஜஸ்தானிடம் தோல்வி கண்டது.

தேசிய பிலியர்ட்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற பங்கஜ் அத்வானி மீண்டும் ஒருமுறை சாம்பியன் பட்டம் வென்றார்.

தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் பிரிவில் அமல்ராஜ் சாம்பியன் பட்டம் வென்றார். கடந்த ஐந்து போட்டிகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற ஷரத் கமல் இரண்டாம் இடம் பிடித்தார். மகளிர் பிரிவில் பவுலமி கடக் ஏழாவது முறையாக சாம்பியன் ஆனார்.

 

கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டவர்களில் எட்டு பேர் ஆட்டக்களத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பிப்ரவரி மாத சிறப்புச் செய்தி.
·         மாஸ்கோ ஒலிம்பிக்சில் இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற ஜஃபர் இக்பால்
·         வில்வித்தைக் கலைஞரும், பார்சிலோனா ஒலிம்பிக்கில் பதக்கத்தை மயிரிழையில் தவற விட்டவருமான லிம்பா ராம்
·         இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஜூலன் கோஸ்வாமி, சைநா நேவாலின் பயிற்சியாளர் கோபிசந்த் உள்பட லட்சுமி, ஜ்வாலா கட்டா, என பலரையும் பேட்மின்டன் ஆட்டத்தில் ஒளிரச் செய்த சையத் முகம்மது ஆரிஃப்
·         ஸ்கையிங் வீர்ர் அஜீத் பஜாஜ்
·         ஊனமுற்றோருக்கான தடகள வீரர் ஜஜ்ரிஜா
·         விளையாட்டு வர்ணனையாளர் ரவி சதுர்வேதி
·         உடல்கல்வி ஆசிரியர் பிரபாகர் வைத்யா
ஆகியோர் பத்மவிருது பெற்றனர்.

14ஆவது தேசிய வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவர் பிரிவில் உத்திரப் பிரதேசம் சாம்பியன் பட்டம் வென்றது. மகளிர் பிரிவில் கேரளம் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக்கொண்டது. மூன்றாம் இடத்துக்கான போட்டிகளில் ஆடவர், மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் தமிழக அணிகள் வெற்றி பெற்றன.

ஒலிம்பிக்கை முன்னிட்டு தில்லியில் நடைபெற்ற ஹாக்கி தகுதிச் சுற்றுப் போட்டியில் இந்தியா வெற்றி கண்டு ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தகுதி பெற்றது.

கிரிக்கெட்டுக்கு பிரிமியர் லீக் போல ஹாக்கிக்கு வேர்ல்ட் சீரீஸ் ஆப் ஹாக்கி என்னும் ஹாக்கி லீக் புதிதாகத் துவக்கப்பட்டது. சண்டிகர் காமெட்ஸ், போபால் பாதுஷாஸ், கர்நாடகா லயன்ஸ், டெல்லி விசார்ட்ஸ், ஷேர்-ஏ-பஞ்சாப், சென்னை சீத்தாஸ், மும்பை மரைன்ஸ், புனே ஸ்டிரைக்கர்ஸ் ஆகிய அணிகள் பங்கேற்கும் வேர்ல்ட் சீரீஸ் ஹாக்கி போட்டிகள் மார்ச்-ஏப்ரலில் நடைபெற்றன. ஷேர்-ஏ-பஞ்சாப் சாம்பியன் பட்டம் வென்றது, புனே ஸ்டிரைக்கர்ஸ் இரண்டாம் இடம் பிடித்தது.

இந்தியா ஆஸ்திரேலியா இலங்கை அணிகளுக்கு இடையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றன. இதிலும் இந்திய அணி இறுதியை எட்டமுடியாமல் தோல்வியுடன் திரும்பியது. ஆஸ்திரேலியா வெற்றி கண்டது.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச்-ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. வங்கதேசம் இறுதியை எட்டியது. நடப்புச் சாம்பியன் இந்தியா வெளியேறியது. இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஆசிய கோப்பையை வென்றது என்றாலும் வங்கதேசம் அபார முன்னேற்றம் கண்டிருப்பது இந்தப் போட்டியில் தெளிவாகத் தெரிந்தது.
  
 

ஆசிய மகளிர் குத்துச்சண்டைப் போட்டி மங்கோலியாவில் நடைபெற்றது. பாக்யவதி கச்சாரி, கவிதா செஹல் இருவரும் வெண்கலம் வென்றனர். மேரி கோம், சரிதா தேவி இருவரும் தங்கம் வென்றனர். பிங்கி, சோனியா, மோனிகா, பூஜா ஆகிய நால்வரும் வெள்ளியை வென்றனர். ஆக, இந்திய மகளிர் எட்டு பதக்கங்களுடன் நாடு திரும்பினர்.

செக்கோஸ்லோவேக்கியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில், விகாஸ் கிருஷ்ணன் வெண்கலம் வென்றார். ஷிவ் தாப்பா வெள்ளிப் பதக்கம் பெற்றார்.


ஸ்விஸ் ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில், சாம்பியன் பட்டத்தைத் தக்க வைத்துக்கொண்டார் சாய்னா நேவால்.

மியாமியில் நடைபெற்ற சோனி எரிக்சன் ஓப்பன் டென்னிஸ் போட்டியில் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - செக் குடியரசின் ரேடக் ஸ்டெபானக் ஜோடி வெற்றி கண்டது. லியாண்டர் பயசுக்கு இது ஐம்பதாவது டபுள்ஸ் சாம்பியன்ஷிப் என்பது குறிப்பிடத்தக்கது.


சச்சின் டெண்டுல்கர் நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டார் என்பது அனைவருக்குமே தெரியும். ஆனால் விளையாட்டுலகைச் சேர்ந்த இன்னொருவர் மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்டார் என்பது பலருக்கும் தெரியாது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும், மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணியில் ஆடியவருமான திலீப் திர்க்கி, ஒடிஷா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு பெற்றார்.

ஐபிஎல் 2012 கிரிக்கெட் போட்டி ஏப்ரலில் துவங்கி மே மாதம் முடிவடைந்தது. கோல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியன் ஆனது. கடந்த இரண்டு முறையும் சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் இரண்டாம் இடம் பிடித்தது.

உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தன் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கான போட்டி மாஸ்கோவில் நடைபெற்றது. இந்த முறை அவரை எதிர்த்து ஆடியவர் போரிஸ் கெல்ஃபாண்ட். 13 சுற்றுகளின் முடிவில் இருவரும் சமநிலையில் இருந்தனர். எனவே டைபிரேக்கரில் ஆட நேர்ந்தது. இதில் வெற்றி கண்ட ஆனந்த், உலக செஸ் சாம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.

ஜூன் மாதம் நடைபெற்ற தாய்லாந்து ஓப்பன் கிராண்ட் பிரி போட்டியில் தங்கம் வென்ற சாய்னா நேவால், இந்தோனேசியா ஓப்பன் சூப்பர் சீரிஸ் போட்டியிலும் தங்கம் வென்றார்.

52ஆவது தேசிய தடகளப் போட்டிகள் ஐதராபாதில் ஜூலை மாதம் நடைபெற்றன. டீம் சாம்பியன்ஷிப்பைப் பொறுத்தவரை, ஆடவர் பிரிவில் கேரளம் முதலிடமும், தமிழகம் இரண்டாம் இடமும் பிடித்தன. மகளிர் பிரிவில் கேரளம் முதலிடமும், மேற்கு வங்கம் இரண்டாம் இடமும் பிடித்தன. ஒட்டுமொத்தத்தில் கேரளா முதலிடமும், உத்திரப் பிரதேசம் இரண்டாம் இடமும் பெற்றன.

தெற்காசிய ஜூனியர் டேபிள் டென்னிஸ் போட்டிகளில் ஆறு பிரிவுகளிலும் இந்தியர்களே சாம்பியன் பட்டங்களை வென்றனர். ஆடவர் ஒற்றையர் பிரிவில் அபிஷேக் யாதவ், இரட்டையர் பிரிவில் அபிஷேக் - சுதான்ஷு ஜோடி, கேடட் பிரிவில் உத்கர்ஷ் குப்பா, மகளிர் ஒற்றையர் பிரிவில் ரீத் ரிஷ்யா, மகளிர் இரட்டையர் பிரிவில் ரீத் - மல்லிகா ஜோடி, கேடட் பிரிவில் கர்ணம் ஸ்பூர்த்தி ஆகியோர் முதலிடம் பெற்றனர். இவர்களைத் தவிர, ஒற்றையர் பிரிவில் சுதான்ஷு குரோவர், கேடட் பிரிவில் பெர்டி போரோ, மகளிர் ஒற்றையர் பிரிவில் மல்லிகா பண்டர்கர், கேடட் பிரிவில் சுதிர்த முகர்ஜி ஆகியோர் இரண்டாம் இடம் பெற்றனர்.

ஜூலை இறுதியில் துவங்கி ஆகஸ்ட் மத்தியில் முடிவடைந்தது லண்டன் ஒலிம்பிக் 2012. பதின்மூன்று பிரிவுகளில் 81 விளையாட்டு வீரர்கள் இந்தியாவிலிருந்து பங்கேற்றனர். இந்திய ஹாக்கி அணி முதல் சுற்றுப் போட்டிகளிலேயே தோல்வி கண்டு ஒலிம்பிக் அணிகளிலேயே கடைசி இடமான பனிரெண்டாம் இடம் பிடித்தது.

 

·         இந்தியாவுக்கு முதல் பதக்கம் பெற்றுத்தந்தவர் ககன் நாரங்க். ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் ககன் நாரங்க் வெண்கலப் பதக்கம் வென்றார்.
·         25 மீட்டர் ராபிட் பயர் பிரிவில் அபாரமாக இரண்டாம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார் விஜய்குமார்.
·         பேட்மின்டனில் சாய்னா நேவால் வெண்கலம் வென்றார்.
·         குத்துச் சண்டையில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுத் தந்த முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்றார் மேரி கோம்.
·         யோகேஷ்வர் தத், 60 கிலோ மல்யுத்தப் பிரிவில் வெண்கலம் வென்றார்.
·         66 கிலோ மல்யுத்தப் பிரிவில் வெள்ளியை வென்றார் சுஷில் குமார். இதன் மூலம், தொடர்ந்து இரண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையும் பெற்றார்.
அமெரிக்கா 104 பதக்கங்களுடன் முதலிடம் பிடித்தது. சீனா 88 பதக்கங்களுடன் இரண்டாம் இடம், பிரிட்டன் 65 பதக்கங்களுடன் மூன்றாம் இடம், ரஷ்யா 82 பதக்கங்களுடன் நான்காம் இடம் பிடித்தன. இந்தியா இரண்டு வெள்ளி நான்கு வெண்கலம் என ஆறு பதக்கங்கள் பெற்று 55ஆம் இடம் பிடித்தது.

இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் ஐந்து ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றது. இதில் 4-1 என்ற சீரீஸ் கணக்கில் வெற்றி கண்டது இந்தியா.

  
 

தேசிய அளவில் உயரிய விருதான விளையாட்டு விருதுகளுக்கு இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டவர்கள் -
·         ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற விஜய் குமார், மற்றும் யோகேஷ்வர் தத் இருவருக்கும் கேல் ரத்னா விருது.
·         கிரிக்கெட் ஆட்டக்காரர் யுவராஜ் சிங், மல்யுத்த வீராங்கனை கீதா போகட், வில்வித்தை தீபிகா குமாரி, பொம்பாய்லா தேவி,  தடகளத்தில் சுதா சிங், கவிதா ரவுத்,  பேட்மிண்டனில் அஷ்வினி பொன்னப்பா, பி. கஷ்யப், பில்லியர்ட்ஸ் ஆதித்ய மேத்தா,  குத்துச்சண்டை விகாஸ் கிருஷண்,  ஹாக்கி சர்தார் சிங்,  ஜுடோ யஷ்பால் சோலங்கி,  கபடியில் அனுப் குமார்,  போலோ-வில் சமீர் சுஹாக்,  துப்பாக்கி சுடுதலில் அன்னுராஜ் சிங், ஓம்கார் சிங், ஜாய்தீப் கர்மாகர், ஸ்குவாஷ் தீபிகா பள்ளிகல்,  நீச்சலில் சந்தீப் சேஜ்வால், பளுதூக்கும் சோனியா ச்சானு,  மல்யுத்தத்தில் நர்சிங் யாதவ், ராஜீந்தர் குமார், வுஷு கலையில் பிமல்ஜித் சிங்,  பாராலிம்பிக் தடகள விளையாட்டில் தீபா மல்லிக், ராம்கரன் சிங் ஆகியோர் அர்ஜுனா விருது பெற்றனர்.
·         தடகள வீராங்கனை கிருஷ்ணா பூனியாவின் பயிற்சியாளரும் கணவருமான விரேந்தர் பூனியா, மகளிர் கபடி பயிற்சியாளர் சுனில் தபஸ், மல்யுத்தப் பயிற்சியாளர் யஷ்வீர் சிங்,  ஹாக்கி பயிற்சியாளர் ஹரேந்திர சிங், குத்துச் சண்டைப் பயிற்சியாளர் - கியுபாவைச் சேர்ந்த பெர்னாண்டஸ், பாரா-ஸ்போர்ட்ஸ் தடகளப் பயிற்சியாளர் சத்யபால் சிங், ஆகியோருக்கு துரோணாச்சாரியார் விருதுகள் வழங்கப்பட்டன.
·         தடகளத் துறையில் ஜே.எஸ். பாட்டியா, டேபிள் டென்னிசில் பவானி முகர்ஜி ஆகிய இருவருக்கும் வாழ்நாள் சாதனை விருது தரப்பட்டது.
·         தடகளத்தில் ஜக்ராஜ் சிங் மான், ஹாக்கியில் குன்தீப் குமார்,  மல்யுத்தத்தில் வினோத் குமார், பாரா ஸ்போர்ட்சில் சுக்பீர் சிங் டோகஸ் ஆகியோருக்கு தியான் சந்த் விருது வழங்கப்பட்டது.
·         இந்திய உருக்கு ஆணையம், ரயில்வே விளையாட்டு மேம்பாட்டு வாரியம், ராணுவ விளையாட்டு கட்டுப்பாட்டு வாரியம், ஏர் இந்தியா விளையாட்டு மேம்பாட்டு வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு தேசிய அளவிலான விளையாட்டு மேம்பாட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
·         மவுலானா அபுல் கலாம் ஆசாத் கோப்பையை யாருக்கு வழங்குவது என்பதை இந்த ஆண்டும் விளையாட்டு அமைச்சகம் முடிவு செய்யவில்லை.

இந்தியா வந்த நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வெற்றி கண்டு சீரீஸைக் கைப்பற்றியது. அதைத் தொடர்ந்த இரண்டு ஒருநாள் போட்டிகளில் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் நியூ சிலாந்து வெற்றி கண்டது.

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா கோப்பையை வென்றது.

நேரு கோப்பை கால் பந்துப் போட்டி ஆகஸ்ட் மாதம் நடந்து முடிந்தது. இந்தியா, சிரியா, மாலத்தீவுகள், நேபாளம், கேமரூன் ஆகிய ஐந்து நாடுகள் இதில் பங்கேற்றன. இறுதியை எட்டிய இந்தியா, கேமரூனைத் தோற்கடித்து நேரு கோப்பையை தக்கவைத்துக்கொண்டது.

எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பைக்கான ஹாக்கி போட்டி செப்டம்பரில் நடந்தது. இறுதிப் போட்டியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் - ஏர் இந்தியா ஆகிய இரண்டு அணிகளும் சமநிலையில் இருந்ததால் இரண்டும் கோப்பையைப் பகிர்ந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டது.

52ஆவது தேசிய தடகளப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றன. ஆடவர் பிரிவுகளில் 138 பதக்கங்கள் பெற்ற சர்வீசஸ் முதலிடமும், 119 பதக்கங்கள் பெற்ற ரயில்வே இரண்டாம் இடமும், 72 பதக்கங்கள் பெற்ற ஓஎன்ஜிசி மூன்றாம் இடமும் பெற்றன.
மகளிர் பிரிவில் 208 பதக்கங்களுடன் ரயில்வே முதலிடமும், 42 பதக்கங்கள் பெற்ற ஓஎன்ஜிசி இரண்டாம் இடமும், 40 பதக்கங்கள் பெற்ற கேரளம் மூன்றாம் இடமும் பெற்றன.
சிறந்த தடகளவீரர் என்ற பெருமையை ஆடவர் பிரிவில் இராணுவத்தைச் சேர்ந்த ஜிதின் தாமஸும், மகளிர் பிரிவில் ரயில்வேயைச் சேர்ந்த டின்டு லுகாவும் பெற்றனர்.
 

லண்டனில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில், இந்தியாவிலிருந்து 10 பேர் பங்கேற்றனர். ஆடவர் உயரம் தாண்டல் போட்டியில், கர்நாடகத்தைச் சேர்ந்த கிரிஷா ஹோசநகரா, வெள்ளியை வென்றார்.

பெடரேஷன் கோப்பை கால்பந்துப் போட்டி செப்டம்பரில் முடிந்தது. இறுதிப் போட்டியில் ஈஸ்ட் பெங்கால் அணியும் டெம்போ அணியும் தலா ஒரு கோல் அடித்து சமநிலையில் இருந்தன. கூடுதல் நேரத்தில் ஈஸ்ட் பெங்கால் இரண்டு கோல்கள் அடித்தது, டெம்போ ஒரு கோல் மட்டுமே அடித்தது. ஆக. ஈஸ்ட் பெங்கால் அணி பெடரேஷன் கோப்பையைக் கைப்பற்றியது.


கனடாவில் நடைபெற்ற உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில், 51 கிலோ பிரிவில் வெண்கலம் வென்றார் பபிதா குமாரி. ஆறு ஆண்டுகள் முன் சீனாவில் உலக சாம்பியன்ஷிப்பில் அல்கா தோமர் வெண்கலம் வென்ற பிறகு மற்றொரு பதக்கம் வென்ற இரண்டாமவர் பபிதா குமாரி.

ஹாக்கி இந்தியா நடத்தும் தேசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் போட்டிகள் அக்டோபரில் நடந்து முடிந்தன. ஏர் இந்தியாவைத் தோற்கடித்த பஞ்சாப் வெற்றி கண்டது.

செப்டம்பர் அக்டோபரில் 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. சூப்பர் எய்ட் வரை முன்னேறிய இந்தியா வெளியேறியது. மேற்கிந்திய அணி உலகக் கோப்பையை வென்றது.

மகளிர் 20-20 உலகக் கோப்பையில் இந்திய அணி தகுதிச் சுற்றிலேயே வெளியேறியது. ஆஸ்திரேலியா உலகக் கோப்பையை வென்றது.

20-20 உலகக் கோப்பை முடிந்த கையோடு சாம்பியன்ஸ் லீக் 20-20 போட்டிகள் நடந்தன. முந்தைய சாம்பியன்ஸ் லீக் போட்டிகளில் இந்திய அணிகளே வென்று வந்தன. இந்த முறை சிட்னி சாம்பியன் பட்டம் வென்றது.

அடுத்து, இந்தியாவுக்கு வந்த இங்கிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே 4 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. ஒரு ஆட்டம் டிராவில் முடிந்தது. ஒன்றில் இந்தியா வென்றது. இரண்டு ஆட்டங்களில் வென்ற இங்கிலாந்து சீரிஸைக் கைப்பற்றியது.

சாய்னா நேவால் டென்மார்க் ஓப்பன் பேட்மின்டன் போட்டியிலும் சாம்பியன் ஆனார். இதன் மூலம் ஆறு ஓப்பன் சீரிஸ் சாம்பியன் பட்டங்கள் பெற்றவராக ஆனார் சாய்னா. அடுத்து பிரெஞ்ச் ஓப்பன் சூப்பர் சீரிஸ் பேட்மின்டன் போட்டியில் கலந்து கொண்ட சாய்னா நேவால், காலிறுதிவரை எட்டியபிறகு வெளியேறினார்.

தில்லிக்கு அருகே கடந்த ஆண்டு உருவாக்கப்பட்ட புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் இரண்டாவது பார்முலா ஒன் கார் பந்தயம் நடைபெற்றது. கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற செபாஸ்டியன் வெட்டல் இந்த முறையும் சாம்பியன் பட்டம் வென்றார். பெர்னாண்டோ அலோன்சோ இரண்டாம் இடமும், மார்க் வெப்பர் மூன்றாம் இடமும் பிடித்தனர்.

நவம்பர் மாதம் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தில், விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த அஜய் மக்கன் இடத்தில் புதிய அமைச்சரானார் ஜிஜேந்திர சிங்.

தில்லியில் நேரு கோப்பைக்கான ஹாக்கி போட்டி நவம்பர் மாதம் நடைபெற்றது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அணி இந்துஸ்தான் பெட்ரோலியம் அணியை வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

மூன்றாவது உலகக்கோப்பை கபாடிப் போட்டி பஞ்சாபில் டிசம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. 16 நாடுகள் பங்கேற்றன. இந்திய ஆடவர் அணி பாகிஸ்தானை வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய மகளிர் அணியும் மலேசியாவைத் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்றது.


சீனத்தின் நான்சங் நகரில் நடைபெற்ற ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் அஞ்சலி பாகவத் 397 புள்ளிகள் பெற்று வெண்கலம் வென்றார். ஆசிய அளவில் இது அவருடைய மூன்றாவது பதக்கம் ஆகும்.

இந்தியன் பிரிமியர் லீக்-கிலிருந்து டெக்கான் சார்ஜர்ஸ் நீக்கப்பட்ட பின்பு காலியான ஓரிடத்தை சன் குழுமம் ஏலம் எடுத்த செய்தி நேயர்களுக்குத் தெரிந்திருக்கும். இந்த அணிக்கு சன்ரைசர்ஸ் என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட்  ஆட்டக்காரர் ஸ்ரீகாந்த் ஆலோசகராகவும், டாம் மூடி பயிற்சியாளராகவும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.

டெஸ்ட் சீரீஸைக் கைப்பற்றிய இங்கிலாந்துக்கும் இந்திய அணிக்கும் இடையில் இரண்டு 20-20 போட்டிகள் மாதம் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் இந்தியாவும், இரண்டாவதில் இங்கிலாந்தும் வெற்றி கண்டன.

பாகிஸ்தானுடன் இரண்டு இருபது-இருபது போட்டிகளும் மூன்று ஒருநாள் போட்டிகளும் இடம்பெற்றன.
25ஆம் தேதி பெங்களூரில் நடைபெற்ற 20-20 ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது,
அகமதாபாதில் 28ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வென்றது.
அடுத்து நடைபெற்ற மூன்று ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் சீரீஸ் வெற்றி கண்டது புத்தாண்டுச் செய்தி.

கிரிக்கெட்டில் இந்த ஆண்டின் முக்கிய நிகழ்வோடு இந்த அலசலை நிறைவு செய்யலாம். இதற்காக சுமார் பத்தாண்டுகள் பின்னே செல்வோம் ....
2004இல் பாகிஸ்தானுக்கு எதிராக முல்தானில் ஒரு டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. கங்குலி காயம்பட்டிருந்ததால் டிராவிட் அப்போது கேப்டன். புகழ்பெற்ற ஒரு ஆட்டக்காரர் 194 ரன்கள் எடுத்திருந்தார். இன்னும் 6 ரன்கள் எடுத்திருந்தால் அவர் இரட்டை சதம் அடித்திருப்பார். ஆனால் இன்னிங்சை முடித்துக்கொள்வதாக அறிவித்தார் டிராவிட். இதுகுறித்து அந்த ஆட்டக்காரருக்கு மனவருத்தம் ஏற்பட்டதாகவும் தகவல் உண்டு. ஆனால் டிராவிட் செய்தது சரியா இல்லையா என்பதுதான் கேள்வி.
அந்த ஆட்டத்தில் சேவாக் முதல் இன்னிங்சில் 375 பந்துகளில் 309 ரன்களைக் குவித்திருந்தார். அந்தப் புகழ்பெற்ற ஆட்டக்காரரோ 348 பந்துகளில் 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மேலும் 6 ரன்கள் எடுத்து சதமடிக்க விடுவதா அல்லது ஆட்டத்தை முடிப்பதா என்பதுதான் அந்தக் கேள்வி.
அந்தப் புகழ்பெற்ற ஆட்டக்காரர், இரட்டை சதத்தை எட்ட வேண்டும் என்பதற்காக மட்டை போட்டுக்கொண்டிருந்தார். அவர் ஒரு ரன்கூட எடுக்காத ஓவர்களே பத்து இருக்கும். கடைசி 20 ரன்கள் எடுக்க பத்து ஓவர்கள் ஆகி விட்டன. இந்தக் கட்டத்தில் யுவராஜ் சிங் ஆட்டமிழ்ந்தார். இந்திய அணி ஏற்கெனவே 675 ரன்கள் குவித்து விட்டதால், ஆட்டத்தை மேலும் இழுக்க விரும்பாத டிராவிட் டிரா செய்தார்.
கிரிக்கெட்டை அறிவுபூர்வமாக ரசிப்பவர்கள் டிராவிட் செய்ததுதான் சரி என்றார்கள். உணர்வுபூர்வமாக ரசிப்பவர்கள் தவறு என்றார்கள். ஆனால் டிராவிட்டுக்குத் தெரியும் தான் செய்ததுதான் சரி என்று. தனிநபர்களும் சாதனைகளும் முக்கியம்தான், ஆனால் அணி அதைவிட முக்கியம் என்று கருதியவர் டிராவிட்.
இந்த டிராவிட் மார்ச் மாதம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார்.
அந்தப் புகழ் பெற்ற ஆட்டக்காரர் வேறு யாரும் அல்ல. நூறாவது சதம் அடித்து சாதனை படைத்த, ஒருநாள் கிரிக்கெட்டிலிருந்து விலகிக் கொண்ட டெண்டுல்கர்தான். இந்த இருவரின் விலகலுக்கு இடையே விலகியவர் வி.வி.எஸ். லட்சுமண்.

 * * *
பி.கு. - பதிவில் புகைப்படங்கள் இணையத்திலிருந்து சுட்டவைதான். பெரும்பாலும் பெண்களின் படங்களைத்தான் சேர்த்திருக்கிறேன். ஒவ்வொரு பெண்ணின் படத்தைத் தேட பெயர்களை இடும்போதும், Autosuggestion இன்னொரு சொல்லையும் தானே பரிந்துரைக்கிறது - hot ... ! இதை வக்கிரம் என்பதா, கொடுமை என்பதா...  ஆக, ஹாட் படங்களை தவிர்த்து விட்டு, அவர்களின் இயல்பை வெளிப்படுத்தும் படங்கள் மட்டுமே தரப்பட்டுள்ளன. ஆண்களின் படங்களை அதிகம் சேர்க்கவில்லை. சுஷில் குமார் ஒலிம்பிக் போட்டியில் எதிராளியின் காதைக் கடித்தார் என்று எனக்கு சந்தேகம் இருப்பதாலும், விஜேந்தர் போதை மருந்துக் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பதாலும் அவர்கள் படத்தைச் சேர்க்கவில்லை. 

Tuesday, 16 April 2013

படித்ததில் பிடித்தது 5 - ஒரு ரூபாய் டீச்சர்


இந்தப் புத்தகத்தை வாங்கியதே சுவையான கதை. புத்தகத் திருவிழா நேரத்தில் ஒரு நண்பர் தொலைபேசியில் அழைத்து, நிகழ்ச்சி ஒன்றில் ஒன்பது பேருக்கு பரிசளிக்க வேண்டும், புத்தகங்களாக அளிக்கலாம், நீங்களே வாங்கிக்கொண்டு வாருங்கள் என்றார். சரி என்று அவசர அவசரமாக நிறைய அள்ளிக்கொண்டு போய்க் கொடுத்தேன். புத்தகப் பரிசுபெற இருந்தவர்களில் ஆசிரியர் ஒருவரும் இருந்தார். எனவே, கல்வி தொடர்பான நூல்களும் சில வாங்கினேன். அப்போது கண்ணில் பட்டது ஒரு ரூபாய் டீச்சர். ஓஹோ... டோட்டோ சான், பகல் கனவு போல ஏதோவொரு பள்ளி ஆசிரியரைப் பற்றிய புத்தகமாக இருக்கும் என்று எண்ணி எடுத்துக்கொண்டு வந்தேன்.

தமிழ்ப் பதிப்பாளர்கள்தான் பெரிய புத்திசாலிகள் ஆயிற்றே. பின்னட்டையில் ஆசிரியர் குறிப்பு எப்போதும் இருக்காது. இந்தப் புத்தகத்தில் புத்தக அறிமுகம்கூட பின்னட்டையில் இல்லை. யூமா வாசுகி என்று பார்த்தேன். சரி, மோசமாக இருக்காது என்று எடுத்துக்கொண்டேன். இவரது ரத்த உறவு தொகுப்பை 2010 உலகப் புத்தகத் திருவிழாவின்போது வாங்கி பாதி படித்திருந்தேன். தோழி ஒருவர் இரவல் வாங்கிச்சென்றது இன்னும் திரும்பி வரவில்லை.

பரிசளிக்க புத்தகங்களை நண்பரிடம் கொடுக்கும்போது மனதுக்குள் சிறிய சஞ்சலம்.... தலைப்பு வித்தியாசமாக இருக்கிறதே என்று. அதனால் இதை நான் வைத்துக்கொண்டு வேறொரு புத்தகத்தை பரிசுக்குக் கொடுத்து விட்டேன். இன்றைய வாசிப்புக்குக் கிடைத்ததுதான் இப்படி என்னிடம் தங்கிவிட்ட இந்த ஒரு ரூபாய் டீச்சர். தலைப்பு எனக்குப் பெரிய ஏமாற்றம்.... படித்துக் கொண்டே போகிறேன். உள்ளே டீச்சர் பற்றி எதுவுமே காணப்படவில்லை.

ஆனால் வாசிக்கத் துவங்கியபிறகுதான் தெரிந்தது எவ்வளவு அருமையான புத்தகத்தைத் தக்கவைத்துக்கொண்டேன் என்பது. இதில் உள்ளவை எல்லாம் யூமா வாசுகி மேற்கொண்ட நேர்காணல்கள். நேர்காணப்படுவோர் சொல்வதை அதே மொழிநடையில் தந்திருக்கிறார். சில நேர்காணல்கள் இலக்கணத் தமிழில், சில அந்தந்தப் பகுதியின் வழக்குத் தமிழில். அதுவும் சுவையாகவே இருக்கிறது.

* * *

முதல் நேர்காணலில் சக்தி கோவிந்தன் என்பவரின் மகன் அழகப்பன். அவர் பேசப்பேச தந்தையின் வரலாற்றோடு பதிப்பக வரலாறும் விரிகிறது. இன்று பிரபலமாகப் பேசப்படும் பலர் எங்கே துவங்கினார்கள் என்று தெரிகிறது. ஆனால் இன்று சக்தி கோவிந்தன் என்றால் அவரது ஊரிலேயே தெரியவில்லை. கோவிந்தன் செட்டியார் என்றால்தான் சிலருக்குத் தெரிகிறது.

வை. கோவிந்தன் என்னும் சக்தி கோவிந்தன் சுத்தானந்த பாரதி, சாமிநாத சர்மா ஆகியோரின் சகா. சக்தி காரியாலயம் என்ற பதிப்பகத்தின் மூலம் சாதனை படைத்தவர். சக்தி, மங்கை என்னும் பத்திரிகைகள் நடத்தியவர். இன்று சென்னையில் மியூசிக் அகாடமி இருக்கும் இடத்தில்தான் சக்தி காரியாலயம் இருந்தது. தி.ஜ. ரங்கநாதன், கு. அழகிரிசாமி, தொ.மு.சி. ரகுநாதன் எல்லாரும் இங்கே பணியாற்றியவர்கள். அழ. வள்ளியப்பா இங்கேதான் இருந்தார். குமுதத்துக்குச் சென்ற ரா.கி. ரங்கராஜன் இங்கேதான் இருந்தார். கணக்கு வழக்குப் பார்த்துக்கொள்ள வந்த தமிழ்வாணன் இங்கே அணில் என்னும் குழந்தைகள் பத்திரிகையில் பணியாற்றி, பின்னர் குமுதத்துக்குப் போய் கல்கண்டு துவங்கினார்.

வை. கோவிந்தன் ஒரு ரூபாய்க்கு பாரதி பாடல்களைப் பதிப்பித்து புரட்சி செய்தவர். தரமான நூல்களை வெளியிடுவதையே இலட்சியமாகக் கொண்டிருந்ததால், நொடித்தவர். நான் பணியாற்றிய நிறுவனத்தின் வாயிலாக இவரைப்பற்றிய சில விவரங்கள் எனக்கு முன்பே அறிமுகமானவை என்பதாலேயே இன்னும் நெருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். இதற்குமேல் அவருடைய வறுமை, எதிர்கொண்ட சிக்கல்கள் ஆகியவற்றைப்பற்றியெல்லாம் எழுதி வாசகர்களை நோகச்செய்ய எனக்கு விருப்பமில்லை.

சக்தி கோவிந்தனை அறிந்தால் தமிழின் முன்னோடி எழுத்தாளர்கள் பலரையும் அறிய முடியும். இலக்கியத்தின் ஜாம்பவான்கள் எல்லாம் எங்கிருந்து துவங்கினார்கள் என்றும் அறியலாம். அரசியலின், வரலாற்றின் சில பக்கங்களையும் அறியலாம்

* * *

இரண்டாவது நேர்காணல் கவிஞர் சுகுமாரன். இலக்கணத் தமிழ் நடையில் எழுதப்பட்டிருப்பதால் சுகுமாரனே எழுதித் தந்திருப்பாரோ என்று தோன்றுகிறது. அதனால் என்ன, விஷயங்கள்தானே முக்கியம்.  

சுகுமாரனைப்பற்றி இன்று யாருக்கும் தெரியாமல் இருக்காது என்பதால் அவரை விட்டுவிட்டு, அவருடைய கூற்றுகளிலிருந்து சிலவற்றைத் தரலாம். நிறையவே குறித்து வைத்திருந்தாலும், சில மட்டுமே இங்கே.

மனிதனுக்கு வழிபடுவதற்கோ இட்டு நிரப்புவதற்கோ ஏதாவது ஒரு இடம் தேவைப்படுகிறது. அந்த இடத்தை பெரியார் காலியாகவே விட்டு விட்டார். ... அவர் பேசிய பல கருத்துகள் அன்றைக்குப் (பள்ளியிறுதிப் பருவத்தில்) புரியவில்லை. இன்றைக்கு எனக்கு சில மறுப்புகள் உண்டு. இருந்தாலும் அவர் எனக்கு மிகப்பெரிய விழிப்பைத் தந்தவர்.  ...

என்னை மிகப் பெரிதும் பாதித்தவர் சுந்தர ராமசாமி. இரண்டாவது ஆத்மாநாம். மூன்றாவது பிரம்மராஜன். பிரம்மராஜன் எழுத்து ரீதியாக என்னை பாதிக்கவில்லை. என் வாசிப்பு கூர்மைப்படுவதற்கும் எனது அக்கறைகள் வேறு கலைகளை நோக்கிப் போவதற்கும் வாசல் திறந்து விட்டவர் பிரம்மராஜன். ...

பிரம்மராஜன் தமிழில் மிக முக்கியமான கவிஞர் என்பதில் மாற்று அபிப்பிராயம் கிடையாது. ... ஆனால் பின்னால் என்ன காரணத்தாலோ ரொம்பவும் திருகலான மொழியில், நாம் பொதுவாகச் சொல்வதுபோலப் புரியாத கவிதைகளை எழுதினார். ...

கவிதை வெறுமனே தனிமனித அனுபவம் அல்ல. தனிமனித அனுபவமாக இருக்கும்போதும் அது சமூக அனுபவம். சமூக அனுபவம் என்று சொல்லும்போது வெறும் சமூக அனுபவம் மட்டுமல்ல, ஒரு தனிமனித அனுபவமும்கூட என்கிற பெரிய தெளிவை ஆத்மாநாமுடைய தொடர்பு தந்தது. ...

தொடர்ந்து படிக்க வேண்டும். எழுதுவது நம் வேலை. அதற்கு வருகிற விமர்சனங்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டியதில்லை என்கிற தெளிவைத் தந்தது அவர்தான். (சுந்தர ராமசாமி) ...

நமக்கு மொழி தெரியும் என்பதாலேயே கவிதை புரிய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ... கவிதை பூடகத் தன்மையோடு இருக்க வேண்டும் என்பதை ஒரு உறுதியான கருத்தாக வைக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை. கவிதை நீங்கள் எதிர்பார்த்த மொழியில் பேசவில்லை என்பதுதான் அதில் அடிப்படை. கவிதை அது பேசிக் கொண்டிருக்கும் மொழி அல்லாது இன்னொரு மொழியில் தன்னை விளக்கிக் கொண்டேயிருக்கிறது. ...

படைப்பாளிகளுக்குச் சமூகம் கடமைப்பட்டு இருக்கிறது, படைப்பாளிகளை சமூகம் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்னும் கருத்தில் எனக்கு மாற்று அபிப்ராயம் உண்டு. ...

சாதி சார்ந்தோ, மதத்தைச் சார்ந்தோ, மிகப்பெரிய மக்கள் கூட்டத்தை இணைப்பதைவிட மொழியைச் சார்ந்து இணைப்பது ஒரு பண்பாட்டு நடவடிக்கை. அதன் மூலமாக, மொழியின் மூலமாக சுயமரியாதையை ஏற்படுத்த முடியும் என்பதுதான் திராவிட இயக்கத்தின் வெற்றி.
...
தன் கவிதை அனுபவம், மலையாள-தமிழ் கவிதை ஒப்பீடு என சுகுமாரனின் பல கூற்றுகளைக் குறித்து வைத்திருக்கிறேன். தட்டச்ச நேரமில்லை. இந்த நேர்காணலில் பெரிய குறை அது முடிவுறாமலே முடிவுறுவதுதான். கிட்டத்தட்ட என் சமகால அனுபவங்கள் இவருடையது என்பதால் அடையாளப்படுத்திப் பார்த்துக்கொள்ள நிறையவே இருக்கிறது சுகுமாரனின் கூற்றுகளில்.

* * *

அடுத்தது கோபிகிருஷ்ணன் நேர்காணல். கோபிகிருஷ்ணன் அதிகம் அறியப்பட்டவரல்ல. ஆனால் எனக்கு குறுகிய காலம் நேரடி அறிமுகமும் இருந்திருக்கிறது. அதனாலேயே அவருடைய வலிமிகுந்த அவரே சொன்னதுபோல அசிங்கமான சுயவரலாறு மனதைத் தொடுவதாக இருக்கிறது.

என்னைப்போலவே பல வேலைகளைச் செய்தவர், ஓரிடத்தில் தங்காமல் ஓடிக்கொண்டே இருந்தவர். எங்கும் நிலைத்து நிற்க இயலாத மனநோய்க்கு ஆளானவர். பெண்ணின் அன்பைத் தேடியவர், அதற்காக அலைந்தவர். புரிந்து கொள்கிற விஷயத்தில் தவறும் செய்தவர், ஏமாந்தும் நின்றவர். கடைசியில் கொஞ்சம் அமைதியான குடும்ப வாழ்க்கை அமைந்தவர். அதையும் சிக்கலாக்கிக் கொண்டவர். அல்லது சிக்கல் அவருடைய ராசியாக இருந்தது.

இந்த நேர்காணலில் தான் எழுதிய ஒரு காதல் கடிதம் பற்றியும், அதனால் ஏற்பட்ட சிக்கலையும் அவரே விளக்குகிறார். அதே சிக்கல் அவருடைய வாழ்க்கை முழுதும் தொடர்கிறது. அதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. வேறெவருக்கும் புரியக்கூடியதல்ல. ஆம், அவர் தன் மனைவிக்கு எழுதிய காதல் கடிதத்தை நான் படித்திருக்கிறேன். ஆனால் அப்போது தெரியாத அவருடைய மனச்சிக்கல்கள் இப்போது கொஞ்சம் புரிபடுவதாகத் தோன்றுகிறது.

இவருடைய கதைகளைப் படித்திருக்கிறேன். ஓரிரு நூல்களும் என்னிடம் இருக்கலாம். அவரை அவருடைய கதைகளில் காணலாம். தமிழ்ச் சிறுகதைத்தளத்தில் அவருக்கொரு தனி இடம் உண்டு.

* * *

அடுத்து வருபவர் சிந்தாமணி. புதுக்கோட்டை அருகே ஒரு ஊரில் சிதைக்கு தீமூட்டும் பணியில் இருக்கும் அபூர்வப்பெண். இவர் கூறுவது அப்படியே வழக்குமொழியில் இருப்பதால் அதன் சுவை கூடுகிறது. இங்கே சுவை என்கிற சொல் பொருந்தாதுதான்.

பாரம்பரியத்துக்கு எதிரான தொழிலில் ஈடுபட்டிருப்பவர். கணவனிடமிருந்து தொழிலைக் கற்றுக் கொண்டவர். தொழிலுக்கே உரிய போட்டிகளையும் சமாளிக்க வேண்டியவர். சிதை எப்படி அடுக்குவது, குழைத்துப் பூசுவது, காற்றுக்கும் நெருப்புக்கும் ஓட்டை போடுவது என்றெல்லாம் இவர் விளக்கும்போது கண்முன் ஒரு சிதை உருவாகிறது.

இது எழுதப்பட்டது 2003. அப்போது இவர் 25 ஆண்டுகளாக இதே வேலை செய்கிறார். ஆண்டுக்கு சராசரியாக 10-15 என்றால் .... கட்டிட வேலை கிடைத்தால் அதற்கும் செல்கிறார். மகன் தவுலடிக்கப் போகிறான். சொந்த வீடு இல்லை, நிலபுலன் ஏதும் இல்லை. நாம் பேசுகிற சமூகப் பாதுகாப்புகள் ஏதும் இல்லை.

சொந்த உழைப்பில் மட்டுமே ஜீவனம். ஆனாலும் சுரண்டலும் ஜாதியும் வாட்டுகின்றன. பட்டா கொடுக்கப்பட்ட இடம் ஆக்கிரமிக்கப்பட்டு விட்டது. ஆண்டவனிடம் கோரிக்கை வைப்பதைத் தவிர வேறு வழியில்லை. இவர் சக்கிலியர் என்பதால் பள்ளர் பறையர் இவருக்கும் மேல் ஜாதி. கூடவே வருகின்றன சாதி சார்ந்த சொலவடைகள் சாணான கண்டா தீட்டு, சக்கிலியனத் தொட்டாத்தான் தீட்டு. சாமப் பயிர் அழகு, சக்கிலியப் பெண் அழகு.

நகர வாழ்க்கைக்கு அறிமுகமற்ற வாழ்க்கையை அறிமுகம் செய்கிறது இந்த நேர்காணல்.

* * *


கடைசியாக வந்து சேர்ந்தார் ஒரு ரூபாய் டீச்சர். சரஸ்வதி அம்மா. 2003இல் நேர்காணல் நடக்கும்போது இவருக்கு வயது 105.

பால்ய விவாகத்துக்கு ஆளானவர். படித்தவர். சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றவர். சரோஜினி நாயுடுவின் உறவினர். கஸ்தூரி பாவுடன் நெருங்கிய பழக்கம் உண்டு. ஆறுமாதம் ஒன்றாக சிறையில் கழித்தவர். தடியடி பட்டவர். கணவர் குண்டடிபட்டு இறந்தவர். போராட்டக் கூட்டத்தில் குழந்தைகளையும் இழந்தவர். சகோதரனையும் இழந்து, பட்டினி கிடந்து, நடந்தும் அலைந்தும் திரிந்தும் பட்டுக்கோட்டை வந்து சேர்ந்து டியூஷன் நடத்தி வாழ்க்கை நடத்தி வந்தவர்.

இன்னும் சொல்ல நிறைய இருக்கிறது இவரது வேதனைக் கதையில். மாதம் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு சுமார் 5000 பேருக்கு பாடம் சொல்லிக்கொடுத்தவர். ஆசிரியர் குடும்பத்தைச் சேர்ந்த எனக்கு இது ஒன்று போதாதா...

கடைசிபத்தி கலங்க வைக்கிறது. கீத்து பிஞ்சிபோயி மழை வீட்டுக்குள்ளே கொட்டுது. ராத்திரி பூரா சுவர் ஓரமா ஒக்காந்துகிட்டேயிருந்தேன். எனக்கு ஆதரவு இல்ல. யாருமில்ல. எனக்கு எந்த நேரமும் எது நடக்கும்னு தெரியல. அப்படி ஒண்ணு நடந்து நான் செத்துப்போயிட்டேன்னா தயவுசெஞ்சி ரொம்பநேரம் போட்டு வைக்காம ஒடனே அடக்கம் பண்ணிடுங்க. இதுதான் என் கடைசி ஆசை.

* * * 


ஆனாலும், போகிற போக்கில் ஒரு ரூபாய் வாங்கிக்கொண்டு டியூஷன் எடுத்தார் என்று ஒரு வரி வருவதால் தலைப்பு நியாயமாகி விடுகிறது. எனக்கு, ஒரு ரூபாய்க்கு நூல்களை வெளியிட்ட சக்தி கோவிந்தன் மற்றொரு ஒரு ரூபாய் டீச்சர். ஒரு ரூபாய்கூட இல்லாமல் ஊர்ஊராய் அலைந்த கோபி கிருஷ்ணனும் ஒரு டீச்சர்.

2003இல் எடுக்கப்பட்ட நேர்காணல்கள் 2011இல் புத்தகமாக வருகிறது என்றால், தமிழ் பதிப்புலகை எப்படி சாடலாம்.... நீங்களும் படித்துவிட்டு யோசனை சொல்லுங்கள். 






ஒரு ரூபாய் டீச்சர், யூமா. வாசுகி 
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
978-81-234-1978-7, ரூ. 80