Sunday, 17 November 2013

சச்சினுக்கு பாரத ரத்னா சரிதானா...


இப்போது இந்தக் கேள்வியே ஒருவகையில் அர்த்தமற்றது. ஏற்கெனவே அறிவிக்கப்பட்டாகிவிட்டது. இனி கேட்டுப்பயனில்லை என்றும் கூறலாம். அல்லது, இதுபோன்ற கேள்விகளை எழுப்பினால்தான் இனிமேல் கவனமாக இருப்பார்கள் என்றும் கூறலாம்.

விருதுக்கு இந்தியர்கள் மட்டுமே தகுதியுடையவர்கள் என்று இல்லை. பிரதமரின் பரிந்துரையின்பேரில் உலகின் எந்தப் பகுதியில் இருப்பவருக்கும் தரலாம். எல்லை காந்தி என்றழைக்கப்பட்ட கான் அப்துல் கபார் கானுக்கும், நெல்சன் மண்டேலாவுக்கும் தரப்பட்டது இப்படித்தான்.

பாரத ரத்னா என்பது நாட்டின் மிக உயரிய விருது. 1955இல் நிறுவப்பட்டது. அப்போதைய முடிவின்படி, காலமானவர்களுக்கு இந்த விருது தரப்படாது என்று முடிவாகியிருந்தது. 1966இல் இந்த விதி மாற்றப்பட்டது. அபுல் கலாம் ஆசாத் அரசுப் பொறுப்பில் இருக்கும்போது அவர் பெயர் தேர்வுசெய்யப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்தார். 1992இல் தேசிய முன்னணிக்கு அடுத்து வந்த காங்கிரஸ் அரசு அபுல் கலாம் ஆசாதுக்கு விருது அளித்தது.

இந்த விருதில் அரசியல் அல்லது நிர்ப்பந்தம் எப்போது கலந்தது? 1987 வரை விருது அளிக்கப்பட்டவர்கள் கல்வி, அறிவியல், அரசியல் ஆகிய துறைகளில் சேவை செய்தவர்கள் என்று தெளிவாகத் தெரிகிறது. 1988இல் எம்ஜிஆருக்கு விருது அளிக்கப்பட்டதிலிருந்து அரசியல் தொடங்குகிறது. 1984 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி இருந்தது. எம்ஜிஆர் மறைவைத் தொடர்ந்து, அவருக்கு விருது தர மத்திய அரசு முடிவு செய்தது. 1989 தேர்தலில் அதே கூட்டணி தொடர்ந்தது. திமுக ஒரு தொகுதியில்கூட வெல்ல முடியாமல் துடைத்தெறியப்பட்டது.

இப்படிச் சொல்வதால், 1988க்குப் பிறகு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டவர்கள் எல்லாருமே அரசியல் காரணங்களுக்காகவே வழங்கப்பட்டவர்கள், தகுதி அற்றவர்கள் என்பதாகக் கருதிவிடக் கூடாது. நெல்சன் மண்டேலா விடுதலை ஆகிற கட்டத்தில் அவருக்குத் தரப்பட்டது இதற்கு உதாரணம். தேசிய முன்னணி அரசின்போது அம்பேத்கருக்குத் தரப்பட்டதும், அடுத்து வந்த காங்கிரஸ் ஆட்சியில் ராஜீவ் காந்திக்குத் தருகிறபோது, படேலுக்கும் தரப்பட்டதும் அரசியலானதன் உதாரணம்.

ஆக, விருதுகள் தகுதியுள்ளவர்கள் என்பதால் மட்டுமல்ல, நிர்ப்பந்தங்களின் காரணமாகவும் அளிக்கப்பட்டன. அழுதபிள்ளைக்குப் பால் கிடைக்கும் என்பது போல. 2001இல் லதா மங்கேஷ்கருக்குத் தரப்பட்டது, பி. சுசீலாவுக்கு இதுவரை கிடைக்கவில்லை. இளையராஜாவுக்கு இன்னும் தரவில்லையே என்று தமிழர்கள் பலருக்கும் குறையாக இருக்கிறது.

இப்படி கிடைக்காதவர்கள் பெயர்களைப் பட்டியலிடுவது மிகச் சுலபம். ஏன் என்றால், இந்தியாவில் திறமை வாய்ந்தவர்கள் ஏராளம். இன்னும் விருது வழங்கப்படாத சீர்திருத்தச் செம்மல்கள், விஞ்ஞானிகள் அரசியல் வாழ்வில் அப்பழுக்கற்றவர்கள் இருந்திருக்கிறார்கள். பட்டியலிடுவதும் சாத்தியமில்லை. உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், பெரியார், ஹோமி பாபா, கேப்டன் லட்சுமி, சுந்தர்லால் பகுகுணா என எத்தனையோ பேரைக் குறிப்பிடலாம். இந்திய வேதியியல் தொழில்துறையின் தந்தையும்கல்விக்கே தன் வாழ்க்கையையும் சேமிப்பையும் முழுவதையும் அர்ப்பணித்த பிரபுல்ல சந்திர ரே - அவருக்கே இந்த விருது தரப்படவில்லை. அதற்காக, அரசியல் அல்லது வேறு நிர்ப்பந்தங்கள் காரணமாக எல்லாரையும் திருப்திப்படுத்த பட்டாணிக்கடலை விநியோகிப்பது போல விருதுகளை வழங்கினால் அப்புறம் தமிழ்நாட்டின் கலைமாமணி விருதுக்கு இருக்கிற மரியாதைதான் அதற்கும் இருக்கும்.

இந்த விருதுக்கு யார் தகுதி உடையவர்கள்.... கலை, இலக்கியம், அறிவியல், மக்கள் சேவை ஆகியவற்றில் மகத்தான பங்காற்றியவர்களுக்கு பாரத ரத்னா விருது தரலாம் என்பதுதான் ஆரம்பத்தில் விதியாக இருந்தது. தேசிய விளையாட்டான ஹாக்கியின் பிதாமகன் தியான்சந்துக்கு இந்த விருதை தர வேண்டும் என்று விளையாட்டு அமைச்சகம் கருதிய அதே நேரத்தில், 2011இல், சச்சினுக்கும் தர வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. எனவே விதிகள் மாற்றப்பட்டன.

விளையாட்டும் இதில் சேர்க்கப்பட்டது என்று பலரும் நினைக்கிறார்கள். உண்மையில் விளையாட்டும் இதில் சேர்க்கப்படவில்லை. மாறாக, எந்தத்துறைக்கும் வழங்கலாம் என்று விதி மாற்றப்பட்டுள்ளது என்பதே நிதர்சனம்.
It is awarded in recognition of exceptional service/performance of the highest order in any field of human endeavour.

அதாவது, இனிவருகிற காலத்தில் எவருக்கு வேண்டுமானாலும் இந்த விருது வழங்கப்படலாம். இந்தத் திருத்தம், மேலும் அரசியலாவதற்கே வழி வகுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுகுறித்தே நாம் கவலைப்பட வேண்டும். அல்லது சச்சினுக்குக் கிடைத்ததில் சந்தோஷப் படுவதுபோல சந்தோஷப்பட பழகிக்கொள்ள வேண்டும்.

சச்சினுக்கு இந்த விருது தருவது அவசியமில்லை என்று நான் ஏன் கருதுகிறேன். சச்சின் மீது வெறுப்பா.... நிச்சயமாக இல்லை. கிரிக்கெட்டில் அவர் சாதித்தது நிறைய. அதில் சந்தேகமே இல்லை.  குற்றம் கண்டுபிடித்துப் பெயர் வாங்குவதா? இல்லை, வலைப்பதிவு எழுதி அப்படி என்ன பெயரும் புகழும் கிடைத்துவிடப்போகிறது. அதுவல்ல விஷயம்.

சச்சினுக்கு விருது வழங்குவதை கேள்வி கேட்டால் அதிருப்தி அடைகிறவர்கள் அடிப்படையான ஒரு விஷயத்தை மறந்து விடுகிறார்கள் --- விளையாட்டுத் துறைக்கென தனியாக நாம் விருதுகளை வழங்கி வருகிறோமே, பின் இதையும் அவர்களுக்கே ஏன் வழங்க வேண்டும் என்பதே என் கேள்வி. விளையாட்டுத்துறையின் மிக உயரிய விருது கேல் ரத்னா - விளையாட்டு ரத்தின விருது. அத்தோடு நிறுத்திக்கொள்ளலாம்.

இந்தக் கேள்வி மேலும் சில துணைக்கேள்விகளை எழுப்புகிறது. அப்படியானால் இலக்கியம், கலை போன்ற துறையினருக்கும் தர வேண்டாமே? ஆம், தர வேண்டியதில்லை. (இலக்கியத்துக்கு இதுவரை யாருக்கும் பாரத ரத்னா தரப்பட்டதில்லை.) இலக்கியத்துக்கு சாகித்ய அகாதமி இருக்கிறது. கலைக்கு சங்கீத நாடக அகாதமி விருது இருக்கிறது. திரைப்படத்துக்கு தாதா சாகேப் பால்கே விருது இருக்கிறது. அவர்களுக்கே இந்த விருதையும் தர வேண்டிய அவசியம் இல்லை. இவை தவிர, எல்லாத் துறைகளுக்கும் தரப்படுகிற பத்ம விருதுகளும் நிறையவே உண்டு.


எனவே, பாரத ரத்னா விருதை நாட்டுக்கும் மக்களுக்கும் உண்மையாக உழைத்தவர்களுக்கு மட்டுமே என்று விதிக்க வேண்டும். இல்லையேல் இன்று எழுப்பப்படுகிற அதே கேள்விகள் ஒவ்வொரு ஆண்டும் எழுவதைத் தவிர்க்க முடியாது.

5 comments:

  1. ஏராளமான பணம் சம்பாதித்துவிட்டவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதை நான் ஆதரிக்கவில்லை. விளையாட்டுத்துறைக்கு- குறிப்பாக ஊழல் மிகுந்த கிரிக்கெட் துறைக்கு -வழங்கப்படுவது முற்றிலும் அறத்திற்கு மாறானது.

    ReplyDelete
  2. அருமையான அலசல்...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. மனித குல சேவை ஆற்றியோரை கவுரவிக்கும் முகமாய் நிறுவப்பட்ட பாரத ரத்தின விருதுகள் இன்றும் தன்னலத்துக்கும் அரசியல் லாபத்துக்கும் எறியப்படும் எலும்புத்துண்டைப் போல மாற்றியமை வருந்தத் தக்கது. துறை சார் சாதனைகளுக்கு தாங்கள் குறிப்பிட்டது போல பல உயரிய விருதுகள் உள்ள போது, மானிடப் பயனுக்கு உழைக்காதோருக்கு பாரத ரத்தின விருதளிப்பது வருந்த தக்கதோர் விடயம். உண்மையில் மக்கள் நலனுக்காக மூட நம்பிக்கைகளை எதிர்த்துப் போராடி உயிர்நீத்த நரேந்திர தபோல்கருக்கு இவ்விருது கொடுக்கப்பட்டு இருத்தல் வேண்டும். மாறாக நடந்து கொண்டிருப்பவைகளை பார்த்தால் உயரிய விருதின் மேன்மையை குழி தோண்டிப் புதைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்றே தோன்றுகின்றது.

    ReplyDelete
  4. Very well said. Very nice posting my friend. The value of Bharath Rathna is going down. Sachin does not deserve this prestigious award.

    An Indian

    ReplyDelete
  5. மிகவும் தர்க்கரீதியில், உறுத்தாத எழுத்துநடை.

    இனி, தொடர்ந்து உங்களை வாசிப்பேன். நன்றி.

    ReplyDelete