நாளை தில்லி
சட்டமன்றத் தேர்தலுக்கு வாக்குப்பதிவு. மொத்தம் 70 தொகுதிகள்.
15
ஆண்டுகளுக்கு முன்பு வெங்காய விலை உயர்ந்து, மக்களின் அதிருப்திப்புயலில் பாஜக
அரசு அடித்துச் செல்லப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. இப்போது சக்கரம்
முழுச்சுற்று சுற்றிவிட்டு மீண்டும் அதே வெங்காய விலையில் வந்து நிற்கிறது.
முந்தைய
இரண்டு தேர்தல்களிலும் பாஜக ஆனமட்டும் முயற்சி செய்தும் ஆட்சியைக் கைப்பற்ற
முடியவில்லை. இன்றில்லையேல் என்றும் இல்லை என்ற நிலையில் இந்த முறை தீவிரமாக
இறங்கியிருக்கிறது.
புதிதாகப்
பிறந்த சாமானிய மக்கள் கட்சி - ஆம் ஆத்மி பார்ட்டி (ஆப் கட்சி), மேற்கண்ட
இரண்டுக்கும் கடும் போட்டியாகத் தலைதூக்கியிருக்கிறது.
இதுதவிர
மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும், பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் எல்லாத்
தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிகள் 21 தொகுதிகளில்,
தேதிமுக 11 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
பிஎஸ்பி,
என்சிபி ஓரிரு தொகுதிகளில் வெல்லலாம். கம்யூனிஸ்ட் வாய்ப்பு மிக அரிது.
தேதிமுக.... சொல்லவே தேவையில்லை. இரண்டு மூன்று நாட்களுக்கு முன் அடுத்த தெருவில்
விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். அவர் பேசியதை பிரச்சாரம் என்று சொல்ல
வேண்டுமானால் பிரச்சாரம் என்றால் என்ன என்பதன் பொருளையை புதிதாக எழுத வேண்டும்.
அதை விடுங்கள்.
தமிழ்நாட்டுத்
தேர்தலில் பணம் விளையாடுவது குறித்து நிறைய நண்பர்கள் பதிவு எழுதுவதுண்டு. தில்லி
சற்றும் குறைந்ததல்ல. பாஜகவிடமிருந்து ஒரு வாக்குக்கு 1000 ரூபாய் தருகிறோம் என்று
வீடு தேடி வந்தது வாய்ப்பு. காங்கிரசும் இதேபோல அளித்திருக்கும், என் வீட்டுக்கு
வரவில்லை என்பதுதான் வித்தியாசம். அடுத்த தெருவில் ஒரு வீட்டில் பகுஜன் சமாஜ்
கட்சி பணவிநியோகம் செய்வதைப் பெறுவதற்காக நீண்டவரிசையே காத்திருந்தது. நேற்று
சந்தித்த நண்பர் ஒருவர், பாஜக ஏஜென்டுகள் பாட்டில் விநியோகம் செய்ய முன்வந்ததையும்
தான் வேண்டாம் என்று மறுத்ததையும் தெரிவித்தார். ஆக, இதுதான் இப்போது நேஷனல்
ஃபினாமினா.
தமிழர்கள்
நிறையப்பேர் வசிக்கும் சேரிப்பகுதிகளில் இதுவரை பணம் யார் கைக்கும்
போய்ச்சேரவில்லை. சாராயம் மட்டுமே கிடைத்திருக்கிறது என்று மிகவும்
வருந்தினார்கள். சிலருக்கு புடவை வேட்டிகள் கிடைத்தன. ஆனால் ரொக்கம்
கிடைக்கவில்லை. அங்கே இருக்கும் குட்டித்தலைகள் காற்றுள்ளபோதே
தூற்றிக்கொள்கிறார்கள். (சேரிப்பகுதிகளை
ஜேஜே காலனி என்பார்கள். தில்லிக்கு வந்த புதிதில் அட, ஜெயலலிதாவின் பெயரால்
தில்லியில் இத்தனை காலனிகளா, அவருக்கு இவ்வளவு செல்வாக்கா என்று வியந்துபோனேன். பிறகுதான்
தெரிந்தது, அது ஜுக்கி-ஜோப்டி Juggi Jhopdi
காலனிகள் என்பதன் சுருக்கம் என்று.)
எந்தத்
தொகுதியிலும் வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்குகள் இலட்சத்தைத் தாண்டியதில்லை. வெற்றி
பெற்றவருக்குக் கிடைத்த வாக்குகளில் குறைந்தபட்சம் 27500, அதிகபட்சம் 64500. (கவனிக்கவும் - இது வாக்கு வித்தியாசம் அல்ல, வெற்றி பெற்றவருக்குக் கிடைத்த வாக்குகளே இவ்வளவுதான்) ஆக,
மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இங்கே சகஜம்.
2008
தேர்தலில் கட்சிகளுக்குக் கிடைத்த வாக்கு விகிதம் - காங்கிரஸ் 40, பாஜக 36, பகுஜன்
சமாஜ் 14. 2003 தேர்தலைவிட கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 4 சதவிகித வாக்குகள்
குறைந்தன, அதன் விளைவாக, கிடைத்த இடங்களின் எண்ணிக்கையும் 47இலிருந்து 43 ஆகக்
குறைந்தன. பாஜக-வுக்கு 3 சதவிகிதம் உயர்ந்தது, 3 இடங்கள் அதிகம் பெற்று, 23
தொகுதிகள் கிடைத்தன.
தில்லி
தேர்தல் முடிவுகள் எப்படி மாறக்கூடும் என்பதை மேற்கண்ட இரண்டு பத்திகளும்
உதாரணமாகக் காட்டுகின்றன.
மின்கட்டணம்
குறைப்போம், விலைவாசியை கட்டுப்படுத்துவோம், அங்கீகாரமற்ற காலனிகளுக்கு அங்கீகாரம்
அளிப்போம், ஆண்டுக்கு 12 எல்பிஜி சிலிண்டர்கள், தில்லிக்கு மாநில அந்தஸ்து, என்பவை
பாஜகவின் முக்கிய வாக்குறுதிகள்.
அங்கீகாரமற்ற
காலனிகளுக்கு அங்கீகாரம், தெரு வியாபாரிகளுக்கு தனி சந்தை, உணவுப்பாதுகாப்பு,
ஏழைகளுக்கு வீடுகள் ஆகியவை காங்கிரஸ் வாக்குறுதிகள்.
மின்கட்டணம்
குறைப்பு, ஏழைகளுக்கு இலவச குடிநீர், ஊழல் ஒழிப்புக்கு ஜன் லோக்பால், ஏழைகளுக்கு
வீடுகள் போன்றவை தவிர, அந்தந்தத் தொகுதிக்கென தனி தேர்தல் வாக்குறுதிகளும்
முன்வைக்கிறது ஆப் கட்சி.
மின்கட்டணம்
குறைப்பு என்பது எவராலும் சாத்தியப்படாது. தில்லியில் தடையற்ற மின்சாரம். அதிக
விலை கொடுத்து வாங்கி குறைந்தவிலைக்கு சப்ளை செய்கிற விஷயம். அதிகபட்சமாக, சுமார்
5-10 சதவிகிதம் குறைக்கலாம். தலைநகராக இருப்பதால், முழு மாநில அந்தஸ்து எக்காலத்திலும்
சாத்தியமில்லை. இவை நிரந்தர வாக்குறுதிகளாக இருக்கும். அங்கீகாரமற்ற காலனிகளுக்கு
அங்கீகாரம் என்பது அந்தந்த காலனி மக்களை இழுக்கும். பொதுவான ஆதரவுக்கு உரியது
அல்ல.
பேருந்து
வசதிகள், சாலைவசதிகள் மேம்படுத்தியதும் தடையற்ற மின்சாரமும் காங்கிரசின் சாதனைகள்.
ஆக, விலைவாசி உயர்வும் ஊழலும் முக்கிய அம்சங்கள். விலைவாசிப் பிரச்சினை நாடெங்கும்
இருக்கிற பிரச்சினை, மாநில அரசின் கையில் இல்லை. பாஜக, காங்கிரஸ் இரண்டுமே ஊழலை
ஒழித்துவிடும் என்பதெல்லாம் பகல்கனவுதான். இந்த இடத்தில்தான் ஆப் கட்சி
முக்கியத்துவம் பெறுகிறது.
விலைவாசி
உயர்வு காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு. இதன் விளைவான அதிருப்தி வாக்குகள்
பாஜக-வுக்குச் சேர வேண்டும். ஆனால் இங்கேதான் குறுக்கே நிற்கிறது ஆம் ஆத்மி
பார்ட்டி. இந்த இரண்டு கட்சிகளையும் பல ஆண்டுகளாகப் பார்த்து விட்டீர்கள். ஒரு
மாற்றத்துக்காக எங்களுக்கு வாய்ப்பளித்துப் பாருங்கள் என்கிறது ஆப் கட்சி.
படித்த,
நடுத்தர மக்கள் மத்தியில் ஆப் கட்சிக்கு ஆதரவான மனநிலை இருக்கிறது. நான் பேசிய
பலரும், இந்த முறை ஆப் கட்சிக்கு வாக்களிக்கலாமா என்று யோசிக்கிறேன் என்று
என்னைப்போலவே பதிலளித்தார்கள். விந்தை என்னவென்றால், கீழ்த்தட்டு மக்களிடமும் ஆப்
கட்சிக்கு பெரும் ஆதரவு இருக்கிறது. அதன் தொண்டர் படையில் பெரும்பகுதி கீழ்த்தட்டு
மக்களும் ஆட்டோக்காரர்களும்தான்.
இதுவரை
வெளியான தேர்தல் கருத்துக்கணிப்புகள் எல்லாம் அவரவர் விருப்பத்தையும் சார்பையும்
பொறுத்து ஆப், காங்கிரஸ், பாஜக - மூன்றுக்கும் வெற்றி வாய்ப்பைக் காட்டுகின்றன.
ஆனால் இவை எதுவுமே சரியாக இருக்கப்போவதில்லை என்றே நினைக்கிறேன்.
காங்கிரஸ் வெறுப்பு
வாக்குகள் பிஜேபிக்குப் போக வேண்டியவை இந்த முறை ஆப் கட்சிக்குப் பிரியும். 15
ஆண்டுகளில் ஆட்சியில் இல்லாதிருந்தாலும் மாநகராட்சித் தேர்தல்களில் தன் வலுவைக்
கட்டமைத்துக்கொண்டே வந்திருக்கிறது பாஜக. இதற்கு முக்கிய வாக்கு வங்கிகளாக
இருப்பவை சேரிப்பகுதிகளும் பின்தங்கிய பகுதிகளும்தான். ஆனால் இந்த முறை பல
தொகுதிகளில் தேதிமுக, பகுஜன் சமாஜ் கட்சிகள் அந்த வாக்குகளையும் பிரிக்கும். ஆக,
மும்முனைப் போட்டியால் பாதிக்கப்படப் போவது காங்கிரசும் பாஜகவும்தான்.
ஷீலா தீட்சித், அர்விந்த் கேஜ்ரிவால்
இருவரும் அறியப்பட்ட அளவுக்கு பாஜகவின் ஹர்ஷவர்தன் அறியப்பட்டவர் அல்ல. முதல்வர்
வேட்பாளர் அறிவிப்பில் குளறுபடியும் செய்தது பாஜக. இதுவும் கொஞ்சம் பாஜகவை
பாதிக்கக்கூடும்.
இறுதியாக என்ன
நடக்கலாம்... யார்தான் அனுமானிக்க முடியும். எனக்குத் தோன்றுவது, காங்கிரஸ்
மயிரிழையில் ஆட்சியைப் பிடிக்கலாம். அல்லது ஆப் கட்சி கணிசமாக இடங்களைப்
பிடித்தால் காங்கிரசுக்குப் பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம். தொங்குநிலைமை
ஏற்படும் என்றே தோன்றுகிறது. அதற்குப்
பிறகு என்னவாகும் என்பதையே இப்போது யோசிக்கத் தோன்றுகிறது.
அழகான அலசல். தேர்தல் முடிவு பற்றிய ஏதாவது தொலைக்காட்சி விவாதத்தில் தங்களக் காணும் வாய்ப்பு கூடியிருக்கிறது என்பேன்.
ReplyDeleteநீங்கள் சொல்லியிருப்பது போன்று காங்கிரஸ் கட்சி மயிரிழையில் ஆட்சி அமைக்கும் என்பதை நான் உறுதியாக மறுக்கிறேன். கண்டிப்பாக இன்றைய யதார்த்த அரசியல் சூழலில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க இடையே தான் போட்டி. புதிதாக உதித்துள்ள ஆம் ஆத்மி கட்சி 14 முதல் 18 இடங்களில் வெற்றிபெறும் என்பது என் கணிப்பு. மேலும் 20 இடங்களுக்கு மேல் வென்றால் அது ஆச்சர்யமான ஒன்று.. அதுவே 25 க்கும் கூடுதலான இடங்களில் வெற்றிபெற்றால் நிச்சயம் மாற்றம் 'ஆரம்பம்' ..அதே சமயம் பா.ஜ.க ஆட்சி அமைக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளது . ஆனால் தனி மெஜாரிட்டி கிடைப்பது என்பது கடினமே. எது எவ்வாறு ஆயினும் ஆம் ஆத்மி ஆரம்பம் ..வாழ்த்துக்கள் .நல்லதொரு பதிவை அளித்த தங்களுக்கும்.
ReplyDeleteநல்ல அலசல்.....
ReplyDeleteநானும் முடிவுகளைத் தெரிந்து கொள்ள காத்திருக்கிறேன்! பலத்த போட்டி இருப்பது போலத்தான் தெரிகிறது. பார்க்கலாம்....