Saturday, 21 December 2013

புன்னகை


அது புன்னகை என்பதாலோ
புன்னகைத்த முகம் பரிச்சயமாய் இருந்ததாலோ
இதழ்விரியத் தெரிந்த பல்வரிசையாலோ
புன்னகைத்த இதழ்களுக்கு மேலும் விரிந்து
கண்ணும் நகைத்ததாலோ
கண்கள் நேராயென் கண்நோக்கியதாலோ...

ஏதாகிலும் இருக்கட்டும்,
எதற்கிந்த ஆராய்ச்சி.
மனதில் படிந்திருக்கும்
புன்னகையின் எச்சம் போதுமாயிருக்கிறது
இன்றைய காலையின் என் புன்னகைக்கு.

* * *

உனது ஒரு புன்னகையில்
வீழ்ந்து கிடக்கிறேன்.
மீண்டெழச் செய்யேன்
மற்றொரு புன்னகையால்.

* * *

உன்னிடம் யாசித்ததெல்லாம்
ஒற்றைப் புன்னகைதானே?
எதற்காக இன்னும் நீ
இத்தனை யோசிக்கிறாய்?

* * *

ஒற்றைப் புன்னகைதானே
உன்னிடம் கேட்டேன்.
புன்னகைப் பூக்களால்
மாலையை அளிக்கிறாய்...!

* * *

கண்ணுக்கு அழகானதாய்
ஆயிரம் புன்னகைகள்
மனதுக்கு இதமாயிருப்பதோ
உன் ஒற்றைப் புன்னகைதான்.

* * *

உன் ஒற்றைப் புன்னகையில்
உலகின் ஒளி கூடுகிறது
இன்னும் அழகாகிறது
இன்னும் ஒளிக்கும் அழகுக்கும்
என்னை ஏங்கச் செய்கிறது.

* * *

உன் புன்னகைப் பூக்களில்
மயங்கிக் கிடப்பவனை
எழுப்ப வேண்டாமா...
கொஞ்சம் புன்னகை தெளியேன்.

* * *

ஒரு புன்னகை பிறப்பதற்கு
ஓராயிரம் காரணங்கள் இருக்கலாம்.
ஆனாலும்
ஒரு புன்னகை போதுமாயிருக்கிறது
ஓராயிரம் பிரச்சினைகளை மறக்க.

எனக்குப் பிடித்தமாயிருப்பது
காரணங்கள் அல்ல, புன்னகைதான்.

* * *

ஒரேயொரு புகைப்படத்தில்
உறைந்திருக்கும் ஒற்றைப் புன்னகை
போதுமாயிருக்கிறது
உறைந்துபோன ஒருநூறு முகங்களில்
புன்னகை பூப்பதற்கு.

* * *

அச்சம் தவிர் .
ஏறுபோல் நட.
ரௌத்திரம் பழகு.
குன்றென நிமிர்ந்து நில்.
செய்வது துணிந்து செய்.
...
கூடவே கொஞ்சம்
புன்னகை புரிந்திடு.

* * *

உன் புன்னகைக்கு
எத்தனையோ பொருள்களிருக்கலாம்.
நான் எடுத்துக்கொள்கிறேன்
எனக்கே எனக்கான ஒன்றை மட்டும்.

* * *

உன் புன்னகைக்கு இருக்கலாம்
ஒருநூறு காரணங்கள்.
என் முகத்தின் புன்னகைக்கோ
உன் ஒற்றைப் புன்னகைதான்.

* * *

புரியாதவர்கள் கேட்கிறார்கள்
புன்னகைக்கு என்ன வி்லையென்று
புன்னகை புடலங்காயில்லை என்று
புரிய வையேன் இவர்களுக்கு
மற்றொரு புன்னகையால். 

* * *

புன்னகைக்குச் சொந்தக்காரர் யாரென்ற
புதிரை அவிழ்க்கச் சொல்கிறீர்கள்.
என் புன்னகை கண்டபின்னுமா புரியவில்லை
எனக்காகப் பிறந்த புன்னகைகள்
எனக்கு மட்டுமே சொந்தமென்று.

* * *


5 comments:

  1. அற்புதமான கவிதை
    சொல்லிப் போனவிதம் சிறப்பு
    முடித்தவிதம் அதைவிட சிறப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. இருபது வருடம் முன்பே எழுதியிருக்கவேண்டிய கவிதை! இப்போது எழுதினாலும் ரசிக்க முடிகிறதே, அதுதான் புன்னகையின் பலமோ?

    ReplyDelete
  3. அருமை......

    புன்னகை கொண்டு இத்தனை கவிதைகள்! ரசித்தேன்.

    ReplyDelete