Thursday 26 December 2013

சற்றே பொறுத்திருப்போம்...


கேஜ்ரிவால் தலைமையில் ஆப் (Aam Aadmi Party - AAP) ஆட்சி அமைப்பது பற்றிய செய்தி வந்ததிலிருந்து பலரும் பலவிதமான விமர்சனங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அன்னா ஹசாரே இல்லாவிட்டால் கேஜ்ரிவால் இல்லை, ஆனால் இப்போது அன்னா ஹசாரேவுக்கு துரோகம் செய்து விட்டார் என்கிறார்கள் சிலர். காங்கிரஸை எதிர்த்துப் போட்டியிட்டவர் காங்கிரசுடன் சமரசம் செய்துவிட்டார்கள் என்கிறார்கள் சிலர். காங்கிரஸின் டம்மிதான் ஆப் கட்சி என்று பாஜக கூறியதை எதிரொலிக்கிறார்கள் சிலர். சாதி பார்த்தே வேட்பாளர்களை நிறுத்தியது என்றனர் சிலர். ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்கிறார்கள் சிலர். அனுபவமற்றவர்கள், சாமானிய மனிதர்களால் ஆட்சி நடத்த முடியுமா என்கிறார்கள் சிலர்.

அன்னா ஹசாரே இயக்கம் பெரும்பாலும் நடுத்தர, படித்த வர்க்கத்தின் ஆதரவிலேயே பரபரப்பாக முன்னிலை பெற்றது. இத்தகைய இயக்கம் நீண்டகாலத்துக்கு ஓடாது. இதுவும் அப்படியே ஆயிற்று. தவிர, ஒருகாலத்தில் பெரியார் தமிழகத்தில் சொன்னதுபோல, தேர்தல் அரசியலில் தனது இயக்கம் பங்கேற்காது என்று பிடிவாதமாக இருந்தார் ஹசாரே. அவருடைய இயக்கம் தீவிரமாக இருந்த காலத்திலும்கூட, ஊழல் - லோக்பால் என்பதற்கு மேல் வேறு எந்தப் பிரச்சினையிலும் தெளிவு இருக்கவில்லை. லோக்பால் மட்டுமே ஊழலை ஒழித்துவிட முடியாது. தவிர, கார்ப்பரேட் சாமியார் ராம்தேவ் ஆதரவு, குஜராத்தில் மோடிக்குப் புகழ்மாலை என்று தன்னிச்சையான போக்கில் பயணித்தவர் ஹசாரே.

இயக்கம் உடைந்தது. இயக்கத்திலேயே இருந்த கிரண் பேடி மீது விமான டிக்கெட் குற்றச்சாட்டு எழுந்தபிறகு காணாமல் போனார் அவர். கேஜ்ரிவால் மீது அரசே பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால் அவர் அனைத்தையும் எதிர்கொள்ளத் தயார் என்று சவால்விட்டுக்கொண்டே தாக்குதலையும் தொடுத்தார். ஏதோவொரு சேனா, பிரசாந்த் பூஷணின் அலுவலத்துக்குள்ளேயே புகுந்து அவரைத் தாக்கியது. ஹசாரே வாய்திறக்கவில்லை. இது பிரசாந்த் பூஷண் விளம்பரம் தேடிக்கொள்ளும் முயற்சி என்றார் கிரண் பேடி.

அரசியலில் இறங்குவது என்று கேஜ்ரிவால் முடிவு செய்தார். 2012 நவம்பரில் கட்சியைத் துவக்கினார். அவருக்கும் எனக்கும் தொடர்பு இல்லை என்று ஹசாரே பகிரங்கமாக அறிவித்தார். அதைவிட ஒருபடி மேலே போய், விமர்சிக்கவும் செய்தார். இருந்தாலும், ஹசாரேயின் நடவடிக்கைகள்மீது அதிருப்தி இருந்தும்கூட, தன் ஆசான் என்று இன்றும் கூறிவருபவர் கேஜ்ரிவால். இதுதான் இரண்டு பிரிவுகளுக்கும் வேறுபாடு.

தேர்தல் முடிவுகள் வந்ததும், நான் ஆதரவுப் பிரச்சாரம் செய்திருந்தால் கேஜ்ரிவால் முதல்வர் ஆயிருப்பார் என்று கூறியவர் ஹசாரே. ஆனால் தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக இருந்த நேரத்தில், அவருடைய பெயரைப் பயன்படுத்தாதபோதும், என் பெயரைப் ஆப் கட்சி பயன்படுத்தக்கூடாது என்று ஊடகங்கள் வாயிலாக விளம்பரம் செய்து கொண்டிருந்தவர் ஹசாரே. அரசியலில் ஈடுபடக்கூடாது என்ற தன் முடிவு தவறு என்ற குற்ற உணர்வு அவரை வருத்திக் கொண்டிருக்கலாம். கேஜ்ரிவால் தன்னைவிட மேலே போய்க்கொண்டிருப்பது கண்டு பொறுமிக்கொண்டிருக்கலாம். லோக்பால் சட்டத்துக்காக மற்றொரு உண்ணாவிரதம் ஆரம்பித்ததும், இத்தனைகாலமும் அவர் எதிர்த்துக்கொண்டிருந்த பல்லில்லாத லோக்பால் சட்டம் நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட உடனே மகிழ்ச்சிக்கூத்தாடியதும் ஹசாரேவின் பொறுமலையே காட்டுகின்றன. கேஜ்ரிவால் துரோகம் செய்துவிட்டார் என்று கூறுபவர்கள் இதையெல்லாம் கவனிக்கத்தவறுகிறார்கள்.

கடந்த ஓராண்டுக்கும் மேலாகவே ஆப் கட்சி தொடர்ந்து மக்கள் மத்தியில் பணியாற்றி வந்தது. உதாரணமாக, சேரிகளை இடிக்க அரசு இயந்திரம் முயன்றபோது களத்தில் இறங்கி எதிர்த்து நிறுத்தினார் கேஜ்ரிவால். மின்கட்டணம் செலுத்தவில்லை என்று இணைப்புகளைப் பிடுங்கியபோது, எதிர்ப்பைக் காட்டும் விதமாக சட்டத்தை மீறி இணைப்பைக் கொடுத்தார். அவருடைய போராட்டங்களில் காவல்துறை அவரை எப்படி நடத்தியது என்பதையெல்லாம் ஊடகங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். இருந்தும் ஆப் கட்சி நகரின் மூலை முடுக்கெல்லாம் தீவிரமாக இயங்கியது என்றால், மக்கள் மத்தியில் அதற்கு இருந்த ஆதரவே காரணம். எளிமையும் அணுகும் நிலையில் இருந்ததும் இன்னும் மதிப்பை ஏற்படுத்தியது. (ஏசி இல்லாத சாதாரண மாருதி 800 காரில் முன்சீட்டில் பயணிப்பதை நானே பார்த்திருக்கிறேன்.)

ஆப் கட்சியில் இருப்பவர்கள் அத்தனைபேரும் உத்தமர்கள் என்று நானும் நம்பத் தயார் இல்லைதான். ஆப் கட்சிக்கு யார் ஆதரவாக இருக்கிறார்கள் என்று புரிந்துகொள்ளவும், தில்லி தேர்தல் முடிவுகளை எதார்த்த நிலையில் மதிப்பிடவும் தில்லியின் டெமோகிராபி தெரிந்திருக்க வேண்டும். அதைப்பற்றி விளக்கமாக இங்கே எழுதத் தேவையில்லை. சுருக்கமாகச் சொன்னால், படித்த நடுத்தர வர்க்கம் ஓரளவுக்கும், உழைக்கும் வர்க்கமும் இளைய சமூகமும் பெருமளவுக்கும் ஆப் கட்சியின் பின்னால் நின்றது.

பாஜக, காங்கிரசின் பணச்செழிப்பான விளம்பர உத்திகளுக்குப் பதிலாக நவீன, சிக்கனமான உத்திகளைப் பயன்படுத்தியது. தலைவர்-தொண்டர் வித்தியாசம் இல்லாமல் அனைவரும் அணிந்த தொப்பி. ஆட்டோக்கள் அனைத்திலும் பின்னால் விளம்பரப்பலகைகளை காசு வாங்கமலே மாட்டியனார்கள் ஆட்டோக்காரர்கள். தெருவோரக் கூட்டங்கள், பாடல்கள், உண்டியல் குலுக்கல். தில்லிக்கு வருகிற தொலைதூர ரயில்களில் பயணம் செய்கிற பயணிகள் மத்தியில்கூட ஆப் கட்சி பிரச்சாரம் செய்தது.

காங்கிரசையும் பாஜகவையும் கடுமையாகச் சாடியே ஆப் கட்சி பிரச்சாரம் செய்தது. மும்முறை முதல்வராக இருந்த ஷீலா தீட்சித்தை எதிர்த்து அவருடைய தொகுதியிலேயே கேஜ்ரிவால் போட்டியிட்டும்கூட, காங்கிரசின் டம்மிதான் ஆப் கட்சி என்று பாஜக பிரச்சாரம் செய்தது. இந்தத் தேர்தலிலும் இரண்டு தேசியக் கட்சிகளும் பணத்தை அள்ளி வீசின. கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணம் வாங்கும் பாஜகவும் காங்கிரசும், ஆப் கட்சிக்குக் கிடைத்த நிதி குறித்தும்கூட குற்றம் சாட்டின. தனக்குக் கிடைத்த நிதி குறித்த விவரங்கள் அனைத்தையும் ஆரம்பம் முதலே பகிரங்கப்படுத்தி வந்தது ஆப் கட்சி. அத்தனையும் மீறித்தான், ஒற்றை ரூபாய்கூடக் கொடுக்காமல்தான் ஆப் கட்சி இத்தனை இடங்களைப் பெற்றுள்ளது.

வாக்குப்பதிவுக்கு சில நாட்கள் முன்னதாக ஆப் கட்சியின் பெயரைக் கெடுப்பதற்காக வேட்பாளர்கள் குறித்து பொய்யான ஸ்டிங் ஆபரேஷன் வீடியோக்கள் முளைத்தன. இதன் காரணமாக ஏற்பட்ட தொய்வால்தான் எங்கள் தொகுதி வேட்பாளர் வெறும் 300 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி கண்டார். இல்லையேல் இன்னும் சில தொகுதிகளிலும் வெற்றி கிடைத்திருக்கும்.

எது எப்படியோ, ஆப் கட்சிக்கு 28 தொகுதிகள் கிடைத்தன. காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத்தன. பாஜகவுக்கு 31, கூட்டணிக்கு 2 என 33 தொகுதிகள் கிடைத்தன. சுயேச்சை ஒரு தொகுதியில் வென்றார். இன்னும் 2 சுயேச்சைகள் வென்றிருந்தாலும் போதும், அவர்களை விலைக்கு வாங்கி ஆட்சியை அமைத்திருக்கும் பாஜக. (ஆப் கட்சியின் சிலருக்கு வலைவீசிப் பார்த்தது என்பதும் அதிகம் வெளியே வராத செய்தி.)

பாஜக-வை ஆட்சி அமைக்க அழைத்தார் லெப். கவர்னர். தான் எதிர்க்கட்சி வரிசையில் அமரப்போவதாகத் தெரிவித்தது பாஜக. காங்கிரஸ் ஆதரவுடன் ஆப் கட்சி ஆட்சி அமைக்கட்டுமே என்றது பாஜக. அது எதற்கு, பாஜக-காங்கிரஸ் இரண்டுமே ஊழல் கட்சிகள்தானே, நீங்களே கூட்டுசேர்ந்து ஆட்சி அமையுங்களேன் என்றது ஆப் கட்சி. காங்கிரசிடம் ஆதரவு கோர மாட்டேன் என்றார் கேஜரிவால். நாங்கள் தருவதாகச் சொல்லவில்லையே என்றார் ஷீலா தீட்சித். இதுதான் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாளின் நிலவரம்.

காங்கிரஸ் வெளியிலிருந்து நிபந்தனையின்றி ஆதரவளித்தால் ஆப் கட்சி ஆட்சியமைக்க வேண்டும் என்று அப்போதே நான் எழுதினேன். இதையே ஆப் கட்சியின் பேஸ்புக் பக்கத்திலும் எழுதிவந்தேன். காரணம் என்ன? இப்போது எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்காவிட்டால், மறு தேர்தல் வரும். அப்போது காங்கிரஸ் நிச்சயமாக இதே போல பின்னடைவே காணும். ஆனால் பாஜக இன்னும் பணத்தை அள்ளி வீசும். எந்தெந்தத் தொகுதியின் எந்தெந்த வாக்குச்சாவடிகளில் தனக்கு வாக்குகள் குறைந்தன என்பதை வைத்து, அங்கே மிரட்டியோ, பணத்தைக் காட்டியோ வாக்குகளை விலைக்கு வாங்கும். ஆப் கட்சியின் வெற்றி இதைவிடக் குறையும். முதல்முறையாக இத்தனை இடங்களைப் பிடித்த பிறகு, எதிர்க்கட்சிகள் பலவீனமாக இருக்கிற நேரத்தில், அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு நல்லாட்சி தர முயன்று செய்து காட்ட வேண்டும். இதுதான் என் மதிப்பீடாக இருந்தது.

அதே நேரத்தில்தான், ஆப் கட்சி ஆட்சி அமைக்க நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சி தானாகவே கவர்னருக்கு கடிதம் எழுதியது. மறுதேர்தலில் காங்கிரசுக்கு உள்ள அச்சம் குறித்து மேலே குறிப்பிட்டதே இதன் காரணமாக இருக்க முடியும். அத்துடன், காங்கிரஸ் மத்தியத்தலைமை நிர்ப்பந்தம் தந்திருக்கலாம்.

தன் கடமையின்படி, இரண்டாவது பெரிய கட்சியை - ஆப் கட்சியை ஆட்சி அமைக்க அழைத்தார் கவர்னர். அப்போது ஆப் கட்சி சாதுர்யமாக ஒரு கடிதம் எழுதியது. நிபந்தனையற்ற ஆதரவு என்ற ஒன்று இருக்கவே முடியாது. எனவே, 18 கேள்விகளை இரண்டு கட்சிகளுக்கும் எழுதியிருக்கிறோம். அதன் பதில் கிடைத்ததும், மக்கள் மன்றத்தில் வைத்து முடிவு செய்து தெரிவிக்கிறோம் என்றது. (இது குறித்து ஏற்கெனவே பதிவில் எழுதியிருக்கிறேன்.) பாஜக-காங்கிரஸ் இரண்டுமே இதற்கு பதில்கூற இயலாமல் திணறின. எனவேதான், ஆட்சி அமைக்காமல் நழுவப்பார்க்கிறது ஆப் கட்சி என்று பாஜக கூறியது. 33 இடங்களைப் பெற்ற பாஜக ஆட்சி அமைக்க மறுத்துவிட்டு, ஆப் கட்சி நழுவப்பார்க்கிறது என்று கூறுவதைத்தான் இரட்டைநாக்கு என்று கூறவேண்டியதாகிறது.

ஆப் கட்சியின் சார்பில் 28ஆம் தேதி முதல்வர் ஆக இருக்கிறார் கேஜ்ரிவால். அமைச்சர்கள் பட்டியலும் அளித்தாயிற்று. 3ஆம் தேதிக்குள் சட்டமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும். காங்கிரஸ் என்ன செய்யும் என்று இன்னும் உறுதியாகத் தெரியாது. காங்கிரஸ் ஆதரவு அளித்தால்தான் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும். இப்போதைக்கு காங்கிரஸ் கட்சியின் பயமெல்லாம் வர இருக்கிற நாடாளுமன்றத்தேர்தல்தான். எனவே, இப்போதைக்குத் திரும்பப்பெற முடியாத, சற்றே கைவிட்டால் பாஜகவிடம் போய்விடக்கூடிய, தில்லியை கைவிடுவதே காங்கிரசுக்கு வசதியான விஷயம்.

எனவே, காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாலேயே ஆப் கட்சி அதன் சொல்படி ஆடும் என்று இப்போதே ஊகிக்க வேண்டிய அவசியம் இல்லை. அப்படி ஆட்டுவிக்கும் நிலையில் காங்கிரசும் இல்லை என்பதையும் மறக்கத் தேவையில்லை. முந்தைய ஆட்சியின் ஊழல்களை விசாரிக்குமா என்பது தேவையற்ற கேள்வி. வரலாற்றில் இதுபோல எத்தனை புதிய அரசுகள் முந்தைய ஆட்சி குறித்து விசாரித்து அவர்களை சிறையில் தள்ளியிருக்கிறது. இனி எப்படிப்பட்ட ஆட்சி தரப்போகிறார்கள் என்று பார்ப்பதே முக்கியம்.

ஆப் கட்சி சாதி பார்த்து வேட்பாளர்களை நிறுத்தியிருந்தால், 4 சதவிகிதம் முஸ்லிம்கள் வசிக்கும் ஆர்.கே.புரம் தொகுதியில் ஒரு முஸ்லீமை நிறுத்தியிருக்க மாட்டார்கள். தவிர, பஞ்சாபிகளோ இதர சமூகமோ வலுவாக இருக்கும் தொகுதியில் ஆப் கட்சி வேட்பாளர் அந்த சமூகத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடாதா என்ன...

ஓர் ஊழல் கட்சியிலிருந்து பிரிந்து வந்த கட்சியாக இருந்தால்தான் அதை ஒரே குட்டையில் ஊறிய மட்டை என்று சொல்ல முடியும். இது புதிய கட்சி. அதை மதிப்பிடுவதற்கு இன்னும் காலம் இருக்கிறது.

அனுபவம் அற்றவர்கள், அரசியல் தெரியாதவர்கள் என்றெல்லாம் சிலர் கூறுகிறார்கள். விடுதலைக்கு முன்பு நம் எல்லாரையும் பிரிட்டிஷார் இப்படித்தான் சொன்னார்கள். சாமானிய மனிதராக இருந்தவர்தான் காமராஜர் அல்லவா.

இதுவும் ஊழல் கட்சியாக மாறுமானால்.... அது அவ்வளவு சுலபமில்லை என்பது என் மதிப்பீடு. அப்படி நிகழ்ந்தால், ஊழல் புரியும் பணபலமிக்க கட்சிகளைவிட படுபயங்கர வேகத்தில் இது சரியும். இது புரியாதவர்கள் அல்ல அந்தக் கட்சியில் இருக்கும் யோகேந்திர யாதவ் போன்றவர்கள்.

ஆப் கட்சி முன்வைத்திருக்கிற வாக்குறுதிகள் சில எளியவை. சில கடுமையானவை. உதாரணமாக, தண்ணீருக்கு பக்கத்தில் காங்கிரஸ் ஆளும் ஹரியாணா, முலாயமின் உத்திரப்பிரதேசத்தை நம்பியிருக்கிற தில்லியில், கோடைவரும்போதும் 700 லிட்டர் தண்ணீர் சாத்தியமா என்பது ஒரு கேள்வி. தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் தில்லியில், மின்கட்டணத்தை பாதியாகக் குறைக்க முடியுமா என்பதும் பெரிய கேள்விதான். அவற்றைப்பற்றி பிறிதொருநாள் பார்க்கலாம். ஆப் கட்சிக்கு இன்னொரு சிக்கலும் இருக்கிறது. ஒருவேளை ஆட்சி அமைத்துவிட்டாலும், 100 நாட்களுக்குள் அடுத்த தேர்தல் வந்துவிடும். புதிய வாக்குறுதிகளையோ, புதிய சலுகைகளோ அளிக்க முடியாது.

ஆப் கட்சிக்கு இருக்கிற மற்றொரு சிக்கல், ஊடகங்கள். காலம்காலமாக பணமுதலைகளின் கட்சிகளுக்கு ஆதரவாக இருக்கும் ஊடகங்கள் ஆப் விஷயத்தில் எச்சரிக்கையாகவே இருக்கும். முடிந்தவரை அதனுடைய சிறு பின்னடைவைக்கூட பெரிதுபடுத்திக்காட்டவே முனையும். உதாரணமாக, பின்னி என்பவர் அமைச்சர் ஆகாதது குறித்து ஆப் கட்சிக்குள் விரிசல் என்று ஊடகங்கள் பரப்பிய செய்தி. இதையும் எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது ஆப் கட்சி.

நான் ஆப் கட்சிக்காரன் இல்லை. மாற்றத்தை எதிர்பார்த்து அதற்கு வாக்களித்தேன். அவ்வளவே. என் எதிர்பார்ப்புகள், நடைமுறை தெரிந்த எதிர்பார்ப்புகள் மட்டுமே. ஆனால், ஊழல் அரசியல் என்ற கசப்புணர்வில் ஊறிப்போனவர்கள் நாம் என்பதாலேயே இவர்களையும் உடனே கண்மூடித்தனமாக விமர்சிக்கவோ, தாக்கவோ தேவையில்லை. அப்படித் தாக்குகிறோம் என்றால், ஊழல் கட்சிகளின் கரத்தையே மறைமுகமாக நாமும் வலுப்படுத்துகிறோம். இத்தனை காலம் ஊழல் ஆட்சிகளை தாங்கிக் கொண்டவர்கள் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க முடியாதா என்ன... 

4 comments:

  1. அற்புதமான அரசியல் மதிப்பீடு. தேசீய நாளிதழ்களில் தலையங்கத்துக்குப் பக்கத்தில் ஐந்து பத்தி அகலத்தில் வரவேண்டிய கட்டுரை. உங்கள் கருத்தை நான் முழுதும் ஆதரிக்கிறேன்.ஆம் ஆத்மி கட்சி தனது சோதனைகளை வென்று நிலைக்கவேண்டும். நமது ஜனநாயகத்தில் அது ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும்.

    ReplyDelete
  2. மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஒரு மாற்று கிடைத்துள்ளது. தமிழ் நாட்டு தேமுதிக போல் ஆகிவிடக் கூடாது. பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். சிறந்த அலசல். நன்றி

    ReplyDelete
  3. அருமையான அரசியல் மதிப்பீட்டுக் கட்டுரை...

    ReplyDelete
  4. நல்ல அலசல்......

    நானும் காத்திருக்கிறேன்....

    ReplyDelete