ஹேங் ஓவர் அனுபவங்கள்
எனக்குக் கிடையாது. ஆனாலும் அது எப்படி இருக்கும் என்று தெரியும். இரவு 1-2-3 மணிவரை நூல்களைப் படித்ததால், காலையில் கண்விழிக்கவும் முடியாமல், உறங்கவும் முடியாமல், கொஞ்சம் தலைவலியுடன் அப்படியே படுத்துக்கிடந்து, களைத்துச் சோர்ந்த முகத்துடன், மனதுக்குள் முந்தைய
இரவின் வரிகள் நிழலாட காலைக்கடனை இயல்பாகக் கழிக்க முடியாமல், கொஞ்சம் வாய்க்கசப்புடன், பல்துலக்கும்போது குமட்டலுடன், மங்கிய கண்பார்வையுமாய், வீட்டார் ஒன்று கேட்க வேறொன்றை பதிலளிப்பதுமாய்
இருப்பதுதானே... வாசிப்பு போதை மீண்டும் தலைக்கேறி விட்டது. எனக்கு ஹேங் ஓவர் புரிந்துவிட்டது.
ஏற்கெனவே வாங்கிய நூல்கள்
அலமாரியில் தேங்கிக்கிடக்க, அண்மையில் தமிழகப்
பயணத்தில் வாங்கிய நூல்கள் ஊரிலிருந்து அனுப்பிய சாமான்களுடன் லாரியில்
வந்தடைந்தன. உடைந்தும் நொறுங்கியும் நசுங்கியும் சேதமான பொருட்களை வீட்டார்
கணக்கெடுத்துக் கொண்டிருக்க, உருக்குலைந்த
நூல்களை நேர்ப்படுத்த முனைந்தேன் நான். கெட்டி அட்டை நாடோடித்தடம் உள்பட
பலநூல்களின் பக்கங்கள் மடங்கிக் கிடந்தன. இயன்ற அளவுக்கு விரித்து நேர்ப்படுத்தி, கனமான நூல்களை ஒன்றன்மீது ஒன்றாக அடுக்கி மூன்று
நான்கு நாட்கள் வைத்திருந்ததில் பெரும்பாலானவை ஓரளவுக்குத் தேறிவிட்டன. தில்லி
வந்த ஞாநியும் நிறைய நூல்களை கொடுத்துவிட்டுச் சென்றார்.
தவிப்பு
ஞாநியின் நாவல். 1998இல் விகடனில் தொடராக வந்தது. தமிழ், தமிழ் தேசியம்,
இந்தி, இந்திய அரசியல், தமிழக அரசியல்,
அரசு செயல்படும் முறைகள், கட்சிகளின்
கோஷ்டிப்பூசல்கள், சதிகள், விடுதலைப் போராட்டங்கள், வன்முறையாளர்கள், தில்லி, சென்னை
எல்லாவற்றையும் இரு தொலைக்காட்சி ஊழியர்கள்,
ஒரு பிரிவினைவாதப் போராளிப் பெண் வாயிலாக நாவலாக்கியிருக்கிறார். துணையாக
இருக்கும் சில பாத்திரங்களை தமிழகத்தின் சிலருடன் நீங்கள் எளிதாக அடையாளம்
காணமுடியும். பல நாட்களுக்குப் பிறகு விறுவிறுப்பான வாசிப்பு. இரண்டு இரவுகளில்
கொஞ்சம் உறக்கத்தைத் தியாகம் செய்து முடித்து விட்டேன். ஞாநியின் விரிவான வாசிப்பும்
கதைமாந்தர்களின் உரையாடல்கள் வாயிலாக ஆங்காங்கே வெளிப்படுகிறது. பெரும்பாலும் என்
சமகால அரசியல், சமகால தில்லி
என்பதால் அதிகம் ஒன்ற முடிந்தது. (ஞாநி சார்,
மறுபடி தில்லி எப்போ வர்றீங்க...)
தவிப்பு, ஞானபாநு பதிப்பகம், 100 ரூபாய்.
நகர்வலம்
சிறியதாக இருக்கிறதே என்று
கையில் எடுத்த்து ஞாநியின் நகர்வலம். சென்னையின் அனுபவங்கள். இதுவும் சமகாலச்
சென்னை. நான் சுற்றியலைந்த அதே தெருக்கள், சாலைகள், சைக்கிள், டீக்கடைகள், சாலையோர தள்ளுவண்டிக் கடைகள், ஐஐடி வளாகம்,
கடற்கரை, எம்எல்ஏ ஹாஸ்டல், ராஜாஜி மண்டபம்,
கலைவாணர் அரங்கம், திருவல்லிக்கேணி, எம்.பி. சீனிவாசனின் சேர்ந்திசை, சாஸ்திரி பவன்,
பத்திரிகை உலகம், ஆட்டோ, என சின்னச்சின்ன தகவல்களுடன் விரிகின்றன அவருடைய
அனுபவங்களும் கருத்துகளும்.
அவர் நிகழ்ச்சிகளை வழங்கிய
வானொலி, வசித்த வீடு, பயணித்த சைக்கிள்கள், ஆட்டோக்கள், உணவருந்திய கடைகள், இவற்றின் வாயிலாக நாம் கைவிட்டுக்கொண்டிருக்கும்
விஷயங்களைச் சுட்டியிருக்கிறார். நாம் கைவிட்ட எளிமையான இந்த விஷயங்கள்தான் நாளை
பூதாகரமாக நம் எதிர்காலத்தை ஆட்டிவைக்கப்போகின்றன.
ஞானபாநு பதிப்பகம், 40 ரூபாய்
57 ஸ்நேகிதிகள்
ஸ்நேகித்த புதினம்
வா.மு. கோமுவை யார்
கட்டிப்போட்டு விட்டார்கள் என்று தெரியவில்லை. அவருடைய வழக்கமான நூலிலிருந்து இது
கொஞ்சம் வேறுபட்டே, கொஞ்சம் ‘சுத்தமாகவே’
இருக்கிறது. இதில் வருகிற பழனிச்சாமியும் மாரிமுத்துவும் லட்சுமியும் வேறு
யாருமல்ல, நீங்களும்
நானும்தான். கொங்கு தமிழில் அழகான சித்திரிப்புடன் விரியும், தலைப்புக்குப் பொருத்தமற்ற நாவல்.
எதிர் வெளியீடு, 110 ரூபாய்
குறும்பன்
உஸ்பெகிஸ்தானின் மக்கள்
கவிஞர் கஃபூர் குல்யாம் எழுதிய கதை. இன்று நம்மிடையே இருக்கும் ரஸ்கின் பாண்ட்
இவரிடமிருந்து கற்றிருப்பார் என்பது உறுதியாகத் தெரிகிறது. ஒருகாலத்தில் மாஸ்கோ
பதிப்பகத்தாரால் வந்திருக்க வேண்டும், எப்படி என்
கண்ணிலிருந்து தப்பியது என்று தெரியவில்லை. பூ. சோமசுந்தரம் மொழியாக்கம் அற்புதம்.
குறும்பன் ஒரு சிறுவன். சிறுவர்களுக்கே உரிய குறும்புச் செயல்கள் செய்து கொண்டிருந்தவன்
ஒருநாள் வீட்டிலிருந்து ஓடிப்போகிறான், ஊர் ஊராக அலைகிறான்.
ஏமாறுகிறான், ஏமாற்றுகிறான், திருடுகிறான்,
திருட்டுக்கொடுக்கிறான், அடிவாங்குகிறான், பழிவாங்குகிறான்.... நகைச்சுவை நூல்முழுக்கவும்
விரிந்திருக்கும் இந்நூலுக்கு நிகராக தமிழில் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 125 ரூபாய்
ஏற்கனவே
யுவன் சந்திரசேகர் எழுதிய
கட்டுரைகள், சிறுகதைகளின்
தொகுப்பு. இதுவரை இவரை வாசித்ததில்லை என்பதாலேயே வாங்கிய நூல், வாசித்த நூல். சிற்றிதழ்களில் வெளிவந்த படைப்புகள்.
ஏராளமான வாசிப்பனுபவம் இருப்பதாகத் தெரிகிறது. வாசகனை பிரமிக்க வைக்கிற முயற்சியோ
என்று சந்தேகமும் ஏற்படுகிறது. குறிப்பாக ஒரு கதையில் – அது கதைதானா என்று சொல்ல முடியவில்லை – வேண்டுமென்றே முற்றுப்புள்ளியோ கமாவோ இல்லாமல்
ராண்டமாக பல்வேறு நினைவுப் பதிவுகளை மூன்று-நான்கு வாக்கியங்களில் சொல்லும்
முயற்சி புதிதாக இருந்தாலும் எரிச்சலைத் தவிர்க்க முடியவில்லை. மிஸ்டிசிஸத்தை
பிற்பாடு இவரிடமிருந்தே எஸ்.ரா. கொஞ்சம் எடுத்துக் கொண்டிருப்பார் என்று
தோன்றுகிறது. பணியாற்றிய வங்கி, பாசமான அப்பா, பெருவெடிப்பு திரும்பத்திரும்ப வருகிறது. நார்ட்டன்
துரையின் மாற்றம் அற்புதமான கதை. சுஜாதாவின் ஒரு சிறுகதையில் வருகிற மாமாவை நினைவுபடுத்துகிறார்
இந்தக் கதையில் வரும் மாமா.
உயிர்மை, 100 ரூபாய். சென்னை புத்தகச் சங்கமத்தில் 50 ரூபாய்க்குக் கிடைத்தது.
தனிமையின் வழி
சுகுமாரனையும் இதற்குமுன்
வாசித்ததில்லை. பின்னட்டையில் இருப்பதிலிருந்து எடுத்தாள்வது பொருத்தமாக
இருக்கும். “அற உணர்வுக்கும் குற்ற
உணர்வுக்கும் இடையே எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நிம்மதியின்மையின்
நெருப்பிலிருந்து பிறந்தவை சுகுமாரனின் இக்கட்டுரைகள்”. மாதிரிக்கு,
டிசம்பர் 6 சம்பவத்தை மையமாக
வைத்த இரண்டு சம்பவங்கள் பற்றிய கட்டுரை. “வதைபடுதல்கள், சுயநிந்தனைகள்,
குடித்துத் தீராத கசப்புகள், ஒருபோதும் பதில்
இல்லாத கேள்விகள், ரகசியமாய்
துடைத்துக்கொண்ட கண்ணீர்த்துளிகள், நெகிழ்ச்சியின்
விம்மல்கள் என விரியும் இந்நூல் சுயமழிந்த குரலில் நவீன மனித இருப்பின் சஞ்சலங்களை
எதிர்கொள்கின்றன.” நீங்களும் நானும்
எதிர்கொள்ளும் அதே விஷயங்கள்தான். இவர் கைவண்ணத்தில் அருமையான கட்டுரைகளாக
வெளிப்படுகின்றன.
உயிர்மை, 85 ரூபாய், புத்தகச்
சங்கமத்தில் பாதி விலைக்குக் கிடைத்தது.
சுப்ரபாரதிமணியனின் தறிநாடா, பௌத்த அய்யனாரின் சுந்தர ராமசாமி கடிதங்கள்
குறித்து ஏற்கெனவே எழுதியாயிற்று. ராஜ சுந்தர்ராஜனின் நாடோடித்தடம் பாதியில்
நிற்கிறது. இதை முடித்தாலும் எழுத முடியும் என்று தோன்றவில்லை. அவ்வளவு செறிவாக
இருக்கிறது. குத்தூசி குருசாமியின் பூமாலை கால்பகுதியில் நிற்கிறது.
சுவர் இருந்தால்தான்
சித்திரம் வரையலாம், புவாவுக்கு வழி
இருந்தால்தான் வாசிப்பில் பொழுதைக் கழிக்கலாம். வாசிப்புக்கு இப்’போதை’க்கு சிறு இடைவேளை
விடவேண்டியிருக்கிறது.
வாசிப்பு ஒரு போதை தான்.....
ReplyDeleteவாசிப்பனுவத்தினை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. ஒரு சில புத்தகங்களை குறித்து வைத்துக் கொண்டேன். படிக்க வேண்டும்.