Tuesday 3 June 2014

படித்ததில் பிடித்தது - மே 2014


உங்கள் ஊரின் தெருக்களில் தறிகாரர்கள் பாவு நூல் நீட்டியிருக்கிறார்களா...?
கையில்லா கைத்தறி பனியனும் மடித்துக் கட்டிய வேட்டியுமாய் ஆண்கள் பாவு விரிக்க, தூக்கம் கலையாக் கண்களுடன் போணியில் ஊற்றிய தேத்தண்ணியை வீட்டுப் பெண்கள் தானும் கொஞ்சம் குடித்துக்கொண்டு ஆண்களுக்கு ஊற்றிக் கொடுப்பதைப் பார்த்திருக்கிறீர்களா....?
அதிகாலையில் ஏதோவொரு வீட்டிலிருந்து தடக்-சடக் தடக்-சடக் எனத் துவங்கும் தறியின் ஓசை, தொற்றிக்கொள்ளும் நாயின் குரைப்புகள் போல வீடுவீடாகப் பரவ, ஒருவிதமான இயந்திரகதியின் இசை தெருவெங்கும் பரவுவதைக் கேட்டிருக்கிறீர்களா...?
தறிக்குழிகளில் உட்கார்ந்தே வாழ்க்கையைக் கழித்ததில் கால்கள் சற்றே வளைந்திருக்க, வித்தியாசமான நடை நடந்து கூடி நண்பர்கள் ஏதேனுமொரு வீட்டுத் திண்ணையில் மதியம் ரம்மி ஆட்டம் ஆடுவதைப் பார்த்திருக்கிறீர்களா...?
பானைகளில் சாயம்போடுவதையும், சாய நீர் பல வண்ணங்களில் சாக்கடைகளில் ஓடுவதைப் பார்த்திருக்கிறீர்களா...?
ஊரை ஒட்டிய விளைநிலங்கள் களையிழந்து எப்போது எப்படி நிகழந்ததெனத் தெரியாமல் மௌன மனைகளாவதுபோல இந்தத் தறிகளின் ஓசை கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து காணாமல் போனதைக் கவனித்திருக்கிறீர்களா...?
உணவுப் பஞ்சம் உச்சத்தில் இருந்தபோது தமிழகத்திலிருந்து ரயிலிலும் கால்நடையாகவும் அரிசிக் கடத்தல் நிகழ்ந்ததை அறிவீர்களா...?
வழியின்றி, வலி மிகுந்து, வாழ்வுதேடி கொஞ்சம் கொஞ்சமாக அவர்களில் பலர் வேறு தொழில்களில் தஞ்சம் புகுந்ததையும், மாற்றத்துக்குத் தயாராகாத சிலர் நொடிந்து மடிந்ததையும் அறிவீர்களா...?
நெசவுச் சமூகத்தின் கோவில்கள், திருவிழாக்கள், சம்பிரதாயங்கள், நம்பிக்கைகளை சற்றேனும் அறிந்திருக்கிறீர்களா... வீட்டில் வறுமை உச்சத்தை எட்ட, இருக்கிற பாத்திர பண்டங்கள் வட்டிக்கடைக்குச் செல்வதை அனுபவித்திருக்கிறீர்களா...?

இவையனைத்துடனும் ஈரோடு, திருப்பூர் பகுதியில் விசைத்தறி மற்றும் பனியன் தொழிலின் பிறப்பும் வளர்ச்சியும் குறித்து அறிந்தவரா... 1970களின் அரசியல் மாற்றங்களை அவதானித்தவர்களா நீங்கள்... எம்ஜிஆர் புதிய கட்சி துவக்கிய காலத்தின் நிகழ்வுகளை கவனித்தவரா... ஒருங்கிணைக்கப்படாத தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து அறிமுகம் உண்டா...?

அப்படியானால் சுப்ரபாரதி மணியன் எழுதிய தறிநாடா உங்களை மிகவும் நெருக்கமாக உணரவைக்க்க்கூடும். மேலே சொன்ன எதுவும் உங்களுக்கு அறிமுகம் இல்லை என்றாலும் பரவாயில்லை, நசிந்து போன ஒரு சமூகத்தினைப் பற்றிய அறிமுகம் உங்களுக்குக் கிடைக்கும்.

நாவலின் கடைசியில் சுப்ரபாரதி மணியன் எழுதிய ஒரு குறிப்பு என்னை இன்னும் ஈர்த்த்து – 2012 ஏப்ரலில் கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொன்விழா கோவையில் நடைபெற்றது. அதற்கான மேடை திருப்பூர் தோழர் எஸ்.ஏ. பாலகிருஷணன் பெயரால் அமைந்திருந்த்து. பாலகிருஷ்ணன் மறைந்தபிறகு, அவருடைய படைப்புகளை அவர் குடும்பத்தினரிடமிருந்து வற்புறுத்தி வாங்கியபோது அவற்றில் எனது பிரசுரமாகாத நாவலின் கையெழுத்துப் பிரதியும் இருந்த்து. அதை நான் செகந்திராபாதில் இருந்தபோது எழுதினேன், அவரிடம் படிக்க்க் கொடுத்திருந்தேன். எப்படியோ என் ஞாபகத்தில் தவறி விட்டது.

நல்ல ஞாபக சக்தி அய்யா உங்களுக்கு! கொஞ்சம் தவறியிருந்தால் இந்த நாவல் கிடைக்காமல் போயிருக்கும்.


தறிநாடா, நாவல், சுப்ரபாரதி மணியன், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 978-81-234-2459-0, ரூ. 185

3 comments:

  1. சென்னை திரும்பியதும் படிக்கவேண்டும். குறித்துக்கொண்டேன்.- இராய செல்லப்பா ( from San Diego)

    ReplyDelete
  2. சிறப்பானதோர் புத்தக அறிமுகம். நன்றி

    ReplyDelete
  3. 'பட்டுநூல்காரன்' என்று வகைப்படுத்தப் பட்டிருக்கும் சௌராஷ்டிரா'வைச் சேர்ந்தவன் நான்... பரமக்குடி தாண்டி எமனேஸ்வரம் என் சொந்த ஊர்... இன்றும் பங்காளிகள் நெசவில் கஷ்டப் பட்டுக்கொண்டு உள்ளனர் என்றாலும், பலர் வேறு தொழிலில் சென்று விட்டனர்... தாய் வழி தாத்தா தொடங்கி 90 வருடங்கள் மிக இலாபத்துடன் நடத்திய சேலை தொழில் 3 வருடங்கள் முன்பு மூடப்பட்டது... ஏனெனில், தொழிலை தொடர யாருக்கும் விருப்பம் இல்லை... பசங்கள் அனைவரும் படித்து வேலை தேடி வெளிநாடு சென்று விட்டார்கள்... என் மாமனார் இன்றும் சாயப் பட்டறை வைத்துள்ளார்... ஆனாலும் அதை தொடர யாரும் இல்லை...

    மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர், குஜராத்தின் சௌராஷ்டிரா பகுதியில் இருந்து நெசவுக்கு எங்கள் சமூகத்தை தமிழ் நாட்டுக்கு அழைத்து வந்ததாக வரலாறு... நான் உட்பட பலரும் இப்பொழுது தமிழராகவே வாழ்கிறோம்... வீட்டில் சௌராஷ்டிரா (எழுத்து கிடையாது) பேசினாலும், தொடர்புகள் அத்தனையும் தமிழே...

    சௌராஷ்டிரா மொழி குஜராத்தின் கட்ச்சி மொழியில் இருந்து மாறுபட்டது... எழுத்து இல்லை... இலக்கிய பதிவுகள் இல்லை... முறையான இலக்கணம் இல்லை... பல மொழிகளைப் போல ஒன்று / இரண்டு நூற்றாண்டுக்குள் இந்த மொழி அழிந்து விடலாம்...

    புத்தகத்தை படிக்க வேண்டும்...

    ReplyDelete