Tuesday, 31 March 2015

கணினிப் பிரச்சினைகள் - சுய சேவை



லேப்டாப் தொங்கிடுச்சு
லேப்டாப் (அல்லது கம்ப்யூட்டர்) அடிக்கடி தானே ஷட் டவுன் ஆயிடுது. எரிச்சலா வரும். உடனே சர்வீஸ் சென்டருக்குத் தூக்கிட்டுப் போவோம். அவன், சரி சார், விட்டுட்டுப் போங்க, பாத்து வைக்கிறேன் அப்படீன்னு சொல்லுவான். நமக்கு காத்திருந்து வாங்கறதுக்கெல்லாம் நேரமே கிடையாதே... கொடுத்துட்டு வந்துடுவோம். சாயங்காலம் போனா, துடைச்சு கிளீனா வச்சிருப்பான். ஒரு ஐசி போயிருந்துச்சு சார்... ஒரு பின் உடைஞ்சிருந்துச்சு சார்... இன்ன பிற சார் போட்டு 300 ரூபா வாங்கிடுவான். கம்ப்யூட்டர் பத்தி தெரியாதவர்களுக்கு 1000 ரூபாய் கூட ஆகலாம்.

கம்ப்யூட்டர்களில் தினமும் சேரும் தூசுதான் இதன் முக்கியக் காரணம். கம்ப்யூட்டரில் ப்ராசஸருக்கு மேலே ஒரு சின்ன ஃபேன் இருக்கிறது. அது ப்ராசஸர் சூடாகாமல் காற்றை வீசிக் கொண்டிருக்கிறது. ப்ராசஸர் சூடானால் கம்ப்யூட்ட்டர் அணைந்து விடுகிறது. அதே போல லேப்டாப்பில் ஹீட் சின்க் ஒன்று இருக்கும். லேப்டாப்பிலும் பக்கவாட்டில் பார்த்தால் சிறு சிறு துளைகள் வழியாக லேசாக காற்று வரும் இல்லையா? இது வெப்பத்தை வெளியேற்றத்தான். தூசு அடைத்திருந்தால் ப்ராசஸர் சூடாகிவிடும். குறிப்பிட்ட வெப்ப நிலைக்கு மேலே போனால் தானே அணைந்து விடும். இதுதான் காரணம்.


இதற்கு சர்வீஸ் சென்டர் போகத் தேவையில்லை. புளோயர் வைத்து வேகமாக காற்றடித்தால் தூசுகள் போய்விடும். காற்றடிக்கும்போது வெளியே வரும் தூசைப் பார்த்தால்தான் உங்களுக்கே தெரியும் அட நம்ம லேப்டாப்ல இவ்ளோ தூசா என்று. இதுவே கம்ப்யூட்டர் என்றால் நிறையவே தூசு இருக்கும். மின்னிணைப்புத் தரும் எஸ்எம்பிஎஸ் பெட்டியிலும் தூசு அடைத்திருக்கும். ப்ளோயர் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, சைக்கிள் பம்ப் வைத்தும் தூசுகளை வெறியேற்றலாம்.

தானே ஷட் டவுன் ஆவதற்கு வைரஸ்தான் காரணம் என்று பயப்பட வேண்டாம். பொதுவாக, வைரஸ்கள் உங்களை ஷட் டவுன் செய்ய வந்தவையல்ல.

ரெஸ்டோர் செய்தல்
ஒருவேளை சாப்ட்வேர்களில் ஏற்பட்ட மாற்றம்தான் காரணம் என்று தோன்றினால்...
கம்ப்யூட்டரை ஆன் செய்யும்போது F8 பொத்தானை தட்டிக்கொண்டே இருங்கள். திறக்கிற திரையில் Safe Mode தேர்வு செய்யுங்கள். கம்ப்யூட்டர் நல்ல நிலையில் இயங்கிய முந்தைய தேதியில் இருந்த நிலைக்கு மாற்றுவது குறித்த Restore செய்வதற்கான தகவல் விரியும். அதில் கிளிக் செய்து, Restore செய்ய ஆணை கொடுத்தால், கம்ப்யூட்டர் கடைசியாக நல்ல நிலையில் இயங்கிய ஒரு தேதியை அதுவே காட்டும். தேதியை தேர்வு செய்யுங்கள். பழைய நிலைமைக்குப் போய்விடும். அந்தத் தேதிக்கும் இந்த நாளுக்கும் இடையில் நீங்கள் சேமித்து வைத்த கோப்புகள் ஏதும் கெடாது, இடைப்பட்ட தேதியில் நிறுவிய சாப்ட்வேர்கள் மட்டும் போய்விடும்.

கம்ப்யூட்டர் ரொம்ப நேரம் எடுக்குது
இரண்டு நாட்களுக்கு முன் நண்பர் ஒருவர் அழைத்தார். தன் கம்ப்யூட்டர் மிக மெதுவாக ஓடுகிறது. ஏதேனும் அப்ளிகேஷன் திறந்தால் அரைமணிநேரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது என்றார். கம்ப்யூட்டரில் பல விதமான தற்காலிகக் கோப்புகள் உங்களுக்குத் தெரியாமலே சேர்ந்து கொண்டே இருக்கும். இவை பொதுவாக சி டிரைவில் இருக்கும். தேவையில்லாத குப்பைகளை நீக்குவது போல அவ்வப்போது இந்த தற்காலிக்க் கோப்புகளை நீக்குவதும் அவசியம். இது மிக எளிது –

கம்ப்யூட்டரின் ஸ்டார்ட் சின்னத்துக்கு மேலே காலிக் கட்டம் தெரியும் அல்லவா... அங்கே %temp% என்று அடித்தால், மேலே Temp என்று ஒரு போல்டர் காட்டும். அதை கிளிக் செய்தால், தற்காலிகக் கோப்புகளின் பட்டியலைக் கொண்ட ஒரு பெட்டி திறக்கும். மொத்தமாக தேர்வு செய்து நீக்கி விடலாம். அவ்வாறு நீக்கும்போது, சிலவற்றை நீக்க முடியாது என்று காட்டக்கூடும். அதை Skip செய்து விடலாம்.  

நண்பரின் கம்ப்யூட்டரில் முதலில் Temp பைல்களை நீக்கிப் பார்த்தேன். அப்போதும் சரியாகவில்லை. புதிதாக ஏதேனும் சாஃப்ட்வேர்கள் நிறுவப்பட்டுள்ளதா என்று பார்த்தேன். அதுவும் இல்லை. அப்படியானால், தூசுதான் காரணம் என்று நினைத்தேன். திறந்து பார்த்தபோது, ப்ராசஸர் பேன் முழுக்கவும் தூசு அடைத்திருந்தது. புளோயர் கொண்டு, மின்சாரத்தை வழங்கும் எஸ்எம்பிஎஸ் உள்பட எல்லாவற்றையும் சுத்தம் செய்தேன். பிரச்சினை தீர்ந்து விட்டது.

கம்ப்யூட்டரில் உள்ள தூசு மிக நுண்ணிய துகள்களை – fine particles - கொண்டது. தூசு நீக்க புளோயர் பயன்படுத்தும்போது வீட்டுக்கு வெளியே வைத்துச் செய்யவும். மூக்கில் துணி கட்டிக்கொள்வது உத்தமம். இல்லையேல் என்னைப்போல ஈஸ்னோபீலியா இருப்பவர்கள் இரண்டு நாட்களுக்கு மூக்கொழுகிக்கொண்டிருக்கலாம்.

ப்ளூ ஸ்கிரீன் எரர்
கம்ப்யூட்டரில் இன்னொரு பிரச்சினை - திடீர் என்று ஸ்கிரீனில் நீலக்கலரில் ஏதோ எழுத்துகள் வந்து தானே அணைந்து விடுவது. அந்த எழுத்துகளைப் படித்துப் பார்க்கவெல்லாம் நேரம் கொடுக்காது.

இதைப் பார்த்து பயப்படத் தேவையில்லை. இதன் பெயர் ப்ளூ ஸ்கிரீன் எரர். பெரும்பாலும், ராமில் கோளாறால் ஏற்படுவது. லேப்டாப்பை அல்லது கம்ப்யூட்டரைத் திறக்கத் தெரிந்தால், திறந்து, ராம் சிப்களைக் கழற்றி, அதன் பித்தளை முனைகளை சாதாரண அழி ரப்பரால் நன்றாகத் தேய்த்து, துடைத்து மறுபடி மாட்டினால் போதும். அதற்கும் சரியாகவில்லை என்றால் ராம் உயிரை விட்டு விட்டது என்று கொள்ளலாம். ஆனால், ராம் சாதாரணமாக அவ்வளவு விரைவாகக் கெடாது என்பதை நினைவில் வைக்கவும்.

கல்லாதது கடலளவு
நம் லேப்டாப் சார்ஜர் கேபிள், செல்போன் சார்ஜர் கேபிள், கம்ப்யூட்டர்ல மானிட்டர் கேபிள் - இதுபோன்ற வயர்களில் ஒரு முடிச்சுப்போல இருப்பதைப் பாத்திருப்போம். இது என்னவாக இருக்கும், எதுக்கு இந்தக் கட்டி என்று உங்களுக்கும் தோன்றியிருக்கும் அல்லவா.... நான் தேடியறிந்த போது...


சார்ஜரில் இருந்து லேப்டாப்புக்கு அல்லது செல்போனுக்கு மின்சக்தி கடத்தப்படும்போது அதிலிருந்து எலக்டிரோமோடிவ் சக்தி கிளம்பும். அது ரேடியோவேவ் அலைகளாக கேபிளுக்கு வெளியே பரவும்போது பக்கத்தில் இருக்கிற மற்ற சாதனங்களில் தாக்கத்தை உண்டாக்கும். உதாரணமாக, பக்கத்தில் இருக்கம் ரேடியோ அல்லது டிவியின் அலைகளில் தடங்கல் செய்யும். தவிர, இந்த சக்தியின் காரணமாக மின்சக்தியும் கொஞ்சம் வீணாகும். அதனால் சார்ஜ் ஆகிற நேரமும் அதிகரிக்கும்.

இதைத் தடுப்பதுதான் இந்த முடிச்சு. இதற்குப் ஃபெர்ரைட் பீட் அல்லது ஃபெர்ரைட் சோக் - ferrite choke or ferrite bead - இந்த சோக் அல்லது பீட் எனப்படும் சிலிண்டருக்குள் சிறியதாக ஒரு காயில் கட்டியிருக்கும். அது ரேடியோவேவ் அலைகள் வெளியேறாமல் தடுக்கும். சார்ஜரின் வேலை சார்ஜ் செய்வது மட்டுமே. அதையும் செய்ய வைக்கிறது.

மேலும் விவரங்களை அறிய கீழே உள்ள இணைப்பில் பார்க்கவும்.

Monday, 30 March 2015

உலகக் கோப்பையும் கிரிக்கெட் வெறியும்



உலகக் கோப்பை உலகக் கோப்பையா?
 
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி என்று ஒரு மாதத்துக்கும் மேலாக ஓடி ஒருவழியாக முடிந்து விட்டது. உண்மையில் இது உலகக் கோப்பைதானா? எத்தனை நாடுகள் இதில் பங்கேற்றன? இங்கிலாந்தை ஒட்டி இருக்கும் அயர்லாந்து, ஸ்காட்லாந்தையும் சேர்த்து வெறும் 14 நாடுகள். இதில் அண்மைக்கால வரவான அரபு நாட்டையும் ஆப்கானிஸ்தானத்தையும் விட்டுப்பார்த்தால், மீதமிருக்கும் நாடுகள் எல்லாம் காலனி நாடுகள். ஒருகாலத்தில் இதற்குப் பெயரே ஜென்டில்மேன்ஸ் கேம். அதாவது, கனவான்களின் ஆட்டம். அதன் பொருள் என்ன என்று நீங்களும் கொஞ்சம் தேடிப்பாருங்கள், அப்புறம் இப்போதைய நிலவரத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். கிரிக்கெட்டில் ஜென்டில்மேன் தன்மையும் இல்லை, விளையாட்டு உணர்வும் இல்லை என்று புரிந்து கொள்வீர்கள். உலகெங்கும் கிரிக்கெட்டில் ஏராளமான பணம் புழங்குகிறது, கிரிக்கெட் நட்சத்திரங்கள் கோடி கோடியாக சம்பாதிக்கிறார்கள், கிரிக்கெட் சூதாட்டம் பல்லாயிரம் கோடிக்கு நடைபெறுகிறது, கார்ப்பரேட்டுகள் ஆட்டக்காரர்களை அல்லது அணிகளை விலைக்கு வாங்குகிறார்கள். அண்மையில் ஐபிஎல் கிரிக்கெட்டில் ஊழல் விவகாரம் வெடித்தது.

கிரிக்கெட் ஆடப்படுவது எத்தனை நாடுகளில் தெரியுமா? சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலில் முழு உறுப்பினர் நாடுகள் பத்து மட்டுமே. அதிலும் இங்கிலாந்து தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இந்தியா, வங்கதேசம், இலங்கை, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே ஆகிய நாடுகள் அனைத்தும் ஒரு காலத்தில் பிரிட்டனின் அடிமை நாடுகளாக இருந்தவை. ஆக, கிரிக்கெட் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த அடிமை நாடுகளில் மட்டும்தான். கிரிக்கெட் அடிமைகளாக இருப்பவர்களும் இந்த அடிமை நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான். அதாவது காலனியாதிக்கம் விட்டுச் சென்ற மிச்ச சொச்சங்களில் மிக மோசமானது இந்த கிரிக்கெட்.

இந்த நாடுகளைத் தவிர, ஆப்கானிஸ்தான், அர்ஜென்டினா, கென்யா, நமீபியா போன்ற நாடுகள், பப்புவா நியூ கினி, பிஜி, போன்ற குட்டிப் பிரதேசங்கள் உள்ளிட்ட 37 நாடுகள் அசோசியேட் உறுப்பினர்கள். ஆஸ்திரியா, பஹாமாஸ், பூடான், லெசோதோ என 59 நாடுகள் அஃப்ளியேட் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டன. (கிரிக்கெட்டே இல்லாத சீனா போன்ற நாடுகளிலும் கிரிக்கெட்டை நுழைக்க முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பது கொசுறுச் செய்தி.) ஆக, இதை உலகக் கோப்பை என்று உண்மையில் அழைக்க முடியுமா? நீங்களே முடிவு செய்யலாம்.

அதற்காக கிரிக்கெட்டை ஒரு விளையாட்டே இல்லை என்று சொல்ல மாட்டேன். அதுவும் ஒரு விளையாட்டு, அவ்வளவே. 11 முட்டாள்கள் விளையாட, 11 ஆயிரம் முட்டாள்கள் வேடிக்கை பார்க்கும் ஆட்டம் என்ற பழைய சொலவடை அதன் அங்கதத்துக்காக எனக்குப் பிடித்தது, ஆனால் உடன்பாடானதல்ல. இந்தியாவிலும் ஒரு காலத்தில் கிரிக்கெட் நவாபுகள் கையிலும் பெரிய புள்ளிகள் கையிலும்தான் இருந்தது. இன்று ஆடுகிறவர்கள் எல்லாருமே அந்தக்காலத்து மேல்தட்டு கனவான் வகையறாக்கள் அல்லதான். உங்களையும் என்னையும் போன்ற சாதாரண நடுத்தர வர்க்கத்திலிருந்து வந்தவர்கள் பலர் இந்திய அணியில் இருக்கிறார்கள்தான். ஆனால் முழுக்கவும் திறமை உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார்களா, எல்லாருக்கும் சம வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகளை எல்லாம் அலசினால் வேறு திசைக்குப் போகும். இந்திய கிரிக்கெட்டில் உள்ள பிரச்சினைகள் அனைவருக்கும் தெரியும். ஆக, கிரிக்கெட் இப்போதும் பெரிய புள்ளிகளின் கையில்தான் இருக்கிறது, வேறு வகையில்.

கிரிக்கெட் எப்படி இவ்வளவு பரவலாகி விட்டது. ஸ்டம்புக்காக மரத்தில் ஒடித்த குச்சிகள்கூடத் தேவையில்லை, சுவரில் வரைந்த கோடுகள் கூடப் போதும். பிட்ச் தேவையில்லை, வீட்டின் வாசலோ குறுகிய தெருவோ கூடப் போதும். 11 பேர் கொண்ட டீம்கூட வேண்டாம். வெறும் இரண்டுபேர் மட்டுமேகூட ஆடிக்கொள்வதுண்டு. விலையுயர்ந்த பந்து தேவையில்லை, ஒரு ரூபாய்க்குக் கிடைக்கிற பிளாஸ்டிக் பந்துகூடப்போதும். கஷ்மீரின் வில்லோ மரத்தில் செய்த மட்டைதான் வேண்டும் என்பதில்லை, எந்தவொரு கட்டையும் போதும். தொலைக்காட்சிகளின் பரவலும், தொலைத்தொடர்புத் துறையில் ஏற்பட்ட புரட்சியும் சேர்ந்து கிரிக்கெட்டையும் மூலை முடுக்கெல்லாம் விதைத்து விட்டது.

இதுவே கிரிக்கெட்டின் பலமாகவும் இருக்கிறது, பலவீனமாகவும் இருக்கிறது. கிரிக்கெட் என்பது இன்று வெறும் விளையாட்டு அல்ல. பல்லாயிரம் கோடிகள் புழங்கும் வியாபாரம். இதன் பின்னே இருப்பது ஒலிம்பிக் போட்டிகளில் உள்ளது போல விளையாட்டு உணர்வு அல்ல லாப நோக்கம். பிசிசிஐ பல்லாயிரம் கோடிகளில் விளையாடுகிறது. ஐபிஎல் கார்ப்பரேட்டுகள் பெரும்புள்ளிகள் கையில் இருக்கிறது. கிரிக்கெட் ஆட்டக்கார்ர்களுக்கும் பல கோடிகள் கிடைக்கிறது. தொலைக்காட்சி நிறுவனங்கள், அந்நிறுவனங்களுக்கு விளம்பரமும் ஸ்பான்சரும் தரும் பெரும்பெரும் நுகர்பொருள் நிறுவனங்கள்.... இப்படி ஒரு விஷச்சுழல்போல ஆகிவிட்டிருக்கிறது கிரிக்கெட்.

கிரிக்கெட் என்றால் டெஸ்ட் போட்டி என்றிருந்த வரையில் அது விளையாட்டாக இருந்தது. பிறகு, இந்த அவசர யுகத்தில் யாருக்கு ஐந்து நாட்கள் தொடர்ந்து பார்க்க நேரம் இருக்கிறது என்று ஒரு நாள் போட்டி ஆனது. அதையும் சுருக்கி 20-20 கிரிக்கெட் போட்டி வந்தது. நோக்கம் ஒன்றுதான் எல்லாரையும் கிரிக்கெட் ரசிகர்களாக்குவது, இல்லையில்லை, கிரிக்கெட் பைத்தியங்களாக்குவது. உண்மையில், அடிமை நாடுகளில் உள்ளதுபோல கிரிக்கெட் வெறி கிரிக்கெட் பிறந்த நாட்டில் இல்லவே இல்லை என்பதை சொல்லத் தேவையே இல்லை. அதேபோல, இந்தியாவில் நடைபெறுவது போல வருடம் முழுவதும் கிரிக்கெட் போட்டிகளும் வேறெந்த நாட்டிலும் இல்லை.

தொலைக்காட்சிகளில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் விளம்பரங்களைப் பார்த்தும், அவர்கள் கோடிகளில் குளிப்பதைப் பார்த்தும் தான் சாதிக்க முடியாத்தை சினிமா கதாநாயகன் சாதிப்பதைப் பார்த்து திருப்தி அடைந்து ரசிகர் மன்றம் அமைப்பதைப் போல சாமானியர்கள் கிரிக்கெட் ரசிகர்கள் ஆகிறார்கள். இன்று வேறெந்த விளையாட்டைப் பற்றியும் பெரும்பாலோருக்குத் தெரியாது. தெரிந்ததெல்லாம் கிரிக்கெட் கிரிக்கெட் கிரிக்கெட் அதற்கு ஒரு கோஷம் ஈட் கிரிக்கெட், டிரிங்க் கிரிக்கெட், ஸ்லீப் கிரிக்கெட்.

ஆனால் கிரிக்கெட் ஆடிக்கொரு முறை நடந்தால் ஈட் கிரிக்கெட்,ஸ்லீப் கிரிக்கெட் சொல்ல முடியுமா? அப்புறம் மக்கள் மறந்து விட மாட்டார்களா? அதற்குத்தான் விதவிதமான லீக்குகள். ஆண்டுக்கொரு ஐபிஎல் லீக், அடுத்து வந்தது சாம்பியன் லீக். உலகக் கோப்பை கிரிக்கெட், 20-20 உலகக் கோப்பை கிரிக்கெட், பார்டர் கவாஸ்கர் கோப்பை, பட்டோடி கோப்பை, இந்தியா வரும் இங்கிலாந்து, இங்கிலாந்து செல்லும் இந்தியா, ஆஸ்திரேலியா-நியூ சிலாந்தில் இந்தியா, இந்தியாவில் ஆஸ்திரேலியா, நடுநடுவே வங்கதேசம்-இலங்கை-இந்தியா மும்முனை கிரிக்கெட் போட்டிகள், தென்னாப்பிரிக்கா பயணம் செய்தும் இந்தியா, இந்தியாவுக்கு வரும் மேற்கிந்தியா......... உள்நாட்டின் ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை, இரானி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பை வகையறாக்கள் தனி. ஆக, ஆண்டின் எந்த மாதத்திலும் கிரிக்கெட் இல்லாமல் இல்லை என்கிற நிலை வந்து வெகுகாலமாகி விட்டது.

சினிமா பார்ப்பது, புத்தகம் வாசிப்பது போன்று கிரிக்கெட்டும் ஒரு பொழுதுபோக்கு. இளைஞர்கள் இதில் ஈடுபடுவதில் என்ன தவறு என்று கேட்டார் ஒரு நண்பர். மிகப்பெரிய சினிமா பைத்தியமாகவே இருந்தாலும், நாளுக்கு ஒரு சினிமா பார்த்தாலும் ஒருவர் அதிகபட்சம் நாளுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே செலவு செய்கிறார். புத்தகம் படிக்கும் வழக்கமே குறைந்துவிட்டது என்பது ஒரு புறம் இருக்கட்டும். அப்படியே புத்தகம் படித்தாலும் அதிகபட்சம் நாளுக்கு இரண்டு மணி நேரம் இருக்கலாம். எப்படி வைத்துக்கொண்டாலும், அவை இரண்டும் அந்தந்த தனிநபரின் நேரத்தை மட்டுமே எடுப்பவை. கிரிக்கெட்டில் இருப்பது போல ஒட்டுமொத்த சமூகமும் சினிமா பின்னாலோ புத்தகத்தின் பின்னாலோ பல நாட்களுக்கு மோகித்துக் கிடப்பதில்லை. தவிர, புத்தகம் வாசிப்பது ஒருவனை மேம்படுத்தவே செய்யும். கிரிக்கெட் செய்திருப்பதெல்லாம் விளையாட்டு உணர்வை மழுங்கடிக்கச் செய்தது மட்டுமே.

இளைஞர்கள் விளையாட்டில் ஈடுபடுவது நல்லதுதானே என்ற வாதமே அடிபட்டுப்போகிறது. விளையாட்டில் ஈடுபடுவது என்றால் அவரவர் வசதிக்கேற்ப, தகுதிக்கேற்ப, உடல் வலுவுக்கேற்ப ஏதேனுமொரு விளையாட்டில் ஈடுபட்டால் அது ஆரோக்கியம், வரவேற்கத் தக்கது. ஆனால் இங்கே நடப்பது என்ன? கோடிக்கணக்கானவர்களை வெறும் பார்வையாளர்களாக, நுகர் சந்தையாக ஆக்குவது மட்டுமே. ஒலிம்பிக் விளையாட்டுக்கு என விதியே உண்டு, உறுதிமொழி உண்டு. அங்கே வெற்றி முக்கியமல்ல, விளையாட்டில் பங்கேற்புதான் முக்கியம். ஆனால் கிரிக்கெட் செய்திருப்பதெல்லாம் குறைந்தபட்சம் நம்மைப் போன்ற அடிமை நாடுகளில் - வெறும் வெற்றி வெறி மட்டுமே. அதனால்தான் இந்திய அணி வென்றதும் தோனியைப் போல உண்டா என்கிறார்கள், தோற்றால் வீட்டைத் தாக்குகிறார்கள். அண்மையில் பேஸ்புக்கில் கண்ட பச்சையைக் கண்டால் அடிப்போம் போன்ற பதிவுகள் விளையாட்டு என்றால் என்னவென்றே நம் இளைஞர்களுக்குத் தெரியாது என்று காட்டுகின்றன. எந்தவொரு விளையாட்டிலும் ஒருவருக்குத்தானே வெற்றி கிடைக்க முடியும்? இந்தியர்கள் மட்டுமே வெல்லப் பிறந்தவர்கள் என்பது போன்ற சில பதிவுகளையும் கமென்ட்களையும் பார்க்கும்போது குமட்டியது. இதில் தேசபக்தி கோஷம் வேறு. தேசபக்தியாவது மண்ணாவது... இது வெறும் வெறி. கிரிக்கெட்டைப் பற்றியும் தெரியாமல், விளையாட்டு என்றால் என்ன என்றும் தெரியாமல் வெற்றுக்கூச்சல் எழுப்பும் கூட்டத்தை கோடிக்கணக்கில் உருவாக்கியிருக்கிறது கிரிக்கெட்.


உண்மையிலேயே விளையாட்டை ஊக்குவிக்கிற தேசமாக இருந்திருந்தால், ஹாக்கி வேர்ல்ட் லீக் போட்டியில் போன வாரம் இந்திய மகளிர் அணி வெற்றி கண்டதே, அதைப் பற்றிய பாராட்டுகள் குவிந்திருக்க வேண்டும். கபடி போட்டியில் இந்திய மகளிர் அணி கோப்பையும் 25 லட்ச ரூபாய் பரிசையும் வென்று வந்தபோது வீடு திரும்ப ஆட்டோவில் சென்றார்களே, அதைப் பார்த்து பொங்கியிருக்க வேண்டும் இந்திய இளைஞர்கள். அவ்வளவு ஏன், இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஆடிய ஆட்டத்தின்போது பேஸ்புக்கில் எங்கு பார்த்தாலும் கிரிக்கெட் ஸ்டேட்டஸ். அதைவிட முக்கியமான இறுதி ஆட்டம் நடந்த ஞாயிறு அன்று ஓரிரு ஸ்டேட்டஸ்கள் தவிர கிரிக்கெட் பற்றி எதுவுமே காணோம். விளையாட்டு உணர்வுக்கும் இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது இதிலிருந்தே தெளிவாகும்.


கிரிக்கெட் வெறிக்கு இரண்டு உதாரணங்களைக் காட்டினால் போதும். ஒருவர் இந்திய அணி வெல்ல வேண்டும் என்பதற்காக தன் நாக்கை வெட்டி கோவிலுக்குப் படைத்திருக்கிறார். இன்னொரு இளைஞன் இந்திய அணி தோல்வி அடைந்ததால் உடைந்துபோய் கதறி அழுகிறான். அவன் அழுகிற படத்தைப் பாருங்கள் இலவச தொலைக்காட்சி, இலவசப் பொருட்கள் இருக்கிற மிகச் சாதாரணமான வீடு. இவன் இன்று மட்டும்தான் கிரிக்கெட்டில் கழித்திருப்பானா? இந்த உலகக் கோப்பைப் போட்டியின் எத்தனை ஆட்டங்களை வேலையை விட்டுவிட்டுப் பார்த்திருப்பான். விளையாட்டைப் பார்ப்பதோடு மட்டும் நிற்கிறதா? அதற்கடுத்த நாட்களில் எல்லாம் அதைப்பற்றியே பேச்சு. இவனைப்போல கோடிக்கணக்கானவர்கள் குறிப்பாக உழைப்பு வலிமையும் உற்பத்தித் திறனும் மிகுந்த இளைஞர்களின் எத்தனை மனித உழைப்பு நேரம் இதில் வீணாகியிருக்கும். அவர்களுடைய குடும்பத்துக்கு வருவாய் இழப்பு எத்தனை ஆயிரம் கோடிகள் இருந்திருக்கும்.

இந்தியா-ஆஸ்திரேலியா மோதிய 26ஆம் தேதி பெரும்பாலான அரசு அலுவலகங்களில் ஆட்களே இல்லை. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் இல்லை. கடைக்காரர்கள் வியாபாரத்தை விட்டுவிட்டு டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். டிவி இல்லாதவர்கள் பக்கத்துக்கடையில் இருந்தார்கள். டிவி இருந்த ஒவ்வொரு கடையின் முன்னாலும் கூட்டம். பார்த்துக்கொண்டிருந்தவர்கள் குடும்பத்தை பீகாரிலோ உ.பி.யின் கிராமத்திலோ விட்டுவிட்டு இங்கே வந்து சைக்கிள் ரிக்சா ஓட்டுவோர், காய்கறி விற்போர், தச்சு வேலை செய்வோர், போன்ற கூலித் தொழிலாளர்கள்.

இப்படி பல கோடி இளைஞர்களின் மூளைகளை மழுங்கடித்து, முட்டாள்தனமான வெறியை மட்டுமே ஊட்டுவதுதான் கிரிக்கெட் எனும்போது...
நாசமாய்ப் போகட்டும் கிரிக்கெட்.

பி.கு. இந்திய இளைஞர்களின் மூளையை மழுங்கடித்து வேறு பிரச்சினைகளில் கவனம் திசை திரும்பிவிடாதபடி கிரிக்கெட் போதையில் மூழ்கடித்து வைத்திருப்பதில் ஆட்சியாளர்களுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் லாபம் இருக்கிறது என்பதில் எவருக்கும் ஐயம் தேவையில்லை. இதற்கு ஆதாரம் இல்லை என்பதால் மட்டுமே அதைப்பற்றி நான் இங்கே எழுதவில்லை.