Sunday, 22 March 2015

மகளிர் தினம் - பத்தாண்டு இடைவெளியில்
மற்றுமொரு மகளிர் தினம் வந்துவிட்டுப் போய்விட்டது. தொலைக்காட்சிகளில் மகளிர் சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்து முடிந்து விட்டன. தமிழ்ச் சங்கத்தில் மகளிர் தின விழிப்புணர்வுநிகழ்ச்சி நடத்தியாகி விட்டது. இனி எல்லாரும் சந்தோஷமாகத் தூங்கப் போகலாம்.

மீடியாவில் குறிப்பாக தொடர்களிலும் விளம்பரங்களிலும் பெண்கள் சித்திரிக்கப்படும் விதம் குறித்து யாருக்கும் கவலை இல்லை.

  • காரில் லிஃப்ட் கொடுத்த எவனோ ஒருவனின் சென்ட் வாசனைக்காக, நிச்சயிக்கப்பட்ட மணமகனை ஒதுக்கிவிட்டு ஓடத் தயாராக இருப்பவள்தான் பெண்...
  • சோப்பை மாற்றிக் குளித்தால் பெண்ணுக்குத் தன்னம்பிக்கை போய்விடும், அப்புறம் கல்யாணம் நடக்காது...
  • திரைப்படங்களில் கதாநாயகன் எவ்வளவு பொறுக்கியாக இருந்தாலும் சரி, அவனுடைய சீண்டல்களையும் தொல்லைகளையும் ரசித்து தொப்புளைக்காட்டி இடுப்பை ஆட்டி ஆடை விலக்கிக் கால்களைக் காட்டி அவனை சந்தோஷப்படுத்துபவள்தான் பெண்...


பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் பார்த்தால் பதறுகிறது. கற்பழிப்பில் தில்லிக்கு எத்தனையாவது இடம் என்று தெரியவில்லை. பீகாரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று கூக்குரல் போடுபவர்களுக்கு தில்லியின் நிலவரம் தெரியாது என்பதல்ல, பார்க்க விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

மசாஜ் விளம்பரங்கள் தலைநகரின் ஆங்கில-இந்திப் பத்திரிகைகள் அனைத்திலும் (இந்து தவிர்த்து) வெளிவந்து கொண்டுதான் இருக்கின்றன. அந்த விளம்பரங்கள் எதற்கானவை என்று காவல்துறைக்கும் தெரியும். கிரீன் பார்க், சௌத் எக்ஸ், கிரேட்டர் கைலாஷ், குதுப் பகுதியின் பண்ணை பங்களாக்களில் என்ன நடக்கிறது என்பதும் எல்லாருக்கும் தெரியும். ஆனாலும் எதுவும் வெளியே வராது.

கடந்த ஆண்டு ஐ.டி.ஓ. அருகே பட்டப்பகலில் மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிக்கப்பட்ட போதுதான் தில்லியில் பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பின்மை என்பதன் வீரியம் கொஞ்சம் வெளியே தெரிந்தது. பத்திரிகைகளும் இதைப்பற்றிக் கூக்குரல் எழுப்பவே, காவல்துறை சரியான குற்றவாளியைக் கண்டுபிடித்து விட்டது.

அதற்குப் பிறகு கடந்த மாதம் நிகழந்த சம்பவம் இன்னும் அதிர்ச்சி அளிக்கிறது. ஒரு பள்ளியின் முதல்வர், தன்னிடம் டியூஷன் படிக்கும் மாணவிக்கு மதிப்பெண்கள் அதிகம் கிடைக்கும் என்று ஆசைகாட்டி அழைத்துச்சென்று கற்பழித்திருக்கிறார். அதைவிடக்கொடுமை என்னவென்றால், இந்த நல்லகாரியத்துக்கு தன் நண்பர்களையும் சேர்த்துக் கொண்டிருக்கிறார் அவரும் பள்ளி முதல்வராம். இந்தச் செய்தியிலிருந்து புரியக் கிடைப்பது, இந்த முதல்வரின் முதல் கற்பழிப்புச் சம்பவம் அல்ல இது என்பதுதான். மற்ற சில மாணவிகளும் பாதிக்கப்பட்டிருக்க பலமான வாய்ப்பு இருக்கிறது. அவர்கள் வெளியே சொல்லவில்லை எனக் கருதலாம். யாரைக் குற்றம் சொல்வது?

  • கல்வி என்பது வாங்குகிற மதிப்பெண்களைப் பொறுத்தது என்று நம்பச்செய்கிற நமது கல்விமுறைக்கு இதில் எவ்வளவு பங்கு?
  • குறுக்கு வழியில் போனாலும் பரவாயில்லை, மதிப்பெண்கள் கிடைத்தால் போகும் என்று எண்ணிய மாணவியின் பங்கு இந்தக் குற்றத்தில் எவ்வளவு?
  • இப்படி ஒரு பெண்ணை வளர்த்த பெற்றோரின் பங்கு எவ்வளவு?
  • இத்தகைய குரூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் தண்டனை பெறாமல் தப்பி விடுகிறார்கள் என்ற நிலைமைக்குக் காரணமாக இருக்கும் நீதியமைப்புக்கு எவ்வளவு பங்கு?


இப்படி அலசும்போது ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. உத்தராகண்ட் தனிமாநிலம் வேண்டும் என்று கோரிய போராட்டக்காரர்கள் தில்லிக்கு வந்து கொண்டிருந்தார்கள். உத்திரப் பிரதேசத்தில் அவர்களைத் தடுத்து நிறுத்திய காக்கி உடைக் கயவர்கள் ஏழு பெண்களைக் கற்பழித்தனர். தடுக்க முயன்ற பதினான்கு பேரை சுட்டுக் கொன்றனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சொன்னாராம் ஆளரவற்ற கரும்புக்காட்டில் ஒரு ஆண் தனித்திருக்கும் ஒரு பெண்ணைப் பார்த்தால் அவன் மனதில் முதலில் எழுகிற எண்ணம் காமம்தான்.

இத்தகைய நீதிமுறைமை இருக்கும் வரையில் பெண்களுக்குப் பாதுகாப்பாவது, பெண்ணுரிமையாவது, ம....வது?

*

- நான் நடத்தி வந்த தலைநகரத் தமிழோசை 2005 மார்ச் இதழில் புதியவனின் கடைசிப் பக்கம் என்ற தொடர் கட்டுரை.
குறிப்பு – 1. அப்போது பாலியல் வன்முறை என்ற சொல் வழக்கத்தில் இல்லை. 2. இப்போது தில்லியும் முன்னிலை பெற்று விட்டது.

No comments:

Post a Comment