நீங்கள் அறிந்ததும் அறியாததும்
இப்போது தமிழகத்தின் பல
நகரங்களில் புத்தகத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. நூல்களோடு தொடர்புடையது என்
வாழ்க்கை என்பதால் அவற்றைக் குறித்த தகவல்களையும் நான் ஆவலோடு பார்க்கிறேன்.
முதலாவதாக நான் பார்த்த பெரிய புத்தகத் திருவிழா சென்னையில் நடப்பதுதான். 1986 என்று நினைவு. மவுண்ட் ரோடு அருகே, காயிதே மில்லத் கல்லூரி மைதானத்தில் நடந்தது.
தில்லிக்கு வந்து, உலகப் புத்தகத்
திருவிழாவை முதல்முறையாக 1992இல் பார்த்தபோதுதான்
அதன் பிரம்மாண்டம் வியப்பளித்தது. அன்றிலிருந்து இன்று வரை ஒரு திருவிழாவையும்
நான் விட்டு வைக்கவில்லை. முதலில் பதிப்பக நிறுவனத்தின் சார்பாக, பிறகு வாசகனாகச் சென்று கொண்டிருந்தேன். 2000 முதல், திருவிழாவை ஏற்பாடு
செய்யும் நிறுவனமான நேஷனல் புக் டிரஸ்ட் நிறுவனத்தின் சார்பில் பங்கேற்கிறேன்.
ஆசிய-ஆப்பிரிக்க பிராந்தியத்திலேயே மிகப்பெரிய புத்தகத் திருவிழா இதுதான்.
புதுதில்லி புத்தகத்
திருவிழா 1972இல்
துவங்கியதிலிருந்து 2012 வரை
இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தது. இப்போது ஆண்டுக்கு ஒருமுறை
நடக்கிறது. ஒருவகையில் இது தில்லியிலும் சுற்றுப்புறத்தில் இருக்கிற அல்லது பெரிய
பதிப்பாளர்களுக்கு வசதியானது. மற்றொரு வகையில் சிறிய, பிராந்திய மொழிப் பதிப்பாளர்களுக்கு பெரும்
பிரச்சினை ஆனது. ஒவ்வொரு மொழியிலிருந்தும் பங்குபெறுவோர் அடிப்படையில் பார்த்தால்
பொதுவாக, மலையாளம் முதலிடம்
பெறும், தமிழ் இரண்டாம் இடம்
பெறும். கன்னடம், தெலுங்கு, மராட்டி, ஒடியா போன்ற
மொழியினர் ஒவ்வொன்று வந்தாலே பெரிய விஷயம்தான்.
இப்போது இன்னும் சிக்கலாகி
விட்டது. தொலைதூர மாநிலங்களின் பதிப்பாளர்கள் ஆண்டுதோறும் வரத் தயங்குகிறார்கள்.
பொதுவாக 9 நாட்கள் நடைபெறும்
திருவிழாவுக்கான வாடகையில் இந்தி மற்றும் இதர மொழியினருக்கு 50 சதவிகிதம் சலுகை உண்டு. என்றாலும்கூட அவர்கள் வரத்
தயங்குவதில் நியாயம் இருக்கிறது. திருவிழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே
குறைந்தபட்சம் இரண்டு பேர் வந்து ஹோட்டலில் தங்குவது, ஹோட்டலின் வாடகை, சாப்பாட்டுச் செலவு, புத்தகங்கள்
லாரியில் கொண்டு வருவது, கண்காட்சி
மைதானத்துக்கு வேனில் கொண்டு சேர்ப்பது, கூலி ஆட்களைப்
பிடித்து கடைக்கு எடுத்துச் செல்வது, தினமும் ஆட்டோவில்
திருவிழாவுக்கு வந்து செல்லும் செலவு, மீந்துபோன நூல்களை
மீண்டும் பண்டில் கட்டி, ஆளைப்பிடித்து, வேனைப் பிடித்து, லாரியில் ஏற்றி அனுப்ப வேண்டும். (மேலே சொன்னதில் இந்தி தெரியாதவர்களாக இருந்தால்
செலவும் சிரமமும் இன்னும் அதிகம்.) எல்லாம் கணக்குப் பார்த்தால், உழுதவன் கணக்குப் பார்த்த கதைதான். அதனால்தான் இந்த
ஆண்டு காலச்சுவடு வரவில்லை, கிழக்கு வரவில்லை.
எப்போதும் தவறாமல் வருகிற நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் மட்டும் வந்தது. பபாசிக்கு
இலவசக் கடை என்றிருந்தும்கூட அவர்கள் அதிகப் புத்தகங்கள் கொண்டு வரவில்லை. விற்பனை
ஆகும் சாத்தியமே இல்லாத சிலவற்றை பெயருக்கு எடுத்து வந்தார்கள்.
மீண்டும் திருவிழா
விஷயத்துக்குப் போவோம். அப்படி என்ன பிரம்மாண்டம் என்று கேட்கலாம். ஒன்று, திருவிழா நடைபெறும் பிரகதி மைதானமும், அதில் உள்ள அரங்குகளும். திறந்தவெளியில் கொட்டகை
போடும் தேவை இல்லை. எல்லாமே பிரம்மாண்ட கட்டிடங்கள். ஒவ்வொன்றும் ஒரு ஹால்
எனப்படும். எத்தனை கடைகளுக்கான இடம் தேவை என்பதைப் பொறுத்து ஹால் 1 முதல் 12 வரையும், 14 மற்றும் 18 என மொத்தம் 14 அரங்குகளில் திருவிழா விரியும். பெரும்பாலான
அரங்குகளில் மாடிகளில் கூட்டம் நடத்துவதற்கேற்ற கலையரங்கு அல்லது கூட்ட
அரங்குகளும் உண்டு. வெளியே ஹம்சத்வனி, லால் சவுக் என
இரண்டு திறந்தவெளி அரங்குகளும் உண்டு. மாலை கலைநிகழ்ச்சிகளுக்கு மிகவும் உகந்தவை.
பிரகதி மைதானில்தான்
ஆட்டோமொபைல், பாதுகாப்பு, வர்த்தகக் கண்காட்சி என ஆண்டு முழுவதும் ஏராளமான
கண்காட்சிகள் நடைபெறுகின்றன. இதிலும் ஒரு சிக்கல் தொடர்கிறது. பிரகதி மைதானுக்கு
ஒதுக்கப்பட்ட இடத்தை தன் விரிவாக்கத்துக்குத் தேவை என உச்சநீதிமன்றம் கூறி
வருகிறது. இதே காரணத்தால், குழந்தைகளுக்கான
தீம் பார்க் போல இருந்த அப்பு கர் பல ஆண்டுகளுக்கு முன்பே மூடப்பட்டு விட்டது.
பிரகதி மைதானுக்கு எப்போதும் கழுத்தில் கத்தி போல இந்தப் பிரச்சினை இருந்து
கொண்டிருக்கிறது. அப்படி ஏதும் நிகழ்ந்தால்,
50 கிலோமீட்டருக்கு அப்பால் - உ.பி.யில் இருக்கிற கிரேட்டர் நொய்டாவுக்குதான் போக
வேண்டியிருக்கும். புத்தகத் திருவிழா பெரும் தோல்வி அடையும். அதற்குள் நான்
தில்லியை விட்டுப் புறப்பட்டு விடுவேன் என நம்புகிறேன். அது கிடக்கட்டும்.
தமிழ்நாட்டில் இப்போதெல்லாம்
புத்தகத் திருவிழாக்களில் மாலைகளில் பிரபலங்களை வைத்து பட்டிமன்றம், சொற்பொழிவு,
கலைநிகழ்ச்சி என தவறாமல் நடைபெறுகின்றன அல்லவா... அதன் முன்னோடி இந்தப்
புத்தகத் திருவிழாதான். ஆனால் இங்கே நடைபெறுவது முற்றிலும் வேறுவிதம்.
திருவிழாவுக்கு சில
மாதங்களுக்கு முன்பே நிகழ்ச்சிகளுக்கான முன்பதிவுகள் துவங்கி விடும்.
பதிப்பாளர்கள் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளோ அல்லது கூட்டமோ நடத்த விரும்பினால், குறைந்த செலவில் அரங்குகள் பதிவு செய்யப்படும்.
சராசரியாக ஓரு நிகழ்ச்சிக்கு ஒன்றரை முதல் இரண்டு மணிநேரம். எனவே, 9 நாட்களில் நான்கு அரங்குகளில், சில நூறு நிகழ்ச்சிகள் இவற்றில் நடைபெறும்.
தவிர, 2013 முதல் Authors’
Corner என்றொரு ஏற்பாட்டைத் துவங்கியுள்ளனர். (சில வெளிநாட்டுத் திருவிழாக்களில் Authors Café என்று இவை ஏற்பாடு
செய்யப்படுகின்றன.) திருவிழா அரங்கிலேயே மையமான பகுதியில் ஒரு மேடை, நாற்காலிகள்,
பார்வையாளர்களுக்கு சுமார் 100 நாற்காலிகள், ஒலிபெருக்கி வசதிகள் எல்லாம் இருக்கும். பதிப்பாளர், எழுத்தாளர்,
ஏன், யார் வேண்டுமானாலும்
நூல் குறித்து அல்லது தன் எழுத்து குறித்துப் பேசலாம். அதற்கு முன்பதிவு செய்ய வேண்டும், யார் முதலில் நேரத்தை முன்பதிவு செய்கிறார்களோ
அவர்களுக்கு அந்த நேரம் கிடைக்கும் – First
come first. இது முற்றிலும் இலவசம். சராசரியாக ஒரு பதிவுக்கு
ஒரு மணி நேரம் மட்டுமே. சில நேரங்களில் ஒரே பதிப்பாளர் நான்கைந்து
எழுத்தாளர்களையும் மேடையேற்றலாம், நூல்களை வெளியிடலாம், உரையாற்றலாம்,
பார்வையாளர்கள் அவர்களுடன் உரையாடலாம். இந்த ஆண்டு ஆங்கிலத்தில் இரண்டும், இந்தியில் இரண்டும் என நான்கு Authors’ Corners இருந்தன. நாளுக்கு
சராசரி 6-8 நிகழ்வுகள் என்றால், இருநூறுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் வந்து
சென்றார்கள்.
இந்த ஆண்டு சாரு ஹாசன்கூட
வந்திருந்தார். பிரபலங்கள் பலரையும் பார்க்கலாம். பெரும்பாலும் எந்த பந்தாவும்
இல்லாமல் உரையாடுவார்கள். இந்த ஆண்டு வந்தவர்களில் மாதிரிக்கு சில பெயர்கள் – ஜெய்ராம் ரமேஷ்,
நம்வர் சிங், அஷோக் வாஜ்பேயி, அசுதோஷ், நட்வர் சிங், கிரண் பேடி,
மகேஷ் பட், ஜாவேத் அக்தர், அமிதபா பக்ஷி,
மரியம் கரீம், நமிதா கோகலே, ஜியா-உஸ்-ஸலாம்,
ஜெயா ஜெட்லி. (கடந்த ஆண்டுகளில் சில பெயர்கள் – அப்துல் கலாம், நந்திதா தாஸ், ஸ்ரீகாந்த்,
பரூக் ஷேக், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, சஷி தரூர், அரவிந்த்
கேஜ்ரிவால்.)
கடந்த சில ஆண்டுகளாக, ஒவ்வொரு திருவிழாவுக்கும் ஒரு மையக்கருத்து
தரப்படுகிறது. (கடந்தவற்றில் – காந்தி, காமன்வெல்த் விளையாட்டு, இந்திய சினிமாவின் 100 ஆண்டுகள், பழங்குடி
இலக்கியங்கள், குழந்தை இலக்கியம்)
இதற்காக சிறப்பு அரங்கு ஒன்று அமைக்கப்படும். மையக்கருத்துடன் தொடர்புடைய நூல்கள்
நாடெங்குமிருந்து வரவழைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்படும். மையக்கருத்து தொடர்பான
கருத்தரங்குகள், உரையாடல்கள், திரைப்படங்கள்,
கலைநிகழ்ச்சிகள் என அந்த அரங்கில் நாள் முழுவதும் நிகழ்வுகள் நடந்து கொண்டே
இருக்கும்.
அஸாமிய திரைப்பட இயக்குநர் சந்த்வானா பர்தோலாய் |
இந்த ஆண்டு மையக்கருத்து
"வடகிழக்கின் குரல்கள்" என்பதால்,
வடகிழக்கு மாநிலங்களின் நூல்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. வடகிழக்குப்
பிரச்சினைகள் குறித்து பல துறை வல்லுநர்கள் உரையாடல்களில் கலந்து கொண்டனர்.
தினமும் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டது. தினமும் ஒரு கலைக்குழுவின் நிகழ்ச்சி
நடத்தப்பட்டது. இதன் மூலம் சாமானியர்களுக்குத் தெரியாத பல விவரங்கள் தெரிந்து
கொள்ளலாம். உதாரணமாக, வடகிழக்கில் 220 மொழிகள் பேசப்படுகின்றன. இவை திபேத்தோ-பர்மன், இந்தோ-ஆர்யன்,
ஆஸ்ட்ரோ-ஆசியாடிக் ஆகிய மூன்று மொழிக்குடும்பங்களைச் சேர்ந்தவை. அசாமிய மொழித்
திரைப்படம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்கும். கோக்பரோக், மோன்பா, காசி, கூர்க்காலி,
மிசிங், ஜைந்தியா ஆகிய
மொழிகளில்கூட திரைப்படம் வந்திருக்கிறது. மேகலாயாவில், மரங்களின் வேர்களாலேயே அமைந்த பாலங்கள்
இருக்கின்றன. மேகலாயாவில் உள்ள மாவ்லின்னாங் என்ற ஊர்தான் ஆசியாவிலேயே தூய்மையான
ஊர். (வடகிழக்கு மாநிலங்கள் குறித்து அழகான பேனல்கள் அரங்கில் வைக்கப்பட்டன. அதே
பேனல்களைக் கொண்டு ஒரு பிரசுரமும் வடிவமைத்தேன். அதை குறைந்தவிலை நூலாக வெளியிடுங்கள்
என்று என்.பி.டி.க்குத் தெரிவித்திருக்கிறேன். மீண்டும் நினைவுபடுத்த வேண்டும்.
ஆண்டுதோறும் ஏதாவதொரு நாடு
சிறப்பு விருந்தினர் நாடாகப் பங்கேற்கும். இந்த ஆண்டு சிங்கப்பூர் சிறப்பு
விருந்தினர் நாடு. தென் கொரியா சிறப்புக் கவனம் பெற்ற நாடாகப் பங்கேற்றது. இந்த
வெளிநாட்டுப் பதிப்பாளர்கள் பங்கேற்கும் அரங்கிலும் தினமும் பல நிகழ்ச்சிகள்
நடந்தன – எழுத்தாளர்
சந்திப்பு, ஓவியப் பட்டறை, கலந்துரையாடல்,
நூல் வெளியீடு, கலை நிகழ்ச்சிகள்.
எப்போதும்போல இந்த ஆண்டும்
சிறுவர் அரங்கம் தனியாக இருந்த்து. இங்கே பட்டியலிட முடியாத அளவுக்கு நாள்
முழுதும் ஏராளமான நிகழ்ச்சிகள் அரங்கேறிக்கொண்டே இருந்தன. பள்ளி மாணவர்களும்
பார்வையாளர்களாக வந்த குழந்தைகளுமாக கலகலவென்று இருக்கும்.
கடந்த மூன்று ஆண்டுகளாக
புதிதாக அறிமுகமானது Rights Table – பதிப்புரிமை மேசை.
சுமார் 80 மேசைகள்.
பதிப்பாளர்கள் முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும். யார் யார் பதிவு
செய்திருக்கிறார்கள் என்ற தகவல் அவர்களுக்கு முன்னமே அனுப்பப்படும். அவ்வாறு
வந்தவர்கள், தமக்குள் உரையாடி
பரஸ்பரம் தமது நூல்களுக்கான பதிப்புரிமைகளை விற்கலாம், வாங்கலாம், கூட்டு வெளியீடு
குறித்து திட்டமிடலாம். சில பதிப்பாளர்கள் கண்காட்சியில் கடை விரிப்பதே இல்லை, இந்தப் பதிப்புரிமை மேசையில் மட்டும் பங்கேற்க
வருவார்கள். அதாவது, புத்தகத்
திருவிழாவின் நோக்கம் புத்தகம் விற்பது அல்ல.
இந்த இடத்தில் மற்றொரு
முக்கியச் செய்தி சொல்ல வேண்டும். உலகெங்கும் நடைபெறுகிற பெரும்பாலான
திருவிழாக்களில் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்காது. அது பதிப்பாளர்கள், எழுத்தாளர்கள்,
அல்லது அவர்களின் முகவர்கள் மட்டுமே பங்கேற்கும் நிகழ்ச்சி. பதிப்புரிமைப்
பரிமாற்றம், கூட்டு வெளியீடு
போன்றவற்றைத் திட்டமிடுதல் மட்டுமே புத்தகத் திருவிழாக்களின் நடைபெறும்.
உங்களையும் என்னையும் போன்ற சாமானியர்கள் உள்ளே நுழையவே முடியாது. இந்தியாவில்தான்
– அண்மையில் துவங்கியுள்ள
ஷார்ஜா திருவிழாவிலும் – புத்தகங்கள் விற்பனை
நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு புதிதாக
அறிமுகமானது 92.7 எஃப்எம். மீடியா
பார்ட்னராக வந்த அந்த வானொலிக்கென திறந்தவெளியில் ஒரு மேடை. தினமும் மாலையில்
வானொலி நிகழ்ச்சி வழங்கும் ரேடியோ ஜாக்கிகள் கலந்து கொள்வார்கள். பார்வையாளரிடம்
கேள்வி கேட்பார்கள். பதிலளித்தால் பரிசு. பிறகு பார்வையாளரே கேள்வி கேட்கலாம், அதற்குப் பதிலளிப்பவருக்கும் பரிசு என சங்கிலி போல
போய்க்கொண்டே இருக்கும். தினமும் சுமார் இரண்டு மணிநேரம் இது ஒலிபரப்பாகும்.
92.7 எஃப்எம் நிகழ்ச்சியில் 22 வயது எழுத்தாளர் தன் நூலுடன் |
மாலை 6 மணி முதல் 8 மணி வரை லால்
சவுக்கில் ராஸ லீலா போன்ற கலை நிகழ்ச்சிகள்,
மேஜிக் ஷோ, என பொழுதுபோக்கு
நிகழ்ச்சிகள் நடந்தேறின.
திருவிழா நாளில் தினமும் ஒரு பத்திரிகை வெளியாகும்.
முதலில் இதற்கு Fair Talk என்று இருபொருள்
தரும் பெயர் இருந்த்து. இப்போது தனியாரின் கூட்டில், உலகெங்கும் இதர திருவிழாக்களில் வரும் இதழ்களைப் போல Show Daily என்ற பெயரில் வருகிறது பத்திரிகை. இதற்காக, அன்றாட நிகழ்வுகளை அன்று இரவுக்குள் தயாரித்து
அச்சுக்கு அனுப்புவது எங்கள் குழுவின் பணி. கிடைக்கிற கூலியில் பாதிக்குமேல்
புத்தகங்களை வாங்கி விடுவேன்.
இந்த ஆண்டு கிடைத்த
கூலியிலும் கணிசமான தொகை நூல்களில் போனது. நான் வாங்கிய தமிழ் நூல்கள் தவிர, மகளும் நானும்
வாங்கிய ஆங்கில நூல்கள் மேசையில் அடுக்கப்பட்டிருக்கின்றன. பக்கத்தில் நின்று
பார்த்தேன். சுமார் மூன்றடி உயரத்திற்கு இருக்கின்றன. இனி வாசிக்கத் துவங்க
வேண்டும்.
புதுதில்லி புத்தகக் கண்காட்சி பற்றிய தங்களின் தொடர் பதிவுகள் அற்புதம் ...! தங்களின் பதிவு வழியாகவே ஷோ டெய்லி பற்றித் தெரியவந்தது. கண்காட்சியின் இரண்டாம் நாளிலிருந்து Show Daily-ஐ NBT இணையத்தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து படித்து வருகிறேன் (Link: http://www.nbtindia.gov.in/news__pressreleases__96__show-daily-2015.nbt); மிக அருமை.
ReplyDeleteதங்களின் பதிவுகளும் Show Daily-யும் ஒரு முறையாவது டெல்லி புத்தகக் கண்காட்சியைப் பார்க்க வேண்டும் என்னும் ஆவலையும் ஏக்கத்தையும் ஏற்படுத்துகின்றன.
சென்னை புத்தகக் கண்காட்சி நடைபெறும் நாள்களில் "தி இந்து" தமிழ் செய்தித் தாளில் "வாசகர் திருவிழா" என ஒரு பக்கத்தில் கண்காட்சி, புத்தகங்கள், எழுத்தாளர்கள் பற்றி வெளியிடுவார்கள்.
பிரகதி மைதான் பற்றிய விபரங்கள் வருத்தத்தை ஏற்படுத்தின. தொடர்ந்து பிரகதி மைதான்-லியே கண்காட்சிகள் நடைபெற வேண்டும்.
தங்களின் வலைப்பதிவை அவ்வப்போது படித்து வருகிறேன்.
மனமார்ந்த நன்றி !
asatthunka.(tamil font illai mannikkavum)
ReplyDelete