யாருக்கு நான்
தீங்கு செய்தேன் இறைவா...
யார் குடியை நான்
கெடுத்தேன் இறைவா...
காலை சரியாக 6 மணிக்கு ஒலிபெருக்கியில் பாட்டு ஒலித்து
உறங்கிக்கொண்டிருந்தவர்கள் சிலரை எழுப்பியது,
சிலரை புரண்டு படுக்க வைத்தது, சிலரை தூங்கவும்
முடியாமல் எழவும் முடியாமல் மனதுக்குள் திட்ட வைத்தது.
“அண்ணா... இதா
வந்துடறேன்...” என்று
சொல்லிக்கொண்டே மூக்கை மூடியிருந்த மெல்லிய துணியைக் கழற்றித் தூக்கி வீசியவாறே
ஓடினாள் பூவழகி.
“ஏய் பூவு....
நில்லு... இன்னும் கொஞ்சம்தான் இருக்கு... அட இந்த டீ டம்ளரையாச்சும்
எடுத்துட்டுப் போ...” அவன் சொல்லிக்
கொண்டிருக்கும்போதே அவள் மாயமாகி விட்டாள்.
அவளுடைய துணியை எடுத்து
ஓரமாக வைத்துவிட்டு அவன் வேலையைத் தொடர்ந்தான்.
அது ஒரு அம்பர் ராட்டை
மையம். காலை எட்டு மணிக்கு பெண்கள் வரத் துவங்குவார்கள். அவரவருக்கான அம்பர்
சர்க்காவில் உட்கார்ந்து நூற்க ஆரம்பிப்பார்கள். மதியம் அரைமணிநேரம் உணவு இடைவேளை.
எல்லாரும் பக்கத்திலேயே இருப்பவர்கள் என்பதால் ஓட்டமாக ஓடிப்போய் சாப்பிட்டுவிட்டு
வந்து விடுவார்கள். மாலை ஐந்து மணிவரை வேலை ஓடும். நூற்ற நூலை சிட்டமாக்கிக்
கணக்கு வைத்துக்கொள்ள வேண்டும்.
ஆனால் அவனுக்கு வேலை அது
மட்டுமல்ல. அந்த யூனிட்டில் 16 அம்பர் ராட்டைகள்
இருந்தன. குறைந்தது 12 பேர் தினமும்
தவறாமல் வருவார்கள். காலை எட்டு மணிக்கு அவர்கள் வருவதற்கு முன்பே நூற்பதற்கான
பஞ்சு அவர்கள் முன் தயாராக வைக்க வேண்டும். அப்புறம் அவர்கள் நூற்க நூற்க, பஞ்சு தீரும் வேகத்திற்கேற்ப பஞ்சுச் சுருளை
அவர்களுக்கு சப்ளை செய்து கொண்டே இருக்க வேண்டும்.
ஆக, காலையில் அவர்கள் வருவதற்கு முன்பே பஞ்சுச்
சுருளைத் தயார் செய்வதற்காக அவன் அதற்கு முன்பே வேலையை முடித்தாக வேண்டியிருந்தது.
அவன் இயக்குவதற்கென மூன்று மெஷின்கள் இருந்தன. ஒன்று பஞ்சுடைக்கும் ஜின்னிங்
மெஷின். குப்பையும் பருத்திக் கொட்டையின் தொலிகளுமாக ஓட்டைகள் விழுந்த
சாக்குப்பைகளில் பழுப்பு நிறத்தில் தரமற்ற பஞ்சுமூட்டைகள் கிடக்கும்.
அவற்றிலிருந்து பஞ்சை எடுத்து ஒரு மெஷினில் போட்டு ஓட்ட வேண்டும். ஊரைக்கூட்டும்
ஒலியெழுப்பிக் கொண்டு இயந்திரம் ஓடும். சுழலும் கத்திகளிடையே பஞ்சு வெட்டுப்பட்டு
வெட்டுப்பட்டு குப்பைகள் எல்லாம் உதிர, பஞ்சு உள்ளுக்குள்ளே
அடித்துச் சுற்றும். கொஞ்சம் மேலேயும் பறந்து வந்து, குண்டுபல்பு சிந்திய மஞ்சள் ஒளியில் அறை முழுக்கவும் மேகம்போல
படர்ந்திருக்கும். கதவைத் திறந்து வைத்தால் வெளி அறைகளுக்கும் பஞ்சுத் துகள்
பறக்கும் என்பதால் கதவுகளை மூடியே வைத்திருக்க வேண்டும். வலைபோட்ட ஜன்னல் வழியாக
வரும் காற்றுதான் மூச்சுக்கு ஒரே துணை. மூக்கில் துணி கட்டிக்கொள்ளாவிட்டால்
அதோகதிதான். பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை வெளியே வந்து வெளிக் காற்றை
இழுத்துக்கொண்டு மறுபடி உள்ளே போவான்.
இப்படி சுத்தம் செய்த பஞ்சை
அள்ளி பெரிய இரும்பு பக்கெட்டில் போட்டுக்கொள்ள வேண்டும். அடுத்த அறையில்
இரண்டாவது மெஷின். இந்தப் பஞ்சை அந்த மெஷினில் விட்டு கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சைச்
செலுத்திக்கொண்டே இருந்தால், உருளைகளுக்கிடையே
அழுத்தப்பட்ட பஞ்சு அந்தப்பக்கம் முக்கால் அடி அலகப் பட்டையாக பெல்ட் போல ஓடி, மடிந்து மடிந்து கீழே இருந்த டப்பாவில் விழுந்து
கொண்டே இருக்கும்.
அந்த டப்பாவை அடுத்த
மெஷினுக்கு நகர்த்த வேண்டும். அதில் பட்டையாக இருக்கும் பஞ்சை செலுத்த வேண்டும்.
கையால் சுற்றி உருளைகளுக்கு இடையே பஞ்சை செலுத்தினால் ஒருபக்கம் விரல் தடிமனுக்கு
பஞ்சு வரும். அதை ஒரு துளை வழியாக கோத்து கீழே விட்டுவிட்டு, இயந்திரத்தை
இயக்கினால் பஞ்சு ஒரு கயிறுபோல உருமாறி கீழே இருக்கும் பக்கெட்டில் விழும்.
ஆரம்பத்தில் கையால் சுற்றி தயார் செய்துவிட்டு பிறகு மோட்டாரைப் போட்டு விடலாம்.
விழுகிற பஞ்சை கைவிரலால் லேசாக சுற்றிக்கொண்டே இருந்தால் அது வளையம் வளையமாக
பக்கெட்டுக்குள் அடுக்கடுக்காக அமைந்து கொள்ளும்.
எட்டு மணிக்கு ராட்டையில்
நூற்க இருக்கும் பெண்களுக்கு இந்த வளையங்களைத் தயார் செய்து வைப்பதுதான் அவனுடைய
வேலை. காலையிலேயே வந்து இவ்வளவும் செய்ய முடியாது என்பதால் சில
நாட்கள் மாலையிலேயே பஞ்சை உடைத்து வைத்துவிடுவதும் உண்டு. மறுநாள் காலையில் வந்து
பட்டைகளையும் பஞ்சு உருளைகளையும் தயாரிப்பது வழக்கம். இதற்காக காலை ஐந்து மணிக்கே
அவன் வந்து விடுவான். சாவி அவனிடம்தான் இருந்தது. ஊர் விழிக்கும் முன்பே அவன் வேலை
துவங்கி விட்டிருக்கும்.
67இல் வந்த பஞ்சத்தின்
தாக்கத்திலிருந்து விடுபடாத எழுபதுகளின் துவக்கம் அது. பல ஊர்களில் அம்பர் ராட்டை
யூனிட்டுகளை அமைத்த கதர் துறை அதன் மூலம் பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கவும்
வறுமையைப் போக்கவும் முனைந்தது. நூற்கும் நூலுக்கு ஏற்ப சிட்டம் என்ற கணக்கில் பெண்களுக்குக்
காசு கிடைக்கும். அம்பர் ராட்டை சுற்றுவது எளிதான வேலையும் அல்ல. கைகளிலும்
மார்புக்கூட்டிலும் வலி தாங்க முடியாமல் புதியவர்கள் பலர் ஓரிரு நாட்களில் நின்று
விடுவார்கள். நன்றாகப் பழகிக் கொண்டபின் நெஞ்சு வலிக்க நூற்கும் பெண்களுக்கு அவரவர்
திறமைக்கேற்ப சராசரியாக வாரத்துக்கு 15 முதல் 25 ரூபாய் கிடைக்கும். புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்
என்பதுபோல அவனுக்கும் கூலி கிடைத்தது. ஆனால் பெண்களுக்குக் கிடைத்ததைவிடக் குறைவு
- நாளுக்கு இரண்டு ரூபாய்தான், வாரத்துக்கு 12 ரூபாய்.
அவன் அங்கே வேலைக்குச்
சேர்ந்த பிறகு கதர்க் கடை மேனேஜருக்கு ரொம்பவே வசதியாகி விட்டது. ராட்டை
வேலைகளையும் பார்த்துக்கொள்வான், சிட்டக் கணக்கும்
எழுதி விடுவான். ராட்டைகள் இயங்காத ஞாயிற்றுக்கிழமைகளில் பேரேட்டில் கணக்கு
எழுதும் வேலைகளையும் செய்து விடுவான். மேனேஜருடைய வேலை மிக எளிதாகிப் போனது.
இத்தனையும் அவன் செய்ய ஒரே காரணம்தான் இருந்தது – என்றாவது ஒருநாள் கதர் துறையில் வேலை கிடைத்துவிடக்கூடும் என்பதே. பிறகு
வெள்ளை கதர் சட்டையும் வேட்டியும் போட்டுக்கொண்டு உட்கார்ந்து வேலை செய்யலாம்.
பள்ளிகளின் கோடை விடுமுறைக்
காலம் என்றால் ராட்டையில் நூற்க வரும் பெண்களின் எண்ணிக்கையும் அதிகமாகும்.
அப்போது அவனுக்கு வேலையும் அதிகமாகும். “அண்ணா அடுத்து
எனக்குத்தான்...”, “இல்லையில்லை
எனக்குத்தான்...” “இப்பத்தானே உனக்குக்
குடுத்தாரு...” என்ற குரல்கள் பகல்
முழுக்க கேட்டுக்கொண்டே இருக்கும். அவனைவிட நான்கைந்து வயது பெரியவர்களுக்கும்
அவன் அண்ணன்தான். அண்ணா என்பது ஒரு விளி மட்டுமே. அதுவே பாதுகாப்பான விளி என்பதை
கிராமங்கள் நன்றாகவே புரிந்து வைத்திருந்தன. அதுவும் ஒரு கோடை
விடுமுறைக்காலம்தான். தன்னந்தனியாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தவனுக்கு ஆதரவாக
வந்தவள்தான் பூவழகி.
பூவழகியைப் பார்த்திருக்கிறீர்களா...
கண்டிப்பாகப் பார்த்திருப்பீர்கள். பூ என்று சொல்லும்போதே உங்கள் மனதுக்குள் அழகான
பூ ஒன்று தெரிகிறது அல்லவா... அத்துடன் இன்னும் கொஞ்சம் அழகையும்
சேர்த்துக்கொள்ளுங்கள். அவள்தான் பூவழகி. அந்தக் கிராமத்துக்குப் பொருந்தாத நிறம், கச்சிதமாகச் செதுக்கியது போன்ற உடல், இடுப்பைத் தொடும் சடை என பாவாடை தாவணியில் துள்ளித்
திரிந்து கொண்டிருந்த பூவழகியை யார்தான் பார்க்காமல் இருந்திருப்பீர்கள்.....
அவளுக்கு எப்படி அப்படியொரு நிறம் வந்தது என்று பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள்
நினைக்காத ஆளே ஊரில் இருக்க முடியாது.
அது அவளுடைய அம்மாவின்
நிறம். அப்பா... அப்பா யாரென்று தெரியாது. அம்மா சாவித்திரி, எப்போதும் வெற்றிலை போட்ட வாயுடனும், உயரக்
கொண்டையுடனும், சற்றே முன்தள்ளிய வயிறுடனும் ஊரைச்சுற்றிக் கொண்டே இருப்பாள்.
எல்லாருக்குமே அவளுடைய தொழிலைப் பற்றித் தெரிந்திருந்தது. ஆனால் அவளுடைய
வாடிக்கையாளர்கள் யார் என்று யாருக்குமே தெரியாது. அவன் இருந்த வீட்டுக்கு அடுத்த
தெருவில்தான் அவளுடைய வீடும் இருந்தது. ஆனாலும் ஒருநாளும் யாரும் அவள்
வீட்டுக்குப் போனதைப் பார்த்ததே இல்லை. ஊரைச்சுற்றிக் கொண்டிருந்த வயசுக்கார
இளசுகளுக்கும் அது ஒரு மர்மமாகவே கடைசிவரையிலும் இருந்தது.
சாவித்திரிக்கு வாழ்க்கைத்
துணை இல்லாவிட்டாலும் பேச்சில் இனிமை எப்போதும் இருக்கும். யாரைக் கண்டாலும்
நிறுத்தி, நலம் விசாரித்து, குறை கேட்டு,
ஆறுதல் கூறி, நல்லா இரு என்று
வாழ்த்தாமல் நகர மாட்டாள். அந்த வாழ்த்துகள் எல்லாம் அவளுடைய மகளுக்குப் போய்ச்
சேர்ந்திருக்கலாம். மகளையும் ஒருநாள் தொழிலில் இறக்கிவிடுவாள் என்று காத்திருந்த
சில மைனர்களும் உண்டுதான். ஆனால் சாவித்திரி வேறு திட்டம் வைத்திருந்தாள்
போலிருக்கிறது.
பூவழகி படிப்பில்தான் கோட்டை
விட்டாளே தவிர எதையும் சட்டெனப் பிடித்துக்கொள்வாள். ஒன்பதாம் வகுப்பில் பெயில்
ஆனபிறகு அதற்கு மேல் படிக்க விருப்பம் இருக்கவில்லை. நாற்று நடுவதோ, களை எடுப்பதோ,
கொடிக்காலில் வெற்றிலை பறிப்பதோ என ஊரில் எங்காவது ஏதாவது ஒரு வேலை
கிடைத்துக்கொண்டுதான் இருந்தது. வேலைக்கே போகாவிட்டாலும்கூட அம்மா ஏதும் திட்டப் போவதில்லை.
இப்போது அம்பர் ராட்டை வந்தது அவளுக்கு இன்னும் வசதியாகி விட்டது.
பூவழகிக்கு மனசும்
பூப்போன்றது. யாருக்கு என்ன கஷ்டம் வந்தாலும் துடித்துப்போய்விடுவாள். தெருவில்
போய்க்கொண்டிருக்கும்போது அனாதை நாய்க்குட்டியைக் கண்டால் ஐய்யோ என்று அள்ளிக்
கொண்டு வந்து விடுவாள். கொஞ்சிக் கொஞ்சி பாலூட்டுவாள், விளையாடுவாள். அப்புறம் பத்து நாட்களுக்கு
அவளுக்குப் பேச்சும் மூச்சும் நாய்க்குட்டியாகவே இருக்கும். நாய் ஒருவாறாகத் தேறி
தானே சுற்றத்தொடங்கும்போது இவளுக்கு ஒரு பூனைக்குட்டி கிடைத்து விட்டிருக்கும்.
அல்லது மரத்திலிருந்து விழுந்து இறகொடிந்த குருவியோ புறாவோ கிடைத்திருக்கும்.
அல்லது எங்கிருந்தோ வந்து துணிகள் இல்லாமல் பஸ் ஸ்டாண்டில் படுத்துக்கிடக்கும்
பைத்தியக்காரன் கிடைத்திருப்பான்.
பூவழகியின் அந்த மென்மையான
மனதுதான் அவன் பக்கம் அவளைத் தள்ளி விட்டிருந்தது. ஒருநாள் மாலை நூற்கும் வேலை
முடிந்து எல்லாரும் போன பிறகும் அவள் அங்கேயே இருந்தாள். “அண்ணா... இன்னிக்கி நீ என்னதான் செய்யறேன்னு நானும்
பாக்கறேன்” என்று கூடவே தங்கி
விட்டாள். பஞ்சு உடைக்கிற மெஷின் அறையில் அவன்கூடவே பஞ்சுத் துகள்களை
சுவாசித்தாள். அங்கிருந்து பஞ்சுப் பொதிகளை பட்டைபோடுகிற மெஷினுக்கு சுமப்பதில்
துணையாய் இருந்தாள். இரவு எட்டு மணிக்கு அவளுடைய அம்மா சாவித்திரி தேடி வந்தபோது
அவளிடம் அண்ணன் படும் கஷ்டத்தை புலம்பித் தீர்த்தாள். “நாளையிலேர்ந்து நானும் காலையில வந்து உனக்கு ஹெல்ப்
பண்றேண்ணா” என்று உறுதியளித்தாள்.
அதேபோல அடுத்தநாள் காலையில்
வந்தாள், உதவி செய்தாள். நூல்
நூற்கும் பெண்கள் வருவதற்கு சற்று முன்னதாக ஓடிப்போய் குளித்து வாய்க்கு
அள்ளிப்போட்டுக்கொண்டு திரும்ப ஓடிவந்தாள். அன்று முழுவதும் அவனுடைய வேலையின்
சிரமங்களை பற்றிய புராணம் பாடித் தீர்த்தாள். “ஐய்யோ.... இவ்வளவு
ஒல்லிக் கையால எவ்ளோ வேலை செய்யுது தெரியுமா அண்ணன்” என்று புலம்பினாள். “ஏண்டீ அண்ணனா இல்லே
..................” என்று தோழிகள்
கிண்டலடிக்க “ச்ச்சீ போடீ” என்று அடிக்கப்போனாள். அடடா.... ஒருவேளை
அப்படித்தானோ... அதனால்தான் உதவ வருகிறாளோ என்று அவனுக்கே கூட கொஞ்சம் சந்தேகம்
வரத்துவங்கி விட்டிருந்தது.
அன்று தொடங்கியது இன்றுவரை
தொடர்கிறது. ஒவ்வொரு நாளும் காலையில் ஐந்தரை மணிக்கு தவறாமல் அவனுக்குத் துணையாக
வந்து விடுகிறாள். காரியம் யாவினும் கைகொடுக்கிறாள். வரும்போது தாவணி முந்தானையில்
மூடி ஸ்ஸ்ஸ்....ஹா... என்றவாறு வீட்டிலிருந்து சூடாக டீயும் கொண்டு வருகிறாள்.
காலையிலிருந்து இரவு வரை இடுப்பொடிக்கும் வேலையின் சுமையால் அவ்வப்போது பெண்களிடம்
கடுப்படிக்கும் அவன் முகத்தில் இப்போதெல்லாம் கொஞ்சம் சிரிப்பு
தவழத்துவங்கியிருந்தது. தலையெல்லாம் பஞ்சுடன் மதிய சாப்பாட்டுக்கு ஓட்டமாக ஓடித்
திரும்ப வேண்டிய அவசியமில்லாமல் நிதானமாக நடந்து போக முடிந்தது.
இப்படியாகப்
போய்க்கொண்டிருந்த போதுதான் மூன்று நாட்களுக்கு முன் –அது நடந்தது.
அது ஒரு சனிக்கிழமை. நூல்
நூற்கும் பெண்களுக்கு சிட்டக் கூலிக் கணக்கெல்லாம் முடித்துவிட்டு மாலையில்
பள்ளிவாசல் மைதானத்துக்கு அவன் போனபோது அங்கே பரபரப்பாக இருந்தது. மைதானத்தின்
நடுவே ஒரு கம்பு நடப்பட்டிருந்தது. அதைச் சுற்றி ஐந்து மீட்டர் விட்டத்தில்
வட்டமாக மூங்கில்கள் நடப்பட்டு கயிறு கட்டப்பட்டிருந்தது. அதற்கு நேர் கீழே
தரையில் சுண்ணாம்புப் பொடியால் கோடு போடப்பட்டிருந்தது. மூங்கிலின் உச்சியிலும்
கயிறுகள் கட்டி அதில் வண்ணக் காகிதத் தோரணங்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஊரின்
வடக்குப்பார்த்து ஒன்றும் தெற்குப்பார்த்து ஒன்றுமாக இரண்டு கூம்பு மைக்குகள்
கட்டி ஒயர்களை இழுத்திருந்தான் ஸ்டார் சவுண்ட் சர்வீஸ் முகமது. வட்டத்தின் நடுவே
ஒரு பக்கம் பெட்டிகள் வைத்து அதன்மீது ஆம்பிளிபயர், ரெகார்ட் பிளேயர் எல்லாம் வைக்கப்பட்டிருந்தன. பள்ளிவாசலிலிருந்து இழுக்கப்பட்ட
ஒயர், மூங்கில் கம்பி வழியாக நடுவே இறங்கியிருந்தது. வட்டத்தில் மேலே சீரியல் வண்ண
வண்ண விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. வாய்க்காலிலிருந்து தண்ணீர் எடுத்து
வந்து வட்டத்துக்குள் தெளித்துக் கொண்டிருந்தாள் டீக்கடைக்காரன் மனைவி கமலா. வருகிறவர்களுக்கெல்லாம்
பழுப்புக் காகிதத்தில் துண்டு நோட்டீஸ்களை விநியோகம் செய்து கொண்டிருந்தான் ஒரு
சிறுவன். இவனும் ஒன்றை வாங்கிப் பார்த்தான்.
சைக்கிள் சாதனை
வீரர் சண்முகம்
ஏழு நாட்கள்
இறங்காமல் தொடர்ந்து சைக்கிள் ஓட்டி சாதனை செய்யப்போகிறார்
ஞாயிறு காலை சரியாக 6 மணிக்கு சாந்து முகமது ராவுத்தர் சைக்கிள்
ஓட்டத்தைத் துவக்கி வைப்பார்.
வெள்ளிக்கிழமை
உயிரைப் பணயம் வைக்கும் மரணக்குழியில் 24 மணிநேர சாதனை
செய்வார்
அடுத்த
ஞாயிற்றுக்கிழமை பஞ்சாயத்துத் தலைவர் முத்துசாமிக் கவுண்டர் முடித்து வைப்பார்.
அனைவரும் வருக ஆதரவு
தருக
இவனும் சற்றுநேரம் நின்று
வேடிக்கை பார்த்தான். கிழக்கே விநாயகர் இருந்த அரசமரத்தடி மேடையில் அமர்ந்திருந்த
ஊர்ப் பெரியவர்களிடம் பணிவுடன் கைகளைக் கட்டிக்கொண்டு பேசிக் கொண்டிருந்தவன்தான்
நோட்டீசின் நடுவே அடையாளம் காண முடியாத கறுப்பு மையில் அச்சிட்ட சைக்கிள் படத்தில்
இருந்த சண்முகம் என்று புரிந்தது.
பொதுவாக அறுவடை முடிந்து
மக்களிடம் காசு புழங்கும் பொங்கலை ஒட்டி அல்லது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும்
கோடை காலங்களில்தான் இதுபோன்ற வித்தைக்காரர்கள் ஊர் ஊராகப் படையெடுப்பார்கள். இவன்
இதற்கு முன் வந்ததில்லை. கைகால்கள் திடமாக,
கட்டுமஸ்தாக இருந்தான். இருபத்தைந்து வயது இருக்கலாம். பனியனும் கறுப்புப்
பேன்டும் போட்டிருந்தான். சுற்றிலும் நின்றிருந்த அரைக்கால் டவுசர்களுக்கு மனதில்
பொறாமை எழுந்திருக்கும். சண்முகம் அங்கிருந்து விலகி வந்தான். எல்லாரையும்
பார்த்து வணக்கம் வைத்தான்.
அலோ அலோ... மைக்
டெஸ்டிங். ஒன் டூ த்ரீ போர்... அலோ அலோ... அன்பார்ந்த பெரியோர்களே, தாய்மார்களே,
கிராமத் தலைவர்களே.... அண்ணன்மார்களே, அக்காமார்களே, தங்கச்சிமார்களே, தம்பிமார்களே, மாணவர்களே, மாணவிகளே, குழந்தைகளே, குஞ்சுகளே, குளுவான்களே...
விஷயம் இதுதான் - அடுத்த ஏழு
நாட்கள் கீழே கால் வைக்காமல் தொடர்ந்து சைக்கிள் ஓட்டப்போகிறேன். ஐந்தாம் நாள்
மரணக்குழியில் இறங்கி மண்ணைப் போட்டு மூடிக்கொள்ளப் போகிறேன். 24 மணி நேரம் கழித்து உயிரோடு மேலே வரப்போகிறேன்.
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை. நீங்கள் எல்லாரும் எனக்கு உணவும் நீரும் உடைகளும்
பணமும் காசும் தந்து ஆதரிக்க வேண்டும்.
இருட்டிய பிறகு கூட்டம்
கொஞ்சம் கொஞ்சமாகக் கலைய, இவனும் வீடு
திரும்பினான். அதிசயமாகக் கிடைக்கும் ஒரே ஞாயிற்றுக்கிழமை காலையில் கொஞ்சம்
தூங்கலாம் என்ற ஆசை நிறைவேறாது என்று ஒரு பக்கம் கோபமாக இருந்தது. வேடிக்கை
பார்க்கும் ஆவல் மறுபக்கம் எழுந்து அந்தக் கோபத்தை அடக்கியது.
அடுத்தநாள் காலை ஐந்தரை
மணிக்கு கொர்........... என்ற மைக்செட் ஒலி முதலில் ஒலித்தது. அடுத்து டிஎம் சவுந்திரராஜன்
முருகனை உருகி அழைத்தார், பிறகு நாகூர் அனீபா
அல்லாவை அழைத்தார். ஏசுநாதர் என்ன பேசுவார் என்று கேட்டார் பி. சுசீலா. அலோ...
மைக் டெஸ்டிங்... ஒன் டூ திரீ... அலோ அலோ... எல்லாம் முடிந்து மீண்டும் அன்பார்ந்த
பெரியோர்களே, தாய்மார்களே என்று
சண்முகத்தின் குரல் காலையில் ஒலிக்கத் துவங்க கிட்டத்தட்ட கிராமம் முழுவதும்
மைதானத்தை நோக்கிப் போகத் துவங்கியது. முதல் பாட்டு ஒலிக்கத் துவங்கியபோதே பூவழகி
ராட்டை யூனிட்டை விட்டு ஓட்டமாய் ஓடிப் போயிருந்தாள்.
வட்டத்தின் ஒரு மூங்கிலில்
சாய்த்து நிறுத்தியிருந்தது ஒரு சைக்கிள். முக்கோணம், சக்கரம், ஹாண்டில் பார், பெடல், செயின், சீட் தவிர வேறேதும் இல்லாத சைக்கிள். மட் கார்டோ, செயின்கார்டோ,
கேரியரோ, இதர அலங்காரங்களோ
இல்லாத எலும்புக்கூடு சைக்கிள். இதேபோல மற்றொரு சைக்கிள் கையிருப்பாக மைக் செட்
பக்கத்தில் நின்றிருந்தது. எப்போதும் கைத்தறித்துணி பனியனும் லுங்கியுமாகத்
திரியும் சாந்து முகமது ராவுத்தர் அன்று சொக்காயும் வேட்டியுமாக இருந்ததால்
அடையாளம் தெரியாமல் பலர் குழம்பியிருக்கக்கூடும். சண்முகம் பளீர் வெள்ளையில் சட்டையும்
கறுப்புப் பேன்டும் போட்டிருந்தான்.
கயிற்றுக்குக் கீழே நுழைந்து
உள்ளே போன சாந்து முகமது ராவுத்தர், சண்முகம் தன்
கையிலிருந்து கழற்றிக் கொடுத்த கடிகாரத்தில் சரியாக ஆறு மணி ஆனதும் சைக்கிளைப்
பிடித்துக்கொண்டார். சண்முகம் வணக்கம் போட்டவாறே வட்டத்தை ஒரு சுற்றுச்
சுற்றிவந்து, ராவுத்தர் காலைத்
தொட்டு வணங்கிவிட்டு சைக்கிளில் ஏறினான். கூட்டம் கைதட்டி ஆரவாரித்தது. சண்முகம்
சைக்கிள் ஹாண்டில்பாரில் வயிற்றைச் சாய்த்துக்கொண்டு கைகளைக் கூப்பியவாறு மூன்று
சுற்றுச் சுற்றிவந்தான். சட்டென்று அப்படியே திரும்பி முதுகுப்புறத்தை
ஹாண்டில்பாரில் அழுத்தியவாறு இன்னும் மூன்று சுற்றுகள் சுற்றினான்.
உலகம் பிறந்தது எனக்காக...
ஓடும் நதிகளும் எனக்காக என்று பாட்டு ஒலிக்க ஆரம்பித்தது. சண்முகம் சட்டையைக்
கழற்றி நடுவில் நின்றிருந்த பையனை நோக்கி வீசினான். சைக்கிள் ஓட்டியவாறே குனிந்து
பேன்ட் முனைகளை மேலே சுருட்டி விட்டுக் கொண்டான். சாந்து முகம்மது ராவுத்தர்
இன்னும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பியவாறு நடுவே கொஞ்ச நேரம்
நின்றிருந்து விட்டு வெளியே நகர்ந்தார். யாரோ ஒருவன் பக்கத்துப் பெட்டிக்
கடையிலிருந்து கண்ணாடி கிளாசில் டீ கொண்டு வந்து கொடுக்க சண்முகம் அதை வாங்கி, ஓட்டிக்கொண்டே குடித்துவிட்டு போகிற போக்கில்
திருப்பிக் கொடுத்தான். சைக்கிள் சாதனை துவங்கி விட்டது. பாட்டுக்கேற்ப
வாயசைத்துக்கொண்டு எம்ஜியார் போல பாவனைகளுடன் ஆடிக்கொண்டே சைக்கிள்
ஓட்டிக்கொண்டிருந்தான். பெண்கள் இருந்த பக்கத்திலிருந்து கரவொலி கூடியது.
அதற்குப் பிறகு ஒவ்வொரு
நாளும் நிகழ்ந்ததை எல்லாம் விளக்கினால் இது நாவலாகி விடும் ஆபத்து இருக்கிறது.
ஈ-காக்கை அண்டாத பகலிலும் அவன் ஓட்டிக்கொண்டே இருந்தான். வியர்வையில் பனியன்
நனைந்து உடலோடு ஒட்டிக்கொண்டிருக்கும். நாளுக்கு நான்கைந்து பனியன்கள் மாற்றினான்.
சைக்கிள் ஓட்டிக்கொண்டே பாடினான், குளித்தான், குடித்தான்,
உண்டான், ஆடினான், பாடினான், மைக்கில் அழைத்தான், நான் உங்கள் வீட்டுப் பிள்ளை அம்மா என்று
உருகினான். பழைய சோறு குடுங்கம்மா என்று வெட்கமில்லாமல் காலையில் மைக்கில்
கூவினான்.
அன்றாட மாலைப் பொழுதுகள்
கிராமத்தினருக்கு மைதானத்திலேயே கழிந்தது. பொடியன்களின் உற்சாகம் எழுத்தில் வடிக்க
முடியாதது. சட்டை இல்லாமல் அரை டவுசர்கள் அணிந்து கொண்டு சைக்கிளுக்கு இணையாக
கயிற்றுக்கு வெளியே வட்டத்தில் ஓடினார்கள்,
கை தட்டினார்கள், விசில் அடித்தார்கள், களைத்துப்போய் நிழலில் உட்கார்ந்தார்கள்.
உன்னை அறிந்தால் நீ
உன்னை அறிந்தால் உலகத்தில் போராடலாம்
நான் யார் நான் யார்
நீ யார். நாலும் தெரிந்தவர் யார் யார்...
வெற்றிமீது வெற்றி
வந்து என்னைச் சேரும்
நான் ஆணையிட்டால்
அது நடந்து விட்டால்...
அங்கே சிரிப்பவர்கள்
சிரிக்கட்டும் அது ஆணவச் சிரிப்பு
எம்ஜியார் பாட்டுக்கு
தலைக்கு தொப்பியும் கண்ணுக்கு கறுப்புக் கண்ணாடியும் போட்டுக்கொண்டு அவன் பாட,
பெண்கள் ரசித்து உருகினார்கள். சிவாஜி பாட்டுக்கு வாயைத் திறந்து பாவனை காட்ட
ஆண்கள் காசுகளை அள்ளி வீசினார்கள். இரண்டையும் பேலன்ஸ் பண்ணிக்கொண்டால்தான் காசும்
சோறும் கிடைக்கும் என்று அவனுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
சின்னக் குழந்தைகள் நிறைய
இருக்கும்போது நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி இந்த நாடே இருக்குது தம்பி என்ற பாட்டை
ஓட விட்டான். நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்ற உபதேசத்துக்கு யாராவது
பையனைத் தூக்கி சைக்கிளில் உட்கார வைத்தாவறு சுற்றிவந்து ஆடினான். சில நேரங்களில்
இரண்டு சைக்கிள்களில் வித்தை காட்டினான்.
பெரியவர்கள் அரசமரத்தடி
மேடையில் உட்காரந்தவாறு பார்த்தார்கள். காசு இருக்கிறவர்கள் சோடா கலர் வாங்கிக்
கொடுத்தார்கள், டீயோ வடையோ வாங்கிக்
கொடுத்தார்கள். ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் நோட்டுகளை பனியனில் குத்தி விட்டார்கள்.
பெண்கள் வீட்டிலிருந்து
சாப்பாடு கொடுத்தார்கள், கஞ்சி கொடுத்தார்கள், நீர் மோர் கொடுத்தார்கள், காலையில் பழைய சோறு கரைத்துக் கொடுத்தார்கள்.
பக்கத்து இஸ்லாமியர் வீடுகளிலிருந்து சர்பத்தோ எலுமிச்சை ஜூஸோ வந்தது.
பூவழகி... ஊரே அவனுக்கு
சோறும் நீரும் மோரும் டீயும் கொடுக்கத் துடித்துக் கொண்டிருக்கையில் பூவழகி
மட்டும் சும்மா இருப்பாளா... காலையில் நீராகாரம் கரைத்துக்கொடுத்தாள், மதியம் சாம்பார் சாதம் கொடுத்தாள், மாலைப் பொழுதெல்லாம் அங்கேயே நின்று பார்த்துக் கொண்டிருந்தாள். யாருக்கு நான் தீங்கு செய்தேன் இறைவா என்ற பாட்டு
காலையில் முதலில் ஒலிக்கக் கேட்டதும் பறந்தடித்து ஓடியதன் பின்னணி இதுதான்.
கிடைத்ததையெல்லாம்
சாப்பிடுகிறானே... இவ்வளவும் எப்படி அவனால் சாப்பிட முடிகிறது, மூத்திரம் வராதா, காலையில் வெளிக்குப்போக என்ன செய்கிறான் என்பதெல்லாம் பையன்களுக்கு விவாதப்
பொருளாக இருந்தது. யாரும் அவன் இறங்கியதைப் பார்க்கவே இல்லை. ஒருநாள் காலையில்
அம்பர் ராட்டை யூனிட்டுக்குப் போகும்முன் இவன் அந்தப் பக்கமாகப் போனான்.
ஆளரவமற்றுக் கிடந்த மைதானத்தில் சண்முகத்தைக் காணோம். வாய்க்கால் பக்கமாகப்
பார்த்தபோது சண்முகம் வாய்க்கால் மேட்டில் அந்தப்பக்கமாக சைக்கிளைப் படுக்க வைத்து
முக்கோணத்தில் காலை வைத்தவாறே வெளிக்கிருந்து கொண்டிருந்தான். இதை இவன்
நண்பர்களுக்குச் சொல்ல ரகசியம் புரிந்து போனது. அப்போதும் சைக்கிளை விட்டு
இறங்குவதில்லை என்ற பாராட்டு எழுந்தது.
நான்காம் நாள் சண்முகம்
களைத்துப் போயிருந்தான். ஆட்டம் கொஞ்சம் குறைந்திருந்தது. இருந்தாலும் சுற்றுவது
மட்டும் நிற்கவில்லை. “இதெல்லாம் சும்மா
டிராமா காட்டுறான், அப்பத்தான்
எல்லாரும் எரக்கம் காட்டுவாங்கன்னு ஆக்டு பண்றான்னு” என்று பையன்கள் பேசிக் கொண்டார்கள். அவர்கள் பேசுவது குறித்தெல்லாம் தெரியாத
சண்முகம் சுற்றிக்கொண்டே இருந்தான். பூவழகி அவனையே சுற்றி வந்துகொண்டிருந்தாள்.
நான்காம் நாள் மாலை வட்டத்துக்குள்ளே நுழைந்திருந்தாள். மைக் செட் டப்பாவின்மீது
உட்கார்ந்து இந்தப் பாட்டைப போடு, அந்தப் பாட்டைப்
போடு என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
ஐந்தாம் நாள் மாலை ஆறு மணி. அன்று
பகலிலேயே ஏழடி நீளம்-ஐந்து அடி அகலம்-ஆறடி ஆழம் கொண்ட குழி தோண்டப்பட்டிருந்தது. ஊர்
கூடிப் பதைக்கும் மனதுடன் பார்த்திருக்க சைக்கிளோடு இறங்கினான் சண்முகம். இரண்டு
பானைத் தண்ணீரும் உள்ளே இறக்கப்பட்டது. மயான அமைதி அங்கே நிலவியது. குழிக்குள்
இருந்து சைக்கிள்மீது நின்று எல்லாருக்கும் வணக்கம் சொன்னான். குழிக்கு மேலே
பலகைகள் போட்டு மண் இடப்பட்டு மூடப்பட்டபோது அடப்பாவி மவனே... என்ற கேவல் ஒன்று
பெண்கள் பக்கமிருந்து எழுந்தது. அது பூவழகியின் குரல்தான் என்று சொல்லத்
தேவையில்லை.
பெண்கள் கண்ணீர் விட்டு
விசும்பியவாறு அங்கிருந்து நகர்ந்தார்கள். பொடியன்கள் என்ன செய்வதென்று தெரியாமல்
அம்மாக்களின் பின்னே ஓடினார்கள். ஆண்கள் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருந்து
கலைந்தார்கள். அவன் மூச்சுக் காற்றுக்கு என்ன செய்வான் என்று இளசுகள்
பட்டிமன்றத்தில் இறங்கினார்கள். “அதான் தண்ணி கொண்டு
போயிருக்கான்ல. தண்ணியிலிருந்து காத்தை எடுத்துக்குவான்” என்றான் ஒருவன். “அதெல்லாம் இல்லே, பலகைக்கு இடையில
கேப்பு இருக்கும். அதுவழியா காத்து போகும்”
என்றான் மற்றவன். அப்படி இடைவெளி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. குழி கொஞ்சம்
பெரிதாகவே இருக்கிறது. மூச்சடக்கும் வித்தை கற்றிருப்பவன் அதில் இருக்கிற காற்றை
சிக்கனமாகப் பயன்படுத்துவானாய் இருக்கலாம் என்று தோன்றியது. இருந்தாலும் உள்ளே
என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியப்போவதில்லை என்பதால் அது அச்சமூட்டுவதாகவே
இருந்தது. ஏதும் அசம்பாவிதமாக நடந்துவிடக்கூடாதே என்பதே அனைவரின் கவலையாக
இருந்தது.
அடுத்தநாள் காலை பூவழகி
ராட்டை யூனிட்டுக்கு வந்தபோது உற்சாகமே இல்லாதவளாக இருந்தாள். அவன் சொன்ன
வேலைகளைச் செய்தாள். “அட... என்னாச்சு
பூவு... அவன் சர்க்கஸ்காரன். ஒண்ணும் ஆகாது. இதுமாதிரி எத்தனியோ வாட்டி எத்தினியோ
ஊர்ல குழிக்குள்ள உக்காந்து வந்திருக்கான். சாயங்காலம் பாரு... மறுபடி மேல வந்து
சைக்கிள் ஓட்டுவான்” என்று அவன் ஆறுதல்
கூற, உடைந்து அழுது
கொண்டே ஓடிப்போனாள்.
சனிக்கிழமை மாலை ஐந்து
மணிக்கே மைதானத்தில் ஊர் கூடிவிட்டது. போலீஸ்காரர்கள் கூட இரண்டுபேர் அங்கே
வந்திருந்தார்கள். சரியாக ஆறு மணிக்கு மண் அகற்றப்பட்டது. பலகைகள் விலக்கப்பட்டன.
குழிக்குள் இறங்கியவர்கள் தூக்கிக் கொடுக்க முதலில் சைக்கிள் மேலே வந்தது. பிறகு
காலிப்பானைகள் வந்தன. எல்லாரும் மூச்சடக்கிக் கொண்டு பார்த்திருக்க... மயங்கிக்
கிடந்த சண்முகத்தை மேலே தூக்கிப் போட்டார்கள். போட்டதுமே அவன் கை சைக்கிளைப்
பற்றிக்கொண்டது. கைதட்டலும் கூச்சலும் கிராமத்தையே அசைத்தது. பெண்கள் பக்கத்திலிருந்து
எழுந்த பெருமூச்சில் அரசமரம் அசைந்தது.
யாரோ அவன்மீது ஒரு குடம்
தண்ணீரை ஊற்றினார்கள். யாரோ கடையிலிருந்து சோடா வாங்கி வந்து உடைத்துக்
கொடுத்தார்கள். படுத்தவாறே அதைக் குடித்தவன் மெதுவாக எழுந்து உட்கார்ந்தான்.
அப்படியே நகர்ந்து சைக்கிளை நிமிர்த்தி, தாவி ஏறி ... மீண்டும்
ஓட்ட ஆரம்பித்தான்.
வெற்றிமீது வெற்றிவந்து
என்னைச் சேரும் என்று பாட்டு ஒலிக்க, பாட்டுக்கு
வாயசைத்துக்கொண்டே ஆடியவாறே சுற்றி வந்தான். கூட்டம் கைதட்டிப் பாராட்டியது.
டீயும் பன்னும் வர்க்கியும் மாறி மாறி வந்தன. காசும் ரூபாய் நோட்டுகளும்
வீசப்பட்டன. வணங்கினான், வளைந்தான், ஆடினான், தலைகீழாக
ஓட்டினான்....
அடுத்த நாள் ஞாயிறு காலையும்
ஊர் முழுக்க அங்கே திரண்டது. பஞ்சாயத்துத் தலைவர் வட்டத்துக்குள் நுழைந்தார்.
பக்கத்தில் வந்து நின்றவனின் சைக்கிளைப் பிடித்துக்கொண்டார். அவன் கீழே
இறங்கினான். மண்ணைத் தொட்டு வணங்கினான். தலைவரின் காலைத் தொட்டுக் கும்பிட்டான்.
யாரோ கொண்டு வந்து கொடுத்த டீயை தலைவர் அவன் கையில் கொடுக்க டீ குடித்தவாறே
மீண்டும் சைக்கிளில் ஏறி ஒரு ரவுண்ட் அடித்து விட்டு சைக்கிளை அப்படியே
தள்ளிவிட்டுக் குதித்தான். ஒரு கரவொலி எழுந்து அடங்கியது.
சீரியல் விளக்குகள்
அணைக்கப்பட்டன. மைக்செட் அகற்றப்பட்டது. பாட்டுகள் நின்று போயின, மூங்கில்கள் பிடுங்கப்பட்டன. பெட்டிகள்
அரமரத்தடியில் ஓரமாகப் போய் அமர்ந்தன. அன்றாடம் மாலை வேளைகளில் பொழுது போக என்ன
செய்வது என்ற கவலையுடன் கூட்டம் மெதுவாகக் கலைந்தது.
திங்கள்கிழமை காலை அவன்
ராட்டைக்குப் போனபோது வழக்கமாக வரும் பூவழகி வரவில்லை. அவனே தனியாக பஞ்சுடைத்து
உருளைகளாக்கி எடுத்து வைத்தான். எட்டுமணிக்கு வழக்கம்போல பெண்கள் வந்தார்கள், ராட்டையில் நூல் நூற்றார்கள், மாலையில் போனார்கள். பூவழகி வரவில்லையா என்று
கேட்டதற்கு “அவ வூட்டிலேயே
படுத்துக்கிடக்கிறா” என்றாள் மல்லிகா.
பூவழகி இல்லாமல் ஏதோ களையிழந்தது போலத்தான் இருந்தது.
மறுநாள் காலை மீண்டும்
உதவிக்கு வந்தாள். பழைய பூவழகியாக உற்சாகமாக இல்லை என்றாலும் சோகமாக இருக்கவில்லை.
அமைதியாக எல்லா வேலைகளிலும் உதவி செய்தாள். மதியம் சாப்பாட்டுக்குப் போனவள்
திரும்பி வரவில்லை.
மறுநாள் காலையிலும்
பஞ்சுடைக்க உதவிக்கு வரவில்லை. எட்டுமணிக்கு வந்த மல்லிகாதான் அந்தத் தகவலைச்
சொன்னாள் – பூவழகி
சைக்கிள்காரனோடு ஓடிவிட்டாள். ஏன் என்று தெரியாமல் பெருகத் துடிக்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்தத் திணறியவாறு அதிர்ந்து நின்றிருந்தான் அவன்.
அடுத்த சில நாட்களில் அவன்
அம்பர் ராட்டை வேலையிலிருந்து நின்று விட்டான். அவன் வேலையை விட்டது பூவழகி
போய்விட்டதாலா அல்லது தனியாக மெஷின்களோடு மல்லுக்கட்ட முடியாமலா என்று அடுத்த சில
நாட்களுக்கு பெண்கள் விவாதித்தார்கள். அப்புறம் அதுவும் நின்று போயிற்று. அதுதான்
ராட்டை யூனிட்டே மூடி விட்டார்களே....
*
பி.கு. இந்தக் கதைக்கு ஏற்ற படத்தை இணையத்தில் தேட முனைந்தபோது, அம்பர் ராட்டை குறித்தோ, சைக்கிள் சாதனை குறித்தோ பதிவுகளே இல்லை என்று தெரிந்தது. சைக்கிள் வீரர்கள் குறித்து நாறும்பூ நாதனும், கோவையின் ஓவியர் ஜீவாவும் தமது பதிவுகளில் ஒரு பத்தி எழுதியிருக்கிறார்கள். அதைத்தவிர வேறு ஏதும் கிடைக்கவில்லை. அம்பர் ராட்டையைக் கண்டுபிடித்தவர் தமிழகத்தைச் சேர்ந்த ஏகாம்பரநாதன் என்பவர். இப்போது எட்டு நூல்களை நூற்கும் ராட்டை கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக 2012 செய்திகள் காட்டுகின்றன. அம்பர் ராட்டை பார்க்காதவர்களுக்கு இதோ -
இந்த அற்புதமான கதையின் தலைப்புக்கு பூவழகி தேவைப்பட்டாலும் இந்த கதை முழுக்க ஆக்கிரமித்து கம்பீரமாக வலம் வந்தது ராட்டை தான்.. பஞ்சு எப்படி அழுக்கு பஞ்சில் இருந்து தூய்மையான பஞ்சாகி பின் பட்டையாகி பின் நூல் நூற்க தயாராகிறது என்பதை மிக பிரமாதமாக சொல்லிக்கொண்டே வந்து பூவழகியின் அழகில் கொஞ்சமே கொஞ்சம் மயங்கும் இந்த கதையின் நாயகனைப்பற்றி அவன் செய்யும் வேலையைப்பற்றி.... பின்னர் பூவழகியின் உதவும் குணத்தைப்பற்றி.... பின்னர் சைக்கிள் ஓட்டி சாதனை செய்து குழிக்குள் இருந்து பின்னர் வெற்றியோடு வந்த சண்முகனைப்பற்றி.... பின்னர் இந்த கதையே முடியவும் இந்த பூவழகியே காரணமாகும்படி எழுதியது மிக மிக சிறப்பு... அன்பு நிறைந்த வாழ்த்துகள்...
ReplyDeleteஅம்பர் ராட்டை இதுவரை பார்த்திராதது. நெய்வேலியில் இப்படிச் சைக்கிளில் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓட்டுவார் ஒருவர். அந்த மூன்று நாளும் காலையும் மாலையும் அங்கே சென்று பார்த்து வருவது வழக்கம். அந்த நினைவுகள் உங்கள் பதிவினைப் படித்ததும் வந்தது.
ReplyDelete