Saturday, 30 May 2015

அவசரச் சட்டங்களும் மத்திய அரசும்


நமது இந்திய அரசியலமைப்பு மிக கவனமாக வடிவமைக்கப்பட்டது. பல நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களை அலசி, பலவற்றிலிருந்து சிறந்த அம்சங்களை எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய ஆன்றோர், அவர்கள் எதிர்பார்த்த சிக்கல்களைக் கணக்கில் கொண்டு, கூட்டரசின் தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைத்ததை எண்ணி வியக்காமல் இருக்க முடியாது.

நாடாளுமன்றத்தின் முக்கியப் பணிகளில் சட்டமியற்றுவதும் ஒரு பணி. எனவே, சட்டமியற்றும்போது, கூட்டாட்சித் தன்மையை பிரதிபலிக்கும் வகையில் அரசமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மக்களவைக்கும், கூட்டாட்சித் தத்துவத்தை எதிரொலிக்கும் வகையில் மாநிலங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் மாநிலங்களவைக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ள விதமும் கவனிக்கத்தக்கது.

மக்களவையின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள். ஐந்து ஆண்டுகள் முடியும்போது, அல்லது குடியரசுத் தலவைர் விரும்பும்போது மக்களவை கலைக்கப்படலாம். ஆனால் மாநிலங்களவை என்பது எப்போதும் கலைக்கப்பட முடியாதது. அதன் உறுப்பினர்கள் ஆறு ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார்கள். இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் சில உறுப்பினர்கள் வெளியேற, புதியவர்கள் வருவார்கள். ஆக, மாநிலங்களவை என்பது எப்போதும் இருக்கக்கூடியது.

பொதுவாக, எந்தவொரு சட்டமும் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று வரையறுத்திருக்கிறது அரசமைப்புச் சட்டம். அதாவது, மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் கொண்ட மக்களவையில் மட்டும் ஒரு சட்டம் இயற்றி விட முடியாது. அது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இதன் நோக்கம் என்ன என்று கவனிக்க வேண்டும். மக்களவையில் ஏதேனும் ஒரு கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்து விட்டது என்பதற்காக அது விரும்பும்படி சட்டங்களை இயற்றிவிடக் கூடாது. மாநிலங்களின் குரலுக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதாகும். இதுவே கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையாகும்.

அதே சமயத்தில், மக்களவைக்கு ஒரு முக்கிய அதிகாரம் இருக்கிறது. அதாவது, எந்தச் சட்டமும் இரண்டு அவைகளிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்றாலும்கூட, பண மசோதா விஷயத்தில் மட்டும் மக்களவைக்கு கூடுதல் அதிகாரம் கிடைக்கிறது. 1. பண மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகம் செய்ய முடியாது. 2. மக்களவை முன்வைத்த பண மசோதாவை மாநிலங்களவை திருத்தவோ, நிராகரிக்கவோ முடியாது. (அதிகபட்சமாக, மாநிலங்களவை தன் பரிந்துரைகளைத் தெரிவிக்கலாம்.) 3. மக்களவை நிறைவேற்றி அனுப்பிய பண மசோதாவை 14 நாட்களுக்குள் மாநிலங்களவை திருப்பி அனுப்பவில்லை என்றால் அது இரண்டு அவைகளிலும்  நிறைவேற்றப்பட்டதாகக் கருதப்படும். 4. ஒரு மசோதா பண மசோதாவா இல்லையா என்பதை முடிவு செய்யும் அதிகாரம் மக்களவைத் தலைவருக்கு உண்டு. 5. நிதி அறிக்கை குறித்து மாநிலங்களவை விவாதிக்கலாம். ஆனால் மானிய விஷயங்களில் வாக்களிக்கும் உரிமை கிடையாது. இது தவிர, அமைச்சர்கள் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவர மாநிலங்களவைக்கு அதிகாரம் கிடையாது.

அதாவது, நிதி விவகாரங்களில் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு கூடுதல் அதிகாரம் தரப்படுகிறது. இதில் மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் கிடையாது. இருந்தாலும், பண மசோதாவிலும் மாநிலங்களவையின் குரலுக்கு மதிப்புத் தரப்படுவது நமது பாரம்பரிய மரபாகும்.

அதே சமயத்தில், மாநிலங்களவைக்கு அதிகாரமே இல்லை என்று யாரும் கருதிவிடக் கூடாது. பண மசோதா ஒன்றைத்தவிர, குடியரசுத் தலைவரை நீக்குவது, உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதியை நீக்குவது ஆகிய விஷயங்கள் உள்பட எல்லாவற்றிலும் மாநிலங்களவைக்கும் சம உரிமை உண்டு. கூடுதலாக, மாநில அதிகாரப் பட்டியலில் உள்ள விஷயங்களை நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் என்று மாநிலங்களவை கூறலாம். மாநிலங்களவையில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அது குறித்து நாடாளுமன்றம் சட்டமியற்ற வேண்டும்.

மேலே சொன்ன விஷயங்களைப் பார்க்கையில், அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மாநிலங்களின் குரலுக்கும் கூட்டாட்சித் தன்மைக்கும் எவ்வளவு ஆழமாக சிந்தித்திருக்கிறார்கள் என்பது புரியும்.

இப்போது அவசரச் சட்டம் குறித்துப் பார்ப்போம்.

நாடாளுமன்றம் செயல்பாட்டில் இல்லாத காலத்தில் அரசு விரும்பினால் அவசரச் சட்டம் இயற்றலாம். குடியரசுத் தலைவர் இதை அறிவிப்பார். ஆனாலும், அவசரச் சட்டம் இயற்றப்பட்டால், நாடாளுமன்றம் கூடிய ஆறு வாரங்களுக்குள் அதை நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் அது காலாவதி ஆகிவிடும்.

நம் அரசமைப்புச் சட்டத்தின்படி, குடியரசுத் தலைவர் பெயரால் அவசரச் சட்டம் வெளியாகும் என்றாலும்கூட, அதை இயற்றுவது அவர் அல்ல. அமைச்சரவைதான். குடியரசுத் தலைவர் என்பவர் அமைச்சரவை ஆலோசனையின்படி செயல்பட வேண்டியவர். சட்டமியற்றும் விஷயத்தில் குடியரசுத் தலைவரின் அதிகாரம் மிகவும் குறைவு.

அப்படி அவசரச் சட்டம் இயற்றப்பட்டால் இரண்டு அவைகளிலும் அது நிறைவேற்றப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்டம் விதிக்கிறது. பண மசோதா, அரசியல் சட்டத் திருத்த மசோதா தவிர, வேறெந்த  விஷயத்திலும் இரண்டு அவைகளின் முடிவுகளில் முரண் இருந்தால், இரண்டு அவையின் கூட்டுக் கூட்டத்தை நடத்தி மசோதாவை நிறைவேற்றலாம். இப்படி கூட்டுக்கூட்டம் மிக அரிதாகவே நடத்தப்பட்டுள்ளது என்பது வரலாறு.

அதாவது, மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால் மட்டும் எந்தக் கட்சியின் அரசும் தன் விருப்பப்படி சட்டமியற்றிவிட முடியாது. மாநிலங்களின் கருத்துக்கு மதிப்பளித்தாக வேண்டும். அவசரச் சட்டம் என்பது ஆட்சியிலிருக்கும் அரசு தன் இஷ்டம்போல சட்டமியற்றுவதற்காகப் பயன்படுத்திவிடக்கூடாது என்பதற்காகவே அரசமைப்பை இப்படி இயற்றியிருக்கிறார்கள்.

இப்போது முக்கிய விஷயத்துக்கு வருவோம். அவசரச் சட்டத்தை எப்போது நிறைவேற்றலாம்?

நாடாளுமன்ற இடைவேளைகளில், அவசர நடவடிக்கை தேவை என்பதற்கான சூழல் இருப்பதாக குடியரசுத் தலைவர் திருப்திப்படும் பட்சத்தில், குடியரசுத் தலைவர் அவசரச் சட்டத்தை அறிவிக்கலாம் - என்று அரசமைப்பு கூறுகிறது.
If at any time, except when both Houses of Parliament are in session, the President is satisfied that circumstances exist which render it necessary for him to take immediate action, he may promulgate such Ordinances as the circumstances appear to him to require.

அதாவது, அவசரச் சட்டம் என்பது அவசர நிலைமைகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டியது. நினைத்தபோதெல்லாம் இயற்றக்கூடியதல்ல. அப்படிச் செய்வது என்பது, ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தை புறக்கணித்து விட்டு புழக்கடை வழியாக சட்டமியற்றுவதாகும். மாநிலங்களின் குரல்களைப் புறக்கணிக்கும் நடவடிக்கையாகும்.

இதைத்தான் குடியரசுத் தலைவர் இந்த ஆண்டின் குடியரசு தினத்தை முன்னிட்டு உரையாற்றும்போது "Ordinance route cannot be taken and should not be taken for normal legislation" என்று இதைத்தான் மென்மையாகக் குறிப்பிட்டார்.

அவசரச் சட்டம் இயற்றும் அதிகாரம் என்பது, அரிதாகப் பயன்படுத்தப்பட வேண்டிய தனிச்சிறப்பான அதிகாரம். மிகவும் தேவையான அவசர நிலைகளின்போது மட்டுமே இயற்றப்பட வேண்டியது..

ஆனால், மத்திய அரசு தொடர்ந்து இதைத்தான் செய்து வருகிறது. இதுவரை இந்த அரசு பத்துக்கும் மேற்பட்ட அவசரச் சட்டங்களை இயற்றியிருக்கிறது. இந்திரா காந்தி நெருக்கடி நிலை பிரகடனம் செய்தபோது இயற்றிய அவசரச் சட்டங்களுக்கு நிகரான எண்ணிக்கையை இந்த அரசும் விரைவில் எட்டிவிடும்.

அதிலும், நில கையகப்படுத்தல் மசோதாவை இரண்டு முறை அவசரச் சட்டமாக நிறைவேற்றியுள்ளது. இரண்டாவது முறை நாடாளுமன்றத்தில் விவாத்த்துக்கு வந்தபோது, எங்களுக்கு அவசரமில்லை, மக்களின் கருத்தறிந்து விவாதித்து பிறகு சட்டமியற்றுவோம் என்று கூறியது. 30 உறுப்பினர்கள் கொண்ட நாடாளுமன்றக் குழுவும் அமைக்கப்பட்டது. ஆனால் இப்போது மூன்றாவது முறையாக மீண்டும் அவசரச் சட்டத்தை இயற்றுவதாக முடிவு செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் ஒருமாதிரி பேசுவதும், நாடாளுமன்றத்துக்கு வெளியே வேறுவிதமாகப் பேசுவதுமாக இருக்கிறது அரசு.

எதற்காக இந்த அவசரம்... யாருக்காக இந்த அவசரம்... இது கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கும் ஜனநாயக அரசா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment